இராமாயண ராமன் சம்பூகனை வெட்டிக் கொன்று வர்ணாசிரம தர்மத்தைக் காப்பாற்றியவுடன், இந்தப் பூமியில் தன் கடமைகள் எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு சரயு நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டான். அவனின் பிணம் என்னானது என்பது பற்றிய எந்தக் குறிப்பும் வால்மீகி ராமாயணத்தில் இல்லை. அவனின் பிணத்தைக் கைப்பற்றி அதற்கு இந்துமத தர்மப்படி இறுதிக் காரியங்கள் நடைபெற்றனவா என்பதும் யாருக்கும் தெரியாது. ராமனின் சமாதி பற்றிய எந்தப் பேச்சும் வரலாற்றில் இல்லாமல் இருப்பதில் இருந்தே அவன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட போது அவனைக் காப்பாற்றவோ, இல்லை அவனின் உடலைக் கண்டுபிடிக்கவோ யாரும் முயற்சி செய்யவில்லை என்பதும் தெரிய வருகின்றது. புத்தரின் பல், நபிகள் நாயகத்தின் முடி எல்லாம் இன்றும் பாதுகாக்கப்படுவது போல ராமன் சம்மந்தப்பட்ட எதுவுமே இன்று உலகில் இல்லை. ராமன் இராமாயணத்திலேயே பிறந்து இராமாயணத்திலேயே அகால மரணமும் அடைந்து போனான்.

advani rath yatra

 ஆனால் இந்தியா முழுவதும் ராமனைப் பற்றிய புளுகுக் கதைகள் பல்வேறு மொழிகளில் பரப்பப்பட்டு அவன் கடவுளாக ஆக்கப்பட்டிருந்தான். இராமன் அயோத்தியில்தான் பிறந்தான் என்று வால்மீகி இராமாயணம் சொல்வதால் மக்களும் அவ்வாறே நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அயோத்தியில் ராமன் பிறந்ததாக சொன்ன வால்மீகி, அவன் பிறந்த அந்தக் குறிப்பிட்ட இடத்தைப் பற்றி தெளிவாக எதுவும் சொல்லவில்லை. வால்மீகி கதையில் இருந்த இந்த ஓட்டையை மிகச் சரியாக பிற்காலத்தில் ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்திக் கொண்டது. இராமாயணக் கதையின் படி இராமாயணம் நடந்தது திரேதா யுகம், துவாபர யுகம் ஆகும். திரேதா யுகம் என்பது 12,96,008 ஆண்டுகளும், துவாபர யுகம் என்பது 864000 ஆண்டுகளும் ஆகும். இரண்டையும் சேர்த்தால் 2160008 ஆண்டுகள். அதில் கலியுகத்தையும் கழித்துவிட்டுப் பார்த்தால் 2160000 ஆண்டுகள் ஆகின்றன. என்ன, படிப்பதற்கே தலை சுற்றுகின்றதா? கொஞ்சம் மாட்டு மூத்திரம் குடித்துவிட்டு படித்தால் தலை சுற்றல் நின்று, பக்தி பிறக்கும். 

  நெகிழியே 1000 ஆண்டுகளில் மட்கிவிடும் என்று அறிவியல் கூறுகின்றது. ஆனால் 2160000 ஆண்டுகளுக்கு முன் இராமன் பிறந்த இடம் என்று ஒன்று இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? என்ன ஆகியிருந்தாலும் நிச்சயம் அதைக் கண்டுபிடிக்க முடியாது என்பது மட்டும் உறுதி. அப்படி இருக்க மாட்டு மூத்திரத்தைக் குடித்துவிட்டு வீடு வீடாக உஞ்சவிருந்தி செய்து வயிறு கழுவிகொண்டிருந்த கும்பல், ராமனின் பிறப்பிடத்தை 1528-29 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட பாபர் மசூதியில் கண்டுபிடித்தது. பாபர் மசூதிக்குள் இராமனைக் கண்டுபிடித்தல் என்பது ஆரிய பார்ப்பனக் கும்பலின் மிலேச்ச சிந்தனையில் இருந்து தோன்றிய கண்டுபிடிப்பாகும். ராமனின் பிறப்பிடத்தை அயோத்தியில் வேறு எங்கோ கண்டுபிடிப்பதைக் காட்டிலும்  அவர்களுக்கு பாபர் மசூதியில் கண்டுபிடிப்பது தொலை நோக்குப் பார்வையில் ஆதாயம் தருவதாக இருக்கும் என்று அறிந்து வைத்திருந்தார்கள். அதனால் திட்டமிட்டபடி ராமனின் பிறப்பிடம் பாபர் மசூதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

 ஆனால் பாபர் மசூதியை இடிக்கும் அளவிற்கு பூணூல் கும்பலுக்கு அன்று தைரியம் இல்லை. அமைப்பாக்கப்பட்ட வன்முறைக் கும்பல் படையை அன்று பூணூல் ரவுடிகள் கட்டியெழுப்பவில்லை என்பதால் பாபர் மசூதிக்கு அருகில் ‘ராம் சபூதரா’ என்ற பெயரில் ஒரு மேடையை ஏற்படுத்தி கலவரத்துக்கான முதல் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த மேடையில் ராமருக்கு கோயில் கட்டவேண்டும் என்று 1885 ஆண்டு ஃபைஸாபாத் நீதிமன்றத்தில் மகந்த் ரகுபர்தாஸ் என்பவர் பிரிட்டிஷ் நீதிபதி பண்டித் ஹரி கிஷனிடம் 29.01.1885 அன்று ஒரு வழக்கு தொடுத்தார். அந்த வழக்கையும், மேல் முறையீட்டையும் துணை நீதிபதி 24.12.1885 அன்று தள்ளுபடி செய்துவிட்டார். ஆறு மாதங்களுக்குப் பின் மகந்த் 25.05.1886 அன்று மாநில உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். பாபர் மசூதி வளாகத்திற்குள் அமைந்த நிலத்தின் மீது உரிமை கோரிய மகந்த்தின் மேல் முறையீட்டை லக்நெள நடுவர் மன்ற ஆணையர் 1.11.1886 அன்று தள்ளுபடி செய்தார்.( அயோத்தி இருண்ட இரவு-கிருஷ்ணா- தீரேந்திரஜா).

 அதற்குப் பிறகு பல முறை மசூதியைக் கைப்பற்றும் முயற்சிகள் நடந்திருந்தாலும் அது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தொடர்ந்து வந்த ஆண்டுகளின் போதெல்லாம் இராமர் மேடை மரத்தினாலான ஒரு தற்காலிகக் கோயிலாகவும், திறந்தவெளியில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட எண்ணற்ற சிறு சிறு சிலைகளோடும், உடைந்த உதிர்ந்த போன ஒரு கட்டுமானமாகவே இருந்து வந்தது.

 அதன் பின் 1949 ஆண்டு டிசம்பர் 22 ஆம் நாள் இரவு ராம சபூத்திராவிலிருந்து 50 அடி தொலைவிலுள்ள பாபர் மசூதிக்குள் 50 முதல் 60 பேர் நுழைந்து ராமன் சிலையை நட்டு வைத்தனர். இந்தச் சதியில் முக்கிய குற்றவாளியாக நிர்வாணி அகாராவின் வைராகியான (அபி)ராம்தாஸ், மற்றும் (ராம்)சகல்தாஸ், சுதர்சன்தாஸ் ஆகிய மூன்று பேர் சேர்க்கப்பட்டனர். இதற்கு முன்பே ஒரு முறை மசூதியை இடிக்கும் முயற்சி நடைபெற்றது. 1934 ஆம் ஆண்டு அயோத்திக்கு அருகில் ஷாஜகான்பூர் என்ற இடத்தில் இறைச்சிக்காக பசு மாடு வெட்டப்பட்டது என்ற வதந்தியின் காரணமாக பெரிய அளவில் மதக்கலவரம் ஏற்பட்டது. அப்போது மசூதியின் ஒரு பகுதி திட்டமிட்டு இந்துமத வெறியர்களால் சேதப்படுத்தப்பட்டது. எனினும் அதைப் பிரிட்டிஷ் அரசு செலவு செய்து சீர்படுத்திக் கொடுத்தது. இதற்கு அடுத்து ஆர்.எஸ்.எஸ் இந்து மகா சபை போன்றவற்றால் திட்டமிடப்பட்டதுதான் பாபர் மசூதியின் மைய இடத்தில் ராமன் சிலையை வைப்பது என்பது.

  1947 ஆம் ஆண்டு குஜராத்தின் சோமநாத் ஆலய புதுக்கட்டுமானம், இந்துமகா சபையால் திட்டமிடப்பட்டுக் கொண்டு இருந்தது. 12/11/1947 அன்று ஜுனாகட் சென்ற சர்தார் படேல் “கோயிலில் மீண்டும் கடவுள் சிலைகளை வைப்பது என்பது இந்துக்களின் உணர்வுகளையும் பெருமைகளையும் மீட்கும் செயல்” என்றார். இது இந்துமத வெறியர்களுக்கு தங்களுடைய திட்டங்களுக்கு பெரிய அளவில் உற்சாகம் ஊட்டுவது போல இருந்தது.

காந்தி கொலையினால் நாடு முழுவதும் காறி உமிழப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., இந்துமகா சபை போன்றவை அதில் இருந்து நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்ப பாபர் மசூதிக்குள் ராமன் சிலையை வைக்கும் நடவடிக்கையைப் பயன்படுத்த நினைத்தன.

  அன்று ஆர். எஸ்.எஸ். தீட்டிய இந்தச் சதிக்கு எதிராக அயோத்தியில் யாருமே பெரிய அளவில் எதிர்ப்புக்குரல் கொடுக்கவில்லை. காந்தியத்தை தனது வாழ்வின் லட்சியமாக ஏற்ற அக்ஷய் பிரம்மச்சாரி என்ற பைசாபாத் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் மட்டுமே குரல் கொடுத்தார். அன்றைய நாட்களில் அவருக்கு எதிராக நடந்த செயல்களை குறித்து அவர் குறிப்பிடும்போது “13.11.1949 அன்று பாபர் மசூதியின் அருகிலுள்ள இடுகாட்டுப் பிணக்குழிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக இடித்துத் தள்ளப்படுகின்றன என எனக்குத் தெரியவந்தது. நானே நேரடியாக அங்கு சென்று பார்த்தபோது அது உண்மை எனத் தெரிந்து கொண்டேன். மேலும் இடுகாட்டின் நடுவில் அமைந்திருந்த, கனாட்டி மசூதி என இசுலாமியரால் அழைக்கப்பட்டு வந்த மசூதி இடித்துத் தள்ளப்பட்டு அதன் மீது ஒரு மேடை கட்டப்பட்டிருந்தது. இசுலாமியர் பீதி அடைந்தவர்களாகப் பேச்சின்றி இருந்தனர். பொது அமைத்திக்குக் கேடு விளைவிக்கப்பட்டதனால் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 145 இன் கீழ் நடவடிக்கை எடுத்து நிலைமையைச் சீர்படுத்துமாறு நகர நீதிமன்ற நடுவரிடம் முறையீடு செய்திருப்பதாக இசுலாமியர் என்னிடம் கூறினார். ஆனால் நீதி மன்றம் எவ்விதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. நான் மாவட்ட நீதிபதியைச் சந்தித்து இது குறித்து அவரிடம் தனிமையில் விவாதித்தேன்”

“15 ஆம் தேதி இரவு மூன்று நபர்கள் எனது வீட்டிற்குள் அதிரடியாகப் புகுந்து என்னை அடித்தார்கள். அதில் என்னை மிகவும் வியப்பிற்குள்ளாக்கியது என்னவென்றால், என்னை அடித்தவர்கள், நான் மாவட்ட நீதிபதியிடம் தனிமையில் விவாதித்தவற்றைக் கூறிக் கூறி என்னை அடித்தார்கள்.”

  இத்தனை ஊடகங்களும், முற்போக்கு இயக்கங்களும் இருக்கும்  இன்றைய நாளிலேயே நீதிபதிகள் பகிரங்கமாக ஆர்.எஸ்.எஸ் சார்பாக நடந்துகொள்ளும் போது அன்று நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதை அக்ஷய் பிரம்மச்சாரின் நிலையே நமக்கு உணர்த்திவிடும். உ.பி. உள்துறை அமைச்சராக இருந்த லால்பகதூர் சாஸ்திரிக்கு அவர் எழுதிய கடிதத்தில் “கும்பல்களைத் திரட்டிக் கூட்டங்கள் நடத்தப்பட்டன, யாகம் நடக்கும் மசூதிக்கு வந்து தரிசனம் செய்யுமாறு, நாள் முழுவதும் குதிரை வண்டிகளில் கார்களிலும் கட்டப்பட்ட ஒலிப் பெருக்கிகளின் வழியாக, பேரொலியுடன் மக்களை அழைத்தார்கள். இவற்றையெல்லாம் இராமர் பிறந்த இடம் என பாபர் மசூதியை உரிமை கோரியவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். அனைத்தையும் ஆரவாரத்துடன் ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தவர் அனுப்பிய கார்களில் நகருக்குள்ளிருந்தும், வெளியிடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து குவியத் தொடங்கினார்கள். தீ பரவச் செய்யும் விதத்தில் தீவிரவாதப் பேச்சாளர்கள் உரையாற்றினார்கள்.பாபர் மசூதி இராமர் கோயிலாக மாற்றப்படும் என ஒளிவு மறைவின்றி ஓங்காரமாகப் பேசினார்கள். மகாத்மா காந்தியையும், காங்கிரசையும், காங்கிரசாரையும் மிக இழிவாகப் பேசினார்கள்”

“அயோத்தியிலும் பைசாபத்திலும் நடந்தேறியவை மற்றும் பாபர் மசூதி குறித்த கேள்வி என்பனவெல்லாம், வெறுமனே மசூதி அல்லது கோயில் குறித்த கேள்வியுமல்ல, இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்கும் இடையிலான மோதலும் அல்ல. மகாத்மா காந்தியின் உயரிய கோட்பாடுகளை அழிப்பதற்காகவும், மத உணர்வுகளைக் கிளறிவிட்டு அது தரும் ஆதாயத்தில் தேர்தல் களத்தில் வெற்றி பெறுவதற்காகவும் பிற்போக்கு சத்திகளால் திட்டமிட்டு நடத்தப்படும் சூழ்ச்சித் திறன் மிக்க சதிச் செயல்களே இவையெல்லாம்.திட்டமிட்ட இச் சதிச் செயல்களில் உள்ளூர் அரசு அதிகாரிகளுக்கும் பங்குண்டு.” என்று இருக்கும் நிலையை அப்படியே பதிவு செய்தார் அக்ஷய் பிரம்மச்சாரி.(மேற்படி நூல்)

  22.12.1949 அன்று பாபர் மசூதிக்குள் அபிராம்தாஸ் தலைமையில் நுழைந்த கும்பலில் ஒருவரான  இந்து சேகர் ஜா அது பற்றி கூறும்போதும், “அபிராம்தாஸ் தனது கரங்களில் சிலையைப் பிடித்துக் கொண்டவராக பாபர் மசூதியின் மையக் கவிகையின் கீழ் அமர்ந்திருந்தார். நாங்கள் பிற ஆயத்த வேலைகளைச் செய்தோம். இசுலாமியருக்குச் சொந்தமான தூபக் கிண்ணம், பாய் விருப்புக்கள், மோசினாரின் துணிகள், பண்டபாத்திரங்கள் அனைத்தையும் வெளியில் தூக்கி எறிந்தோம். மசூதியின் உட்புற வெளிப்புறச் சுவர்களில் பதிக்கப்பட்டிருந்த இசுலாமிய வாசகங்கள் அனைத்தையும் சுரண்டி எடுத்தோம். சுரண்டப்பட்ட இடங்களில் காவி மற்றும் மஞ்சள் வண்ணங்களில் இராமர், சீதை படங்களை வரைந்தோம்.” (மேற்படி நூல்)

  இப்படித்தான் இராமன் பாபர் மசூதிக்குள் உயிர்த்தெழுந்தான் அல்லது உயிர்த்தெழ வைக்கப்பட்டான். சிலை வைக்கப்பட்டவுடன் அங்கு ராமன் தனக்கான இடத்தை தானே தேர்வு செய்துகொண்டான் என்று திட்டமிட்டபடி இந்துமத வெறியர்களால் பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்டு அது உண்மையாக்கப்பட்டது. அதன் பின் அந்தச் சிலை அங்கிருந்து அகற்றப்படவே இல்லை. பாபர் மசூதியில் இருந்து சிலைகளை அகற்ற முடியாதவாறு  நீதிமன்றத் தடை உத்திரவையும் பெற்றனர். பின்னர் சதிகாரர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ‘இராம ஜன்ம பூமி சேவ சமிதி’ என்ற அமைப்பை ஏற்படுத்தினர். சமிதியின் செயல்பாடுகளுக்காக ஏராளமான பணம் நன்கொடையாகத் திரட்டப்பட்டது. இதனால் பணத்தைக் கையாள்வது குறித்து சமிதிக்குள் சண்டையும் வந்தது. மாற்றி, மாற்றி பண மோசடி புகார்களைக் கூறிக் கொண்டனர். ராமனை வைத்து ஒரு பக்கம் அரசியலும், இன்னொரு பக்கம் இராமர் கோயிலை வைத்து பெரிய அளவில் பண மோசடிகளும் செய்யப்பட்டன. அப்பாவி பக்தர்களின் உணர்வுகளைத் தூண்டி மிகப் பெரிய அளவில் பண மோசடிகள் நடந்தன, இன்று வரையிலும் நடந்து வருகின்றன. ராம ஜன்ம பூமி இன்று வரையிலும் பணம் கொழிக்கும் இடமாக இந்து இயக்கங்களுக்கு இருந்து வருகின்றது.

   மசூதிக்குள் சிலையை வைத்த பின் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துமகா சபை போன்றவை திட்டமிட்ட முறையில் அந்தப் பிரச்சினை எப்போதுமே நீறு பூத்த நெருப்பாக வைத்துக் கொண்டே இருந்தன. இதற்காவே 1981 ஆம் ஆண்டு  விஷ்வ இந்து பரிஷத் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதன் முக்கிய நோக்கமே அயோத்தியில் இராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதுதான். 1989 ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களில் விஷ்வ இந்து பரிஷத் இன் அழைப்பை ஏற்று இராமர் கோயில் கட்டுவதற்கான கர சேவகர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து செங்கற்களை சுமந்து வந்து அயோத்தியில் கூடினர். கட்டுவதற்காக திட்டமிடப்பட்ட கோயிலுக்கான சிலன்யா பூஜை 9.11.1989 அன்று பிரச்சினைக்குரிய இடத்திற்கு வெளியே நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 1990 ஆம் ஆண்டு அத்வானி  செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்திய ரதயாத்திரையும், வெறிப் பிரச்சாரமும் 6.12.1993 அன்று இந்துமத வெறியர்களால் பாபர் மசூதி இடிக்கப்படுவதில் போய் முடிந்தது.

 இதைத் தொடர்ந்து ஏற்பட்ட மும்பைக் கலவரத்தில் 900க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். வால்மீகியின் கைகளில் சூத்திரர்களின் ரத்ததைக் குடிக்கும் ஓநாயாக இருந்த ராமன், சங்பரிவாரத்தின் கைகளில் இஸ்லாமியர்களின் ரத்தத்தைக் குடிக்கும் ரத்தக் காட்டேரியாக மாற்றப்பட்டான். இன்று வரையிலும் தனது ரத்தம் தோய்ந்த வாயை மூடாமல் காவு வாங்குவதற்குத் தயாராக உள்ளான். தொடரும்….

 - செ.கார்கி

Pin It