எல்லோருக்கும் அன்பான வணக்கங்கள். எஸ்.வி.ஆர். பற்றிப் பேசுவது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. இப்படியான ஏற்பாட்டை சுந்தரும் வேறு பலரும் சேர்ந்து செய்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். நான் எப்படி எஸ்.வி.ஆர்.-ஐ வாசிக்கிறேன்? அல்லது பார்க்கிறேன்? என்றால் தமிழ்நாட்டு சமூக வரலாற்றினூடே இந்த மனிதர் என்னென்ன வேலைகளைச் செய்தார்? அது தமிழ்ச் சமூக வரலாற்றினுடைய ஒரு பகுதியாக எப்படிச் செயல்பட்டிருக்கிறது? அதில் அவருடைய பங்களிப்பு என்ன? என்கிற விவரணப் பூர்வமான தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அந்தத் தகவல்கள் குறித்த விளக்கங்களை செய்வதற்கு இந்த நேரத்தில் வாய்ப்பில்லை. அதனால் எஸ்.வி.ஆர். என்று சொல்லக் கூடிய ஒரு மனிதருடைய 1960கள் தொடக்கம் இன்று வரை ஒரு அறுபது ஆண்டுகள் ஆகிறது. இந்த ஆண்டுகளில், இந்த மனிதர் தன்னுடைய இருப்பை எந்தெந்த மாதிரியான வடிவங்களில் பதிவு செய்திருக்கிறார் என்று ஒரு சிறிய கணக்கெடுப்பு பண்ணலாமென்று நினைத்தேன்.

அப்படிப் பார்க்கிற பொழுது, எனக்கு மூன்று செய்திகள் முக்கியமானவை. அதில் ஒன்று தமிழ்ச் சமூகத்திற்குள் வந்த மார்க்சியம், அந்த மார்க்சியத்தின் மீது இருந்த அவருக்கான ஈடுபாடு, அது சார்ந்து அவருடைய வாழ்க்கை. இரண்டாவதாக பெரியாரியம், அதோடு சார்ந்த அவருடைய வாழ்க்கை. மூன்றாவது தனிமனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட, குறிப்பாக, தருமபுரி மாவட்டத்தில் குருவிகளை சுடுவதைப் போல நக்சல்பாரி இயக்கத்தைச் சார்ந்த தோழர்களையெல்லாம் சுட்டுக் கொன்ற காலங்களில் அவருடைய பங்களிப்பு, அது பற்றி விரிவாகப் பேசவில்லை. ஆனால் அது அவருடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பகுதி.sv rajadurai 437வெங்கட் சாமிநாதன் பற்றிய கட்டுரை ஒன்றில், எஸ்.வி.ஆர் டெல்லிக்குப் போய் பேராசிரியர் ரவீந்திரன் வீட்டில் தங்கி இருந்த பொழுது, ‘ரவீந்திரன் காலை சாப்பாடும் இரவு சாப்பாடும் வாங்கிக் கொடுத்து விடுவார். நண்பகல் சுப்ரீம் கோர்ட் போய், நான் அங்குச் செயல்படுவேன். அப்பொழுது மதிய உணவு என்பது சுப்ரீம் கோர்ட்டில் கிடைக்கக்கூடிய குடிநீர் மட்டும் தான்,’ என்று எழுதி இருக்கிறார். அந்த அளவுக்கு அவர் பொருளாதார ரீதியான சிக்கல்களையும் “தான் எப்படி எதிர்கொண்டேன்; வாழ்ந்தேன்” என்பது பற்றிய செய்திகளையும் பதிவு செய்திருக்கிறார்.

முதல் கட்டத்தில், மார்க்சியம் எனும் தத்துவ மரபு தமிழ்ச் சூழலில் தொழிற்படுகிற முறையினூடாக அவர் அதை எப்படி உள்வாங்குகிறார்? அதை எப்படி வெளிப்படுத்த விரும்புகிறார்? அதற்காக அவர் என்ன செய்தார்? அது ஒரு முக்கியமானதாக எனக்குப் படுகிறது. கடந்த அறுபது ஆண்டுகளில் எஸ்.வி.ஆர் என்ன பண்ணி இருக்கிறார் என்று ஒட்டுமொத்தமாக சேர்த்து வைத்து, சமகால வரலாற்றோடு அதை இணைத்துப் பார்க்கிற பொழுதுதான் எஸ்.வி.ஆருடைய செயல்கள் குறித்த ஒரு பிரம்மாண்டம் நமக்குத் தெரியும்.

எஸ்.வி.ஆர். அறுபதுகளின் இறுதியில் தமிழ்ச் சூழலில், இந்திய சூழலில் உருவான மார்க்சிய, லெனினிய இயக்கத்திற்கு, திராவிட இயக்கத்தில் செயல்பட்ட நிறைய அறிவாளிகள், பேராசிரியர்கள் என பெரிய குழுவே போனது என்பது வரலாறு. அதைப் பற்றி விரிவாகச் சொல்லமுடியும். இன்குலாப் போன்றவர்கள் இதைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறார்கள். அந்தக் குழுவைச் சார்ந்தவர்தான் எஸ்.வி.ஆரும். திராவிட இயக்கச் சிந்தனை மரபோடு, செல்வாக்கோடு வளர்ந்து வருகிற காலங்களில், இடதுசாரி சிந்தனை மரபுகளை உள்வாங்குகிற சூழல் உருவானது. மார்க்சிய லெனினிய மரபு அறுபதுகளின் இறுதி, எழுபதுகளில் உச்சக்கட்டத்திற்குப் போகிற பொழுது எஸ்.வி.ஆர். போன்ற இளைஞர்கள், அந்த அலை சார்ந்த சிந்தனை மரபுக்குள் தங்களைத் தவிர்க்க முடியாமல் இணைத்துக்கொள்கிற வரலாறு, தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. தமிழ் ஆளுமைகள் பல பேரை அப்படிச் சொல்லலாம். அவர்கள் இன்று அப்படித் தொடர்கிறார்களா என்பது வேறு செய்தி. ஆனால் அன்றைக்கு அது நடந்தது.

அப்படி நடக்கிறபொழுது, இங்கு இரண்டு செய்திகளைப் புரிந்து கொள்ளவேண்டும். ஒரு மனிதன் தத்துவார்த்த மரபு சார்ந்த நடைமுறை வாழ்க்கையில் கட்சி, அமைப்பு இவற்றோடு செயல்படுகிற, வாழ்முறை என்பது ஒன்று. இன்னொன்று அந்தத் தத்துவம் சார்ந்து படிப்பது, எழுதுவது, பதிவு செய்வது, வெளியிடுவது என்பது. இவை இரண்டும் என்றைக்குமே ஒரே படிநிலையில் செயல்படாது. கள ஆய்வாளராக இருக்கக்கூடிய பலருக்கு எழுதுவது வருவதில்லை. அதேபோன்று நிறைய எழுதிக் குவிக்கிற செய்திகள் உள்ளவர்கள் கள ஆய்வாளர்களாக இருப்பார்களென்று சொல்வதற்கில்லை. இரண்டும் இணைந்து இருக்கக்கூடியவர்கள் குறைவானவர்கள்தான். என்னைப் பொறுத்தவரை எஸ்.வி.ஆரின் கள ஆய்வு ஒரு பக்கமும் எழுத்துப் பணி இன்னொரு பக்கமும் என்று சொல்லலாம். இந்தப் பின்புலத்தில் அவருடைய பதிவுகள் மிக அதிகமாக இருப்பதாக எனக்குப் படுகிறது.

எழுபதுகளில் தமிழ்நாட்டுச் சூழலில், புலமைத்துவப் பின்புலம் என்று சொல்கிறபொழுது, என்ன நடந்தது என்று சொன்னால், திராவிட இயக்க மரபிலிருந்து இடதுசாரி மார்க்சிய லெனினிய நக்சல்பாரி இயக்கத்துக்கு பல இளைஞர்கள் வந்தனர். அதேபோன்று இங்கு இருக்கக்கூடிய ஆதிக்க சாதிப் பார்ப்பனியப் பின்புலமுடைய, ஐரோப்பிய பின்புலத்தில் வரக்கூடிய பல்வேறு விதமான அறிவுப் புலங்களை உள்வாங்கிய - பின் காலனிய மரபு உருவாயிற்று என்று சொல்வார்கள். அந்தக் காலம் என்பது, உலகம் முழுவதும் புதிய அறிவு சார்ந்த கருத்து மரபுகளைக் கொண்டுவந்து ஒவ்வொரு சமூகத்திலும் சேர்த்த காலம். அந்தக் காலம் சார்ந்து ஐரோப்பிய பின்புலத்தில் நடந்த சிந்தனை மரபுகளெல்லாம், நம்முடைய மரபுகளோடு இணைத்துப் பேசுகிற பொழுது, அதில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மார்க்சும், ஏங்கெல்சும் உருவாக்கித் தந்த அந்த மரபு, லெனின் உள்வாங்கிய மரபு, மாவோ உள்வாங்கிய மரபு, சேகுவேரா உள்வாங்கிய மரபு ஆகியவை வேறு வேறு என்பது நமக்குத் தெரியும். ஆனால் நம்மைப் போன்ற மூன்றாம் உலக ஒடுக்கப்பட்ட நாடுகளில் இந்த மரபு உருப்பெறுகிற பொழுது, இது எப்படியெப்படியெல்லாம் பரிமாணங்களைப் பெறுகிறது என்ற கட்டம் தான் அன்றைய எழுபதுகள்.

எழுபதுகளில் இங்கு செயல்பட்டுக் கொண்டிருந்த குறிப்பாக பார்ப்பனியப் பின்புலத்தில் உருவாகிய குழு என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் மார்க்சியக் கருத்து சார்ந்து உருவான ஒரு மரபு. இத்தன்மை ஐம்பதுகளிலிருந்தே தமிழ்ச் சூழலில் வளமான மார்க்சியப் படிப்பும் எழுத்தும் சார்ந்த எழுத்தாளர்கள் உருவான வரலாறு என்பது உண்டு. இந்த இரண்டு குழுக்களின் மோதல் வடிவமாக எழுபதுகளில் உண்டான பல செயல்களைச் சொல்லலாம். ஒன்று வானம்பாடி இயக்கம் போன்ற கவிஞர்கள். இன்னொன்று வானம்பாடிக் கவிஞர்கள் சார்ந்த கருத்து நிலைகளை எதிர்த்த கசடதபற குழு. இப்படியான குழுவினர் இருந்த கட்டம். இதில் எஸ்.வி.ஆர். கசடதபற என்று சொல்லக்கூடிய புலமைத்துவ மரபு சார்ந்த குழுவில் தொடர்புடையவராக இருந்தார் என்று கருத முடியும்.

கசடதபற பத்திரிகையை நடத்தியவர்களில் எஸ்.ராமகிருஷ்ணனும் அடங்குவார். இந்த கிரியா ராமகிருஷ்ணன்தான் எஸ்.வி.ஆர். எழுத்துக்கு மதிப்பளித்து செயல்பட்டவர். எனவே அவர் ஒரு பதிப்பகத்தைத் தொடங்கி நூல் கொண்டு வர வேண்டும் என்கிறபோது எஸ்.வி.ஆரின் ‘எக்ஸிஸ்டென்ஷியலிசம்’ புத்தகமாக வருகிறது. ஆனால் எஸ்.ராமகிருஷ்ணனோ அதைச்சார்ந்த மரபில் இருக்கக்கூடிய நண்பர்களோ மார்க்சியத்தை உள்வாங்கியவர்களாகவோ அல்லது அதை மதிப்பவர்களாகவோ சொல்ல முடியாது. ஆனால் அவர்களிடம் இன்னொரு பார்வை இருந்தது. மார்க்சியம் சம்பந்தப்பட்ட உலகம் தழுவிய அளவில் வரக்கூடிய புதிய புதிய விமர்சனங்களைத் தங்களுடைய பத்திரிகைகளிலும் பேச்சுகளிலும் கொண்டுவரவேண்டும், எழுத வேண்டும் என்று திட்டமிட்டுக் கசடதபற -வில் செய்தார்கள். சோவியத் ரஷ்யா நிகழ்வுகளை விமர்சனம் செய்யும் கட்டுரைகளை கசடதபற பத்திரிகையில் விரிவாகப் பதிவு செய்கிறார்கள். அந்தக் கட்டுரைகளை வாசிக்கிற மரபிலிருந்துதான் எஸ்.வி.ஆரைப் பார்க்க முடிகிறது.

மேற்குறித்த எழுபதுகளின் பின்புலத்தில் மார்க்சியத்தை அதன் வேறு சொல்லாடல்களிலும் நாம் பேச முடியும், எழுத முடியும் என்ற கண்ணோட்டம் வருகிற பொழுதுதான் ‘இருத்தலியல்’, (Existentialism) ‘அந்நியமாதல்’ போன்ற கருத்தாக்கங்களும் மார்க்சியம் பேசுகிறவர்களுக்கு முக்கியமான களம் என்ற ஒரு உரையாடல் தமிழ்ச் சூழலுக்குள் வருகிறது. அதற்கு முக்கியமான காரணம் கோவை ஞானி, எஸ்.என்.நாகராஜன் ஆகியோர். இந்தக் குழுவோடு எஸ்.வி.ஆர். சேர்ந்து செயல்பட்ட அந்த மரபு, பின்புலமாக இருக்கிறது. கிளாசிக்கல் மார்க்சியம் என்று சொல்லக்கூடிய மார்க்சிய சொல்லாடல்களிலிருந்து வேறு வகையாக மார்க்சியத்தைச் சார்ந்து விவாதிக்கக்கூடிய கருத்து நிலைகளைப் பற்றியும் பேச வேண்டும், எழுத வேண்டும் என்ற ஒரு உந்துதல் அவர்களுக்கு உருவாகியிருந்தது. அதன் வெளிப்பாடாகத்தான் கிரியா ராமகிருஷ்ணன் வெளியிட்ட எக்ஸிஸ்டென்ஷியலிசம் 1975-இல் எஸ்.வி.ஆரின் முதல் புத்தகமாக வெளிவருகிறது.

எஸ்.வி.ஆர் அந்த நூலில் சொல்லுகிறார். ஐரோப்பிய பின்புலத்தில் இரண்டு தன்மைகள் ரொம்ப முக்கியமாக உருப்பெறுகிறது. ஒன்று கிரேக்க மரபு சார்ந்த அறிவுப் பாரம்பரியம், அந்த கிரேக்க மரபு தான் உலகம் முழுக்க - ஐரோப்பிய - அமெரிக்க எல்லாச் சூழல்களிலும் உருவான அறிவுப் பாரம்பரிய மரபு. அது அரிஸ்டாட்டில், பிளாட்டோவில் இருந்து உருவாகி வருகிற மரபு. இன்னொரு பக்கம் யூதர்கள், யூதர்கள் உருவாக்கக்கூடிய நம்பிக்கை, இந்த நம்பிக்கை சார்ந்த சமயம், சமயம் சார்ந்த உரையாடல், இந்த இரண்டு மரபும் வருகிறது. இந்த இரண்டு மரபினுடைய உரையாடலை இணைத்துச் செய்யக்கூடிய ஒரு வேலையை எக்ஸிஸ்டென்ஷியலிஸ்ட் என்று சொல்லக்கூடிய இருத்தலியல் சார்ந்த மனிதர்கள் உரையாடத் தொடங்குகிறார்கள். வெறுமனே கிரேக்க சிந்தனை மரபுக்கு மட்டும் தாங்கள் சொந்தக்காரர்கள் இல்லை; சமய நம்பிக்கை மரபு சார்ந்த செய்திகளைப் பற்றியும் பேச வேண்டும் என்கிற நிலை உருவானது.

அந்த நூலின் முன்னுரை என்கிற முதல் பகுதியிலே எஸ்.வி.ஆர். எழுதுகிற அந்த வரிகள் பின்கண்டவாறு அமைகிறது. “மனித வாழ்க்கை உருவாக்கிய படுமோசமான நிலைகளின் எல்லைக்குச் சென்று பார்த்த பிறகு இறுதி துயரத்தில் மூழ்கிவிடாமல் புதிய பரிகாரத்தை உருவாக்க முனைந்தவர்களே இந்த எக்ஸிஸ்டென்ஷியலிஸ்ட்” என்று சொல்கிறார். இந்த வாழ்க்கை, வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய பல விஷயங்கள், இதில் இருக்கிற உரையாடல்கள், இதில் மார்க்சியம் என்ன சொல்லுகிறது என்பதைப் பற்றி பேசக்கூடிய சிந்தனை மரபைச் சார்ந்தவர்கள், குறித்த உரையாடல்கள் ஆகியவை இடம்பெறுகின்றன. ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உலகத்தில் எக்ஸிஸ்டென்ஷியலிசமாக இருக்கட்டும், அந்நியமயமாதலாக இருக்கட்டும், பிறகு உருவான பின்நவீனத்துவ மரபுகளாக இருக்கட்டும், இப்படி எல்லா சிந்தனை மரபுகளையும் பேசியவர்கள் மார்க்சிய அறிஞர்கள்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மார்க்சியம் படித்தவர்கள், அதை உள்வாங்கியவர்கள், அந்தப் பின்புலத்தில் இருந்தவர்தான் செய்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். வேறு தத்துவ மரபு இங்கே என்ன உருவாகி இருக்கிறது? இன்னொரு மரபு சமயம்தான், மதம்தான், நம்பிக்கைதான், அந்த மரபுக்கு மாற்றான மரபுதான் மார்க்சியம். இது உலகம் அறிந்த விஷயம். எனவே இந்த இரண்டு மரபுகளுக்கு இடையிலான ஊடாட்டத்தில் இருத்தலியல் சார்ந்த விஷயத்திற்குள் இருந்து மார்க்சியம் சார்ந்த பயணத்தை எஸ்.வி.ஆர். தொடங்குகிறார்.

அந்தக் காலத்தில் அவருக்கு இருந்த மார்க்சிய ஈடுபாட்டில், ஒரு சின்ன புத்தகம் எழுதி இருக்கிறார். அது ஒரு நல்ல புத்தகம். ‘மார்க்சியம் ஒரு அறிமுகம்’ என்று 1975-இல் எக்ஸிஸ்டென்ஷியலிசம் எழுதிவிட்டு 1977-இல் மார்க்சியம் ஒரு அறிமுகம் என்கின்ற ஒரு குட்டி புத்தகம், அதை மனோ என்கிற பெயரில் வெளியிட்டிருக்கிறார். அதில் மார்க்சினுடைய மூலதனம், உபரி லாபம், அது சம்பந்தப்பட்ட சரக்கு, உற்பத்தி, விநியோகம் சார்ந்து உருவாக்கக்கூடிய செவ்வியல் மார்க்சிசத்தையெல்லாம் வகுப்பு எடுப்பது போன்று எழுதி வெளியிடுகிறார். அவருடைய நிலைப்பாடு என்பது மார்க்சியம். அதே சமயத்தில் உலகம் தழுவிய அளவில் அந்த தத்துவ மரபு சார்ந்து பேசக்கூடிய வேறு விஷயங்களை வெளிக்கொண்டு வருவது என்கிற அந்தப் பயணத்தைத் தொடங்குகின்றார். இந்தப் பயணம் 1983-இல் அந்தப் புத்தகத்தையே மிக விரிவாக விரித்து எழுதுவதாக அமைகிறது. தொடக்கத்தில் சிறிய அளவில் எழுதிய இந்தப் புத்தகத்தைப் பிறகு 1983-இல் அதே கிரியா பதிப்பகத்தின் மூலமாகப் பெரிய அளவிலான புத்தகமாக உருவாக்குகிறார்.

இந்த சமயத்தில் ‘பரிமாணம்’ என்ற ஒரு பத்திரிகை வருகிறது. இந்தப் பத்திரிகையில் ஞானி, எஸ்.வி.ஆர்., எஸ்.என்.நாகராஜன் போன்றவர்கள் இந்த உரையாடலை விரிவுபடுத்துகிறார்கள். அப்பொழுதுதான் சோவியத் தகர்கிறது. சோவியத் தகர்ச்சியும் மார்க்சியம் பற்றிய இவர்களுடைய பயணமும் சந்திக்கிற பொழுது, இவர்கள் எல்லோரும் மார்க்சியம் வேறு ஒரு வடிவத்தில், வேறொரு தத்துவ மரபில் பேச வேண்டி இருக்குமோ என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். அந்தக் கேள்வியால் தான் அந்நியமயமாதலிலும் இருத்தலியலிலும் தேடத் தொடங்குகிற பயணத்தில் எஸ்.வி.ஆர். பயணிக்கிறார். அந்தப் பயணம் மிக முக்கியமானது.

இந்த கட்டத்தில் அவர் எங்கே சென்று கொண்டிருக்கிறார் என்றால், அப்போதைய சிந்தனை மரபில் வருவதுதான் கிராம்ஷி. கிராம்ஷி பற்றிய விஷயங்களை 1991-இலேயே தொடங்குகிறார். அப்போது கீதாவும் எஸ்.வி.ஆரோடு இணைந்து அதைச் செய்கிறார்கள். கிராம்ஷி வாசிப்பு என்பதை அவர்கள் தொடர்ந்து செய்து 2010-இல் ‘கிராம்ஷி புரட்சியின் இலக்கணம்’ என்ற புத்தகத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். செவ்வியல் மார்க்சியத்திலிருந்து மார்க்சியத்தை அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுப்பதில், குறிப்பாக குடிமைத்துவப் (சிவில் சொசைட்டி) பண்பாடு சார்ந்த விஷயங்களில் எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது என்பது பற்றி மார்க்சிய சொல்லாடல்களை உலகத்திற்கு வழங்கியவர் கிராம்ஷி.

கிராம்ஷியினுடைய பயணத்தினூடாக, இன்னொரு உலகத்தை அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள். கிராம்ஷி பேசக்கூடிய ‘ஆர்கானிக் இன்டலெக்சுவல்’ என்று சொல்லக்கூடிய ஒரு பாரம்பரிய பண்பாட்டு மரபில் உருவாகி வரக்கூடிய, அறிவுப் பாரம்பரியத்தின் ஒரு தன்மையாக, தத்துவ மரபாகப் பலவற்றை நாம் தேடுகிறபொழுது பெரியார் கிடைக்கிறார் என்று சொல்கிறார்கள். அது மிகவும் முக்கியமான விஷயம். பெரியாரை வேறு வடிவத்தில் பார்க்க வேண்டும் என்பது கிராம்ஷியைப் படிக்கிறபொழுது தமக்குள் உருப்பெற்றது என்பதைப் பதிவு செய்கிறார்கள். இந்த வகையில், அவர்கள் சார்த்தரையும், அதேபோல அல்தூசரையும், வேறு பலரையும் தமிழ்ச் சூழலுக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். இவர்களுடைய தத்துவ மரபு ஓட்டத்தில் எக்ஸிஸ்டென்ஷியலிசத்திலிருந்து கிராம்ஷிக்குள் போக வேண்டிய கட்டாயம் நிகழ்கிறது.

இன்றைய மார்க்சிய தத்துவ மரபில் பல மார்க்சியப் புரிதல்களை நமக்குத் தெளிவுபடுத்தியவர் கிராம்ஷி என்பது இன்றைக்குப் பலராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிற கருத்தாக இருக்கிறது. செவ்வியல் மார்க்சியத்திலிருந்து கிராம்ஷியினுடைய மார்க்சியம் எங்கே மாறுபடுகிறது? எங்கே முக்கியமாக இருக்கிறது? நம்மைப் போன்ற உழைக்கும் மக்களை அதிகமாகக் கொண்ட மூன்றாம் உலக நாடுகளில், கிராமங்கள் நிறைந்த பகுதிகளில் கிராம்ஷி போன்ற மரபு, மாவோ சொன்ன மரபிலிருந்து வளர்ச்சிபெற்ற ஒரு மரபாக நமக்குக் கிடைக்கிறது என்ற உரையாடலை இன்று நிகழ்த்துகிறார்கள். அந்த கிராம்ஷியை எஸ்.வி.ஆர். தொடர்கிறார். தொடர்ந்து பதினைந்து இருபது ஆண்டுகள் இரண்டு பேரும் சேர்ந்து மிகச் சிறிய புத்தகமாக, 1991-இல் எழுதியதை அதற்குப் பிறகு 2010-இல் மிகப்பெரிய புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதனுடைய மறு வெளியீட்டை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

கிராம்ஷி வழியாக அவர் பெரியாருக்குள் பயணம் செய்கிறார். அது முக்கியமான பயணம். கிராம்ஷியினுடைய பயணத்திற்குள் செல்கிற பொழுது, பெரியார் கிடைத்தவுடன் 1990-களில் தமிழ்ச் சூழலில் பெரிய மாற்றம் நடந்தது. இங்கே அம்பேத்கரும் பெரியாரும் மறு கண்டுபிடிப்புக்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக மார்க்சியவாதிகள், பெரியாரைப் பேச வேண்டும், பெரியாரோடு உறவாட வேண்டும். பெரியார் சாதி ஒழிப்புக்காக முன்னெடுத்த விஷயங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்து மரபு உருவாகிறது. அதில் முக்கியமான பங்களிப்பு செய்த ஒரு குழு என்பது நிறப்பிரிகைக் குழு. பெரியார் பற்றிய அவர்கள் வெளியிட்ட கட்டுரைத் தொகுப்பு முக்கியமானது. அந்த மரபுக்குள்ளிருந்து பெரியார்; சுயமரியாதை - சமதர்மம் என்ற கோட்பாடுகள் சார்ந்து மார்க்சியம் என்பது அடிப்படையில் சமதர்மத்தைப் பேசுகிற ஒரு கோட்பாட்டின் அடி வட்டம்தான். அந்த சமதர்மம் என்ற மரபு சார்ந்து, தமிழ்ச் சூழல் சார்ந்து, கிராம்ஷி சொல்லக்கூடிய தத்துவ மரபு சார்ந்து பெரியாருக்குள் நாம் எப்படிப் போகமுடியும் என்கிற உரையாடலை, அந்தப் புத்தகத்தில் உருவாக்குகிறார்கள் கீதாவும் எஸ்.வி.ஆரும்.

எனவே இவர்களின் பயணம் என்பது மார்க்சியத்தோடு இணைந்த பெரியாரை எடுத்துச் செல்வது என்பதாக அமைகிறது. எனவே அது சார்ந்து பெரியார் குறித்த 1999 வாக்கில் ஆங்கிலப் புத்தகம் வெளிவருகிறது. “Towards a Non - Brahmin Millennium: from Iyotheethaas to Periyar” என்கிற புத்தகத்தை வெளியிடுகிறார்கள். பிறகு மீண்டும் ‘சுயமரியாதை சமதர்மம்’ புத்தகம் வருகிறது. பிறகு ‘ஆகஸ்ட் 15’ புத்தகம் வருகிறது. அதற்குப் பிறகு ‘பெரியார் மரபும் மாற்றமும்’ என்ற நூல் வருகிறது. இப்படியாக பெரியார் என்கிற ஆளுமை சார்ந்த தமிழ்ச் சமூக வரலாற்றினூடான பயணமாக அவருடைய பயணம் தொடர்ந்திருக்கிறது. இந்தப் பயணத்தின் தொடர்ச்சியை இன்று வரை அவர் மேற்கொண்டிருக்கிறார் என்றுதான் நான் கருதுகிறேன்.

இந்தத் தொடர்ச்சியில் அவர் எழுதிக் குவித்தவை ஏராளம். ஏறக்குறைய அறுபது புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். அவருடைய கட்டுரைகளெல்லாம் தொகுக்கப்பட்டு 15 தொகுதிகளாக வந்திருக்கின்றன. அதில் எவ்வளவு கட்டுரைகள் இருக்கிறது என்று சொல்லி ஒரு கணக்குப் போட்டு பார்த்தேன். ஏறக்குறைய 300 கட்டுரைகள் இருக்கின்றன. எஸ்.வி.ஆருடைய இந்தக் கட்டுரைகளை தனித்தனிப் பொருளாகப் பிரித்தீர்களென்றால், ஓவியம் பற்றி, இசை பற்றி, நாவல் பற்றி, நடைமுறை அரசியல் பற்றி, அம்பேத்கர் பற்றி, பெரியார் பற்றி என்று பல தொகுதிகளாகக் கொண்டுவர முடியும். எஸ்.வி.ஆர். என்ற மனிதர் இவ்வளவு பிரமாண்டமான வேலை செய்திருக்கிறார் என்பதை அந்தத் தொகுதிகள் சொல்லும். நான் மயிலை சீனி.வேங்கடசாமி என்ற மனிதருக்காக அப்படியான வேலை செய்தேன். அவருடைய அனைத்துப் படைப்புகளையும் சேர்த்து 20 தொகுதிகளாகத் தொகுத்து அச்சிட்டுக் கொண்டு வந்தோம். அப்போது தான் தெரிந்தது அந்த மனிதர் எவ்வளவு பெரிய வேலை செய்திருக்கிறார் என்று. அப்படித்தான் எஸ்.வி.ஆருடைய கட்டுரைகளுக்குள்ளும் அவர் ஒரு பெரிய உலகத்தில் பயணம் செய்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. அவருடைய மொழிபெயர்ப்பு சார்ந்த உரையாடல் வளமானது. நேரம் கருதி தவிர்க்கிறேன்.

எனவே எஸ்.வி.ஆர். என்று சொல்லக்கூடிய பிரமாண்டமான ஆளுமை என்பது அறுபதிலிருந்து இன்றைக்கு வரை இப்படியான பயணங்களை மேற்கொண்டு மார்க்சியத்தைப் படிக்கிறார். அதை வாழ்க்கையாகக் கொண்டிருக்கிறார். தமிழ்ச் சமூகத்திற்கு மார்க்சியத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார்? அந்த விருப்பத்தினூடாக தமிழில் இப்படியான எழுத்துக்களைத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். அவருடைய தேடுதலில் பெரியார் வந்து நிற்கிறார், அம்பேத்கர் வந்து நிற்கிறார். அந்த மரபு சார்ந்த மார்க்சிய சிந்தனை மரபுகளை நம் சமூகத்திற்கு வழங்கிய பெரிய கொடையாளியாக நான் எஸ்.வி.ஆரைப் புரிந்து கொள்கிறேன்.

- வீ.அரசு

குறிப்பு: 25.06.2022 அன்று, ரோஜா முத்தையா நூலகம் ஏற்பாடு செய்திருந்த “தமிழ்ப் பொதுவெளிக்கு தாராபுரம் தந்த அறிவுக்கொடையாளர்கள்” (எஸ்.வி.ஆர் மற்றும் தியோடர் பாஸ்கரன்) என்னும் தலைப்பில், எஸ்.வி.ஆர் குறித்த 20 நிமிட உரையின் எழுத்து வடிவம். ஏப்ரல் 10 ஆம் நாள் எஸ்.வி.ஆரின் பிறந்த நாளை நினைவுபடுத்தும் வகையில் இப்பேச்சை வெளியிடுகிறோம்.

Pin It