முன்னுரை

            மனித குல வரலாறானது மகத்தானதாகும். இத்தகைய வரலாற்றினை உடைமை வர்க்கம் இன்று வரை மறைத்துக் கொண்டே வந்திருப்பதும் வரலாறாய் நம் முன் நிற்கிறது. இவ்வரலாறுகளைச் சமூகவியலாளர்களின் ஆய்வுகளின் வழியும், தொல்பொருள் ஆராய்ச்சி, இலக்கண இலக்கியங்களின் வழியும் அறிந்துக் கொள்ள முடிகின்றன.

            உலக வரலாற்றில் தொன்மைச் சமுதாயமாய் விளங்கிய இந்திய நாட்டிலுள்ள தமிழகப் பகுதிகளைப் பற்றிய ஆய்வுகளும் பலவாறாக ஆராயப்பட்ட வருகிறது. இச்சூழலில், தமிழகத்தின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தின் வழி பண்டைய கால சமுதாயக் கட்டமைப்பு முறைகள், போர் முறைகள் தவிர்த்த சூழல்கள் எப்படியிருந்தன? சமுதாயத்தின் பின்புலங்கள், எப்படிப்பட்டவையாக இருந்திருக்கின்றன? என்பதை ஆராயும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.

சமுதாயம்

        tholkaapiyam 400    மனித குரங்கு மனிதனாக மாறிய வரலாற்றுச் சகாப்தத்திற்குப் பின்னர், கூட்டமைப்பு வாழ்வை மேற்கொண்ட மனிதக் குழுக்கள், உணவுக்காகப் பெரும் போராட்டத்தைச் சந்தித்தன. உணவுப் பற்றாக்குறையால் பல்வேறு குழுக்களுக்கிடையே  ஓயாது சண்டைகள் நிகழ்ந்தன. இக்குழுக்களில் தலைமைகள் உருவாகினர். தலைமைகள் குழுக்களைக் கட்டுப்படுத்தத் தொடங்கினர். நாளடைவில் மக்களை அடிமைகளாக்கி ஆளத்தொடகினர். இச்சூழ்நிலையை,

  “புராதன சமுதாயம் சிதைவுற்று, உற்பத்தியாளர்களுக்குத் தேவையானதற்கு  உபரியாய் இருந்த, உற்பத்தியாளர்களுடைய உழைப்பால் பொருட்களைத் தோற்றுவிக்க முடிந்த பிற்பாடு தான் சுரண்டல் தலை தூக்கிற்று” (ப. 20, லெவ் லியோண்டிவ்) அது முதல் பொருளியல் ஒடுக்கு முறையை உடைமை வர்க்கம் செலுத்தி அரசு, படைப்பிரிவு ஆகியவற்றை உருவாக்கியது.

“வரலாறு கண்டிருக்கும் ஐந்து அடிப்படை உற்பத்தி முறைகள் வருமாறு: புராதன சமுதாய (Primitive-Communal) அமைப்பு, அடிமையுடைமை (Slave-Owing) அமைப்பு, பிரபுத்துவ (Feudal) முதலாளித்துவ அமைப்பு (Capitalist) (பக். 5 லெவ் லியோண்டிவ்) மற்றும் ஏகாதிபத்திய அமைப்பு ஆகும். இத்தகைய அமைப்பு முறைகளே வரலாறு கண்டிருக்கும் சமுதாய அமைப்பு முறைகளாகும்.

            புராதன அமைப்பானது வர்க்கப் பிரிவினை இல்லாதச் சமுதாயமாக இருந்தது. இவ்வமைப்பிற்குப் பின்னர் ஏற்பட்ட அடிமையுடைமை அமைப்பில் அடிமை முறை நிலை கொண்டது. பிரபுத்துவ அமைப்பு முறையானது பொருளாதார ஒடுக்குமுறையை அடித்தளமாக்கி, பின்னர் அதன் கூறுகளாக பல்வேறு வகையான ஒடுக்குமுறைத் தளத்தினை விரிவுபடுத்தி இனம், பால், மொழி, சாதி போன்ற பல்வேறு நிலைகளில் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை நிகழ்த்தியதை அறிய முடிகிறது. இத்தகைய கட்டமைப்பு முறையே தொல்காப்பியக் காலச் சமுதாயத்தில் நிலவி வந்துள்ளதை உணர முடிகிறது.

தொல்காப்பியர் காலச் சமுதாயம்

            பொருளியல் சார்ந்த ஒடுக்குமுறைகள் நிலை பெற்று, அதன் கூறான குலம் சார்ந்த ஒடுக்குமுறைகளும் நிகழ்ந்துள்ளதை, அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்களின் தொழில் ரீதியான உறவு முறைகளின் அடிப்டையில் அறிய முடிகிறது. இதன் மூலம் ஏற்றத் தாழ்வு மிகுந்த, வர்ணாசிரமக் கோட்பாடுகளின் அடிப்படையில், மன்னர் சமுதாயக் கட்டமைப்பு நிலை கொண்டிருந்ததைக் காண முடிகிறது.

            அதிகாரத்தில் இருந்தோர்களின் வாழ்வியல் முறை செயல்பாடுகளையே தொல்காப்பியம் முன்னின்று கூறி செல்கிறது. உயர்ந்தோர், தாழ்ந்தோர் இவர்களின் நிலையை வெளிப்படுத்தியும், தலைமைகளின் காதல் வாழ்க்கை, திருமணம்-திருமண முறைகள், இந்நிகழ்வுகளில் அவர்களின் கூற்றுக்கள், அதற்கு துணை புரிந்தவர்கள் முதல், போர்மரபுகள், நிலையாமை கருத்துக்கள் வரை வெளிப்படுத்துகின்றன.

1.உடைமை வர்க்கமும், வர்ணாசிரமக் கோட்பாடுகளின் வெளிப்பாடுகளும்

            மக்கள் பெருக்கம், சமுதாயத்தின் வேலைப் பிரிவினைக்கு அவசியமாய் அமைந்தன. உற்பத்திப் பண்டங்கள் பெருக, பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டதும் இந்நிலை வளர்ந்தது.

            “உற்பத்திப் பண்டங்கள், கடமைகள் வேலைகள் ஆகியவை பல்வகைப்பட்டவையாக வளர்ந்த காரணத்தால், ஆரிய கம்யூனுக்குள் வேலைப் பிரிவினைத் தொடங்கியது. முழு கம்யூனின் உறுப்பினர்கள் வேறுபட்டு, வெவ்வேறு வேலைகளுடன் பிணைக்கப்பட்டு வர்ணங்களாக உருப்பெறுகின்றன” (எஸ்.ஏ.டாங்கே, பக். 118)

            வர்ணப் பாகுபாடு மிகுந்த வளர்ச்சியடைந்த தொல்காப்பியர் கால தமிழகத்தில் “அந்தணர்கள்” அதிகார தலைமைகளாக இருந்துள்ளனர். ஓதல், தூது ஆகிய இரு தொழில்களும் இவர்களுக்குரியதாக இருந்ததை, “ஓதலும், தூதும் உயர்ந்தோர் மேன” (தொல். அகம். 28) என்ற பாடல் சுட்டுகிறது. இத்தொழில்களை உடையவர்களே உயர்ந்தவர்கள் என்று அந்தணர்களை குறிப்பிடுவதைக் காணலாம்.

            “உயர்ந்தோர் பொருள் வயின் ஒழுக்கத்தான” (தொல். அகம். 36) என்று – ஒழுக்கமே இவர்களின் பொருளாகவும், “வேண்டிய கல்வி யாண்டுமுன் றிறவாது” (தொல். கற்பு. 186) என்று கல்வி காரணமாக பிரிவு காலமானது, 3 ஆண்டுகள் ஆகும் என்பதையும் குறிப்பிடுகிறது. “அந்தணாளர்க் கரசுவரை வின்றே” (தொல். மரபு. 627) என்று அரசியல் பூண்டொழுகலும் விலக்கப்படாது என்றும் குறிப்பிடுகிறது. மேலும் அந்தணர்களுக்குரிய பொருட்களாக, “நூலே கரகம் முக்கோல் மணையே / ஆயுங் காலை அந்தணர்க் குரிய” (தொல். மரபு. 615)

நூல், கரகம், முக்கோல், மணை ஆகியவற்றை ஆராயுமிடத்து இவைகள் அந்தணர்க்குரியவை என்றும் குறிப்பிடுகிறது. இதன் மூலம் பண்டைய சமுதாயத்தில் அந்தணர்களே உயர்ந்தோராகவும், அதிகாரத்தில் முதன்மையானவர்களாகவும் இருந்திருப்பதை அறிய முடிகிறது.

அரசர்

            அந்தணர்களுக்கு அடுத்த அதிகார பீடத்தில் இருந்தோர்கள் வேந்தர்களாக இருந்திருக்கின்றனர். இவர்களுக்குரிய தொழிலாக போர்த் தொழிலே இருந்துள்ளது.

“தானே சேறலும் தன்னொடு சிவணி, / ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே” (தொல். அகம். 29) என்ற பாடல், வேந்தன் தானே செல்லுதலும், ஏனையோருடன் வேந்தன் செல்லுதலுமாககிய, போர்த் தொழிலே, வேந்தனுக்கு உரியது என்றும், “வேந்துறு தொழிலே யாண்டினது அகமே” (கற்பு. 187) என்று ஓராண்டிற்கு உட்படவே இத்தொழில் அமையும் என்பதையும் குறிப்பிடுகிறது. மேலும்,

“படையுங் கொடியுங் குடியும் முரசும்

நடை நவில் புரவியும் களிறுந் தேறும்

தாரும் முடியும் நேர்வன பிறவும்

தெரிவுகொள் செங்கோல் அரசர்க்குரிய” (தொல். மரபு. 616) என்று படை, கொடி, குடி, முரசு, குதிரை, களிறு, தேர், தார், முடி ஆகிய ஒன்பதையும் வேந்தர்க்கு உரிய பொருட்களாகக் குறிப்பிடுவதைக் காண முடிகிறது.

            அந்தணர்க்குரிய பொருட்கள் சில, அரசர்க்கு உரியனவாக வரும் என்றும், அரசர்க்கு உரியன, அந்தணர்களுக்கும் வரும் என்றும், மரபியல் நூற்பாக்கள் 616, 617 ஆகியன குறிப்பிடுகின்றன. இதன் மூலம் இவர்கள், அதிகாரப் பீடத்தில் இருந்துள்ளதையும், அந்தணர்கள் கட்டமைப்பில் வாழ்ந்திருக்கின்றனர் என்பதையும் அறிய முடிகிறது.

வணிகர் குலம்

            வைசிகர்கள் வாணிகத்தினால் வாழும் வாழ்க்கையை உடையவர்களாக இருந்திருக்கின்றனர். இதனை, “வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” (தொல். மரபு. 622) என்றும், மேலும்,

“மெய்திரி வகையின் எண்வகை உணவின் / செய்தி வரையர் அப்பா லானே” (தொல். மரபு. 623) என்று “எண்வகை உணவான நெல், காணம், வரகு, சிறுங்கு, திணை, சாமை, புல்லு, கோதுமை (புலியூர் கேசிகன், பக். 451) ஆகிய உணவுகளை செய்து விளைவித்தலும் இவர்களது கடனாகும் என்றும் கூறுவதை காண முடிகிறது.

“கண்ணியும் தாரும் எண்னிர் ஆண்டே” (தொல். மரபு. 624)

என்ற நூற்பா இவர்களுக்குரியப் பொருட்களாக கண்ணி, தார் – எனவும் குறிப்பிடுகன்றன. இதன் மூலம் இவர்கள் வணிகத் தொழிலில் ஈடுபட்டதையும், வேந்தனின் ஏவல் வழியில் வாழ்ந்திருப்பதையும் அறிய முடிகிறது.

வேளாளர்

            மேற்கூறிய மூவர்க்கும் கீழ்நிலையில் இருந்த வேளாளர்களை,

“வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது / இல்லேன மொழிப பிறவகை நிகழ்ச்சி” (தொல். மரபு. 625)

என்று வேளாளர்களுக்கு உழுதூண் வாழ்க்கையே உண்டு என்றும், பிற வகையான நிகழ்வுகள் ஏதுமில்லை எனவும் வெளிப்படுத்துகிறது. இவர்களுக்கு உரியப் பொருட்களாக,

“வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும் / வாய்ந்தன ரென்ப வவர்பெறும் பொருளே” (தொல். மரபு. 626) என்று, வேந்தரால் ஏவப்பட்ட தொழிலினாளே, படையும், கண்ணியும் வேளாண் மாந்தர்க்கு உரியப் பொருட்களாக, மேற்கூறிய பாடல்கள் குறிப்பிடுவதைக் காண முடிகிறது.

அரசரால், வணிகர், வேளாளர் பெரும் பொருட்கள்

அரசரின் ஏவல் வழி செல்லுபவர்கள் வணிகரும், வேளாளரும் ஆவர்-என்தை, “மன்னோர் பாங்கின் பின்னோர் ஆகுப” (தொல். அகம். 34) என்றும், அரசரால் இருவரும் பெருகின்ற பொருட்களாக, “வில்லும் வேலும் கழலும் கண்ணியும்/தாரும் ஆரமும் தேரும் மாவும்/மன்பெரு மரபின் ஏனோர்க்கு முரிய” (தொல். மரபு. 628) என்று வில், வேல், கழல், கண்ணி, தார், மாலை, தேர், மா, ஆகிய படைப் பொருட்களை பெற்றவர்கள் என்பதையும் விளக்குகிறது. இப்பொருட்கள் அனைத்தும் போர் தளவாடப் பொருட்களாக இருப்பதால் வேந்தரின் ஏவல் வழி, இப்பொருட்களைப் பாதகாப்பது முதல், படை தளபதிகளாகக் கூட இவர்கள் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று கருத இடமுண்டு.

            அக்கால சமுதாயத்தில் 4 வர்ணத்தாரில் கீழ்நிலையில் இருந்த வணிகர், வேளாளர் – குலங்களிலே ஏனைய மக்கள் இழிநிலையினராகப் பண்டைய தமிழகத்தில் கருதப்பட்டிருக்கின்றனர். இதனை, “அன்ன ராயினும் இழிந்தோர்க் கில்லை” (தொல். மரபு. 629) என்ற நூற்பாவானது இழிந்தோர்களுக்கு, வணிகர், வேளாளர்களில் உயர்ந்த இடத்தில் இருந்தவர்களுக்கு உரிய தகுதிகள் அக்குலங்களிலேயே உள்ள ஏனையோர்க்கு இல்லை எனவும் குறிப்பிடுவதன் மூலம் அறிய முடிகிறது.

நான்கு வர்ணத்தார்களும் செல்லும் பொது இடங்கள்

            தனித்தனி அதிகாரத் தன்மைகளில் தொழில் முறைகளில் தனித்திருந்து, உயர்ந்தோர், தாழ்ந்தோர் என அமைந்த அக்கால சூழலில் நான்கு வர்ணத்தார்களும் செல்லும் பொதுஇடங்கள் சில இருந்திருக்கின்றன. அவை, 1. நால்வகை நிலத்தினிலும் மக்களையல்லாத தேவர்களின் பூசை விழாக் காரணமாக செல்லுதல். 2. திருவிழா (தெய்வ வழிபாடு) காரணமாகச் செல்லுதல். 3. பொருட் பிரிவு காரணமாக செல்லுதல். 4. பரத்தையிடம் செல்லுதல் ஆகியவை நிகழ்ந்திருக்கிறது என்பதை, “மேவிய சிறப்பின் ஏனோர் படிமையை/…… /இழைத்த ஒண்பொருள் முடியவும் பெறுமே” (தொல். அகம். 30) என்றும், இந்நிலைகள் நான்கு குலத்தாருக்கும் பொதுவானது என்பதை, “மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே” (தொல். அகம். 31) என்று குறிப்பிடுவதன் மூலமும் அறிய முடிகிறது. மேலும், “பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே/நிலத்திரி பின்றஃ தென்மார் புலவர்” (தொல். பொருள். 28) என்று நான்கு குலத்தார்களும் பரத்தையிடம் செல்வது பொதுவானது என்பதையும், இப்பரத்தைகளுக்காக நிலம் விட்டு நிலம் செல்லுதல் இல்லை என்றும் குறிப்பிடுகிறது. இதன் மூலம் நான்கு வர்ணத்தாருக்குமான சில செயல்பாடுகள் பொதுவாக அன்றைய சமுதாயத்தில் நிலவி வந்துள்ளதை அறிய முடிகிறது.

பண்டைய சமுதாயத்தில் காதல்

            அக வாழ்வியலை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிடும் தொல்காப்பியம் ஆளும் வர்க்கத்தினருக்கு ஏற்படுகிற காதல் முறையையே வெளிப்படுத்துகிறது. இது தலைவன், தலைவி கூற்றுக்களாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. தலைவன் எனப்படுவோரின் தகுதிகளாக, “பெருமையும், உரனும் ஆடுஉ மேன” (தொல். களவு. 95) என்று பெருமை, வீரம் ஆகியவற்றை குறிப்பிடுகிறது. “தேரும் யானையும் குதிரையும் பிறவும்,/ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்ப” (தொல். பொருள். 209) என்று தேர், யானை, குதிரை ஏனைய ஊர்திகள் தலைவனுக்கு உரிய ஊர்திகளாகக் குறிப்பிடுவதன் மூலம் அதிகார தலைமையர்களின் காதல் வாழ்வையே சுட்டி செல்கிறது என்பதை அறிய முடிகிறது.

களவு முறையும், காரணமும்

“ஒன்றே வேறே என்றிரு பால்வயின் / ஒன்றி உயர்ந்த கால தாணையின் / ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப / மிக்கோ னாயினும் கடிவரை இன்றே” (தொல். களவு. 90) என்ற இந்நூற்பா களவு முறை உருவாகுவதற்குரிய காரணத்தையும், யார் யாருக்கு காதல் உருவாகும் என்பதையும் கூறுகிறது. அவையாவன, ஒருவனும் ஒருத்தியும் ஊழ்வினையால், பிறப்பு முதலிய 10 குணங்களையுடைய இருவரும் எதிர்ப்பட்டு காதல் கொள்வர் என்ற கருத்தை வெளிப்படுத்துகிறது. 10 குணங்களாவன, “பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு / உருபு நிறுத்த காம வாயில் / நிறையே அருளே உணர்வொடு திருவென / முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே” (தொல். மெய். 90) என்று பிறப்பு, ஒழுக்கம், ஆண்மை, ஆண்டு, அழகு, அன்பு, நிறை, அருள், அறிவு, செல்வம் ஆகிய பத்து வகையான தன்மைகள் இருப்பவர்களுக்கே காதல் நிகழும் என்றும், அவையே மெய்ப்பாட்டிற்குரிய ஒப்புமைகளாகவும் குறிப்பிடப்படுகின்றன. இதன் மூலம் அச்சமுதாய சூழலில், மேற்கூறிய குணங்களை உடையவர்கள் அதிகாரத்தில் இருந்தோர்களே எனலாம். இதன் மூலம் அதிகாரத்திலிருந்தோரின் காதல் நிலையையே இந்நூல் சித்தரித்துள்ளது.

            அது மட்டுமின்றி அடியோர்கள், ஏவலாளர்கள் ஆகியோர்களுக்கு இக்களவு முறை பொருந்தாது என குறிப்பிடுவதை பின்வரும் நூற்பாக்கள் உறுதி செய்கின்றன. “அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் / கடிவரை இலபுறத் தென்மனார் புலவர்” (தொல். அகம். 25) என்று பிறருக்கு அடிதொண்டு செய்து வாழ்வோர்களுக்கும், ஏவல் வழி நின்று வினை புரிவோர்களுக்கும் ஐந்திணை இன்ப ஒழுக்கம் பொருந்தாது என்றும், மேலும், “ஏவல் மரபில் ஏனோரும் உரியர் ஆகிய / நிலைமை அவரும் அன்னர்” (தொல். அகம். 26) என்று அதிகாரம் படைதோர்களின் ஏவல் வழி நின்று செயல்படும் மரபில் உள்ள ஏனையோருக்கும், இக்காதல் பொருந்தாது என்றும் குறிப்பிடுவதை மேற்கூறிய பாடல் வரிகளின் மூலம் அறிய முடிகிறது.

            வர்ணாசிரமக் கோட்பாட்டில் உயர்ந்தோராக இருந்த அந்தணர், அரசர் தவிர்த்து ஏனையோர்க்கு இக்களவு முறை பொருந்தாது என்றும், கீழ்நிலையில் இருந்தோர்கள் அறம், பொருள், இன்பம்-வழுவ மகளிரைக் காதலித்தனர். ஆதலால் தாழ்வான ஒழுக்கங்களாகிய கைக்கிளை, பெருந்திணையே இவர்களுக்கு உரியதாகும் என்றும் விளக்குவதைக் காண முடிகின்றன.

கீழ்நிலையாளர்க்கு குறிப்பிடும் ஒழுக்கங்கள்

            அன்றைய சமுதாயத்தில் முறைகெட்ட தாழ்வான ஒழுக்க முறைகள் பல நிகழ்ந்துள்ளன. அவை யாவும் ஏவல் வழியாளர்கள், வினைவலர்கள், ஏவல் வழியில் ஏனையோர்களக்கு உரியதென, பெருவாரியான மக்களை இழிவுபடுத்தி இந்நூலில் கூறப்பட்டிருக்கிறது. கைக்கிளையாவன, “காமஞ் சாலா இளமை யோள்வயின் / ஏமஞ் சாலா இடும்பை எய்தி / நன்மையும் தீமையும் என்றிரு திறத்தான் / தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச் / சொல்லெதிர் பெறாஅன் சொல்லி இன்புறல் / புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே” (தொல். அகம். 53) இந்நூற்பாவின் கருத்துக்களாவன, காமவுணர்ச்சியே தோன்றாத இளையவளிடத்தில் பாதுகாவல் இல்லாத சூழலில் அவளை துன்புறுத்திப் புகழ்தலும், பழித்தலும், தனக்கும் அவளுக்குமான ஒப்புமையுடையவற்றை கூறி, அவள் சொல் கேளாது தானே சொல்லி இன்பமடைகின்ற நிலையும், ‘கைக்கிளை’ என்று கூறி இது கீழோர்க்கே பொருந்தும் என்றும் கூறுகிறது.

பெருந்திணையாவன, “ஏறிய மடல்திறம் இளமை தீர்திறம் / தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் / மிக்க காமத்து டலொடும் தொகைஇச் / செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே” (தொல். அகம். 54)  என்று மடலேறுதல், முதுமையுற்ற காலத்திலும் ஆசை தீராது இன்பம் துய்த்தல், தெளிவித்தற்கரிய நிலையில் காமத்தின் கண் மிகுபட்டு நிற்றல் மற்றும் ஒத்த காமத்தின் நிலையிலிருந்து (களவு) மாறுபட்டு வரும் நிகழ்வுகள் பெருந்திணையாகும் என்றும் குறிப்பிடுகிறது. இத்தகைய தறவான ஒழுக்கங்கள் அனைத்தும் மக்களுக்கே பொருந்தும் என்றும், அதிகார வர்க்கமே தெளிவான, ஒழுக்கமுடைய காதல் நிலையை அடைபவர்கள் என்றும் ஆளும் வர்க்கத்தினரை புகழ்ந்தும், அடிமை வர்க்கத்தினரை இகழ்ந்தும் இந்நூல் குறிப்பிடுவது “ஆளும் வர்க்கத்தை புகழ்ந்து கூறும் நூலாக அமைந்திருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.”

திருமணம்

            “திருமணம் என்பது ஆண் பெண் இருவரிடையே ஏற்படும் நிலைத்த உறவையே குறிப்பதாகும் என்று லோவி (Lowie) என்னும் சமூகவியலாளர் திருமணத்தை வரையறுக்கிறார். குழந்தைகளைப் பெற்று அவர்களை வளர்ப்பதற்காக செய்யப்படும் ஒப்பந்தமே என பாலினோஸ்க்கி திருமணத்தை வரையறுக்கிறார்” (ச.சாவித்ரி) மார்க்கஸ், “ஆணாதிக்க அதிகார வர்க்க சமுதாயத்தால் பெண்ணினத்தின் மீது திணிக்கப்படும் பலவந்த கற்பழிப்பே” என்று விளக்குகிறார். இது போன்று பல்வேறு அறிஞர்கள் திருமணத்தை வரையறுக்கிறார்கள்.

            வரலாற்றில், “தாய் வழி சமுதாயத்தில் திருமண முறையானது பல கணவர் மணம்” எனும் முறையும், பின்னர் “பல தார மணம்” ஆகிய இருவகை திருமணங்களே பெரும்பாலும் நிகழ்ந்ததெனக் குறிப்பிடுவர் (சாவித்ரி) தந்தை வழி சமுதாயமான (ஆணாதிக்கம்) நில பிரபுத்துவ சமுதாயத்தில் “பல தார மணம் முறை” நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இச்சமுதாயத்தில் குழந்தையைப் பெறுவது ஏன் என்று,

            “தகராறுக்கு இடமில்லாத வகையில் தந்தையை உறுதிபடுத்தி, குழந்தைகளை உற்பத்தி செய்வதே அதன் வெளிப்படையான நோக்கமாயிருந்தது. இவ்வாறு தந்தையை உறுதிப்படுத்துவது ஏன் அவசியமாயிற்றென்றால், இந்த குழந்தைகளே, பிற்காலத்தில் அந்தத் தந்தையின் வாரிசுகளாக, அவருடைய சொத்தைப் பெற வேண்டியிருந்ததே காரணம்.” (குடும்பத்தின் தோற்றம்) என்று இச்சூழ்நிலை தந்தைவழி சமூகம் நிலவியிருந்த காலத்தில் மேற்கூறிய கருத்தின் அடிப்படையில் பெண்களை ஆண்கள் கருவியாய் பயன்படுத்திய நிலையை உணர முடிகிறது.

தொல்காப்பியம் காட்டும் திருமணங்கள்

            பண்டைய தமிழகத்தில் 8 வகையான திருமணங்கள் நிகழ்ந்திருப்பதாக குறிப்பிடப்படுகிறது. “இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு / அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் / காமக் கூட்டங் காணுங் காலை / மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் / துறையமை நல்யாழத் துணைமையோர் இயல்பே” (தொல். களவு. 89) இன்பம், பொருள், அறத்துடன் ஐந்திணையில் நிகழும் கூட்டத்தைனை ஆராயுமிடத்து மறையோரால் வரையறை செய்யப்பட்ட, மணம் எட்டனுள்ளும் துறையமை நல்யாழினை யுடையராகிய துணைமையோர் நெறிகள் என்று குறிப்பிடுவதன் மூலம் பண்டைய தமிழகத்தில் 8 வகை திருமணங்கள் நிகழ்ந்ததினை அறிய முடிகிறது.

            “மணம் எட்டாவன: பிரம்மம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்திருவம்,. அசுரம், இராக்கதம், பைசாசம் என்பன. பிரமமாவது கன்னியை அணிகலன் அணிந்து பிரமசாரியா யிருப்பானொருவனுக்குத் தானமாகக் கொடுப்பது. பிரசாபத்தியமாவது, மகட்கோடற்குரிய கோத்திரத்தார் மகள் வேண்டிய வழி இருமுதுகுரவரும் இயைந்து கொடுப்பது. ஆரிடமாவது, ஒன்றானும் இரண்டானும் ஆவும், ஆனேறும் வாங்கிக் கொடுப்பது. தெய்வமாவது, வேள்விக்கு ஆசிரியராய் ஆவும், ஆனேறும் வாங்கிக் கொடுப்பது. தெய்வமாகவது, வேள்விக்கு ஆசிரியராய் நின்றார் பலருள்ளும் ஒருவருக்கு வேள்வித்தீ முன்னர்  கொடுப்பது, காந்ருவமாவது ஒத்த இருவர் தாமே கூடுங் கூட்டம். அசுரமாவது வில்லேற்றினானாதல் திரிபின்றி மெய்தானாதல் கோடற்குரியனெனக் கூறிய வழி, அது செய்தார்க்குக் கொடுத்தல், இராக்கதமாவது தலைகள் தனின்னும் தமரினும் பெறாது வலிதிற் கொள்வது பைசாசமாவது, களித்தார் மாட்டுந் துயின்றார் மாட்டுங் கூடுதல்” (தொல். பொரு. இளம். பக். 7)

            மேற்கூறிய 8 வகை திருமண முறைகளில் பிரசாபத்திய திருமண முறையையும், காந்தர்வ திருமண முறையையும் சிறப்பாக தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

            “கற்பெனப் படுவது கரணமொடு புணர / கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியை / கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே” (கற்பு. 140) என, கற்பென்று சொல்லப்படுவதாவது, திருமணத்தொடு பொருந்தும். கொள்ளுதற்கு உரிய மரபுடைய ஆண், கொள்ளுதற்குரிய மரபுடைய பெண்ணை, கொடுத்தற்கு உரிய மரபினையுடையார் கொடுப்பதும், கொள்வதுமாய் அமையும் என்று மேற்கூறிய நூற்பா, கற்பு எனும் திருமண முறையை விளக்குகிறது. “கொப்போர் இன்றியும் கரணம் உள்டே / புணர்ந்ததுடன் போகிய காலை யான” (தொல். கற்பு. 141) என்ற நூற்பாவானது, கற்பு முறை திருமணமின்றியும், உடன்போக்கு சென்று மணம் செய்யும் கொள்கிற திருமணமும் உண்டு என்றும் வரையறை செய்கிறது.

            வர்ணாசிரம அடிப்படையில் இத்திருமண முறைகள் எவருக்கு பொருந்தும் என்பதை, “மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம் / கீழோர்க் காகிய காலமும் உண்டே” (தொல். கற்பு. 142) மேலோராய் உள்ள 3 குலத்தாருக்கும் பொருந்தும் திருமணமானது கீழோரான வேளாளருக்கும் பொருந்தும் காலச் சூழல் உண்டு என்று குறிப்பிடுவதைக் காண முடிகிறது.

உடைமை வர்க்கமும், பெண்ணியக் கொடுமைகளும்

            தொல்காப்பிய இலக்கண வழி அறியும் பண்டைய கால நிலபிரபுத்துவ சமுதாயம் அதிகார வர்க்கத்தில் இருந்த பெண்களை பெருங் கொடுமைக்கு உட்படுத்தியிருப்பதைக் காண முடிகிறது.

            “மானிட இனமானது பெண்ணுடன் தொடங்குகிறது. மூல மனித இன மரபு நுட்ப அணுக்களைக் கொண்ட இனக் கீற்றை பெண் தான் தாங்கியிருந்தாள். இன்றும் அவளே தாங்கியிருக்கிறாள். எனினும் உலக வரலாற்றில் பெண் பொருளாக பயன்படுத்தப்பட்டதே வரலாற்றின் செய்தி” (ரோஸலிண்ட் மைல்ஸ்) என்ற கருத்திற்கேற்ப பெண்கள் ஆணாதிக்க சமுதாய கட்டமைப்பில் “இன உற்பத்தி செய்யும் கருவியாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.” பெண்களின் தகுதிகள் அனைத்தும் அப்பெண்ணினத்தை அடிமைப்படுத்தியதை அம்பலப்படுத்துகிறது.  “அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் / நிச்சமும் பெண்பாற் குரிய என்ப” (தொல். களவு. 96) என்ற கூற்று அச்சம், மடம், நாணம் – பெண்ணினத்திற்கே உரிய அடிப்படைத் தகுதிகளாக இலக்கணம் கூறப்பட்டுள்ளது. ஆண்களைக் கண்டு பெண்கள் அச்சப்படுவதும், நாணப்படுவதும், நடுங்குவதாகவும் அன்றைய பெண்கள், இருந்திருப்பதை இதன் வழி அறிய முடிகிறது. காதல் நிகழ்வினில், “ஒன்றே வேறே என்றிரு பால்வயின் / …../ மிக்கோனாயினுங் கடிவரை இன்றே” (தொல். களவு. 90) என்ற நூற்பாவில் காதலில் ஆண்மகனுக்கு குணங்கள் கூடியிருந்தாலும், இருக்கலாம். ஆனால், பெண்ணுக்கு குறைந்து தான் இருக்க வேண்டும் என்பது பெண்ணடிமைத் தனத்தினை நன்கு உணர்த்துகிறது.

            நாணம், மடம் பெண்மைக்குரியதால் காதல் நிகழ்வில், “குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை / நெறிப்பட வாரா அவளவயின் ஆன” (தொல். களவு. 106) என்ற பாடலில் களவு கால துவக்கத்தில் குறிப்பால் எதையும் கூற வேண்டுமே ஒழிய வாயால் பேசவே கூடாது என ஆணாதிக்கம் கட்டளையிடும் சூழ்நிலையை காண முடிகிறது. மேலும், “உயிரினும் சிறந்தன்று நாணே நாணிணும் / செயிர்தீர்க் காட்சிக் கற்புசிறந்த தன்றெனத்” (தொல். களவு. 11: 1-2) என்ற பாடல் வரிகள் உயிரை விட நாணம் சிறந்தது. நாணத்தை விட ‘கற்பு’ சிறந்தது என கற்பிலக்கணம் வகுத்து பண்டைய கால நிலபிரபுத்துவ சமுதாயம் பெண்ணினத்தை பொருளாகவே பாவித்து பெருங்கொடுமையை அவர்கள் மேல் சமுதாய பண்பாடாக விதித்திருக்கின்றது.

திருமண வாழ்வியலில் பெண்கள்

            காதல் வாழ்க்கை முறையில் மட்டுமின்றி திருமண வாழ்க்கையும் பெண்ணினத்திற்கு எதிராக அமைந்திருப்பதைக் காண முடிகிறது. அதிகாரத்தில் உயர்ந்தோராக இருந்தவர்களுக்கே களவு நிகழும், வர்களே அறம், பொருள், இன்பம் வழுவாமல் காதல் கொண்டனர் எனக் குறிப்பிடும் தொல்காப்பியம், அவர்களுக்கு பரத்தையையும் அங்ககீகரித்து கூறுகிறது. “பரத்தை வாயில்நால்வர்க்கும் உரித்தே” (தொல். பொருள். 220) என்று குறிப்பிடுவதன் மூலம் காதல் வாழ்க்கை மேற்கொண்டோர், ஒழுக்கமுடையதாக கூறப்படும் திருமண வாழ்க்கையை, வாழ்வை மேற்கொண்டோரே இத்தகைய செயலில் ஈடுபட்டிருக்கின்றனர். இச்சூழ்நிலையால் அதிகார வர்க்கப் பெண்கள் கொடுஞ்சூழலுக்கு தள்ளப்பட்டிருந்ததை அறிய முடிகிறது.

            திருமணங்களில் பெண்கள் ஒரு பொருளாகவே பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள் என்பதை, பிரமம், ஆரிடம், தெய்வம், அசுரம், இராக்கதம், பைசாசம் – போன்ற திருமணங்களில் காண முடிகிறது. தானமாகக் கொடுப்பது, ஆவும் ஆனேறும் வாங்கி கொண்டு கொடுப்பது, வேள்ளித் தீ முன்னர்க் கொடுப்பது, வீரத்தின் மூலம் பெண்ணை பெற்று கொள்வது, வலிந்து பெண்ணைப் பெறுவது, களித்தார், துயின்றார் இடையே கூடி முனைவது ஆகியவையெல்லாம் பெண்ணினத்தை மொத்தமாகவே அசிங்கப்படுத்திய முறையாய் இருந்திருப்பதை அறிய முடிகிறது.

            கற்பு மணம், அன்றைய சமுதாயத்தில் அங்கீகரிக்கப்பட்ட திருமணமாக இருந்திடினும், காந்தர்வ மணம் – சமுதாயத்தால் மறுக்கப்பட்டு பின்னர் ஏற்றுக் கொள்ளுகிற திருமணமாகக் கருதப்பட்டாலும், இத்திருமணத்திற்கு பின்னர் ஆணாதிக்க கொடுமையில் உருவான பரத்தைப் பிரிவால் பெருந்துன்பத்திற்கு பெண்கள் ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். உதாரணமாக, பரத்தை வீட்டிற்குச் சென்று வந்த கணவனை தாய் போல் அரவணைத்தலும், அவனின் சோர்வு காத்தலும் பெண்ணன் கடமையாகும் என்று, “தாய்போல் கழறீத் தழீஇத் கோடல் / ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப / கவ்வொடு மயங்கிய காலை யான” (தொல். கற்பு. 171) என்ற பாடல் வரிகளும், “அவன் சோர்வு காத்தல் கடனெனப் படுதலின் ஸ்ரீ மகன்தாயுயர்புந் தன்னுயர் பாகுஞ் செல்வன் / பணிமொழி இயல்பாக லான” (தொல். கற்பு. 172) இப்பாடலில் சோர்வு காத்து தன் மகனுக்குத் தாயாகிய காம கிழத்தியை தாழ்ந்தவள் எனக் கருதாது, தன்னொடு ஒத்தவளே! எனக் கருத வேண்டும் எனவும் விளக்குகிறது.  மேலும், 178, 179 முதலிய நூற்பாக்களும் பெண்ணினத்திற்கு எதிரான சூழல் நிகழ்ந்ததை வெளிப்படுத்துகிறது. கைக்கிளை, பெருந்திணை பற்றிய பாடல்களின் மூலமும் பெண்கள் சமுதாயம் ஆணாதிக்கத்தால் பெருங் கொடுமைக்கு ளாக்கப்பட்டிருப்பதை மெய்ப்பிக்கிறது.

முடிவுரை

            மேற்கூறியதன் வாயிலாக தொல்காப்பிய இலக்கண நூலின் அடிப்படையில், பண்டைய தொல்காப்பிய கால சமுதாயம் நிலப் பிரபுத்துவ அமைப்பு முறை சமுதாயமாகவும், வர்ணாசிரமக் கோட்பாடுக்கு உட்பட்டு அமைந்த சமுதாயமாகவும் நிலை பெற்றிருந்ததை அறிய முடிகிறது. அந்தணர்களுக்கு ஏனைய அனைவரும் தாழ்ந்தவர்களாகவும், அரசருக்கு வணிகர், வேளாளர் ஆகியோர் தாழ்ந்தவர்களாகவும், வணிகர்க்கு வேளாளர் தாழ்ந்தவர்களாகவும் இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. இம்முறையானது, பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் – எனும் வர்ணாசிரமக் கட்டமைப்பு முறையொடு பொருந்தி அமைந்திருப்பதை காண முடிகிறது. வணிகர், வேளாளர் குலங்களிலேயே அதிகாரப் பீடத்தில் இருந்தவர்களைத் தவிர ஏனைய அனைத்து மக்களும் இழிநிலையினராகக் கருதப்பட்டிருந்ததை அறிய முடிகிறது.

            பண்டைய சமுதாயம் ஆணாதிக்க சமுதாயமாக நிலை கொண்டிருந்ததை அறிய முடிகிறது. அதிகார வர்க்கப் பெண்கள் பல்வேறு வகையான ஒடுக்கு முறைகளுக்கு ஆளாக்கப்பட்டிருந்ததை அறிய முடிகிறது. இந்நூலில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், தவிர்த்து ஏனைய பெருவாரியான உழைக்கும் வர்க்கத்தினரைப் பற்றிய எவ்விதக் கருத்துக்களும் கூறப்படவேயில்லை.

            அடிப்படைத்தேவையான உணவு உற்பத்தியில் ஈடுபடும் விவசாய மக்கள், கலை, கலாச்சாரத்தில் ஈடுபட்ட மக்கள், பல்பொருள் உற்பத்தி செய்த தொழிலாளர்கள், அதிகாரத்தில் உள்ளோர்களுக்கு தொண்டு செய்து வாழ்ந்தோர் போன்ற பல தொழில் புரிந்த அடிப்படை “உழைக்கும் வர்க்கத்தினரைப்” பற்றிய செய்திகள் இந்நூலில் முழுமையும் மறைக்கப்பட்டிருக்கின்றன.

            இதன் மூலம் பெருவாரியான மக்களை இழிநிலையினராக, தீண்டத்தகாதவர்களாக அதிகார வர்க்கத்தினர் கருதியுள்ளதை நன்கு உணர முடிகிறது. இம்மக்களை கேவலமாக, தாழ்ந்த ஒழுக்க நிலையோடு வாழ்ந்தவர்களாகவும், மக்களை அசிங்கமாக்கி, அடிமைகளாக்கி, கொடுமைப்படுத்திய கொடுஞ் சூழல் பண்டைய தொல்காப்பியர் கால சமுதாயத்தில் நிலவியிருந்ததை, இந்நூல் மறைத்துக் கூறி, அதிகார வர்க்கத்தின் நிலையைப் பற்றியே கூறப்பட்டிருப்பதன் மூலம், மக்கன் வரலாறு நம் கண் முன் மறுக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் இருந்ததை தொல்காப்பிய இலக்கணத்தின் மூலம் தெளிவாக அறிய முடிகிறது.

            “ஆளுகின்ற கருத்துக்கள் யாவும் ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களாகவே இருந்திருக்கின்றன” என்ற மார்க்ஸின் கருத்திற்கு ஏற்ப தொல்காப்பியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாழ்வியல் கருத்துக்கள் அனைத்தும், அதிகாரத்தில் இருந்தோர்களின் வாழ்வியல் கருத்துக்களே என்பதை தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ள முடிகின்றது.

பார்வை நூல்கள்

  • தொல்காப்பியம், இளம்பூரணர், புலியூர் கேசிகன், நச்சினார்க்கினியர்.
  • அரசியல் பொருளாதாரம், லெவ் லியோண்டியெவ்.
  • பண்டைய கால இந்தியா, எஸ்.ஏ. டாங்கே.
  • உலக வரலாற்றில் பெண்கள், ரோஸ்லிண்ட் மைல்ஸ்.
  • என்றென்றும் மார்க்ஸ், ஐ.மாதவராஜ்.
  • சமூகவியல், சாவித்ரி.
  • காப்பிய கனிகள் (கட்டுரைத் தொகுப்பு), கட்டுரையாளர், பா.பிரபு.

முனைவர் பா. பிரபு, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம் - 603 306

Pin It