ஒடுக்குமுறையின் பிரதான செயல்முறைகளுள் முதன்மையானது மனிதன் சக மனிதன் ஒடுக்கி, ஒதுக்கி வைத்து வாழும் முறையே யாகும். இவ்வரலாற்று போக்கில் ஆணினம் பெண்ணினத்தை வெறுங் கருவிகளாகவும், விலைப் பொருட்களாகவும் பல்வேறு வகையில் ஒடுக்குமுறை செலுத்தி அவற்றினை சமூகக் கட்டமைப்பாய் பலவந்தப்படுத்தி ஆணாதிக்கம் பல்வேறு வகையான கருத்தினை விதைத்து நடைமுறைப்படுத்தி இருக்கிறது என்பது பண்டைய காலந் தொட்டு வரையும் மறக்க முடியாத நிகழ்வாய் மாறி நிற்கிறது. நாகரீக காலந் தொட்டு இன்று வரையும் பெண் சமுதாயத்திற்கான கொடுமைகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே வருவதையும் ஆணாதிக்கச் சமுதாயம் அன்று முதல் ஏன் இன்று வரையிலும் கூட வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்துள்ளதையும் வரலாற்றின் வழியிலும் ஏன் இன்றைய நடைமுறையிலும் நாம் காண முடிகிறது.
தாய்வழி சமூகத்திற்குப் பின்னர் பெண்கள் பல்வேறு வகையில் சமூக ஒடுக்குமுறைக்குள் ஒருபுறம் சிக்கிக் கிடக்க, அதையும் தாண்டி, ஒடுக்குமுறைக்குள் உள்ளாக்கப்பட்ட பெண்ணினத்தை இன உற்பத்தி செய்யும் வெறுங்கருவிகளைப் போல பயன்படுத்தி அழிக்கவும் செய்ததை பல்வேறு சான்றுகளின் வழியாக மெய்ப்பிக்க முடியும். பழங்காலத்தில் பெண்கள் சமூக விதிகளாய் பல்வேறு ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருந்ததை அறிய முடிகிறது. குறிப்பாக, தந்தை வழி நிலவுடைமை சமூகமாய் நிலவியிருந்த காலத்தில், பெண்களுக்கென பல்வேறு விதிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது.
தொல்காப்பியம் குறிப்பிடும் குடும்பப் பெண்களும், தகுதி நிலையும்
தொல்காப்பியத்தின் தலைவியின் தகுதிகளாக, “அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் / நிச்சமும் பெண்பாற் குரிய” (தொல். களவு. 96) என்று அச்சம், நாணம், மடம் ஆகியவை பெண்ணிற்கே உரிய தனித்த தகுதிகளெனச் சுட்டுகின்றது. ஆணிற்கோ? பெருமையும் உரனும் ஆடூஉ மேன’’ (தொல். களவு. 95) என்று பெருமை, வீரம் பொருந்தியவனே தலைவனென சுட்டிச் செல்கிறது. இவை அடிப்படையில் நேர் எதிரானதாகத் தோன்றுகின்றது. மேலும், காதலில் ஈடுபடும் ஆண், பெண் இருபாலரின் தகுதியை குறிப்பிடும் போது, “ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப / மிக்கோ னாயினுங் கடிவரை இன்றே” (தொல். களவு. நூ. 90) என்று தலைவனை விடவும் தலைவிக்கு தகுதிகள் குறைந்தே இருக்க வேண்டும் என்ற கருத்தும் வெளிப்படுத்தப்படுகிறது.
தலைவன், தலைவிக்கு ஊடல் ஏற்படும் போதும், அல்லது அவள் தம் கருத்தை வெளிப்படுத்தும் போதும் கூட ஊமையாக இருக்க வேண்டிய சூழலே நிலவியது என்பது திண்ணம். இதனை, “உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும் / செயிர்தீர்க் காட்சிக் கற்புசிறந் தன்றெனத்” (தொல். களவு. 111) என்று உயிரை விடவும் நாணம் சிறந்தது; நாணத்தை விடவும் கற்பு சிறந்தது என பெண்ணிற்கு கட்டளையிடும் பண்டைய சமூகத்திய ஆண்கள் பரத்தையர், காமக்கிழத்தியர் வைத்துக் கொண்டு திரிந்ததை எவ்வாறு சமூகம் ஏற்றுக் கொண்டது என்பதே பண்டைய காலச் சூழலை ஆய்ந்து நாம் முன்வைக்கும் கேள்வி. காதல் செய்த பின்னர் தலைவி தலைவனை ஏற்க மறுத்தால் தலைவன் ‘மடலேறுவேன்’ என பெண்ணை அச்சமூட்டுகிறான். ஆனால், “எத்திணை மருங்கினும் மகடூஉ மடன்மேல் / பொற்புடை நெறிமை இன்மை யான” (தொல். அகம். 38) என்று எச்சூழலாயினும் மடலேற எண்ணுதல் கற்புடைய நங்கையர்க்கு நெறியாகாது என்று சமூக விதிமுறையை புகுத்தியதையும், மேலும், “முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை” (தொல். அகம். 37) என்று, கடல் கடந்து செல்லும் ஆண்கள் பெண்களை அழைத்து கொண்டு செல்லாத சூழலையும் அறிய முடிகிறது.
ஆண் திருமணத்திற்கப் பிறகு பரத்தை வீட்டிற்கு சென்று வருகிற போது கூட, மனைவி கோபம் கொண்டாலும், “சொல் லெதிர் சொல்லல் அருமைத் தாகலின் / அல்ல கூற்றுமொழி அவள்வயி னான” (தொல். களவு. 108) என்று தலைவன் சொல்லிற்கு எதிர்சொல் பேசும் உரிமையுடையவளாயினும் பேசுதல் முறையன்று என மேற்கூறிய நூற்பா சுட்டுகிறது. இவை யாவுமே பெண்ணினத்தின் அடிமைத்தனத்திற்கு எடுத்துக் காட்டாய் அமைகிறது. பொதுத்தன்மையில் பெண்களுக்கென பல்வேறு விதிகளை வகுத்து ‘கற்பு’ கோட்பாட்டை உருவாக்கிய அதே சூழலில், காமக் கிழத்தியரையும், பரத்தையையும் உருவாக்கி ‘வெறும் இன உற்பத்தி செய்யும் கருவிகளாகவும், ஆணின் தேவைக்கு, பயன்படும் கருவிகளாகவும், விலை பொருட்களாகவுமே பெண்ணினம் பேரழிவுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.
காமக்கிழத்தியர்
ஆணாதிக்கச் சூழல், ஓர் ஆண் பல பெண்டிரோடும் கூடி வாழுதல் தவறில்லை என்ற கருத்தினை கொண்டிருந்துள்ளது. இந்நிகழ்வு இன்று வரையும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. பண்டைய காலத்தில் திருமணம் செய்து கொண்ட ஆண் இரண்டாவதாக வேறொரு பெண்ணை தம் இச்சைக்கு உபபடுத்தி அவளை தம் கட்டுப்பாட்டில் இருத்துகின்றான். அவளே காமக் கிழத்தி ஆவாள். அதாவது காமம் மட்டுமே பொருளாக கொண்டு அவளோடு அதாவது காமம் மட்டுமே பொருளாக கொண்டு அவளோடு கூடி வாழ்வான் என்று திறனாய்வாளர்கள் குறிப்பிடுவர்.
இளம்பூரணர் காமக்கிழத்தியர், பரத்தையர் ஆகிய இருவேறுபட்ட தன்மையை உடையவரென விளக்குகின்றார். “காமக் கிழத்தியர் பின்முறை ஆக்கிய கிழத்தியர். அவர் மூவகைப்படுவர்: ஒத்த கிழத்தியரும் இழிந்த கிழத்தியரும் வரையப்பட்டாரும் என. ஒத்த கிழத்தியர் முந்துற்ற மனையாளன்றிக் காமம் பொருளாகப் பின்னும் தன் குலத்துள்ளாள் ஒருத்தியை வரைதல். இழிந்தவராவர்-அந்தணர்க்கு அரச குலத்தினும் வணிக குலத்தினும் வேளாண் குலத்தினும் கொடுக்கப்பட்டாராகும். அரசர்க்கு ஏனையிரண்டு குலத்திற் கொடுக்கப்பட்டாரும், வரையப்பட்டார் – செல்வராயினார் கணிகைக் குலத்தினுள்ளார்க்கும் இற்கிழமை கொடுத்து வரைந்து கோடல். அவர் கன்னியில் ‘வரையப்பட்டாரும் அதன் பின்பு வரையப்பட்டாரும் என இருவகையர். அவ்விருவரும் உரிமை பூண்டமையாற் காமக்கிழத்தியர்பாற் பட்டனர். பரத்தையராவார், யாரெனின் அவர் ஆடலும் பாடலும் வல்லராகி அழகு மிளமையுங் காட்டி இன்பமும் பொருளும் வெஃகி ஒருவர் மாட்டுந் தங்காதார். இவருள்ளும் ஒருவரைப் பற்றி மறுதலைப் பெண்டிரைச் சார்த்தி கூறுவனவும் காமக்கிழத்தியர் கூற்றின் பாற்படும்” (பக். 115, தொல். இளம் உரை)
இதன் வழியாக காமக்கிழத்தியர் மூவகையாக இருந்துள்ளனர்.
- ஒத்த கிழத்தியர் – என்பவர் மூத்த மனைவியின்றி காமமே திருமணம் செய்து கொள்வான்.
- இழிந்த கிழத்தியர் – என்பவர் அந்தணர்கள் அரசகுலம், வணிக, வேளாள குலத்திலுள்ளோரை காமத்திற்காக கொடுக்கப்பட்டோர் என்பர். மேலும் அரசர், வணிக வேளாள குலத்தில் கொடுக்கப்பட்டோரும், வணிகர்க்கு வேளாளர் குலத்தினில் கொடுக்கப்பட்டோரும் ஆவர் என்று வருணாசிரம அடிப்படையில் விளக்குகின்றார். நால்வருள் வேளாளர் குலத்தினை சார்ந்தவர்கள் பற்றி இங்கு குறிப்பிடப்படவில்லை.
- வரையப்பட்டார் – என்போர் செல்வர்கள் கணிகக் குலத்தினுள் உள்ளார்க்கும் இற்கிழமை கொடுத்து திருமணம் செய்து கொள்வோர் ஆவர் என்பர். அவர்கள் இருவகையை உடையவர்கள், ஒருவர் கன்னியில் வரையப்பட்டாரும், அதன் பின்பு வரையப்பட்டாரும் என இருவகையர் என்றுரைக்கின்றனர். அவ்விருவரும் உரிமை உடையவராதலால் ‘காமக் கிழத்தியர்’ என அழைக்கப்பட்டனர் என்பர். இதனடிப்படையில் காமக் கிழத்தியர் என்பவர் பரத்தையர் அல்ல என்பதும், அவர்கள் திருமணம் செய்து கொண்ட ஆணின் வேறு இல்ல கிழத்தியாகவும், வெவ்வேறு குலத்திலுள்ளோரே ‘வைப்பாட்டி’ என்ற நிலையில் இருந்தோரும் ஆவர் எனக் கருத இடமுண்டு.
பரத்தையர்
தொல்காப்பிய, சங்க கால சமூகம் பரத்தையை அங்கீகரித்ததை அறிய முடிகிறது. பரத்தையை இற்பரத்தை, காமப் பரத்தை, சேரி பரத்தை, மாயப் பரத்தை எனப் பலவாறாகக் குறிப்பிடுகிறது. பண்டைய சமூகத்தில் உயர்ந்தோர்களாகச் சொல்லப்படுகின்ற அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வரும் பரத்தமைத் தொடர்பைக் கொண்டிருந்தனர். இதனை,“பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே / நிலத்திரி பின்றஃ தென்மனார் புலவர்” (தொல். பொருள். 220) என்ற நூற்பாவின் வழி, பரத்தைமை தொடர்பு கொண்டிருந்ததையும், அவர்கள் நிலம் விட்டு வேற்று நிலத்தினுள் பரத்தை தொடர்பு கொண்டிருப்பது முறையல்ல என்ற கருத்தினை உடையவராக இருந்ததையும் அறிகிறோம். இதன் வழியும்,
“சங்க காலம் ஆணாதிக்கச் சமூக உருவாக்கக் காலம். அதற்கேற்பத் தந்தை வழி சமூகத் தளத்தில் பெண்கள் குடும்பத்திலும், சமூக அமைப்பிலும் இரண்டாம் நிலையிலேயே வாழ்ந்தனர். ஆயின் பழங்கால சமூகத்தின் தொல்லெச்சங்களாக உரிமைப் பெற்றிருந்த மகளிரையும் சங்க இலக்கியம் வழியே அறிய முடிகிறது. கற்புக் கோட்பாடு, கைம்மைக் கோட்பாடு, பரத்தமை அமைப்பு, இவற்றின் வழியே ஆணாதிக்கத்தின் வளர்ச்சி நிலையை காண முடிகிறது” (சமூக நோக்கில் சங்க மகளிர், பக். 9) என்றுரைப்பதன் வழி சமூகச் சூழலை அறிய முடிகிறது. பண்டைய சமூகத்தில் பெண்ணினத்திற்கென ‘கற்பு’ கோட்பாடு ஒருபுறமிருக்க, பரத்தையையும் சமூகம் உருவாக்கிய சூழல் பெண்ணினத்திற்கான ஒடுக்குமுறையின் விரிவு நிலையாகவும் பெருங்க கொடுஞ் சூழலாகவுமே மாறி நின்றதை அறிய முடிகிறது. “செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் / அறிவும் அருமையும் பெண்பாலான” (தொல். நூ. 1155) என்று செறிவு, நிறைவு, செம்மை, செப்பு, அறிவு, அருமை பெண்ணிற்குரிய தகுதிகளாவும், அவை பெண்ணிற்கே உரிய இலக்கணமாக்கிய ஆண்கள் வெட்ககேடான, இழிவான செயலை செய்ததையும் அறிய முடிகிறது. இக்கால சூழலை நன்கறிந்தே, “பிறன்மனை நோக்காத பேராண்மை ஆண்களுக்கு வேண்டும்” என்றார் வள்ளுவர்.
“தலைவன் பரத்தையிற் பிரிவு கொண்டதாகத் தலைவன் கூற்றில் யாண்டும் கூறப்படவில்லை. பரத்தையிற் பிரிவு கொள்ள நினையும் வேட்கை எச்சூழலிலும் தலைவனால் வெளியிடப்படவில்லை. பரிபாடல் ஒழிந்த பிற இலக்கியங்களில் இக்காமக் கிழத்தியர் விலைமகளிராகவோ பொருள் பெண்டீராகவோ காட்டப்படவில்லை; பரத்தை என்ற சொல்லும் பிற இலக்கியங்களில் பயன்படுத்தப்பட வில்லை; இக்காரணங்களைக் காட்டி சங்க அகத்திணை நூல்கள் பரத்தமை மிக்கிருந்த சமுதாய நிலையைப் புனைகின்றன எனக் கூறுவதினும் பரத்தையிற் பிரிவு என்ற இலக்கிய மரபைக் களமாக்கிச் சில உளவியல் அணுகுமுறைகளை அவை விளக்க முனைகின்றன என்பார் டாக்டர் ஆ.இராமகிருட்டிணன். பொது மகளிருடன் புரியும் பரத்தை, சமுதாயத்தில் தடை செய்யப்படவில்லை என்பார் கனகசபை. ஆடல் பாடல்களில் சிறந்து விளங்கிய இவர்கள் செல்வமிக்க பெருங்குடி மக்களின் காதல் கிழத்தியராக விளங்கினர் என அவர் மேலும் குறிப்பிடுவார் …….” ஆகவே, தொல்காப்பியத்தில் கூறப்படும் பரத்தை பற்றிய கூற்று இடைச் செறுகல் என கூறுவோரும் உண்டு. குறிப்பாக அந்தணர் என்போர் அறவோர்’ என்ற கருத்தின்படி தூய்மை ஒழுக்கமுடைய புலனழுக்கற்றவர்களே அந்தணளாளர்கள் என்ற கூற்றின்படி, அவர்கள் பரத்தைத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதும் ஆய்விற்குரியதாய் நம்முன் எழும் வினாவாகும். ஆயின் பரத்தைத் தொடர்பு கொண்டிருந்த அந்தணர்கள் அறவோர் அல்ல என்பதும் புலனாகிறது.
இதைத் தவிர்த்து பண்டையச் சமூகத்தில் மனைவியை விட வேற்று பெண்ணான காமக் கிழத்தியரிடம் உறவு கொண்டிருந்ததை தொல்காப்பியத்தின் காமக் கிழத்தியர் கூற்றின் வழி அறிகிறோம். ‘தலைவன் பிறரிடம் சென்று சேர்தலை அறிந்து ஊடல் கொள்ளும் போதும் மனைவி இன்னபிறர் காமக்கிழத்தியரை இகழ்ந்துரைக்கும் போதும், தலைவனுக்கு புதல்வன் பிறந்தான் என மகிழும் போதும், களவுக்குப் பின்னர் மணம் செய்து கொண்ட மனைவி செய்யும் செயல்களால் தம் பொறுமை கடந்து துன்புறும் போதும், காதல் சோர்வினாலும், இல்லறக் கடமையை செய்ய வேண்டும் என்பதாலும், தலைவியை தாய் போல தழுவி அன்பாகப் பேசி வெறுப்பின்றி தலைவனோடு தலைவியை இணைக்கும் போதும், தலைவனின் புதல்வனைத் தழுவி அணிகலன் அணிவித்து அவனையே வாயிலாகக் கொண்டு வருமிடத்தும், மனைவியை ஒத்தவள் என்ற கருத்தோடு தன்னை ஒத்த ஏனைய மகளிரினும் தானும் உரிமையுடையவள் என நினைக்குமிடத்தும், தலைவனுடன் விளையாடும் விளையாட்டின் கண்ணும் காமக்கிழத்தி பேசுமிடங்களாக தொல்காப்பிய கற்பியலில் 149 ஆம் நூற்பாவானது எடுத்துரைக்கிறது. இதன் மூலம் காமக்கிழத்தியின் தகுதியையும், அவள் பரத்தையரிலிருந்து வேறுபட்டவள் என்பதும் புலனாகிறது. மேலும், 2-வது மனையாளாக இருக்கிற காமக்கிழத்தியே பிற்காலத்தில் ‘செவிலி’ என்ற கருத்தும் தோன்றுகிறது. காரணம், ஓர் குடும்பத்தின் உறுப்பினர்களுள் ‘செவிலி’ க்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஓர் குடும்பத்தின் இரண்டாவது மனையாளாகவே ‘செவிலி’ களவு, கற்பு வாழ்க்கையில் ஈடுபடுகிறாள். குடும்பத்திலுள்ள ஓர் இளம்பெண் வேறு ஒரு ஆணுடன் காதல் வாழ்வில் ஈடுபட, அதனை அறிந்து கொள்ளுதல், வெறியாட்டு நிகழ்த்துதல் தொடங்கி, அப்பெண் ஆண்மகனுடன் உடன்போக்கு சென்று திருமணம் செய்து கொள்ள அவர்களைத் தேடிச் செல்லுதல், இல்லற வாழ்க்கையை உணர்த்துதல் வரையும் ‘செவிலி’யின் பங்கு மிகுந்த முக்கியத்துவம் உடையதாய் காணப்படுகின்றது.
தொடக்கக் காலத்தில் ஓர் ஆடவனின் இரண்டாம் மனையாளாக இருந்த காமக்கிழத்தி பிற்காலத்தில் ‘செவிலி’ என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என கருத முடிகிறது. செவிலி யாரென தொல்காப்பியத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பது நோக்கத்தக்கதாகும்.
குறிப்பாக, திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வை வாழும் தலைவிக்கு அடுத்த நிலையில் இரண்டாவது மனையாளைப் போல துணைவியாக காமக்கிழத்தி இருந்ததை அறிய முடிகிறது. தலைவன் பிறரிடம் சேர்தலை கண்டு உடல் கொள்ளுதல் என்பது தலைவி, காமக்கிழத்தி இருவரையும் விட்டு விட்டு பரத்தையோடும் தலைவன் தொடர்பு கொண்டிருந்துள்ளான். அதுகண் கோபமடைந்து ஊடல் கொண்டவளாகவும், தலைவி காமக்கிழத்தி இகழ்ந்து பேசினாலும், தானும் குடும்பத்தில் ஓர் அங்கமாய் உரிமையுடையவளாய் வாழ்ந்ததும், தலைவி பிள்ளையை தம் பிள்ளையாக எண்ணி வீதியில் சென்ற தலைவியின் பிள்ளையை கண்டு அணிகலன் அணிவித்து வீட்டிற்கு அழைத்து சென்ற செய்தியும் கிடைக்கிறது. இவை யாவும் காமக்கிழத்தியின் செயலென அறிய முடிகிறது.
பரத்தை பற்றிய கருத்துக்கள் இடைச்செறுகல் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு இனத்தினரை தவறானதாகவும், தம் இனத்தினரை மட்டுமே உயர்ந்த இனம் என்ற கருதுகோளை முன் வைத்தே சிலர் கூறிய கருத்தினை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. யாராயினும் ‘நடுவுநிலைமை’ நிற்றல் என்பதுவும் தமிழர் நெறியென மறந்து உரைக்கின்றனர் சிலர்.
பரத்தைப் பற்றிய குறிப்புகள் தொல்காப்பியத்தில் சில இடங்களிலும், சங்க இலக்கியங்களில் பல இடங்களிலும் விரவிக் கிடக்கிறது. சங்க மருவிய இலக்கியங்களிலே பரத்தை உறவுகள் தவறெனவும், நீதி இலக்கியங்களிலேயே பிறன் நோக்கா பேராண்மையும், பரத்தை தொடர்பு தவறெனவும், காப்பிய இலக்கியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலையின் வழியாக ‘மாதவி’ பாத்திரத்தின் மூலமும், மாதவி காமக் கிழத்தி என்ற பரத்தை நிலையை தவிர்த்து போராடிய பெண்ணாகவும், கண்ணகியின் மகளென தம் மகளை கூறியதையும், கணிகையர் குலத்திலிருந்து தம் மகளை விடுவிக்க எண்ணியதையும், அதனால் வேறு மதத்திற்கே அவள் சென்றமையையும் காப்பியத்தின் வழி அறிகிறோம். இன்றும் வரையும் கூட தேவதாசி முறை வரையும், பரத்தை சமூக சூழலையும், அறிகிறோம். ஆகவே ‘பரத்தை’ நிலையை ஒதுக்கி வைத்து நாம் பண்டைய சமூகத்தினை மதிப்பிட முடியாது: கூடாது: பெண்களுக்கு ‘கற்பு’ இலக்கணம் கற்பிக்கப்பட்ட அதே சூழலில் தான் பெண்ணிற்கு ‘காமக்கிழத்தி’, ‘பரத்தை’ என்கின்ற பட்டமும் கொடுத்து சமூகம் பெண்ணினத்தை அழிவிற்கு உள்ளாக்கியிருக்கிறது என்பது மறுக்க முடியாது.
மேற்கூறிய சூழலில் ஆணாதிக்கத்தின் புற வெளியில் பெரும்பான்மை ஆண்கள் இத்தகைய ஒடுக்குமுறையை செய்தார்களா அல்லது அதிகாரத்தில் இருந்தோர், செல்வர்கள் மட்டும் காமக்கிழத்தியரும் மற்றும் பரத்தை தொடர்பும் கொண்டிருந்தார்களா என்பதும் நம்முள் எழும் வினாவாகும்.
பார்வை நூல்கள்
1. தொல்காப்பியம்-இளம்பூரணர், நச்சினார்க்கினியர் சை.சி. நூற்பதிப்பு உரைகள், 2009
2. தமிழர் வரலாறும் பண்பாடும் - ஆ. இராமகிருட்டிணன், சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, மு.ப. 2011 மற்றும் சங்க இலக்கிய நூல்கள்.
- முனைவர் பா.பிரபு, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம் - 603 306, காஞ்சிபுரம் (மா)