ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அறிக்கை சமர்பிப்பு!

கடந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் அரசுப் பள்ளி மாணவரை, சக மாணவர்களே வீடு புகுந்து வெட்டினார்கள். இந்த சம்பவத்தை அடுத்து பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இடையே ஜாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், அதற்கான வழிமுறைகளை வகுக்கவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அவர் விரிவாக ஆய்வு செய்து அறிக்கையை தயாரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார். பள்ளிச்சூழலில் ஜாதிய மோதல்கள், விவாதங்களைத் தவிர்க்கும் பொருட்டு பல நல்ல ஆலோசனைகள் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.mk stalin and justice chandruஅவை பின்வருமாறு :

  • ‘கள்ளர் மறுசீரமைப்புப் பள்ளி, ஆதிதிராவிடர் நலப்பள்ளி போன்றவற்றை நீக்கி, அரசுப் பள்ளி என அழைக்க அரசாணை வெளியிட வேண்டும்.
  • பள்ளிப் பெயரில் ஜாதி அடையாளங்கள் இருக்கக்கூடாது என்ற உறுதிமொழி பெற்ற பின்னரே, புதிய பள்ளித் துவங்க அனுமதி அளிக்க வேண்டும்.
  • தனியார் பள்ளிகளுக்கு ஜாதி பெயர் இருந்தால், அதை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் உட்பட அனைத்து வகையான பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உடனடியாக கொண்டு வர வேண்டும்.
  • உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களை, குறிப்பிட்ட கால இடைவெளியில் இடமாற்றம் செய்ய வேண்டும்.
  • குறிப்பிட்ட ஜாதி அதிகமாக உள்ள பகுதிகளில், அதே சமூகத்தை சேர்ந்தவர்களை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக, மாவட்டக் கல்வி அலுவலராக, தலைமை ஆசிரியர்களாக நியமிக்கக்கூடாது.
  • ஆசிரியர்களை தேர்வு செய்யும் போது, சமூக நீதி சார்ந்த, அவர்களின் நிலைப்பாட்டைக் கண்டறிய வேண்டும்.
  • தலைமை ஆசிரியர்கள் பட்டியலின, பழங்குடியின மாணவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்து ஆய்வு செய்து, ஆண்டறிக்கை தயார் செய்ய வேண்டும்.
  • பள்ளி, கல்லுாரி, பல்கலை ஆசிரியர்களுக்கு நடத்தை விதிகளை உருவாக்க வேண்டும்.
  • சமூக பிரச்னைகள், ஜாதியப் பாகுபாடு, பாலியல் வன்முறைகள், போதைப்பொருள் தடுப்பு போன்றவை குறித்து ஆசிரியர்களுக்குக் கட்டாயம் பயிற்சி தர வேண்டும்.
  • வருகைப் பதிவேட்டில் மாணவர்களின் ஜாதிப் பெயர் இடம்பெறக் கூடாது.
  • ஆசிரியர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஜாதியைக் குறிப்பிட்டு மாணவர்களை அழைக்கக்கூடாது.
  • வகுப்பறையில் கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் பெயர்களை அறிவிக்கக்கூடாது. அவர்களின் ஜாதி விபரங்களை ரகசியமாக வைக்க வேண்டும்.
  • மாணவர்கள் தங்கள் கைகளில் வண்ணக் கயிறுகள், நெற்றியில் திலகம் அணிய தடை விதிக்க வேண்டும்.
  • ஜாதிய அடையாளத்தை குறிக்கும் வகையில் சைக்கிள்களில் வர்ணம் தீட்டக் கூடாது.
  • மாணவர்கள் செல்போன் எடுத்து வர தடை விதிக்க வேண்டும்.
  • ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, கண்டிப்பாக அறநெறி வகுப்புகள் நடத்த வேண்டும்.
  • வட்டாரத்திற்கு ஒரு பயிற்சி பெற்ற ஆலோசகரை நியமிக்க வேண்டும்.
  • ‘மாணவர் மனசு’ என்ற தலைப்பில், மாணவர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க, புகார் பெட்டி வைக்க வேண்டும். அதை பள்ளி நல அலுவலர் வாரத்திற்கு ஒரு முறை திறந்து, அதில் வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் தெரிவிக்கும் மாணவர்கள் பெயரை ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.
  • பள்ளியில் ‘சமூக நீதி மாணவர் படை’ உருவாக்க வேண்டும். இதில், அனைத்து சமுதாய மாணவர்களும் இடம்பெற வேண்டும். அவர்களுக்கு தனி சீருடை, பயிற்சி போன்றவை வழங்கப்பட வேண்டும்.
  • அனைத்து பள்ளி நிறுவனங்களையும், கல்வி அல்லாத பயன்பாட்டிற்கு அனுமதிக்க கூடாது. ஜாதி பிரச்னை அதிகம் உள்ள பகுதிகளில், அரசு சிறப்பு நுண்ணறிவுப் பிரிவை உருவாக்க வேண்டும். அப்பிரிவு சா தி பிரச்னை ஏற்படுவதை முன்கூட்டியே கண்டறிந்து, பிரச்னை ஏற்படுவதை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாஜகவின் ஜாதியவாத முகத்திரை கிழிந்தது!

சந்துரு குழு அறிக்கை சமர்பித்த நாளில் இருந்தே பாஜக - இந்துத்துவ கூடாரங்கள் நிம்மதியிழந்து காணப்படுகின்றன. சென்னை மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் பாஜகவைச் சேர்ந்த பார்ப்பனப் பெண் கவுன்சிலர் உமா ஆனந்தன் சந்துரு அறிக்கையை கடுமையாகக் கண்டித்துப் பேசியதுடன், அதன் நகலையும் கிழித்துள்ளார். அதேபோல, தேனி மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில், பாஜகவைச் சேர்ந்த ஊராட்சிக் குழு துணைத் தலைவரான ராஜபாண்டி என்பவரும் அறிக்கை நகலை கிழித்துள்ளார். பாரதத் தேசத்தை பிரிக்கும் சித்தாந்தங்களைப் போதிக்கும் வகையில் சந்துரு அறிக்கை இருப்பதாக பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி கண்டித்திருக்கிறது.

ஜாதிப் பிரிவினையைப் பாதுகாத்தால்தான் பாரத தேசம் பாதுகாப்பாக இருக்குமென்றால், இது எப்படிப்பட்ட பாரதம் என்பதே நமது கேள்வி. அதுமட்டுமின்றி, “கயிறு கட்டுவது, விபூதி, குங்குமம் வைத்திருப்பதை தடை செய்யச் சொல்வதா?” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா போன்றோர் கொந்தளித்திருக்கிறார்கள். இவையெல்லாம் இந்து அடையாளங்கள் என்கிறார்கள். ‘எதற்காக இந்த கயிறு கட்டி வருகிறீர்கள்?’ என்று அந்த மாணவர்களிடம் கேட்டால், அது தங்களின் ஜாதி அடையாளம் என்று அவர்களே கூறுவார்கள். ஜாதி அடையாளம் தான் இந்து அடையாளம் என்பதை அண்ணாமலையும், எச்.ராஜாவும் ஒப்புக்கொள்கிறார்கள் என்பது இதிலிருந்தே தெரிகிறது.

‘சமூகநீதிப் படை எதற்கு?’ என்றும் அண்ணாமலை கேட்டிருக்கிறார். சாகாக்கள் எதற்கு என்று கேட்க அண்ணாமலைக்கு துணிச்சல் இருக்கிறதா? மதத்தின் பெயரால் மாணவர்களைப் பிளவுபடுத்தும் சாகாக்களைக் கொண்டுதான் நாடு முழுக்க ஆர்.எஸ்.எஸ். வேரூன்றியிருக்கிறது. அந்த வேரில் வெந்நீர் பாய்ச்ச வேண்டுமென்றால், மாணவர்களை மதவாதத்தின் பக்கம் திசைதிருப்பாமல் இருக்க இதுபோன்ற சமூகநீதிப் படை அவசியமானதே.

இன எதிரிகள் எதிர்க்கிறார்கள் என்பது ஒன்றே சந்துரு அறிக்கையின் தேவையை உணர்ந்துகொள்ள நமக்குப் போதுமானது. எனவே தமிழ்நாடு அரசு சந்துரு அறிக்கையை உடனடியாக முழுமையாக அமல்படுத்த முன்வர வேண்டும்.

- பெ.மு. செய்தியாளர்

Pin It