ஜூன் 25, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 94ஆவது பிறந்தநாள். இந்தியாவில் முதல்முறையாக அவருக்கு சிலை அமைத்த மாநிலம் தமிழ்நாடு. திராவிட மாடல் அரசு அவருக்கு முழு உருவச்சிலையை நிறுவி தமிழ்நாடு சமூகநீதி மண் என்பதை இந்திய ஒன்றியத்திற்கே உணர்த்தியது. இந்தியாவில் எந்தவொரு வீதிக்கும் வி.பி.சிங் பெயர் சூட்டியதாக வரலாறு கிடையாது. எந்தவொரு அரசுக் கட்டடத்திற்கும் அவர் பெயரை சூட்டியது இல்லை. தமிழ்நாடு மட்டும் தான் அவருக்கு உரிய மரியாதையை வழங்கியது.

vp singh 358வி.பி.சிங், மண்டல் அறிக்கையின் ஒரு பகுதியான அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்தது தான் இந்திய அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்போது ராமன் கோயில் பிரச்சனையை கையில் எடுத்து வி.பி.சிங் அரசை கவிழ்த்தது பாஜக. அந்த நிலையில் தமிழ்நாடு முதல்வராக இருந்த கலைஞர், வி.பி.சிங்கை தமிழ்நாட்டிற்கு அழைத்து பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தி, தமிழ்நாடு உங்களின் பின்னால் நிற்கிறது என்பதை வி.பி.சிங்கிற்கு உணர்த்தினார்.

அப்போது உணர்ச்சிவயப்பட்ட வி.பி.சிங், நாட்டின் தலைநகராக டெல்லி இருக்கலாம், ஆனால் சமூகநீதியின் தலைநகர் தமிழ்நாடு என்றும், இது பெரியார் – அண்ணா பிறந்த மண் என்றும் ஒவ்வொரு கூட்டங்களிலும் குறிப்பிட்டுப் பேசினார். அவர் முழங்கிய இந்த சமூகநீதி அரசியல் தான், தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மையப் பிரச்சனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதும் மதவாத சக்திகளுக்கு எதிரான ஒரு வலிமை மிகுந்த கேடயமாக இருப்பது சமூகநீதி அரசியல் தான்.

இந்திய அரசியலின் போக்கை மாற்றி, சமூகநீதி அரசியலையே மையப் பொருளாக்கிய வரலாற்றுத் தலைவர் தான் வி.பி.சிங். அவரின் தனித்துவங்கள்

1. கர்நாடகாவில் தனது கட்சி ஆட்சியில் இருக்கும் போதே காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தவர்.

2. மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலை உருவாக்கினார். (InterState Council)

3. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு அடித்தளமிட்டவர்.

4. தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடங்குவதற்கு முன்னோடியாக இருந்தார்.

5. இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த இந்திய இராணுவத்தை திரும்பப் பெற்றவர்.

இப்படி எத்தனையோ சாதனைகளைப் பட்டியலிட்டுக் காண்பிக்க முடியும். ஆனால் அவர் முற்றிலும் மாறுபட்ட ஒரு பிரதமராகத்தான் இருந்தார். தனக்குத்தானே சிபிஐ விசாரணை கமிசனை நியமித்த ஒரே அரசியல் தலைவர் வி.பி.சிங் மட்டும் தான்.

வி.பி.சிங் மகன் செயிண்ட் கிட்ஸ் தீவில் உள்ள வங்கியில் பல கோடி ரூபாய் பணம் போட்டு வைத்திருந்தார் என்று கூறி அன்றைக்கு காங்கிரஸ் கட்சியினர் போலியான ஆதாரங்களை உருவாக்கினார்கள். இதன் பின்னணியில் நரசிம்மராவ், சந்திராசாமி, வெளிநாடுகளில் பணியாற்றிய தூதர்களில் சிலர் மற்றும் அமலாக்கத்துறையினர் இருந்தனர். இது போலியானது என்பதை நிரூபிப்பதற்காக தனக்கு தானே சிபிஐ விசாரணை ஆணையம் அமைத்து தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தார்.

இந்திராகாந்தி சீக்கியர்களால் படுகொலை செய்யப்பட்ட பிறகு டெல்லியில் சீக்கியர்கள் மிகப்பெரிய அளவில் படுகொலை செய்யப்பட்டனர். அந்த சமயத்தில் கடுமையான சீக்கிய எதிர்ப்பு நிலவிவந்த சூழலில் பதவியேற்ற ஒரே வாரத்தில் பஞ்சாப் பொற்கோயிலுக்கு பாதுகாப்புத்துறையின் எச்சரிக்கையையும் மீறி சென்று, அங்கு சீக்கியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு மன்னிப்புக் கேட்ட மனிதாபிமானமிக்க ஒரு தலைவர் தான் வி.பி.சிங்.

மண்டல் பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பிறகு நான் வேறொரு மனிதனாகவே மாறிவிட்டேன் என்று வெளிப்படையாகவே அறிவித்தார். மண்டல் பரிந்துரை அமல்படுத்தப்பட்ட போது வடமாநிலங்களில் தீக்குளிப்புச் சம்பவங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டன. பலர் தீ வைத்துக் கொல்லப்பட்டனர். அப்போது வெவ்வேறு காரணங்களுக்காக இறந்தவர்களை எல்லாம் மண்டல் பரிந்துரைக்கு எதிராக தீக்குளித்து இறந்தனர் என்று பொய்யான செய்திகளை திட்டமிட்டு பரப்பியது வடநாட்டு ஊடகங்கள்.

அந்த சூழ்நிலையில் மாணவர்களுடன் உரையாடுவதற்கு ஒரு குழுவை அமைத்து, அவர்களுக்கு ஒரு வேண்டுகோளையும் வைத்தார் வி.பி.சிங். மாணவர்களே நீங்கள் உயிர் துறக்காதீர், என்னிடம் உங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்காகவாவது நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும் அல்லவா? என்று கேள்வி எழுப்பினார். போராட்டம் கடுமையாக இருந்த சமயத்தில் குஜ்ரால் போன்றவர்கள், மண்டல் பரிந்துரையை ஒத்திவைத்து விடலாம் என்ற போது, இல்லை நான் உறுதியாக இருக்கிறேன் என்று அறிவித்தார் வி.பி.சிங்.

தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்த வி.பி.சிங், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை தீர்மானம் கொண்டுவந்த போது பெரியார், அம்பேத்கர், பூலே பெயர்களை குறிப்பிட்டு பேசிய அவர், ஆயிரம் நாற்காலிகள் இங்கு மாறிப்போகலாம், ஆனால் வி.பி.சிங் ஆகிய நான் இங்கு அமர்ந்து பிறப்பித்த உத்தரவு என்பது காலம் முழுவதும் நீடித்து நிற்கும் உத்தரவு என்பதை பகிரங்கமாக அறிவித்தார்.

வி.பி.சிங் தனது சாதனைகளைக் குறிப்பிடும் போது, செயற்கைக்கோளை விண்ணுக்கு செலுத்தும் போது அதை சுமந்து செல்லுகிற ராக்கெட், செயற்கைக் கோள் மேலே சென்ற பிறகு அது எரிந்து தானாகவே கீழே விழுந்துவிடும். அதே போல் சமூகநீதியை மேலே அனுப்பிவிட்டு, அரசியலில் நான் எரிந்து போயிருக்கிறேன். அது எனக்கு கிடைத்த பெருமை என்றார்.

தேர்தல் அரசியலில் இருந்து விலகிய பின்னர் மக்கள் அரசியலை மேற்கொண்ட தலைவரும் அவர் தான். புது டெல்லியில் தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் அவர்களது வீடுகள் இடிக்கப்பட்ட போது, அவர்களின் வீடுகள் இடிக்கப்படக்கூடாது. அவர்களுக்கு நில உரிமை வழங்க வேண்டும் என்று இரவு பகல் பாராமல் களத்தில் நின்று போராடியத் தலைவர் தான் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்.

இந்தியப் பிரதமர்களிலேயே தனித்துவமிக்க ஒரு பிரதமராக, தமிழ்நாடு கொண்டாடும் சமூகநீதிக்கு வழிதிறந்த வி.பி.சிங் என்றென்றைக்கும் நம் நினைவில் வாழ்வார்!

- விடுதலை இராசேந்திரன்

Pin It