திருநெல்வேலி மாவட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மிக நீண்ட விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். தாக்குதலில் ஈடுபட்ட ஜாதிச் சங்கத்தை சேர்ந்தவர்கள் மீது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து அதில் விளக்கியிருக்கிறார். அத்துடன், “சமூகநீதிக் கொள்கையை தனது உயிர் மூச்சாகக் கொண்டு தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம், பெண் கல்வி - சமஉரிமை - ஜாதி மறுப்புத் திருமணம் ஆகியவற்றை தனது ஆரம்பகாலம் தொட்டே ஆதரித்து வரக்கூடிய இயக்கமாகும். இதனை இந்த அவையில் உள்ள அனைவரும் அறிவார்கள்” என்று குறிப்பிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

ஜாதிப்புனிதம் கெட்டுவிடாமல் பாதுகாப்பதில் தான் இந்து மதத்தின் பெருமை அடங்கியிருக்கிறது. அத்தகைய ஜாதிப் புனிதத்தை காக்க வேண்டிய பொறுப்பு முழுமையாக பெண்களிடமே இருக்கிறது என்கிறது மனு சாஸ்திரம். “பெண்கள் குழந்தைகளாக இருக்கும்போது தகப்பனாரின் கட்டுப்பாட்டிலும் திருமணமான பிறகு கணவனின் கட்டுப்பாட்டிலும் கணவன் இறந்த பிறகு, பிள்ளைகளின் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டுமே தவிர, பெண்கள், தாங்கள் விரும்புகிறபடி (சுயமாக சிந்தித்து) ஒரு போதும் இருக்கக் கூடாது.” என்று மனு சாஸ்திரம் கூறுகிறது. (அத்தியாயம் 5, சுலோகம் 148.). அதாவது ஒரு பெண் தனது பிறப்பு முதல் இறப்பு வரை சுய சிந்தனையோடு வாழவே கூடாது என்பதே மனுசாஸ்திரம் விதிக்கும் நிபந்தனை. அதை ஜாதி இந்துக்கள் அப்படியே பின்பற்றுவதன் அறிகுறியே ஜாதி மறுப்புத் திருமணங்களை எதிர்ப்பதும், அதையும் மீறி நடந்துவிட்டால் தாக்குவதுமான சம்பவங்களுக்குக் காரணமாக இருக்கிறது.

இந்தப் போக்கை தகர்க்க வேண்டுமென்றால், பெண்களை அதிகாரமிக்கவர்களாக மாற்ற வேண்டும். பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகள் அதை நோக்கியே உள்ளது. பெண்கள் அடுப்படியை விட்டுவிட்டு, புத்தகங்களை கையிலெடுக்க வேண்டுமென்று பெரியார் வலியுறுத்தியதும் அதற்காகவே. கல்வி ஒன்றே பெண்களை ஜாதியக் கட்டமைப்பில் இருந்து விடுவிப்பதற்கான அடித்தளத்தை கொடுக்கும். அக்கல்வியில் இருந்து கிடைக்கப்போகும் வேலைவாய்ப்பும், அதிலிருந்து கிடைக்கும் பொருளாதாரத் தன்னிறைவுமே சமூகத்தடைகளை ஒவ்வொன்றாகத் தகர்க்கும். நீதிக்கட்சி காலம் தொட்டு கடந்த ஒரு நூற்றாண்டாக ‘திராவிட மாடல்’ செய்துகொண்டிருப்பதும் அதுவே.

அதை சட்டமன்றத்தில் எடுத்துரைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நெல்லை சம்பவம் போன்ற குற்றங்களை வெறும் குற்றவியல் நிகழ்வாக மட்டும் பார்க்காமல், இதன் சமூகப் பொருளாதார பின்னணிக் காரணிகளை வைத்து அவற்றை ஆராய்ந்து பார்க்கும்போது, குற்றவாளிகளுக்குத் தண்டனையைப் பெற்றுத் தருவது ஒருபுறம் இருந்தாலும், சமுதாயத்தில் பொருளாதார வளர்ச்சியின் மூலமாக பெண் கல்வி உயரும்போதும், கல்வி பொருளாதாரம், வேலைவாய்ப்பில் ஒரு வளர்ச்சி பெற்ற சமுதாயமாக உயரும்போதும் இதுபோன்ற குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். அதுபோன்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவதிலும் நாம் கவனம் செலுத்தி வருகிறோம், அதன் காரணமாகவே, நாம் நடைமுறைப்படுத்தும் புதிய திட்டங்களில் எல்லாம் பெண்களின் வாழ்க்கையை, வாழ்வாதாரத்தை, கல்வியை, அவர்களது உரிமைகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றோம்” என்று கூறியிருப்பது நீண்டகால இலக்கை தெளிவுபடுத்தும் பதிலாக அமைந்திருக்கிறது.

ஜாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிரான அனைத்து குற்றங்களின் வழக்குகளையும் விரைந்து நடத்த சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவர் என முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். சமூக நீதி சிந்தனைகளை உள்வாங்கிய வழக்கறிஞர்களை மட்டுமே இத்தகைய வழக்குகளுக்கு நியமிப்பது ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாதுகாப்பைத் தரும்.

அதேவேளையில், “இதற்கென ஒரு சிறப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதைவிட, தற்போது இதுபோன்ற குற்றங்களுக்கு நடைமுறையிலுள்ள சட்டப்பிரிவுகள், குறிப்பாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில், தீவிரமான, வேகமான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது சரியானது என்று இந்த அரசு கருதுகிறது.” என்று முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கும் வார்த்தைகள் முற்போக்காளர்களை சற்றே அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. கல்வி- வேலைவாய்ப்பு - பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வரும் தமிழ்நாட்டில், ஜாதிய பிற்போக்குத்தனங்களில் இருந்து இளைஞர்கள் விடுபடுவதும் வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் ஒன்றியத்தில் கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியின் மதவாத செயல்பாடுகளாலும், மாநிலத்தில் 10 ஆண்டுகால அதிமுக அரசாலும் ஜாதிச் சங்கங்கள் முன்பை விட இப்போது வலிமையடைந்திருக்கின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற ஜாதிச் சங்கங்களின் பின்புலத்தோடு நடந்தேறும் வன்கொடுமைகள், ஆணவப் படுகொலைகளை கட்டுப்படுத்த வழக்கமான சட்ட நடவடிக்கைகள் மட்டுமே போதுமானதாக இல்லை என்பதை அரசு உணர வேண்டும். ஜாதியவாதிகளின் வளர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் எதிர்மறை தாக்கத்தையே ஏற்படுத்தும் என்பது கண்கூடு. மோடியின் மதவாத ஆட்சியால் ஜாதிச் சங்கங்கள் பெற்றிருக்கும் துணிச்சலையும், ஆணவத்தையும் அடக்கிட “ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம்” இயற்றப்பட வேண்டியது அவசியம் என்பதே பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய இயக்கங்களின் கோரிக்கை. அந்த கோரிக்கையின் நியாயத்தை புறக்கணிக்கும் வகையில் அமைந்திருக்கிறது ‘தனிச்சட்டம் தேவையில்லை’ என்ற முதலமைச்சரின் கருத்து. ஜாதிச் சங்கங்களின் வலுவைக் குலைக்க இத்தகைய தனிச்சட்டம் தேவைப்படுகிறது என்பதை மீண்டும் மீண்டும் அரசுக்கு வலியுறுத்த முற்போக்கு இயக்கங்கள் கடமைப்பட்டிருக்கின்றன. ‘திராவிட மாடல்’ அரசு சிந்திக்க வேண்டும்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It