தமிழரின் வரலாற்றை ஒருங்கே காட்டும் படைப்பாக விளங்குவது புறநானூறு. இந்நூலானது தமிழரின் வீரம், புகழ், கொடைச் சிறப்புகள் எனப் பலவற்றை எடுத்தியம்புகிறது. அதோடு, பழந்தமிழகத்தின் நிலவியல், சமுதாயவியல் சான்றாவணமாக விளங்குகிறது. வீரம் செறிந்த தமிழர் வரலாற்றினை எடுத்துரைக்கும் சங்க நூல்களில் பெரும்பகுதித் தரவுகளைத் தன்னகத்தே கொண்டுள்ள நூல் புறநானூறாகும்.

இந்நூல், பல்வேறு வகைமைகளில் தொகுக்கப்பட்டுள்ளன. அவை திணை, துறை சார்ந்த அமைவுகளில் உள்ளன. தமிழக நிலப்பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள், மூவேந்தர்களும் பேரரசர்களும் சுட்டப்படுகின்றன. அது விரிந்த ஆய்வுக்களத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, மூவேந்தரின் ஆட்சியும் அவற்றின் பகுதிகளும் இது கவனப்படுத்துகிறது. அதிலும் இக்கட்டுரை சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பாடல்களின் வழியாக, அவர்களின் போக்கினை விவரிக்க முயல்கிறது. அதோடு, தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களில் பதிவாகியுள்ள தமிழக நிலப்பகுதி சார்ந்த பகுதிகளையும் கவனப்படுத்தி இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.

தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் காட்டும் தமிழக எல்லைகள்

தமிழில் பல்வேறு இலக்கண, இலக்கிய நூல்கள் பழந்தமிழகத்தின் நிலப்பகுதிகளைச் சுட்டுகிறது. அவை, வெவ்வேறு காலகட்டத்தில் தனித்தனியான புலவர்கள் வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொல்காப்பியம், புறநானூறு, பதிற்றுப்பத்து, மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் போன்ற நூல்களும் பல்வேறு தமிழ் அறிஞர்களும் இதுகுறித்துக் கருத்துரைத்துள்ளனர். அவற்றினை விரிவாகக் காணலாம்.

தொல்காப்பியம்

தமிழின் முதன்மையான இலக்கண நூலானத் தொல்காப்பியம், அதன் பாயிரத்தில் தமிழகத்தின் நிலப்பகுதியைக் குறிக்கிறது. அதாவது, நான்கு எல்லைகளையும் அவற்றின் நிலை குறித்தும் பதிவு செய்கிறது. அப்பாடல் பின்வருமாறு,

வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து

வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்….. (தொல். பாயிரம்)

என நீளும் பாடலின் தொடக்கமே, தமிழகத்தின் இருபெரும் எல்லையை எடுத்துரைக்கிறது. அதாவது, வடக்கில் வேங்கட மலையும் தெற்கில் குமரிமுனையும் அமைந்து தமிழகத்தின் எல்லையாக உள்ளது என உரைக்கிறது. இதில், வேங்கட மலை என்பது எது? என்பதில் அறிஞர்கள், ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. அதாவது, இந்த வேங்கட மலை என்பதுதான் இன்றைய ‘திருப்பதி’ பகுதியா? இல்லை வேறு ஏதாவது நிலப்பகுதியா என்பது தான் அது. குமரிமுனை என்பது இன்றைய கன்னியாகுமரி பகுதிதானா? அல்லது கடல்கொண்ட குமரிநாட்டின் பகுதியா? என்று ஐயம் கொள்கின்றனர். எனினும் தொல்காப்பியரின் கூற்றுபடி, வடக்கே வேங்கடமும்; தெற்கில் குமரிமுனையும் தமிழகத்தின் எல்லையாக விளக்குகிறது என்பதில் ஐயமில்லை.

வன்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்

நாற்பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்

யாப்பின் வழியது என்மனார் புலவர் (தொல்., செய்., 78)

என்ற நூற்பாவின் வழியாக தமிழக நிலப்பகுதியின் நாற்பெரும் எல்லைகளைச் சுட்டிக்காட்டுகிறார் தொல்காப்பியர். அதாவது, ‘நாற்பெயர் எல்லை’ என்பதின் பொருள் நான்கு பெரிய எல்லைகளைக் கொண்ட பகுதியினைத் ‘தண்புகழ் மூவர்’ சேரர், சோழர், பாண்டியர் ஆட்சி செய்ததைச் சுட்டுவதன் மூலம் விளக்குகிறார். இது மேலும் விரிவான ஆய்வுக்குரியது.

சிலப்பதிகாரம்

தமிழில் சிறந்த காப்பியமாக விளங்குவது சிலப்பதிகாரம் ஆகும். இந்நூல், தமிழக எல்லையைக் குறித்துப் பேசுகிறது. அதாவது,

பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்

குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு

தென்திசை ஆண்ட தென்னவன் வாழி (சிலம்பு., 19 - 22)

என்று சிலப்பதிகாரம் காடுகாண் காதையில் காணலாகும் இப்பதிவு, குமரி மலை குறித்தும் கடல் எல்லைகளைக் குறித்தும் விளக்கி நிற்கிறது.

மேலும், பல தமிழ் நூல்களில் தமிழகத்தின் நிலப்பகுதிகள் குறித்துப் பதிவுசெய்கின்றன. அவை விரிந்த ஆய்வுகளுக்கு உரியன. ஆதலால், இங்கு அவை தவிர்க்கப்படுகின்றன. இன்றைய தமிழகத்தின் எல்லைப் பகுதிகளாக ஆறுகளும் மலைகளும் சமவெளிப் பகுதிகள், கடல்கள் எனப் பல்வேறு அரணாக உள்ளது. அதாவது, கிழக்குக் கன்னியாகுமரி பகுதி கடலும்; இந்திய பெருங்கடலும்; அரபிக் கடலும்; வங்காள விரிகுடாவுமாக உள்ளது. அதோடு கர்நாடகம், ஆந்திரம், கேரளம் மாநிலங்களும் எல்லைப் பகுதிகளாக அரசியல் சார்ந்து அமைந்துள்ளதைக் காணமுடிகிறது.

பதிற்றுப்பத்தில் “இசை இமயம் தென்அம் குமரியொடு ஆயிடை” (பதிற்று., 11), “கடவுள் நிலைஇய கல் ஒருங்கு நெடுவரை வடதிசை எல்லை இமயம் ஆக.., ” (பதிற்று., 43) என்ற பாடலிலும் “குணகுட கடலா எல்லைத், தொன்று மொழிந்து தொழில் கேட்ப” (மதுரைக்., 70 -72) என்ற பாடலும் இமயம் முதல் குமரி வரை தமிழக அரசர்களின் எல்லையாக இருந்ததைச் சுட்டுகிறது.

இவ்வாறான, இலக்கண, இலக்கிய நூல்களின் வழியாகவும் இன்றைய நிலவியல் எல்லைப் பகுதிகளையும் காணலாம். அதனால், தமிழக மூவேந்தர்களும் தமிழகத்தின் மூன்று வெவ்வேறு பகுதிகளை ஆட்சி செய்துள்ளனர். எனினும், மூவருக்குள்ளும் அடிக்கடி போர்களும் பூசல்களும் நடைபெற்றுள்ளதை அறியமுடிகிறது. அதனால், எல்லைப் பகுதிகளும் மாறிமாறி அமைந்துள்ளது.

நிலம் என்னும் இயற்கை

உலகில் நிலம் என்பது பல்வேறு இணைவுப் பொருட்களால் அமைந்துள்ளது. குறிப்பாக, ஐம்பூதங்கள் என்பவைகள் முதன்மையான இடம்பெறுகின்றன. அவை நீர், காற்று, வானம், தீ, என்பவையாகும். நிலத்தில் இவை நான்கும் ஒன்றாக கலந்து நிற்கின்றன. இதுகுறித்துப் பின்வரும் புறநானூறு பாடல் ஒன்று விளக்குகிறது.

மண் திணிந்த நிலனும்,

நிலன் ஏந்திய விசும்பும்,

விசும்பு தைவரும் வளியும்,

வளித் தலைஇய தீயும்,

தீ முரணிய நீரும், என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை போல… (புறம்., 2)

என்று ஐம்பெரும் கூறுகளைச் சுட்டிக்காட்டுகிறது. இவைகளை, நிலம் என்பதற்குள் நீரும், காற்றும், தீயும், வான்வெளியும் அடக்கமாய் உள்ளதை உணர்த்துகிறது.

புறநானூறு சுட்டும் நிலவெல்லை பகுதிகள்

புறநானூற்றின் சில பாடல்களின் வாயிலாக தமிழக நிலப்பரப்பினைச் சுட்டிகிறது. அதாவது, ஆட்சி செய்த மன்னர்களும் அரசர்களும் தங்களின் எல்லையை விரிவுபடுத்த எண்ணினர். அதன் காரணமாகப் போர்களும் நிலவெல்லை விரிவாக்கமும் உருவாயின. இதனைத் தமிழர்களின் வீரம் சார்ந்த பதிவுகளாகக் காணமுடிகிறது. கடல் கடந்தும் தமது எல்லைகளை உண்டாக்கியுள்ளனர். ஜாவா, சுமித்ரா, இந்தோனோசியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகள் வரை தமிழர்களின் படையெடுப்பும் நிலவெல்லையும் இருந்ததைப் பல பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

இந்த அடிப்படையில் புறநானூற்றில் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனைப் பற்றி முரஞ்சியூர் முடிநாகராயர் பாடிய பாடல் ஒன்றில், பாரதப் போர் நடைபெற்ற காலத்தில் இருபெரும் படைகளுக்கும் உணவு அளித்ததைக் கூறுகிறது. அதில், ‘குடகடற் குளிக்கும்’ என்ற அடிகளுக்கு உரையெழுதும் ஆசிரியர்கள், ‘தமிழக எல்லை முழுதும் ஆண்ட தன்மையன்’ என்று பொருளுரைக்கின்றார். இம்முறையில் நோக்குகையில், தமிழக மன்னான பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் தமிழகம் முழுவதும் ஆட்சி செய்தும் பிற நாடுகளில் தம் கொடைச்சிறப்பினை உணர்த்தினான் என்பது தெளிவாகிறது.

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரிக்கிழார் பாடிய பாடலில்,

வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,

தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,

குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்,

குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும், (புறம்., 6)

அரசனை வாழ்த்துகையில், ‘வடதிசையில் பனிபடரும் இமயமும் தென்திசையில் கன்னியாற்றுக்குக் கிழக்குத் திசையில் கடலுக்கும் மேற்குத் திசையில் கடற்பரப்புக்கும் என எல்லைகள் கொண்டு அடங்காத அச்சமும் புகழும் கொண்டவனே’ என உரைக்கிறார். இதன்மூலம் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் எல்லைப் பரப்பும் நாட்டின் நிலவெல்லைகளும் ஆட்சித் திறமையையும் காரிக்கிழார் பாடியதன் வழி உய்த்துணர முடிகிறது.

குறுங்கோழியூர் கிழார் பாடிய பாடல் தமிழகத்தின் நிலவெல்லை மேலும் சுட்டி நிற்கிறது. அதாவது,

தென்குமரி, வட பெருங்கடல்,

குண குட, கடலா எல்லை,

குன்று, மலை, காடு, நாடு

ஒன்று பட்டு வழிமொழிய… (புறம்., 17)

இதன் விளக்கமாக, ‘தென்திசையில் கன்னியையும் வடதிசையில் இமயத்தையும் கிழக்கு மற்றும் மேற்குத் திசைகளில் கடற்பரப்பையும் எல்லைகளாகக் கொண்டு இவ்விடைப்பட்ட நிலம் விளங்கும்’ என அமைந்துள்ளது. அந்த இடைப்பட்ட நிலம்தான் தமிழர்களின் ஆட்சிப் பகுதியாக இருந்துள்ளதைக் காணமுடிகிறது. குறிப்பாக, மேற்கண்ட பாடலானது பாண்டிய மன்னர்களைக் குறித்து நிற்கிறது.

சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடிய பாடல் அவர்கள் ஆட்சி செய்த சிறப்பினைச் சுட்டுகிறது.

விழவுடை ஆங்கண் வேற்றுப் புலத்து இறுத்து,

குணகடல் பின்னது ஆக, குட கடல்

வெண்தலைப் புணரிநின் மான்குளம்பு அலைப்ப… (புறம்., 31)

பகைவர் நாட்டின்மேல் படையெடுத்துச் சென்று, நாட்டின் எல்லையை விரிவுபடுத்திய செய்தியினை இப்பாடல் உணர்த்துகிறது. குறிப்பாக, கடல்மேல் சென்று போர் நிகழ்த்தியது, நிலவெல்லை விரிவாக்கத்தைச் சுட்டுகிறது. இதன்மூலம் தமிழக அரசர்களின் நாடுகளின் எல்லைப் பகுதி என்பது கடல் கடந்தும் இருந்ததை அறியமுடிகிறது. இதேபோன்று, மற்றொரு பாடலின் மேற்குத் திசை கடலில் சென்று போரிட்டதைக் குறிப்பிடுகிறது.

அண்ணல் யானை என்னின், கொங்கர்க்

குடகடல் ஓட்டிய ஞான்றைத்

தலைப் பெயர்த்திட்ட வேலினும் பலவே! (புறம்., 130)

இப்பாடலானது, அரசனது கொடைச் சிறப்பினைக் கூறுப்படுகையில், மேற்குக் கடலினை நிலவெல்லையாக குறிக்கிறது. இந்தப் பாடலினை முடமோசியார் என்ற புலவர் பாடியுள்ளார்.

பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை வடம் வண்ணக்கன் பேரிசாத்தனார் பாடிய பாடல் ஒன்று. தமிழகத்தையே போரிட்டு வெற்றி பெற்று, ஆட்சி செய்யும் அரசனே என வாழ்த்திய நிலையில் அமைந்துள்ளது. எனினும் புகழ்பாடுதல் என்பதனைக் கடந்து, பாண்டிய அரசன் தமிழகம் முழுதும் ஆட்சி செய்துள்ளமையும் புலப்படுகிறது. இதனை,

தண்தமிழ் வரைப்பகம் கொண்டியாக,

பணித்துக் கூட்டு உண்ணும் தணிப்பு அருங்கடுந்திறல்

நின் ஓரன்ன நின் புதல்வர்… (புறம்., 198)

என்னும் இப்பாடலுக்கு விளக்கவுரையில், ‘தமிழ்நாடு எல்லை முழுதும் என்று கவர்ந்ததுடன், பகைவரைப் பணித்து, அவர்தரும் பொருள்களையும் பெற்று வந்து உண்ணும் தணித்தற்கினிய வலிமையுடையவன் நீ’ எனக் கூறுகின்றார். இதன்வழி தமிழக எல்லை முழுவதும் ஆட்சி புரிந்துள்ளமை புலப்படுத்துகிறது.

சோழன், குளமுற்றுத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் பாடிய பாடல் நான்கு திசைகளை குறிக்கிறது. அதாவதும் வாழ்த்திய நிலையில் அமையும் பாடல்,

குணதிசை நின்று குடமுதல் செலினும்

குடதிசை நின்று குணமுதல் செலினும்

வடதிசை நின்று தென்வயின் செலினும்

தென் திசை நின்று குறுகாது நீடினும்

யாண்டு நிற்க வெள்ளி; யாம்

வேண்டியது உணர்தோன் தாள் வாழியவே! (புறம்., 386)

கிள்ளி வளவனின் புகழினைப் பாடுங்கால், இவ்வாறு நால்திசை முறைகளையும் சுட்டுகின்றனர். மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு என எந்தத் திசையிலும் சென்றாலும் உதவும் மனப்பான்மை உடையவன் கிள்ளி வளவன் எனப் புலவர் வாழ்த்தி உரைக்கின்றார்.

முடிவுரை

தமிழக பெரும் எல்லையினைப் புறநானூறு பாடல்களின் வழியாக, சில குறிப்புரைகளை அறிந்துகொள்ள முடிகிறது. மூவேந்தர்கள் ஆட்சி செய்த இந்த மண்ணில் அவரவர் தம் காலகட்டத்தில் போர்களுடனும் செழுமையோடும் வாழ்ந்துள்ளதையும் காணமுடிகிறது. இந்தக் கட்டுரையின் வழியாக சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சிப் பகுதிகளையும் (நாடுகள்) மன்னர்களின் அரசியல் நிலை, கொடைச் சிறப்பு, போர்த்திறன் போன்றவற்றைத் தெளிவாக உணர முடிகிறது. அதோடு, தமிழ் இலக்கண, இலக்கியங்களில் காணலாகும் தமிழக அரசர்களின் நிலவெல்லை பகுதிகள் குறித்து அறிந்துகொள்ள முடிகிறது. இன்றைய தமிழகப் பகுதி என்பது பல்வேறு அரசியல் காரணங்களுக்காக சுருக்கப்பட்டுள்ளதைக் கவனப்படுத்தி சுட்டி நிற்கிறது. அத்துடன் இது மேலும் விரிவாக ஆராய இடமுள்ள பகுதியாக இது விளங்குகிறது.

துணைநூற் பட்டியல்

  1. பரிமணம், அ. மா., பாலசுப்பிரமணியம், கு.வெ. (பதி.கள்) புறநானூறு, (மூலமும் உரையும்), நியூ செஞ்சூரி புக் ஹவுஸ், சென்னை, ஐந்தாம் பதிப்பு – 2014.
  2. தொல்காப்பியர்., தொல்காப்பியம், (இளம்பூரணனார் உரை), சாரதா பதிப்பகம், சென்னை, எட்டாம் பதிப்பு – 2010.
  3. பரிமணம், அ. மா., பாலசுப்பிரமணியம், கு.வெ. (பதி.கள்), மதுரைக்காஞ்சி (மூலமும் உரையும்) (மூலமும் உரையும்), நியூ செஞ்சூரி புக் ஹவுஸ், சென்னை, ஐந்தாம் பதிப்பு – 2014.
  4. பரிமணம், அ. மா., பாலசுப்பிரமணியம், கு.வெ. (பதி.கள்), பதிற்றுப்பத்து (மூலமும் உரையும்) (மூலமும் உரையும்), நியூ செஞ்சூரி புக் ஹவுஸ், சென்னை, ஐந்தாம் பதிப்பு – 2014.
  5. உ.வே.சா. (பதி.), மணிமேகலை, (மூலமும் உரையும்), டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை, ஒன்பதாம் பதிப்பு – 2013.
  6. புலியூர் கேசிகன்., (தெளிவுரை), சிலப்பதிகாரம், சாரதா பதிப்பகம், சென்னை, ஐந்தாம் பதிப்பு – 2008.

- முனைவர் ஜெ. மதிவேந்தன்,
கெளரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை,
அறிஞர் அண்ணா அரசுக் கலைக்கல்லூரி,
செய்யாறு – 604 407. திருவண்ணாமலை மாவட்டம்