பழங்காலத் தமிழ்ச் சமூகம்:

பண்டைய தமிழ்ச் சமூகத்தில் இருந்த கல்வி குறித்து அறிந்து கொள்வதற்கு முன் அச்சமூகம் குறித்து சுருக்கமாக அறிந்து கொள்வது தேவையாகிறது. 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ச் சமூகம் பொருள்வளத்திலும் செல்வ வளத்திலும் நாகரிகத்திலும் உலகின் முன்னணிச் சமூகமாக இருந்தது. உலகின் பண்டைய புகழ் பெற்ற நாகரிகங்களான சுமேரிய எகிப்திய, சிந்துவெளி, கிரீட் போன்ற நாகரிகங்களுக்கு இணையாக சில விடயங்களில் அவைகளைவிட மேம்பட்ட நாகரிகமாக பண்டைய தமிழர் நாகரிகம் இருந்தது. காரணம் என்னவென்றால் இவை அனைத்தும் வெண்கலக் கால நாகரிகங்கள். ஆனால் தமிழர் நாகரிகம் இரும்புக்கால நாகரிகம். பெரும்பாலான நாடுகள் இன்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்புதான் இரும்புத்தொழில்நுட்பத்தை அறிந்து கொண்டார்கள். ஆனால் இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பே இரும்புத் தொழில்நுட்பத்தை அறிந்தவர்களாக தமிழர்கள் இருந்தனர் (1). ஆகவே தமிழர் நாகரிகம், இரும்புத் தொழில் நுட்பத்தை அறிந்த ஒரு முன்னேறிய நாகரிகம் என்பதில் ஐயமில்லை.

பழந்தமிழ்ச் சமூகம் நகர நகர்மைய அரசுகளைக் கொண்ட நாகரிகமாக இருந்தது. நகர அரசுகள் என்பன பேரரசுகளைவிட சிறந்தனவாகவும் வளர்ச்சி பெற்றனவாகவும் இருந்தன என்பதை வரலாறு பலவகையிலும் மெய்ப்பித்துள்ளது. நகர அரசுகளில்தான், சுயமான சுதந்திரமான சிந்தனைகளும், சனநாயகக் கண்ணோட்டமும், தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும், நிறைய புதிய கண்டுபிடிப்புகளும் இருக்கும் என்பதையும் வரலாறு பலவகையிலும் உறுதி செய்துள்ளது. தமிழக நகர அரசுகளை மக்கள் பிரதிநிதிகள் கட்டுப்படுத்தினர். என்பதால் இங்கு வரம்புக்குட்பட்ட முடியாட்சி முறைதான் இருந்து வந்தது. இவை போன்றவற்றின் காரணமாக பழந்தமிழக நகர அரசுகள், அதே காலகட்ட மகதப் பேரரசைவிட அரசியல், பொருளாதாரம், தொழில், வணிகம், கல்வி, அறிவியல், தத்துவம், தொழில்நுட்பம், இசை, ஓவியம், நாட்டியம், மருத்துவம், வர்மக்கலை, சிற்பக்கலை, கட்டிடக்கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஒரு உன்னதமான உயர்தரமான வளர்ச்சியைப் பெற்றிருந்தன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது (2).

kaniyan balan book on tamil historyகலிங்க மன்னன் காரவேலனின் கல்வெட்டு (கி.மு. 165) மூலம் தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணி 1300 ஆண்டுகளாக இருந்து வந்தது என்பதையும், கலிங்கத்தின் இரண்டாவது பெரிய துறைமுக நகரமான ‘பித்துண்டா’ தமிழரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பதையும் அறிய முடிகிறது. மாமூலனார், தனது அகம் 31ஆம் பாடலில் தமிழரசுகள் தக்காணத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன எனக் கூறுகிறார். கி.மு. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தின் மீது நடைபெற்ற மௌரியப் பெரும்படையெடுப்பை தமிழரசுகள் தங்களது ஐக்கியக் கூட்டணி கொண்டு முறியடித்து வெற்றிபெற்றன (3). இத்தரவுகள் தமிழரசுகளிடையே ஒரு ஐக்கியக் கூட்டணி இருந்ததையும், அவை ஐக்கியக் கடற்படை முதலான பெரும் படைகளைக் கொண்டிருந்தன என்பதையும் உறுதி செய்கின்றன.

தமிழரசுகள் தங்களது ஐக்கியக் கடற்படை கொண்டு இந்தியாவின் கிழக்கு மேற்குக் கடற்கரைகளையும், தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் தங்கள் வணிகக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தங்கள் சொந்தக் கப்பல்களைக் கொண்டு, கி.மு. 600 முதல் கி.பி. 150 வரை உலகளாவிய அளவில் வணிகம் செய்து வந்தனர். இக்காலகட்டத்தில் பழந்தமிழக நகரங்கள் அன்றைய உலகின் பெருநகரங்களாக இருந்தன. பழந்தமிழகக் கப்பல்கள் அன்றைய உலகின் பெரும் கப்பல்களாக இருந்தன. பழந்தமிழக வணிகமோ இன்றைய மதிப்பில் ஓரிரு இலட்சங்கோடி என்ற பேரளவாக இருந்தது.

பழந்தமிழர்களின் உலகளாவிய வணிகம் பல நூற்றாண்டுகளாக நிலைத்து நின்று வெற்றி பெற்றதற்கு அவர்களது தொழில்நுட்பமேன்மையே காரணம். பழந்தமிழர்கள் இரும்புத் தொழில்நுட்பம், மணிக்கற்கள் செய்தல், சங்கு அறுத்தல், ஆடை நெய்தல், நீர்ப்பாசனம் போன்ற பல்வேறு தொழில்களில் உயர்தொழில்நுட்ப மேன்மை கொண்டவர்களாக இருந்தனர். கி.மு. 1500 வாக்கிலேயே ஆதிச்சநல்லூர் ஒரு தொழிற்துறை நகராக இருந்தது. அங்கு உயர்தொழில் நுட்பமிக்க இரும்பு எஃகும், வெண்கலமும், பிற உலோகங்களும் தயார் செய்யப்பட்டன. ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த பல வகையான இரும்புப் பொருட்களும், பலவகையான கலையழகுமிக்க வெண்கல, மட்பாண்டப் பொருட்களும் தமிழர்களின் தொழில்நுட்ப மேன்மையை வெளிப்படுத்துகின்றன (4).

அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து, உற்பத்தி பெருகி, சந்தை விரிவடைந்து, உலகளாவிய அளவில் வணிகம் நடைபெற்று, வணிக முதலாளித்துவத்திற்கான கூறுகள் உருவாகும்பொழுதான் ஒரு சமூகம் தன்னை மொழியால் அடையாளப்படுத்திக்கொள்ளும். பழந்தமிழ்ச் சமூகம் இன்றைக்கு 2500 ஆண்டு வாக்கிலேயே தன்னை மொழியால் அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு சமூகம் என்பதால், அன்றே அது பல துறைகளிலும் ஒரு உயர்வளர்ச்சி பெற்ற சமூகமாக இருந்தது. அதுபோன்றே ஒரு மொழியில் செவ்வியல் இலக்கியங்கள் உருவாக வேண்டுமானால், அரசியல், பொருளாதாரம், தொழில், வணிகம், கல்வி, அறிவியல், தத்துவம், பல்வேறு கலைகள் போன்ற பல துறைகளிலும் அம்மொழிக்கான சமூகம் ஓர் உயர் வளர்ச்சியை எட்டிய சமூகமாக இருந்தாக வேண்டும். ஆகவே செவ்வியல் இலக்கியங்களைக் கொண்ட பழந்தமிழ்ச் சமூகம் இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு துறைகளிலும் ஒரு உன்னதமான உயர்தரமான வளர்ச்சியைப் பெற்ற சமூகமாக இருந்தது (5).

இந்தியாவின் ஆதி இசை என்பது தமிழிசைதான். அதுபோன்றே மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபுதான் இந்தியப் பொருள்முதல்வாத மெய்யியலின் அடிப்படை. மேற்கத்தியப் பொருள்முதல்வாத மெய்யியல் உட்பட உலகின் அனைத்துப் பொருள்முதல்வாத மெய்யியலுக்கும் மூலகாரணமாக இருந்த எண்ணியம் எனப்படும் சாங்கியத்தைத் தோற்றுவித்த தொல்கபிலர் ஒரு தமிழர். கான்ட், கெகல், பாயர்பாக் போன்ற அறிஞர்களின் மெய்யியலுக்கு இணையானது தொல்கபிலரின் எண்ணியம். ஆதலால் தொல்கபிலரை கார்ல் மார்க்சுக்கும் முன்னோடி எனலாம். பழந்தமிழக நகர அரசுகளின் தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மூலகாரணமாக எண்ணியம் இருந்ததால் தொல்கபிலர் தமிழ் அறிவு மரபின் தந்தையாகிறார் (6). தொல்கபிலர், தொல்காப்பியர், சங்கப்புலவர்கள், வள்ளுவன், இளங்கோ போன்ற மாமனிதர்களைத் தோற்றுவித்தத் தமிழ்ச் சமூகம் கல்வி, அறிவியல் போன்றவற்றில் ஒரு பெருவளர்ச்சிபெற்ற சமூகமாக இருந்தது.

பழந்தமிழர்கள் அறிவியல் தொழில்நுட்பத்திலும் பொருள் உற்பத்தியிலும் மிகப் பெரிய வளர்ச்சியைப் பெற்றிருந்தனர். நூற்றுக்கணக்கான தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப நூல்கள் பழந்தமிழகத்தில் உருவாகி இருந்தன. ஆனால் கெடுவாய்ப்பாக அவை அனைத்தும் அழிந்து போயின. ஒரு சில மட்டும் வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. மேலும் தொன்றுதொட்டு இருந்துவந்த பழந்தமிழ் அறிவு அனைத்தையும் பாதுகாத்து வைக்கும் ஒரு கலைக்களஞ்சியமாக ஆகமங்கள் இருந்தன. அவற்றில் பல கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்குப்பின்னர் வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, கிரந்த எழுத்தில் பாதுகாக்கப்படுகின்றன (7).

தமிழில் இருந்து வடமொழிக்கு மொழி பெயர்க்கப்பட்ட நூல்கள், சுயமாக வடமொழியில் உருவானது போல் காட்டப்படுகின்றன. மூலநூல் தமிழ்நூல் என்பது எங்கும் சொல்லப்படுவதில்லை. கி.பி. 3ஆம் நூற்றாண்டிலிருந்து நூற்றுக்கணக்கான கலை, இலக்கிய, தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்பத் தமிழ் நூல்கள் வடமொழிக்குக் கொண்டு செல்லப்பட்டன. அதனால்தான் சமற்கிருதம் ஒரு தத்துவார்த்தக் கலை அறிவியல் மொழியாக உருவானது. தமிழ் மூல நூல்களை மொழிபெயர்த்துத் தன்வயப்படுத்திக்கொண்ட வடமொழியாளர்கள், மூலத்தமிழ் நூல்களை திட்டமிட்டு அழிவுக்குள்ளாக்கினர்.

சங்ககாலத்தில் இருந்த உடன்போக்கும், பொருள்வயிற்பிரிவும் அன்று சாதிகள் இருக்கவில்லை என்பதை உறுதி செய்கின்றன. பொருள்வயிற்பிரிவு என்பது சங்ககால இளைஞர்கள் தங்கள் தாய் தந்தையரைச் சாராமல் சுயமாகப் பொருள் ஈட்டி வாழ்ந்தனர் என்பதைக் கூறுகிறது. சிலப்பதிகாரம் அதற்கு ஒரு சான்றாக இருக்கிறது. சங்ககாலச்சமூகம் வளர்ச்சிபெற்ற சமூகமாக இருந்தது என்பதோடு அன்று வகுப்புகளும், வர்க்கங்களும், தொழில் பிரிவுகளும் இருந்தன என்பதைத் தெரிவிக்கிறது.

முதல் வகுப்பில் அரசர், இரண்டாம் வகுப்பில் அந்தணர் எனப்படும் சான்றோர், மூன்றாம் வகுப்பில் பெருவணிகரும் பெரு நிழக்கிழாரும், பெரும்பட்டறைத் தொழில் அதிபரும், நான்காம் வகுப்பில் சிறு குறு வணிகர், சிறு குறு உழவர், உழவுத்தொழிலாளிகள், கைவினைஞர்கள், பாணர், பார்ப்பனர், புலையர் போன்ற பிற அனைத்து மக்களும் இருந்தனர். முதல் மூன்று வகுப்புகள் மேல் மக்கள் எனவும் நான்காம் வகுப்பினர் கீழ் மக்கள் எனவும் கருதப்பட்டனர். அன்று வகுப்புகள் பிறப்பின் அடிப்படையில் இருக்கவில்லை என்பதால், கீழ்மக்கள் மேல்மக்கள் ஆவதும், மேல்மக்கள் கீழ்மக்கள் ஆவதும் நடந்து வந்தது. அன்று அனைவரிடையேயும் கலப்பு மணமும் கலந்து உண்ணுதலும் இருந்து வந்தது.

இழிசனர், புலையர் போன்றோர் அன்று இழிபிறப்பினராகக் கருதப்படவில்லை. இப்பெயர்கள் தொழிற்பெயர்களாகத்தான் இருந்தன. புலையர் புனிதச் சடங்குகளை அந்தணருக்கு இணையாகச் செய்து வந்தனர். ஆகவே இழிபிறப்பினர் என்ற கருத்தாக்கம் பிற்காலத்திற்குரியது. பொதுவாக வளர்ச்சிபெற்ற நகர அரசுகள் பூசாரி வகுப்பை அழித்து விடும். ஆதலால் வளர்ச்சி பெற்ற நகர அரசுகளைக்கொண்ட சங்ககாலத்தில் பூசாரி வகுப்பு இருக்கவில்லை. ஆகவே புலையர், அந்தணர், குயவர் எனப்பலரும் சடங்குகளையும், வழிபாடுகளையும் செய்து வந்தனர் (8).

அறம் சார்ந்த வாழ்வு:

பொருளதிகாரத்தின் 190ஆம் பாடலில், களவிலும், கற்பு வாழ்க்கையிலும், இன்பம் நுகர்ந்து, அறத்தோடு கூடிய பெருவாழ்வு வாழ்ந்த தலைவனும் தலைவியும், முதுமையில் தம் மக்களோடும் சுற்றத்தோடும் பாதுகாப்போடும், பெருமதிப்போடும் சிறந்தமுறையில் வாழ்ந்து இறத்தலே பேரின்ப வாழ்வாகும் எனக் கூறுகிறார் தொல்காப்பியர். அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் தங்கள் வாழ்க்கையின் இலக்கணம் எனக் கொண்டு இந்த வாழ்வை மிகச்சிறந்தமுறையில் வாழ்வதே பேரின்ப வாழ்வு எனப் பழந்தமிழர்கள் வாழ்ந்தனர்.

வாழ்க்கையில் பொருள் சேர்ப்பதையும், இன்பமாக வாழ்வதையும் நோக்கமாகக் கொண்டிருந்த தமிழர்கள், பொருள் சேர்ப்பதிலும், இன்பமாக வாழ்வதிலும் அறத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என்ற கருத்தைத் தங்கள் வாழ்வின் இலக்கணமாகக் கொண்டிருந்தனர். அதனால்தான் தொல்காப்பியர் அறம் சாராத நடைமுறைகள் உலக வழக்கில் இருந்தாலும் அவற்றை மரபு எனக் கொண்டு இலக்கியம் படைப்பது பழிக்குறியதாகும் என அறிவுறுத்துகிறார் (பொருளியல் – 22). ஆனால் வட இந்தியர்கள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும்விட வீடு என்பதையே தங்கள் வாழ்க்கையின் இலக்கணமாகக் கொண்டு வாழ்ந்தனர். ஆனால் பழந்தமிழர்கள் வீடு என்பது குறித்தோ, இறப்பிற்குப் பிந்தைய வாழ்க்கை குறித்தோ கவலைப்படவில்லை.

சங்ககாலத்தில் வளர்ச்சி பெற்ற பல்வேறு பட்டறைத் தொழில்கள், வளர்ச்சிபெற்ற பல்வேறு தொழில்நுட்பங்கள், கப்பல் கட்டும் தொழில் போன்ற பல்வேறு தொழில்கள், சிலம்பம், களரி, மருத்துவம், இசை, நாட்டியம், ஓவியம், வர்மக்கலை, கட்டடக்கலை, சிற்பக்கலை போன்ற வளர்ச்சி பெற்ற பல்வேறு கலைகள் ஆகியன இருந்தன. மேலும் நூற்றுக்கணக்கான தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப நூல்களும், அதை எழுதிய அறிஞர்களும், அதற்கான சிந்தனைகளும் இருந்தன. மேலும் அன்று தமிழர்கள் தங்கள் சொந்தக் கப்பலில் உலகம் முழுவதும் சென்று வணிகம் செய்து வந்தனர். மேலே சொல்லப்பட்ட அனைத்தும் பெரும்பாலும் நகரங்களில் வசித்த நகர மாந்தர்களின் தொழில்களாக, கலைகளாக, வாழ்க்கையாக இருந்தன. இந்த நகர மாந்தர்கள் புலவர்களுக்குப் பரிசுகள் தருவதில்லை என்பதால் புலவர்கள் இந்த நகர மாந்தர்கள் குறித்தோ, அவர்களின் வாழ்க்கை குறித்தோ, அவர்களின் தொழில்கள் குறித்தோ அதிகம் பாடவில்லை. ஆதலால் அவை குறித்த எவையும் சங்க இலக்கியங்களில் அதிகம் இடம்பெறவில்லை.

பொதுவாக சங்ககாலப் புலவர்கள் தங்களுக்குப் பரிசுகளை வழங்கிய விளிம்பு நிலையில் வாழ்ந்த சிற்றூர்த் தலைவர்கள், சிறுகுறு மன்னர்கள் குறித்து அதிகம் பாடினர். ஓரளவு வேளிர்கள், வேந்தர்கள் குறித்துப் பாடினர். நகர மாந்தர்கள் குறித்து அதிகம் பாடவில்லை. ஆதலால் சங்க இலக்கியப் பாடல்கள் சங்ககாலம் குறித்த முழுமையான தரவுகளை வழங்க இயலாது. அகழாய்வுத்தரவுகள் தான் சங்ககாலத்தின் தொழில்வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி, பலவேறு தொழிற்துறைகள் முதலியன குறித்தத் தரவுகளை வழங்க முடியும். அவைதான் அவற்றை வழங்கி வருகின்றன.

சங்க காலம் என்பது கி.மு. 750 முதல் கி.மு. 50 வரையான 700 வருட காலகட்டம். அதன் பிந்தைய சங்கம் மருவிய காலம் என்பது கி.மு. 50 முதல் கி.பி. 250 வரையான 300 வருட காலகட்டம். அதன் பிந்தைய களப்பிரர் காலம் என்பது கி.மு. 250 முதல் கி.பி. 550 வரையான 300 வருட காலகட்டம் (9).

கி.பி. 250இல் ஏற்பட்ட களப்பிரர் படையெடுப்பு, பழந்தமிழகத்திற்குப் பேரளவான அழிவைக் கொண்டு வந்தது. தமிழக நகரங்கள் அனைத்தும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டு, தரைமட்டமாக்கப்பட்டன. அதன் காரணமாக தமிழ்ச் சமூகம் ஒரு பிற்போக்கான, பின்தங்கிய, சமயம் சார்ந்த, கிராமச் சமூகமாக மாறிப் போனது. கல்வி, கலை, அறிவியல், தொழில்நுட்பம் போன்றவற்றில் இணைக்க முடியாத பெரும் இடைவெளி உருவானது. கி.பி. 550 வரையான களப்பிரர் ஆட்சி சமண பௌத்த வைதீக மதங்களின் ஆதிக்க ஆட்சியாக இருந்தது. இவற்றின் காரணமாக தமிழ் மக்கள் கீழ் மக்களாக மாற்றப்பட்டு, அவர்களின் தமிழ்மொழி கீழ் மக்களின் மொழியாக ஆகிப் போனது. அவ்வாட்சிக் காலத்தில் வந்த சமற்கிருத மயமாக்கலும் சேர்ந்து, தமிழில் இருந்த நூற்றுக்கணக்கான தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப நூல்கள் அனைத்தும் இல்லாது போயின (10).

சங்க காலத்தில் கல்வி:

பழந்தமிழகத்தில் கல்வியும் மெய்யியலும் ஒன்றோடொன்று இணைந்ததாக இருந்தது. பழந்தமிழ்ச் சமூகத்தின் அடிப்படையாக பொருள்முதல்வாத மெய்யியல்தான் இருந்து வந்தது. பழந்தமிழகத்தில் ஏற்பட்ட பொருள்முதல்வாத மெய்யியல் வளர்ச்சிதான் மேல்மக்கள் முதல் கீழ் மக்கள் வரையான அனைத்துவகை மக்களும் பரவலான அளவிலும், தரமான வகையிலும் கல்வி பெற வழி வகுத்தது. அதனால்தான் மிகச்சாதாரண மனிதன் முதல் அரசன் வரையான அனைத்தத்தரப்பு மக்களும் புகழ்பெற்ற சங்க இலக்கியப் படைப்பாக்கத்தில் பங்களிப்பு செய்ய முடிந்துள்ளது. கீழடி அகழாய்வு கி.மு. 600 வாக்கிலேயே பழந்தமிழ்ச் சமூகத்தில், பரந்துபட்ட அளவில், அனைத்துத் தரப்பு மக்களும் கல்வி அறிவு கொண்டிருந்தனர் என்பதை உறுதி செய்கிறது.

தமிழகத்தில் கொடுமணல் போன்ற இடங்களில் நடந்த அகழாய்வுகளும் அதனை உறுதி செய்கின்றன. இந்து நாளிதழ், 24.6.2010 இல் தொல்லியல் கல்வெட்டியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், சங்க காலத் தமிழகத்தில், மிகப் பரந்த அளவில், சாதாரண மக்கள் கூட கல்வி அறிவு கொண்டிருந்தனர் என்பதை உறுதி செய்கிறார். ஒதுக்குப்புற கிராமப் பகுதியில் வாழும் கள் விற்பவர்கள் கூடத் தனது பானையில் தனது பெயரை எழுதி வைக்கும் அளவு தமிழகம் பரந்த அளவிலான கல்வி அறிவை சங்க காலத்தில் கொண்டிருந்தது என்பதை எடுத்துக் காட்டுகளோடு அவர் விளக்குகிறார் (11).

.“தொல்பொருள் ஆய்வுகளில் கிடைத்துள்ள பானை வரிகளும் பொறிப்புகளும் எழுத்தறிவு மிகப் பழங்காலத்திலேயே தமிழகம் முழுவதும் பரவி விட்டதைத் தெரிவிக்கின்றன. தொகைநூல் புலவர் பட்டியலில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு சமூகப் பிரிவினர்களின் பெயர்கள் இடம் பெற்றிருப்பதில் இருந்தும், தமிழ்நாட்டில் பரவியிருந்த எழுத்து அறிவினை நன்கு அறியலாம்” என்கிறார் பேராசிரியர் அ. பாண்டுரங்கன் (12).

பண்டைய வட இந்தியாவில் அல்லது பிற இந்தியப் பகுதிகளில் கல்வெட்டுகளில் அதுவும் அரசால் வெட்டப்பட்ட கல்வெட்டுகளில் மட்டுமே எழுத்துப் பொறிப்புகளைக் காண முடிகிறது. ஆனால் தமிழகத்தில் சாதாரண மக்கள் பயன்படுத்திய பானை ஓடுகளில், ஈமச்சின்னங்களில், மதிப்புமிக்க, மதிப்பற்ற தொல்பொருட்களில், நாணயங்களில், மோதிரங்களில் என எண்ணற்ற சாதனங்களில் எழுத்துப் பொறிப்புக்களைக் காண முடிகிறது. அதுபோன்றே பல நிலைகளில் உள்ள குடிமக்கள் சமயத் துறவிகளுக்கு வழங்கிய பாறைகளிலும் எழுத்துப் பொறிப்புகளைப் பார்க்க முடிகிறது. தமிழகத்தைத் தவிர பிற இடங்களில் இதுபோன்ற நிலை இல்லை. இத்தரவுகள் மிகச் சாதாரண மனிதர்கள் முதல் உயர்நிலையில் உள்ளவர்கள் வரை எழுதப் படிக்கத் தெரிந்திருந்தனர் என்பதை உறுதி செய்கிறது.

அது போன்றே மிகச் சாதாரண மக்களும் சங்க இலக்கியத்தின் படைப்பாளிகளாக இருந்துள்ளார்கள் என்பது சாதாரண மக்கள் எழுதப் படிக்க மட்டுமல்ல சங்க இலக்கியம் போன்ற உயர்நிலை இலக்கியங்களைப் படைக்கும் அளவு கல்வியறிவு கொண்டிருந்தனர் என்பதையும் அறிய முடிகிறது. ஆனால் இதற்கான கல்வி முறை எப்படி இருந்தது, அது எவ்வாறு அனைத்து மக்களுக்கும் கிடைத்தது, அதுவும் உயர்தரமான சங்க இலக்கியங்களைப் படைக்குமளவான கல்வியறிவை, புலமையை அவர்கள் எப்படிப் பெற்றார்கள் என்பது ஒரு பெரும் கேள்வியாக உள்ளது. வட இந்தியாவில் இருந்தது போன்ற குருகுலக் கல்விமுறை சங்ககாலத் தமிழகத்தில் இருக்கவில்லை. ஆனால் அக்கல்விமுறை சிறந்ததாகவும், வேறுபட்டதாகவும், தனித்தன்மை மிக்கதாகவும், அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் விதமாகவும் இருந்துள்ளது.

சேவியர் தனிநாயகம் அடிகளார் அவர்கள் பழந்தமிழகத்தில் இருந்த கல்விமுறை தனிச்சிறப்பு மிக்கதாக இருந்தது எனவும் அன்றைய கல்வி சமூக வாழ்வை நிறைவாக வாழ்வதற்கான தகுதியைக் கற்பவனுக்கு வழங்கியது எனவும் கூறுகிறார்.

“அன்றைய கல்வி, கற்பவனைச் சான்றோன் ஆக்கியது; அவனை உலக வாழ்வுக்குத் தகுதிப்படுத்தியது; கற்றோர் அவையிலும், ஊர்ப்பொது மன்றங்களிலும் முந்தியிருக்கச் செய்தது; அது வாழும் உலகை அதன் இன்பங்களை உறுதிப்படுத்துவதாக இருந்தது; மனித ஆற்றலில் விளங்கும் தன்னிறைவைக் கொண்டு வந்தது; அதில் குழந்தைகளின் மீதான அன்பும், இல்லறத்தின் மீதான பற்றும் இருந்தது; காதல்செய்ய, மணம்புரிய, இல்வாழ, பொதுநலம் பேணி பிறர்க்கென வாழ இக்கல்வி கற்போரைத் தகுதிப்படுத்தியது; தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் பொதுவாழ்வு அதன் உள்ளார்ந்த மதிப்புக் கருதி பரிந்துரைக்கப்பட்டது” என்கிறார் (13).

கல்வியின் இறுதி நோக்கம் என்பது மனித ஆற்றலில் விளங்கும் தன்னிறைவைக் கொண்டு வந்து, கற்பவனைச் சான்றோன் ஆக்குவது என்பதாகவே சங்ககாலத்தில் இருந்து வந்தது. அந்தணர், தாபதர், அறிவர், கணியர் போன்ற பிசிராந்தையார் புறம் 191ஆம் பாடலில் குறிப்பிடும் கொள்கைச்சான்றோர் தான் சான்றோர்கள். இவர்கள் அறிவு, ஆய்வு, ஒழுக்கம், பொதுநலம், துறவு ஆகியவற்றில் சிறந்தவர்கள். தொல்காப்பியப் பொருளதிகாரம் கற்பியலில் உள்ள 13, 14ஆம் பாடல்கள், தலைவன் தலைவிக்கு நல்லவற்றை கற்பித்தலும், அவர்கள் அறவழி தவறி நடக்கும் பொழுது இடித்துரைத்து அறிவுரை கூறி நல்வழிப்படுத்தலும் அறிவர்கள் எனப்படும் சான்றோர்களின் கடமை என்கிறது.

சான்றோர்கள் குறித்துக் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற அரச இளவல் தனது புறம் 182ஆம் பாடலில், சான்றோர்கள் என்போர் பல நற்குணங்களைக் கொண்டு தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவர்கள் எனக் கூறுகிறான். வள்ளுவனின் 99ஆவது அதிகாரமான ‘சான்றாண்மை’ சான்றோர்களின் பண்பு நலன் குறித்துப் பேசுகிறது. ஆகவே கல்வியின் மூலம் கீழ்க்குடியைச்சேர்ந்த ஒருவன் சான்றோனாக உயர்ந்து மேல்குடியாக ஆக முடியும் என்ற நிலை சங்க காலத்தில் இருந்துள்ளது.

கல்வி கற்ற தமிழ்ப் புலவன் புகழ்பெற்ற அரசனுக்குச் சமம் என ஒரு சோழ வேந்தனிடம் நேருக்கு நேர் கூறுகிறார் சங்க காலப் புலவர் கோவூர்கிழார்,

“புலவர்கள் வழுவான சொற்களைச் சொல்லாத நாவால் வள்ளல்களைப் பாடி, பெற்ற பொருளால் தாமும் மகிழ்ந்து, சுற்றத்தினருக்கும் தந்து மகிழ்வர். தங்களது அறிவுக்கும் திறமைக்கும் உரிய பாராட்டுக்காகவும் பரிசுக்காகவும் ஏங்குவார்களே அன்றி, பிறருக்குத் தீங்குவர கனவிலும் நினைக்காதவர்கள். ஆதலால் புகழை உடைய நிலத்தை ஆளுகின்ற, பெருஞ் செல்வத்தை உடைய வேந்தனைப் போன்றவர்கள் கல்வி கற்ற புலவர்கள்” என்கிறார் கோவூர்கிழார். இதனை அரசனிடம் எடுத்துக் கூறிய பின், ஒற்றன் என அரசன் ஐயப்பட்ட ஒரு புலவனை அவனது கடும் தண்டனையிலிருந்து விடுவித்து அப்புலவனை அவர் காப்பாற்றுகிறார் (புறம்-47).

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்கிற பெரும்புகழ் பெற்ற பாண்டிய மன்னனோ தனது அவைக்களத் தலைமைப் புலவரான மாங்குடி மருதனாரால் தான் பாடப்படுவதைப் பெருமைக்குரியதாகக் கருதுகிறான். பெரும்புகழ்க் கபிலர், கல்வி கற்ற புலவனை இகழ்ந்ததால் இருங்கோவேள் என்கிற குறுநில மன்னனின் முன்னோர்கள் இரு பெரும் நகரங்களை இழந்தனர் என்கிறார். சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி கற்ற புலவர்கள் பேரளவு மதிக்கப்பட்டனர் என்பதற்கு இது போன்ற பல சான்றுகளைக் காணலாம். ஆகவே சங்க காலச் சமூகத்தில் கல்வியும் கற்றவனும் மதிக்கப்பட்டதால் அனைவரும் கல்வி கற்றவர்களாக இருந்தனர். அன்றையத் தமிழ்ச் சமூகத்தில் பேரறிவும், பெரும் புலமையும் உடையவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு தரப்பட்டது.

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்ற புகழ்பெற்ற பாண்டிய வேந்தன் தனது புறம் 183ஆம் பாடலில், “கற்பிக்கும் ஆசிரியற்கு தேவையறிந்து பொருள் உதவி தருவதோடு, அவருக்குத் துன்பம் வரும்போது அதனைக் களைய உதவ வேண்டும். அவரிடம் மதிப்பும் பணிவும் கொண்டு கற்க வேண்டும். தாய் தனக்குப் பிறந்தவர்களில் கற்றவனையே அதிகம் விரும்புவாள். அரசனும் மூத்தவன் எனப்பாராமல் கற்ற இளையவனையே விரும்பி ஏற்பான். நான்கு வகுப்புகளில், கற்றவன் கீழ்க்குடி எனினும் அவனை மேல்குடி மனிதனும் மதித்துப் போற்றுவான்” எனக் கூறுகிறான்.

வள்ளுவன் தனது 409ஆம் குறளில், ‘மேற்குடியில் பிறந்த கல்லாதவர், கீழ்க்குடியில் பிறந்த கற்றவரைப்போன்ற பெருமையுடையவராகார்’ எனக் கூறுகிறான். பழந்தமிழ்ச் சமூகத்தில் இருந்த நான்கு வகுப்புகளில் முதல் மூன்று குடிகள் மேலோர் எனவும் நான்காம் வகுப்பினர் கீழோர் எனவும் கூறப்பட்டனர் என முன்பே குறிப்பிட்டிருந்தோம். சங்ககாலத்தில் கற்றவன் கீழ்க்குடி எனினும் அவனை அனைவரும் மதித்துப் போற்றுவர் என்பதோடு, அவன் கல்லாத மேல்குடியைவிட பெருமைக்குரியவனாக கருதப்படுவான் என பாண்டிய வேந்தனும் வள்ளுவனும் கூறுகின்றனர். அன்று ஆசிரியர் மிகவும் மதிக்கத்தக்கவராக இருந்தார் எனவும் அரசனும் கற்றவனைத் தான் ஏற்பான் எனவும் கூறுகிறான் பாண்டிய வேந்தன்.

பாணர்கள், பாடினிகள் போன்றவர்கள் வழிவழியான குடும்ப மரபின் காரணமாக இக்கல்வி அறிவைப் பெற்றனர். ஆனால் மற்ற சாதாரணக் குயவர்கள், தச்சர்கள், கருமான்கள் போன்ற பலதரப்பட்ட தொழில் செய்வோரும், பிற சாதாரண மக்களும், இவர்களின் குடும்பப் பெண்களும் இந்த புலமைக்கல்வியை எப்படிப் பெற்றனர் என்பது மேலும் நன்கு ஆய்வு செய்யப்படவேண்டிய விடயம். வெண்ணிக் குயத்தியார் போன்ற சாதாரணக் குயவர்குலப் பெண்கள் இந்தப் புலமைக் கல்வியை பெற்றது குறித்து விரிவாக ஆய்ந்தறிந்து கண்டறிவதன் மூலமே நமது பண்டைய தமிழகத்தின் கல்விமுறையை அறிந்துகொள்ள இயலும். அவர் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு. அன்று சமணப் பள்ளிகளோ, புத்தப் பள்ளிகளோ இல்லை.

மாதவி போன்று, பரத்தமை வாழ்வில் இருந்த பெண்கள் பல்வேறு கலைகளில் சிறந்திருப்பது என்பதும், உயர்கல்வியைப் பெற்றிருப்பது என்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடியது. ஆனால் இது போன்ற பரத்தமை நிறுவனங்கள் தமிழகத்தில் கி.மு.முதல் நூற்றாண்டுக்குப்பின்தான் வந்தன. ஆனால் அக்காலத்தில் இருந்து, உயர்குடிப் பெண்கள் கல்வியறிவும் கலை அறிவும் பெறுவது குறைந்து போனது. மூவேந்தர்கள் பேரரசுகளாக ஆகியதும், சமயச் சிந்தனையின் கருத்துகள் பரவியதும் இதற்கான காரணங்கள். அதனால்தான் மாதவி அளவு கண்ணகி கல்வியறிவும் கலை அறிவும் பெறவில்லை.

கிரேக்கத்தில் ஏதென்சில் உள்ள உயர்குடியைச் சேர்ந்த குடும்பப் பெண்களைவிட பரத்தமை வாழ்வில் இருந்த பெண்கள் கல்வியிலும் கலைகளிலும் சிறந்து விளங்கினர். கிரேக்க உயர்குடிப் பெண்கள், அதன் பொற்காலத்தில் கல்வியறிவுகூட இல்லாதவர்களாகவும் குடும்ப பணிகளை செய்வதற்கான ஒரு தலைமை வேலைக்காரர்களாகவுமே நடத்தப்பட்டனர். கிரேக்கத்தில் மிகச் சிறந்த பெண் என்பவள் ஒரு பொதுமகளாக இருந்தாக வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் இசுபார்ட்டா நகர அரசில் நிலைமை வேறுபட்டதாக இருந்தது. அங்கு பரத்தமை மதிக்கப்படவில்லை. உயர்குடிப் பெண்கள் நல்ல குணமும் மதிப்பும் உடையவர்களாகக் கருதப்பட்டனர். ஏதென்சில் சாதாரணக் குடும்பங்களில் இருந்து வந்த பெண்கள் கல்வியறிவோ கலையறிவோ பெற்றிருக்கவில்லை. பரத்தமைப் பெண்கள்தான் கல்வியறிவும் கலையறிவும் பெற்றவர்களாக இருந்தனர் (14). ஆனால் தமிழகத்தில் சாதாரணக் குடும்பப் பெண்கள் கூட கல்வியறிவு பெற்றவர்களாக இருந்துள்ளனர். மூவேந்தர் அரசுகள் பேரரசுகள் ஆன காலமான கி.மு. 1ஆம் நூற்றாண்டுக்குப் பின் இந்நிலைமை மாறத் தொடங்கிவிட்டது.

பொது ஆண்டுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, தமிழகத்தின் சிற்றூர்களில் வாழும் சாதாரண மக்கள் கூட எழுதப் படிக்கக் கற்றிருந்தனர். அதில் சிலர் சங்க இலக்கியம் போன்ற உயர்தரமான இலக்கியத்தைப் படைக்கும் அளவு படைப்பாளிகளாக இருந்தனர். தொகை நூல்களில் இருக்கும் கல்வி, கற்றல், புலமை பற்றிய குறிப்புகளும், கருத்தாக்கங்களும் சமயம் சார்ந்ததாக இருக்கவில்லை என அறிய முடிகிறது. காரணம் என்னவென்றால் அன்று பொருள்முதல்வாத மெய்யியல்தான் தமிழ் சமூகத்தின் அடிப்படையாக இருந்துள்ளது.

மிக நெடுங்காலத்துக்கு முன்னரே தனக்கான ஒரு கல்வி முறையைத் தமிழகம் கொண்டிருந்தது, அதுவும் பரவலாக அனைத்து மக்களும் அக்கல்வியைப் பெறுமளவு அக்கல்வி முறை இருந்தது என்பது தான் மிகப்பெரிய விடயம். தமிழகத்தின் கல்விமுறைக்கும் அதன் மெய்யியல் வளர்ச்சிக்கும் இடையே மிகப்பெரிய தொடர்பு இருந்துள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியடைந்த பொருள்முதல்வாத மெய்யியல் தனக்கே உரித்தான தனித்துவமான கல்விமுறையைத் தமிழகத்தில் செயல்படுத்தி இருந்தது. மிகப் பெரிய அளவில் தமிழகம் முழுவதும் நடைபெறும் விரிவான அகழாய்வுகள் தான் இக்கேள்விகளுக்குத் தெளிவான பதில்களை வழங்க முடியும் என்ற கூற்றுக்கு ஏற்ப இன்று கீழடி அகழாய்வின் 4ஆம் கட்ட அறிக்கை தமிழகத்தில் கி.மு. 6ஆம் நூற்றாண்டு அளவிலேயே பரவலான கல்வியறிவும் எழுத்தறிவும் இருந்துள்ளது என்பதை பறைசாற்றியுள்ளது (15).

சங்ககாலத்தில் இருந்த கல்விமுறை சிறப்பும் தனித்துவமும் மிக்கதாக இருந்தது என்பதற்கு ஒரு சான்றினை இங்கு பார்ப்போம்.

கி.மு. 3ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த முதல்கரிகாலன், தன்னைவிட புகழிலும், பெருமையிலும், வயதிலும் மூத்தவனும், இமயம்வரை படையெடுத்து பெருவெற்றியோடு திரும்பியவனுமான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை வெண்ணிப்பறந்தலைப்போரில் தோற்கடித்து, புகழும் பெருமையும் கொண்டு இருந்த பொழுது, அவனைச் சந்தித்த வெண்ணிக்குயத்தியார் என்ற குயவர் குலப்பெண், ‘கடலில் காற்றின் திசையறிந்து கப்பலைச் செலுத்தும் திறனும் அறிவும் கொண்ட மரபிலிருந்து வந்தவனே, போரில் உன் ஆற்றல் வெளிப்பட பெருவெற்றி பெற்றவனே, வெண்ணிப்பறந்தலைப்போரில் உன்னிடம் தோற்று, முதுகில் புண்பெற்றதால் நாணி வடக்கிருந்து உயிர் துறந்த சேரலாதன், உன்னைவிட புகழ்பெற்றவனும் நல்லவனும் ஆவான்’ என கரிகாலனிடமே நேரடியாகக் கூறும் துணிவும் அறிவும் திறமையும் கொண்டவராக இருந்துள்ளார் (புறம்:66)..

இந்நிகழ்வு அன்று அறிவும் திறமையும் கொண்ட மிகச் சாதாரண பெண்கூட வேந்தனை நேரில் சந்தித்து அவனுக்கு முரணான உண்மைக் கருத்துக்களைக் கூற முடியும் என்ற நிலை இருந்ததை உறுதி செய்கிறது. இது போன்ற பல நிகழ்வுகளை சங்க இலக்கியத்தில் இருந்து எடுத்துக் கூற இயலும். புகழ் பெற்ற புலவர்கள் அரசனுக்கு அறிவுரை கூறியதோடு அவனது தவறுகளைச் சுட்டிக்காட்டும் உரிமை கொண்டவர்களாக இருந்தனர். இதற்கான அடிப்படைக்காரணம் என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

புலவர்களின் அறிவும் திறமையும் துணிவும் மட்டுமோ அல்லது அரசர்களின் பெருந்தன்மையும் நற்குணங்களும் மட்டுமோ இவற்றிற்குக் காரணமல்ல. அன்றைய அரசியல் சமூகச் சூழ்நிலைதான் இதற்குக் காரணம்.

தமிழக நகர அரசுகளை மக்கள் பிரதிநிதிகள் கட்டுப்படுத்தினர் என கிரேக்கத் தூதுவர் மெகசுதனிசு கூறுவதாக நேரு தனது உலக வரலாறு என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் அகம் 77ஆம் பாடலில் மருதன் இளநாகனார் என்ற கி.மு. 2ஆம் நூற்றாண்டு சங்கப்புலவர், அன்று மக்களிடையே தேர்தல்கள் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் எனக் கூறியுள்ளார். இவற்றை இணைத்துப் பார்க்கும்பொழுது அன்று மக்களிடையே தேர்தல்கள் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகள் தேர்தெடுக்கப்பட்டு அவர்கள் அரசின் அதிகாரங்களை கட்டுப்படுத்தி வந்துள்ளனர் என அறிய முடிகிறது. ஆகவே சங்ககாலத்தில் வரம்புக்கு உட்பட்ட முடியாட்சி முறைதான் இருந்து வந்துள்ளது என அறியமுடிகிறது.

மக்கள் பிரதிநிதிகள் அரசின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தி வந்த நிலைமையும், மக்கள் அனைவரும் கல்வி கற்றவர்களாக இருந்த நிலைமையும், பொருள்முதல்வாத மெய்யியல் தமிழ்ச் சமூகத்தின் அடிப்படையாக இருந்த நிலைமையும், வரம்புக்குட்பட்ட முடியாட்சி முறை இருந்த நிலைமையும், பேரரசுகள் இல்லாத நகர நகர்மைய அரசுகள் இருந்த நிலைமையும் ஆகிய இந்த அரசியல் சமூகச் சூழ்நிலைதான் அறிவும் திறமையும் துணிவும் கொண்ட புலவர்கள் உருவாகுவதற்கும், அவர்களின் கருத்துக்களை ஏற்கும் பெருந்தன்மை கொண்ட அரசர்கள் இருப்பதற்கும் காரணமாக இருந்துள்ளது என்பதே உண்மை. ஆகவே சங்க காலத்தில் பரவலான கல்வியறிவும் எழுத்தறிவும் இருப்பதற்கு இதுபோன்ற ஒரு சமூக அரசியல் சூழ்நிலை இருந்தது தான் காரணம்.

நூற்றுக்கணக்கான தத்துவார்த்த கலை அறிவியல் தொழில்நுட்ப நூல்களும், இலக்கிய நூல்களும் பழந்தமிழகத்தில் இருந்துள்ளன என்பதற்குச் சங்ககாலச் செவ்வியல் இலக்கியப் படைப்புகள் மிகப்பெரும் சான்றுகளாக இருக்கின்றன. சங்ககாலத்தில் மிக அதிக அளவான நூல்கள் இருந்தன என்பதற்குத் தொல்காப்பிய இலக்கண நூலும் நமக்குச் சான்றுகளை வழங்குகிறது. நூல் என்பதற்கு செய்யுளியல் 162 ஆம் பாடலில் அவர் 5 வரிகளில் இலக்கணம் தருகிறார். மேலும் அதே செய்யுளியலில் நூல் என்பது நான்கு வகையான பாகுபாடுகளைக்கொண்டது எனக் கூறுகிறார். பின் பொருளதிகார மரபியலில் நூல் என்பதில் முதல்நூல், வழிநூல் என இருவகை உண்டு எனக் கூறுகிறார். மேலும் வழிநூல் என்பது நான்கு நிலைகளில் அமையும் எனக் கூறி விளக்கம் தருகிறார். மேலும் பத்துவகைக்குற்றங்களும் இல்லாது, 32 உத்திகளைப் பெற்று உண்மைப் பொருள் விளங்கக் கூறுவதே நூல் எனக் கூறுகிறார். இவை அனைத்தும் தொல்காப்பியரது பல பாடல்களில் விரிவாகப் பேசப்படுகின்றன (16). ஆகவே சங்ககாலத்தில் மிக அதிக நூல்கள் இருந்தன என்பதால் தான் இவ்வளவு விரிவான விளக்கங்களைத் தொல்கப்பியர் நூல் குறித்துக் கூற வேண்டிய தேவை இருந்துள்ளது எனலாம்.

பழந்தமிழகத்தில் மக்கள் பிரதிநிதிகளும் பொதுக்கல்வியும்:

சங்ககாலம் முதல் சங்கம் மருவிய காலம் (கி.மு.750 - கி.பி.250) வரையான 1000 வருட காலத்தில் பாடப்பட்ட 6000க்கும் மேற்பட்ட பாடல்களில் ஒரு பாடல் கூட கோவில் கட்டச் சொல்லி ஆட்சியாளனைக் கேட்கவில்லை. ஆனால் பல பாடல்கள் குளம், குட்டை, ஏரி போன்ற நீர்நிலைகளைக் கட்டச் சொல்லி ஆட்சியாளனை வேண்டுகின்றன. அதே சமயம் அவை பள்ளிக் கூடங்களைக் கட்டச் சொல்லியும் கேட்கவில்லை. ஆனால் சாதாரண மனிதன் முதல் அரசன் வரை அனைவரும் பரவலான அளவில் எழுத்தறிவும் கல்வியறிவும் கொண்டவர்களாக இருந்துள்ளனர். ஆகவே பள்ளிகளை உருவாக்குவதில் ஆட்சியாளனின் பங்கு அதிகளவில் இல்லை. அதே சமயம் பள்ளிகளை உருவாக்கி, ஆசிரியர்களை நியமித்து அனைத்து மக்களையும் கல்வி கற்கச்செய்வதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பங்கு பெருமளவில் இருந்தன எனக் கருதலாம்.

பழந்தமிழகத்தில் வாழ்ந்த அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமை உண்டு என்ற கருத்தாக்கம் அன்று இருந்துள்ளது. அதுபோன்றே கல்வி கற்காதவன் விலங்குக்கு ஒப்பாவான் எனவும் கற்றவன்தான் மக்களாகக் கருதப்படுவர் எனவும் அன்று கருதப்பட்டது. வள்ளுவனும் கல்லாமை என்ற அதிகாரத்தின் இறுதிப்பாடலில் இக்கருத்தினை வலியுறுத்துகிறான். மேலும் கல்வி பெறாதவர்கள் இருகண்களும் இல்லாதவர்கள் என்றும் அவன் கூறுகிறான். வள்ளுவன் சங்ககாலச் சமூகத்தின் கருத்தைத்தான் பிரதிபலிக்கிறான். மனிதன் மனிதனாக வாழ கல்வி இன்றியமையாதது எனப் பழந்தமிழ் மக்கள் கருதினர். ஆகவே அனைவரும் கல்வியறிவு பெற வேண்டும் என்ற கருத்தாக்கம், பழந்தமிழகத்தில் உறுதியான ஒரு நிலைபெற்ற கருத்தாக இருந்து வந்தது. இதனை அன்றைய அனைத்து நூல்களும் அனைத்துச் சிந்தனையாளர்களும் வலியுறுத்துகின்றனர். அதற்கேட்ப நமது அகழாய்வுத் தரவுகளும், சங்க இலக்கியமும் அன்று அனைத்து மக்களும் கல்வி கற்றவர்களாக இருந்தனர் என்பதை உறுதி செய்கின்றன.

அன்றைய கல்வி முறையில் பொதுக்கல்வி, சிறப்புக்கல்வி, மேல்நிலைக் கல்வி ஆகிய மூன்று நிலைகள் இருந்தன எனவும் பொதுக்கல்வி ஏழாண்டுகளுக்கும் சிறப்புக்கல்வி மூன்றாண்டுகளுக்கும் பயிற்றுவிக்கப்பட்டது எனவும் இவைபோக மேல்நிலைக்கல்வி என்ற ஆராய்ச்சிக்கல்வி வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் சென்று மூன்று வருடம் படிக்கும் கல்வியாக இருந்து வந்தது எனவும் பாலாசிரியர், கணக்காயர், தமிழாசிரியர் போன்ற ஆசிரியர்கள் அன்று இருந்துள்ளனர். எனவும் சிறப்புக்கல்வி என்பது ஒருவர் விரும்பும் தொழில் அல்லது கலை பற்றிய கல்வி எனவும் தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு எழுதிய சங்ககால வாழ்வியல் என்ற நூல் கூறுகிறது (17). எழுதுதல், படித்தல், அடிப்படைக் கணிதத்தை அறிந்து பயன்படுத்துதல், இலக்கண இலக்கியங்களைப் படித்து அறிதல், சமூகம் குறித்தப் பொதுஅறிவைப் பெறுதல் போன்றவற்றுக்கான கல்வியாகவே பொதுக்கல்வி இருந்தது. இக்கல்வியை அனைத்து மக்களும் பெறும் சூழ்நிலை அன்று நிலவி வந்துள்ளது.

இதற்கான பொறுப்பை மக்கள் பிரதிநிதிகள் ஏற்றுச் செயல்படுத்தினர். இந்தப் பொதுக்கல்வியைக் கற்றவர்கள் சுயமாகத் தொடர்ந்து பயின்று வந்ததன் காரணமாக சங்க இலக்கியம் போன்ற செவ்விலக்கியங்களை படைக்கும் திறன் பெற்றவர்களாக ஆனார்கள். பொதுக்கல்வியைக் கற்க வேண்டும் என்பது போலவே ஒவ்வொருவரும் தொடர்ந்து பயின்று வர வேண்டும் என்ற கருத்தும் சங்க காலத்தில் இருந்து வந்தது. அதனால்தான் வள்ளுவன், ‘தொட்டனைத்தூறும் மணற்கேணி; மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு’ எனக் கூறுகிறான். சங்ககாலத்தில் இருந்த கல்வி குறித்து சமூகம் முழுவதும் இருந்த ஆக்கபூர்வமான கருத்துக்கள் அனைத்து மக்களும் கல்விபெற வழிவகுத்தது என்பதோடு தொடர்ந்து சுயமாகக் கல்வி கற்பதற்கும் வழிவகுத்தது எனக் கருதலாம்.

பிற்காலச் சோழர் காலத்தில் ஊரவை, ஊர்ச்சபை, நகரவை போன்ற அமைப்புகள் இருந்தன. இவைகளுக்கு மேலானதாகவும் அதிக அதிகாரம் கொண்டனவாகவும் நாட்டார் அவை இருந்து வந்தது. அரசன் நேரடியாக இந்த நாட்டார் அவையோடு மற்றுமே தொடர்பு கொண்டிருந்தான். இதன் பிரதிநிதிகள் ஊரவை நகரவை ஆகியவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருந்தனர் (18). பழந்தமிழகத்தில் தான் முதல்முறையாக இந்த ஊரவை, நகரவை, நாட்டார் அவை போன்ற அமைப்புகள் தோன்றி செயல்பட்டு வந்தன. அதனைப்பின்பற்றித்தான் சோழர்கள் இந்த முறைகளைக் கொண்டுவந்தனர்.

நாட்டார் அவை என்பது இன்றைய வட்டாட்சி அல்லது ஒன்றியம் அளவினதாக இருந்தது எனினும் அதன் அதிகாரம் என்பது சங்ககாலத்தில் இன்றைய மாவட்ட ஆட்சியர்க்கும் மேலான அதிகாரம் கொண்டவையாக இருந்தன என்பதோடு அவை சுயமாகவும் சுதந்திரமாகவும் இயங்கின. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அமைப்புகள் வரிவசூல், ஊர்க்காவல், நீதி, கல்வி, நீர்ப்பாசனம் போன்ற பலவற்றையும் நிர்வகித்து வந்தன. இவற்றில் அரசுகள் தலையிட முடியாத நிலை அன்று இருந்து வந்தது. இந்த அமைப்புகள் பழந்தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் அன்று இருந்தன எனக் கூற முடியாது எனினும் பெரும்பாலான இடங்களில் இவை செயல்பட்டு வந்தன. சமச்சீரான வளர்ச்சி என்பது அன்று இருக்கவில்லை என்பதால் இவை இல்லாத இடங்களும் இருந்தன.

இவை வரிவசூலில் ஒரு பங்கை வைத்துக்கொண்டு ஒரு பங்கை அரசுக்குச் செலுத்தின. இவை அதிக அதிகாரங்களைப்பெற்று, அரசினுடைய அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் அளவு வலிமை மிக்கவையாக இருந்தன. அதனால்தான் மெகசுதனிசு மக்கள் பிரதிநிதிகள் தமிழக அரசுகளைக் கட்டுப்படுத்தின எனக் கூறியுள்ளார். இந்த அமைப்புகள்தான் ஆண்-பெண் ஆகிய அனைவருக்கும் கல்வி என்பதை ஊர்களிலும் நகரங்களிலும் செயல்படுத்தி வந்தன. இவை பொதுக்கல்விக்கு மட்டுமே பொறுப்பேற்று செயல்படுத்தி வந்தன. சிறப்புக்கல்வி என்பன குடும்பத்தொழில் சார்ந்த கல்வியாக அன்று இருந்தது. இந்தச்சிறப்புக்கல்வியை அந்தந்த தொழில் சார்ந்த குடிகள் நடத்தி வந்தன. சான்றாக கட்டடக்கலை, சிற்பக்கலை, களரி, சிலம்பம் போன்ற போர்க்கலைகள், வர்மக்கலை, மருத்துவம், ஓவியக்கலை போன்றவற்றைச் சொல்லலாம். அதுபோன்றே மேல்நிலைக்கல்வி என்ற ஆராய்ச்சிக்கல்வி பல்வேறு பொது நிறுவனங்களால் நடத்தப்பட்டன.

கி.மு. 6ஆம் நூற்றாண்டு வாக்கில் பூதவாதம் பிராமணர்கள் கற்கத்தகுந்த   மதிப்புடைய தத்துவமாக இருந்தது எனவும் அதனைப் படிப்பதற்காக வடஇந்தியத் தத்துவ அறிஞர்கள் தமிழகம் வந்தனர் எனவும் பேராசிரியர் அ. சக்கரவர்த்தி நயினார் அவர்கள் கூறும் செய்தி, புத்தர் காலத்திற்கு முன்பே தமிழகத்தில் பூதவாதம் என்கிற பொருள்முதல்வாதக் கருத்துக்கள் மிகவும் புகழ்பெற்ற, மிகவும் செல்வாக்குடைய கருத்துக்களாக இருந்து வந்தன என்பதை உறுதிப்படுத்துகிறது. மேலும் தென்னாட்டில் வழங்கிவந்த தத்துவங்களில் மிகவும் தொன்மையானது உலகாயதம் (பூதவாதம்) என்று, தென்னாட்டுத் தத்துவங்களை ஆய்வு செய்த தத்துவ அறிஞர் தட்சிண நாராயண சாத்திரி அவர்கள் கூறுகிறார். அதனையே பேராசிரியர் சக்கரவர்த்தி நயினார் அவர்களும் கூறுகிறார். இவர்கள் தமிழ் இலக்கியச் சான்றுகளை ஆய்வு செய்யாமலேயே இந்த முடிவுக்கு வந்துள்ளனர். இத்தகைய முடிவிற்கு அவர்கள் வருவதற்குச் சமற்கிருத நூற்சான்றுகளே காரணமாக இருந்துள்ளன என நா. வானமாமலை அவர்கள் தனது நூலில் தெரிவித்துள்ளார் (19). சான்றாக புத்தரின் மாணவன் சாரிபுத்தன் தமிழகம் வந்து பூதவாதம் குறித்தக் கல்வியைக்கற்றுச் சென்றான் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆகவே கி.மு. 6ஆம் நூற்றாண்டு முதலே மேல்நிலைக் கல்வி எனப்படும் ஆராய்ச்சிக் கல்விகள் பழந்தமிழகத்தில் இருந்து வந்தன என்பதையும் அன்று பொருள்முதல்வாத மெய்யியல் தமிழகத்தில் மிகவும் வளர்ந்த நிலையில் இருந்தது என்பதையும் பேராசிரியர் அ. சக்கரவர்த்தி நயினார், தத்துவ அறிஞர் தட்சிண நாராயண சாத்திரி போன்றவர்களின் கூற்றுகள் உறுதி செய்கின்றன. தத்துவத்தில் மட்டுமல்லாது பல்வேறு துறைகளிலும் இதுபோன்ற மேல்நிலைக் கல்விக்கான நிறுவனங்கள் இருந்து வந்தன. அவற்றைப் பல்வேறு பொதுநல அமைப்புகள் அல்லது அது சார்ந்த சித்தாந்த அமைப்புகள் நடத்தி வந்தன.

பொதுக்கல்வியை மட்டுமே ஊரவை, நகரவை, நாட்டாரவை போன்ற அமைப்புகள் நடத்தி வந்தன. வரிவசூலில் அதற்கான ஒரு பங்கு ஒதுக்கப்பட்டு இவை அவற்றைச் செம்மையாக நடத்தி வந்தன. தமிழ்ச்சமூக அளவிலான ஒட்டுமொத்த மக்களின் ஆதரவும், கல்வி குறித்தச் சமூகக் கருத்தாக்கமும்தான் இவை முறையாகவும் ஒழுங்காகவும் நடைபெறக் காரணமாயின. ஊருக்கொரு அல்லது தெருவுக்கொரு ஆசிரியரும் பள்ளிக்கான பொதுமன்றமும் இருந்தன. ஆளுவோர், பெருநிழக்கிழார், பெருவணிகர், பெரும் செல்வந்தர் போன்றவர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தனி ஆசிரியரைக்கொண்டு கல்விதரும் முறையும் இருந்து வந்தது. சான்றாக கி.மு. 3ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த முதல் கரிகாலனின் ஆசிரியராக இரும்பிடர்த்தலையார் என்பவர் இருந்துள்ளார் (20).

சிறப்புக்கல்வி, மேல்நிலைக்கல்வி போன்றவற்றை ஒருசில துறைகளில் வல்லுநர்களாக இருந்த தனியார்களும் நடத்தி வந்தனர். அவருக்கு உரிய ஊதியம் கொடுத்து, அவரிடம் மாணவராகச் சேர்ந்து சில ஆண்டுகள் கற்று தேர்ச்சி பெறுவதும் நடந்து வந்தது. ஆகவே அன்று கல்வி பலவகையிலும் கற்கப்பட்டு வந்தது எனலாம். ஆனால் அன்று தமிழ்மக்கள் அனைவரும் பொதுக்கல்வியை, முறையாகவும் தரமாகவும் பெறும் ஒரு சமூகச்சூழ்நிலை இருந்துவந்தது என்பதுதான் பழந்தமிழ்ச் சமூகத்தின் சிறப்பு எனலாம். மேலும் தொடர்ந்து கல்வியைச் சுயமாகக் கற்றுக்கொள்ளும் சூழ்நிலையும் அன்று இருந்து வந்தது என்பதும் பழந்தமிழ்ச் சமூகத்தின் சிறப்பாகும்.

பண்டைய கல்வியும் இன்றைய கல்வியும்:

பண்டைய கல்வி என்பது தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்விவரை தமிழ்வழிக் கல்வி மூலமே நடைபெற்றது. பழந்தமிழர்கள் அன்று உலகம் முழுவதும் சென்று பல நாடுகளில் தங்கி இருந்து வணிகம் செய்து வந்தனர். உலகில் அன்று இருந்த கிரேக்கம், இலத்தீன், சீனம், பிராகிருதம், பாலி போன்ற பல மொழிகளைக் கற்றவர்களாக இருந்தார்கள். தாய்மொழிக் கல்வி பிறமொழிகளைக் கற்பதை எளிதாக்கியது. பழந்தமிழர்கள் அன்று பலதுறைகளிலும் உலகின் ஒரு முன்னணிச் சமூகமாக இருந்ததற்கும் தாய்மொழிக்கல்வியே காரணமாக இருந்தது.

வேலைவாய்ப்பு என்பது அன்றைய கல்வியின் நோக்கமாக இருக்கவில்லை. அறம் சார்ந்து வாழ்தலையும், பொதுநல நோக்கையும், பிறர்க்கென வாழ்தலையும் கற்றுத்தருவதும், தனிமனிதனின் உள்ளார்ந்த ஆற்றலை அவனது தனித்திறமையை வெளிக்கொணர்வதும் அன்றைய கல்வியின் நோக்கமாக இருந்தது. சமூக உணர்வு கொண்டவனாக வளர்க்கப்படவும், முழு நிறைவான வாழ்வை வாழ்வதற்கு தொடர்ந்து கற்பது ஒரு அடிப்படைத் தேவை என உணரவும் அன்றைய கல்விமுறை வழிவகுத்தது.

பொதுக்கல்வி என்பது அன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரவை, நகரவை, நாட்டாரவை போன்றவற்றால் மிகச்சிறப்பாகவும், தரமாகவும், இலவயமாகவும் நடத்தப்பட்டன. அன்று சிறப்புக்கல்வியிலும் மேல்நிலைக் கல்வியிலும் தனியார் கல்விமுறை இருந்த போதிலும் அது பேரளவான வருவாயை ஈட்டுவதற்கான வணிகக் கல்வியாக இருக்கவில்லை.

கற்றலும், கற்பித்தலும் வருவாய் ஈட்டுவதற்காகவே என்ற இன்றைய நிலை அன்று இருக்கவில்லை. அன்று கல்வி என்பது மனிதனாக வாழ்வதற்கான ஒரு அடிப்படைச் சமூகத் தேவையாகவும், தனிமனிதனுக்கு ஒரு மதிப்பையும் மரியாதையையும் தருவதாகவும் இருந்து வந்தது. கற்றவனும் கற்பித்தவனும் தனது நலனுக்காக மட்டுமல்ல, சமூகத்தின் பொது நலனுக்காகவும் அவற்றைச்செய்து வந்தனர். இன்று இருப்பதைப் போலவே அன்றும் கல்வியில் நிறைய பிரிவுகள் இருந்தன. இலக்கியம், இசை, நாட்டியம், ஓவியம், சிற்பக்கலை, கட்டடக்கலை, வர்மக்கலை, மருத்துவம், களரி, சிலம்பம் போன்ற போர்க்கலைகள், கணிதவியல், வானவியல் போன்றவை போக பல்வேறு தொழில்பிரிவு சார்ந்த பயிற்சிகள் என நிறைய இருந்தன. அவை தரமும் சிறப்பும் முழுமையும் கொண்டு விளங்கின.

தமிழ்ச் சமூகம் இவை அனைத்திலும் உலகின் அன்றைய ஒரு முன்னணிச் சமூகமாக இருந்தது. அன்றைய கல்வி கற்பித்த ஆசிரியரையும், நன்கு கற்றறிந்தவனையும் மதிக்கக் கற்றுத் தந்தது. பேரறிவு பெற்று சமூகத்திற்கு அவற்றைப் பலவகையிலும் வாழ்நாள் முழுவதும் வழங்கி வந்தவர்கள் எதிர்பார்க்க வேண்டியது புகழ், மதிப்பு, மரியாதை போன்றவற்றைத்தான், வருவாயை அல்ல எனக் கல்வி போதித்தது. அறிவை மட்டுமல்ல, பொருள் ஈட்டுவதும் பிறருக்கு வழங்குவதற்கே எனக் கற்றுத்தந்தது. அன்றைய இளைஞன் தாய் தந்தையரைச் சாராமல் சுயமாகப் பொருள் ஈட்டி வாழ வேண்டும் எனக் கல்வியும் சமூகமும் கற்றுத்தந்தன.

இறுதியாக பழந்தமிழ்ச் சமூகத்தில் இருந்து வந்த பொருள்முதல்வாத மெய்யியலும், நகர அரசுகள் இருந்து வந்ததும், அவை மக்கள் பிரதிநிதிகளால் கட்டுப்படுத்தப்பட்டதாக இருந்து வந்ததும், ஊரவை, நகரவை, நாட்டாரவை போன்ற மக்கள் பிரதிநிதித்துவ அமைப்புகள் கல்விப்பொறுப்பினை ஏற்று பொதுக்கல்விமுறையை அனைத்து இடங்களிலும் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வந்ததும், கல்வி கற்றவருக்குச் சமூகத்தில் இருந்த மதிப்பும் மரியாதையும், கல்லாதவரை விலங்கினும் கீழாகக் கருதிய சமூகச் சிந்தனையும், தமிழ்ச் சமூகத்தில் இருந்த அறம் சார்ந்த சிந்தனையும், இவைபோக அனைவரும் கல்வி பெறவேண்டும் என்பது குறித்த ஆக்கபூர்வமான பொதுச்சிந்தனை அல்லது சமூகச் சிந்தனையும் தான் கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் சமூகச் சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ளது எனக் கருதலாம்.

பார்வை:

1. The Times of India 7-8-2023. Tamil Nadu ironage finds dated to Indus Valley civilization & https://timesofindia.indiatimes.com/city/chennai/tn-iron-age-finds-dated-to-indus-valley-period/articleshow/101585765.cms?from=mdr

2. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், NCBH, 2023, புத்தகம் -2, பக்: 539 – 543.

3. “ “ “ புத்தகம் -1, பக்: 450-457, 510-518.

4. “ “ “ புத்தகம் -1, பக்: 118-123.

5. “ “ “ புத்தகம் -1, பக்: 69-76, புத்தகம் –2, பக்: 547, 548.

6. “ “ “ புத்தகம் –2, பக்: 425, 430-435, 436-437.

7. “ “ “ புத்தகம் –2, பக்: 526-532.

8. “ “ “ புத்தகம் –2, பக்: 512-518.

9. “ “ “ புத்தகம் -1, பக்: 64-65.

10. “ “ “ புத்தகம் –2, பக்: 493-502.

11, 12, 13, 14. “ “ “ புத்தகம் -1, பக்: 111-114.

15. கீழடி – வைகை நதிக்கரையில் சங்ககால நாகரிகம், தமிழ்நாடு அரசு, தொல்லியல்துறை, 2019 – Publication No. 302, Critically Edited by prof. K. Rajan, pa: 17, 18.

16. மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு, கணியன் பாலன், தமிழினி பதிப்பகம், 2018, பக்: 178-181.

17. தமிழ் நாட்டு வரலாறு, சங்ககால வாழ்வியல், தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், 2022, பக்: 192.

18. ஆதித்த கரிகாலன் கொலை, இரா. மன்னர் மன்னன், பயிற்று பதிப்பகம், மே-2023, பக்: 82-91.

19. மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு, கணியன் பாலன், தமிழினி பதிப்பகம், 2018, பக்: 37.

20. பழம்பெரும் தமிழ்ச் சமூகம், கணியன்பாலன், தொல்கபிலர் பதிப்பகம், 2023, பக்: 140, 141.

கணியன் பாலன், ஈரோடு

Pin It