நீலமலை எனப்படும் நீலகிரி உலகின் மிக முதன்மையான இயற்கை உயிர்ச் சூழல் மண்டலங்களில் ஒன்றாகும். 1986 இல் இந்தியாவில் 14 இடங்களை உயிர்ச் சூழல் பாதுகாப்பு மண்டலமாக ஐக்கிய நாடுகள் அவையின் யுனெஸ்கோ அறிவித்தது. இதில் நீலகிரியும் ஒன்றாகும். சுமார் 5520சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள இப்பகுதி தமிழ்நாடு கர்நாடகம் மற்றும் கேரளாவை உள்ளடக்கியவையாகும்.

நீலகிரி கடல் மட்டத்திலிருந்து 900 முதல் 2636 மீட்டர் உயரத்தில் உள்ளது. நீலகிரியின் பரப்பளவு 2545 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011 ஆம் ஆண்டு கணக்குப்படி மக்கள் தொகை 7,35,394 ஆகும். தற்போது இந்த எண்ணிக்கை 10 முதல் 15 இலட்சம் வரை இருக்கலாம். ஆண்களின் எண்ணிக்கை 49.6 சதவீதம் ஆகவும் பெண்களின் எண்ணிக்கை 50.4 ஆகவும் உள்ளது.

நீலகிரியின் வரலாறு

நீலகிரி 1336 முதல் 1565 வரை விஜய நகரப் பேரரசின் கட்டுப்பாட்டிலும் 1565இல் மைசூர் அரசிடமும் இருந்தது. 1760 முதல் 1799 திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலி ஆட்சியில் இருந்தது. நீலகிரியில் கோத்தர், குரும்பர், பனியர், இருளர், தோடர், தொதவர் முதலிய பழங்குடி இன மக்கள் வசிக்கின்றனர். நீலகிரியில் 02.10.1995 அன்று பழங்குடியினர் அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது.nilgiris hills 488ஆங்கிலேயர் ஆதிக்கம்

நீலகிரி 1799இல் கிழக்கிந்தியக் கம்பெனியின் கீழும் 1818 இல் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழும் வந்தது. அப்போதையக் கோயம்புத்தூர் ஆட்சியர் ஜான் சல்லிவன் 31.07.1819இல் கோத்தகிரியைக் கண்டறிந்தார். 1882இல் நீலகிரி மாவட்டம் ஆனது. 01.02.1882இல் ரிச்சர்ட் வெல்லஸ்கி நீலகிரியில் ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

தேயிலைத் தோட்டம்

கேமிலியா சினெஸ்கி எனப்படும் தேயிலை, சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட விதைகள் மூலம் 1835 இல் அறிமுகம் செய்யப்பட்டது. 1860 முதல் வணிகப் பயிர் ஆனது.

அரசுத் தேயிலைத் தோட்டக் கழகம் (TANTEA)

இந்தியாவின் தேயிலை உற்பத்தியில் 30 சதவீதம் நீலகிரியில் உற்பத்தி ஆகிறது. பெரும்பாலும் சிறு தனியார் தோட்டங்களே இருந்தன. இந்நிலையில் தமிழ் நாடு அரசு வனத்துறையின் கீழ் அரசுத் தேயிலைத் தோட்டக் கழகம் - TANTEA 1968 இல் அப்போதைய முதல்வர் கலைஞரால் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களுக்கு வேலை கொடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. சுமார் 4053.758 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. சுமார் 5000 தொழிலாளர் வேலை செய்தனர். தற்போது இதன் பரப்பளவு வெகுவாக குறைக்கப்பட்டதன் விளைவாக தொழிலாளர் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.

நீலகிரியின் இயற்கை வளங்கள்

நீலகிரி மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட உயிர்ச் சூழல் பாதுகாப்பு மண்டலமாகும். அடர்ந்த வனங்களும் அழகிய நீர் வீழ்ச்சிகளும் ஆறுகளும் பல அரிய வகை மூலிகைகளும் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் இடமாக நீலகிரி திகழ்கிறது.

குந்தா, சிகர்ஹல்லா, பைக்கரா, மாயாறு ஆகிய ஆறுகள் ஓடுகின்றன. குல்லக்கம்பி, ஹலஷனா, கேத்தரின், காக்பர்னின், பைக்கரா, கல்ஹட்டி, லாஸ்பால் ஆகிய நீர்வீழ்ச்சிகள் பாய்கின்றன.

நீலகிரியில்....

பூக்கும் தாவரங்கள் 3300 வகைகள்
பாலூட்டிகள் 100 வகைகள்
பறவையினங்கள் 350 வகைகள்
வண்ணத்துப்பூச்சிகள் 300 வகைகள்
நீர் நில உயிரினங்கள் 80 வகைகள்
மீன்கள் 39 வகைகள்
ஊர்வன 60 வகைகள்
தேசியப் பூங்காக்கள் 4
புலிகள் காப்பகங்கள் 4
யானை வாழிடங்கள் 3 உள்ளன.

நீலகிரி சோலைக்காடுகள்

நீலகிரியில் 1500 மீட்டர் உயரத்தில் சோலைக்காடுகள் அமைந்துள்ளன. இவை பெருமளவில் நீரை சேமித்து வைக்கின்றன. இந்த சோலைக்காடுகளில் இருந்து பவானி ஆறு உருவாகிறது. 1849 இல் 8600 ஹெக்டேர் சோலைக்காடுகளும் 29,875 ஹெக்டேர் புல்வெளிகளும் இருந்தன.தற்போது இவற்றின் பரப்பளவு வெகுவாகக் குறைந்து விட்டது.

நீலகிரி வரையாடுகள்

நீலகிரி வரையாடுகள் மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பாகும். 4000 அடி உயரத்திற்கு மேல் உள்ள மலைப்பகுதிகளில் மட்டுமே இவை வாழும். அக்டோபர் 7 ஆம் நாள் நீலகிரி வரையாடுகள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. மலைப் பாதுகாவலன் என்று போற்றப்படும் இவை நீர்ப் பிடிப்புப் பகுதிகளை மேம்படுத்துவதிலும் சோலைக் காடுகளை பாதுகாப்பதிலும் முதன்மைப் பங்கு வகிக்கின்றன. நீலகிரி வரையாடுகள் தமிழ் நாட்டின் மாநில விலங்காகும்.

நிலைகுலையும் நீலகிரி

இயற்கையின் அற்புதமான நீலகிரியில் உள்ள இயற்கை வளங்கள் மிக வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு சுற்றுலா மிக முதன்மையான காரணமாக உள்ளது. 2022 இல் ஒரு நாளில் 10,000 சுற்றுலா வாகனங்கள் நீலகிரிக்குள் சென்றன. இது 2024 இல் நாளொன்றுக்கு 20,000 வாகனங்களாக அதிகரித்துள்ளது. ஒர் ஆண்டில் சுமார் 35 முதல் 50 லட்சம் பேர் நீலகிரிக்கு சுற்றுலா வருகின்றனர். உதகை நகரம் 90 ஆயிரம் பேர் வருவதற்கான பரப்பளவு மற்றும் அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்டுள்ளது. பல லட்சம் பேர் வருகையினால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. நீலகிரியில் சுமார் 1.5 லட்சம் டன் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்துள்ளன. ஏராளமான விடுதிகள் மலைச் சரிவுகளில் கட்டப்பட்டு வருவதால் அதிகளவு நிலச்சரிவு ஏற்படுகிறது.

அந்நியத் தாவரங்கள்

நீலகிரியில் தைலமரம் எனப்படும் யூகலிப்டஸ் மரங்கள் 1840 இலும் பைன் மரங்கள் 1886 இலும் சைப்ரஸ் மரங்கள் 1891 இலும் ஆங்கிலேயர்களால் நடப்பட்டது. ஓரினத் தாவரமான தேயிலைமயும் பெருமளவில் பயிரிடப்பட்டுள்ளது. இந்த அந்நியத் தாவரங்களின் வளர்ச்சி காரணமாக சோலைக்காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டு விட்டன. சோலைக்காடுகள் அதிக அளவில் கார்பன் டை ஆக்சைடை உள்ளே எடுக்கும் ஆற்றல் வாய்ந்தவை என்பதால் இதன் அழிவு நீலகிரியின் சுற்றுச்சூழலை வெகுவாகப் பாதித்துள்ளது.

காட்டு விலங்குகளுக்கு உணவாக பயன்படும் சோலைக்காடுகளும் காளான்களும் அளிக்கப்பட்டதால் அவை உணவு கிடைக்காமல் ஊர்களுக்குள் புகுந்து விடுகின்றன.

உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட நகரங்களின் கழிவுகள் நீர் நிலைகளில் கொட்டப்படுகின்றன. அருவங்காடு துப்பாக்கிக் குண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து நைட்ரோ செல்லுலோஸ் மற்றும் நைட்ரோ கிளிசரின் கழிவுகள் சிறிய நீரோடையில் விடப்படுகின்றன. இவை சுமார் 5 கிலோமீட்டர் நீளம் ஆற்றில் பரவிக் கிடக்கிறது. நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் கிலோ லிட்டர் நீரோடையில் விடப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நீலகிரியைப் பாதுகாப்போம்..!

நீலகிரிக்கும் கொடைக்கானலுக்கும் அளவற்ற சுற்றுலா வாகனங்கள் செல்வதால் ஏற்பட்டுள்ளக் கடும் போக்குவரத்து நெருக்கடி மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் சதீஷ் குமார் மற்றும் பரத் சக்ரவர்த்தி ஆகியோர் நீலகிரிக்கும் கொடைக்கானலுக்கும் செல்லும் வெளியூர் வாகனங்களுக்கு இ.பாஸ் முறையை நடைமுறைப்படுத்துமாறு ஆணையிட்டுள்ளனர். இது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.

தமிழ்நாட்டில் 59 சதவீதம் காடுகளைக் கொண்ட ஒரே மலை மாவட்டம் மட்டுமின்றி இயற்கை உயிர்ச் சூழலின் இருப்பிடமான நீலகிரியை அழிவிலிருந்து பாதுகாப்பது மிகவும் அவசரமும் அவசியமும் ஆகும்.

எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

#. சுற்றுலா வாகனங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்
#. சாலைகளை அதிக அளவில் விரிவுபடுத்தக் கூடாது.
#. கட்டுமானங்களை முறைப்படுத்த வேண்டும்
#. பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய வேண்டும்
#. அந்நியத் தாவரங்களை அகற்ற வேண்டும்.
#. தொழிற்சாலைகளை அனுமதிக்கக் கூடாது
#. மக்கள் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்
#. அருவங்காடு துப்பாக்கிக் குண்டுகள் தொழிற்சாலைக் கழிவு நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும்.
#. சோலைக்காடுகளை வளர்க்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்
#. புதிய நீர்மின் திட்டங்கள் மற்றும் அணைகளை அமைக்கக் கூடாது
#. வரையாடுகளைப் பாதுகாக்க வேண்டும்.
#. காடுகள் அழிக்கப்படுவது முற்றிலும் தடுக்க வேண்டும்.

இவ்வாறு அனைத்து வகையிலும் நீலகிரியின் இயற்கைச் சூழலைப் பாதுகாக்கும் முயற்சியில் அரசும் பொது மக்களும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

- தமிழகன்