பெரியார் சிந்தனையை இலக்கியமாக்கியவர் புரட்சிக்கவிஞர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி புதுவையில் பிறந்தார். தந்தை கனகசபை, தாய் இலக்குமி. 1928 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் மாயவரத்தில் பெரியாரும், டாக்டர் வரதராசலு நாயுடும் பேசுவதாக அறிந்த பாரதிதாசன் ஒரு காங்கிரசுக்காரராக - சைவ பக்திமானாக அக்கூட்டத்திற்குச் சென்று மாற்றம் பெற்று அன்றோடு கடவுள், மதம் ஆகியவற்றைப் பாடுவதை விட்டுவிட முடிவெடுத்துக் கொண்டார்.
எதையும் ஏன், எதற்கு என்று பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து தனக்கு சரியெனப்பட்டதை ஏற்றுக் கொள்க என்று பெரியார் கூறியது கவிஞருக்கு மிகவும் பிடித்தது. அதிலிருந்து பெரியார் கொள்கையை தனது பாடல்களின் கருப்பொருளாக பயன்படுத்தி பாடல்களை எழுதினார்.
1928 இல் கருத்தடைப் பற்றி முதன் முதலாகப் பெரியார் கூறியதை 1936 இல் ‘காதலுக்கு வழி வைத்துக் கருப்பாதை சாத்தக் கதவொன்று கண்டறிவோம்’ எனப் பாட்டால் வழி மொழிந்த முதற் கவிஞர் என்ற பாராட்டிற்குரியவர் பாரதிதாசன். மதுரையில் நடைபெற்ற ஒரு தமிழ் மாநாட்டில் புரட்சிக் கவிஞர் கலந்து கொண்டார்.
அப்போது கி.ஆ.பெ. விசுவநாதம், பாவங்களை வைகையிலே சென்று, ‘புண்ணிய’ முழுக்குப் போட புரட்சிக் கவிஞரை அழைத்தார். புரட்சிக் கவிஞரோ நீங்கள் வைகையில் மூழ்கி உங்கள் பாவத்தைக் கழித்துவிட்டு, எனக்குக் குளிப்பதற்குக் கொஞ்சம் நீர் கொண்டு வாருங்கள். நான் அதை சுட வைத்து, அதில் உள்ள பாவங்களை போக்கிவிட்டு பிறகு குளிக்கிறேன் என்றார்.
பண்டைய நாட்களில் போர்க் காலங்களில் வெற்றிக்குச் சின்னமாக முழங்கிய சங்கொலியை இடைக்காலங்களில், பிற்காலங்களில் கோயில்களிலும், கோயில் விழாக்களிலும், பண்டாரங்களின் கைகளில் கொடுத்து விட்டனர். அந்தச் சங்கைப் பண்டாரங்களின் கைகளினின்றும் பிடுங்கித் தமிழின மக்களின் உரிமை மீட்கும் போரில் ஈடுபட்டுள்ள கட்டிளங் காளையரின் கைகளில் கொடுத்தவர் புரட்சிக் கவிஞராவார். ‘எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’ என்று கவிதையில் சங்கை முழங்க வைத்த முதற் கவிஞர் பாரதிதாசனேயாவார்.
புரட்சிக் கவிஞர் தம் கவிதை முழுவதிலும் தமிழுக்கு மொத்தம் 86 விதமான அடைமொழிகள் தந்து எழுதியது மட்டுமல்லாமல் பிறரால் வடமொழிச் சொற்கள் என்று சொல்லப்பட்ட 235 சொற்களைத் தமிழ்ச் சொற்களே என்று ஆதாரத்துடன் கூறியவர் புரட்சிக் கவிஞர்.
பாரதிதாசன் 1945 முதல் எழுதியுள்ள படைப்புகளில் தூய தமிழ்ப் பெயர்களையே கையாண்டிருப்பதோடு, தன்னுடைய கண்ணகி புரட்சிக் காப்பியத்தில் கோவலன் கண்ணகி மணவிழாக் கண்டவர்களின் பட்டியல் தருகின்ற முறையில் 84 தனித் தமிழ்ப் பெயர்களைக் கூறியவர்.
அசுரர்கள் என்று தமிழ் இன மக்களைத் தாழ்த்திப் பேசும் புராண கதைக்கு எதிராக, ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ என்ற நூலை எழுதினார். ‘வஞ்ச விழா’ எனும் பெயரில் தீபாவளி குறித்துச் சிறு நாடகம் ஒன்றும் எழுதியுள்ளார். அவரும் 1928 முதல் தீபாவளி கொண்டாடுவதை நிறுத்திவிட்டார். புரட்சிக் கவிஞர் பெரியாரை ‘உயர் எண்ணங்கள் மலரும் சோலை’ என்று பாராட்டி கவிதை எழுதியவர்.புரட்சிக் கவிஞரைப் பற்றி பெரியார், “பாரதிதாசன், புரட்சிகரமான கருத்துக்களை வெளிப்படுத்திய முதல் கவியும் கடைசிக் கவிஞரும் ஆவார். அவர் புதுமைக் கருத்துக்களையும், மக்கள் சமுதாயத்திற்குத் தேவையான சமதர்மக் கருத்துக்களையும் துணிந்து வெளியிட்டுள்ளார். சமுதாய மாற்றத்திற் கான கருத்துக்களைத் துணிந்து கூறிய பெரும் புலவர் ஆவார். இன்றைக்குப் பகுத்தறிவாளர்க்கு எடுத்துச் சொல்லத்தக்க சாதனமாகப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் அமைந்துள்ளன.”
“காட்டுமிராண்டிகளாக, மிருகங்களாக இருந்த மக்களை மனிதத் தன்மைக்குக் கொண்டு வரப் பாடுபட்டவர் பாரதிதாசன் ஆவார்”. (விடுதலை 21.10.1970)
“நாட்டில் எத்தனையோ கவிஞர் இருந்திருக்கிறார்கள்” என்றாலும், பாரதிதாசனைப் போல் மக்கட்குப் பயன்படும் கவிதைகளை யாரும் இயற்றவில்லை (‘விடுதலை’ 12.12.73) என்று கூறியிருக்கிறார்.
1938 ஆம் ஆண்டு ‘பாரதிதாசன் கவிதைகள்’ முதல் தொகுதியைக் குத்தூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி வெளியிட்டனர். புரட்சிக் கவிஞர் 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 இல் இயற்கை எய்தினார். 1928 ஆம் ஆண்டு முதல் 1964 வரை தான் வாழ்ந்த நாட்களில் பெரியாரைத் தவிர வேறு ஒரு தலைவரை ஏற்றுக்கொள்ளாத வாழ்க்கை வாழ்ந்தவர் புரட்சிக் கவிஞர். அவர் வாழ்ந்த காலம் 72 ஆண்டு 11 மாதம் 28 நாள்கள்.
புதுச்சேரி சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் 10.05.1964 இல் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், மயிலை த. லோகநாதன் ஆகியோருக்கு இரங்கற் கூட்டம் நடைபெற்றது. அதில் குத்தூசி குருசாமி, “ஆதி காலந் தொட்டே ஆத்திகத்திற்கு நாத்திகம் பின்வாங்கியதில்லை. காரல் மார்க்ஸ், இங்கர்சால், சித்தர்கள், புத்தர் போன்றவர்கள் சிறந்த சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்பிச் சென்றார்கள். அந்த அடிச்சுவட்டில் நிலையான இடம் பெற்றவர் பாரதிதாசன் என்று குறிப்பிட்டுள்ளார்.”
புரட்சிக் கவிஞரின் மணி விழா மலராகத் ‘திராவிட நாடு’ 29.4.1951 இதழ் வந்துள்ளது. 1970 ஆம் ஆண்டு கவிஞரின் ‘பிசிராந்தையார்’ நாடக நூலுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. 1971 ஏப்ரல் 29 புரட்சிக் கவிஞரின் பிறந்த நாள் விழா புதுவை அரசு விழாவாகக் கொண்டாடப் பெற்றது. ஒவ்வோராண்டும் அரசு விழா நிகழ்கிறது.
புரட்சிக் கவிஞர் வாழ்ந்த பெருமாள் கோவில் தெரு 95 ஆம் எண் இல்லம் அரசுடைமையாயிற்று - அங்கே புரட்சிக் கவிஞர் நினைவு நூலகம் - காட்சிக் கூடம் நடந்து வருகிறது. 1972 ஏப்ரல் 29 புரட்சிக் கவிஞரின் முழு உருவச் சிலை புதுவை அரசினரால் திறந்து வைக்கப்பட்டது. புரட்சிக் கவிஞரின் ‘அழகின் சிரிப்பு’ என்ற நூலை கதலீஸ் லியோன்ஸ் என்பவர் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்த்துள்ளார் - பெரியாரின் கருத்துகளை கவிதைகளாக இலக்கியமாக்கியவர் புரட்சிக் கவிஞர்.
- விடுதலை இராசேந்திரன்