“ஒருத்தரை போட்டோலே மட்டும்தான் பார்த்திருக்கிறோம். முதல் தடவையா நேர்லே பார்க்கிறோம்னோ அவரு எப்படி இருக்கிறார், எப்படி பேசறாருன்னு பார்ப்போம் இல்லையா? அதுபோல அய்யப்பனை நேர்லே பார்க்கும்போதும், நம்மளைப் பார்ப்பாரு... நாம வணக்கம் வச்சா பதிலுக்கு வணக்கமோ கையோ ஆட்டுவாரு... அவரு நடக்கிறதைப் பார்க்கலாம், நாலுபேர்கிட்டே பேசறதைப் பார்க்கலாம், பக்தர்கள் தர்ற படையல், காணிக்கைகளை என்ன பண்றாருன்னு பார்க்கலாம்’ அப்படின்னு நினைச்சேன். ஆனா, வரிசைலே நிக்கிறவங்க கிட்டே கேட்டா, அவர் போட்டோலே இருக்கிற மாதிரியே குத்தவச்சிக்கிட்டு ஆடாம, அசையாம இருப்பாருன்னு சொன்னாங்க.. போட்டோலே இருக்கிற மாதிரிதான் நேர்லேயும் இருப்பார்னா, அதுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய வரிசையிலே கால் கடுக்க நிக்கனும்? போட்டோலேயே பார்த்துக்கலாம்னு வந்துட்டேன்” என்று பதில் சொன்னேன்.

“ஏன் அய்யப்பனை தரிசிக்கலை” என்று பக்தர் கேட்ட கேள்விக்கு மேலே இருக்கும் பதிலைத்தான் சொன்னேன். நான் சொன்னது சரிதானே! பிறகு ஏன் அவர் என்னை முறைத்துக் கொண்டே இருந்தார்?

***

எங்கள் குழுவினர் அனைவரும் வந்து சேருவதற்கு அப்படி, இப்படி என்று காலை 7 மணி ஆகிவிட்டது. சரவணன் வந்ததும், காலைக் கடன்களை முடிக்கச் சென்றோம். மறுபடியும் ஒரு கொடுமையான அனுபவமாக அது இருந்தது. அந்த அசுத்தம் பற்றி எந்தவொரு பக்தரும் முணுமுணுக்கக் கூட இல்லை.


முந்தைய பகுதிகள்:

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 1

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 2

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 3

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 4

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 5

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 6

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 7


நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்திற்கு சற்று தள்ளி, அய்யப்பனின் நண்பர் வாபருக்கு ஒரு குடில் அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குடில் இஸ்லாமிய அடையாளங்களோடு இருந்தது. அங்கு இரண்டு முஸ்லிம்கள் இருந்தனர். இலட்சக்கணக்கான இந்துக்கள் கூடும் இடத்தில் ஒரு இஸ்லாமியருக்கு தனிக்குடில் இருப்பதும், அங்கு வரும் இந்துக்களுக்கு முஸ்லிம் சகோதரர்கள் நல்லாசி பெற உதவுவதும், பார்ப்பதற்கு கொஞ்சம் சந்தோசமாக இருந்தது. மதநல்லிணக்கம் என்பது இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே எப்போதும் இருந்து வந்திருக்கிறது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் மாதிரியான மதவெறிக் கும்பல்கள்தான் இந்த நல்லிணக்கத்தைக் குலைக்கின்றன.

keetru nandhan saravanan

(சபரிமலையில் வாபர் குடில் முன்பு நானும், சரவணனும்)

அதற்கு ‘ஆமாம்’ சொல்வதுபோல், சரவணனின் வார்த்தைகள் வந்து விழுந்தன. “இந்த வாபரின் குடிலைப் பார்த்தால் எரிச்சலாக வருகிறது. இவங்களுக்கு இவ்வளவு இடம் கொடுக்கக்கூடாது. பிறகு இதையும் அவங்களோடது என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். முதல்லே இதைத் தூக்கணும்” என்றான்.

நான் அறிந்த சரவணன் மிகவும் மெல்லிய இதயம் படைத்தவன்; யாரிடமும் அன்பாகப் பழகுபவன். எங்களது பதின்பருவத்தில் அவனுக்கு அரிபாலகிருஷ்ணன் என்ற அருந்ததிய நண்பன்கூட இருந்ததுண்டு. யாரிடமும் வேற்றுமை பாராட்டி நான் பார்த்ததில்லை. வேலை காரணமாக குல்பர்க்கா சென்றபிறகு, அங்கு பாஜகவைச் சேர்ந்தவர்களின் நட்பு கிடைத்திருக்கிறது. நாளாவட்டத்தில் பாஜகவின் இந்துத்துவா நஞ்சு சரவணனின் மூளையில் ஏற்றப்பட்டு விட்டது. அதில் ஒரு துளிதான் வாபர் மீதான அவனது கோபம். தலித் சாதியினர் மீதான அவனது பார்வையிலும் கொஞ்சம் வன்மம் தலைதூக்கியிருப்பதைக் அண்மைக் காலமாகக் காண முடிந்தது. இடதுசாரிகளை விட, வலதுசாரிகளின் கருத்துக்கள் மிக எளிதில் பொதுமக்களை எட்டிவிடுகின்றன. நாம் எப்போதும் பின்தங்கியே இருக்கிறோம்.

“அய்யப்பனே தனது நண்பராக வாபரை ஏத்துக்கிட்டாரு.. அய்யப்ப பக்தன் நீ ஏத்துக்க மாட்டேங்கிறே... மாலை போட்டுக்கிட்டு, அய்யப்பனைப் பார்க்க வந்த இடத்துலேயே அவருக்கு எதிரா நீ நடந்துக்கிறே... இவ்வளவுதான் உன்னோட பக்தியா?” என்று கேட்டேன். அவனிடம் பதிலில்லை.

***

பக்தர்கள் எல்லோரும் வந்து சேர்ந்த பிறகு, இருமுடிக் கட்டுக்களைப் பிரித்தார்கள். இருமுடியில் பக்தர்கள் கொண்டு வந்திருந்த நெய்த் தேங்காயை உடைத்து, நெய்யை அபிஷேகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொரு பக்தராக குரு சாமி அழைத்தார். அவர்கள் குரு சாமி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள். அவர்கள் கொண்டு வந்திருந்த நெய்த் தேங்காயை குரு சாமி உடைத்து, உள்ளே கெட்டித்துப் போயிருந்த நெய்யைப் பெருமிதமாகக் காண்பித்தார். நெய் கெட்டியாக இருந்தது என்றால், அந்தப் பக்தர் சரியாக விரதத்தைக் கடைப்பிடித்து இருக்கிறார் என்று அர்த்தமாம்.. நெய் உருகியிருந்தால், விரதத்தில் அவர் ஏதோ கோக்கு மாக்கு பண்ணியிருக்கிறார் என்று அர்த்தமாம்.

sabarimala gurusamy

(தேங்காயை  உடைத்து, கெட்டி நெய்யை வாளியில் கொட்டும் குரு சாமி)

ஒவ்வொரு பக்தரும் தங்களது தேங்காயில் நெய் கெட்டியாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.

நான் மெல்ல சரவணனிடம் சொன்னேன். “எல்லோரது தேங்காயிலும் நெய் கெட்டியாகத்தான் இருக்கும். இது ஜனவரி மாதம். பனி நன்றாக விழுகிறது. தூக்கமில்லாமல், நடந்து வந்து நமது உடம்புதான் சூடேறி இருக்கிறது. தேங்காயுக்கு ஒரு குறையும் இல்லை. சித்திரை மாசம் மதிய வெயிலில் நடந்து வந்து, அந்த வெயில் நேரத்திலேயே தேங்காயை உடைத்தால்தான் உள்ளே இருக்கும் நெய் உருகியிருக்கும். இப்போது இருக்கும் குளிருக்கு உள்ளே இருக்கும் நெய் கெட்டியாகத்தான் இருக்கும். இதில் நல்ல விரதம், கெட்ட விரதம் என்று பயப்பட வேண்டியதில்லை.”

நான் சொன்ன மாதிரிதான் நடந்தது. எங்கள் குழுவினரது தேங்காய்கள் அனைத்திலும் நெய் கெட்டியாகத்தான் இருந்தது. பயணத்தின்போது சிகரெட் குடித்துக் கொண்டிருந்த சாமிகளுக்கும் நெய் கெட்டியாகத்தான் இருந்தது. அய்யப்பன் துடியான சாமி என்றால், சும்மாவா?

தேங்காயிலிருந்த கெட்டியான நெய் எல்லாவற்றையும் வாளிகளில் கொட்டினார்கள். 80 பேர் என்பதால், 3, 4 வாளிகள் நிறைந்தன. அவற்றை எடுத்துக் கொண்டு, அபிஷேகம் செய்யப் போனார்கள்.

நெய் அபிஷேகம் செய்வதற்கு பணம் கட்டி ரசீது பெற வேண்டும். அந்த ரசீதை வாங்கிக் கொண்டு வரிசையில் நிற்க வேண்டும். அதற்கும் பெரிய வரிசை இருந்தது. நமது முறை வரும்போது, நெய் வாளிகளை வாங்கி அபிஷேகம் செய்துவிட்டு, அதிலிருந்து கொஞ்சம் திருப்பித் தந்து விடுகிறார்கள். மீதியாக வரும் நெய்யை பக்தர்கள் அனைவருக்கும் சமமாக குரு சாமி பகிர்ந்தளிக்கிறார். ஒரு சின்ன புட்டியில் அடைத்துக் கொடுக்கிறார். “அய்யப்பனின் உடல்மீது பட்டு வந்ததால், இந்த நெய் புனிதமானது. தீராத வியாதிகளை எல்லாம் தீர்க்கும் மருந்து. இதைப் பத்திரமாக பீரோவில் வைத்து விடுங்கள். வீட்டில் யாருக்கேனும் உடம்பு சரியில்லை என்றால், இந்த நெய்யைக் கொஞ்சம் எடுத்து உடம்பில் பூசுங்கள். எந்த நோய் என்றாலும் குணமாகிவிடும்” என்று குரு சாமி சொன்னார்.

அபிஷேகமாகக் கிடைக்கும் ஆயிரக்கணக்கான லிட்டர் நெய்யை கோயில் நிர்வாகம் என்ன செய்கிறது தெரியுமா? அப்பம், அரவனை தயாரிக்க கொஞ்சம் பயன்படுத்துகிறார்கள். மீதி எல்லாவற்றையும் நூற்றுக்கணக்கான டின்களில் அடைத்து, விற்பனைக்கு அனுப்பி விடுகிறார்கள். பக்தர்களின் கோவணத்தை உருவி, விற்கக்கூட தேவஸ்தானம் தயாராகத்தான் இருக்கிறது…. வாங்குவதற்கு ஆளில்லாததால்தான் பக்தர்கள் கொஞ்சம் மானத்துடன் இருக்கிறார்கள்.

***

உடைக்கப்பட்ட நெய்த் தேங்காயில் ஒரு முடி பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தரப்படுகிறது. இன்னொரு முடி, பதினெட்டுப் படிகளுக்கு அருகில் இருக்கும் அக்னிக் குண்டத்தில் போட்டு, எரிக்கப்படுகிறது. அக்னிக் குண்டம் என்றால் சிறியது அல்ல. ஏறக்குறைய ஒரு கிரவுண்ட் நிலம் அளவிற்கு எரிக்கும். 24 மணி நேரமும் அந்த அக்னிக் குண்டம் எரிந்து கொண்டே இருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் பக்தர்கள் என்று வைத்துக் கொண்டால், ஒரு இலட்சம் முடித் தேங்காய்கள் அதில் எரியூட்டப்படுகின்றன.

நம்மூரில் கோயில் முன்பு தேங்காய் விடலை போட்டால், பிச்சைக்காரர்கள் அதைப் பொறுக்கி எடுப்பதைப் பார்த்திருக்கிறோம். அரைமுடித் தேங்காய் கிடைத்தால், அவர்களுக்கு ஒருவேளை உணவு கிடைத்தமாதிரி. அந்த உணவுதான் சபரிமலையில் வீணடிக்கப்படுகிறது.

sabarimala agni gundam

(தேங்காய் முடிகளை எரிக்கும் அக்னிக் குண்டம்)

அய்யப்பனுக்கு இருக்கும் பல பெயர்களில் ஒன்று அன்னதானப் பிரபு. ஆனால், அந்த பிரபுவின் பக்தர்கள், இலட்சக்கணக்கான ஏழைகள் ஒருவேளை உணவு இன்றித் தவிக்கையில், அவர்களின் ஒருவேளை பசியை ஆற்றும் தேங்காயை நெருப்பில் போட்டு எரிக்கிறார்கள். உணவுப் பொருட்களை வீணடிக்கும் செயலைப் ‘பக்தி’ என்று சொன்னால், அந்தப் பக்தியை ‘காட்டுமிராண்டித்தனம்’ என்று சொல்லாமல் வேறெப்படி சொல்வது?

***

பம்பை நதியில் முந்தைய நாள் இரவு சாப்பிடுவதற்கு பார்சல் கொடுத்திருந்தார்கள். மறுநாள் சபரிமலையில் சாப்பிடுவதற்கு பார்சல் எதுவும் தரவில்லை; உடன் சமையல்காரர்களையும் அழைத்து வரவில்லை. “சபரிமலையில் சாப்பாட்டுக்கு என்ன செய்வது?” என்று நேற்றிரவு மலையில் நடந்து வரும்போதே கேட்டேன். (நம் கவலை நமக்கு). உடன் வந்த பக்தர் ஒருவர், “அன்னதானப் பிரபுவின் சன்னிதானத்தில் சாப்பாட்டுக்கு ஒரு குறையும் இருக்காது. மூன்று வேளையும் அன்னதானம் நடந்துகொண்டே இருக்கும். வயிறு நிறைய உணவு கிடைக்கும். மலைக்கு வரும் பக்தர்கள் எல்லோரும் அன்னதானம் செய்வார்கள். நமது குழு சார்பிலும் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம்” என்று சொன்னார்.

எனக்கு தூங்கி எழுந்த இரண்டு மணி நேரத்தில் பசிக்க ஆரம்பித்து விடும். காபி குடிக்கும் வழக்கமில்லாததால், காலை ஐந்து மணிக்கு எழுந்தால், ஏழு மணிக்கு வயிற்றில் மணி அடிக்க ஆரம்பித்து விடும். ஆனால், இங்கு முதல் நாள் இரவு முழுக்கத் தூங்கவில்லை. அதோடு மலை ஏறி வந்திருக்கிறேன். நெய்த் தேங்காய் உடைத்ததும், இரவி மாமாவிடம் “பசிக்கிறது. சாப்பிடப் போகலாம்” என்றேன். மாமா மற்ற பக்தர்களையும் அழைத்தார். எங்களுடன் இரண்டு பெண் பக்தர்கள் உட்பட இருபது பேர் சேர்ந்து கொண்டார்கள்.

சபரிமலை அய்யப்பனுக்கு வயது வந்த பெண்களைப் பிடிக்காது. பத்து வயதிற்குள்ளான அல்லது 50 வயதுக்கு மேலான பெண்களை மட்டுமே தன்னைப் பார்க்க வருமாறு சொல்லியிருக்கிறார். அப்போதுதான் அவரது பிரம்மச்சரியம் காக்கப்படுமாம். பெண்கள் அணியும் நவநாகரிக உடைகளால்தான் பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றன என்று ஆண்கள் சொல்வதைப் போல, வயதுக்கு வந்த பெண்களால் தன்னுடைய பிரம்மச்சரியம் பாதிக்கப்படும் என்று அய்யப்பன் கூறுகிறார். கடவுளுக்கே அந்தளவிற்குத்தான் கட்டுப்பாடு இருக்கிறது போலும்...

அய்யப்பனே அவ்வாறு சொல்லிவிட்ட பிறகு, கோயில் நிர்வாகம் என்ன அதை மீறவா முடியும்? கோயிலிற்கு வரும் பெண் பக்தர்களை சோதித்துத் தான் அனுப்புகிறார்கள். பெண் பக்தர்கள் தங்களது வயதை நிரூபிக்கும் சான்றாவணங்களை எடுத்து வர வேண்டும். PAN card, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம் அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு வர வேண்டும். பத்து வயதுக்குக் குறைவான பெண் குழந்தைகள் பள்ளியில் இருந்து நிழற்படத்துடன் கூடிய வயதுச் சான்றிதழைப் பெற்று வர வேண்டும். காவலர்களுக்கு சந்தேகம் வந்து விசாரிக்கும்போது, தாங்கள் கொண்டுவந்த சான்றிதழ்கள் மூலமாக தங்கள் வயதை மெய்ப்பிக்க வேண்டும். இந்த சரிபார்ப்பு மலை ஏறும்போது, நடக்கிறது. தவறும் பெண் பக்தர்கள் அங்கேயே திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

sabarimala anna danam

(அன்னதானம் இடும் எங்கள் குழு)

எங்கள் குழுவில் ஒரு பள்ளிச் சிறுமி அப்பாவுடன் வந்திருந்தார். 50 வயது கடந்த இரண்டு பெண்களும் இருந்தார்கள். அதேபோல் மற்ற குழுவிலும் ஒன்றிரண்டு பெண்களைப் பார்க்க முடிந்தது. ஆண்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் அது சொற்பம்தான்.

அன்னதானம் வழங்குமிடத்திற்குப் போனோம். எங்கள் குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டதால், அதைத் துவக்கி வைப்பதற்கு எங்கள் குழு பக்தர்களை அழைத்தார்கள். குழுவின் மூத்த பக்தர்களோடு, சரவணனும் இணைந்து கொஞ்சம் பேருக்கு உணவு பரிமாறினார்கள்.

‘தமிழ்நாட்டுக் கோயில்களில் ‘அம்மா’ வழங்கும் அன்னதானத்திலேயே சாம்பார், இரசம், மோர், பொரியல், ஊறுகாய், அப்பளம் என தூள் பறக்கிறது. இவர் வேறு அன்னதானப் பிரபு என்று பெயர் வாங்கியவர்; அன்னதானம் செம வெயிட்டாக இருக்கும்’ என்று ஆவலாகப் போனேன். எனது ஆவலில் அரைக்காப்படி கஞ்சியை ஊற்றி அணைத்தார்கள்.

ஆம் நண்பர்களே... அரிசியையும், கொஞ்சம் உளுந்தையும் கஞ்சியாக வடித்து தட்டில் ஓடவிட்டார்கள். அதற்கு தொட்டுக் கொள்ள மஞ்சள் நிறத்தில் சூடாக ஒன்றை ஒரு கரண்டி ஊற்றினார்கள். ருசித்துப் பார்த்தும் அது என்னவென்று தெரியாததால், அருகிலிருந்தவரைக் கேட்டு, அது சாம்பார் என்று தெரிந்து கொண்டேன்.

கஞ்சி கொதிக்க, கொதிக்க இருந்தது. ஒரு லிட்டர் கஞ்சியை வடிகட்டினால், அதில் கைப்பிடி அளவு அரிசியும், அரைக் கைப்பிடி அளவு உளுந்தும் இருக்கும்; மீதியெல்லாம் தண்ணீர்தான்.

உட்கார்ந்து சாப்பிடும் இடத்தில், இதற்கு முன்னர் சாப்பிட்டவர்கள் கஞ்சியைக் கொட்டியிருந்தார்கள். அதை சுத்தம் செய்ய யாரும் இல்லை; அதுகுறித்து அடுத்து சாப்பிட வந்தவர்களும் கவலைப்படவில்லை. கஞ்சி கொட்டப்படாமல் இருந்த இடங்களில் சிலர் உட்கார்ந்து கொண்டார்கள். மற்றவர்கள் நின்றவாறே அந்த தேவாமிர்தத்தை சாப்பிட்டார்கள்.

எவ்வளவோ முயற்சித்தும், அந்தக் கஞ்சியிலிருந்து இரண்டு கைக்கு மேல் பருக்கைகள் எனக்கு அகப்படவில்லை. மேலும் முயற்சிப்பது வீண் எனத் தெரிந்ததால், தட்டை வைத்துவிட்டு, வெளியே வந்துவிட்டேன்.

அய்யப்பனுக்கு அன்னதானப் பிரபு என்று பெயர் வைத்தவர் யாரென்று உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்… பாரத ரத்னா விருது தர வேண்டும்.

***

பேருந்து நிறுத்தங்களில் நாம் உட்காருவதற்குக்கூட தயங்கும் இடங்களில், பிச்சைக்காரர்கள் படுத்திருப்பதைப் பார்த்திருக்கிறோம்தானே! அப்படியான இடங்களில்தான் சபரிமலையில் பக்தர்கள் படுத்திருந்தார்கள். சில இடங்களில் கூரையாக ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளும், சில இடங்களில் வானமும் இருந்தன. தங்களைச் சுற்றி எவ்வளவு குப்பை இருக்கிறது என்பது குறித்து எந்தவொரு சிந்தனையுமின்றி பக்தர்கள் ஆழ்ந்த மோன நிலையில் இருந்தார்கள். மோனநிலை முற்றிப்போன சிலரிடம் இருந்து குறட்டைச் சத்தமும் வந்தது. அவர்களை மிதித்துவிடாமல் கவனத்துடன் கடந்து சென்றேன்.

எனக்கு பெரும் அசதி இருந்தாலும், அந்த ‘ஜோதி’யில் அய்க்கியமாக முடியாது என்றே தோன்றியது. சரவணனிடம் கேட்டேன். அவனும் களைப்புற்றிருந்தான். இருவரும் சேர்ந்து, சன்னிதானத்துக்குச் சொந்தமான தங்கும் விடுதியில் 1000 ரூபாய்க்கு ஒரு அறையைப் பதிவு செய்தோம். அதில் 400 ரூபாய் வாடகை; 600 ரூபாய் பாதுகாப்பு வைப்புத் தொகை (security deposit).

நேரம் காலை பதினொன்றைக் கடந்திருந்தது. காலையில் இருந்த குளிர் போன இடமே தெரியவில்லை. மே மாத வெயில் போல் சுட்டெரித்தது. சன்னிதானத்தைச் சுற்றிப் போடப்பட்டிருந்த சிமெண்ட் தரையில் சிறுசிறு சல்லிக்கற்கள் சூடேறி இருந்தன. செருப்பில்லாமல் நடக்கும்போது, காலில் ஊசி போல் அக்கற்கள் குத்தின.

மண் தரையை விட சிமெண்ட் தரையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்குமல்லவா? பக்தர்கள் நடப்பதற்கு வசதியாக சிமெண்ட் தரையில் கோயில் நிர்வாகம் தண்ணீர் தெளிக்கலாம். தமிழ்நாட்டுக் கோயில்களில் அவ்வாறு செய்வதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் சபரிமலை நிர்வாகம் பக்தர்களை அந்தளவிற்கு எல்லாம் மதிப்பதாகத் தெரியவில்லை.

கோயிலின் பின்புறம்தான் தங்கும் விடுதிகள் இருக்கின்றன. நான்கிலிருந்து ஐந்து மாடிகள் வரை கட்டப்பட்டிருக்கின்றன. கொஞ்சம் வசதியானவர்கள்தான் அறை எடுத்துத் தங்குகிறார்கள். சபரிமலை சீஸன் தொடங்கும்போது மட்டும் அறையை சுத்தம் செய்வார்கள் என நினைக்கிறேன். அதன்பின்பு அறையின் சுத்தம் முழுக்க முழுக்க பக்தர்களின் கட்டுப்பாட்டில் விடப்படுகிறது. கோயில் சுற்றுப்பிரகாரத்தில் என்ன சுத்தம்(?) இருக்கிறதோ, அதே சுத்தம் இந்த அறைகளிலும் இருக்கிறது.

sabarimala accommodation

நாங்கள் பிடித்த அறையில், இதற்கு முன்னர் தங்கியிருந்த பக்தர்கள் விட்டுச் சென்ற காலி தண்ணீர் பாட்டில்கள், சோப்பு அட்டைகள், டூத் பிரஷ்கள், காலி எண்ணெய் பாட்டில்கள், உணவுப் பொட்டலத்திற்குப் பயன்படுத்தப்பட்ட காகிதங்கள் எல்லாம் சிதறிக் கிடந்தன. நல்வாய்ப்பாக கழிப்பறையில் அதிகம் குப்பை இல்லை.

குப்பைகளை கூட்டிப் பெருக்குவதற்கு விளக்குமாறும் இல்லை. யாராவது பணியாளர்கள் கிடைத்தால் சுத்தப்படுத்தச் சொல்லி, கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று பார்த்தால் யாரும் கண்ணில் படவில்லை. சில பக்தர்கள் அறை எடுக்காமல், அறைக்கு வெளியே கட்டட வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த அறையில் படுப்பதும், வராண்டாவில் படுப்பதும் ஒன்றுதான். ஆனால் அறைக்கு பணம் கட்டிவிட்டோமே, என்ன செய்ய?

இரவி மாமா தன் கைவசமிருந்த போர்வையை வேகமாக அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் விசிறினார். குப்பைகள் சுவரோரமாக பதுங்கிக் கொண்டன. நடுவில் கிடைத்த இடத்தில் போர்வையை விரித்தோம்.

சரவணன் எங்களுடன் வரவில்லை. குரு சாமியுடன் வேறு சில பூஜைகளுக்காக சென்றிருந்தான். காலையில் சாப்பிட்ட கஞ்சி யார் வயிற்றையும் நிறைக்கவில்லை. மதிய சாப்பாட்டிற்கு அன்னதானப் பிரபுவை நம்பிப் பிரயோசனமில்லை என்று தெரிந்ததால், ஹோட்டலில் சாப்பிடப் போனேன். மாமா அறையில் ஓய்வெடுத்தார். நான் சாப்பிட்டுவிட்டு, சரவணனுக்கும், மாமாவுக்கும் பார்சல் வாங்கி வருவதாகத் திட்டம்.

கோயிலின் மேற்குப் புறத்தில் 500 மீட்டர் தொலைவில் வரிசையாக ஹோட்டல்கள் இருந்தன. ஆர்யாஸ், சங்கீதா, அன்னபூரணா என்று பெயர்களே மாறி, மாறி இருந்தன. இவற்றிற்கும், நமது ஊர்களில் இருக்கும் ஆர்யாஸ், சங்கீதா ஹோட்டல்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை – நிர்வாகத்திலும் சரி, ருசியிலும் சரி.

கூட்டம் அதிகமாக இருந்த ஹோட்டல் ஒன்றில் நுழைந்தேன். கூட்டமாக இருக்கும் ஹோட்டலில் உணவு நன்றாக இருக்கும் என்று மனக்கணக்குதான் காரணம். ‘எங்களைக் கேட்காமல் நீ எப்படி ஒரு கணக்கு போடலாம்?’ என்று பழிப்பதுபோல் இருந்தது அவர்கள் வைத்த சாப்பாடு. பசிக்கு எந்த உணவை சாப்பிட்டாலும் ருசியாக இருக்கும். ஆனால், கொலைப் பசி இருந்தும் அந்த சாப்பாட்டில் ஒரு துளி ருசி கூட கிடைக்கவில்லை. சாப்பாடு இந்த இலட்சணத்தில் இருந்ததால், சரவணனுக்கும், இரவி மாமாவுக்கும் வெஜிடபிள் பிரியாணி வாங்கிக் கொண்டேன். பாரபட்சமின்றி அதிலும் அதே ருசிதான் இருந்ததாக சரவணன் பின்னர் சொன்னான்.

பம்பையிலும் சரி, சபரிமலையிலும் சரி... ஹோட்டல், டீக்கடை எதுவொன்றிலும் வாயில் வைக்க முடியாத அளவிற்குத்தான் உணவுப் பொருட்களின் தரம் இருந்தது. விலை அதிகமாக இருந்தாலும், ருசி கொஞ்சம்கூட இல்லை. பக்தர்களை மனிதர்களாகக்கூட அவர்கள் மதிக்கவில்லை; அல்லது அவர்கள் மதிக்குமளவிற்கு பக்தர்கள் நடந்து கொள்ளவில்லை. எதைக் கொடுத்தாலும் எந்த எதிர்ப்புமின்றி பக்தர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

அறைக்குச் சென்று, மாமாவிடம் பார்சலைக் கொடுத்துவிட்டு, சரவணனைக் கூப்பிட்டு வரப் போனேன். அவன் எங்கள் குழுவினர் புடைசூழ, தேங்காய் உருட்டிக் கொண்டிருந்தான். அது என்ன என்று கேட்கிறீர்களா?

(தொடரும்)

- கீற்று நந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It