மொழியும் மனித சமூகமும்:

விலங்கு நிலையிலிருந்து மனிதனாக மாறிய பரிணாம வளர்ச்சியில் மனித உழைப்பு மிக முக்கியப் பங்காற்றியுள்ளது என்பதை மார்க்சிய மூலவர்கள் உறுதி செய்துள்ளனர். உழைப்பின் மூலம் ஒரு பொருளை உற்பத்தி செய்யத் தொடங்கும்பொழுதுதான் ஒரு விலங்கு மனிதனாக மாறத் தொடங்குகிறது. அதுபோன்றே விலங்கு நிலையில் இருந்த ஒரு சமூகம், மொழியை பேசத் தொடங்கும் பொழுதுதான் அது மனிதச் சமூகமாக மாறுகிறது. ஆகவே விலங்குச் சமூகம், மனிதச் சமூகமாக மாறும் பரிணாம வளர்ச்சியில் உழைப்பு போன்றே மொழியும் மிக முக்கியப் பங்காற்றியுள்ளது. மொழி என்பது மனிதனது சிந்தனைகள், எண்ணங்கள், கருத்துகள் ஆகியனவற்றை வெளிப்படுத்தும் ஒரு தொடர்புக் கருவி மட்டுமே எனக் கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் மனிதனது சிந்தனைகள், எண்ணங்கள், கருத்துகள் ஆகியனவற்றை உருவாக்குவதற்கான அடிப்படையாகவும் மொழி இருக்கிறது.

ஆகவே மொழி இல்லை எனில் மனிதன் தனது எண்ணங்களை, சிந்தனைகளை, கருத்துகளை உருவாக்குவதும் அதனை வெளிப்படுத்துவதும் இயலாது. தனது அனுபவங்களை, தனது பாரம்பரிய மரபுகளை, தனது கண்டுபிடிப்புகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதோ அவற்றை வாய் மொழியில் அல்லது நூல் வடிவில் சேமித்து வைப்பதோ இயலாது. எனவே மொழி என்பது மனித சமூகம் நாகரிக வளர்ச்சி பெற ஒரு மிக முக்கியக் காரணியாக இருக்கிறது எனலாம்.tamilமொழி அழிந்தால் அந்த மொழிச் சமூகமும் அழிந்து அந்நியர்களால் அடிமைப்படுத்தப்படும் என்பதோடு நாளடைவில் அதன் மொழியும் இல்லாது போய் அந்நியர்களின் மொழியே அவர்களின் மொழியாக ஆகி விடுகிற ஒரு அவலநிலை தோன்றும். சான்றாக பழம்பெருமை மிக்க எகிப்து நாட்டு மக்களின் எகிப்து மொழி இன்று இல்லை. அங்கு அரேபிய மொழிதான் இன்று அவர்களின் மொழியாக உள்ளது. ஆகவே ஒரு சமூகத்துக்கு மொழி என்பது அச்சமூகத்தின் ஆன்மாகவும் உயிராகவும் இருக்கிறது என்பதோடு, அதன் பண்பாடு, அதன் பாரம்பரியம், அதன் பண்டைய மரபுகள், அதன் கலை, இலக்கியம், அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய அனைத்தையும் அதன் மொழிதான் பாதுகாத்துப் பேணி வருகிறது. ஆதலால் மொழி இல்லை எனில் அம்மொழிச் சமூகமும் அதன் பண்பாடும் அதன் மரபுகளும் இன்னபிறவும் இல்லாது போய்விடும் (1).

அது போன்றே ஒரு மொழியின் வளர்ச்சியும் அந்த மொழிச்சமூகத்தின் வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஒரு மொழிச்சமூகம் வளர்ந்தால் அதன் மொழியும் வளரும். அதன் மொழி வீழ்ந்தால் அந்த மொழிச் சமூகமும் வீழ்ச்சியடையும். ஆங்கில நாட்டை எடுத்துக் கொண்டால் கி.பி. 12ஆம் நூற்றாண்டுவரை அங்கு இலத்தீன், பிரெஞ்சு ஆகிய மொழிகள் தான் ஆட்சி மொழியாக, இறைமொழியாக, கல்வி மொழியாக, அறிவியல் மொழியாக என அனைத்துமாக இருந்தன. அன்று ஆங்கில மொழியில் இலக்கியமோ அறிவியலோ இன்னபிறவோ இருக்கவில்லை. அது வளர்ச்சியடையாத பின்தங்கிய ஒரு வட்டார மொழியாகவே இருந்தது. ஆதலால் அது ஒதுக்கப்பட்டு அடக்கி வைக்கப்பட்டது (2). ஆனால் அதனை எதிர்த்து கி.பி. 13ஆம் நூற்றாண்டு முதல் ஆங்கிலேய மக்கள் போராடியதன் காரணமாக 15–18 ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர்களின் தாய் மொழியான ஆங்கிலம், படிப்படியாக ஆட்சி மொழியாக, இறைமொழியாக, கல்வி மொழியாக, அறிவியல் மொழியாக என அனைத்துமாக ஆகியது. ஆங்கிலத்துடன் ஆங்கில நாட்டின் வளர்ச்சியும் தொடங்கியது. ஒரு காலத்தில் தன் சொந்த நாட்டிலேயே இலக்கியமோ, அறிவியலோ, இன்ன பிறவோ இல்லாத ஒரு வட்டார மொழி எனக் கருதப்பட்டு ஆங்கில மொழி ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயம் (3).

அதன்பின் 16ஆம் நூற்றாண்டு முதல் ஆங்கில மொழியும் ஆங்கில நாடும் வளரத்தொடங்கி, 18-20ஆம் நூற்றாண்டுகளில் ஞாயிறு மறையாத பேரரசாக, ஆங்கில நாடு உருவானதன் காரணமாக இன்று ஆங்கிலம் உலக மக்களால் அதிகம் பேசப்படும் (146 கோடி) மொழியாக, 88 நாடுகளில் அலுவலக மொழியாக ஆகியுள்ளது. 146 கோடிப்பேரில் 40 கோடிப்பேர் அதனைத் தாய் மொழியாகவும் மீதியுள்ள 106 கோடிப்பேர் அதனை இரண்டாவது மொழியாகவும் பேசுகின்றனர். உலகின் அறிவியல் தொழில்நுட்ப மொழியாக உலகின் வணிகமொழியாக இன்று ஆங்கிலம் இருக்கிறது (4).

அதுபோன்றே அரேபிய மொழியை எடுத்துக் கொண்டால் கி.பி. 4ஆம் நூற்றாண்டிலிருந்துதான் அதன் வரலாறு தொடங்குகிறது. கி.பி. ஆறாம் நூற்றாண்டுவரை அரேபிய மொழி என்பது அரேபியத் தீபகற்பத்தில் வாழ்ந்த நாடோடிப் பழங்குடி மக்களால் பேசப்பட்ட ஒரு சிறுபான்மை மொழியாக, ஒரு வளர்ச்சியடையாத மொழியாகவே இருந்தது. முகம்மது நபி அவர்களால் இசுலாம் உருவாகி, இசுலாம் பல நாடுகளைக் கைப்பற்றிய பின், கி.பி. 7ஆம் நூற்றாண்டின் இறுதியில் அரேபிய மொழி இசுலாம் நாடுகளுக்கான ஆட்சி மொழியாக ஆனது. அதன்பின்தான் அம்மொழி வளரத் தொடங்கி ஒருசில நூற்றாண்டுகளுக்குள் உலகின் அறிவியல் தொழில்நுட்ப மொழியாக, வணிக மொழியாக, கலை, இலக்கிய மொழியாக, இறைமொழியாக பெருவளர்ச்சி பெற்று, ஒரு செம்மொழியாகவும் அரேபிய மொழி மாறிப் போனது. இசுலாம் மதம் உருவானபின் அரேபியர்கள் அடைந்த வளர்ச்சிதான் அரேபிய மொழியின் வளர்ச்சிக்கான அடிப்படையை விதைத்தது (5).

அதுபோன்றே இசுபெயின் (spain) நாட்டை எடுத்துக் கொண்டால் கி.பி. 16ஆம் 17 ஆம் நூற்றாண்டுகளில் தென்னமெரிக்க நாடுகளைக் கைப்பற்றி ஆண்டதால், தென்னமெரிக்காவின் பெரும்பாலான நாடுகளில் இன்று இசுபெயின் நாட்டின் மொழியான இசுபானிசு (Spanish) மொழிதான் அந்நாடுகளின் மக்கள் மொழியாக இருப்பதோடு, இன்று உலக மக்களால் அதிகம் பேசப்படும் மொழிகளில் மூன்றாவது மொழியாகவும் (60 கோடி) இருக்கிறது. 60 கோடிப்பேரில் 50 கோடிப் பேர் தாய்மொழியாகவும் 10 கோடிப்பேர் இரண்டாவது மொழியாகவும் பேசுகின்றனர். 21 நாடுகளில் அலுவலக மொழியாகவும் இசுபானிசு மொழி உள்ளது. அதுபோன்றே சீன நாட்டின் சீன மொழி 130 கோடி மக்களால் பேசப்படுகிறது. மேலும் சீன நாடு பேரளவு வளர்ச்சி பெற்ற நாடாக உருவாகி வருவதால் அவர்களுடைய சீன மொழி இன்று மிக அதிக அளவான உலக மக்களால் படிக்கப்பட்டு வருகிறது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் போன்ற வளர்ந்த நாடுகளில் கூட சீன மொழியைப் படிப்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது (6).

ஆகவே ஒரு மொழியின் வளர்ச்சி என்பது அம்மொழிச் சமூகத்தின் வளர்ச்சியைச் சார்ந்தே இருக்கிறது. அதுபோன்றே ஒரு சமூகத்தின் வீழ்ச்சி என்பது, அச்சமூக மொழியின் வீழ்ச்சியாகவும் இருக்கிறது என்பதை உலக வரலாறு மெய்ப்பிக்கிறது. ஆகவே மொழி வளர்ச்சியும் நாட்டின் வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. 16ஆம் நூற்றாண்டில் ஆங்கில மொழி ஆங்கில நாட்டின் ஆட்சி மொழியாக, இறைமொழியாக, கல்வி மொழியாக, அறிவியல் மொழியாக என அனைத்துமாக ஆகாதிருந்தால் ஆங்கில நாடு இந்த அளவு வளர்ந்திருக்கச் சாத்தியமில்லை. ஆகவே ஒவ்வொரு நாடும் தனது தாய்மொழியைத் தனது நாட்டின் ஆட்சி மொழியாக, இறைமொழியாக, கல்வி மொழியாக, அறிவியல் மொழியாக என அனைத்துமாக ஆக்கும் பொழுதுதான் வளர்ச்சி என்பது சாத்தியம் என்பதை வரலாறு பலவகையிலும் மெய்ப்பித்துள்ளது. இன்று உலகளவில் நன்கு வளர்ச்சி பெற்ற நாடுகளான செர்மன், பிரேஞ்சு, இத்தாலி, இருசியா, சப்பான், சீனா, தென்கொரியா, அமெரிக்கா போன்ற அனைத்து நாடுகளிலும் அந்தந்த நாடுகளின் மொழிதான் அனைத்துமாக இருக்கிறது. எனவே தமிழ் நாட்டின் ஆட்சி மொழியாக, இறைமொழியாக, கல்வி மொழியாக, அறிவியல் மொழியாக என அனைத்துமாக தமிழ்மொழி மாறும்பொழுது தான் தமிழ்நாட்டின் உண்மையான வளர்ச்சி சாத்தியமாகும்.

தமிழ் மொழிக்கல்வி:

தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு தமிழ்ச் சமூகத்தில் வளரும் ஒரு தமிழ்க் குழந்தை அதன் கருவிலிருந்தே தமிழைக் கற்கத் தொடங்கி நான்கு வயதிற்குள் தமிழ் மொழியை முழுமையாகக் கற்றுக் கொள்கிறது. தமிழ் மொழியின் இலக்கணத்தையும் அதன் வாக்கியக் கட்டமைப்புகளையும் உள்ளுணர்வில் புரிந்து கொண்டு தமிழ்மொழியை இலக்கணப் பிழையின்றி சரளமாகப்பேசவும், பிறர் பேசுவதை நன்கு புரிந்து கொண்டு அவர்களுடன் கலந்துரையாடவும், சுயமாகச் சிந்திக்கவும் அதனை வெளியிடவும் வல்லமை பெற்றதாக இருப்பதோடு உலகத்தைப் பற்றியும் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தைப் பற்றியும் தனக்கான ஒரு கருத்தாக்க உலகத்தை அது வகுத்துக் கொள்ளும் திறன் பெற்றதாகவும் இருக்கிறது. அந்த வயதிற்குள் பல்லாயிரக்கணக்கான தமிழ்ச்சொற்களை அதன் துல்லியமான பொருளோடு அறிந்து புரிந்து வைத்துக் கொள்வதோடு, எதிர்ப்படும் புதிய தமிழ்ச்சொற்களை உள்வாங்கி அதன் கருத்துகளை எளிதாகப் புரிந்துகொள்ளும் ஆற்றலையும் அக்குழந்தை பெற்று விடுகிறது.

நவீனக்குழந்தைகள் இரண்டு மூன்று வயதிற்குள்ளேயே கைபேசி மூலம் பலவகையான சமூக ஊடகங்களைக் கையாளும் திறன் பெற்றதாக இருப்பதால் அதன் மொழிவளர்ச்சியும் சிந்தனை வளர்ச்சியும் பேரளவானதாக ஆகி விடுகிறது. அத்துடன் நவீனப் பெற்றோர்களின் அறிவும் சிந்தனையும் அதற்கு ஊட்டப்படுகிறது. இவை அனைத்தும் அதன் தாய்மொழியாகவும் சமூக மொழியாகவும் உள்ள தமிழ்மொழியிலேயே நடைபெறுவதால் தமிழ் மொழியில் அதன் வாய்மொழி ஆற்றல் அளவற்றதாக ஆகி விடுகிறது. தாய்மொழியான தமிழில் எதனையும், எந்தத் துறையையும் எளிதாகக் கற்றுக் கொள்ளும் திறன் பெற்றதாக அக்குழந்தை இருக்கிறது. தமிழ்மொழியில் அவ்வளவு திறன் பெற்றதாக அந்தக் குழந்தை இருந்த போதிலும் தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் அது இதுவரை அறியாமல் இருக்கிறது. கணிதம், அறிவியல், சமூகவியல், தமிழ் இலக்கண இலக்கியம் போன்ற பாடங்களில் அடிப்படை அறிவற்றதாக அந்தக் குழந்தை இருக்கிறது. இந்த அடிப்படை அறிவை முழுமையாகப் பெற்றுக் கொள்ளும்பொழுது மட்டுமே அக்குழந்தை மொழியிலும் பிற அறிவியல்களிலும் அடிப்படைத் திறமைகளைப் பெற்று முழுமையாகக் கற்றுக் கொள்ளும் திறன் பெற்றதாக ஆக முடியும் என நவீன அறிவியலும் நவீன ஆய்வுகளும் கூறுகின்றன. அதற்குப் பள்ளிக் கல்வி முழுவதும் தமிழ்வழியில் கற்பது தேவை. தமிழ் மொழியில் அடிப்படைக் கல்வியைக் கற்ற மாணவன், மேற்கல்வியில் கணிதம், அறிவியல், தர்க்கவியல் போன்றவற்றில் சிறந்து விளங்குவான்

இந்த நிலையில் நான்கு வயதில் ஆங்கிலப்பள்ளியில் சேரும் தமிழ் குழந்தைக்கு ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்கிறது. தமிழ் பேசுவதுகூட சில பள்ளிகளில் தடுக்கப்படுகிறது. ஆங்கிலம் ஒரு புரியாத தெரியாத ஒரு புதிரான அந்நிய மொழி. மனித அறிவு என்பது தெரிந்ததில் இருந்து தெரியாததை எளிதில் புரிந்து கற்றுக் கொள்ளும் ஆற்றல் மிக்கது. தமிழில் பல ஆயிரக்கணக்கான சொற்களை அறிந்துகொண்ட, தமிழில் எளிதாகப் புரிந்து கொள்ளவும், உரையாடவும் சிந்திக்கவும் அளவற்ற திறன் பெற்ற, உலகம் குறித்தும் சமூகம் குறித்தும் தாய்மொழியும் சமூக மொழியுமான தமிழில் பல கருத்தாக்கங்களைக் உருவாக்கிக் கொண்டிருந்த அக்குழந்தைக்கு தமிழ் பயிற்று மொழியாக இருந்து அதன்மூலம் பாடங்கள் சொல்லித் தரப்பட்டால் அது தமிழ்மொழியை, ஆங்கில மொழியை, அறிவியலை, இன்ன பிறவற்றை மிக வேகமாகவும் மிக எளிதாகவும் ஆழமாகவும் கற்றுக் கொள்ளும். ஆனால் ஆங்கிலம் பயிற்றுமொழியாக உள்ள பள்ளிகளில் அதன் நிலை மிகமிகப் பரிதாபகரமானதாக இருக்கும். அடர்ந்த வனத்தின் நடுவே வழி தெரியாமல் மாட்டிக் கொண்ட ஒருவனின் நிலையில் அக்குழந்தை இருக்கும்.

மனிதன் எந்தச்சூழ்நிலையிலும் தன்னை தகவமைத்துக்கொள்ளும் திறன் பெற்றவன். குழந்தைகளுக்கு இந்தத்தகவமைக்கும் திறன் மிக மிக அதிகம். ஆகவே அது அந்தச் சூழ்நிலையிலும் தன்னை தகவமைத்துக்கொள்ளும் என்பது உண்மையே. ஆனால் தமிழில் இருந்த அந்த ஆழமான புரிந்துகொள்ளும் திறனோ, தெளிவோ, இன்ன பிறவோ இருக்காது. அது அனைத்தையும் புரிந்து கொள்ளாமலேயே மனப்பாடம் செய்து கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ளும். மிக எளிதாகவும் வேகமாகவும் கற்பதற்குப் பதில், மிகமிக கடின முயற்சி எடுத்துக்கொண்ட பின்னரும் மிகமிக மெதுவாகவும் மிகவும் மேலோட்டமாகவும், தெளிவற்றும் தான் அக்குழந்தை பாடங்களைக் கற்றுக் கொள்ள முடியும். தமிழில் பள்ளிக்குச் சேரும் முன்பே பல்லாயிரக்கணக்கான சொற்களை தெரிந்த அக்குழந்தைக்கு ஆங்கிலத்தில் பள்ளிக்காலம் முடியும் நிலையில் கூட சில நூறு சொற்களையே அறிந்துகொள்ளும் நிலை இருக்கும். அதிலும் ஒரு தெளிவு இருக்காது. இறுதியில் அதற்குத் தமிழும் தெரியாது ஆங்கிலமும் தெரியாது.

ஆங்கிலவழிப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுடன் சரளமாக உரையாடுவதோ, பல்வேறு பொதுவிடயங்கள் குறித்து விவாதிப்பதோ இருக்காது. மாணவர்களுக்கிடையே கூட ஆக்கபூர்வமான ஆழமான கருத்துகள் விரிவாக விவாதிக்கப்பட முடியாத சூழ்நிலைதான் நிலவும் இவை போன்ற காரணங்களால் பொது அறிவு, சுற்றியுள்ள சமூகம் குறித்த அறிவு, உலக அறிவு, பள்ளிப்பாடம் சாராத கருத்தாக்கங்கள் ஆகியனவற்றில் அக்குழந்தை ஒரு தெளிவற்ற குழப்பமான சிந்தனைகளைக் கொண்டதாகவே இருக்கும். சமூகத்திற்கும் அதற்கும் இடையே ஒரு மிகப்பெரிய இடைவெளி உருவாகி இருக்கும். தனது சமூகத்திலிருந்து பறித்து நடப்பட்ட செடி போன்றுதான் அதன் நிலை இருக்கும். இங்கு நான் சராசரி மாணவனைத்தான் குறிப்பிடுகிறேன். இந்த சராசரிக்கும் மேம்பட்ட ஒருசில அறிவான குழந்தைகள் கூட தமது பாரம்பரியம், மரபுகள், பண்பாடு, வரலாறு ஆகியன குறித்தச் சரியான புரிதல் இன்றி மேற்குலகச் சமூகமே உயர்ந்த சமூகம் போன்ற கருத்தாக்கங்களைக் கொண்டதாகவே இருக்கும்.

ஆங்கிலவழிக்கல்வி என்பது வணிகக்கல்வியாகவும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டதாகவும் வகுப்பு வேறுபாடுகளை வளர்த்தெடுக்கும் கல்வியாகவும், சனாதனச் சிந்தனையைக் கொண்டுவரும் கல்வியாகவும் இருக்கிறது. பெரும்பாலான ஆங்கில வழிப்பள்ளிகள் இந்து மதச் சார்பும் சனாதனச் சிந்தனையும் கொண்டதாக இருப்பது என்பது தற்செயலானதல்ல. ஆகவே சமூக சமத்துவச் சிந்தனைக்கு ஆங்கிலவழிக் கல்வி எதிரானது. ஆனால் தமிழ் வழிக்கல்வி சமூக சமத்துவத்திற்கு ஆதரவான சிந்தனைகளை வளர்த்தெடுப்பதாக இருக்கிறது. தமிழ் இலக்கியங்கள் சமயச் சார்பற்றும், அறம் சார்ந்த வாழ்க்கையை வலியுறுத்தியும், சமூகத்தில் சமத்துவத்தைப் பேணும் விழுமியங்களைக் கொண்டும் இருக்கிறது. ஆகவே தமிழ்வழிக் கல்வி என்பது சமூக சமத்துவத்திற்கு ஆதரவான சிந்தனைகளைப் பேரளவில் வளர்க்கும் என்பதையும் ஆங்கிலவழிக்கல்வி அதற்கு எதிரானது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

தாய்மொழிக்கல்வி:

மொழி என்பது சிந்தனையை வெளிப்படுத்தும் ஊடகம் மட்டுமன்று, சிந்தனையைச் சாத்தியப்படுத்துவதும், சிந்தனையை நிகழ்த்துவதும், வளர்த்தெடுப்பதும் மொழிதான். மொழி இல்லையேல் சிந்தனை இல்லை. மனிதனின் பேசுந்திறனோடு சேர்ந்துதான் அவனது அறிவுத்திறனும் சிந்தனைத் திறனும் வளர்ந்துள்ளன. மொழி என்பது அறிவின் அடித்தளம். இயற்கை மனிதனுக்கு அளித்த ஒப்பற்ற பெருவரம். மனிதத்தின் மகத்தான சாதனைகள் எல்லாம் இதனாலேயே சாத்தியமாகின்றன. ஒரு மொழியின் ஆற்றலும் பயனும் அளவிடற்கரியன. மொழி என்பது மனிதனின் கையில் கிடைத்த ஒரு அமுத சுரபி. தாய்மொழி என்பது கருவிலே பெற்ற திருவைப்போல ஒவ்வொரு மனிதனும் கருக்கொண்ட போதே தனக்கெனச் சொந்தமாகப் பெற்ற பெருநிதியம். அறிவு வளர்ச்சி என்பது தாய்மொழி வாயிலாகத்தான் எளிமையாக முடியும்.; பரவலாக முடியும். அறிவு வளர்ச்சி பரவலானால்தான், ஒருநாடு அறிவியல், பொருளாதாரம், அரசியல், கல்வி, கலை போன்ற பல துறைகளிலும் வளர்ச்சிபெற்று முன்னேற முடியும்.

அறிவு வளர்ச்சி இரு தளங்களில் நிகழ்கிறது. ஒன்று ஐம்பொறிகளால் பெறும் அறிவு. இரண்டாவது கருத்தாக்கங்களைக் கட்டமைத்து, சிந்தனைத் தளத்தில் வளர்த்தெடுக்கும் அறிவு. பாராளுமன்றம் என்பது ஒரு சொல். இந்தச் சொல்லைக் கேட்டவுடன் அவரவர் அறிவுக்கும் பட்டறிவுக்கும் ஏற்பப் பாரளுமன்றம் என்ற குழுவின் அமைப்பு, அந்த அமைப்பு உருவாகும் முறை, அது செயற்படும் விதம், அதன் ஆற்றல், அதன் இயக்கத்தை செயற்படுத்தும் விதிமுறை போன்ற அதன் அனைத்துக் கூறுகளும் நாம் விரும்பி முயன்று நினைக்காமலேயே நம் அறிவில் பதிந்து விடுகிறது. இந்த அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய பாராளுமன்றம் என்ற ஒரு சொல் ஒரு கருத்தாக்கம் ஆகிறது. அதுபோன்றே ‘ஒளிச்சேர்க்கை’ என்பது ஒரு கருத்தாக்கம். அணுப்பிளவு, அணுப்பிணைவு, பணவீக்கம், வேலைநிறுத்தம், அரசியல், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆகிய ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருத்தாக்கங்கள்தான். ஒவ்வொரு அறிவுத்துறையும் எண்ணற்ற கருத்தாக்கங்களை இணைத்தே கட்டப்படுகிறது. ஒவ்வொரு துறைக்கும் அந்தந்த துறைக்கு மட்டுமே உரிய கருத்தாக்கங்களும் உண்டு. அனைத்துத் துறைக்குமான பொதுவான கருத்தாக்கங்களும் உண்டு. இந்த கருத்தாக்கங்களால்தான் உயர்மட்டச் சிந்தனைகளும், சிந்தனையில் வளர்ச்சியும், உயர்மட்டக் கண்டுபிடிப்புகளும் சாத்தியமாகின்றன.

அறிவுத்துறையில் மட்டுமின்றி நடைமுறை வாழ்விலும் கருத்தாக்கங்களைப் பேசித்தான் செய்திகளைப் பறிமாறிக் கொள்கிறோம். ‘அவன் ஒரு பண்பாளன்’ என்பதில் ‘பண்பாளன்’ என்ற சொல்லால் பல செய்திக் கூறுகளை புலப்படுத்திவிட முடிகிறது. அவன் அன்புடையவன், சொல் பிறழாதவன், வாய்மை பேசுபவன், ஒப்புரவுடையவன் என்பன போன்ற ஒரு மனிதனின் பற்பல பரிமாணங்களை ஒரு சொல் மூலம் வெளிப்படுத்த முடிகிறது. ஒரு சொல்கொண்டு ஒராயிரம் செய்திக்கூறுகளை வெளிப்படுத்தும் விந்தை, மொழியில் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. ஒரு மொழியின் வளர்ச்சிக்கேற்ப இந்த விந்தை கூடுதலாகிறது. இவை முனைவர் சேதுமணி மணியன் தாய்மொழி குறித்துக் கூறும் ஒரு சில கருத்துகள் (7).

கருத்தாக்கங்களும் தாய்மொழியும்:

மொழிதான் இந்தக் கருத்தாக்கங்களை உருவாக்கிக் கட்டமைக்க அடிப்படையாக இருக்கிறது. மொழி இல்லை எனில் இதுபோன்ற கருத்தாக்கங்கள் உருவாவது என்பதோ, கருத்தாக்கங்களின் அடிப்படையிலான சிந்தனை வளர்ச்சியும் அறிவியல் வளர்ச்சியும் உருவாவது என்பதோ சாத்தியமில்லை என்பதுதான் உண்மை. இதுபோன்ற பல கருத்தாக்கங்களை ஒரு தமிழ்க் குழந்தை ஐந்து வயதிற்குள் தனது தாய்மொழியும் சமூக மொழியுமாகவும் உள்ள தமிழ் மொழியில் ஆயிரக் கணக்கில் உருவாக்கிப் பயன்படுத்தும் ஆற்றல் பெற்றதாக உள்ளது. ஆனால் அந்நிய மொழியான ஆங்கிலத்தில் இதுபோன்ற கருத்தாக்கங்களை கற்றுக் கொள்வது என்பதும் அதனைப் பெயன்படுத்துவது என்பதும் இயலாத காரியம். ஆதலால் தான் தாய்மொழிக்கல்வியில் படித்தவர்களால் மட்டுமே தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்பங்களில், சமூக, கலை, இலக்கியத் துறைகளில் மாபெரும் சாதனைகளை அடைய முடிகிறது. அதேசமயம், தாய்மொழியில் அடிப்படைக் கல்வியைக் கற்காதவர்களால் அந்நிய மொழியில் படித்து மாபெரும் சாதனைகளைச் சாதிப்பது என்பது இயலாத காரியமாக ஆகிவிடுகிறது.

நா.வானமாமலை – தமிழ்வழிக்கல்வி

வானமாமலை தமிழ்வழிக்கல்வி குறித்து கூறியதைக் கீழே காண்போம். மகாத்மா காந்தி, 16 மணி நேரம் ஆங்கிலத்தின் மூலம் பயிலும் பாடங்களை 10 மணி நேரத்தில் தாய் மொழியில் பயில முடியும் என்று கூறுகிறார். இதனையே பல கல்வி வல்லுநர்களும் கூறியுள்ளனர். அவ்வாறாயின் ஒரு மணி நேரத்தில் 3/8 மணி நேரம் வீணாகிறது. தற்காலத்து மாணவர்களின் ஆங்கிலத்தின் தரம் குறைந்துள்ளது. எனவே பாதி நேரம் ஆங்கில மொழிச் சுமையால் வீணாகிறது. நம்முடைய கல்லூரிகளில் 4 வருடம் பயிலும் பாடங்களைத் தமிழில் கற்பித்தால் 2 வருடங்களில் கற்பிக்க முடியும். நமது பாடத் திட்டங்களை நவீனப்படுத்துவதற்குள்ள தடை, ஆங்கிலத்தின் மூலம் கற்பிப்பதுதான். இப்பொழுதுள்ள குறைந்த அளவிலுள்ள பாடத்தையே நடத்த முடியவில்லை. தமிழில் கற்பித்தால் அதிக அளவிலும், நவீனத் தலைப்புகளை அதிகரித்தும் கற்பிக்க முடியும். இப்பொழுது ஆங்கில மொழி யறிவைப் பெறச் செலவழிக்கும் நேரம், பௌதீகம், இரசாயனம், தரையியல், உயிரியல், பொறியியல் போன்ற பொருள் பாடங்களைக் கற்பதில் செலவிடப்பட்டால், பொருளறிவு மிகும்.

மத்திய அரசு வேலைகளுக்கான தேர்வுகளில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், ஆங்கிலம் தவிர மற்ற பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெறுகிறார்கள். ஆங்கிலத்தில் எழுதும் தென்னிந்தியர்கள் ஆங்கிலத்திலும், ஆங்கில மொழியின்மூலம் விடையெழுதும் பிற பாடங்களிலும், குறைந்த மதிப்பெண்கள் பெறுகிறார்கள். எவ்வளவுதான் ஆங்கில அறிவைத் தென்னிந்தியர்கள் விருத்தி செய்து கொண்டாலும், இந்தி பேசுபவர்களின் இந்தி அறிவுக்கு ஒப்ப ஆங்கில மொழியறிவு பெற முடியாது. எனவே அதிக மதிப்பெண்கள் பெற தமிழர்கள் தமிழிலேயே விடையெழுத வேண்டும்.

வட நாட்டுப் பல்கலைக்கழகங்களில் இந்திமொழி பயிற்று மொழியாக இருப்பதால் இரண்டு மேஜர் பாடங்களைப் பட்டப் பயிற்சிக்கு வைத்திருக்கும் பொழுது, நமது பல்கலைக்கழகங்கள் ஒரு மேஜர் பாடத்தையே வைத்திருக்கின்றன. எனவே மொழிப் பயிற்சிக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தினால், மூன்றாவது பாகத்திற்குப் போதிய நேரம் கிடைக்கவில்லை. எனவே நம்முடைய மாணவர்கள் மூன்றாவது பாகத்தில், வடநாட்டு மாணவர் கற்பதற்கு பாதிக்கும் குறைவாகவே கற்கிறார்கள். முக்கியமாக நமது மாணவர்கள் மத்திய அரசு வேலைகளுக்கான தேர்வுகளில் தோல்வி யுறுவதற்குக் காரணம் இதுவே.

அறிவியல் கல்வி வேற்று மொழியில் இருக்கும் வரை அது மக்களிடையே பரவாது. ஒரு சில வசதி பெற்றவர்களிடையேதான் நிலைத்திருக்கும். அவர்கள் தங்களுக்குப் போட்டி ஏற்படாத வகையில் பொது மக்களிடையே அறிவுக் கல்வி பரவுவதைத் தடுப்பார்கள். நாட்டு மக்களிடையே கல்வியும், அறிவியலும் பரவ வேண்டுமானால், அவர்களுடைய சொந்த மொழியை கல்வி புகட்டவும், அறிவியலைப் பரப்பும் சாதனமாகவும் கொள்ள வேண்டும். நமது நாட்டிலும் தமிழே பயிற்று மொழியானால், தமிழிலக்கியத்திலும், அறிவியலிலும், பண்பாட்டியலிலும், மாபெரும் மறுமலர்ச்சி ஏற்படும். தமிழ்நாட்டில் மாபெரும் அறிவியக்கம் தோன்றும். ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்கும்வரை, படித்தவர்களிடையே அரைகுறையறிவும், அதனைத் தனக்காகப் பயன்படுத்தக் கூடிய போக்கும் தான் இருக்கும். தமிழ்நாடு முன்னேற வேண்டுமாயின் நமது இளம் சந்ததியினர், தமிழ் மூலம் அறிவியலையும் பண்பாட்டினையும் கற்று, தமிழர் சமுதாயத்தின் நன்மைக்காக அறிவியல் அறிவைப் பயன்படுத்துவதோடு, அதனை எல்லோரும் எல்லா வாய்ப்பும் பெற்று முன்னேறக்கூடிய திசையில் மாற்ற முன்வர வேண்டும் (8).

தமிழ்மொழிக் கல்வியில் பயில்வது, தமிழ்ப்படுத்தலை தரப்படுத்தும்வரை தொடக்கத்தில் உயர்கல்வியில் கடினமாகத் தோன்றும் எனினும் நாளடைவில் ஆங்கிலவழிக் கல்வியைவிட மிக எளிதாக இருக்கும் என்பதோடு பாடம் குறித்த ஆழ்ந்த புரிதலையும் விரிவான கண்ணோட்டத்தையும் கொண்டுவரும். ஆய்வு மனப்பான்மையை பெரிதளவில் அதிகரிக்கும். ஆசிரியர் மாணவர்களிடையேயும், மாணவர்களுக்கிடையேயும் பாடப்பொருள் குறித்த விரிவான விவாதத்தை, கலந்துரையாடலை அதிகரிக்கச் செய்யும். இதனால் கல்வியறிவு என்பது நாளடைவில் உலகத் தரத்தை எட்டும்.

தாய்மொழிக்கல்வி - சர்வதேசக் கருத்துகள்:

தாய்மொழிக்கல்வி குறித்து யுனெசுகோ (UNESCO) நிறுவனம் 1953 ஆம் ஆண்டு, “ஒரு குழந்தைக்கு பயிற்று மொழியாகத் தாய்மொழிதான் இருக்கமுடியும் என்பது வெளிப்படையான உண்மை. உளவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் புரிந்து கொள்வதற்கும், வெளிப்படுத்துவதற்கும், அறிவு இயல்பாகச் செயல்படுவதற்கும் உரிய பொருள்மிக்க சமிக்ஞைகளைக் கொண்ட கட்டமைப்பாகத் தாய்மொழி உள்ளது….. அறிமுகமில்லாத அந்நிய மொழி மூலம் கற்பதைக் காட்டிலும் தாய்மொழி வழியாக மிகவும் விரைவாகவும் எளிதாகவும் கற்றுக் கொள்ள முடியும்” எனக் கூறியுள்ளது. பல்வேறு நாடுகளின் ஆய்வறிக்கைகள், “தாய்மொழியில் பயிலும் மாணவர்கள் தம் சொந்த மொழியில் நன்கு தேர்ச்சி பெறுவதோடு, கல்வியின் உள்ளடக்கத் தேர்ச்சியில் உயர் சிகரங்களை எட்டி, இரண்டாம் மொழியிலும் நன்கு தேர்ச்சி பெறுகின்றனர்” எனக் கூறுகின்றன.

நார்வே நாட்டின் சர்வதேசக் கண்காணிப்பு அறிக்கை (பென்சன் (Benson carol) 2005), முழுமையான ஆறு ஆண்டுத்தொடக்கக்கல்வி தாய்மொழியிலும் இரண்டாம் மொழியைத் தனியே ஒரு பாடமாகவும் கொண்டிருப்பது, நடைமுறைக்கு ஏற்றதாக இருப்பது மட்டுமின்றி, அனைத்துப் பாடங்களையும் ஆங்கிலத்திலேயே கற்பதைக்காட்டிலும் சிறந்த தேர்ச்சியைத் தந்துள்ளது” எனக் கூறுகிறது. மேலும் அவ்வறிக்கை, “மேலதிகமான அண்மைக்கால ஆய்வுகள், இந்தக் கண்டுபிடிப்புகளையே உறுதி செய்கின்றன. இதற்கு மேலும் சென்று தாய்மொழி அடிப்படையில் மேலே பட்டியலிட்ட இருமொழித் திட்டத்தின் ஆக்கவழியிலான கூறுகளை ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன” எனக் கூறுகிறது. இங்கு இருமொழிக்கல்வி என்பது தாய்மொழியைப் பயிற்று மொழியாகவும் அந்நிய மொழியை ஒரு மொழிப்பாடமாகவும் கற்பிப்பதாகும்.

இரிகார்டோ, நோலாசுகோ (Ricardo M.A. Duran Nolasco) அறிக்கை (2009-4), “தாய்மொழியைப் பயிற்று மொழியாகவும் ஒரு அந்நிய மொழியை ஒரு பாடமாகவும் கற்றுத்தரப்படும் கல்விமுறை குழந்தைகளின் செயல்திறன் மிக்க பங்களிப்பை ஊக்குவிக்கிறது. ஒரு குழந்தை, தவறுகள் நடந்துவிடும் என்ற பயமின்றி தனது சொந்த மொழியில் தன்னை எளிதாகவும் இயல்பாகவும் வெளிப்படுத்திக்கொள்ளும். வகுப்பில் என்ன விவாதிக்கப்படுகிறது என்ன கேட்கப்படுகிறது என்பதை குழந்தைகள் உடனடியாகப் புரிந்துகொண்டு, தங்கள் தாய்மொழியைப் பயன்படுத்தி அவர்களது உலகத்தை உருவாக்கி, அதை அவர்களால் விளக்க முடியும். அவர்களுக்கு முன்பே தெரிந்து கொண்டிருந்த கருத்துகளோடு, புதிய கருத்துகளையும் சேர்த்துக் கொண்டு, அவர்களது எண்ணங்களை எளிதாக வெளிப்படுத்த முடியும். அந்நிய மொழியைக் காட்டிலும் தங்களின் உள்ளூர் மொழியில் மிக எளிதாகவும் திறமையாகவும் அவர்களால் பேச முடியும். மாணவர்கள் தங்களை நன்கு வெளிப்படுத்திக் கொள்வதால் அவர்கள் எதைக் கற்றுக்கொண்டுள்ளார்கள், எந்தெந்த பகுதியில் அவர்களுக்கு வழிகாட்டுதல் தேவை போன்றனவற்றை ஆசிரியர்கள் துல்லியமாக மதிப்பிட முடியும்.

மேலும் வாழ்க்கை, அதன் பொருள் ஆகியன பற்றிய சமூக அறிவையும், பள்ளிக் கல்வியையும் இக்கல்வி முறை இணைக்கும்…. இக்கல்விமுறை உள்ளூர் எழுத்தாளர்களையும், விளக்கவுரையாளர்களையும், பண்பாட்டுக் குழுக்களையும் சமூகத்தின்பால் அக்கரை கொண்டோரையும் உருவாக்கும். பள்ளியின், சமூகத்தின் மொழி என்பது தங்களின் சொந்த மொழியாக இருப்பதால் தம் குழந்தைகளின் கல்வி குறித்தப் புரிதலையும் அதன் மேலான தீவிர அக்கரையையும் இக்கல்விமுறை பெற்றோர்களிடையே கொண்டுவரும். கல்வியின் திட்டங்களோடு சமூகம் நெருங்கிவர இக்கல்விமுறை உதவும்”.

மேலும் “குழந்தையின் தாய்மொழி பயிற்றுமொழியாக இல்லாவிட்டால், வேற்று மொழியைக் கற்றுக் கொள்ள, குழந்தை பல ஆண்டுகளை வீணாக்க நேரிடும். இளம் படிப்பாளிகளும் அவர்களது ஆசிரியர்களும் வேற்று மொழிக்காக அதிகக்கவனம் செலுத்த வேண்டும். அடிப்படை அறிவியல், கணிதம், சிக்கல்களைத் தீர்க்கும் திறன், தர்க்கத் திறமைகள் ஆகியவற்றை கற்கத் தாய்மொழிக் கல்விதான் மிகச்சிறந்த வழி” எனக் கூறுகிறது இரிகார்டோ, நோலாசுகோ அறிக்கை (2009-11). (9). ஆகவே தாய்மொழி வழியாகக் கல்வி பயின்று வெற்றியடைவதைவிட அந்நிய மொழியில் பயின்று வெற்றியடைய முடியாது என்பதை உலகம் தழுவிய ஆய்வுகளும், கல்வி வல்லுநர்களின் கருத்துகளும் பலவகையிலும் உறுதி செய்துள்ளன.

அந்நியமொழியைக்கற்பதில் தாய்மொழியின் முக்கியம்:

அந்நிய மொழியைக்கற்பது குறித்து மூன்று மாயைகள் உள்ளன. 1. அந்நிய மொழி ஒன்றைக் கற்பதற்குச் சிறந்த வழி, அதே அந்நிய மொழியை பயிற்று மொழியாகப் பயன்படுத்துவதுதான். 2. அந்நிய மொழியைப்பயில அதை முன்பே கற்கத் தொடங்கிவிட வேண்டும். 3. அந்நிய மொழியைக் கற்பதற்கு தாய்மொழி ஒரு தடையாக இருக்கும். இவை அனைத்தும் மாயை என்பதுதான் ஆய்வுகள் கூறும் உண்மை (யுனெசுகோ 2008-12.).

பின்னிசு மொழியில் அடிப்படை அறிவு கொண்ட பின்னிசு மாணவர்கள் பத்து வயதில் சுவிடிசு மொழியைக் கற்கும்பொழுது அவர்கள் சுவிடிசு மாணவர்களைப் போலவே சுவிடிசு மொழியில் நன்கு தேர்ச்சி அடைகிறார்கள். ஆனால் பின்னிசு மாணவர்கள் ஆறு வயதிலேயே சுவிடிசு மொழியைக் கற்கும் பொழுது தாய்மொழியில் போதுமான அடிப்படை அறிவு இல்லாத காரணத்தால் சுவிடிசு மொழி வளர்ச்சி 12 வயதிற்குள் நின்று விடுகிறது. அதாவது அவர்கள் போதிய அளவு தேர்ச்சி பெறுவதில்லை. (பல்சுடான், Pulston C.B. 1977: 92-3). இந்த ஆய்வு தாய்மொழி வழியாகப் பயிலும்பொழுது அந்நிய மொழிகளைச் சிறந்த முறையில் கற்றுக்கொள்ள முடியும் என்பதை உறுதி செய்கிறது.

குழந்தைகள் தங்கள் தாய்மொழி வழிக் கல்வி மூலம் கற்கும்பொழுது, அவர்களது உலகைக் கருத்துமயமாக்கவும், மொழியின் குறியீட்டுச் செயலியை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளவும், எண்ணங்களை வெளிப்படுத்தவும், குரலை சிறப்பாகப் பயன்படுத்திப் பேசவும் அவர்கள் கற்றுக் கொள்கின்றனர். இலக்கணம் பற்றிய உள்ளுணர்வு சார்ந்த புரிதலையும், மொழியின் பல்வேறு நுண்மையான தகவல்களைப் பற்றிய விழிப்புணர்வையும், படித்தல், எழுதுதல் ஆகிய துணைத்திறன்களையும் அவர்கள் பெறுகின்றனர்.

தாய்மொழி மூலம் முன்பே சேகரிக்கப்பட்ட பெருமளவிலான மொழித் திறன்கள், உலக அறிவு ஆகிய இரண்டையும், தாய்மொழிமூலம் கற்போர் வெற்றிகரமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். இவர்கள் புதியதோர் மொழியில் தங்களது உலகை மறு கருத்துருவாக்கம் செய்ய வேண்டிய தேவை இருப்பதில்லை. தாய்மொழியோடு உடன்வருகிற உரையாடல் திறனையும் உலகியல் அறிவினையும் அவர்கள் தாய்மொழிப் பாடத்தின் ஊடே கற்றுக் கொள்கின்றனர்….. ஓர் இயல்பான மொழியே பிறமொழிகளின் இலக்கணக் கதவுகளைத் திறக்கப் போதுமானதாக இருக்கிறது. ஏனெனில் எல்லா மொழிகளும் ஒரே கருத்தியல் துணியிலிருந்து வெட்டப்பட்டவை தான். ஆகவே அந்நிய மொழியைக் கற்கும் நோக்கத்திற்குப் பெரும் சொத்தாக இருப்பது தாய்மொழிதான். தங்கு தடையற்ற மொழி ஆதரவு அமைப்பை (Language Acquisition Support Syatem) தவிர்க்க முடியாமல் அது வழங்குவதோடு அறிவூட்டலை முதன்மையாகச் சாத்தியப்படுத்துகிறது (10).

தாய்மொழிக்கல்வி - சர்வதேச சான்றுகள்:

அமெரிக்காவில் தாய்மொழியாம் நவஜோ (NAVAJO) மொழியை முதல் மொழியாகவும் பயிற்று மொழியாகவும் தொடக்கக்கல்வி முழுவதையும் கற்று, இரண்டாம் மொழியாக ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக மட்டும் கற்ற நவஜோ மாணவர்கள், ஆங்கில வழியில் மட்டுமே கல்விபயின்ற நவஜோ மாணவர்களைக் காட்டிலும் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றுள்ளனர் (UNDP அறிக்கை 2004: 61).

இசுவீடன் நாட்டுக்குப் புலம்பெயர்ந்த பின்லாந்து குழந்தைகள் குறித்த ஆய்வறிக்கை, “பின்னிசு மொழித் திறன், கணிதத்தோடு பெறக்கூடிய தேர்ச்சியோடு நெருக்கமாகத் தொடர்புடையது எனத் தேர்வு முடிவுகளில் இருந்து கண்டறியப்பட்டது. கணிதப் பாடம் இசுவீடிசு மொழியில் கற்பிக்கப்பட்டாலும் கூட, மேல்வகுப்புகளில் கணிதத்தில் சாதனை புரிய பின்னிசு மொழிதான் இசுவீடிசு மொழியைக் காட்டிலும் முக்கியமானது. என்பது புலனாகியது. கணிதத்தோடு தொடர்புடைய கருத்தியல் செயல்பாடுகளில் தேர்ச்சித்திறன் பெற சுருக்கமான தாய்மொழி அறிவு மிகவும் முக்கியம் என்னும் கருத்தாக்கத்திற்கு இத்தகைய சோதனை முடிவுகள் வலிமை சேர்த்துள்ளது. உயிரியல், வேதியியல், இயற்பியல் போன்ற பாடங்களுக்கும் கருத்தியல் சிந்தனை தேவையாக உள்ளது. இத்தகைய பாடங்களில் தாய்மொழியில் திறன்மிக்க புலம்பெயர்ந்த குழந்தைகள் குறிப்பிடத்தக்க வகையில் வெற்றி பெற்றூள்ளனர்” எனக் கூறுகிறது. (இசுகட்நேப் கன்கேசு (Skutnabb-Kangas T) - 1975, இடோக்கோமா (P.Toukomaa) - 1976)

உகாண்டாவில் தொடக்கத்தில் முதல் மூன்று ஆண்டுகள் தாய்மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் எனவும் ஆங்கிலம் ஒரு மொழிப் பாடமாக மட்டுமே இருக்க வேண்டும் எனவும் முடிவெடுத்து, செயல்படுத்தப்பட்ட இருமொழிக் கல்விமுறை வெற்றியை அளித்துள்ளது என ஆய்வு மதிப்பீடு கூறுகிறது. (கவுமா-2009)

நியூசிலாந்தில் இருமொழிக் கல்வி குறித்த எசுமே அவர்களின் அறிக்கை (பக்: 35), “மோரி (Maori) மொழி வழியிலான புதிதாகத் தொடங்கப்பட்ட மோரி தொடக்கப் பள்ளிகள் (குரா காபாபா) குறித்த தொடக்கநிலை மதிப்பீடுகள், குழந்தைகளின் கல்விமேம்பாடு போன்றவை மைய நீரோட்ட உயர்குடிக் குழந்தையோடு ஒப்பிடத்தக்க வண்ணம் உள்ளது. அதே சமயம் இரு மொழித்தேர்ச்சி எனும் கூடுதல் நன்மையையும் வழங்குகிறது” என்கிறது.

மலேசியாவில் தேசியப்பள்ளிகளில் கணிதத்தையும், அறிவியலையும் கற்பிக்க மலேசிய மொழியையும் (பாசா), உள்ளூர்ப் பள்ளிகளில் தமிழையும், சீன மொழியையும் பயன்படுத்துவது என 2009ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது. தமிழர்களுக்கு அறிவியலை அவர்களது தாய்மொழியான தமிழில் கற்பிப்பது சிறந்தது என மலேசிய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் மலேசியா அரசு, ஆங்கிலத்தின் செல்வாக்கையையும், அதன் தேவையையும் குறைத்து, அந்நாட்டின் ஒரே அலுவல் மொழியாகவும், பொதுப்பள்ளிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் ஒரே பயிற்சி மொழியாகவும் மலேசிய மொழியைக்கொண்டு வந்துள்ளது. (எசு. கவுர்கில், 135-142) (@அமோன் 2004)

இதுபோன்ற ஆய்வு முடிவுகளால் ஆங்கிலம் ஒரு சமூக மொழியாக ஆட்சிமொழியாக, அறிவியல் மொழியாக என அனைத்துமாக உள்ள அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து போன்ற நாடுகளில்கூட மிகப்பெரிய அளவில் ஆங்கிலவழிக்கல்வி இல்லாத பள்ளிகள் உருவாகி இருக்கின்றன. அவை தொடர்ந்து அதிகரித்தும் வருகின்றன. (11). ஆகவே தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வியை தொடக்கக்கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை கொண்டுவர வேண்டும். அதற்கு முதலில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கே 80 விழுக்காடு அரசு வேலைகளும் தனியார் நிறுவன வேலைகளும் வழங்கப்படும் என்ற சட்டத்தைக் கொண்டுவந்து செயல்படுத்த வேண்டும்.

மொழிகளின் ஆற்றல்:

“பேசுபவரது எண்ணங்களை வெளிப்படுத்தக்கூடிய வல்லமை என்பதில் எல்லா மனித மொழிகளும் இணையானவைதான். அதேபோல் தேவைப்படும் சொற்களையும் கட்டமைப்புகளையும் வளர்த்துக்கொள்ளும் ஆற்றல் எல்லா மொழிகளுக்கும் உண்டு” (அலெக்சாந்தர், 2003) @ (பென்சான், 2009). வாக்கிய அமைப்பு உருவாக்கத்தில் எந்தவொரு மொழியையும் செழுமைமிக்கது அல்லது ஏழ்மையானது என முத்திரை குத்த முடியாது. இலக்கணப் புத்தகமே இல்லாத ஒருமொழி கூட, எழுதப்பட்ட இலக்கணப் புத்தகங்களைக் கொண்ட மொழிகளைப்போலவே இலக்கணச்செழுமை மிக்கதாகும். ஆகவே வாக்கியக் கட்டமைப்பு என்ற அடிப்படையில் எல்லா மொழிகளும் இணையானவைதான்.

சொல்வளம்தான் ஒரு மொழியின் செழுமை அல்லது ஏழ்மை பற்றிய தவறான கருத்துக்குக் காரணம். அறிவியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் நமது மொழிகள் போதுமான சொற்களைக் கொண்டிருக்கவில்லை என்பது உண்மைதான். வேர்ச்சொற்கள், இணைப்புச் சொற்கள் போன்ற அடிப்படைக் கூறுகளில் இருந்துதான் ஒரு மொழியின் அனைத்துச்சொற்களும் கட்டமைக்கப்படுகின்றன. இத்தகைய அடிப்படைக் கூறுகளில் மொழிகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இல்லை. ஆகவே அனைத்து மொழிகளுமே போதுமான அறிவியல் தொழில்நுட்பச் சொற்களை கடன் வாங்கவோ, கட்டமைத்துக் கொள்ளவோ முடியும். ஆங்கில மொழியின் பெரும்பாலான அறிவியல் தொழில்நுட்பச் சொற்கள் கிரேக்க, இலத்தின் மொழிகளில் இருந்து கடன் பெற்றவைதான் (12). எனவே நமது மொழிகளில் போதிய அளவு சொற்கள் இல்லை என்பது ஒரு பிரச்சினை அல்ல. அவற்றைத் தேவையான அளவு கடன் வாங்கவோ, உருவாக்கிக் கொள்ளவோ முடியும். பேரளவான வேர்ச்சொற்களையும், துணச் சொற்களையும் கொண்ட தமிழ் மொழியில் இது மிகமிக எளிதானது.

இறுதியாக: தமிழ்மொழி என்பது 5000 ஆண்டுகால வரலாறு கொண்ட ஒரு தொன்மையான மொழி. 5000 ஆண்டுகளுக்கு முன்பே, முதல் இரும்பு நாகரிகத்தைக் கொண்ட ஒரு சமூகத்தின் மொழி. 2000 ஆண்டுகளுக்கு முன்பே 1000 ஆண்டுகால வளர்ச்சிபெற்ற நகர அரசுகளைக் கொண்ட ஒரு மொழி. 2000 ஆண்டுகளுக்கு முன்பே உலகின் முன்னணிச் சமூகமாக இருந்த தமிழ்ச் சமூகத்தின் மொழி. தமிழ்மொழி என்பது 2000 ஆண்டுகளுக்கு முன்பே சங்க இலக்கியம் என்ற ஒரு செவ்வியல் இலக்கியத்தைக் கொண்ட ஒரு செவ்வியல் மொழி. பல்லாயிரக் கணக்கான தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்பச் சொற்களையும், நூற்றுக்கணக்கன தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப நூல்களையும் கொண்டிருந்த மொழி. தமிழ்மொழி 2500 ஆண்டுகாலத் தொடர்ச்சியும், பேரளவான இலக்கியங்களையும் கொண்ட ஒரு சிறப்பு மிக்க செவ்வியல் மொழி. தமிழ்மொழி என்பது அறம் சார்ந்த சிந்தனைகளையும், மனிதம் சார்ந்த விழுமியங்களையும் கொண்ட ஒரு உலகப் புகழ் பெற்ற மொழி.

தமிழ்மொழி உலக மொழியியல் அறிஞர்கள் அனைவராலும் தொன்மையும் செவ்வியல் தன்மையும் கொண்ட ஒரு சிறந்த மொழி என ஏற்று அங்கீகரிக்கப்பட்ட மொழி. தமிழ் மொழி பேரளவான இலக்கியச் செல்வங்களைக் கொண்ட ஒரு மிகப்பெரிய கருவூலம். ஆகவே தமிழ்வழிக் கல்வி என்பது தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு கிடைத்த ஒரு மிகப் பெரிய வரம். ஒரு மிகப்பெரிய செல்வம். ஆகவே தாய்மொழிக் கல்வியின் தேவையை, ஈடு இணையற்ற தமிழ் மொழியின் சிறப்பை உணர்ந்து தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தொடக்கக் கல்வி முதல் பல்கலைக் கல்வி வரை தாய்மொழி மூலம் கற்க வழிவகை செய்ய வேண்டும். அதற்கு முதலில் தமிழ்நாட்டு அரசின் பணிகளிலும், தனியார் நிறுவனங்களின் பணிகளிலும் 80 விழுக்காட்டுப் பணிகளை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வழங்கும் சட்டத்தை முதலில் இயற்றி அதைக் கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் மட்டுமே தமிழ்வழிக் கல்வியை பரவலாக்க முடியும்.

பார்வை:

1. “ “ “ புத்தகம்-1, பக்: 414-415.

2, 3. ஆங்கில மாயை, நலங்கிள்ளி, பன்மை வெளி, சனவரி-2020, பக்: 116-123.

4. ஆங்கிலமொழி சார்ந்த இணையதளங்கள்.

5. இசுலாம், அரேபிய மொழி சார்ந்த இணைய தளங்கள்.

6. இசுபெயின், இசுபானிய, சீன மொழி சார்ந்த இணையதளங்கள்.

7. நாம் ஏன் தமிழ் காக்கவேண்டும், முனைவர் சேதுமணிமணியன், பக்: 9-14.

8. தமிழ் பயிற்று மொழியானால்..., நா. வானமாமலை, உங்கள் நூலகம் செப்டம்பர் – 2017.

9. மொழிச்சிக்கல்கள் குறித்த சர்வதேசக் கருத்துகள்: கல்வி, அறிவு, அறிவியல், ஆங்கிலமொழி பயில்வதற்கு தாய்மொழியே திறவுகோல், ஜோகாசிங், தமிழில் கண.குறிஞ்சி, புதுமலர் பதிப்பகம், பக்: 12-17

10. “ “ “ பக்: 18-21

11. “ “ “ பக்: 12-14 & 21-23

12. “ “ “ பக்: 24-27

- கணியன் பாலன்

Pin It