பதப்படுத்தப்பட்ட உணவுகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள், மாரடைப்பு, பக்கவாதத்தை அதிகரிக்கச் செய்கின்றன என்று சமீபத்தில் நடந்த இரண்டு ஆய்வுகள் கூறுகின்றன. உற்பத்தியின்போது பல்வேறு பதப்படுத்தல் செயல்முறைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த உணவுகளில் (Ultra Processed Food UPF) பதனப் பொருட்கள் சேர்க்கைகளுடன் உப்பு, சர்க்கரை ஆகியவை அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன.

உலகளவில் பதப்படுத்தப்பட்ட தானியங்கள், புரதக் கட்டிகள், இனிப்பூட்டப்பட்ட பானங்கள், தயார் உணவுகள், விரைவு உணவுகளின் நுகர்வு நாள்தோறும் அதிகரிக்கிறது. இங்கிலாந்து, அமெரிக்காவில் இவ்வகை உணவுகள் அங்கு வாழும் மக்களின் அன்றாட உணவில் 50 சதவிகிதமாகவும், இளைஞர்கள், ஏழைகளின் உணவில் இது 80 சதவிகிதமாகவும் உள்ளது.pizza 377நோய் தரும் உணவுகள்

உப்பு, சர்க்கரை, கொழுப்பு கூடுதலாக இருக்கும் இந்த உணவுகளை அதிகமாகப் பயன்படுத்தும் பெண்களில் உயர் இரத்த அழுத்தம் மற்றவர்களை விட 39% அதிகமாக உள்ளது என்று 10,000 பெண்களிடம் பதினைந்து ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன. உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள், புற தமனி நோய், பெருநாடியில் பலவீனமாக இரத்தக்குழாய் இருக்கும் இடத்தில் குமிழ் அல்லது பலூன் போல ஏற்படும் வீக்க நோய் (aortic aneurysms), சிறுநீரக நோய், வாஸ்குலர் டிமென்சியாவை அதிகரிக்கிறது என்று முதலாய்வு கூறுகிறது.

இரண்டாவது ஆய்வு 3.25 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆண் பெண்களிடம் மெட்டா பகுப்பாய்வு (gold-standard meta-analysis) அமைப்பால் நடத்தப்பட்டது. இவ்வகை உணவுகளை அதிகம் உண்பவர்களிடம் மாரடைப்பு, பக்கவாதம், மார்பு நெறிப்பு அல்லது நெஞ்சின் நடுப்பகுதியில் மார்பெலும்பின் பிற்பகுதியில் அழுத்துவது அல்லது பிசைவது போன்ற உணர்வு (angina) வர வாய்ப்புகள் அதிகம் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

அதிக கலோரிகள் அடங்கியிருக்கும் இவற்றை தினம்தோறும் 10% கூடுதலாக எடுத்துக் கொள்பவர்களுக்கு இதயக் கோளாறுகள் 6% அதிகமாக ஏற்படுகிறது. இவற்றை 15% குறைவாக எடுத்துக் கொள்பவர்களிடம் இந்தப் பாதிப்பு குறைவாகக் காணப்படுகிறது என்று சீனா ஜியன் (Xi’an) ஃபோர்த் ராணுவ மருத்துவ பல்கலைக்கழகம் தலைமையில் நடந்த ஆய்வு கூறுகிறது.

சமீபத்தில் ஆம்ஸ்டர்டாமில் நடந்த ஆயிரக்கணக்கான உலகின் முன்னணி இதய மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் கலந்து கொண்ட ஐரோப்பிய இதயவியல் மாநாட்டில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இவ்வகை உணவுகளில் பொதுவாக நார்ச்சத்து குறைவாக உள்ளது. புதிய பழங்கள், பச்சைக் காய்கறிகள், பாலாடைக்கட்டி, வீட்டில் தயாரிக்கப்படும் ரொட்டி, புதிதாக, குறைவாகப் பதப்படுத்தப்பட்டவற்றில் இருப்பதை விட இந்த உணவுகளில் சத்துகள் குறைவாகவே உள்ளன.

உடற்பருமன், டைப் 2 வகை சர்க்கரை நோய், புற்றுநோய் - இந்த நோய்களுக்கும் இத்தகைய உணவுகளுக்கும் இடையில் இருக்கும் நெருங்கிய தொடர்பை முந்தைய ஆய்வுகள் எடுத்துக் கூறின. “ பெரும்பாலானோர் கடையில் வாங்கும் சாண்ட்விட்ச்சுகள், சூப்புகள், கொழுப்பு குறைந்த பாலாடைக் கட்டி போன்றவை உடல் நலத்திற்கு உகந்தவை என்று கருதுகின்றனர். ஆண்களை விட பெண்கள் இவற்றை அதிகம் உண்கின்றனர்” என்று முதல் ஆய்வின் ஆய்வாளர்களில் ஒருவரும் சிட்னி பல்கலைக்கழக ஆய்வாளருமான அனஷ்ரியா பன்ட் (Anushriya Pant) கூறுகிறார்.

நாளைக்கான பிரச்சனைகளை இன்று சேகரிக்கும் உணவுகள்

“சூழலுக்கு நட்புடைய, ஆரோக்கியமான, சத்துள்ள, உடல் எடையைக் குறைக்க உதவும் சுகாதாரமான உணவுகள் என்று விற்கப்படும் பலவும் உண்மையில் பதப்படுத்தப்பட்ட உணவுகளே. இவை இரைப்பையில் எரிச்சலை ஏற்படுத்துகின்றன. பசி எடுக்கும் ஒழுங்குமுறையில் குறுக்கிடுகின்றன. ஹார்மோன்களின் அளவை மாற்றுகின்றன. புகை பிடிப்பதைப் போலவே எண்ணற்ற உடல் நலக்கேடுகளை ஏற்படுத்துகின்றன. இவை உள்ள உணவுப் பொட்டலங்கள் மீது சிலி மற்றும் மெக்சிகோவில் உள்ளது போல கறுப்பு நிற எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட வேண்டும்” என்று உலகின் தலைசிறந்த உணவு நிபுணர்களில் ஒருவரும், Ultra Processed People என்ற பிரபல நூலின் ஆசிரியருமான டாக்டர் க்றிஸ் வான் டலக்கென்ன் (Dr Chris van Tulleken ) கூறுகிறார்.

ஆரோக்கியமற்ற உணவுகளின் சந்தை விற்பனையில் இங்கிலாந்து கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. “இவற்றால் உண்டாகும் பிரச்சனைகளுக்கு உயர்ந்த அளவு உப்பு, சர்க்கரை, கொழுப்பு மட்டும் காரணமில்லை. இவை நம் உணவில் 55% இடம்பெறுகின்றன. இது ஒரு எச்சரிக்கைக்கான அழைப்பு. தீமை தரும் உணவுகளின் உள்ளார்ந்த செயல்முறைகள் பற்றி ஆராயப்பட வேண்டும். இவை நாளைக்கான பிரச்சனைகளை இன்று சேகரிக்கின்றன” என்று இங்கிலாந்து உணவுப் பிரிவின் முன்னாள் ஆய்வாளர் ஹென்றி டிம்பிள்பி (Henry Dimbleby) கூறுகிறார்.

”இதய நோய்களுக்கும் இந்த உணவுகளுக்கும் இடையில் இருக்கும் தொடர்பு, இவற்றில் செயற்கையாக சேர்க்கப்படும் பொருட்கள், உப்பு, சர்க்கரை, கொழுப்புகளின் பங்கு பற்றி ஆராயப்பட வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள உலகம் எப்போதும் ஆரோக்கியமான உணவுகளை சுலபமாகப் பெற வழி செய்வதில்லை. மாறாக உடல் நலத்திற்கு உதவாதவற்றிற்கே அதிக கவர்ச்சி ஏற்படுத்தப்படுகிறது. நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ ஒரு சிறந்த வழியை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்” என்று பிரிட்டிஷ் இதய நல அறக்கட்டளை அமைப்பின் இணை மருத்துவ இயக்குனர் டாக்டர் சான்யா பாபு நாராயன் (Dr Sonya Babu-Narayan) கூறுகிறார்.

நோயற்ற வாழ்வு வாழ ஆரோக்கியமான உணவுகளே சிறந்தவை என்பதை இந்த ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

மேற்கோள்: https://www.theguardian.com/science/2023/aug/27/ultra-processed-food-raises-risk-of-heart-attack-and-stroke-two-studies-show?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It