கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களில் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் எவ்வாறெல்லாம் பிணந்தின்னி விளம்பர அரசியலை அரங்கேற்றம் செய்தார்கள் என்பதை நாம் அனைவரும் கண்டோம். அதிலும் தமிழக பாஜக அண்ணாமலை பேசிய பேச்சுக்கள், செய்த விளம்பரங்கள், அடித்த கூத்துகளுக்கெல்லாம் அளவே இல்லை என்றுதான் கூற வேண்டும். துளியும் சகிக்க முடியவில்லை. இப்படியான சூழலில் விசிக-வின் தலைவர் தொல். திருமா அவர்கள் எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், பாதிக்கப்பட்டவர் ஒவ்வொருவர் வீட்டுக்கும் சென்று அவர்களின் மன வேதனைகளை, கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அவ்வப்போதே அவர்களுக்கான உதவித் தொகையை அவர்களின் கைகளிலேயே கொடுத்து விட்டார். அண்ணாமலை போல் "ஆஹா நான் அமித் ஷாவிடம் பேசினேன், அமித் ஷாவுக்கு கடிதம் எழுதுவேன், அனைவருக்கும் ஒரு லட்சம் கொடுப்போம்" என்றெல்லாம் வாயில் வடை சுட்டு பிணந்தின்னி விளம்பர அரசியல் செய்யவில்லை.thiruma agitation against liquorமேலும், உடனேயே 24ஆம் தேதியன்று முழு மதுவிலக்கு கோரிய ஆர்ப்பாட்டத்தையும் அறிவித்து விட்டார். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு என்ற செய்தியே கடைசி வரை இருந்தது ஆனால், ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. விசிக கட்சிக்கு சாமரம் வீசுகிறேன் என்று தோழர்கள் நினைக்க வேண்டாம். விசிக நடத்திய ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் தோழர் திரு. மு.வீரபாண்டியன் அவர்கள் ஆற்றிய தெளிவான உரையானது, இவ்வரசியல் சூழலில் பல பொய் பிரச்சாரங்களுக்கும், வெறுப்பு அரசியலுக்கும், குழப்பங்களுக்கும் மிகச் சிறப்பான பதிலடியாக அமைத்திருந்தது. எனவே அவரின் உரையில் இருந்த கருத்துக்களை இங்கே பதிவு செய்கிறேன் (disclaimer - தோழர் பேசிய கருத்துக்களை அப்படியே தொகுத்திருக்கிறேன், இவை என்னுடைய கருத்துக்கள் அல்ல. மேலும் கோர்வையாக எழுத மிகச் சில சொற்களை fillers ஆக உபயோகப்படுத்த வேண்டியிருந்தது, மற்றபடி அனைத்தும் அவருடைய உரையே, ஒன்றிரெண்டு கருத்துக்கள் விடுபட்டும் போயிருக்கலாம்)

தோழரின் உரை:

மூன்று முக்கிய விடயங்களை அவருடைய உரை address செய்தது

1. கள்ளக்குறிச்சியில் மாண்டு போனவர்கள் குடும்பத்துக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகையை இழிவுபடுத்தும் விமர்சனத்துக்குப் பதிலடி

2. திமுக கூட்டணியில் இருந்தாலும், பிரச்சனை வந்தால் முற்போக்கு சக்திகளின் நிலைப்பாடு என்ன?

3. விஷச் சாராயம் மற்றும் குற்றச் சம்பவங்களின் மூலம் - Vohra Committee Report

இவற்றினூடாக பாஜகாவை வெளுத்தது!!

1. கள்ளக்குறிச்சியில் மாண்டு போனவர்கள் குடும்பத்துக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகையை இழிவுபடுத்தும் விமர்சனத்துக்குப் பதிலடி

"குடிச்சு சாகறவனுக்கு பத்து லட்சமா" என்று சீமான் அறிக்கை வெளியிட்ட உடனே, அதைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த், டிடிவி தினகரன், இன்னும் பல அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத் துறையினர் மற்றும் சமூக தளங்கள் அனைத்தும் ஒரே குரலாக சீமான் கூறியதை அப்படியே பறைசாற்றின. குடித்து மடிபவனுக்கு எதற்காக எங்களுடைய வரிப்பணத்தைக் கொடுக்கிறாய் என்று கூப்பாடு போட்டனர். உயர்நீதிமன்ற நீதிபதி வரை இந்தக் காழ்ப்பை மறுதலிக்கத் தவறவில்லை!!

இக்கூச்சலுக்கு மிகச் சரியாக பதிலடி கொடுத்துள்ளார் தோழர் அவர்கள். "இறந்தவர்களை குடிகாரர்களாகப் பார்ப்பது பெரும் பிழை. நாங்கள் அவர்களை தொழிலாளர்கள் என்று பார்க்கிறோம், அவர்கள் செய்யும் வேலையை வேறு எவரேனும் செய்ய முடியுமா? இந்தப் பணம் என்ன முதலாளிகள் பணமா? அவன் பணம், அவன் தான் wealth creater. உழைக்கும் மக்கள் தான் செல்வ வளங்களை உருவாக்குகிறார்கள் அன்றி கார்ப்பரேட் பெரும் முதலாளிகள் அல்ல. எனவே அது அவன் பணம். உழைக்கும் மக்கள்தான் அரசியல் செய்வதற்கு அதிகாரத்தையும் கொடுக்கிறார்கள். அவன் செய்யும் தொழிலில் தவறினால் அவன் தான் பாதிக்கப்படுகிறானே தவிர, அவனால் மற்றவர்கள் பாதிக்கப்படுவதில்லை. பத்து லட்சம் பெரிய பணம் என்று பேசுகிறீர்களே, கள்ள மார்க்கெட்டில் பட்டியல் சாதி மக்கள் இருக்கிறார்களா? கள்ள பாஸ்போர்ட், கருப்புப் பணம், கலப்படம் என்று எதிலாவது அவர்களை சொல்ல முடியுமா? நாட்டுக்கு தீங்கு செய்த ஒரு பட்டியல் சாதி மக்களைக் காட்ட முடியுமா? உழைப்பைத் தவிர அவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது, அவர்கள்தான் தேசத்தின் முதுகெலும்பு. நிவாரணத் தொகையை பெரிதாகப் பேசும் உங்களுடைய பார்வை குறுகியதாக இருக்கிறது" - இவ்வாறு பதிலடி கொடுத்திருக்கிறார்.
https://tamil.abplive.com/news/madurai/paying-10-lakh-rupees-in-the-case-of-the-death-of-a-scammer-is-a-bad-precedent-in-tamil-land-high-court-judge-s-speech-189799

2. திமுக கூட்டணியில் இருந்தாலும், பிரச்சனை வந்தால் முற்போக்கு சக்திகளின் நிலைப்பாடு என்ன?

"திமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும், ஆட்சியில் தவறு நடந்தால் அதைக் கண்டிக்கத் தயங்காத கட்சிகள் இந்த மேடையில் இருக்கும் கட்சிகள், அதற்கு நாங்கள் கடமைப் பட்டிருக்கிறோம். ஆளும் அரசா அல்லது ஊழியர்கள் தொழிலாளர்களா என்ற நிலை வந்தால் கண்களை மூடிக்கொண்டு கட்டாயம் உழைக்கும் தொழிலாளர்கள் பக்கம்தான் நிற்போம். உங்கள் குரலில் உங்கள் சிந்தனையில் இந்த அரசை எங்களால் எதிர்க்க முடியாது. இந்த அரசு உழைக்கும் மக்களுக்கு எதிராகச் செல்லுமானால் மேடையில் இருப்பவர்கள் தான் முதலில் எதிர்ப்போம். இதுதான் ஜனநாயகம். இதில் எதிர்ப்பு இருக்கும், பகை இருக்காது. எங்களுக்கு அரசின் மீது இருப்பது பகை முரண் அல்ல. அதிமுக, பாஜக போன்ற கட்சிகளுக்கு திமுக மீதிருப்பது பகை முரண், வெறுப்பு அரசியல். நாங்கள் செய்வது வெறுப்பு அரசியல் அல்ல. திமுக மீது எங்களுக்கு காழ்ப்போ, கசப்போ இல்லை. முதல்வர் தவறு செய்திருந்தால், எவ்வித நடவடிக்கையும் எடுத்திருக்காவிட்டால் நாங்கள் நிச்சயம் கண்டித்திருப்போம். தமிழக அரசு கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு முழு பொறுப்பேற்றிருக்கிறது, நிர்வாகப் பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உண்மையில் பாஜக தான் மக்களுக்குப் பகையான இயக்கம். பாஜகவுக்கு எதிரான போரில் திமுகவை ஆதரிக்கிறோம், அதற்காக திமுகவின் தவறுகளை ஆதரிக்கிறோம் என்று அர்த்தம் அல்ல. ஆளும் அரசா அல்லது உழைக்கும் தொழிலாளர்கள் பிரச்சனையா என்ற நிலை வந்தால் கண்களை மூடிக்கொண்டு தொழிலாளர் பக்கம்தான் நிற்போம். இதுபற்றி கலைஞர் நன்கு புரிந்திருந்தார் - உங்களைத் தவிர யார் எங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுவார்கள், உழைக்கும் மக்களுக்காக கேள்வி கேட்பார்கள் என்று. இப்போது முதல்வரும் புரிந்து கொள்வார், உணர்வார். அரசை ஆதரிப்பதென்றால் ஆதரிப்போம். எதிர்ப்பதென்றால் பிரகடனப்படுத்தி பகிரங்கமாக எதிர்ப்போம்,. திமுக மீது எங்களுக்கு தனிப்பட்ட, காழ்ப்போ கசப்போ கிடையாது என்று நன்கு உணர்ந்தவர் முதல்வர். எப்போதும் நிறைவாக வெல்லப் போவது கொள்கைதான், அதுதான் சமத்துவக் கொள்கை, உழைப்பாளி மக்களின் கொள்கை!!"veerapandian cpi 5003. விஷ சாராயம் மற்றும் குற்றச் சம்பவங்களின் மூலம் - Vohra Committee Report

"காவல்துறை, ஆட்சியர் மற்றும் சமூக விரோதிகள் அனைத்து குற்றச் சம்பவங்களின் பின்னணியிலும் இருக்கின்றனர். நாடாளுமன்ற ஜனநாயகத்தை சிதைப்பது யார் என்பது பற்றிய விரிவான அறிக்கையை vohra கமிட்டி தாக்கல் செய்துள்ளது. குண்டர்கள் எவ்வாறு செயல்படுகின்றனர், அதிகார வர்க்கம் ஏன் குண்டர்கள் பக்கம் சாய்கிறது, தவறான அரசியல்வாதிகள், தவறான அதிகாரிகள், மற்றும் சமூக விரோதிகள் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுகின்றன என்பது பற்றி அந்த அறிக்கை தெளிவாகக் குறிப்பிடுகிறது. அந்த அறிக்கையில் 'சமூக விரோதி' என்ற பட்டியலில் முதலில் இடம்பெற்றிருப்பது பாஜக தான். எனவே சமூகக் குற்றங்கள் பற்றிப் பேச பாஜகவுக்கு தார்மீக உரிமை இல்லை, அது எங்களுக்குத் தான் இருக்கிறது. கல்வி எவ்வாறு மது போதைப் பழக்கங்களுக்கும், சமூக சீர்கேடுகளுக்குத் தீர்வாக அமையும் என்பதை அம்பேத்கர் அன்றைக்கே கூறியிருக்கிறார். உலகம் முழுவதும் மது விற்பனை செய்யப்படுகிறது. மனித மனங்களை கலாச்சாரப்படுத்தாமல், போதனைகள் மற்றும் சட்டங்கள் வேலை செய்யாது. மனித மனம் மேம்படும் பொழுது, அனைத்து சமூக அவலங்களும் உலர்ந்து உதிரும். வெற்றி நமக்கே!!" https://en.wikipedia.org/wiki/Vohra_Report

நடிகர் விஜய் மற்றும் சீமான் அரசியல் பரிதாபங்கள்:

கள்ளக்குறிச்சி மரண விசாரிப்பில் நடிகர் விஜய் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்வையிட்டபோது, அவருடைய ரசிகர் அங்கேயே selfie எடுக்கிறார். இப்பேற்பட்ட திரைக்கவர்ச்சி வெறிகொண்ட ரசிகர் கூட்டத்தை வைத்துக் கொண்டுதான் விஜய் அரசியலில் குதிக்கப் போகின்றாராம். நடிகர் விஜய் அரசியலில் குதிப்பதற்கான காரணத்தைப் பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அதாவது என்னவென்றால், அண்ணாருடைய படங்கள் வெளியிடப்படுவதற்கு தொடர்ந்து சில பல ஆண்டுகளாக சிக்கல் ஏற்படுத்துகின்றார்களாம் ஆளும்கட்சியினர். அதனால் இவரே முதலமைச்சராகி, இவரே இவருடைய படங்களை தங்கு தடையின்றி ரிலீஸ் செய்து கொள்ளவே அரசியலில் குதித்திருக்கிறாராம்!! இதை விட நம் மக்களையும், சமூகத்தையும் வேறு யாரும் கேவலப்படுத்த முடியாது.

இப்பேற்பட்ட 'கொள்கை மிக்க' அரசியல்வியாதி விஜய்க்கு மூன்று நாட்களுக்கு முன்னாள் பிறந்தநாள் வந்தது. அதற்கு எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு (முக்கிய அரசியல் தலைவர்கள் உட்பட) வாழ்த்து தெரிவிக்கின்றனர். அனைத்திற்கும் முத்தாய்ப்பாக இருந்தது சீமான் அறிக்கைதான். இந்த அளவுக்கு சீமானால் ஒருவரிடம் இறங்கிப் போக முடியுமா என்று வியக்கும் அளவுக்கு இருந்தது அவருடைய பிறந்தநாள் அறிக்கை. தமிழக அரசியல் வரலாற்றிலேயே இந்த அளவுக்கு ஒரு கேவலம் அரங்கேறியிருக்கிறதா என்று எண்ண வேண்டியிருக்கிறது.
https://www.maalaimalar.com/news/state/heartfelt-happy-birthday-to-anbuthalapathy-vijay-seeman-724896?infinitescroll=1

தேர்தல் முடிவுகள் வந்தவுடன் பாஜக அண்ணாமலை சீமான் மற்றும் திருமா அவர்களுக்கு விழுந்து விழுந்து வாழ்த்து மழை பொழிவதும், சீமான் விஜய்க்கு துதிபாடுவதும், விஜய் "மூன்றாம் முறையாகப் பிரதமராக பதவியேற்கும் மோதிக்கு வாழ்த்துக்கள்" என்று bigbossக்கு வாழ்த்து கூறுவதும், நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்ற திமுகவுக்கு வாழ்த்து கூறுவதை தெளிவாகத் தவிர்த்து மாநிலக் கட்சி அங்கீகாரம் பெற்ற விசிகவுக்கும் சீமானுக்கும் வாழ்த்து கூறுவதும், மிகவும் அரிய காட்சிகளாக அரங்கேறின. இதுவரை NGO ஸ்டைலில் நலத்திட்ட உதவிகள் செய்து வந்த இயக்கம், விஜய் பிறந்தநாளில் பாண்டிச்சேரியில், தூய்மைப் பணியாளர்களை ஒன்றுகூட்டி அவர்களுக்கு விருந்து மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கியுள்ளனர். இங்கே தான் ஆபத்து துவங்குகிறது. விஜய் இயக்கத்தில் முன்னணியில் இருக்கும் அந்த புஸ்ஸி ஆனந்து மற்றும் விஜயை பின்னணியில் இயக்கும் அவருடைய strategists மற்றும் think tanks மிகவும் தெளிவாக/ஆபத்தானவர்களாக இருப்பார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இனி இது எங்கெல்லாம் போய் முடியப் போகிறது என்பதை அவரவர் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன். https://tamil.news18.com/puducherry/actor-vijays-birthday-celebration-food-to-cleaners-tvk-actor-vijay-pst-gwi-1499811.html

- தேன்மொழி

Pin It