முன்பெல்லாம் வீதிக்கு ஒரு குப்பைத்தொட்டி இருந்தது. சாலையில் ஆங்காங்கே இடத்துக்கு தகுந்தாற் போல குப்பைத் தொட்டிகள் வைத்திருந்தார்கள். எந்தப் புண்ணியவான் போட்ட திட்டமோ... ஊருக்குள் இருக்கும்... சாலையில் இருக்கும்... வீதியில் இருக்கும் குப்பைத் தொட்டிகளையெல்லாம் அகற்றி விட்டு அவரவர் குப்பையை தரம் வாரியாக பிரித்து வீட்டிலேயே வைத்திருங்கள்... நாங்கள் வீட்டுக்கு வந்து எடுத்து கொள்கிறோம் என்றார்கள். அட நல்லாருக்கே என்று தான் முதலில் தோன்றியது. ஆனால் தினசரி சிக்கலில் அது சரியான திட்டம் என்று தோன்றவில்லை.

ஏன் என்றால்...

குப்பை வண்டி தினமும் வருவதில்லை. ரெண்டு நாள் குப்பையில் வீட்டு வாசல் திண்டாடுகிறது. அப்படியே வரும் போது அந்த வீட்டில் உள்ளவர்கள் வேலைக்கு போகாமல் வீட்டில் இருக்க வேண்டும். அது முடியுமா. வீட்டில் ஆளுள்ள குப்பைகள் வண்டி ஏறி விடும். ஆளில்லாத/ வேலைக்கு போகும் வீட்டில் குப்பைகள் என்னாகும். சரி எடுத்துக் கொள்ளட்டும் என்று வாசலில் வைத்து சென்றால்... வீதி நாய்கள் விடுமா. கிடைச்சுதுடா லக்கி ப்ரைஸ்... என்று பிராண்டி எடுத்து சிதற விட்டு வாசலில் ஒரு வண்ண கோலத்தையே படைத்து விடுகின்றன. வீதி நாய்களின் எண்ணிக்கை பயங்கரமாக பெருகி விட்டதை இரவு 8 மணிக்கு மேல் வீதிக்குள் நுழைகிறவர்களால் உடனடியாக உணர்ந்து கொள்ள முடியும். ராத்திரி ஆகி விட்டாலே... எல்லாருமே எதிரிகள் தான் நாய்களுக்கு. குரைத்து எகிறி கொண்டு வருகிறது.garbage in tamilnaduசரி... குப்பைகளுக்கு வருகிறேன்.

குப்பைத் தொட்டிகள் இருந்த சமயத்தில்... குப்பைத் தொட்டி நிறைந்து அதை சுற்றி குப்பைகள் கிடக்கும். ஒத்துக் கொள்கிறேன். ஆனால்... அதனால் பெரிதாக எந்த பிரச்சனையும் வந்ததாக தெரியவில்லை. அப்படி ஓர் ஒழுங்கை மீறுவது...அது மனித வாழ்வின் அரைகுறை மிச்சம் என்று புரிந்து கொண்டாலும்... குப்பைகள் குப்பைத் தொட்டியை சுற்றி தான் கிடக்கும். மீறினால்... ஒன்றிரண்டு கொத்துகள் கொஞ்சம் தள்ளி கிடக்கலாம். (இதில் மாடுகளின் லீலைகள் தனியாக அத்தியாயம் சமைக்கும்.) தினம் தினம் வரும் குப்பை வண்டிகள் தொட்டிகளை கவிழ்த்து எடுத்துக்கொண்டு...மேலும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் குப்பைகளையும் சேகரித்து எடுத்து சென்று விடும். இதில் பெரிதாக சிரமம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் அதை விடுத்து.... வீட்டுக்கே வண்டி வரும் சமாச்சாரத்தில்... ஒரு பக்கம் சரியாக நடந்து கொண்டிருந்தாலும்... அதன் பை ப்ராடக்ட் மாதிரி நடக்கும் குறைகளும் தாறுமாறு.

அதாவது ஆவது என்னவென்றால் பகலில் குப்பை வண்டியில் குப்பைகளை சேர்க்க முடியாதவர்கள்... இரவு நேரங்களில் பக்கத்தில் இருக்கும் சின்ன காடுகளில்... மரங்கள் இருக்கும் இடங்களில்.. கொஞ்சம் இருள் சூழ்ந்திருக்கும் சாலை ஓரங்களில் என குப்பைகளைக் கொண்டு சென்று வீசி விடுகிறார்கள். சிலர் பயந்து பயந்து செய்கிறார்கள். சிலர் பகிரங்கமாக செய்கிறார்கள். சில பதட்டத்தோடு செய்கிறார்கள். சிலர் வேற என்ன பண்ண என்று பதிலியாக செய்கிறார்கள். சரி அவர்களும் எங்கு தான் குப்பைகளை வீசுவார்கள். நன்றாகத்தானே சென்று கொண்டிருந்தது குப்பைத் தொட்டிகள் இருந்த வரை. ஏன் அதை மாற்றி வீட்டுக்கே வந்து எடுத்து கொள்கிறோம் என்று சொல்லி... அதிலும் தெளிவில்லாமல்... போட்டு சொதப்பி... இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால்... அந்த மாதிரி வீசி எறியப்படும் குப்பைகளை மறுநாள் பகலில் தேடித் தேடி வண்டியில் தூக்கி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் குப்பை எடுக்கும் நண்பர்கள். என்ன மாதிரி டிசைன் இது. ஒரு வேலைக்கு ரெண்டு மூணு வேலை என சென்று... பிறகு அந்த ஒரு வேலையின் பயனுக்கே வந்து நிற்பது. வடிவேல் பாணியில் "இது தேவையா..?" என்று கேட்கும் அவர்களின் உடல் மொழியை உணர முடிகிறது.

ஒரு பக்கம் சிரிப்பாக வந்தாலும்.. ஒரு பக்கம் என்ன இது கோமாளி கூத்து என்று தான் தோன்றுகிறது. வீதியில் குப்பைத் தொட்டி வைத்து விட்டால்... அதன் மூலமாக வியாதி பரவும் என்று யோசித்தாலும்... குப்பை வண்டி வரும் வரை வாசலில் இருக்கும் குப்பையால் வியாதி வராதா. எப்படி இருப்பினும் குப்பைத் தொட்டிகள் இருந்தவரை வேலைக்கு செல்லும் வீடுகள் குப்பைகளை இப்படி மறைந்து மறைந்து குண்டு போடுவது போல வீச தேவை இல்லாமல் இருந்தது. ரோட்டோர இருட்டு சந்துகளை தேடி போகாமல் இருக்க செய்திருந்தது. செய்கின்ற வேலையை அப்படி அப்படியே போட்டு விட்டு குப்பை வண்டி சத்தத்துக்கு ஓடோடி சென்று வாசலில் நிற்க வேண்டிய அவசரம் இல்லாமல் இருந்தது. வாசலில் நாய்களின் பசி ஆட்டத்துக்கு பாலிதீன்கள் பிய்ந்து போகாமல் இருந்தது.

இப்போது வீதியில் / ரோட்டில் குப்பைத் தொட்டி இல்லாத காரணத்தால்.. இயல்பான மனிதர்களைக் கூட குப்பையை திருட்டுத்தனமாக வீசும் திருட்டு மனிதர்களாக ஆக்கிவிட்டிருக்கிறது சூழல்.

மாற்று என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். குப்பைத் தொட்டிகளுக்கு முற்றிலுமாக தடை போட்டது சரியான மாற்றாக இருக்க வாய்ப்பில்லை. தினம் ஒரு இருட்டைத் தேடி போவது அத்தனை சுலபமானதும் இல்லை.

- யுத்தன்

Pin It