மதங்களின் பெயரால் கடவுளின் பெயரால் ஜாதிகளின் பெயரால் மனிதனை மனிதன் பிய்த்துப் பிடுங்கித் தின்னும் இந்நாட்டில் ஒரு கவளம் சோற்றுக்கு வழியின்றி எச்சிக்கல்லை நாயோடு சண்டை போட்டுழலும் ஏழைமக்கள் பல்லாயிரக்கணக்காயுள்ள இந்நாட்டில் மத சம்மந்தமான தெய்வ சம்மந்தமான ஆடம்பரத் தொல்லைகள் வாரம் தோறும் மாதம் தோறும் வந்து கொண்டுள்ளன. தீபாவளித் தொல்லை வந்து இன்னுந் தீர்ந்த பாடில்லை. முதலாளிகளின் கோடியாடைகளின்னும் மழுங்கவில்லை. பலகார பக்ஷணங்களின் மப்பு மந்தாரம் இன்னும் வெளியாகவில்லை.
மயிலாடுவதைக் கண்டு கோழியாடிய மாதிரி தாமும் அம்முதலாளிகளைப் பின்பற்றி இமிடேஷன் கொண்டாட்டம் நடத்திய ஏழைகள், கூலிகள், அடிமைகள், பாட்டாளி மக்கள் அதனால் பட்ட கடன் தொல்லைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை.இந்த லக்ஷணத்தில் "கார்த்திகை தீபம்" என்று மற்றொரு தொல்லையும் சமீபத்தில் வந்து விட்டது. தீபாவளித் தொல்லையாவது இருந்த இடத்திலேயே மக்களைப் பிடித்தாட்டி விட்டு போய்விட்டது.
இதுவோ (அண்ணாமலை தீபமோ) கடவுளே ( சிவன்) ஜோதி மயமாகக் கிளம்புகிறாரென்பதாக அண்ணாமலை மண்திடலுச்சியில் பெரிய கொப்பரையில் குடம் குடமான நெய்யும், ஆயிரக்கணக்கான ஜவுளிகளும் போட்டு பயித்தியக்காரத்தனமாகத் தீயை வைத்துவிட்டு அந்த நெருப்பு கொழுந்து விட்டெரிவதைப் பார்த்து அரகரா, சிவசிவா என்று கன்னத்திலும், கண்ணிலும் அடித்துக் கொள்வதும், அதன் சாம்பலையும் குழம்பையும் எடுத்துப் பூசிக் கொள்வதும், போனவர்களெல்லாம் நெய்யையும் ஜவுளிகளையும் குடங்குடமாக மூட்டை மூட்டையாகக் கொப்பரையில் கொட்டி நெருப்புக்கிரையாக்கி திருப்தியடைவதுமான களியாட்டத்தைக் காண 20, 30, 50, 100 செலவழித்துக் “கொண்டு போய் அண்ணாமலையென்னும் மண் திடலையும் அதன் உச்சியிலெரியும் நெருப்பையும் ஜோதிமயமான கடவுளென்று வணங்கி ஆகாய விமான சகாப்தமாகிய இந்த 20ம் நூற்றாண்டிலும் நம்பிக் கொண்டும் திருவண்ணாமலை தீபம், கார்த்திகை தீபம், திருப்பரங்குன்றம் பெரிய கார்த்திகை தீபத்திருவிழா என்றெல்லாம் மக்கள் பாமரத்தன்மையாய் பிதற்றிக் கொண்டும் திரிவார்களானால் இவர்களுக்கு எக்காலந்தான் விமோசனமென்பது விளங்கவில்லை.
மனிதன் முதல் முதலாக நெருப்பைக் கண்டுபிடித்த காலத்தில், அக்காலக் காட்டுமிராண்டிகளுக்கு அது ஒரு தெய்வீகமாகத் தோன்றியிருக்கலாம்.
நெருப்பின் உதவியேயில்லாமல் ஒரு பொத்தானைத் தட்டினால் லக்ஷதீபம் போல் அதுவும் பட்டப்பகல் போலப் பிரகாசிக்கும் விளக்குகளைக் கண்டுபிடித்து அனுபவித்து வரும் விஞ்ஞான காலம் இதுவென்பதைச் சிந்தித்து அத்தகைய காட்டுமிராண்டித்தனமான காரியங்களில் மக்கள் வீணாக ஈடுபட்டு அறிவையும், பொருளையும், காலத்தையும் பாழாக்காமல் இக் காலத்திய விஞ்ஞான விஷயங்களில் மூளையைச் செலுத்துவதுடன் இத்தகைய பாமரத்தனமான கார்த்திகை தீபம், திருவண்ணாமலை தீபம், திருப்பரங்குன்ற தீபம், சொக்கப்பான் கொளுத்தல் முதலிய தொல்லைகளை அறிவுள்ள மக்கள் விட்டொழிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.
(பகுத்தறிவு கட்டுரை 11.11.1934)