காதல் சிறுபிள்ளையின் ஓட்டைப்பல் சிரிப்பு போல. அதன் அதி தீவிர கோணல் மானல் பூந்தவிப்பு எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதொ... அதுவும் வாகாக கிடைக்கிறதோ அங்கெல்லாம் தன் பெயரை எழுதி இதயம் பேசி விடும். ரகசியம் பேசும் எழுத்து மெகா போன் அது.

ஊருக்கே சொல்ல முடியாத உரு.. இப்படி தனிமையின் தவிப்பில் பெயர் எழுதி ஆசுவாசப்படும். வயதான மனதுக்கு கிறுக்குத்தனம் என்று தோன்றலாம். ஆனால் கிறுக்குத்தனம் தானே காதலின் கவிதை வரி. கிளறிக்கொண்டே கிடக்கும் கோழி கால்களில் காதல் வான்கோவின் ஓவியமும் தான்.

சுற்றுலா போகும் இடம் காடாய் இருந்தால்.. அங்கே ஒரு பாறை இருந்தால்... காதலின் கையில் தூரிகை முளைக்கும். கரிக்கட்டை... சாக்பீஸ்... கல்... என்று இதயம் பேச... வார்த்தைகள் பெயர்களாகி நெருக்கத்தில் சிரிக்கும். பார்க்கும் போதே அழகாய் தோன்றும். மனம் தானாக வாழ்த்தும். நல்லா இருங்கடா. முதலில் அவன் பெயர் அடுத்து அவள் பெயர்.. ரெண்டுமே இதயத்துள் இருக்கும். சில இதயங்களில் அம்பு துளைத்திருக்கும். பெயர்கள் திளைத்திருக்கும். காதலை இதயத்தில் உணரும் வரை பா....றை பூ.... பூக்கு...மே.love symbolசில பெயர்கள் பார்த்ததுமே கண்டுபிடிக்க முடியாது. என்ன பேர் இது என்று யோசிக்கத் தூண்டும். பிறகுதான் புரியும். அவன் பெயரையும் அவள் பெயரையும் கலந்து எழுதி இருப்பார்கள். கிறுக்கனில் தலைவன் அவன். கிறுக்கலிலும் தகவல் அது. பிரிக்கவே முடியாது. ஊரறிந்த உளறிலும் ஃபுல் போதை ரகசியம் அது.

கள்ளிச் செடியில் பாருங்கள். அங்கும் பூக்களாய் சொட்டும் பால் நிலா பகல் என ஜோடிப் பெயர்கள் ஜொலித்துக் கொண்டிருக்கும். அத்தனை முற்களுக்கு மத்தியிலும் காதல் பற்கள் புன்னகைக்கும். முள் கொண்டே எழுதியிருக்கும் பெயர்களில் வடிவங்கள் நினைத்த மாதிரி வராமல் போயிருக்கும். ஆனாலும் வடித்தெடுத்த போது வாழ்ந்து விட்டதாக நம்பும் காதலின் பெயர்.

தியேட்டரில் முன் இருக்கும் இருக்கை முதுகில் ஒளிந்திருக்கும் அத்தனை பெயர்களிலும் அவரவர் காதலின் கதை ஒவ்வொரு காட்சிக்கும் ஓடிக் கொண்டிருக்கும். அது தனி சினிமா. இந்தக் காதலை வைத்துக் கொண்டு சும்மாவே இருக்க முடியாது. அது கிடைத்த இடத்தில் எல்லாம் உம்மா தரவே விரும்பும். ரகசியமானது காதல். அதை முகமூடி போட்டுக்கொண்டு ஊருக்கே தெரிவிப்பதில் ஒரு குத்தாட்டம் இருக்கிறது. மரங்களில் இதயம் செதுக்கி நடுவில் தங்களை நட்டிருப்பார்கள் காதலர்கள். மரம் உள்ள காலம் வரை அதன் மனதில் பூத்த இந்த காதல் இருக்கும்.

எந்த மரங்கொத்தி செதுக்கியதோ என்று மரம்வெட்டி மனம் மாறலாம் தானே.

பேருந்து இருக்கை முதுகிலும் விசில் அடிக்கும் காதலன் காதலி பெயர்கள். அதில் ஓர் ஆனந்தம். பேருந்துள் நிற்கும் காதலியைப் பார்த்துக் கொண்டே அவள் பெயரோடு தன் பெயரை எழுதிக் கொண்டிருப்பான். பேருந்து பல்லக்காகும் கவிதையைத் தான் இரு பெயர்களில் பச்சை குத்திக் கொண்டிருக்கிறான். பெயிண்ட் கீறல்களில் எல்லாம் மின்னலென படிந்திருக்கும் ஜோடி பெயர்கள்... தினம் தினம் படும் கண்களில் எல்லாம் பவுடர் பூசி பருவம் மலர்த்தும்.

கல்லூரி... பள்ளி டெஸ்கில் எழுதி இருக்கும் பெயர்களை பரீட்சை எழுத வேறு வேறு ஹாலுக்கு செல்லும் போது கவனித்திருக்க முடியும். பிறகு அந்த ஜோடியைத் தேடி அலைந்த நாட்களும் உண்டு. பெரும்பாலும் காதலிப்பவர்கள் யாவருமே அவரவர் டெஸ்கில் எங்காவது ஓரிடத்தில் சின்னதாக அல்லது குறியீடாக... இனிசியலாக தன் காதலி பெயரை பதித்திருப்பார்கள். இது தொன்றுதொட்ட பருவ பயிர். காதலால் வளர்ந்தே தீரும். நெடுங்காலமாக வித விதமான ஜோடி பெயர்களை தாங்கி காதலின் வடுவாய் இருக்கும் டெஸ்க்குகள்... காதலின் தீஸிஸ்கள்.

நண்பர் வீட்டு கட்டிலை ஒரு முறை தூக்கி வெளியே வைக்கும் சூழல் ஏற்பட... ஆச்சரியம் அதன் அடியிலும் அழகாய் பூத்திருந்தது ஒரு ஜோடி பெயரும் ஓர் இதயக் கூடும். முணுக் முணுக்னு இருந்துகிட்டு என்னவேலை பார்த்திருக்கா பாரு என்ற நண்பனுக்கு ஒரு பக்கம் கோபம் இருந்தாலும்.. ஒரு பக்கம் சிரிப்பு வந்து விட்டது. ரகசியக்காரிகள் ரசனைக்காரிகளாகவும் இருப்பார்கள். தியேட்டர் காம்பவுண்ட் சுவர்களில் கொத்து கொத்தாய் காய்த்திருக்கும் பெயர்களுக்கு தனித்த அடையாளம் கிடையாது. ஆனால் இருக்கும் பொதுவான அடையாளம் காதல். காதல்... கவிதைக்கும் காற்றுக்கும் இடையே மூச்சு விடும் இதய கோளாறு. அது இடம் கிடைத்த இடத்தில் எல்லாம் தன்னை அச்சில் வார்க்கும். அமராவனத்தில் ஓர் ஆதி பூத்த பொக்கிஷம் போல இந்த பூமியில் எப்போதும் தங்கி விடச் செய்யும் அறிவில்லா அற்புதம் அது.

பேருந்து நிறுத்தத்தில் ஒரு கட்டிடம் இருந்தால் அங்கும் பெயர்கள் துரு துருக்கும். குட்டிச்சுவர் எங்கிருந்தாலும் அங்கு காதலின் பெயர்கள்... குட்டி போட்ட மயிலிறகாக மௌனம் சுமக்கும். பாலங்களின் ஓரத்தில் பாருங்கள். பரு முளைத்த பருவம் போல பெயர் முளைத்து பவளம் பூத்திருக்கும். கடற்கரை மணலில் பெயர் எழுதி பார்க்கும் காதல்... நுரை ததும்ப சிரிப்பதை கண்டிக்கிருக்கிறேன். காய்கறி நறுக்குகையில் அதை எழுத்தாக்கி இதயம் வார்க்கும் காதலின் ஆதி விதியை உணர்ந்திருக்கிறேன்.

இதெல்லாம் தாண்டி இன்னும் சுவாரஸ்யமான ஒன்று... பணத்தில் பெயர் எழுதுவது.

அது தவறென்று அறிவுக்கு தெரிந்தாலும்... தகும் என்று உணர்வு சிரிக்கும். நான் கூட சின்ன வயதில் என் பெயரையும் ரதி பெயரையும் ஐந்து ரூபாய் நோட்டில் எழுதி இருக்கிறேன். விதி அடுத்த வாரமே வினை செய்தது. அது எப்படியோ சுற்றி எங்கள் பாட்டியின் தம்பி மனைவியிடம் சிக்க... அது தூக்கிக் கொண்டு வீட்டுக்கே வந்து விட்டது. நான் இல்லவே இல்லவே என்று சத்தியம் செய்தாலும்.. ஒரு பக்கம் ஆச்சரியம்... எப்படி இந்த நோட்டு இந்த ஆயா கைல சிக்குச்சு. சும்மாவே தாளிக்கும். இப்போ கடுகு எண்ணெய் வடசட்டியே கையில் இருக்கு. சொல்லவா வேணும். ஆனாலும் சொன்ன பொய்யில் சோன்பப்டி போல இனித்தேன்.

நான் ஒருத்தன் தான் விஜய்யா பாட்டி. நம்மூருக்குள்ள விஜய் ரதினு இன்னொரு ஜோடி இருக்குல்ல. அவுங்க எழுதிருந்தா... என்றதும்... ஆமால... ஆனாலும் கையெழுத்து உன்னுது தான என்று நீட்டியது பாட்டி. இனி வலது கையில் எழுதக் கூடாது என்று அன்று முடிவெடுத்தேன். அப்படி பண நோட்டில் பெயர்கள் எழுதி அது மீண்டும் நம்மை சார்ந்தவர்கள் அல்லது நம் கைக்கே வருவது எப்போதாவது நடக்கும் அரிதான விஷயம். அதில் ஒரு வாவ் இருக்கிறது. சொல்லொணா புன்னகை இருக்கிறது. ஒரு துளி வெட்கம் கூட இருக்கிறது. அத்தனையும் காதல் என்றால் அதில் திட்டும் கூட தித்திப்பு தான்.

கடந்த வாரத்தில் இப்படி யாரோ ஒரு ஜோடி எழுதிய பத்து ரூபாய் நோட்டு என் கையில் வந்திருக்கிறது. அது தான் இத்தனை நினைவுகளையும் இதயம் தாண்டி அம்பு விட விட்டிருக்கிறது. செலவு செய்ய மனம் வரவில்லை. பத்திரப்படுத்தி விட்டேன். அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா தெரியாது. ஒருதலைக் காதலா... ஒரு ஜோடி காவியமா தெரியாது. ஆனால் என்னிடம் பத்திரமாக சேர்ந்தே இருக்கட்டும் என்று தோன்றியது. வரதன் பிரியா வாழ்க.

ஏற்கனவே நாம் எழுதிய கவிதைகூட ஒன்று இருக்கிறது.

"பாறை என்றார்கள்
பூத்திருக்கின்றன
இரு பெயர்கள்"

அது இப்போது இப்படியும் மாறுகிறது.

"பணம் என்றார்கள்
பூத்திருக்கின்றன
இரு மனங்கள்"

- கவிஜி

Pin It