ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தன் வாழ்நாளைச் செலவிட்டவர். மிக எளிய குடும்பத்தில் பிறந்து முழு நேரப் படைப்பாளியாகவும், களச் செயல்பாட்டாளராகவும் வாழ்ந்தவர். காப்பியங்கள், கவிதைகள், குறுநாவல்கள், சிறுகதைகள், ஓரங்கநாடகங்கள், குட்டிக்கதைகள், விமர்சனக் கட்டுரைகள், ஆய்வுநூல்கள் எனத் தமிழில் உள்ள அனைத்து இலக்கிய வகைகளையும் எழுதியவர்.

சமுதாய முன்னேற்றத்திற்குப் பெருந்தடையாக இருப்பது சாதி, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்ததனால் சாதியின் கொடுமைகளை அனுபவித்தவர். அதனால், தான் அனுபவித்த சாதிக் கொடுமையைத் தான் படைத்த காவியங்களுள் பதிவு செய்கிறார். எனவே அவருடைய காப்பியங்களுள் விரவிக் கிடக்கும் சாதி எதிப்புக் கருத்துக்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தலித்துகளைத் தனது காப்பிய நாயகர்களாக வடித்து, ஓடுக்கப்பட்ட மக்களுக்கு இலக்கிய மதிப்புக் கொடுத்தவர் கவிஞர் தமிழ்ஒளி. ‘நிலைபெற்ற சிலை’ ‘வீராயி’ ‘மேதின ரோஜா’ ஆகிய காவியங்கள் தலித்துகளை முதன்மைப் பாத்திரங்களாகக் கொண்டு படைக்கப்பட்ட காவியங்கள்.

tamiloli 450நிலை பெற்ற சிலையில் சாதி எதிர்ப்புக் கருத்துகள்

ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்தவர் வஞ்சி. அவள் மேல்சாதி ஆடவனைக் காதலிக்கிறாள். தாழ்த்தப்பட்டவர் ஆதிக்கச் சாதியினரை காதலித்தால் சமுதாயத்தில் எதிர்நோக்கும் பிரச்சனையை இந்தக் காப்பியம் பேசுகிறது.

சோலையில் காதலர்கள்

ஊருக்குத் தென்திசையில் அமைந்த குளிர்ந்த தென்றல் உலவிடும் சோலையில் ஒருநாள் மருதவாணனும் வஞ்சியியும் சந்தித்து காதல் மொழி பேசிக்கொள்கின்றனர். நேரம் போவதறியாமல் காதலை வளர்க்கின்றனர். திடீரென்று மருவாணனின் தந்தை சோலைக்கு வந்து விட காதலர்கள் நடுங்குகின்றனர். அப்போழுது மருதவாணனின் தந்தை பேசும் பேச்சு சாதி ஆதிக்க உணர்வையும், பணக்காரச் செருக்கையும் காட்டுவதாய் உள்ளது.

“கீழ்சாதி நாயின் மேல் ஆசை வைத்தாய்?

ஒடுங்கியுமே கிடக்கின்ற ஏழையெங்கே?

ஒளிர்செல்வம் படைத்திடும் உயர்வும் எங்கே?

கடும்பாம்பு போல் எனக்கு மகனாய் வந்த

கழுதையே”1

தன் தந்தையின் பேச்சு மருதவாணனுக்குப் புரட்சிகர எண்ணத்தை உருவாக்கியது.

“பிறப்பாலே தாழ்வேற்றம் கருதுதற்கும்

கோழையர் என்றொரு கும்பல் இருப்பதாலும்

கொடுஞ் சூழ்ச்சியாலுமே ஆகும்”2

என்ற எண்ணம் மருதவாணனுக்கு எழுகிறது. மருதவாணன் சமுதாயப் பணிக்குத் தன்னை ஒப்படைத்துவிடுகிறான். சாதி ஏற்றத்தாழ்வையும், பொருளாதார பேதத்தையும் ஒழிப்பதே தன் வாழ்நாள் கடன் என்று முடிவுக்கு வருகிறான்.

“இடியும்வரை பணக்காரக் கோட்டை, சாதி

இழிவுடனே பொருளாதார ஏற்றத்தாழ்வனைத்தும்

ஒடியும் வரை தொண்டாற்றும் பணிக்கென்

உயிர் தந்தேன்”3

ஆலை முதலாளிக்கு வஞ்சியை அவளுடைய தாய் திருமணம் செய்துவைக்க முனைகிறாள். இதனைக் கேட்டு மருதவாணனின் தந்தை மகிழ்ச்சியடைகிறான்.

“கிளிமூக்கன் தன்மகனைக் கெடுத்து விட்டக்

கீழ்ச்சாதி வஞ்சியுமே தொலைந்தாள் என்றே

உளிமூக்கில் பொடியுறிஞ்சி உவகைக் கொண்டான்”4

மேலும் தன் மகன் தன்னிடத்தில் கோபம் கொண்டதை எண்ணி மருதவாணனின் தந்தை

“கெட்ட சாதியினில் பிறந்த அவ்வஞ்சிப் பெண்ணால்

துளிமூக்கில் கோபத்தை ஏற்றிக் கொண்டு

தொடைதட்டினான் சண்டைக் கென்னிடத்தில்”5

என்று பேசுகிறான். மக்களுக்கு இடையே காணப்படும் சாதி ஏற்றத்தாழ்வை நீக்கி சமத்துவத்தை உருவாக்க வேண்டும் என்பது கவிஞர் தமிழ்ஒளியின் எண்ணம். அந்த எண்ணத்தை மருதவாணனின் கூற்றாக

“ஓரினத்து மக்களுள்ளே பிரிவும் சாதி

உண்டாக்கித் திண்டாடும் நிலையும் மக்கள்

 பேரியலை மறந்து பொருள் ஏற்றத் தாழ்வால்

பெருங்கேடு விளைவிப்பதுவும் விதியைக்கூறிப்

 பாரியலில் செந்தமிழர் ஏற்றம் கொள்ளும்

பாதையினை அடைப்பதுவும் யாவும் இங்கே

 ஓர் நொடியில் விழச்செய்வோம்”6

ஆலை முதலாளி வஞ்சியைத் தன் வீட்டில் அடைத்துவைக்கிறான். மருதவாணன் அங்கு வர அவனைக்கண்ட வஞ்சி தாவி வந்து தன் காதலன் மருதவாணனை அணைத்துக் கொள்கிறாள். ஆலை முதலாளியின் துப்பாக்கிச் சூட்டிற்குக் காதலர்கள் இருவரும் பலியாகிறார்கள்.

உயர்சாதி இளைஞனும் தலித்பெண்ணும் காதலித்தால் திருமணம் செய்ய முடியாமல் இறப்பை எதிர்நோக்குவர் என்பது இந்தச் சமூகத்தில் காணப்படும் நியதி என்பதை இந்தக் காப்பியம் உணர்த்துகிறது.

வீராயி காப்பியத்தில் சாதி எதிர்ப்பு

சாதிப் படிநிலையில் கீழாக இருக்கும் தலித் மக்களைத் தலை நிமிரச்செய்து போராடத்தூண்டும் விடுதலை இலக்கியம் ‘வீராயி.’

கவிஞர் தமிழ்ஒளியின் படைப்பு குறித்து சஞ்சீவி அவர்கள் “காலம் காலமாக உழைத்து உழைத்து ஏமாற்றங்களையே எதிர்கொண்டு வாழும் மக்களின் துன்ப துயரங்களை உணர்வுப் பூர்வமாக ஏற்றுக் காவியம் படைத்த மக்கள் கவிஞராகவே தமிழ்ஒளியை அறியச் செய்தது”7 வீராயி காப்பியத்தைப் படிக்கையில் சஞ்சீவி அவர்களின் கூற்று உண்மையெனத் தெரிய வருகிறது.

ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த வீராயி பெருகிவரும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படுகிறாள். வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட வைக்கோல் போர் மீது ஏறி வீராயும், அவள் தந்தையும் வருகின்றனர். அவர்களைக் காப்பாற்ற வேடிக்கை பார்க்கும் சிலர் நினைக்கின்றனர். அடித்து வரப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று தெரிந்ததும் காப்பாற்றுவதைக் கைவிடுகின்றனர்.

“பயப்பட்டார் பறையர்களைத் தொட்டெடுத்து விட்டால்

பார்ப்பவர்கள் என்சொல்வார்கள் என்றொதுங்கிப் போனார்”8

மாரிக்கிழவனும் வீராயும் பிழைப்பதற்காக ஆப்பிரிக்க நாட்டுக்குச் செல்கின்றனர். அங்கே மாரிக்கிழவன் பாம்பு கடித்து இறக்க, துயரம் தாளாத வீராயி தன்னை மாய்த்துக் கொள்ள நினைக்கிறாள். மேல்சாதியைச் சார்ந்த ஆனந்தன் அவளை மீட்கிறான். இருவரும் தாய்நாடு திரும்புகின்றனர். ஆனந்தனின் வீட்டில் வீராயி இருப்பதைக் கண்ட மேல்சாதியினர், ஆனந்தனின் தந்தையிடம்

“இந்தப்பெண் புதுப்பட்டி மாரிமகள் அன்றோ

இல்லத்துள் பறைச்சியினை எப்படி நீர் சேர்த்தீர்

சொந்தத்தை உம்மோடு நாங்களெல்லாம்        கொள்ளல் தோஷமெனக் கருதுகிறோம்.”9

என்று கூறுவதில் தலித் மக்களை உயர்சாதியினர் தம் இல்லத்தில் சேர்க்கமாட்டார்கள் என்று தெரியவருகிறது.

ஆனந்தனின் தந்தைக்கு வீராயி தாழ்த்தப்பட்டவள் என்று தெரிந்ததும் தன் மகன் மீது கோபம் கொள்கிறார். மேலும் தன் சாதி ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் பொருட்டு

“ஆண்டு சில ஆயிற்றப் பறைப்பெண்ணும் ஓடி

ஆச்சரியம்! இங்கிப்போ தெப்படியோ வந்தாள்

மாண்டொழிந்து போனாலும் கடுகுக்குக் காரம்

மறைந்திடுமோ? யாமெல்லாம் ஏழ்மையினால்  காய்ந்த

பூண்டாக மாறிடினும் குலத்தன்மை மாறோம்”10

என்கிறார்.

தன் மனைவியைப் பார்த்து

“அடி, நீலி நீ பெற்ற மகன் ஒழுங்கைப் பாரு

ஈனநாய்ப் பறைச்சியினை இங்கழைத்து வந்தான்

என் மானம் போகிறதே, என்னடி நான் செய்வேன்”

(ப.182 கவிஞர் தமிழ்ஒளி காவியங்கள்)

என்று கூறும் கூற்றிலிருந்து தலித்துகளைச் சாதி பேர் சொல்லி அவமானப்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. ஆனந்தனுக்கும் வீராயிக்கும் திருமணம் நடக்கும் செய்தி கேட்ட ஆனந்தனின் தந்தை ஊர் மக்களை அழைத்துச் சென்று, திருமணம் நடக்க இருக்கும் வீட்டிற்கே தீவைத்து விடுகிறார்.

“உறுமியுமே செல்லப்பக் கவுண்டரவர்; வந்தார்

நேரினிலே கண்டார்கள் பறைச்சியுடன் குந்தி

நிமிர்ந்த வண்ணம் இருக்கின்றான் ஆனந்தன்

மாளத்தான் போகின்றான் ஆனந்தன் என்று

மார்தட்டிக் தடிகளுடன் சூழ்ந்தார்கள் அங்கே

கூளத்தைச் சிதைப்பது போல் குடிசையினைச்  சாய்த்து”11

மே தின ரோஜாவில் சாதி எதிர்ப்பு

கண்ணன் தலித் மக்களின் தோழனாக இருந்து தலித்துகளின் நலனுக்காகச் சங்கம் அமைத்துச் சேவை செய்கிறான். கண்ணனுக்கும் உறவுக்காரப் பெண் இராதைக்கும் திருமணம் நிகழ இருந்த நேரத்தில் சேரிப் பகுதியில் தீ பற்றி எரிகிறது. கண்ணன் திருமணத்தை நிறுத்திவிட்டு சேரிக்குச் சென்று தீயை அணைக்கிறான். முகூர்த்த நேரம் கழிந்ததால் திருமணம் தடைபடுகிறது. இராதையினுடைய தந்தைக்குக் கண்ணன் மீது அளவுகடந்த கோபம் ஏற்படுகிறது.

“பறையரின் கூரை பற்றி எரிந்தால்

இறைவன் ஆணை இருந்ததப்படி

மாரிப் பறையன் மகனொடு கூடும்

சேரிப் பறையன் சிறுபயல் கண்ணன்

ஆதிநாள் தொட்டே அகிலத்திருந்த

ஜாதியும் பெரியோர் தகைமையும் குன்றப்

பறையன் கண்ணன் பழியை விளைத்தான்”12

என்று கண்ணனை வசைபாடுகிறார்.

ராதையின் தாய், தன் கணவனிடம் வரப்போகிற மருமகனை ஏசாதே என்று

“பறையன் என்று பழித்திடல் வேண்டா

முறையில் மருமகன் முறையோ

               (ப.193 தமிழ்ஒளி காவியங்கள்)

என்றாள்

அதற்கு இராதையின் தந்தை

“நீயும் பறைச்சி நிசம்நிச”

(ப.193 தமிழ்ஒளி காவியங்கள்)

என்றாள்

கண்ணன் சேரி மக்களுக்குத் தொண்டு செய்வது இராதையின் தந்தைக்குப் பிடிக்கவில்லை. கண்ணன் நமக்கு எதிராகச் சேரிமக்களை ஏவி விடுகிறான். அவனை ஒழிக்க வேண்டுமென சூளுரைக்கிறான்.

திட்டமிட்டபடி நிலவுடைமையாளர்கள் சேரிக்குச் சென்று தீ மூட்டுகின்றனர். அதே சமயம் காவல் துறைக்கும் தகவல் அனுப்புகின்றனர். தீயை அணைத்துக் கொண்டிருந்த கண்ணனைக் காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி உயிரை மரிக்கின்றனர்.

‘வீராயி’, ‘நிலைபெற்ற சிலை’, ‘மேதினரோஜா’ மூன்று காவியங்களும் ஒடுக்கப்பட்ட மக்கள் அனுபவிக்கும் சாதிக் கொடுமையையும் பொருளாதார சுரண்டலையும் பேசுகின்றன. இவர் பொதுவுடமை இயக்கக் கொள்கையை ஏற்றுக்கொண்டாலும் பிற பொதுவுடைமை இயக்கப் படைப்பாளியிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர். இடதுசாரி இயக்கப் படைப்பாளர்கள் சாதியத்தை நேரடியாகத் தம் படைப்புகளில் வெளிப்படுத்த மாட்டார்கள். பொருளாதார ஏற்றத்தாழ்வு நீங்கினாலே சாதி ஒழிந்துவிடும் என்பது அவர்களுடைய கருத்து. ஆனால் தமிழ்ஒளி பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு இணையாகச் சாதி ஏற்றத்தாழ்வைத் தம் படைப்புகளில் சித்திரித்துக் காட்டுகிறார். ஊர் என்றும் சேரி என்றும் சமூகம் பிரிந்திருக்கக் கூடாது; தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும்; சாதிப் பாகுபாடு களையப்பட வேண்டும் என்பது தமிழ்ஒளியின் சிந்தனை முழுவதும் பரவியிருந்தது என்பதை அவரது படைப்புகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

சான்றெண் விளக்கம்

1.           கவிஞர் தமிழ்ஒளி, கவிஞர் தமிழ்ஒளி காவியங்கள், ப.61.

               கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு வெளியீடு, சென்னை-1

               முதல் பதிப்பு 2016.

2.           மேலது, ப.65

3.           மேலது, ப.76

4.           மேலது, ப.84

5.           மேலுது, ப.84

6.           மேலது, ப.100

7.           செ.து. சஞ்சீவி, இந்திய இலக்கியச் சிற்பிகள், தமிழ்ஒளி, ப.8 சாகித்திய அகாதெமி சென்னை-18

8.           கவிஞர் தமிழ்ஒளி, கவிஞர்தமிழ்ஒளி காவியங்கள், ப.136

9.           மேலுது, ப.181

10.        மேலுது, ப.181

11.        மேலுது, ப.186

12.        மேலது, ப.193

- முனைவர் க.சேகர், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை - 05

Pin It