டேய் செல்பி பசங்களா... நல்லா போட்டோ எடுத்துட்டு போங்கடா... இது என் காடு என்பதாக தான் நடந்திருக்கும். ராஜநடை.

தூரத்தில் யானையே எறும்பாக நகர்ந்த காட்சி இனியொரு முறை கிடைக்குமா என்று தெரியாது. கற்கண்டை தூக்கிக் கொண்டு நடந்தேன் ஒரு எறும்பாக என்று காற்றும் தன் பங்குக்கு தத்தரிகிட போட... அசந்து போனோம். அச்சம் விட்ட கணம் அது.

பழைய வால்பாறை - ரொட்டிக்கடி சாலையில் காட்டு மாடு கூட்டம் சாலையைக் கடந்து கொண்டிருந்தது. காட்டு மாடு என்றால் காட்டு மாடு தான். கொழுத்த உடலில் காடு கொண்ட தீனி... தோலில் ரப்பர் தோரணை... கொம்பில் திமிர்.... கால்களில் வண்ணம்.... நிறத்தில் சாம்பல்.... நிஜத்தில் தேஜஸ். ரெம்ப பெரியது... அதை விட கொஞ்சம் சிறியது.. என குட்டி வரை குடும்பமே கூட்டத்தோடு இருக்கிறது போல. தேயிலை தோட்டத்துக்குள் மேய்ந்து விட்டு மீண்டும் மலையேறும் மாலையில் மாலை சூடியது போல மயங்கி நின்றோம்.

அப்படியே கண்கள் லாங் ஷாட்டுக்கு செல்ல அங்கே சிலுவை மலை உச்சியில் அட மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும் என்பதாக நடை போட்ட வேழம் அந்தக் காட்டின் ராஜா போன்று தோன்றியது. மலை உச்சியில் யானை நடப்பதை பார்க்க பார்க்க காட்டின் காவல்காரன் ரவுண்ட்ஸ் வருவது போலவே இருந்தது.

சில் அவுட் ஷாட்டில் நகரும் ஓவியம் அது. யானை நடையை வானம் முட்ட பார்த்தோம். இன்னும் அகலாத காட்சியில் அநியாய ஆசை கொண்டு நாமும் சில நொடி யானை ஆனேன். வனம் முழுக்க பச்சை சாமரம் வீசியது.

*
மரம் மரமாய் சுற்றினோம்

பொதுவாகவே மரங்கள் நமக்கு இஷ்டம். அதுவும் வால்பாறையில் சொல்லவா வேண்டும். எனக்கு பிடித்த சில மரங்கள் அங்கிருக்கின்றன. அவைகளுக்கு என்னையும் பிடிக்கும் என்பது எங்கள் ரகசியம். ஒவ்வொரு மரத்திலும் ஒவ்வொரு மனம் படைத்திடுவேன். ஒவ்வொரு மனதிலும் ரெட்டைக்காலில் நிற்கும் நானும் ஒரு மரம் என்பேன். மௌன மொழி மரத்துக்கு மரம் வேறுபடும். மயக்கும் மொழி ஒன்று. பாயும் மொழி ஒன்று. முத்த மொழி ஒன்று. சித்து மொழி ஒன்று. சித்திர மொழி ஒன்று. கிளை கிளையாய் அசைய... ஆசை ஆசையாய் இருக்கும். அதிரூபம் பூத்து விடும் ஆதி மனதில் இருந்து அநியாய ஆசைகள் பறந்து பறந்து பார்க்கும். பறவை ஆகி தீர்க்கும்.

மரம் காணும் போதெல்லாம் மனம் ஆடும் வித்தை எப்படி. மனம் தேடும் போதெல்லாம் தலை பிளிறும் தரிசனம் தான் எப்படி. அண்ணார்ந்து பார்க்க பார்க்க அன்றொரு காலத்து சிறுவானாவேன். அப்படியே பார்க்க பார்க்க காற்றை தூது விட்டு தலை தடவி தவிப்படக்கும். மரமா அது... இலை பூத்த இசை. தவமா அது... தகிட தகிட தாலாட்டு.

*
காற்றின் கைகள்

13 வது வளைவில் போட்டோவுக்கு நிற்கையிலேயே காற்றின் கைகள் நம்மை அணைக்கத் தொடங்கி விட்டன. மழைக் காற்று மலையில் வீசினால் அதன் மகத்துவம் அறிந்தவன் கூறுகிறேன். அது ஒரு மயக்கம் என்ன தத்துவத்தை மண்டைக்குள் இறக்கிக் கொண்டே இருக்கும். மனம் லேசாவதை உணர முடியும். மெல்லிய புன்னகைகூட பூத்து விடும். முகம் முழுக்க புது பூவின் அசைவு. வண்டாய் சுழலும் கண்களில் ரீங்காரம். ரிதம் உடல் முழுக்க பரவ... காற்றோடு கவிதை ஆனோம். திடும்மென ஒரு பக்கமிருந்து இறங்கி நம்மை அணைத்தபடியே மேலேறும் காற்றில் காதலியின் கற்றைக் கூந்தல் காணலாம்.

தலை அசைக்கும் மரங்களின் ஆரவாரத்தில் அடியே நிற்கும் நமக்கும் மனம் அசையும். தலை களைய வாய்ப்பில்லை. தவம் களைந்தோம். களைவதில் இருக்கும் நிம்மதி அலாதி. ஆலிங்கனம் தொடர காற்றின் கைகளில் சிறு பிள்ளை ஆனோம். சிறு பிள்ளை நம்மை காற்றும் கிச்சு கிச்சு மூட்டியது. சில இடங்களில் காற்றுக்கு காதல் தோல்வி என்று புரிந்தது. விசிறி அடித்தது. வீல் வீல் என கத்தி கதறியது விஜி விஜி என்றே எனக்கு கேட்டது.

புகைப்படத்தில் காற்றை பிடித்து விட வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். பல முயற்சிகளுக்கு பிறகு பிடித்திருந்தார்கள்... தம்பிகள்.

*

மழைச் சாரலும் மழைத் தோகையும்

காலையில் இருந்தே மெல்லிய சாரல் இருந்தது. மெல்லிடை தேவதை அரூப துளிகளால் ஆகிக்கொண்டே இருந்ததை உணர முடிந்தது. ரெட் அலர்ட் கொடுத்திருந்தார்கள். நமக்கு ஊதா நிறத்தில் ஊஞ்சல் ஆடியது ஊசி முனை உடைதலென மழைத் தூறல். பூஞ்சோலையில் பூங்கொத்தாய் நின்றோம். மழைச் சாரலினூடாக மடல்களில் துளிர்த்தோம். போகும் போது மலையை மறைத்துக் கொண்டு மேகத்தின் களியாட்டம் இருந்தது. மனம் பேசியதை கேட்டிருக்கும் போல. மடமடவென களைந்து கண்களுக்கு காட்சியை விரித்தது. அங்கிருந்து காணும் போது கீழே பரந்து விரிந்த சோலைக் காடுகளில் சொக்கி போனோம். கீழே இருந்த முதுகுடிகளின் சிறு சிறு மண் வீடுகள் தெரிந்தன. ஒரு நாள் அங்கே வாழ்ந்திட மனம் வேண்டியது. பேரருவி பால் வண்ணத்தில் பச்சைகளிடையே பாய்ந்தோடியது. பேய் அருவி என பேர் வைக்கலாம். அவ்ளோ அழகு. ஆங்காங்கே சின்ன சின்ன அருவிகளின் மின்னல் மொழி பவள மொழி.

எத்தனை நேரம் நின்றோம் தெரியவில்லை. அத்தனை நேரமும் இயற்கையை தின்றோம்- தெரிந்தது. மலை உச்சியில் மண்டைக்குள் எழும் மத்தள சத்தம் ரகசியமானது. தித்திக்கும் சந்த மொழியில் சாந்த விழி பூத்துக்கும். அந்த மலையைத் தாண்டி விட்டால் மூணார் சென்று விடலாம் என்பது செய்தி. ஒற்றையடி இருப்பதாக தகவல். முன்பெல்லாம் அந்த வழியாக மூணார் சென்றிருப்பதாக தாத்தாக்கள் சொன்னதை நினைவு படுத்திக் கொண்டேன். நினைவுக்குத் தான் எத்தனை நிறம். நான் ஊதாவை பிரித்தெடுத்தேன்.

சரி கிளம்புவோம் என்று கிளம்பியவர்கள் மெல்ல மெல்ல புகைப்படங்களுள் நுழைந்து உருண்டு புரண்டோம். இருங்கடி உங்கள என்ற மழைக்கு என்ன பொத்துக் கொண்டு வந்ததோ... மடமடவென படபடவென பாசுமதி அரிசியை அள்ளி அள்ளி இரைப்பது போல வெச்சு அறைய தொடங்கி விட்டது. அட வரும் போகும் என்று நம்பி ஏமாந்தோம். இது வேற மச்சான் என்ற மழை... ம்ஹும் மழையா அது... மௌத் ஆர்கன். வாசித்து தள்ளியது. எந்த மரத்தடியே நின்று புகைப்படம் எடுத்தோமோ அதே மரத்தடியே குறுகி விட்டோம். முடிந்தளவு மரன் நம்மை காப்பாற்றினான். அவனும் அவன் றெக்கைகளும் ஒரு கட்டத்தில் தொப்பலாக நம்மை கை விட்டான். பூஞ்சோலை நுழைவில் இருந்து மண்பாதை முடியும் இடத்தில் இருக்கும் ஒற்றை சாட்சி அவன். அவனோடு சேர்ந்து நாமும் நனைய... நிமிடத்தில் குளிர் சுழல தொடங்கி விட்டது.

இங்கே மழைக்கு தப்பிப்பதற்காக மழைக்குள் நிற்கும் நேரத்துக்கு மழைக்குள்ளேயே ஓடி விட்டால் நுழைவாயில் கட்டிடத்துக்குள் சென்று விடலாம் என ஓட்டம் உடுக்கை அடித்தது. போகும் போது ஜென்டிலாக எங்களைப் பார்த்த அந்த குடைப் பெண் இப்போது கிண்டலாக பார்ப்பது போல இருந்தது. போடி.. நீயும் தான் பாதி நனைஞ்சிருக்க என்று நினைத்தபடியே ஒரு பார்வை. ஒரு புன்னகை. குடை நிமிர்ந்து முடங்கியது. மழைக்குள் உடல் விரிக்கும் குடைக்கு என்ன வரும். வெட்கம் தான்.

பிறகு கூழாங்கல் ஆற்றுக்கு மாலை மசங்க சென்றோம். பாதுகாப்பு போட்டிருக்கிறக்கிறார்கள். நல்லது. நீரின் கொந்தளிப்பு கொழுப்பு கொப்பளிக்க சுருண்டு சுழன்று சென்றது பார்க்கவே பரபரவென இருந்தது. பாலத்தில் இருந்து பார்த்தோம். நீரின் செழுமை கொழு கொழுவென குளுகுளுத்திருந்தது.

*

பனி மலர்த் தோட்டம்

போகும் போதே கவர்க்கல் தன் சுய ரூபத்தை காட்டிக்கொண்டிருந்தது. வெள்ளை வேட்டையை ஆரம்பித்திருந்தது. பனி பனி படரும் பகுதி என்று அறிவோம். இந்த முறை பனி மலர்த் தோட்டம் குலுங்கியது. சாரலும் சேர்ந்து கொள்ள ரசனைக்கு தீனி. பகலிலும் ஒரு வெள்ளை ராத்திரி. புகைப்படங்களை புகைக்குள் இருந்து பொறித்துக் கொண்டே நின்றோம். சிலு சிலு காற்றும் குளு குளு பனியும்... கொட்டித் தீர்த்தது. வந்து வந்து மோதும் காற்றோடு இசை தேவன் காருக்குள் கிடார் வாசிக்க... வேறென்ன வேண்டும்.... வாழ்வது என்பது ஏன் என்று இனி வராது கேள்வி. தேன் என்று நம்பினோம்..

திரும்புகையில் பனியின் தீவிரம் பருவத்தில் இருந்து முதுமைக்கு தாவி இருந்தது. வெள்ளை வெட்டி ரவுண்ட் கட்டி அடித்ததில் சாலை தெரியவில்லை. முகப்பு வெளிச்சம் எரிந்தாலும் பார்க்கிங் வெளிச்சம் பளிச் பளிச் என்று கண்களை காட்டி நான் வரேன் நான் வரேன் என்று எச்சரிக்க வேண்டியதாகி விட்டது. மழையும் வலுத்துவிட்டது. ரெட் அலர்ட் வேலையைக் காட்டி விட்டது. ஆனாலும் விடாமல் பனி சரக்கு ஆடியது வாகனம். சரிக்காமல் நகர்ந்திக் கொண்டிருந்தேன். நந்தவன சோலையில் வெள்ளை மேக தோரணம். தீராது வேட்கை நமக்கு. தாகத்தோடு உள்ளவனுக்கு இந்தச் சாலை ஒருபோதும் பாலைவனம் ஆகாது.

*
உடும்பனும் குரங்கனும்

இடையே ஒரு உடும்பு சாலையை கடக்க முயற்சித்தான். கொழு கொழு உடலில் சாம்பல் நிறத்தில்... சித்திரத்தில் இருந்து எழுந்து வந்தவன் போல தெரிந்தான்.

இந்தப் பனிக்குள்ள எங்கடா போற... சரி சரி உன் இடம்... நீ போற. கேட்க நான் யாரு.

வண்டியை நிறுத்தி விட்டேன். அவன் யோசனையோட மெல்ல கடந்தான். அதற்குள் பின்னால் நின்ற ஒரு மெண்டல் வண்டி என்னைத் தாண்டி (இடம் பொருள் அற்று ஓவர் டேக் எடுப்பதில் அப்படி ஒரு கிறுக்கு போதை.) நான் கையை காட்ட காட்ட முந்திக் கொண்டு போனான். தலை நசுங்க போகிறது என்று புரிந்து விட்டது. ஒலியை சத்தமாக எழுப்ப... உடும்பன் புரிந்து கொண்டு சட்டென வேகமெடுத்து பாதி சாலையில் இருந்து வந்த இடத்துக்கே திரும்பி விட்டான். ஆனாலும் அவன் வால் அந்த கிறுக்கு வண்டியின் சக்கரத்தில் மாட்ட ஒரு இன்ச் தான் இருந்தது. இன்னும் வேகமெடுத்து தப்பித்தான். ஓடிடு என்று கத்தினோம். ஓடிச் சென்று பாறையில் ஏறி விட்டான்.

நமக்கு நிம்மதி. அதற்கு சீ என்றிருந்திருக்கும். யார்ரா இவனுங்க.. அவுத்து விட்ட கழுதைங்க மாதிரி இப்பிடி வந்துகிட்டே இருக்கானுங்க என்று யோசித்திருக்கும். சரி ஒரு போட்டோ என்று மானுட புத்திக்கு தாவினோம்.

மழைக்கு முன் சாலையில் குடும்பமாக தனியாக ஜோடியாக என்று அழகழகாய் அமர்ந்திருந்த குரங்கர்கள் மழை வந்ததும் சிட்டாய் பறந்து விட்டார்கள். எங்கு போனார்கள் என்றே தெரியவில்லை. சாம்பல் நிறத்தில் மானுட மூத்தோர் பார்க்க பார்க்க கொட்டும் அழகு. கொட்டாவி விட்ட குரங்கார் ஒருவரை பார்த்தேன். மிரட்டி விட்டார். தள்ளியே இருப்போம் என ஒதுங்கி கொண்டோம்.

*
ரொட்டிக்கடை பாறைமேடு

ரொட்டிக்கடை பாறைமேட்டில் நிற்கையில்... புறு புறுவென பருவமழை பூ தூவிக் கொண்டிருந்தது. பாறை பூத்த பச்சை புல்வெளிகள்... பார்க்கவே படுத்துருளத் தூண்டியது. நனைந்தபடியே நாயனம் வாசிக்கும் ஒவ்வொரு மரமும் வா வா என்றழைத்தது. அங்கிருந்து மேல் நோக்கி காணுகையில்... மலை உச்சிக்கு படிகள் இருப்பதை அறிந்தோம். அடுத்தமுறை அங்கு தான் என மனம் தாவ தொடங்கி விட்டது.

வடித்த சிற்பம் போல வெடித்த பாறைகள் தன் பருவத்தை வழிய வழிய சொல்லிக் கொண்டிருந்தன. இந்த குவாரியில் இருந்து எடுத்து சென்ற கற்களால் தான் சோலையார் அணை (1965 - 74 ) கட்டப்பட்டதாக வால்பாறை நண்பர் ஒருவர் சொல்லியிருக்கிறார். வரலாற்று தகவலுக்கு நன்றிகளை உரித்தாக்கி கொள்வோம்.

பாறை சூழ் வாழ்வு இங்கே பள பளவென பச்சையம் போர்த்தியிருக்கிறது. அங்கு நின்ற நிமிடமெல்லாம் தேகம் பறக்க கண்டோம். தோகை முளைக்க நின்றோம்.

*
குறிப்புகள்

வால்பாறை நிறைய மாறி இருக்கிறது. காலத்தின் கட்டாயம். ஆனால் ஊட்டியாக ஆகி விட கூடாது என்ற பதற்றம் இருக்கிறது. நிறைய பைக் ரைடர்ஸ். ஆனால் அதிவேகம். சாலை விதிகளை மீறும் அதிவேகம். சாலையோரம் நின்றே மது அருந்தி... கத்தி கூச்சலிட்டு காட்டின் அமைதியைக் குலைக்கும் தீவிரம் அச்சத்தை ஏற்படுத்தியது.

நேருக்கு நேர் பேருந்து மோதிக் கொண்ட இடத்தில் நின்று பார்த்தேன். உள்ளே திகில் பரவியது. காமராஜ் நகர்- துளசிங்க நகர் - ஆஸ்பத்திரி அருகே என்று நாங்கள் இருந்த வீடுகளைப் பார்த்தேன். நிறைய மாறி இருந்தது. மனதுக்குள் இனம் புரியாத தவிப்பு. துளசிங்க நகர் வீட்டின் பின்புறம் இன்னமும் இருக்கும் பப்பாளி மரத்தை தம்பிகளிடம் காட்டினேன். இனிப்பு தான் கண்களில்.

நடந்த சாலைகள் ஒவ்வொன்றையும் உயிர் ததும்ப பார்த்தேன். ஏதேதோ யோசனைகள். சிறுவயதில் கேசட் வாங்கும் கடையைப் பார்த்தேன். துணி தைக்கும் கடையைப் பார்த்தேன். வடை தின்னும் கடையைப் பார்த்தேன். பழைய பேருந்து நிலையத்தை... பூ கடையை.. மார்க்கெட்டை என்று நின்று நின்று தின்று விடுவது போல பார்த்தேன். பசி தீரவில்லை.

*

இந்த செய்தியையும் சொல்லித்தான் ஆக வேண்டும். வால்பாறை போய் இறங்கியதும்.. ரூமுக்கு சென்று தயாராகி வெளியே வருகையில் மணி 4. சரி ஏதாவது சாப்பிடலாம் என்று அங்கும் இங்கும் தேடி எதிரே இருந்த கடைக்குள் நுழைந்தோம். போகும் போதே மனதில் சலசலப்பு. ஆனாலும் பசி. என்ன இருக்கிறது என்று கேட்டோம். ஓனரும் வேலையாளும் தடுமாறி ஏதோ பொய் சொல்கிறார்கள் என்று புரிந்தாலும்... சரி கொஞ்சமாக ஏதாவது கிடைத்தாலும் சரி தான் என்று சாம்பார் சாதம் கேட்டோம்.

சாம்பார் சாதம்னா சாம்பாரும் சாதமும் போட்டு கிண்டி தர்றது தான. அப்படித் தான் இருந்தது. உண்மையில் சாம்பார் சாதம் அங்கே இல்லை. அவர்கள் கிசுகிசுத்தது கேட்டது. ஆனாலும் உடல் சோர்வில் கவனமின்றி இருந்து விட்டோம். நினைத்த மாதிரியே சாம்பாரையும் சோற்றையும் கலக்கி கொண்டு வந்து கொட்டினார்கள். நாங்கள் இரண்டுக்கு ஆடர் கொடுத்திருந்தோம். ஆனால் ஒன்றே பயங்கரமாக இருக்க... அதோடு போதும் என்றோம். எங்கள் ஓட்டலில் பொடி நெய் தோசை சிறப்பு என்றார்கள். நம்பி நான்கு என்று சொல்லி விட்டோம். நடுவில் வேகாதது தான் சிறப்பின் சிறப்பம்சம் என்று புரிகையில்... எல்லாம் தலைக்கு மேலே போயிருந்தது. சுற்றிலும் சாப்பிட்டு விட்டு நடுவில் இருக்கும் மாவை வைத்து விட்டு எழுந்தோம். இலை எடுக்க சொன்னார்கள். என்னடா இது என்று எடுத்து போட்டு விட்டு.... இனி தான் கிளைமாக்ஸே இருக்கிறது.

425 ரூபாய் என்றார்களே. தூக்கி வாரி போட்டது. நம்ம வால்பாறையில் இப்படி ஒரு கொள்ளையா என்று நொடியில் தடுமாறி போனேன். ஏனோ விவரம் கேட்க மனம் தயாராக இல்லை. சோர்வாக இருக்கலாம். ஷாக்காக இருக்கலாம். ஏதோ ஒன்று. காசை கொடுத்து விட்டு வந்து விட்டோம். ( நான் சாபம் இட வில்லை). மிக மோசமான அனுபவம். நண்பர்களே கவனம். ஆனந்தாஸ் என்று பெயரிட்டு நிஜ ஆனந்தாஸ் என்று நம்மை நம்ப வைத்திருப்பார்கள்.

அடுத்த நாள் காலை துளசி பார்மஸி க்கு எதிரே இருக்கும் செட்டிநாடு உணவகத்தில் சாப்பிட்டோம். தரம். உணவிலும் சரி. உபசரிப்பிலும் சரி. இட்லியும் தோசையும் வடையும்... சும்மா அள்ளுச்சு. நன்றிகள்.

பயணம் இனிதே நிறைவடைந்து விட்டது... மீண்டும் சந்திப்போம். அடுத்த முறை மானாம்பள்ளியும் தலனாரும் திட்டத்தில் இருக்கிறது.

- கவிஜி

Pin It