அன்புள்ள மாலன்,

நடிகர் ரஜினிகாந்துக்கு நீங்கள் துக்ளக் இதழில் எழுதி இருக்கும் பகிரங்க மடல் மிகவும் வருத்தம் தருவதாக உள்ளது.. சனநாயக நாட்டில் அனைவருக்கும் அரசியலில் தாம் விரும்பிய வண்ணம் ஈடுபட உரிமை உண்டு. திரு ரஜினி அவர்கள் கட்சி ஆரம்பிப்பதும் அதனை நீங்கள் வரவேற்பதும் உங்கள் உரிமை. அதில் தலையிட்டுக் கருத்துச் சொல்ல யாருக்கும் உரிமையில்லை. ஆனால் ரஜினியை ஆதரிப்பதற்கான காரணங்களாக நீங்கள் சொல்லும் அப்பட்டமான பொய்கள்தான் வருத்தமடையச் செய்கின்றன.

இன்னும் எத்தனை காலம்தான் இந்த '53 ஆண்டுகள்' பின்னடைவு என்ற கள்ளப் பரப்புரையை தொடர்வதாக உத்தேசம் மாலன்? எத்தனையோ விவாத களங்களில் தமிழகம் வட மாநிலங்களை விட பன்மடங்கு முன்னேறியிருப்பது ஐயத்திற்கு இடமின்றி மெய்ப்பிக்கப்பட்டிருந்தும் இந்தக் கள்ளப் பரப்புரையைத் தொடர உங்களுக்கு கூச்சமாக இல்லையா மாலன்?

உங்களுக்கு மிகவும் பிடித்த கட்சியான பா.ஜ.க வின் துணைத் தலைவர் அண்ணாமலையே செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு வளர்ந்த மேலை நாடுகளுடன் ஒப்பிடும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது என ஒப்புக் கொண்டிருப்பதை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்.

திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன் கல்லூரிப் படிப்பு என்றால் அது பெரு நகரங்களுக்கு வந்தால்தான் கிடைக்கும் என்ற நிலையை மாற்றி இன்று, தன்னிதி கல்லூரிகளை விடுங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி இல்லாத நகரமே இல்லை என்ற நிலைக்கு தமிழகத்தை கொண்டு வந்திருக்கிறார்களே, அது எப்பேர்ப்பட்ட சாதனை. சுருங்கச் சொல்வதானால் தமிழகத்து இளைஞர்கள் உடல் உழைப்பு வேலை தேடி வட இந்திய தெருக்களில் அலையவில்லை.

மாறாக வட இந்திய இளைஞர்கள்தான் தமிழகத்திற்கு வேலைத் தேடி வருகிறார்கள். தன் மக்களை வாழ வைத்ததோடு வட மாநில மக்களையும் வாழ வைத்த திராவிட இயக்கங்களை பாராட்ட மனமில்லை என்றாலும் அவதூறு பேசாமலாவது இருங்கள். அதுதான் உங்கள் வயதுக்கு அழகு.

தமிழகத்தில் வெறுப்பு அரசியல் வேர் பிடித்து நிற்பதாக அடுத்து ஒரு அவதூறு சேற்றை அள்ளி வீசுகிறீர்கள். அதாவது திராவிட இயக்கங்கள் பார்ப்பன சமூகத்தின் மீது வெறுப்பை விதைப்பதாகச் சொல்கிறீர்கள். வெறுப்பு அரசியல் என்பதன் பொருள் என்ன?. செய்யாதக் குற்றங்களுக்காக அல்லது சில நபர்களின் குற்றங்களுக்காக அல்லது கற்பனையான குற்றங்களுக்காக சமூகத்தின் ஒரு பிரிவு மொத்தத்தையும் குற்றவாளிகளாகப் பார்க்கும் மனநிலையை உருவாக்கும் வகையில் பரப்புரை செய்வது.

அதன் விளைவாக குற்றவாளியாக்கப்படும் சமூகத்தின் மீது தொடர்ந்து உளவியல் தாக்குதல்களும், வன்முறைத் தாக்குதல்களும் நடத்துவது, இதுதானே வெறுப்பு அரசியல். இப்படிப்பட்ட அரசியலின் காரணமாக ஆயிரக்கணக்கில் மத, மொழி சிறுபான்மை மக்களும் தலித் மக்களும் கொல்லப்படும் இந்தியாவில்தான் தமிழ்நாடும் உள்ளது.

ஆனால் அப்படி ஒரே ஒரு பார்ப்பனர் நீங்கள் சொல்லும் வெறுப்பு அரசியலின் காரணமாக தமிழ்நாட்டில் கொல்லப்பட்டதுண்டா? ஏனிந்த பித்தலாட்டம் மாலன், உங்கள் வயதுக்கும் அனுபவத்துக்கும் இப்படிப் பொய் சொல்லி பித்தலாட்டம் செய்வது அசிங்கமாக இல்லையா? குறிப்பிட்ட ஒரு சமூகப் பிரிவின் ஆதிக்கத்தை எதிர்ப்பது, அவர்களால் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்கப் போராடுவது வெறுப்பு அரசியல் அல்ல, அதன் பெயர் உரிமை மீட்பு போராட்டம்.

அப்புறம் பெரியார் கடவுள் மதம், ஏன் மக்கள் குறித்து கூட கடும் சொற்களைப் பேசியதாகக் கொந்தளிக்கிறீர்கள். அய்யாவின் சொற்கள் அவராக வலிந்து சொன்னவையல்ல, மாறாக எதிர் வினையாக வந்த சொற்களே, தன் இன மக்கள் மீது இழிவை சுமத்தும் செய்திகளை வேறு எப்படியும் அவர் எதிர் கொண்டிருக்க முடியாது. மக்களை அவர் கடிந்து கொண்டது கூட ஒரு தந்தையின் இடத்திலிருந்து அவர்கள் மீது கொண்ட அக்கறையால்தான்.

ஆமாம், தங்கள் மீதான கடும் சொற்களுக்காக தமிழ் மக்களே அய்யாவின் மீது கோபித்து கொள்ளவில்லை. உங்களுக்கு ஏன் இவ்வளவு ஆத்திரம்?

தனிநபர் தாக்குதல் பற்றி பேசுகிறீர்கள், கலைஞரை, கனிமொழியை, பெரியாரை, ஸ்டாலினைப் பற்றி உங்களுக்கு விருப்பமான பா ஜ க வினர் தரக்குறைவாக பேசுவதைக் கண்டித்து விட்டு வாருங்கள்.மேற்கொண்டு பேசுவோம்.

அப்புறம், தமிழ்நாட்டில் ஊழல் என்றும் குடும்ப அரசியல் என்றும் மிகவும் கவலைப்படுகிறீர்கள். இவை தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கின்றனவா?அல்லது திராவிட இயக்கங்களில் மட்டும்தான் இருக்கின்றனவா? இந்தியாவில் வாரிசு அரசியலுக்கு இடம் கொடுக்காத ஒரே ஒரு கட்சியை உங்களால் சுட்டிக் காட்ட முடியுமா? இந்தியா போன்ற நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் செல்வாக்கு பெருமளவு நீடிக்கும் நாட்டில் வாரிசு அரசியல் இல்லையென்றால்தான் ஆச்சரியப்பட வேண்டும்.

ஊழலை ஒழிக்க யாரை வருந்தி வருந்தி அழைக்கிறீர்கள் என்று பார்த்தால் அவரே வருமான வரி ஏய்ப்பாளராக இருக்கிறார். ரஜினிகாந்தின் வரி ஏய்ப்புக்கு ஒரு சோறு பதமாக பின்னூட்டத்தில் தி இந்து ஆங்கில நாளிதழின் சுட்டியை பகிர்கிறேன்.

எதிர்க்கட்சி ஆக்கபூர்வமான ஆலோசனைகள் எதுவும் சொல்லாமல் குறைக் கூறுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறது என குற்றம் சாட்டுகிறீர்கள்.

எப்படி உண்மைக்கு மாற்றமாக உங்களால் இப்படி பேச முடிகிறது மாலன்? தமிழக அரசின் எத்தனைச் செயல்பாடுகள் எதிர்க்கட்சி தலைவரின் வலியுறுத்தலால் வந்தவை என பட்டியல் வேண்டுமா உங்களுக்கு? இப்போது கூட தமிழ்வழி கல்வி பயின்றவர்களுக்கு இருபது விழுக்காடு இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தது கூட ஸ்டாலின் குரல் கொடுத்ததன் விளைவுதானே அப்புறம் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியலுக்கு ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள். அதை அவரே கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார். ஏனிந்த அரசவைப் புலவர் வேலை உங்களுக்கு?

கடைசியாக ரஜினிகாந்த் அடிப்படையையே தகர்த்து எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என ஆவேசப்படுகிறீர்கள். புரிகிறது மாலன், தமிழகத்தை ம.பி உ பி பீகார் போல மாற்றத் துடிக்கிறீர்கள். வாய்ப்பில்லை மாலன் வாய்ப்பில்லை. கேட்க உங்களுக்கு வருத்தமாகத்தான் இருக்கும், ஆனால் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இது தந்தை பெரியாரால் பண்படுத்தப்பட்ட மண். நெல்லும் கம்பும் கரும்பும் சோளமும் விளையும் மண்ணில் கள்ளிச்செடிகளுக்கு இடமில்லை.

2021 மே மாதம் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உங்களுக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதும் ஆவலுடன்,

- திப்பு

Pin It