கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு நிகழ்வுகள் 2020இல் மீண்டும் பொது வெளியில் ஊடகங்களில் விவாதத்துக்கு வந்தது. ‘துக்ளக்’ பத்திரிகையில் 50ஆவது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அந்த மாநாட்டில் ராமன்-சீதை சிலைகள் நிர்வாணமாக செருப்பு மாலைகள் போடப்பட்டு எடுத்து வரப்பட்டதாகப் பேசினார். அப்படி ஏதும் நடக்கவில்லை. உண்மையைத் திருத்திப் பேசுகிறார் நடிகர் ரஜினிகாந்த் என்று திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பெரியார் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில், தான் பேசியது உண்மை என்று ரஜினிகாந்த் கூறியதோடு, சம்பவம் நடந்த சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ‘அவுட்லுக்’ என்ற ஆங்கிலப் பத்திரிகையில் வெளி வந்த கட்டுரையில் இடம் பெற்ற சில வரிகளை தனது பேச்சுக்கு ஆதாரமாகக் காட்டினார். இதைத் தொடர்ந்து சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்தும், அது தொடர்பாக நடந்த வழக்குகள் குறித்தும் விரிவாக மூத்த வழக்கறிஞர் துரைசாமி, ஊடகங்கள், கூட்டங்கள் வழியாக விளக்கங்களை அளித்தார்.

இந்த வழக்குகள் குறித்து எவ்வித ஆதாரங்களும் இல்லை என்றும், ‘துக்ளக்’ சோ சாட்சியாக விசாரிக்கப்பட்டார் என்பதற்கு ஆதாரம் இல்லை என்றும், அது குறித்து விளக்கம் தருவதற்கு ‘துக்ளக்’ ஆசிரியர் சோ இப்போது உயிருடன் இல்லை என்றும், குருமூர்த்தி பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கும் பதிலை எழுதியிருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து வழக்கறிஞர் எஸ்.துரைசாமி ‘துக்ளக்’ ஏட்டுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

சேலம் மூடநம்பிக்கை ஊர்வலம் தொடர்பாக நடந்த வழக்குகளையும் ‘துக்ளக்’ சோ நீதிமன்றத்தில் சாட்சியமளித்த போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளையும் விரிவாக பதிவு செய்கிறது இந்த மறுப்புக் கடிதம்.

1971 சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஒட்டி தொடரப்பட்டது மூன்று வழக்குகள்.

s duraisamy advocate1. சேலம் நகர ஜனசங்கத்தைச் (RSS ன் கிளை) சேர்ந்த ஒருவர், மேற்படி ஊர்வலத்தில் ராமர் படத்தை செருப்பால் அடித்ததாலும், இந்து கடவுள்களின் நிர்வாணப் படங்களை ஊர்வலமாகக் கொண்டு வந்ததாலும் அவருடைய மனது புண்பட்டதால் இந்திய தண்டனைச் சட்டம் 294(அ) படி தந்தை பெரியாரையும் மற்றம் 2. திருவாரூர் தங்கராசு 3. பேராசிரியர் தி.வை.சொக்கப்பா (முன்னாள் சேலம் கலைக் கல்லூரி முதல்வர்) 4. சேலம் நகர திராவிடர் கழக செயலாளர் பச்சமுத்து 5. சேலம் நகர திராவிடர் கழகத் தலைவர் ஆர். நடேசன் ஆகியோர் மீது சேலம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தொடர்ந்தார்.

2. இரண்டாவது வழக்கு மேற்படி சேலம் மாநாட்டில் தந்தை பெரியார் நிறைவேற்றிய தீர்மானம் ‘ஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது என்பதை ஒரு குற்றமாக்கக் கூடாது”. இந்தத் தீர்மானத்தை 1. இந்து 2. இண்டியன் எக்ஸ்பிரஸ் 3. தினமணி ஆகிய பார்ப்பன பத்திரிக்கைகள் ‘மாற்றான் மனைவியை அபகரித்துக் கொண்டு போனால் அதை தவறாகக் கருதக்கூடாது” என திரித்து வெளியிட்டது. அது தவறான செய்தி என்பதால் மூன்று பத்திரிக்கை ஆசிரியர்களின் மீது மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் என்ற முறையில் பேராசிரியர் தி.வை. சொக்கப்பா சென்னை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 500இன் கீழ் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

3. மூன்றாவது வழக்கு மேற்படி மானநஷ்ட வழக்கு நிலுவையில் இருந்த பொழுது இந்து பத்திரிக்கையில் தொடர்ந்து சேலம் மாநாட்டு தீர்மானத்தை திரித்து வெளியிட்டுக் கொண்டே இருந்தது. அதனால் இந்து பத்திரிக்கையின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி பெயரில் தொடரப்பட்டது. நீதிபதிகள் தலைமை நீதிபதி கே.வீராசாமி மற்றும் வி.வி.ராகவன் முன்பு விசாரணைக்கு வந்து, சம்மனை பெற்றுக்கொண்டு இந்து பத்திரிக்கையின் அன்றைய ஆசிரியர் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த பொழுது தீர்மானத்தை மாற்றி பிரசுரித்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்த மூன்று வழக்கிலும் எஸ்.துரைசாமி ஆகிய நான்தான் ஆஜர் ஆனேன். மற்றப்படி நீர் (துக்ளக் குருமூர்த்தி) எழுதியது போல ஏதோ ஒரு வக்கீல் அல்ல. ஏன் என் பெயரைச் சொன்னால் நாக்கு அழுகிவிடுமோ இதுதான் உமது யோக்கியமா ஜாதி வெறி பிடித்தவனெல்லாம் பத்திரிக்கை ஆசிரியரானால் இப்படித்தான். 05.02.2020 துக்ளக்கில் நீங்கள் எழுதியது முற்றிலும் தவறு. சேலம் குற்றவியல் வழக்கில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் அது சட்டப்படியும் தர்மப்படியும் குற்றமல்ல என்பதுதான் எங்கள் தரப்பு வாதம். பொதுவாகவே ஒரு நாத்திகன் என்பவன் பொய் சொல்லமாட்டான். சுயசிந்தனையும், நாணயமும் பொது ஓழுக்கமும், பொதுச்சேவை எண்ணமும் கொண்டவன்தான் நாத்திகன். இந்த மூன்று வழக்குகளையும் ஒரே வழக்குபோல் பாவித்து துக்ளக்கில் வெளியிட்ட செய்தி உண்மையல்ல; அப்பட்டமான பொய்.

1971 சேலம் ஊர்வலம் பற்றி முதலாவதாக துக்ளக்கில் வந்த செய்தியின் மீது யாரும் வழக்கு தொடரவில்லை. அப்படி ஒரு செய்தி எங்கும் பரவவில்லை காரணம் துக்ளக்கில் வந்த செய்தியே ஆபாசமாகத்தான் இருந்தது. அதோடு தந்தை பெரியார் இராமனை செருப்பால் அடிப்பது போல் படம் போட்டு இராமனை மேலும் கேவலப்படுத்தியதோடு பொதுமக்கள் பெரியார் ஏன் இராமனை செருப்பால் அடித்தார் என்று தெளிவாக புரிந்து கொள்ள அது சந்தர்ப்பமாக அமைந்தது. அதற்குப் பிறகு நூற்றுக்கணக்கான கூட்டங்கள் நடத்தி ஏன் இராமனை செருப்பால் அடிக்க வேண்டுமென பொதுமக்கள் புரிந்து கொண்டார்கள். 05.02.2020துக்ளக்கில் வந்த அரைப் பக்க செய்தியில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக் காட்டுகிறேன்.

1. இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் மீது சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில் பேராசிரியர் டி.வி.சொக்கப்பாவால் தொடரப்பட்டது மான நஷ்ட வழக்கு. அதில் மேற்படி பத்திரிக்கைகள் பேராசிரியர் தி.வை. சொக்கப்பாவுக்கு மாநாட்டு வரவேற்புக் குழு தலைவர் என்ற முறையில் வழக்கு தொடர சட்டபடி அதிகாரம் இல்லை என்ற சட்டப் பிரச்சினையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர், சென்னை உயர்நீதிமன்றம் இந்து, எக்ஸ்பிரஸ், தினமணி தொடர்ந்த வழக்கை பேராசிரியர் தி.வை. சொக்கப்பாவிற்கு அதிகாரம் உள்ளது எனக்கூறி அவர்கள் வழக்கை தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து மேற்படி பத்திரிக்கைகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து. அந்த மேல்முறையீட்டில் பேராசிரியர் சொக்கப்பா நேரடியாக பாதிக்கப்பட்டவர் இல்லை என்ற காரணத்தைக் கூறி சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தது. இதற்கும் துக்ளக் ராமசாமிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

இந்து பத்திரிக்கையின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சேலத்தில் நடந்த ஜனசங்கத்தினர் பெரியார் மற்றும் 4 பேர் மீதும் தொடர்ந்த வழக்கில் ஜனசங்கத்திற்குக்காக துக்ளக் ராமசாமி சாட்சி சொல்ல அழைத்து வரப்பட்டார். துக்ளக் ராமசாமி மீது யாரும் வழக்கு தொடரவில்லை. அவரை ஒரு பொருட்டாகவே யாரும் கருதவில்லை. சாட்சி சொல்ல நீதிமன்றத்திற்கு வந்தவர் சொல்வது வாக்குமூலமல்ல. அதற்குப் பெயர் சாட்சியம் (evidence) போலீஸில் கொடுப்பதுதான் வாக்குமூலம் செக்குக்கும் சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாதவரெல்லாம் பத்திரிக்கை ஆசிரியராக வந்தால் இப்படித்தான் எழுதுவார்கள். சோ ராமசாமி குற்றவாளியாக நீதிமன்றம் வரவில்லை பெரியாருக்கு எதிராக சாட்சி சொல்ல வந்தார். அதுவும் குற்ற வழக்கு தொடர்ந்த ஜனசங்கத்தினர் அழைத்ததால். நான் எந்த குற்றவாளியையும் குறுக்கு விசாரணை செய்யவில்லை. பிராது தரப்பு சாட்சியைத்தான் குறுக்கு விசாரணை செய்தேன். குற்றவழக்கில் சாட்சி சொல்ல வந்த யாரிடமும் எந்த வழக்கறிஞரும் கேட்கும் முதல் கேள்வி ‘நீங்கள் சம்பவத்தை நேரில் பார்த்தீர்களா? என்பதுதான். நானும் துக்ளக் ராமசாமியிடம் அதே கேள்வியைத்தான் கேட்டேன், அவர் சொன்ன பதில் நான் நேரடியாக சம்பவத்தை நேரில் பார்க்கவில்லை. ஜனசங்கத்தார் கொடுத்த தகவலின் பேரில்தான் நான் சாட்சி சொல்ல வந்தேன்.

சாட்சியத்தில் துக்ளக் ராமசாமி கூறியது இதுதான், ராமசாமி நாயக்கர் நடத்திய ஊர்வலத்தில் ராமனுக்கு செருப்புமாலை போட்டதோடு செருப்பால் அடித்தார்கள் மற்றும் இந்து கடவுள்களின் படங்களை நிர்வாணமாக எடுத்து வந்தார்கள். அது என் மனதை புண்படுத்தியது, துக்ளக் பத்திரிக்கையில் ஊர்வலத்தில் எடுத்து வந்த படங்களைத்தான் வெளியிட்டேன்.

அடுத்த கேள்வி மனது புண்பட்டதென கூறுகிறீர்களே எந்த டாக்டரிடம் போய் மருந்து போட்டு புண்னை ஆற்றினீர்கள்? என்று கேட்டேன். எரிச்சலடைந்த ராமசாமி நீண்ட விளக்கம் கொடுத்தார்

சாட்சி எரிச்சல் அடைய வேண்டுமென்பதற்காகத்தான் அந்த கேள்வி கேட்கப்பட்டது. அடுத்து மனது புண்படுவது என்றால் என்ன எனக் கேட்டேன். அதற்கும் நீண்ட விளக்கம் கொடுத்தார். அதற்குப் பிறகு நான் கேட்ட கேள்வி ராமன் பிறப்பு பற்றியது. வால்மீகி இராமாயணத்தையும், கம்பராமாயணத்தையும் காட்டி புத்திர காமேஷ்டியாகத்தைப்பற்றி வால்மீகியும் கம்பனும் எழுதி வைத்ததை ‘துக்ளக்’ சோ-வையே படிக்கச் சொல்லி அதைப் பதிவு செய்தேன்.

வால்மீகி சொல்லும் புத்ரகாமேஷ்டியாகம்

‘ப்ரதிப்ரஸ்தாதா ராபத்னிகளை அழைத்து வரவேண்டும். அவர்கள் மூன்றுதரம் ஸ்வ்யமாயும், மூன்றுதரம் அபஸவ்யமாயும், மூன்றுதரம் ஸவ்யமாயும் குதிரையை ப்ரதக்ஷிணஞ் செய்ய வேண்டும். பிறகு அத்வர்யு மஹிஷியை அதின் பக்கத்தில் படுக்க வைத்து, வெண்மையான பட்டால் அவர்களை மூடி, ‘அம்பே! அம்பால்யம்பிகே’ யென்ற மந்திரங்களை ஜபிக்கவேண்டும். குதிரையில் ஆவாஹனஞ் செய்யப்பட்டிருக்கும் தேவதை அவளுக்கு ஸந்தானத்தைக் கொடுக்கும்.”

சுவாமி சிவாநந்த சரஸ்வதி கூறும் புத்திர காமேஷ்டி யாகம்

முற்காலங்களில் யஜமானனுக்கும், யாகஞ் செய்வோனுக்குப் பலபேர் பத்தினிகள் இருந்தனர். அசுவமேத யாகம் செய்யும்போது, பத்தினிகள் எல்லோரும் கைகளில் பானேஜனம் வைத்துக்கொண்டு குதிரையின் பக்கத்தில் வருகிறார்கள். பிறகு கீழ்க் குறித்திருக்கிற மந்திரத்தைச் சொல்லி, ஒன்பதும் குதிரையைச் சுற்றி வரல் வேண்டும். அதன் விபரம்:- மந்திரத்தின் முதற்பகுதி சொன்னவுடன், ஒருதரம் வலமாகவும், பிறகு ஒன்றும். அடுத்தபடியாக மந்திரத்தின் மூன்றாம் பகுதியைச் சொல்லிக் கொண்டு ஒருதரம் மவுனமாகவும், பின் இரண்டு தரமும் வலம் வரல் வேண்டும். இதற்கு மந்திரம்:-

1. ‘கணானாம் த்வா: கணபதிம் ஹவாமஹே” (வஸோமம)
2. ‘ப்ரியாணாம் த்வா: ப்ரியபதிம் ஹவாமஹே” (வஸோமம)
3. ‘நிதீனாம் த்வா நிதிபதிம் ஹவாமஹே” (வஸோமம)

பொருள்: ஓ குதிரையே! கணங்களின் தலைவனும், விருப்பத்தை நிறைவேற்றுந் தலைவனும், பொருட்களின் தலைவனு மாகிய உன்னை அழைக்கிறோம்.. நீ எனது பர்த்தாவாக இருக்கவேண்டும்.

(மனைவிகளுள் தலைவியை மஹிஷி யென்பர்; அவளுக்குத்தான் குதிரை நாயகனாக வர வேண்டுமாம்) பிறகு, பானேஜனத்தால் யஜமானனும், பத்தினி களும் பிராணசோதனம் (அங்கங்களைத் தொடுதல்) செய்யக்கடவர். பிறகு மஹிஷி யானவள் குதிரையை நெருங்கி, அதனுடன் சேர்ந்து படுத்துக் கொண்டு கீழ்க்காணும் மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.

‘ஆஹாமஜானி கர்ப்பத மாத்வ மஜாஸி கர்ப்பதம்”

பொருள்: ஓ குதிரையே! கர்பத்தை உண்டு பண்ணுகிற வீரியத்தை இழுத்து யோனியில் க்ஷபிக்கிறேன் (க்ஷபித்தல்-இடுதல்) அதைப்போல் நீயும் செய்ய வேண்டும். இம்மந்திரம் சொல்லி முடிந்ததும், ஒரு துணியைப் போட்டு குதிரையையும், மஹிஷியையும் மூடிவிட்டு அத்வாயு சொல்லவெண்டிய மந்திரம்.

‘ஸ்வர்க்கே லோகே ப்ரோணுவா தாம்’

பொருள்: ஓ குதிரையே! மஹிஷியே! நீவிரிருவரும் இந்த யாக பூமியில் இவ்வுடையினால் உடல் முழுவதும் மறைத்துக் கொள்ளுங்கள்.

இதன் பின்னர் மஹிஷி சொல்ல வேண்டிய மந்திரம்:

‘வருஷா வாஜி ரேதோதாரேதோ ததாது’

பொருள்: சுக்கிலத்தைத் தன்னுள் வைத்துக் கொண்டிருக்கிற குதிரை, அதை என்னிடத்தில் வைக்கட்டும். இதன் பிறகு யஜமானன் குதிரையும், பத்தினியும் படுத்திருக்கும் இடத்திற்குச் சென்று குதிரையைத் தொட்டுக் கொண்டு கீழ்க்குறித்த மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.

‘உத்ஸக்த்யா அவகுதம் தேஹி ஸமஞ்ஜிம் சாரயா
வ்ருஷன் ய: ஸ்த்திரீணாம் ஜீவபோஜன’

பொருள்: புணர்ச்சி வேளையில் என் மனைவியாகிய இவளிடத்தில் (மஹிஷி) நான் செய்யும் காரியங்களை எனக்குப் பதிலாக நீ செய்யவேண்டும்.

அத்வர்யு முதலிய அய்வரும் (அத்வர்யு பிரஹ்மா, ஹோதா, உத்காதா, ஃதா) குமாரிகளும், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிற வாக்கியங்கள் வருமாறு:

முதலில் அத்வர்யு குமாரியை விளித்துத் தனது விரலால் அவளின் அல்குலைச் சுட்டிக்காட்டிப் பரிஹாசமாகச் சொல்லுகிறான்:

‘யகாஸகௌ சகுந்தகா ஹலகிதி வஞ்சதி:
ஆஹந்தி கபே பஸோ நிகல்யா பீதி தாரகா”

பொருள்: பெண்கள் விரைந்து நடக்கும் போதும், புணர்ச்சிக் காலத்திலும் யோனிக்குள் ஹலஹலாவென்னும் ஒலியுண்டாகிறது. பிறகு வீரியம் வெளிப்படுகிறது.

இதற்குக் குமாரியானவள் அத்வர்வின் லிங்கத்தைச் சுட்டிக்காட்டிக் கொண்டு விடையளிக்கிறாள்.

அந்த ராமாயணங்களின்படி தசரத மனைவிகள் விடியும் வரை குதிரைகளுடன் படுக்க வைத்தும் அங்க தேசத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ரிஷ்ய சிங்கருடன் புணரச்செய்தும் 12 மாதங்கள் கழித்து (10 மாதமல்ல) கோசலைக்கு ராமம், சுமித்திரைக்கு லட்சுமண், சத்துருக்கும் கைகேகிக்கும் பரதனும் பிறந்தார் என்று சோ ராமசாமின் வாயாலேயே சொல்வ வைத்து கணவன் அல்லாத மாற்றானுக்கும் குதிரைக்கும் பிறந்தவன் எப்படி கடவுள் ஆவான் என்றும் அகலிகையை மீது இந்திரன் இச்சை கொண்டு திருட்டுத்தனமாக உடலுறவுக் கொண்டதைப் பற்றியும் கௌதம முனிவர் கையும் களவுமாக இந்திரனை பிடித்துக்கொண்டது பற்றியும் கோபம் கொண்ட கௌதம முனிவர் இந்திரனுக்கு உடம்பெல்லாம் பெண்குறியாக போகும்படி சாபமிட்டதையும் உடம்பெல்லாம் பெண்குறி அடைந்த தேவலோக கடவுள் இந்திரன் ஒடி ஒலிந்தது பற்றியும் பிறகு தேவகனங்களெல்லாம் மூவேழு உலகத்திலும் தேடியப்பிறகு இந்திரன் ஒளிந்திருந்த இடத்தை கண்டுபிடித்து இழுத்து வந்து கௌதம முனிவர்முன் நிறுத்தியதைப் பற்றியும் பிறகு கௌதமமுனிவர் சாபவிமோசம் கொடுத்ததைப் பற்றியும் அகலிகை மீட்ப படலத்தில் வால்மீகியும் கம்பரும் விரிவாக கூறியதைக் காட்டியும்

“இந்த யுக்தியை அவருக்கு உபதேசித்து அஹல்யையைப் பார்யையாயடையும்படி செய்தது யாரே?” என்று கேட்க, நாரதர், ‘என்னைத்தவிர வேறு யாருக்கு இவ்வளவு ச்ரத்தை’ யென்றார். இந்திரன் வெட்கத்தாலும் வருத்தத்தாலும் புத்தி மயங்கி, ‘நாரதரே! நான் முப்பத்து முக்கோடி தேவதைகளுக்கு அரசனென்பது நிஜமானால் அந்த அஹல்யையை அனுபவிக்காமல் அவளுடைய பதிவ்ரதா தர்மத்தைக் கெடுக்காமல் விடுகிறதில்லை. அதினால் எது வந்தாலும் வரட்டுமெ’ என்று ப்ரதிக்ஞை செய்தான்.

2. ‘கௌதமர் அஹல்யையை, நீ ஜனஸ்தானத்தில் நதியாகக் கடவதெ’ன்று சபித்தார். ‘ராமன் அங்கே ஸஞ்சரிக்கையில் அவருடைய பாதம் பட்டு அவளுக்குச் சாபவிமோசனமாயிற்றெ’ என்று சிலர் சொல்லுகிறார்கள். ஆனால் இது வேறுகல்பத்தில் நடந்திருக்கலாம். (ஆ.ரா.III. 18-22. ப்ரஹம புராணம் 87).

கண்டான் - இந்திரன் காக்கை ரூப மெடுத்துப் பாதிராத்ரி குண்டலங்களைக் கேட்க, அவன் தன் பார்யையான மத யந்திரயென்பவளுக்கு ஓர் அடையாளஞ் சொல்லியனுப்பினான். அதைக் கேட்டு அந்தப் பதிவ்ரதை அவைகளை உதங்கரிடத்தில் கொடுத்து, ‘இதைப் பூமியில் வைத்தால் நாகர்கள் அபஹரிப்பார்கள். போஜனஞ்செய்து அசுத்தமான ஒருவன் இவைகளை அணிந்தால் யக்ஷிர்கள் அபஹரிப்பார்கள். இவைகளை ஜாக்ரதை யாய் வைக்காமல் தூங்கினால் தேவர்கள் அபஹரிப்பார்கள். இவை இரவும் பகலும் கணக்கில்லாததனத்தைக் கொடுக்கும். ராத்hயில் ப்ரகாசத்தால் சந்த்ரனையும் நக்ஷத்ரங்களையும் மறைக்கும். இதை அணிந்து கொள்ளுகிறவன் பசிதாஹத்தி லிருந்தும் அக்னி விஷம் அபாயம் முதலியவைகளிடமிருந்தும் விடுபடுவர்” னென்று எச்சரித்தாள். உதங்கர் அவைகளைக் கொண்டுவருகையில் அவை அஜாக்ரதையால் நாகர்களால் அபஹரிக்கப் பட்டன. தன் தபோமஹிமையால் அக்னி இந்திரன் முதலிய தேவர்களின் ஸஹாயத்தைப் பெற்று, அவைகளை நாகலோகத்திலிருந்து கொண்டுவந்து, தன் குருபத்னியான அஹல்யைக்குக் கொடுத்தார் - பாரதம், அச்வமேதபர்வம். 56.

மற்றும் வால்மீகியில் சிவபெருமான் பார்வதியும் வருடக்கணக்கில் உடலுறவு கொண்டிருந்து தேவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க புணர்வதை, அதன்பிறகு வால்மீகி ராமாணத்தில் உள்ள குறிப்பைக் காட்டி ராமனுக்கு பல ஸ்திரிகளுடன் தொடர்பு உண்டு என்றேன்.

அதைப் படிக்க சோ ராமசாமி முகம் சுருங்கியது ஆமாம் அப்படித்தான் எழுதப்பட்டுள்ளது என்றார், அதற்கடுத்து ராமன் லட்சுமண் சீதை ஆகியோர் மாமிசம் சாப்பிடுவார்கள் மது அருந்துவார்கள் என்பது சரிதானா என்றேன் ‘பொய் அபாண்டமான பொய்” இது துக்ளக் ராமசாமி தந்த பதில்.

நான் பொய் சொல்லமாட்டேன் இதைப் படியுங்கள் என்று வால்மீகி ராமாயணத்தில் உள்ள கீழ்கண்ட வரிகளை படிக்கச் சொன்னேன்.

‘இப்படி அநேக ஸ்தலங்களில் ஸஞ்சரிதத்து ஆச்ரமத்திற்கு வந்தார்கள். கைங்கர்யபாக்யத்தைப் பெற்ற லட்சுமணன் அவர்களை எதிர்கொண்டழைத்து உபசரித்தார். சுத்தமான பாணங்களால் கொல்லப்பட்ட பத்து கறுப்புமான்களை ரக்தம் உலர்வதற்காகத் தனித்தனியாய்ப் போட்டிருந்ததைக் கண்டு ராமன் ஸந்தோஷித்து, ‘ஸீதே! விதிப்படி நித்யபலிகளைக் கொடு” வென்றார். அவள் முதலில் பூதங்களுக்குப் பலிவைத்து, ராமலக்மணர்களுக்கு மாம்ஸத்தையும் மதுவையும் கொடுத்தாள். அவர்கள் போஜனஞ் செய்து திருப்தியடைந்து கை கால்களைக் கழுவி ஆசமனஞ் செய்தபிறகு, ஜானகி ஆஹாரஞ் செய்தாள். ‘உலர வைக்கப்பட்டிருந்த மாம்ஸத்தில் உபயோகப்படாத பாகங்களைக் காக்கைகளுக்காக வைத்திரு” வென்று ராமன் ஸீதைக்குச் சொன்னார்.”

பாவம் சோ ராமசாமியின் சப்த நாடியும் ஒடுங்கியது பேச்சு வரவில்லை வால்மீகி இராமாயணத்தில் அப்படித்தான் உள்ளது என்றார். இதை வால்மீகி சொன்னால் உங்கள் மனம் புண்படாது தாங்கள் சொன்னால் புண்படுமா என்றதற்கு ராமசாமியிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அதன்பிறகு தமிழக கோவில்களில் உள்ள ஆபாச சிலைகளின் புகைப்படத்தை காட்டி இது உங்கள் மனதை புண்படுத்தவில்லையா என்றதற்கும் இது எல்லாம் மதநம்பிக்கைதான் என்றார் சுருதி குறைந்து விட்டது. அதன்பிறகுதான் கேட்டேன் தந்தை பெரியார் மீது ஜனசங்கத்தினர் செருப்பை வீசியது உங்களுக்கு உடன்பாடா என்று அப்பொழுது தான் துக்ளக் ராமசாமி சொன்னார்

ராமசாமி நாயக்கர் சுதந்திர போராட்ட தலைவர். பிராமண துவேஷி என்பதைத் தவிர அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. அவர் மீது செருப்பை வீசியது கண்டிக்கதக்கது அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று இது எதுமே தெரியாமல் அரைவேக்காட்டுத்தனமாக எனது பேட்டியில் கூறியதை அபாண்டமான பொய் உளறியிருக்கிறார் இன்றைய துக்ளக் ஆசிரியர். எதையும் வரலாறு தெரிந்து பேசக் கற்றுக் கொள்ளும் துக்ளக் ராமசாமி மீது எந்த வழக்கும் இல்லை ஜனசங்கத்தார் தொடர்ந்த வழக்கில்தான் தந்தை பெரியார் மீது செருப்பு வீசியவர்களுக்காக பெருந்தன்மையாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார் ராமசாமி குற்றவாளியாக அவர் நீதிமன்றம் வரவில்லை சாட்சியாகத்தான் நீதி மன்றம் வந்தார். அதனால்தான் குறுக்கு விசாரணைக்கு ஆளானர். அவர்மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. தவறு செய்தவர்களுக்காகத் தான் அவர்கள் சார்பில் ‘துக்ளக்’ சோ மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

கொஞ்சமாவது அறிவு நாணயம் இருந்தால் இந்த மறுப்பை உமது பத்திரிக்கையில் வெளியிடுங்கள் என்று வழக்கறிஞர் எஸ். துரைசாமி மறுப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.