tho.paaஅஞ்சலி

2020 டிசம்பர் 24ஆம் நாள் இரவு 8 மணியளவில் பாளையங்கோட்டையைச் சார்ந்த திரு. மானேந்தியப்பன் என்ற (காசி கிராபிக்ஸ்) அறிஞர், தொ.ப. மறைந்துவிட்டார் என்ற அதிர்ச்சிச் செய்தியைத் தெரிவித்தார்.

மரணம் இயற்கையானதுதான். நம்மைச் சார்ந்தவர்கள் - நம் மீது அன்பு செலுத்தியவர்களின் மரணம் என்பது அதிர்ச்சி தரக் கூடியதுதானே. சிறிது நேரம் என்னால் ஏதும் செய்ய இயலவில்லை. அவருடன் பழகியது, உரையாடியது, அவருடைய எழுத்துகளை வாசித்தது, என்னுடைய பேராசிரியர் தே.லூர்து அவர்களுடன் விவாதங்களை அவர் நிகழ்த்தியது.

இப்படிப்பட்ட சிந்தனைகள் மனத்தை ஆக்கிரமித்தன. உடனே போக வேண்டும் என மனம் சொல்லியது. உடல் இடம் கொடுக்கவில்லை. மறுநாள்தான் கண்ணாடிப் பெட்டிக்குள்ளிருந்த அவருடைய உடலைப் பார்த்தேன்.

அவருடைய வீட்டுக்கு எப்போது சென்றாலும் ‘என்னார்’ என்று அவர் அழைப்பது நினைவுக்கு வந்தது. மீண்டும் அவர் நிகழ்த்திய உரையாடல்கள் நினைவுக்கு வந்தன. உரையாடலுக்கு அற்புதமான மனிதராயிற்றே! மணிக்கணக்கான - கொஞ்சம்கூட சலிக்காத உரையாடலை மறக்க முடியுமா!

தொ.ப. என்று அவருடைய நட்பு வட்டாரத்திலும் மாணவர்களாலும் அழைக்கப்பட்ட பேராசிரியர் தொ. பரமசிவன் இப்போது நம்மிடையே இல்லை. ஆனால் அவர் விதைத்துச் சென்ற சிந்தனைகள் நூல் வடிவிலும் ஒலி ஒளி வடிவிலும் நம்முடன் வாழ்கின்றன என்று மனம் ஒரு நொடி அமைதிப்படுத்தினாலும் மீண்டும் தொ.ப. நினைவு ஆட்கொண்டு விடுகிறது. எனக்கு மட்டுமல்ல; அவருடன் பழகிய எல்லாருக்கும் அப்படித்தான்.

முகம் தெரியாத இளைஞர்களையும் அவர் கவர்ந்துள்ளார் என்பதை அவருடைய இறுதி ஊர்வலம் காட்டியது. தமிழகம் முழுவதுமிருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட கருஞ்சட்டையணிந்த இளைஞர்கள் அறிஞர் தொ.ப.வின் சிந்தனைகளை விண்ணைப் பிளக்கும் கோஷங்களாக உருவாக்கி ஊர்வலத்தோடு சென்றனர்.

1950இல் பாளையங்கோட்டையில் பிறந்த தொ.ப., தூய சவேரியார் கல்லூரியில் இளங்கலையும், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் முதுகலையும் பயின்றவர். மதுரைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் முத்து. சண்முகம் பிள்ளையின் வழிகாட்டுதலில் அழகர் கோயில் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

இளையான்குடி ஜாகீர் உசேன் கல்லூரியில் பணியாற்றினார். அதன்பின் மதுரை தியாகராசர் கல்லூரியில் பணியாற்றினார். 1998இலிருந்து 2008 வரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழியல் துறைப் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார்.

அவர் ஒரு பன்முகத் தன்மை கொண்ட ஆய்வாளர். வைணவத்தை கசடறக் கற்றவர். அதே நேரத்தில் கடவுள் மறுப்பாளராகவும் திகழ்ந்தார். பண்பாடு குறித்தும் சமயங்கள் குறித்தும் அடித்தள மக்கள் ஆய்வுகளின் தேவை குறித்தும் கூர்மையான கருத்துகளை முன் வைத்தவர்.

திராவிடக் கருத்தியலோடு கூடிய ஆய்வு முறையியலை அவர் பின்பற்றினார். எளிமையான மொழியில் தமது கூர்மையான கருத்துகளை முன்வைத்தவர். எச்சங்களாகச் சிதறிக் கிடக்கும் தமிழர் பண்பாட்டின் வேர்களைக் கண்டடைவதில் பெருமுயற்சி செய்தவர்.

கீழிருந்து வரலாற்றை எழுத வேண்டும் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டிருந்தார். யாரெல்லாம் தமிழியலில் ஆர்வம் கொண்டு ஆய்வுகளை மேற்கொள்கிறார்களோ அவர்களையெல்லாம் சந்தித்து உரையாடுவது அவருடைய வழக்கம். தமிழியல் ஆய்வையே வாழ்க்கையாகக் கொண்டவர்.

அறிஞர் தொ.ப. ஒரு பெரியாரியச் சிந்தனையாளர். ஒரு நேர்காணலில் ‘உங்களைப் பெரியாரிஸ்ட் என்று அழைக்கலாமா?’ என்ற கேள்விக்கு ‘95 சதவிகிதம் நான் பெரியாரிஸ்ட் தான். அவரது கலை, பண்பாட்டுப் புரிதல் பற்றி எனக்குக் கருத்து வேறுபாடு உண்டு.

எனினும், அவரது காலம் வேறு என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்’ என்று அவர் பதிலளிக்கிறார் (நேர்காணல் செய்தவர்: ஆர்.ஆர். சீனிவாசன், தலித்முரசு, டிசம்பர் 2001).

அவருடைய அழகர்கோவில் குறித்த ஆய்வு கோவிலாய்வுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் வரலாற்றுப் பேராசிரியர்களே கோவிலாய்வில் ஈடுபட்டிருந்தனர். கே.கே. பிள்ளையின் சுசீந்திரம் கோவில் பற்றிய ஆய்வினை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

கோவிலை மையமாகக் கொண்டு வேறுபட்ட முறையில் தமிழ்த் துறையில் ஆய்வு நிகழ்த்தியவர் தொ.ப. அவருடைய ஆய்வு கோவில் குறித்த ஆய்வின் எல்லைகளை விரிவடையச் செய்தது. ஏனெனில், அவருடைய அணுகுமுறை முற்றிலும் மாறானது. அழகர் கோவிலுக்கும் பல்வேறு சாதியினருக்கும் இடையிலான உறவு குறித்ததாக அது அமைந்தது.

குறிப்பிடத்தக்க வழிபாட்டு முறையையும் திருவிழாக்களையும் - குறிப்பாகச் சித்திரைத் திருவிழா - கொண்டது இக்கோவில். வைணவக் கோவிலாக எவ்வாறு மாறியது? அழகர், கள்ளழகர் என்ற பெயர்கள் முக்கியமானவை. அக்கோவில் இருக்கும் இடத்தைச் சுற்றி நாயுடு, கள்ளர், யாதவர், பள்ளர், பறையர், வலையர் ஆகிய சாதியினர் வாழ்கின்றனர்.

மேட்டுக்குடி அடையாளம், அதாவது வைணவ அடையாளம் எப்படி வந்தது? மேட்டுக்குடி மக்களைத் தாண்டி எப்படி வெகுசன மக்களை வந்தடைந்தது? ஆடல் பாடலுடன் கடவுளை சனநாயகப்படுத்திய வரலாற்றைத் தொ.ப. விவரிக்கிறார். பதினெட்டாம் படி கருப்பசாமி குறித்த செய்திகளை இந்நூலில் திரட்டித் தருகிறார்.

கோவில் பற்றியும் கடவுள் பற்றியும் மக்கள் மத்தியில் வழங்கும் நாட்டார் கதைகளைக் களஆய்வின் மூலமாகத் திரட்டித் தருகிறார். துண்டு துண்டான வரலாற்றுச் செய்திகளைச் சேகரித்து முழுமையாக்கித் தரும் பணியை தொ.ப. செய்திருக்கிறார். மக்கள் சார்ந்த ஆய்வாக இது அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது. குறிப்பாக அடித்தள மக்கள் சார்ந்த ஆய்வு அது. காட்டில் அமைந்துள்ள அந்தக் கோவில் எப்படி வெகுசனக் கோவிலாக மாறியது? மக்களை எவ்வாறு ஈர்த்தது? என்பது குறித்து ஆராய்ந்துள்ளார்.

பேராசிரியர் தொ.ப. அவர்களுடன் உரையாடும்போது வரலாற்றுச் செய்திகள், தொல்லியல் கண்டுபிடிப்புகள், நாட்டார் வழக்காற்றியல் தரவுகள், பழந்தமிழ் இலக்கிய மேற்கோள்கள், தற்கால இலக்கியச் சிந்தனைகள், மொழியியல் கருத்துகள், தாம் களஆய்வு மேற்கொண்ட அனுபவங்கள் போன்றவற்றை அவர் இயல்பாகச் சொல்வதை நான் கண்டிருக்கிறேன்; கேட்டிருக்கிறேன்.

அவருடைய எழுத்துக்களும் அவ்வாறே நம்மோடு உரையாடுவதைப் போலவே அமைந்துள்ளன என்பதை அவருடைய நூல்கள் எல்லாவற்றிலும் காணலாம். குழப்பம் ஏதும் விளைவிக்காது, பயமுறுத்தாது, சொல்வதைப் பிறருக்கு விளங்கும்படிச் சொல்ல வேண்டும் என்ற அக்கறையோடு கூறப்படுபவை அவை.

தம்முடைய மேதாவிலாசத்தைப் பிறருக்குப் பறைசாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு எப்போதும் இருந்ததில்லை. சிறிய சிறிய கட்டுரைகளாக அவர் எழுதுவார். சின்னச் சின்ன சொற்றொடர்களைப் பயன்படுத்துவார்.

தொ.ப.வுக்கு நாட்டார் வழக்காற்றியல் புலம் மீது தனித்த அக்கறையும் மரியாதையும் உண்டு. அவருடைய நூல்களில் மக்களிடையே வழக்கிலுள்ள சொற்கள், உறவு முறைகள், பழக்கவழக்கங்கள், நாட்டார் சமய வழிபாடுகள், நாட்டார் தெய்வங்கள் ஆகியவை குறித்த கட்டுரைகள் பல. ‘சடங்கியல் வாழ்வு’ என்பது அவர் எழுதிய கட்டுரை.

பட்டம் கட்டுதல், புனித எண்கள் குறித்த சடங்குச் சொல்லாடல்கள், சடங்கின்போது ஒரு சொல்லைத் திரும்பத் திரும்பச் சொல்லுதல், சூலுற்ற பெண்ணுக்கு மடிநிரப்பும் சடங்கு செய்தல், காதணி விழாவில் காதரிசி வழங்குதல், பூப்புச் சடங்கில் தீட்டுக் கழிப்பு போன்றவற்றை இக்கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

ஆய்வு மாணவர்கள் இவை ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனி கட்டுரைகள் எழுதலாம். திராவிடச் சாதிகளில் இன்னும் வழக்கிலுள்ள சடங்கு நடவடிக்கைகளை ஆய்வு செய்வோருக¢கு இக்கட்டுரை தரும் தகவல்கள் முக்கியமானவை.

‘பேரக் குழந்தைகள்’ என்ற கட்டுரையில் பேரன், பேத்தி என்ற சொற்களின் பொருண்மைகள், நம்பிக்கை, சடங்குகள், கேலி செய்யும் உரிமை போன்றவற்றைச் சுவையாகச் சொல்வதோடு நிகழ்காலச் சூழலில் குழந்தைகள் தாத்தா பாட்டியிடமிருந்து அந்நியப்பட்டு விட்டதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

‘பண்பாடு என்பது பழமையைக் கொண்டாடுவது அன்று. உயிருள்ள வேர்களைப் பாதுகாப்பதாகும். ஏனென்றால் உயிருள்ள வேர்கள் இன்னமும் சமூக அசைவியக்கங்களை முன்னெடுத்துச் செல்கின்றன என்பதே அதற்குரிய காரணமாகும்’ என்று தொ.ப. குறிப்பிடுவது ஆழ்ந்து சிந்திப்பதற்குரியது.

பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரை தமிழ்ப் பண்பாடு சித்திரிக்கப்பட்டுள்ளதை ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். பண்பாடு என்பதனை ஒரு மொழியோடு மட்டும் சார்த்திப் பார்ப்பது இயற்கையாகாது.

ஒரு நிலப்பகுதியில் தொட்டடுத்த மொழிகளோடு உறவுடையதாகவே ஒரு மக்கள் திரளின் பண்பாடு அமையும். எனவே ‘தமிழ்ப் பண்பாடு’ என்ற சொல்லை விட ‘திராவிடப் பண்பாடு’ என்ற சொல்லே பொருள் உடையதாகும்.

தமிழோடு மட்டுமின்றி மலையாளம், துளு, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளைப் பேசும் மக்கள் கூட்டத்தார் இவை வழங்கும் நிலப் பகுதியினுள் அடங்கும் திருந்தாத மொழிகளைப் பேசும் மக்கள் கூட்டத்தாருக்கும் பண்பாட்டின் அடிப்படைக் கூறுகளில் ஒரு பொதுத்தன்மை நிலவுகின்றது.

அந்த வகையில் புழங்கு பொருள்சார் பண்பாடும் பெரும்பாலும் ஒத்ததாகவே அமையும். கருத்தியல் நிலையில் நிலத்தின் தன்மை, உற்பத்தி உறவுகள், புறநிலைத் தாக்குதல்கள், பருவகாலம் ஆகியவை சார்ந்து சிற்சில மாறுதல்களுடன் பண்பாட்டுக் கூறுகள் வெளிப்படும்’ என்று ‘படைப்பிலக்கியங்களும் பண்பாட்டு வெளிப்பாடும்’ என்ற கட்டுரையில் தொ.ப. குறிப்பிடுகிறார்.

மொழிக் கல்வி குறித்துப் பேசும் தொ.ப., குழந்தைகளுக்கான மொழிக் கல்வி கவனத்துடன் திட்டமிடப்படவில்லை என்று ஆதங்கப்படுகிறார். ஒரு மொழியின் வளர்ச்சிக்கும் பண்புக்கும் ஆதாரமாக விளங்குவது பேச்சுமொழி என்பதைப் பேராசிரியர் வலியுறுத்துகிறார்.

வாய்மொழியை மட்டுமே அறிந்துள்ள குழந்தைகளுக்குத் திரும்பச் சொல்வதன் மூலமாக இசையோடும் மொழிக்கல்வி ஊட்ட வேண்டும் என்று கருதும் தொ.ப. பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குகிறார்.

வள்ளுவரின் சமகாலத்திலும், அவருக்குப் பின்னரும் கூட இந்தியத் துணைக் கண்டத்தில் இலக்கியங்களின் வழி அறம் பேச வந்தவர்கள் சாதி, சமயம், நிலப்பகுதி ஆகிய அடையாளங்களைத் தாண்டிச் செல்ல இயலவில்லை என்று தொ.ப. குறிப்பிடுவது சிந்தனைக்குரியது.

வைதீகத்திற்கு எதிராகக் கலகக் குரலெழுப்பியவர் வள்ளுவர் என்பதற்குப் ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ என்ற வரியை எடுத்துக் காட்டுகிறார்.

‘நமது பண்பாட்டில் மருத்துவம்’ என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரையில் 150 ஆண்டு காலனி ஆட்சியிலே எதையெதை எப்படிப் பார்க்க வேண்டும் என்கிற பார்வையை நாம் இழந்து போயிருக்கிறோம் என்று அழுத்தமாகக் கூறுகிறார். அந்த உரையில் அவர் பண்பாட்டை எளிமையாகவும் நறுக்குத் தெறித்தாற் போன்றும் வரையறுக்கிறார்.

‘பண்பாடு என்ற சொல்லை நாம் மிகச் சுருக்கமாகவே புரிந்து கொண்டிருக்கிறோம். உண்மையில் பண்பாடு என்பது தனிமனித ஒழுக்கம் சார்ந்த ஒன்றன்று. பண்பாடு என்பது ஒரு சமூகத்தினுடைய வெளிப்பாடு. ஒரு மக்கள் திரள், தன்னை வெளிப்படுத்திக் கொள்கிற முறை. சொல்லாலே, செயலாலே, கருத்தினாலே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிற முறைக்குத்தான் பண்பாடு என்று பெயர்.

நம்முடைய தெய்வங்கள், நம்முடைய இசை, நம்முடைய கலை, நம்முடைய உணவு, நம்முடைய உடை, நம்முடைய உடையை நாம் செய்கிற முறை, நம்முடைய உடையை நாம் உடுத்துகிற முறை எல்லாமே பண்பாடு சார்ந்த அசைவுகள்தான்.

பண்பாடு என்பது ஒரு முழுமையான பொருள். இந்த முழுமை சார்ந்த பார்வை இல்லாது போன காரணத்தினாலேதான், பண்பாடு பற்றிய நமது பார்வை மிகவும் பலவீனமாக இருக்கிறது’ என்று அவர் குறிப்பிடுகிறார்.

தொகுக்கப்படாத வரலாற்றைத் தொகுப்பது, ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்த ஆய்வினை நிகழ்த்துவது ஆகியவையே தொ.ப.வின் முறையியல். பெரியாரியத்தோடு நாட்டார் வழக்காற்றியல், மக்கள் வரலாறு ஆகியவற்றை இணைத்துப் பார்த்தார் தொ.ப. அவருடைய ஆய்வுகள் தமிழ்த் தேசியச் சிந்தனைக்கு முக்கியமான பங்களிப்பினை வழங்கின. நாட்டார் வழக்காறு மட்டுமல்லாமல் அனைவரும் விவசாயத்தோடு தொடர்புடையவர்கள் என்ற கருத்தினை அவர் நிறுவிக் கொண்டே இருந்தார். உழைக்கும் மக்கள் சார்ந்த சிந்தனையை அவர் கொண்டிருந்தார் என்பது முக்கியமானது.

தாய்த் தெய்வ வழிபாடு பற்றிய தொ.ப.வின் பார்வை முக்கியமானது. பண்பாட்டின் வேர் தாய்த் தெய்வம் என்பது அவருடைய முதற்கட்ட முடிவு. தமிழ் நாட்டில் அம்மன் கோவில்கள் ஆயிரக் கணக்கானவை. அவ்வம்மன் தெய்வங்கள் சுதந்திரத் தன்மையுடன் காணப்படுகின்றன. பழையனூர் நீலி பற்றி அவர் எழுதியுள்ள கட்டுரை முக்கியமானது.

கணவனால் கொல்லப்பட்ட நீலி ஆவியாக வந்து அவனைப் பழிவாங்குகிறாள். அவளுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கிய ஊர்ப் பஞ்சாயத்தாரை அவள் அழிக்கிறாள். கோபத்தின் குறியீடாக அவள் விளங்குகிறாள். பண்பாட்டின் நியாயமான கோப உணர்வு அது. கண்ணனைக் குறும்புக்காரனாகவும் அதிகார மையத்தை உடைக்கக் கூடியவனாகவும் தொ.ப. காண்கிறார்.

எல்லா விதமான அதிகாரங்களையும் உடைப்பதுதான் பெரியாரியம்! திராவிட இயக்கச் சிந்தனை, மானிடவியல், சமூக நீதி, வெகுமக்கள் பார்வை, விவசாய மக்கள் தொடர்புடையதாக ஒவ்வொன்றையும் பார்ப்பது, ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பு, நாட்டார் வழக்காறுகளில் அக்கறை, தமிழ்த் தேசிய உணர்வு, அம்பேத்கரியச் சிந்தனை ஆகியவை தொ.ப.வின் எழுத்துக்களில் பரவலாகக் காணப்படுகின்றன. மாணவர்களிடமும் இவற்றை விவாதிப்பார். அதன்மூலம் மாணவர்களுக்கான ஆசிரியராக அவர் திகழ்ந்தார்.

மாணவர்களோடு உரையாடுவதை அவர் பெரிதும் விரும்பினார். தகவல் களஞ்சியமாக அவர் விளங்கினார். எழுதுவதை விட உரையாடுவதுதான் அவருக்கு மிகவும் பிடிக்கும். பரந்துபட்ட வாசிப்பு அவருக்கு இருந்தது. தனித்தன்மையான முறையியல் அவருடையது.

மானிடவியல், சமூகவியல், மொழியியல், இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல் போன்ற பல புலங்கள் சார்ந்த நூல்களைக் கற்று தமது அறிவைப் பெருக்கிக் கொண்டவர் என்பதால் அவரது உரையாடல்களும் கட்டுரைகளும் நுட்பமானவையாக விளங்கின.

அவருடைய சிந்தனையில் பெரியாரும், மார்க்சும், அம்பேத்கரும் தாக்கத்தை விளைவித்துள்ளனர். தமிழ்ப் பண்பாட்டில் நிலவும் தமிழ் மரபையும் புற மரபையும் சுட்டிக் காட்டுவது அவருடைய தனிப் பாணி.

உணவு பற்றிய கட்டுரையில் தெய்வங்களுக்குப் படைக்கப்படும் உணவைக் கொண்டு அறியலாம் என்று அவர் கூறும் கருத்து முக்கியமானது. தமிழ் மரபு சார்ந்த சிந்தனை அவருக்கிருந்தது.

தமிழ் ஈழம் மலர வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார். தமிழ் மரபைப் பிற மரபுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை அவருடைய கட்டுரைகள் மூலம் அறிய முடிகிறது.

சங்க இலக்கியம் குறித்து எழுதினாலும் வழக்கிலிருக்கும் மரபைத் தொடர்புபடுத்துவார். பசலை நோய் பற்றிக் கூறுமிடத்து, நெல்லை மாவட்டத்தில் திருமணத்திற்கு முன் சிலருக்கு வரும் காய்ச்சலைப் பசலைக் காய்ச்சல் என்று கூறுவதை எடுத்துக்காட்டுவார்.

சங்க இலக்கியத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் மக்களிடம் வழக்கிலுள்ள நாட்டார் வழக்காறுகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவார்.

தொடர்ச்சியான களஆய்வு அனுபவம், தொல்லியல், கோவில்கள் பற்றிய அறிவு, வேளாண்மை அறிவு, மக்களிடம் உரையாடுவது ஆகியவற்றால் புதிய செய்திகளை அவரால் கூற முடிந்தது.

சுற்றுச் சூழல் குறித்த அக்கறை அவருக்கு மிகுதியாக இருந்தது. மதவாதத்திற்கு எதிராக கருத்துக்களைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே வந்தார். தமிழ் மரபின் தொடர்ச்சி, வைதீகக் கலப்பு ஆகியவற்றைத் தெளிவாகச் சுட்டிச் செல்லும் பாங்கு சிறப்பானது. அவருடைய கட்டுரைகள் ஒவ்வொன்றும் விரிந்த ஆய்வுக்குரியது.

மொத்தத்தில் மக்கள் சார்ந்த பண்பாட்டாய்வாளர் தொ.ப. அவருடைய நூல்களைக் கற்பதும், விவாதிப்பதும், அவருடைய முறையியலைப் பின்பற்றி தமிழ்ப் பண்பாடு குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதுமே அவருக்கு நாம் செய்யும்  அஞ்சலியாகும்.

- நா. இராமச்சந்திரன்

Pin It