தி.மு.க.வின் செல்வாக்கை எப்படியாவது சீர்குலைத்து, மதவாத பி.ஜே.பி கட்சியைத் தமிழகத்தில் காலூன்றச் செய்யும் முயற்சியின் முதற்படியாக இரஜினியை ஊடகங்கள் பயன்படுத்துகின்றன.

இன்றைக்கு அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் எல்லாம் பண முதலாளிகள் கையில். மோடியை பிரதமராகக் கொண்டுவந்ததே இந்த ஊடக முதலாளிகள்தானே! ஒன்றுமில்லாதவரை 'ஓகோ' என்று உயர்த்திப் பிடித்து இன்றளவும் அந்த நிலையை காப்பாற்றி வருகின்றனர்.

rajini entering into politicsகார்ப்பரேட் முதலாளிகளுக்காக ஏழைகளை வஞ்சித்து, நசுக்கி ஆட்சி செய்கிறார் மோடி. இது அவரது நன்றிக்கடன். எனவே, மோடியையும், பிஜேபியையும் நிலைநிறுத்தும் முயற்சியில் கார்ப்ரேட் முதலாளிகள் கைகோர்த்து செயல்படுகின்றனர். அரசியலுக்கு வருவேன் என்றதும் பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள்!

பத்திரிகையை தொடவே வெறுப்பாகவுள்ளது.

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சியை அகற்ற முடியாமல், எல்லா பித்தலாட்டங்களும் செய்து பார்த்தவர்கள், வழிவகுக்கும் புஸ்வாணமாகிப் போக, தற்போது இரஜினியைப் பயன்படுத்தி அழிக்கப் பார்க்கின்றனர்.

தமிழகத்தில் இவர்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. இன்றைக்கு பி.ஜே.பி. வெறுப்பு தமிழகத்தில் உச்சத்தில் உள்ளது என்பதே உண்மை!

இது பெரியார் விழிப்பூட்டிய மண். இங்கு ஆரிய பார்ப்பன சூழ்ச்சிகளெல்லாம் வீழ்ச்சியடையுமேயன்றி வெற்றி பெறாது.

திருமுருகன்காந்தி போன்ற தூய்மையான மக்கள் தொண்டர்கள் மக்களை நாள்தோறும் தயார் செய்து வருகிறார்கள்.

தமிழகத்தில் எத்தனையோ தகுதியான தலைவர்கள் உள்ளனர். இவர்களுக்கெல்லாம் இல்லாத என்ன தகுதி இரஜினிக்கு உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இரஜினிக்கு எந்தத் தகுதியும் இல்லை யென்பதே உண்மை!

திரைப்படச் செல்வாக்கை - அதுவும் ஊடகங்கள் பெருக்கிக் காட்டுவதுதான் - அரசியலுக்கு மடைமாற்ற முயற்சிக்கிறார்கள். அந்தத் தந்திரம் எடுபடாது! மாறாக, தவிடுபொடியாக நொருங்கும் என்பது உறுதி!

1996இல் இரஜினிக்கு முதல்வர் பதவி தேடிவந்தது என்று அவர் கூறுவது வடிகட்டிய பொய் அல்லவா? மூப்பனார் இவரைப் பயன்படுத்தினார் என்பதால் இவருக்கு முதல்வர் பதவி வந்ததாகுமா? இவர் 'வாய்ஸ்' கொடுத்தால்தான் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது என்பது தப்பான செய்தி. இவரது 'வாய்ஸ்'க்கு செல்வாக்கு இருந்தால் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக 'வாய்ஸ்' கொடுத்து இரஜினி தோற்றுப் போனது ஏன்? சிந்திக்க வேண்டும்!
வாடகை செலுத்தாதவர் இவர் மனைவியென்று குற்றச்சாட்டு உள்ளது.

இதுவரை தமிழக மக்களுக்கு இவர் எதையுமே செய்யவில்லை.

மாதக்கணக்கில் தமிழக விவசாயிகள் டில்லியில் மானத்தைவிட்டுப் போராடியபோதுகூட இவர் செல்வாக்கால் பிரதமருடன் சந்திப்புக்கு வழி செய்யவில்லை.

விவசாயி கடன் தள்ளுபடிக்கு, தமிழகத்திற்கு வறட்சி நிதி உதவிக்கு பிரதமருக்கு அழுத்தம் தரவில்லை. பேரழிவில் தமிழகம் அல்லல்பட்டபோதெல்லாம், இவர் படத்தில் நடித்து சம்பாதிப்பதிலே குறியாய் இருந்தார்.

சிகரெட் குடித்து, மது குடித்து லட்சக்கணக்கான இளைஞர்கள் கெட காரணமானவர். இவரால் இளைய சமுதாயம் அழிந்ததே அதிகம். தான் பெறும் சம்பளத்தில் 10இல் ஒரு பங்குகூட கணக்கில் காட்டாது வரி ஏய்ப்பவர். இப்படிப்பட்டவருக்கு தலைமை தாங்க என்ன தகுதியுள்ளது? நேர்மை, தூய்மை, வாய்மை என்ன உள்ளது?

தமிழர் நலன் காக்கும், ஊழலற்ற, மதச்சார்பற்ற, இன உணர்வுள்ள அரசியலே இனி மக்களால் ஏற்கப்படும். எனவே, அரசியல்வாதிகள் அதற்கேற்பத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

இரஜினியை ஊடகங்கள் ஊதிப் பெருக்கி உயர்த்தி நிறுத்தினாலும் அந்த 'ஜாலம்' மக்களிடம் எடுபடாது.
பி.ஜே.பி.யின் பினாமியாக அரசியலில் நுழையப் போகும் இரஜினிகாந்திற்கு மக்கள் சரியான அடி கொடுப்பர்! தமிழருவி மணியன்கள் காணாமல் போவர்!

ஜாதி, மத உணர்வற்ற, தமிழர் உணர்வுள்ள எழுச்சி இளைஞர்கள் உருவாகி வருகின்றனர். இனி ஆரிய பார்ப்பன "பாய்ச்சா" பலிக்காது!

- மஞ்சை வசந்தன்

Pin It