1971இல் சேலத்தில் பெரியார் நடத்திய மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் ஸ்ரீராமமூர்த்தி-சீதையின் உருவங்கள் நிர்வாணமாக, செருப்பு மாலை போடப்பட்டு எடுத்து வந்ததாக ‘துக்ளக்’ 50ஆம் ஆண்டு விழாவில் ‘ஆன்மீக’ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசினார். அப்படிப் பேசியது உண்மைக்கு மாறான தகவல் என்று திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பெரியார் இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டத்தை நடத்தி கைதானார்கள். தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளும் ரஜினிகாந்த் பேச்சைக் கண்டித்தன. பிறகு செய்தியாளர்களை சந்திந்த நடிகர் ரஜினி, தான் பேசியதற்கு ஆதாரமாக அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன் ‘அவுட்லுக்’ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் அவ்வாறு குறிப்பிட்டிருக்கிறது என்றும், தாம் பேசியதற்கு வருத்தமோ, மன்னிப்போ கேட்கப் போவது இல்லை என்றும் பொங்கினார்.

‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி, ரஜினி பேசியது உண்மைதான் என்று ‘சத்தியம்’ செய்தார். 1971ஆம் ஆண்டில் ‘துக்ளக்’ வெளியிட்ட சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்ட படங்களை மீண்டும் ‘துக்ளக்’கில் வெளியிட்டார்கள். அந்தப் படங்களிலும் இராமன், சீதை செருப்பு மாலை போடப்பட்டிருப்பது போன்ற காட்சிகள் இல்லை.

‘துக்ளக்’ சோவின் ‘வீரதீர நெஞ்சுறுதி’யைப் பாராட்ட ரஜினிக்கு பாடம் எடுத்த குருமூர்த்திகள், சொல்லிக் கொடுத்த கதை பொய்யானது என்பது இப்போது மீண்டும் உறுதியாகி விட்டது. இவ்வாரம் வெளி வந்த 4.3.2020 ‘துக்ளக்’ பத்திரிகையில் ரஜினியின் ‘துக்ளக்’ விழா பேச்சு வெளி வந்திருக்கிறது. அதில், “ஸ்ரீராமமூர்த்தி சிலைகள் நிர்வாணமாக செருப்பு மாலை போடப்பட்டு எடுத்து வரப்பட்டது” என்ற வாசகங்களை ‘துக்ளக்’ பத்திரிகையே வெட்டி விட்டது.

“1971இல் சேலத்தில் பெரியார் அவர்கள் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் சீதையையும் அவமரியாதையாகச் சித்தரித்து எடுத்துக் கொண்டு ஒரு ஊர்வலம் போனார்கள்” என்ற ஒற்றை வரியோடு ரஜினி பேச்சை முடித்துக் கொண்டு விட்டது, ‘துக்ளக்’.

‘நிர்வாணம்’ - ‘செருப்புமாலை’ என்ற வார்த்தைகள் காணாமல் போய்விட்டன. குருமூர்த்தியும் ரஜினியும் பார்ப்பன ‘கோயபல்சு’களும் அவிழ்த்துவிட்ட பொய் அம்பலமாகி அவர்களே பேசியதை திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டார்கள்.