93ஆம் அகவையில் வாழும் திராவிட இயக்க மூத்த பத்திரிகையாளர் கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் எழுதிய கடிதம்.
நான் பத்திரிகைப் பணியில் ஈடுபட்டு இவ்வாண்டு செப்டம்பர் 17ஆம் நாளுடன் 71 ஆண்டுகள் நிறை வுற்றன. தி.மு.க. தலைமைக் கழக ஏடுகளான ‘மாலைமணி’ (நாளிதழ்), ‘நம்நாடு’ (நாளிதழ்), ‘கழகக் குரல்’ (வாரஇதழ்), ‘நம்நாடு’ (வார இதழ்), ‘முரசொலி’ மற்றும் ‘விடுதலை’ உள்ளிட்ட பல்வேறு ஏடுகளிலும் பணியாற்றியுள்ளேன். சொந்தமாகவும் 32 ஆண்டுகள் இதழ் நடத்தியுள்ளேன். பதினைந்து நூல்கள் எழுதியுள்ளேன்.
எனது முதுமை காரணமாக இதழ்த் துறைப் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறேன். எனது ‘கவிக்கொண்டல்’ இதழ் கடந்த மார்ச்சுத் திங்களுடன் நிறுத்தப்பட்டுவிட்டது. எனது 71 ஆண்டுச் சாதனைகள் பின்வருமாறு:
1. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய முப்பெரும் தலைவர்களுடன் அணுக்கமாக இருந்து எழுத்துப் பணியாற்றும் அரிய வாய்ப்பினைப் பெற்றவன் நான். (இந்த அரிய வாய்ப்பைப் பெற்றவர் இப்போது வேறு எவரும் இலர்)
2. திராவிட முன்னேற்றக் கழகம் அமைக்கப்பட்ட 1949 செப்டம்பர் 17ஆம் நாளன்று, அமைப்புக் கூட்டத்தில் பங்கேற்ற 150 பேர்களில் நான் ஒருவன் மட்டுமே இப்பொழுது உள்ளேன். (எனக்கு வயது இப்போது 93)
3. திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டபோது, தொடங்கப்பட்ட ‘மாலை மணி’ நாளிதழில் பணியாற்றத் தொடங்கி, இன்று வரை திராவிட இயக்கப் பத்திரிகையாளனாகவே இருந்து வந்துள்ளேன்.
4. தமிழக வரலாற்றில் எழுபது ஆண்டுக்கு மேல் முழு நேரப் பத்திரிகையாளனாக இருந்து வந்திருப்பவனும் நான்தான். (இதற்கு முன் 70 ஆண்டுக் காலம் முழு நேரப் பத்திரிகையாளராக எவரும் இருந்ததாக வரலாறு இல்லை)
5. சென்னை நகரசபை என்று வழங்கி வந்த பெயரை விடுத்து, ‘சென்னை மாநகராட்சி’ என்ற பெயரை முதன்முதலாக ‘நம்நாடு’ நாளிதழ் மூலம் நடைமுறைக்குக் கொண்டு வந்தவன் நான்தான்.
6.‘அபேட்சகர்’ என்று வழங்கி வந்த பெயரை விடுத்து, ‘வேட்பாளர்’ என்ற பெயரை ‘நம்நாடு’ மூலம் முதன்முதலில் நடைமுறைக்குக் கொண்டு வந்தவனும் நான் தான்.
7. நானும் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கிட்டப்பாவும் இணைந்து தொடர்ந்து செய்து வந்த பல்வேறு முயற்சிகளின் பலனாகத்தான் மாயூரம் மறைந்தது; மயிலாடுதுறை வந்தது.
8. நான் ஜெர்மனிக்குச் சென்றிருந்த போது அங்கு வாழும் தமிழர் களுக்குப் படிக்கத் தமிழ் நூல்கள் கிடைப்பதில்லை என்பதைக் கேட்டு, ஊர்த் திரும்பியதும் தமிழ் நாட்டிலிருந்து பத்தாயிரம் தமிழ் நூல்களைத் திரட்டி ஜெர்மனிக்கு அனுப்பி, அங்கு டோர்மண்ட் (Dortmunt) என்னும் நகரில் தமிழ் நூலகம் ஏற்படுத்தச் செய்துள்ளேன். (இதற்கு முன் இப்படி தனிப்பட்ட ஒருவர், வெளிநாட்டுக்குப் பத்தாயிரம் நூல்கள் அனுப்பி வைத்ததாக வரலாறு இல்லை) திரு. பாக்கியநாதன் என்பவர் பொறுப்பில் அந்நூலகம் இயங்கி வருகிறது.
9. மரபுக் கவிதை வளர்ச்சிக்கென்று ‘கவிக்கொண்டல்’ என்னும் கவிதை இதழை இரண்டாண்டும், ‘மீண்டும் கவிக்கொண்டல்’ என்னும் இதழை 29 ஆண்டுகளும் தொடர்ந்து, தொய்வின்றி நடத்தியிருக்கின்றேன். இதற்கு முன்பு மயிலாடுதுறையிலிருந்து ‘எழுச்சி’ என்னும் இதழையும் ஓராண்டு நடத்தியிருக்கிறேன்.
10. சென்னை மவுண்ட்ரோடு, அண்ணா சாலை என்று பெயர் மாற்றப்பட்டு ஓராண்டாகியும் மவுண்ட் ரோடு போஸ்ட் ஆபீஸ் என்ற பெயரை அஞ்சல் துறை மாற்றாமல் இருந்தனர். ‘கழகக் குரல்’ இதழில் அது பற்றிக் கண்டித்து எழுதினேன். அதன் பிறகுதான் அண்ணா சாலை, அஞ்சல் அலுவலகம் என்று பெயரை மாற்றினார்கள்.
(கவிக் கொண்டல் மா. செங்குட்டுவன் அவர்களது நேர்காணல் ‘நிமிர்வோம்’ 2017 டிசம்பர் இதழில் விரிவாக வெளி வந்திருக்கிறது - ஆர்)
- மா.செங்குட்டுவன்