ரஜினிகாந்த் சான்றிதழ் வழங்குவதுபோல் சோ நேர்மையானவர்தானா என்ற கேள்வியை எழுப்பி, அவரது முகத் திரையைக் கிழித்துக் காட்டினார் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி.

‘சேலத்தில் நடந்தது என்ன?’ எனும் தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைமையகத்தில் நடந்த நிகழ்வில் தலைமையேற்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை:

cho ramasamyஅய்ம்பது ஆண்டுகளுக்கு முன் 1971ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மாநாட்டைப் பற்றி நாம் பேச வேண்டிய தேவை தற்போது எழுந்திருக்கிறது. பெரியார் இயக்கத்திற்கு எதிரிகள் தான் எப்போதும் விளம்பரம் கொடுத்து வந்துள்ளார்கள். அதே போல் தற்போதும்கூட சேலம் மாநாட்டில் என்ன நடந்தது என்று பலருக்கும் தெரியாது. 1971ற்குப் பிறகு பிறந்தவர்கள் தான் இங்கு ஏராளமானவர்கள் வந்திருக்கிறார்கள். 1971இல் அந்த மாநாட்டில் தான் நான் முதன் முதலில் கலந்து கொள்கிறேன். பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டது உண்டு. ஆனால் மாநாடு என்று பார்த்தால் அந்த மாநாடு தான் முதல் மாநாடு. அப்போது இயக்கம் எடுத்த நடவடிக்கைகளையெல்லாம் தெரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.

1971ஆம் ஆண்டு நடந்த நிகழ்வை கடந்த ஜனவரி 14ஆம் தேதி ‘துக்ளக்’ விழாவில் ரஜினி பேசியதால் தான் தற்போது அதைப் பற்றி பேச வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. சோ வை புகழ்வதற்காக ரஜினி பேசினார் என்பது உண்மை. சோ வை புகழ வேண்டும் அதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாமா? அதற்காக ரஜினி கூறுகிறார் அந்த சேலம் மாநாட்டில் நடந்ததை ஒரே ஒருவர் தான் துணிச்சலாக எழுதுகிறார் என்பதைப்போலத் தான் அவர் பேசுகிறார். ஆனால் அப்போது ஆங்கில இந்து பத்திரிக்கை, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி ஆகிய பத்திரிக்கைகளில் சேலம் மாநாட்டைப் பற்றி எழுதியிருந்தார்கள். அதையெல்லாம் அவர் கண்டு கொள்ளவில்லை. சோ வை புகழ வேண்டும், அதனால் அப்படி பேசியிருக்கிறார்.

சோ என்ன அவ்வளவு புகழத்தக்க அரசியல்வாதியா? விமர்சகரா? என்றால் அதுவும் கிடையாது. சில வாய்ப்புகளில் அதைப் பற்றி கூறியிருக்கிறேன். ‘துக்ளக்’ ஆரம்பித்த பின் ஊழலைப் பற்றி ஒரு கேள்வி கேட்டார் வாசகர். ஊழலைப் பற்றி கடைசி வரை விமர்சித்துக் கொண்டுதான் இருந்தார். முந்த்ரா ஊழல் குற்றச்சாட்டில் நேரு அமைச்சரவையில் அமைச்சராக இருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுகிறார். அதைப் பற்றி எழுதும்போது, அந்த கேள்விக்கு நீங்கள் பதில் கூறவில்லை ஏனெனில் டி.டி.கே நிறுவனத்தில் நீங்கள் பணி புரிவதனாலா? என்ற கேள்வியை ஒருவர் துக்ளக்கில் கேட்டிருந்தார். அதற்கு சோ ஆம் என்று பதில் அளித்திருந்தார். எனவே எனக்கு சம்பளம் கொடுத்து, வேலை கொடுப்பவர்களின் ஊழலைப் பற்றி பேச மாட்டேன். ஆனால் மற்றவர்களின் ஊழலைப் பற்றி பேசுவேன் என்பதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி நேர்மையற்றவர் தான் அவர்.

அடுத்து சங்கராச்சாரியாரைப் பற்றி ஒரு கேள்வி வந்தது. காஞ்சி சங்கராச்சாரியாக இருந்த ஜெயேந்திரன், மடத்திலேயே துறவிகளுக்கு அடையாளமாக எப்போதும் கையில் வைத்திருக்கும் ‘தண்டத்தை’ மடத்திலேயே விட்டுவிட்டு, ஒரு பெண்ணுடன் மடத்திலிருந்து இரகசியமாக ஓடிப் போனார். அப்போது சங்கராச்சாரியின் இந்த நடத்தைக் குறித்து சோவிடம் கேட்டபோது, காஞ்சி மடம் நான், மிகவும் மதிக்கும் மடம். அது குறித்து நான் எதுவும் பேச மாட்டேன் என்று பதில் கூறினார். ஜெயேந்திரன் மடத்தை விட்டு ஓடிய நிலையில் மூத்த சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி, விஜேந்திரனை மூன்றாம் நிலை சங்கராச்சாரியாக அறிவித்தார். இந்து அறநிலையத் துறையும் சட்டப்பூர்வமாக அதை அங்கீகரித்தது. பிறகு சமாதானமடைந்து ஓடிப் போன ஜெயேந்திரன் மீண்டும் காஞ்சி மடத்துக்கு திரும்பினார். தண்டத்தை விட்டு ஓடிப் போனாலே துறவு நிலையை துறந்து விட்டதாகக் கூறுவதும் அவர்கள்தான். அப்படிப்பட்டவர் எப்படி மீண்டும் திரும்பி வந்து தன்னை சங்கராச்சாரியாக தன்னைத் தானே அறிவித்துக் கொண்டார்? இது மடத்தின் சாஸ்திர, சம்பிரதாயங்களுக்கு மட்டுமல்ல சட்டத்துக்கும் எதிரான செயல்பாடு ஆயிற்றே என்று எந்த பார்ப்பனரும் கேட்கவில்லை. ‘துக்ளக்’ சோவோ, நான் மிகவும் மதிக்கும் மடத்தைப் பேச மாட்டேன் என்றார்.

இவர்கள் தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டுமானால், அது ஆகமத்துக்கு பழக்க வழக்கத்துக்கு எதிரானது என்று கூச்சல் போடுகிறார்கள். பார்ப்பனர்கள் தங்களுக்கு சாதகமாக இருந்தால் எதுவும் சொல்ல மாட்டார்கள், பாதகமாக இருந்தால் மட்டும் தான் கூறுவார்கள். கடல் தாண்டி சென்றார்கள் என்பதற்காக எத்தனையோ பேரை விலக்கியிருக்கிறார்கள். ஆனால் தற்போது அமெரிக்காவில் இருப்பவர்கள் அனைவரும் பார்ப்பனர்கள் தான். கோவில் கட்டுகிறார்கள் வெளி நாடுகளில் கோவிலில் அர்ச்சனை செய்வதற்கு இங்கிருந்து பார்ப்பனர்கள் செல்கிறார்கள். அவர்கள் இன்னும் பார்ப்பனர்களாகத்தான் இருக்கிறார்கள் சாஸ்திரத்தை பின்பற்றுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். பிராமணன் கடல் தாண்டுவது சாஸ்திர விரோதமாயிற்றே என்று ஒன்றும் சொல்வதில்லை.

ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போதே ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு வேறொருவரிடம் முதல்வர் பதவியை கொடுத்துவிட்டு மீண்டும் வந்து முதல்வராக பதவியில் இருந்தார். ஆனால் சிறைக்குள் முழுமையாக இருக்கும் காலகட்டத்தில் நல்வாய்ப்பாக இறந்து போய்விட்டார். ஆனால் அந்த நேரத்தில் தற்போது தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிற சசிகலா இருக்கிறார். அவர் ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து வெளியே அனுப்பப்பட்டார். சசிகலா பல நிறுவனங்களில் இயக்குனராக இருந்தார். ஊழல் பணத்தை வைத்துக் கொண்டு பல நிறுவனங்களை நடத்திக் கொண்டிருப்பதாக பத்திரிக்கைகளெல்லாம் எழுதின.

சசிகலா வெளியே அனுப்பப்பட்டவுடன் அத்தனை இயக்குனர் பதவிகளிலும் சோ தான் நியமிக்கப்பட்டார். ஊழல் பணத்தில் நிறுவப்பட்ட நிறுவனங்களில் இயக்குனராக ‘சோ’ தான் இருந்தார். சசிகலா மீண்டும் போயஸ் கார்டனுக்கு திரும்பி வந்தவுடன் சோ - ஜெயலலிதா கூட்டணியை ஏற்று இயக்குனர் பதவிகளிலிருந்து விலகி சசிகலாவுக்கு வழி விட்டார். ஊழல்காரர்களுக்கு மாற்று ஆளாக இருந்துள்ளார். வந்தால் சென்று விடுகிறேன் என்று ஒரு ஏவல் ஆளைப் போல் செயல்பட்டிருக்கிறார். இவர்தான் நேர்மையைப் பற்றியும் ஊழலைப் பற்றியும் பேசிக் கொண்டுள்ளார்.

சோ அரசியல் சார்பில்லாதவர் என்பதெல்லாம் கிடையாது. பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியவர் அவர். அப்போது பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர் தான் நடுநிலையாளர் என்று அவரை எப்படி கூற முடியும்?

இது போன்ற பல செய்திகள் இருந்தாலும், சேலம் மாநாட்டைப் பற்றி கூறிவிட வேண்டும். சேலம் மாநாட்டின் வழக்குகளைப் பற்றி வழக்கறிஞர் துரைசாமி கூறுவார். ‘துக்ளக்’ படம் வந்தது தான் வழக்கா? இல்லை ‘துக்ளக்’ அட்டையில் ஒரு படத்தை போட்டார்கள் அதில் பெரியார் செருப்பால் அடிப்பதைப் போலவும், பக்கத்தில் கலைஞர் நின்று கொண்டு சபாஷ் என்று சொல்வதைப் போலவும் ஏதோ கலைஞரே இராமன் படத்தை செருப்பால் அடிக்கத் தூண்டுவதுபோல் இருந்தது அந்த படம். இராமன் படத்தை பெரியார் செருப்பால் அடிக்கவில்லை, பெரியார் இயக்கத் தோழர்கள் தான் அடித்தார்கள்.

சரி பெரியார் அடித்ததாக கூட உருவகப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அட்டைப் படமாக இப்படி ஒரு படத்தைப் போடுவது என்பது எந்த விதத்தில் சரி? தற்போது டிவிட்டரில் மோடியைப் பற்றியோ, சட்டங்களைப் பற்றியோ எழுதினால் கைது செய்கிறார்கள். ஆனால் நடக்காத ஒன்றை நடந்ததாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை அப்படி வரைவது சரியா? அதை பறிமுதல் செய்வது குற்றமாகுமா? அந்த வகையில் அது பறிமுதல் செய்யப்பட்டது. சட்டப் பிரிவுகளின் கீழ் அந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அட்டைப் படத்தைப் பற்றி எவரும் பேசுவதில்லை.

அட்டைப் படத்தில் போட்டது உண்மையா? செருப்பால் அடித்தார்கள் என்பது இராமனை செருப்பால் அல்லது செருப்புகளால் அடித்தார்கள் என்பது எல்லாம் இருக்கட்டும். ஆனால் ஏன் அடித்தார்கள்? என்பதற்கு நாம் பல விளக்கங்களை கூறுகிறோம்.

5000 பேர் போகிற ஊர்வலத்தில் 50 பேர் நின்று எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்திற்கு அனுமதியளிக்கிறார்கள். காவல்துறையினர் இடையில் மூன்று வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். அங்கிருந்து ஒரு செருப்பை வீசுகிறார்கள், அதாவது 5000 பேர் என்றால் நூறு நபர்கள் இருக்கும் இடத்தில் ஒருவர் செருப்பை வீசுவது போலத் தான் அதற்கு எப்படி எதிர்வினை வரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எது தவறு? நூறு பேர் இருக்கும் இடத்தில் ஒருவர் செருப்பை வீசியது தவறா? அதற்கு எதிர்வினையாகப் படத்தை செருப்பால் அடித்தது தவறா? முதல் வினையைப் பற்றி யாரும் பேசுவதேயில்லை. ஜனநாயகமாக அனுமதியளிக்கப்பட்ட ஊர்வலத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் ஜனநாயகமாக அனுமதியளித்ததை தவறாக பயன்படுத்தியதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. ஆனால் அதில் வீசிய செருப்பை எடுத்து அடித்ததை மட்டும் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனவே என்ன நோக்கத்துடன் இவை பரப்பப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது அந்த படங்களை அச்சிட்டு மீண்டும் 21.1.2020இல் ‘துக்ளக்’ வந்துள்ளது. அதில் மீண்டும் அந்த படத்தை அச்சிட்டுள்ளார்கள். இராமர் மட்டும் தான் அதில் உள்ளார் சீதை இல்லை. நிர்வாணமாக எங்கேயும் இல்லை. நேர்மையானவர்களாக இருந்தால் எழுதியிருக்க வேண்டும். ரஜினிகாந்த் தவறுதலாக கூறிவிட்டார். இராமன் சீதை படத்தை நிர்வாணமாக எடுத்து வரவில்லை என்று எழுதி சமாளித்திருக்கலாம். அந்த படத்தில் சீதை இல்லை, இராமரும் உடையோடுதான் இருக்கிறார்.

மற்றொரு செய்தி, இப்போதெல்லாம் இந்து கடவுள்களை மட்டும் விமர்சிக்கிறீர்கள் என்று நம்மைப் பார்த்து கேட்பார்களல்லவா! துக்ளக்கில் எழுதுகிறார்கள், இந்த திராவிட கூட்டம் இந்துக் கடவுள்களை மட்டும் அவமதிக்கவில்லை, முஸ்லிம்களின் 786 என்ற எண்ணை அல்லாவின் அலைபேசி எண்ணா என்றெல்லாம் கேட்டவர்கள், கன்னிமேரி எப்படி கர்ப்பம் ஆனார் என்று தெருக்களில் எழுதினார்கள். இப்படி கிருத்துவர்களையும், முஸ்லிம்களையும் அவமானப்படுத்திய கூட்டம் அது என்று எழுதியுள்ளனர் துக்ளக்கில். இப்படி எழுதிவிட்டு மற்றொரு பக்கத்தில் ஒரு கேள்வி பதிலையும் எழுதியுள்ளனர், கடவுள் மறுப்பு பேசுகிறவர்களும், அய்யப்ப சாமி பக்தர்களும் கறுப்பு உடை அணிகிறார்களே. இவர்களிடையே நிலவும் ஒற்றுமை வேற்றுமை என்ன? என்று ஒரு கேள்வி. அதற்கு ‘துக்ளக்’ தரும் பதில், ‘கறுப்பு உடை போடும் பெரியார் பக்தர்கள் இந்து மதக் கடவுள்களை மட்டும் கேவலப்படுத்துவார்கள்’ என்று எழுதுகிறார். அதாவது ஒரு பக்கம் இந்துக்களை மட்டுமல்ல, மற்ற இரண்டு மதத்தினரையும் கேவலப்படுத்தினார்கள் என்று எழுதிவிட்டு, வேறொரு பக்கத்தில் இந்துக்களை மட்டும் எதிர்ப்பார்கள் என்று எழுதியுள்ளனர். அண்ணா சொல்வாரே ‘பேராசை பெருந்தகையேப் போற்றி, பேச நா இரண்டுடையாய் போற்றி’ ஒரே இதழில் இரண்டு விசயங்களையும் முரண்பாடாக எழுதுகிறார்கள்.

ரஜினிகாந்த் சோவைப் பற்றி பேசினார், பெரியாரைப் பற்றி பேசினார், இராமன் நிர்வாணமாக இருந்ததாக கூறினார்; இதற்கெல்லாம் ஆதாரமாக 2017ஆம் ஆண்டு ‘அவுட்லுக்' பத்திரிக்கையைக் காட்டினார். அந்த கட்டுரையை ஜி.சி. ஷேகர் என்பவர் எழுதியிருந்தார். ராமன், சீதை உருவங்கள் செருப்பு மாலை போடப்பட்டு நிர்வாணமாக எடுத்து வரப்பட்டன என்று எழுதியுள்ளார். இதைத் தான் ரஜினிகாந்த் ஆதாரமாக காட்டினார். அதைப் பற்றிய கட்டுரையை மீண்டும் எழுதியது ஜி.சி. ஷேகர். அவுட்லுக்கில் 27.01.2020இல் வந்துள்ளது.

தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் நானும் அவரும் கலந்து கொண்ட போது உடை இல்லாமல் எடுத்து வரப்பட்டது என்று பேசினார். இப்போது செருப்பு மாலை என்ற வார்த்தையை மட்டும் எழுதிவிட்டு ‘In nude’ என்ற வார்த்தையை விட்டுவி ட்டார். இவர் முன்பு எழுதிய கட்டுரையைத் தான் ரஜினி ஆதாரமாகக் காட்டினார். பிரச்சனை வந்த பின்பு அதே நபர் Nude (உடையில்லாமல்) என்ற வார்த்தையை விட்டுவிட்டு எழுதினார். ஆனால் தொலைக்காட்சி விவாதத்தில் உடையில்லாமல் தான் எடுத்து வரப்பட்டது என்று வாதாடுபவராகவும் இருந்தார். இப்படித்தான் இந்துத்துவவாதிகள் பித்தலாட்டக்காரர்களாக இருக்கிறார்கள் என்றார் கொளத்தூர் மணி.

Pin It