வேதியர் ஓதிய வேதங்களில் - அவர் 

வேள்விகளில்

சாதிகள் பலப்பல தோன்றின - பொய் மதம்

தன்தலை தூக்கித் திரிந்ததம்மா!

இந்தக் கவிதையை எழுதியவர் யார் என்று தெரியுமா?

அவர் தான் கவிஞர் தமிழ்ஒளி.

நாம் நினைக்க மறந்தவர்களுள் ஒருவராகி விட்டார் தமிழ்ஒளி. பாவேந்தர் பாசறைத் தலைமுறைக் கவிஞர்களுள் இவரும் ஒருவர்.

கவிஞரின் இயற்பெயர் விஜயரங்கம், சொந்த ஊர் தென்னார்காடு மாவட்டம், குறிஞ்சிப்பாடிக்கு அண்மையில் இருக்கும் ஆடூர் என்ற சிற்றூர். தந்தை சின்னையா. தாயார் செங்கேணியம்மாள். கவிஞர் தமிழ் ஒளியின் செல்லப்பெயர் பட்டுராசு-. இவர் பிறந்தது புதுவையில் 1924ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 21ஆம் நாள்-.

இவரின் தொடக்கக் கல்வி புதுவை முத்தியால் பேட்டை நடுநிலைப்பள்ளியில். கரந்தை தமிழ்க் கல்லூரியில் தமிழ்பயின்றவர்.

தமிழ்ஒளி தன் இளமைக் காலத்தில், தன் நண்பர் கோபதியுடன் இணைந்து ‘முரசு’ என்ற கையெழுத்து இதழைத் தொடங்கினார். பிறகு அது அச்சுக்கும் வந்தது.

தமிழ் ஒளி, கோபதி இருவரின் எழுத்துக் கூர்மையைத் தாங்க முடியாத புதுவை அரசு இதழைத் தடை செய்ததோடு இருவரையும் கைது செய்து சிறையில் தள்ளியது. வழக்கில் தமிழ்ஒளி பிணையில் வந்தார். கோபதி விடுதலையானார். இவரின் இன்னொரு பெயர் மன்னர் மன்னன், பாவேந்தரின் மகன் இவர்.

தொடக்க காலங்களில் இவர், தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் கருஞ்சட்டை வீரராகச் செயல்பட்டார். திராவிட மாணவர் கழகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

பார்ப்பனர்களின் ஏக இந்தியா கொள்கையின் ஓர் அங்கமான இந்தித் திணிப்பைக் கவிஞர் கடுமையாக எதிர்த்தார். பாருங்கள் இந்தியை எதிர்க்கும் அவரின் அனல் கக்கும் கவிதை வரிகளை -

இந்தியை இங்கே அழைக்கின்றீர் - கூர்

ஈட்டியை நெஞ்சில் நுழைக்கின்றீர் !

காரிருள் இன்னும் விடியவில்லை - எம்

....... இன்றும் ஒடியவில்லை!

இதர்மிசை இந்தி உயர்குவதோ - எங்கள்

செந்தமிழ் அன்னை அயர்குவதோ!

அன்று சி.பா.ஆதித்தனாரின் ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் சார்பில், ஈரோடு சின்னச்சாமி நடத்திய சமநீதி, தமிழன் ஆகிய இதழ்களில் இந்திக்கு எதிராகத் தொடர்ந்து கவிதைகளை எழுதினார்.

அதுமட்டுமல்ல மொழிவழி மாநிலங்கள் அமையவிருந்த அன்றைய காலத்தில், கன்னியாகுமரியைச் சொந்தம் கொண்டாடியது கேரளம். அது தமிழகத்திற்கே சொந்தம் என்று போராட்டம் வெடித்த நேரம். சும்மா இருப்பாரா கவிஞர்-?

தென்குமரி எல்லை தனைச்சார்ந்த

தமிழகத்தில் எல்லாம் தமிழர்க்கே!

என்றெழுந்த போர்முரசம் கேட்டே

எல்லோரும் எழுகின்ற நேரமிது

என்று தன் ஆற்றல் வாய்ந்த கவிதை வரிகளால் களத்திற்கு அழைக்கிறார் அவர்.

எளிய மக்கள், வறுமை, உழைப்பு, உழைக்கும் மக்கள், அவர்களின் போராட்டம், சாதி எதிர்ப்பு, மத எதிர்ப்பு, மூடப் பழக்கங்களை எதிர்த்துக் கவிதைகளை எழுதியவர் நம் பகுத்தறிவுக் கவிஞர் தமிழ்ஒளி.

‘புதுவைத் தொழிலாளிக்குக், கோவைத் தொழிலாளி கடிதம்’, ‘அந்திநிலா பார்க்கவா’ என்ற குழந்தைப் பாவியம், ‘நிலைபெற்ற சிலை’, ‘வீராயி’, ‘விதியோ வீணையோ’, ‘மேதின ரோஜாக்கள்’ என்று ஒன்பது காவியங்கள் -

‘சிலப்பதிகாரம் காவியமா-? நாடகமா?’ ‘தமிழும் சமஸ்கிருதமும்’, ‘திருக்குறளும் கடவுளும்’ போன்ற நான்கு நூல்கள் -

‘சாக்கடைச் சமுதாயம்’ உட்பட நான்கு கவிதைத் தொகுப்புகள் -

‘உயிரோவியங்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு ஆகியன தமிழ் ஒளியின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கன.

இவரின் படைப்பு-களில் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட, அடித்தட்டுப் பாத்திரங்கள் முன்னிலைப்படுத்தப்படும். அதன்வழி அம்மக்களின் வாழ்வியல் வலியைக் கண்முன் கொண்டு நிறுத்தியவர். வீராயி காவியத்தின் கதாநாயகி ஒரு தாழ்த்தப்பட்ட பெண்.

கவிஞர் தமிழ் ஒளியின் கவிதைகள் தந்தை பெரியாரின் ‘குடியரசு’, அறிஞர் அண்ணாவின் ‘திராவிட நாடு’ போன்ற திராவிட இயக்க இதழ்களில் இடம் பெற்றுள்ளன.

கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் இவர் படிக்கும் போது, இவரால் எழுதப் பெற்ற ‘சிற்பியின் கனவு’ என்ற நாடகம், சக்தி நாடக சபாவால் அரங்கேற்றப்பட்டு நடத்தப்பட்டது.

இந்த நாடகமே பின்னாளில் நடிகர் திலகம் சிவாஜி நடித்து வெளிவந்த வணங்காமுடி என்ற திரைப்படம். ஒரு வேதனையான செய்தி இப்படத்தில் மூலக்கதை தமிழ்ஒளி என்று கவிஞரின் பெயர் இடம்பெறாமல் இருட்டடிப்புச் செய்து விட்டார்கள்.

திராவிட இயக்கச் சிந்தனையில் வலம் வந்த கவிஞர் தமிழ்ஒளி 1947ஆம் ஆண்டு தோழர் ப.ஜீவானந்தம் முன்னிலையில் பொதுவுடமை இயக்கத்தில் இணைந்து, இறக்கும்வரை அதே தளத்தில் இயங்கி கவிதைகளைப் படைத்து வந்தார்.

ஊரை எழுப்பிடவே - துயர்

ஒன்றை நொறுக்கிடவே

தாரை முழக்கிடுவேன் & தமிழ்ச்

சாதி விழித்திடவே!

என்று முழக்கமிட்ட கவிஞர் தமிழ்ஒளி 1965ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 29ஆம் நாள் மரணத்தைத் தழுவிக் கொண்டார் & காசநோயால்.                   

Pin It