மூன்றாம் வகுப்பு படிக்கும் கோபி பிற்பகல் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தான். அவன் வீடும் பள்ளியும் ஒரே தெருவில் இருக்கிறது. வீடு பூட்டி இருந்தது, அவனுக்குத் தெரியும், அம்மா மேலே ஓனர் வீட்டில் இருப்பாள் என்று, மேல் வீட்டிற்குச் சென்றான். மேல் வீட்டு வாசலுக்கு முன் உள்ள வராண்டாவில் போடப்பட்டிருக்கும் கட்டிலில் அந்த வீட்டு ஓனரின் அம்மா படுத்துக் கொண்டோ அல்லது உட்கார்ந்து வாசலுக்கு எதிரில் இருக்கும் ஜன்னலின் வழியே வெளியே பார்த்துக் கொண்டோ இருப்பாள். அவளுக்கு வயது என்பதுக்கு மேல் இருக்கும். மேலே வந்த கோபியை படுத்துக் கொண்டிருந்தவள் திரும்பிப் பார்த்து புன்னகைத்தாள். பதிலுக்கு தயக்கத்தோடு லேசாகப் புன்னகைத்துவிட்டு உள்ளே சென்றவனிடம் இங்கே வா என கையசைத்தாள். அவன் பக்கத்தில் செல்ல, இவள் எழுந்து உட்கார்ந்து அவனை பக்கத்தில் உட்காரச் சொல்லி செய்கை காட்ட, அவன் கூச்சப்பட்டு நின்றான். அவள் கட்டிலில் ஓரமாக இருக்கும் ஒரு துணியில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து அதில் இருந்து அவனுக்கு இரண்டு பிஸ்கட்டுகளைக் கொடுத்தாள். அவன் வேண்டாம் என்று தலையாட்டினான்.

- ஏன் பிஸ்கோத் துன்ன மாட்டியா?

இவன் சாப்பிடுவேன் என்று தலையாட்ட, இந்தா என மீண்டும் கொடுத்தாள் . இவன் தயக்கத்தோடு அதை வாங்கிக்கொண்டு உள்ளே போக, அவள்

-கோபி

என அழைக்க அவன் நின்றான். அவள் தன் பையில் இருந்து ஒரு ஐந்து ரூபாய் காசை எடுத்து அவனிடம் கொடுத்து,

- நாளைக்கு ஸ்கூல் வுட்டு வர்ற சொல்ல பாய் கடையில ஆயா கேட்டேன்னு அஞ்சி ரூபாய்க்கு கருப்பு வெத்தல வாங்கியாரியா?

அவன் சரி என தலையாட்டி காசை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றான்.

உள்ளே அம்மாவும் ஓனரம்மாவும் படுக்கையில் உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருந்தார்கள். இவன் இரண்டு மூன்று முறை போலாம்மா என்று அழைத்துப் பார்த்தான், அவள் இரு போலாம் என பேச்சு சுவாரஸ்யத்தில் இருக்க, இவனும் படுக்கையில் உட்கார்ந்து அந்த பேச்சை கேட்டுக்கொண்டே பிஸ்கெட் சாப்பிட்டான். சட்டென அம்மாவும் ஓனரம்மாவும் குரல் தாழ்த்தி காற்றை மட்டும் விட்டு பேசிக் கொண்டார்கள். இவனுக்கு கவனிப்பதற்கு கஷ்டமாக இருந்தது. கூர்ந்து கவனித்தால் கூட அது புரிவது கஷ்டம். அப்படி பேசுகிறார்கள் என்றால் அது யாரைப் பற்றியோ மிக அந்தரங்கமான விஷயம் என்று அர்த்தம். அந்த அறையில் வேறு யாரும் இல்லை என்றாலும் சம்மந்தப்படடவர்கள் வெளியூரில் இருந்தாலும் அந்த விஷயம் அப்படித்தான் பேசப்படும். அப்படி பேசத் தொடங்கியதுமே அவர்களுக்கு மட்டும் அல்ல, கேட்டுக் கொண்டிருக்கும் இவனுக்கும் சுவாரஸ்யம் தொற்றிக் கொள்ளும். ஆனால் கடைசிவரை ஏதோ புரிந்தது போல் இருக்கும், ஆனால் ஒன்றும் புரியாது, சந்தேகமும் கேட்க முடியாது. படுக்கையில் படுத்துக் கொண்டு பேச்சை கேட்டுக் கொண்டிருந்தவன் எப்பொழுது தூங்கினான் என்று தெரியவில்லை, நன்றாகத் தூங்கிவிட்டான்.

அடுத்த நாள் பள்ளி முடிந்து மாடிக்கு வந்தவனை கட்டிலில் ஜன்னலோரமாய் உட்கார்ந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்த ஆயா திரும்பிப் பார்த்து புன்னகைத்து

- வெத்தல வாங்கியாந்தியா?

அவனுக்கு அப்பொழுதுதான் அந்த விஷயமே ஞாபகத்திற்கு வந்தது. ஆயா கொடுத்த காசு கூட நேற்று அணிந்த ட்ரவுசர் பாக்கெட்டிலேயே இருக்கிறது. அம்மா துவைத்து போட்டிருப்பாளோ? நினைவுகள் ஓட, ஆயாவைப் பார்த்து அசட்டு புன்னகையோடு நின்றான். ஆயாவுக்குப் புரிந்துவிட்டது,

- பரவாயில்ல, நாளைக்கு வாங்கியா.

இவன் சரியென தலையாட்டிவிட்டு உள்ளே சென்றான்.

மறுநாள் மாடிப் படிக்கட்டு ஏறியவனுக்கு கட்டிலில் படுத்திருந்த ஆயாவைப் பார்த்ததும்தான் வெற்றிலை விஷயம் நினைவுக்கு வந்தது, வெத்தல வாங்கவில்லையே ஒழிய நேற்றே அந்தக் காசை ட்ரவுசரில் இருந்து எடுத்து பென்சில் பாக்ஸில் போட்டு வைத்து விட்டான். ஆயா பார்ப்பதற்குள் உள்ளே போய்விடலாம் என வேகமாகச் சென்றவனை ஆயா,

- கோபி

இவன் நின்று ஆயாவை பார்க்க, ஆயா எழுந்து இவனைப் பார்த்தாள். இவன் முழிக்க, ஆயாவிற்குப் புரிந்துவிட்டது. அவனை பக்கத்தில் அழைத்து பையில் இருந்து இரண்டு பிஸ்கட்டுகளை எடுத்துக் கொடுத்தாள். இவன் தயக்கத்தோடு அதை வாங்கிக் கொண்டு

- மறந்துடிச்சி, நாளைக்கு வாங்கியாந்துர்றேன்

ஆயா, பரவாயில்லை என்பது போல் தலையசைத்தாள்.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை, கோபி அந்த பகுதி சிறுவர்களோடு ஐஸ்பாய் விளையாடிக் கொண்டிருந்தான். இவன்தான் கேட்சர், மூன்று பேரைக் கண்டுபிடித்து விட்டான். இன்னும் ஒருவன்தான், அவனை தேடிக்கொண்டு மேல் மாடிக்கு ஏறியவன் நின்று எட்டி கீழே டப்பா அடிக்க வருகிறானா எனப் பார்த்து விட்டு திரும்பியவனிடம் படுத்துக் கொண்டிருந்த ஆயா கண் காண்பித்தாள். இவன் புரியாமல் ஆயாவைப் பார்க்க, ஆயா கண்களால் தன் கட்டிலுக்கு அடியில் காட்ட, இவன் புரிந்துக்கொண்டு குனிந்து கட்டிலுக்கடியில் இருந்தவனைப் பார்த்து சத்தமாக ஐஸ்பாய் ஃபோர் மகேஷ் என கத்தினான். நிமிர்ந்தவன் ஆயாவைப் பார்க்க, அவள் தூங்குவது போல் கண்களை மூடியிருந்தாள். அவள் முகம் புன்னகைத்தது, கோபியும் ஆயாவை நட்போடு பார்த்து புன்னகைத்தான்.

மறுநாள் பள்ளி முடிந்து வந்துக் கொண்டிருந்தவனுக்கு வெற்றிலை நினைவுக்கு வந்தது, ஆனால் கடையைத் தாண்டி வந்து விட்டதால் சரி நாளைக்கு வாங்கிக் கொள்ளலாம் என வீட்டுக்கு வந்து விட்டான். வழக்கம்போல் வீடு பூட்டியிருக்க, மேலே சென்றவனை படுத்திருந்த ஆயா பார்க்க, இவனே ஆயா அருகில் சென்று

- மறந்துடுச்சி, நாளைக்கு கண்டிப்பா வாங்கியாந்திர்றேன்

ஆயா எழுந்து உட்கார்ந்து,

- இனிமே ஆயா கேக்க மாட்டன், நீயா எப்ப வாங்கியாரையோ வாங்கியா

இவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது, மீண்டும் சொன்னான்

- நாளைக்கு கண்டிப்பா மறக்காம வாங்கியாந்துடறேன்

ஆயா சரியென தலையாட்டிப் புன்னகைத்தாள்.

மறுநாள் மாடிப்படிக்கட்டு ஏறப் போனவனுக்கு நினைவு வந்தது. திரும்பிப் போய் வாங்கி வந்து விடலாமா என யோசித்தவனுக்கு சோம்பேறித்தனமாக இருந்தது. மெல்ல படிக்கட்டு ஏறிப் போனான். ஆயா தூங்கிக் கொண்டிருக்க உள்ளே போய்விட்டான். அடுத்தடுத்த நாட்களிலும் மறந்து போனான், ஆனால் ஆயா அவனிடம் வெற்றிலையைக் கேட்பதில்லை. இவனும் அதைப்பற்றி பேசுவதில்லை. அருகில் அழைத்து பிஸ்கட்டோ பொட்டுக்கடலையோ கொடுப்பாள். ஆயா கொடுப்பதை சாப்பிடும்போது வெற்றிலை வாங்கி வந்து விட வேண்டும் என நினைத்துக் கொள்வான்.

அன்று மாடி படிக்கட்டு ஏறியவன் படுத்துக் கொண்டிருந்த ஆயாவைக் கடந்து உள்ளே போனான். உள்ளே ஓனர் அம்மாவும், இவன் அம்மாவும் அழுது கொண்டிருந்தார்கள். இவனுக்கு ஏன் என்று புரியவில்லை. அம்மா இவனிடம் சாவி கொடுத்து கீழே போ என்றாள். சாவியை வாங்கிக் கொண்டு வந்தவன் ஆயாவைப் பார்த்தான். ஆயா படுத்திருந்த விதம் இவனுக்குப் புதிதாக இருந்தது. மல்லாக்க படுத்து கண்களை மூடியிருந்தாள். சற்று நேரம் ஆயாவையே பார்த்தான். அவளிடம் எந்த அசைவும் இல்லை. இறங்கி வேகமாக கீழே போனான். பென்சில் பாக்ஸில் இருந்த காசை எடுத்துக் கொண்டு வேகமாக தெருவில் இறங்கி ஓடினான்.

பாய் கடைக்கு வந்து, காசை முன்னே இருந்த ஒரு டப்பாவின் மேல் வைத்து மூச்சு வாங்க பதட்டத்துடன்

- அஞ்சு ரூபாய்க்கு வெத்தல

பாய் எழுந்து வெற்றிலை எடுக்கப் போக,

- கருப்பு வெத்தல

குரல் அடைத்து வர, பாய் திரும்பி கோபியைப் பார்த்தார். அவன் கண்களில் நீர் தேங்கி இருந்தது.

- பாலாஜி தரணிதரன்

Pin It