இன்று செப்டம்பர் - 17 பெரியாரின் 141-வது பிறந்த நாள். பெரியாரின் சிந்தனைகளும், செயல்பாடுகளும் தமிழ்ச் சமூகத்திலும், அரசியலிலும் பெருத்த மாற்றங்களைப் படைத் திருக்கின்றன. சமூகத் தளத்தில் பார்ப்பனியம் தாக்குதலுக்கு உள்ளானது. அரசியல் தளத்தில் இந்தியத் தேசியக் கட்சியிடமிருந்து தமிழகத்தில் அரசியல் அதிகாரம் பறிக்கப்பட்டது. பெரியாரைத் தவிர்த்துவிட்டு தமிழக அரசியலையும், சமூகத்தையும் பற்றிப் பேச முடியாது.
மிகுந்த போற்றுதலுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருக்கும் தலைவர் பெரியார். மானுட விழுமியங்களைப் போற்றிய நீண்ட மரபுக்குத் தமிழகம் உரிமை உடையது என்றாலும் கூட, கடந்த நூற்றாண்டில் இந்தியத் துணைக் கண்டத்தின் ஏனைய பகுதிகளில் சாதிய-மத வெறி எவ்வாறு தலை விரித்தாடியதோ, அதே நிலையில்தான் தமிழகமும் இருந்தது. இன்று, இந்துத்துவ மதவெறி எதிர்ப்பில் தமிழகம் முதல் நிலையில் இருப்பதற்கும், இந்தி - சமஸ்கிருத எதிர்ப்பில் தமிழகம் முதன்மை வகிப்பதற்கும் பெரியார் முக்கியக் காரணம் ஆவார்.
சாதிய எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பில் ஒரு பொதுப்போக்கைக் கட்டமைப்பதில் பெரியாரின் பங்களிப்பு அளப்பரியது. பெயருக்குப் பின்னால் பின்னொட்டாக சாதியைப் போட்டுக் கொள்ளும் சாதி அடையாளத்தைப் பயன்படுத்துகிற வழக்கம் இன்று தமிழகத்தில் இல்லை. ஆந்திராவில் பெயருக்குப் பின்னால் விஷால் ரெட்டி என்று போட்டுக் கொள்ளும் நடிகர், தமிழகத்தில் வெறும் விஷால் என்ற பெயரோடு தோன்ற வேண்டியிருக்கிறது.
ஏனென்றால், தமிழ்ச் சமூகம் சாதிப் பின்னொட்டுப் போட்டால் ஏற்காது என்ற உறுதியான உளவியல் உருவாகியுள்ளது. இன்று தமிழகத்தில், பெயருக்குப் பின்னால் சாதியைப் பின்னொட்டாகப் போட வெட்கப்படுகிறார்கள். இது பெரியார் இயக்கத்தால் ஏற்பட்ட நிலையாகும். சமூக விடுதலை, பெண் விடுதலை, இந்து மத மறுப்பு, இந்தியத் தேசிய மறுப்பு, தமிழ்நாடு விடுதலைக் கருத்தியல் ஆகிய தளங்களில் பெரியாரின் பங்கு மகத்தானது.
சாதி ஒழிப்பின் தேவைபற்றி பெரியார் அழுத்தமான பார்வையைக் கொண்டிருந்தார். தமிழர் ஓர்மையைக் கட்டுவதில் பெரியாரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. சாதி ஒழிப்பு பற்றிய தொடர் முயற்சிகளின் விளைவாக, குறிப்பிடத்தக்க அளவில் தமிழர் ஓர்மை உணர்ச்சி வளர்ந்தது.
சாதி பற்றிப் பெரியார் இப்படிப் பதிவு செய்கிறார்: "முதலாவதாக, இந்தச் சாதி என்னும் சொல்லே தமிழ்ச் சொல் அல்ல. சாதிக்கு ஆதாரம் இந்து மதம் என்று சொல்வது. அந்த இந்து மதம் என்ற சொல்லும் தமிழ்ச் சொல் அல்ல. அதற்கு ஆதாரமாக உள்ள வேதமும், மனுதர்மமும் நமக்கு சம்பந்தப்பட்டவை அல்ல. அவைகள் நம் மொழியில் உள்ளவையும் அல்ல. நம் மக்களால் எழுதியவையும் அல்ல. எப்படியோ அவை நம் தலைக்கு வினையாக வந்து சேர்ந்திருக்கின்றன.
“இந்து என்ற சொல் எந்த மொழியிலும் இல்லை. ஆராய்ச்சிக் காரர்கள் அதை ஒரு நதியின் பெயர் என்கிறார்கள். சிலர் ஓரிடத்தில் வாழும் குறிப்பிட்ட மனிதர்களைக் குறிப்பது என்கிறார்கள். சிலர் பாரசீக மொழியில் திருடர்களைக் குறிப்பது என்கிறார்கள். அது மருவி வந்தது என்பார்கள் சிலர். மற்றபடி வர்ணாசிரம தர்மம் என்னும் சொல் கூட தமிழ்ச் சொல் அல்ல. நம் நாட்டில் அந்நியமம் இருந்திருந்தால், நம் மொழியில் அதற்கு வார்த்தை இருந்திருக்கும்... காப்பியைத் நம் தமிழ் மக்கள் ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு ஒரு பானமாக உபயோகிக்கவில்லை. அதனால் நம் தமிழ்மொழியில் அதற்கு ஒரு பெயரிடுவது இல்லாமல் போயிற்று.
ஆதலால், நாமும் அதை அந்நிய நாட்டுப் பெயரால் 'காப்பி' என்றே அழைக்கின்றோம். வர்ணாசிரம தர்ம சாதிப்பாகுபாடு நம் தமிழ்நாட்டில் ஆரியர்கள் வருவதற்கு முன்பே இருந்திருந்தால் நம் மொழியில் அவற்றிற்கு தனிப்பெயர் இருந்துதான் இருக்கும்." (குடியரசு, 30. 10. 1927)
இதன் பொருள் சாதி என்ற சொல்லும் தமிழ் அல்ல; சாதி முறையும் தமிழர்களுடையது அல்ல என்பது தான்.
மதம், புராணம், இதிகாசம், சாஸ்திரம், பண்பாடு என்று இன்று பல வடிவங்களில் மற்றும் பழக்கவழக்கங்களால் மக்களின் பொதுப்புத்தியில் பல நூற்றாண்டுகளாக ஏறி இருக்கக்கூடிய அடிமைத்தனத்தை மக்கள் மனதில் இருந்து அப்புறப்படுத்திவிட, பல நூறு ஆண்டுகளுக்கு மேலாக உருவாகியிருந்த தமிழ்ச் சமூகத்தின் பொதுப்புத்தியை மாற்றியமைக்கப் பெரியார் தொடர்ந்து போரிட்டார். மக்களின் உளவியலை மாற்றியமைக்க பெரியார் நடத்திய போர் மற்றவர்கள் நடத்தக்கூடிய போராட்டங்களிலிருந்து வேறுபட்ட ஒன்றாகும். சமூக விடுதலை, இந்தியத் தேசிய மறுப்பு, தனித்தமிழ்நாடு கோரிக்கை ஆகியவற்றில் மிகச்சரியாக இருந்த பெரியார், வியப்புக்குரிய வகையில், தமிழ் உணர்வாளர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.
தமிழ் உணர்வாளர்கள் எதன் அடிப்படையில் பெரியாரை விமர்சிக்கிறார்கள்? 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது. இந்த முழக்கத்தை முதலில் முன்வைத்தது தமிழறிஞர்களா அல்லது பெரியாரா என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள். இந்த கேள்விக்குப் பதிலாக இந்த முழக்கம் ஒரே காலத்தில் 1938-இல் தமிழ் அறிஞர்களாலும், தம்மாலும் முன்வைக்கப்பட்டது என்று பெரியாரே பதிவு செய்திருக்கிறார்.
'தமிழகத்தில் பிற மொழியினர்' என்ற நூலில் மா.பொ. சிவஞானம் ஒரு முக்கியப் பதிவை அளித்திருக்கிறார்:
"கட்டாய இந்தியை எதிர்த்து முதலில் மறைமலை அடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் கிளர்ச்சி தோன்றியது. எதிர்ப்பியக்கம் நடத்துவதில் வல்லவரான ஈ.வெ.ரா.வின் தலைமை அதற்குத் தேவைப்பட்டது. அவரும் அதை ஏற்றுக் கொண்டார். தமிழ்ப் புலவர்கள் மட்டுமே நடத்திய தூயமொழிக் கிளர்ச்சியானது பெரியார் தலைமை காரணமாக அரசியல் வண்ணம் பெற்றது. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு என்ற சொற்கள் முன்னணிக்கு வந்தன. "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற உரிமைக் குரலும் பிறந்தது. வில், புலி, மீன் சின்னங்கள் பொறித்த தமிழ்க்கொடி இந்தி எதிர்ப்பு வீரர்களின் கையில் காட்சியளித்தது. சுயமரியாதைக்காரர்கள் எல்லாம் "தமிழ் வாழ்க" என்று வாய் மணக்க வாழ்த்தினர்."
ஆகவே, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஒரு பெரும் அரசியல் போராட்டமாகப் பெரியார் தான் மாற்றியமைத்தார். அதுமட்டு மன்றி, ஆங்கிலேய ஆட்சியாளர்கள் தங்கள் ஆவணங்களில், 1938- ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தை சுயமரியாதைக் காரர்களின் போராட்டமாகப் பதிவுசெய்துள்ளனர். "தமிழ்நாடு தமிழருக்கே" என்று முதலில் வைக்கப்பட்ட முழக்கம் 'திராவிடநாடு திராவிடருக்கே' என்று பெரியாரால் மாற்றப்பட்டது. இதுவும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
பெரியார் சென்னை மாகாணத்தைத் தன்னுடைய செயல் தளமாக கருதினார். அன்றைய செயல்பாட்டுத் தளம், வரலாற்றுச் சூழல், உடனிருந்து பயணிப்போரின் மொழிப் பிரிவுகள் - உள்ளிட்ட காரணங்களால் பெரியார் தம் கோரிக்கை முழக் கத்தை திராவிடநாடு திராவிடருக்கே என்று மாற்றியதாகக் கருதலாம். மேலும், அச்சொல் ஆரிய, பார்ப்பன எதிர்ப்புச் சொல்லாகவும் கருதப்பட்டது.
1956 நவம்பர் 1ஆம் நாள், மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. அதன்பிறகு, திராவிட நாடு கோரிக்கை கைவிடப்பட்டு, தனித்தமிழ்நாடு கோரிக்கையைப் பெரியார் வலியுறுத்தத் தொடங்கினார். சென்னை மாகாணம் இல்லாதொழிந்ததும் திராவிட நாடு கோரிக்கையை மாற்றிக் கொண்டார். 1973 டிசம்பர் 24 ஆம் தேதி தம் இறப்புவரை இக்கொள்கையில் மாறாமல் இருந்தார்.
தம்முடைய இலக்கான சமூக விடுதலையை அடைய தனித்தமிழ்நாடு பெறுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று கருதினார். ஒரு இனத்தின் தேசிய இன விடுதலையை வென்றெடுக்க, இன ஒற்றுமையைக் கட்டமைப்பது மிக முக்கியமானதாகும். தமிழ்த்தேசியப் போருக்குத் தமிழ்த் தேசிய இன ஓர்மை என்பது மிகவும் அவசியம்.
சாதியால் பிரிந்து கிடந்த தமிழர்களை ஒன்றிணைத்து தமிழ்த்தேசிய ஓர்மையைக் கட்டுமானம் செய்யும் போக்கில் பெரியார் பெரும் பங்காற்றினார். தன் இறுதிக்காலம் வரை தமிழ்த்தேசிய ஓர்மைக்குத் தடையாக இருக்கக்கூடிய சாதியைத் தகர்ப்பதிலேயே கவனம் செலுத்தினார். இவ்வாறு தமிழ்த் தேசியப்போருக்குத் தமிழின ஓர்மையைக் கட்டமைத்துக் கொடுத்த பெரியாரைத் தமிழினத்தின் எதிரியாகக் காட்டுவது முரண் ஆகும்.
பெரியாருக்கு எதிராக முன்வைக்கப்படும் மிக முக்கியமான விமர்சனங்களுக்கான காரணங்களுள் ஒன்று , 1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றிய அவருடைய புரிதலும், அவர் நடந்து கொண்ட விதமும் ஆகும்.
1950 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்தியக் குடியரசு அரசமைப்புச் சட்டம், 1965 ஆம் ஆண்டு, தமிழ்நாடு உள்ளிட்டு இந்தியா முழுமைக்கும் ஒரே ஆட்சி மொழி இந்தி விளங்கும் என்று விதித்திருந்தது. ஆனால், இச்சட்டத்தை எதிர்த்து, இந்தி ஆட்சி மொழியாவதை எதிர்த்துப் பெரும் போராட்டம் தொடங் கியது. 1938-இல் இந்தியை எதிர்த்துப் போராடிய பெரியார், 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து ஒரு மாறுபட்ட பார்வையைக் கொண்டிருந்தார்.
1938-இல் கல்வி நிலையங்களில் கட்டாய இந்தி புகுத்தப்படுவதை எதிர்த்த பெரியார், 1965-இல் இந்தியா முழுமைக்கும் இந்தி ஒரே ஆட்சி மொழி என்று ஆக்கப்பட்டு இருப்பதை எதிர்த்துக் களம் காணவில்லை. மாறாக, இந்தி எதிர்ப்புப் போராட்டக்காரர்களைக் கடுமையாக விமர்சித்தார். தமிழக முதல்வர் பக்தவச்சலத்தின் காவல்துறையும், இந்திய ராணுவமும் மாணவர்களையும், பொதுமக்களையும் சேர்த்து 500 பேர் அளவில் படுகொலை செய்தன.
ஆனால் இப்படுகொலையைப் பெரியார் கண்டிக்கவில்லை. மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் காலித்தனம் என்று பெரியார் விமர்சித்தார். போராட்டங்களை அத்துமீறும் வன்செயல் என்று கண்டனம் செய்தார். போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, "பொள்ளாச்சியில் போராட்டத்தை ராணுவம் அடக்கியது; காலிகள் மீது சுட்டதில் 10 பேர் மாண்டனர் - என்று செய்தியாக வெளியிட்டார். (விடுதலை, 13.02.1965)
1965 மார்ச் 3-ஆம் நாள், விடுதலை இதழில் பெரியார் இவ்வாறு பதிவு செய்தார்: "இன்றைக்கும் நான் இந்தியை எதிர்க்கிறேன். தமிழ் கெட்டுவிடும் என்பதால் அல்ல. தமிழ் கெடுவதற்குத் தமிழில் எதுவும் மீதி இல்லை. ஆங்கிலமே அரசியல் மொழியாக, சட்ட மொழியாக ஆக வேண்டும் என்பதற்காகவே இந்தியை எதிர்க்கிறேன்" என்றார் பெரியார்.
1960-இல் காமராசர் அமைச்சரவையில் இருந்த கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் உயர்நிலைக் கல்வியில் தமிழைப் பாட மொழியாகக் கொண்டு வர அறிவிப்பு செய்தபோது, அதைப் பெரியார் எதிர்த்தார். தமிழைப் பாட மொழியாக அறிவிக்கக் கோரியவர்களைத் தாய்ப்பால் பைத்தியங்கள் என்று அழைத்தார்.
இக்காரணங்களால் பெரியார் தமிழ் உணர்வாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்படும் நிலையில், பெரியார் பற்றாளர்கள் விமர்சனங்களுக்குப் பல வகைப் பதில்களை அளிக்கிறார்கள்.
1965-இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பெரியார் எதிர்த்ததற்குக் காரணம் என்ன? காமராசரின் வழிகாட்டுதலில் நடைபெற்ற ஆட்சியின் மீது எரிச்சலடைந்த பார்ப்பனர்கள், பார்ப்பன ஏடுகள் இந்தி எதிர்ப்பை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தினர் என்றும், அது காமராசர் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியாகப் பெரியார் கண்டார் என்றும், பார்ப்பனர் ஆட்சி அமைக்க இராசாசி தலைமையில் நடந்த முயற்சிதான் 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்றும், அது எந்த இலக்கும் இல்லாத வன்முறைக் கிளர்ச்சி என்றும் பெரியாரை ஆதரிப்பவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
இவ்வாறு, பெரியாருடைய மொழிப் பார்வைக்கும், இந்தி எதிர்ப்புப் பற்றிய அவருடைய பார்வைக்கும், உயர் கல்வியில் தமிழ் குறித்து அவர் கொண்டிருந்த பார்வைக்கும் விமர்சனங்கள் உள்ளன.
மேற்கண்ட காரணங்களுக்காகப் பெரியாரை ஒட்டு மொத்தமாக நிராகரித்து விட முடியுமா?
இந்து மத மறுப்பு, இந்திய மறுப்பு, இந்திய தேசிய மறுப்பு, ஆகியவற்றில் பெரியார் முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்குத் தேவையான ஓர்மை-உளவியல் உருவாக்கத்தைப் பெரியார் அளித்தார் என்று கருதலாம். இருபதாம் நூற்றாண்டில், இந்தியத் தேசியத்தைப் பெரியார் மறுத்த அளவிற்கு வேறு எந்த தலைவரும் மறுத்ததில்லை. இந்தியத் துணைக் கண்டத்தில் அனைத்துத் தேசிய இன மக்களுக்குமான பொதுப் பிரச்சினை பார்ப்பனியமும் அதன் அரசியல் வடிவமான இந்தியத் தேசியமும் தான் என்பதைப் பெரியார் நன்கு அறிந்திருந்தார். அறிவியல் பூர்வமாக, மிகவிரிவான விளக்கங்களோடு, இந்தியத் தேசியத்தை அவர் கேள்விக்குள்ளாக்கினார்.
இந்தியா ஒரு நேஷனா? என்ற கேள்வியை 1937 லேயே அவர் முன்வைத்தார்:
"ஐரோப்பாவில் நார்வே, ஸ்வீடன், டென்மார்க், ஹாலந்து, பெல்ஜியம், போர்ச்சுக்கல், கிரீஸ், ஆகிய நாடுகள் நமது 4 ஜில்லா, 3 ஜில்லா, 2 ஜில்லா போன்ற விஸ்தீரணம் உள்ளவை. இவர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் நாட்டை தாய்நாடு என்பார்களே ஒழிய, ஐரோப்பாவைத் தாய்நாடு என்பார்களா? ஆகவே, அவர்கள் திராவிட மக்கள் எந்த காரணம் கொண்டு இந்தியாவைத் தாய் நாடு என்று கூற வேண்டும் என்பதும், எதற்காக இந்தியா பூராவும் எப்போதும் ஒரு குடையின் கீழ் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும் என்பதும் எனக்கு விளங்க வில்லை. முதலாவது, பாரதநாடு என்பதையும், நாம் எல்லாம் பரதர்கள் என்பதையும்கூட நான் ஒப்புக்கொள்ள முடியாது." (கொல்லம் பாளையத்தில் பெரியார் சொற்பொழிவு, 19.09.1939)
1938-இல் பெரியார் இவ்வாறு எழுதினார் :
"தமிழர் இழிநிலைக்குக் காரணம் இந்து மதத்தைத் தனது மதம் என்று கருதியதும், இந்தியா பூராவையும் தன் நாடு (தேசம்) என்று கருதியதும், இவ்விரண்டுக்கும் உழைக்கும் தொண்டே மக்கள் தொண்டு, தேசத் தொண்டு (தேசாபிமானம்) என்று கருதி வருவதுமே ஆகும். இந்திய தேச அபிமானம் என்பது தமிழன் பல நாட்டாரின் நலனுக்கு உழைத்து, பல நாடுகளுக்கு அடிமை யாய் இருப்பது என்பதாகும். இந்த நிலை அடியோடு அழியாமல் தமிழனுக்கு விடுதலை, சுதந்திரம், தன்மானம் என்பவை ஏற்படப்போவதில்லை." (குடி அரசு, 23.10.1938)
இந்தியாவின் கீழ் இருப்பதற்கும் இங்கிலாந்தின் கீழ் இருப்பதற்கும் என்ன வேறுபாடு என்பதே பெரியாரின் கேள்வி.
"தேடப்பட்டு திரட்டிய செல்வம் அனைத்தும் தமிழ் நாட்டை விட்டு வெளி நாட்டிற்குக் கடத்தப்படுகிறது. இந்தப்படி கடத்தப் படுவது, மேல் நாட்டுக்குப் போனால் என்ன, வடநாட்டுக்குப் போனால் என்ன ? அல்லது கீழ்நாட்டுக்குப் போனால் என்ன? அரசியல் துறையிலும் நாம் (தமிழன்) வேறு நாட்டுக்கு அடிமையாய் இருக்க வேண்டுமானால், அது மேல்நாட்டானுக்கு அடிமையானால் என்ன? வடநாட்டுக்கு அடிமையானால் என்ன? தமிழனின் செல்வம்தான் ஆகட்டும். தமிழ்நாட்டை விட்டு கடத்தித்தான் ஆகவேண்டுமானால், அது மேல் நாட்டுக்குப் போனால் என்ன? வடநாட்டுக்கு போனால் என்ன?"
இந்தியத் தேசியப் பற்று என்ற பெயரில் அடிமைத்தனத்தைப் போற்றுகிறவர்களைப் பார்த்து பரிதவித்துப் பேசுகிறார் பெரியார். "உதைக்கும் காலுக்கு முத்தமிட்டு பூஜை செய்கிறோம். மலத்தை முகருகிறோம். மானம் இழந்தோம், பஞ்சேந்திரியங்களின் உணர்ச்சியை இழந்தோம். மாற்றானுக்கு அடிமையாகி வணங்குகிறோம். இதற்குத்தானா உயிர் வாழவேண்டும்? நம்மை ஏய்த்து அழுத்தி நம் தலை மேல் கால் வைத்து ஏறி மேலே போக வடநாட்டான், தமிழர் அல்லாதவர்களுக்கு நாம் படிக்கல் ஆகி விட்டோம். இனியாவது "தமிழ்நாடு தமிழருக்கே," என்று ஆரவாரம் செய்யுங்கள். புறப்படுங்கள். தமிழ்நாட்டுக்குப் பூட்டப்பட்ட விலங்கை உடைத்து, சின்னாபின்னமாக்குங்கள் ! 'தமிழ்நாடு தமிழருக்கே ' (குடி அரசு, 23.10.1938; விடுதலை, 3. 12. 1957)
நாம் வேறு எந்த நாட்டையாவது இந்த நாட்டிற்கு வந்து ஆட்சி செய் என்று குறிப்பிடுவதாக இருந்தால் அது தேச துரோகம் ஆகும். ஒரு அமெரிக்கனை, ஜப்பான்காரனைக் கூப்பிட்டால் அது வேண்டுமானால் தேச துரோகம் ஆகும். ஆனால் நாம் இங்கே இருக்கிற அந்நிய ராஜ்ஜியத்தை வெளியே போ என்றால் அது எப்படி தப்பாகும்? எப்படி தேச துரோகம் ஆகும்? சொல்லட்டுமே யாராவது! நாங்கள் கூறுவது எல்லாம் எங்கள் நாட்டை எங்கள் ராஜ்ஜியத்தான் அல்லாத அந்நியன் யாரும் ஆளக்கூடாது. நாங்களே இந்த நாட்டை ஆளவேண்டும். வெளியில் இருப்ப வனுக்கு எவ்வித அதிகாரம், ஆதிக்கம் இருக்கக்கூடாது". (திருவல்லிகேணியில் பெரியார் சொற்பொழிவு, 25.02.1951; விடுதலை. 09.03.1951)
இந்தியத் தேசியம் என்பதே ஓர் ஏமாற்றுச் சொல் என்ற கருத்தில் பெரியார் தெளிவாக இருந்தார். இந்தியாவில் தேசியம் என்ற சொல்லே அபாயகரமான ஒரு சொல் என்று கருதினார். அவர் தேசியம் என்று எந்த இடத்தில் பயன்படுத்தினாலும் அதை இந்தியத் தேசியத்தைக் குறிக்கவே பயன் படுத்தினார்.
தமிழனின் தாழ் நிலைக்குக் காரணங்கள் இந்துமதம், இந்தியத் தேசியம் ஆகியவைதான் என்றார். பெரியாரின் சமூகச் சிந்தனை வருணாசிரம-சாதி இழிவு மறுப்பு என்றால், அவருடைய அரசியல் சிந்தனை இந்தியத் தேசிய மறுப்பு ஆகும்.
தமிழகத்தின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு தமிழகம் இந்தியாவிலிருந்து வெளியேறுவதுதான் என்ற கருத்தை வலிமையாக முன்வைத்தார் பெரியார் :
"பந்தயம் வேண்டுமானாலும் கட்டுவேன். மத்திய அரசாங்கப் பிடியிலிருந்து திராவிட நாடு தனிநாடாகப் பிரியாவிடில், சுதந்திரமில்லை -சோறு இல்லை - மான வாழ்வு இல்லை. இது உறுதி! உறுதி! உறுதி! பந்தயம் வேண்டு மானாலும் கட்டுவேன்!" (விடுதலை அறிக்கை, 25-2-1949.)
தம் சமூக விடுதலை இலக்கை அடைய தனிநாடு பெறுவதைத் தவிர வேறு வழி இல்லை என்பதைப் பெரியார் பலமுறை பதிவு செய்திருக்கிறார். தமிழ்நாட்டு விடுதலை என்பதைச் சுற்றியே அவருடைய செயல்பாடுகள் அமைந்தன.
தம்முடைய இயக்க அமைப்பையும், அதை மனதில் கொண்டே வடிவமைத்ததாகத் தெரிகிறது. அது குறித்தும் அறிந்து கொள்வது அவசியம்.
பெரியாரைப் பொருத்தவரை, சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும் வெவ்வேறு குறிக்கோளைக் கொண்டவை.பெரியார் இவ்வாறு பதிவு செய்கிறார்:
"சுயமரியாதை இயக்கத்திற்கும், திராவிடர் கழகத்திற்கும் உள்ள தொடர்பு யாவரும் அறிந்ததே ஆகும். சுயமரியாதை இயக்கத்தில் திராவிடநாடு பிரச்சினையை எதிர்ப்பவர்கள் இல்லாவிடினும், அந்த பிரச்சினையை முன்னிறுத்தி, வற்புறுத்தி பிரச்சாரம் செய்து வருவதில்லை. அதேபோல், திராவிடர் கழகத்தில் மதவெறியர்கள், சாதிவெறியர்கள் இல்லை என்றாலும், திராவிட நாடு பிரச்சனைதான் அதிகமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. திராவிட நாடு கிடைத்த பிறகு திராவிடர் கழகம் கலைக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் ஏற்படலாம்.
ஆனால், கடைசி மூடநம்பிக்கைக்காரன் இந்த நாட்டில் இருக்கின்ற வரையில் சுயமரியாதைக்காரனுக்கு வேலை இருக்கிறது. சுயமரியாதைக் கொள்கைகளைக் காங்கிரஸ்காரர்களும் கூட பலர் பின்பற்றி வருகின்றனர். ஆனால் அவர்கள் திராவிட நாடு பிரிவதை ஆதரிப்பதில்லை. ஆதலால், சுயமரியாதை இயக்கம் கட்சி பேதம் அற்றது என்று கூடக் கூறலாம். குறிப்பாகக் கூறவேண்டுமானால் திராவிடர் கழகத்தில் தொண்டாற்று வதற்குத் துணிவில்லாத இவர்கள் யாவரும் சுயமரியாதை இயக்கத்தில் கலந்து தொண்டாற்றலாம். (விடுதலை - தலையங்கம், 21 .10.1952)
பெரியாரின் விடுதலை தலையங்கத்துப் பதிவிலிருந்து, திராவிடர் கழகம் என்பது திராவிட நாட்டை வென்றெடுப்பதற் காகவே உருவாக்கப்பட்டது என்று பெரியார் கருதினார் என்பதை உணரலாம் . "நாம் இந்தியர் என்பதை விட்டு, மறுபடியும் இன உணர்ச்சியும் எழுச்சியும் பெற வேண்டும் என்று திராவிடர் என்னும் பெயரைக் கொண்டோம்." (குடியரசு, 09.12.1944), என்றும் குறிப்பிடுகிறார்.
திராவிடர் என்ற பெயரைக் கைக் கொண்டதற்கு இந்தியர் என்ற பெயரிலிருந்து விடுபடுவதற்கான வழி என்று பெரியார் கருதியதும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது . அது சரியானதா, தவறானதா என்பது குறித்து ஆய்வு செய்யத் தேவையில்லை. இந்தியர் என்ற அடையாளத்திலிருந்து விடுபடுவதில் அவர் குறியாயிருந்தார் என்பதை மட்டும் பிறர் உணர்ந்தால் போதும்.
திராவிடர் கழகத்தில் உறுப்பினராகச் சேர திராவிட நாட்டுப் பிரிவினையை ஆதரிப்பதும்,18 அகவைக்கு மேல் இருப்பதும் அடிப்படை விதிகள் என்று ஆக்கினார் பெரியார்.
திராவிடர் கழகத்தில் சேர்வதற்கு அடிப்படைத் தகுதி அவர் திராவிட நாடு விடுதலைக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று விதிமுறை செய்தார் பெரியார். திராவிட நாட்டு விடுதலையை ஏற்காதவர்களுக்கு திராவிடர் கழகத்தில் இடமே கிடையாது.
சமூக இழிவுகளைப் பற்றிப் பேசிய பெரியார் "இந்த சாக்கிலே நம் நாடு நம்முடையதாக ஆகிவிடாதா, அவ்வளவுதான் " என்று சென்னை தியாகராயநகரில் சிந்தனையாளர் மன்றம் சார்பில் 19.12.1973 அன்று பெரியார் ஆற்றிய இறுதிச் சொற்பொழிவில் குறிப்பிடுகிறார். தமிழ்நாடு பிரிவினைக் கருத்தை வாழும் காலமெல்லாம் மிக வலிமையாக முன்வைத்த பெரியார் இறப்புவரை அக்கோரிக்கையை உயர்த்திப் பிடித்தார். பெரியாருடைய இறப்புக்குப் பிறகு, பெரியாரியித்தினர் அக்கோரிக்கை யிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டார்கள்.
பெரியார் வாழ்ந்த காலத்தை விடவும் இன்று பார்ப்பனியம் பலம் வாய்ந்ததாக மாறி இருக்கிறது. பார்ப்பனியத்தின் அரசியல் வடிவமான இந்திய தேசியம் என்ற கருத்து இன்று வலுவாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. பார்ப்பனியம் இந்திய ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து தமிழ்நாட்டின் அரசியல் தலைமைகளை அனுமார் சேவையில் அமர்த்தியுள்ளது.
பார்ப்பனியம் இதுவரை தான் அணிந்து வந்த முக்காடு களான 'இந்திய பன்மைத்துவம்’, ‘வேற்றுமையில் ஒற்றுமை,' - அனைத்தையும் தூக்கிக் கடாசி விட்டது. ஒரே நாடு, ஒரே கொடி, ஒரே வரி, ஒரே தேர்வு முறை, ஒரே குடும்ப அட்டை, ஒரே பண்பாடு, ஒரே மொழி, என்று ஆரியப் பார்ப்பனியம் அதிகார வெறியோடு ஆர்ப்பரித்து வருகிறது. இதைத்தான் பெரியார் அன்றே சுட்டிக்காட்டி எச்சரித்தார்.
முகத்தில் இருக்கும் வாய் என்ற உறுப்பு பெரியாரை வானளாவப் புகழ என்றும், பெரியாரை வசைபாட என்றும் கருதிக் கொண்டிருப்பவர்கள், பெரியாரின் பங்களிப்பைச் சரியாக மதிப்பீடு செய்து, ஏற்க இயலாதவற்றை மறுத்து, ஏற்க வேண்டியவற்றை ஏற்று, தமிழின உரிமைகளைப் பாதுகாக்கப் பெரும் போராட்ட வடிவங்களைக் கைக்கொள்ள வேண்டும். பெரியாரியியத்தினர் ஆனாலும் தமிழ்த்தேசிய வாதிகள் ஆனாலும் பதில் வேண்டி அவர்கள் முன் ஒரு கேள்வி காத்து நிற்கிறது.
பிரச்சினைகளுக்குத் தீர்வாக பெரியார் முன் வைத்த, அவருடைய முகாமை இலக்கான தமிழ்நாட்டு பிரி வினைக் கோரிக்கையையே தலைமுழுகிய பின் பெரியாரி யித்தினர் என்று தங்களை அழைத்துக்கொள்ள பெரியாரி யியத்தினர் எப்படி உரிமை பெற்றவர்கள் ஆவீர்கள்?
பெரியார் குறித்து வசைமாரி பொழியும் தமிழ்த் தேசிய வாதிகளும் ஒரு கேள்விக்கு முகம் கொடுத்தாக வேண்டும். "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற முழக்கம் தமிழறிஞர்களைப் பொருத்தவரை, சென்னை மாகாணத்திலிருந்த தமிழ் மாவட்டங்களை மட்டும் பிரித்து, இணைத்து உருவாக்கப்படும் தமிழ் மாநிலத்தைக் குறித்தது. ஆனால் பெரியாருக்கு அது விடுதலைபெற்ற தமிழகத்தைக் குறித்தது.
1947 ஜூலை 1 ஆம் நாளை திராவிடநாடு பிரிவினை நாள் என்று நாடெங்கும் பெரியார் கொண்டாடினார். 15 ஆகசுத்து 1947யை விடுதலை நாளை துக்கநாளாக அனுசரித்தார். 1955-இல் இந்தித் திணிப்பை எதிர்த்து இந்தியக்கொடி எரிப்புப் போராட்டத்தை அறிவித்தார். இந்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை 26 .11.1957- அன்று நடத்தி, பத்தாயிரம் பேர் அரசியல் சட்டத்தைக் கொளுத்தி, 3000 பேர் ஆறு மாதம் முதல் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றனர். பலருடைய குடும்பங்களும் தொழில்களும் சிதைந்து போயின.
1960-இல் தமிழ்நாடு பிரிவினை கோரி, தமிழ்நாடு நீங்கிய இந்தியத் தேசப் படத்தை எரிக்கச் செய்து பெரியார் கைதானார்.
1973 டிசம்பர் 19-ஆம் தேதி, தன் சொற்பொழிவில் தனித் தமிழ்நாடு கோரிக்கையை மீண்டும் வலியுறுத்திய பெரியார், மறுநாள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, 24-ஆம் தேதி இறந்தார்.
போராட்டக் களத்தில் பத்தாயிரம் பேருக்கு மேல் மக்களைத் திரட்டி, அரசமைப்புச் சட்டத்தை எரித்து, 3000 பேருக்கு மேல் தொண்டர்களுடன் சிறை புகுந்து, ஆறு மாதம் முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை தண்டனை பெற்ற பெரியாரை விடப் பெரும் போராட்டத்தை நடத்திய பிறகுதான் எவரும் பெரியாரைக் குறை கூற முடியும். பெரியார் வாழ்ந்த காலத்தை விட, தமிழ் மொழி இன நாட்டு உரிமை இன்று பேராபத்தில் இருக்கிறது. பெரியாரை விஞ்சிய போராட்டத் தலைவர்கள் இன்று தேவைப்படுகிறார்கள். பெரியாரைப் போற்றுகிறவர்கள், தூற்றுகிறவர்கள் - யாராக இருந்தாலும் தமிழின - மொழி - நாட்டு விடுதலைக்கான புதிய போராட்ட வடிவங்களைக் கைக்கொள்ளட்டும்.
இதைத்தான் பெரியாரியியலாளர்களும், தமிழ்த் தேசிய வாதிகளுக்கும் செப்டம்பர் 17 நினைவூட்டுகிறது.