ஈரோடு முனிசிபாலிட்டிக்கு கமிஷனர் ஏற்பட்டு சுமார் 2 மாத காலமே ஆன போதிலும் இதற்குள் பல துரைகளிலும் சீர்திருத்தங்கள் நடந்து வருகின்றதானது மகிழ்ச்சியடையக் கூடிய காரியமேயாகும்.

என்றாலும் சுகாதார விஷயத்திலும் தெருக்கள் ஆக்கிரமிப்பு விஷயத்திலும் இன்னும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்ள வேண்டியவர்களாய் இருக்கின்றோம்.

தெருக்கள்

தெருக்கள் அதாவது ஜனங்கள் குடி இருக்கும் பாக வீதிகள் பெரிதும் கக்கூசாகவே உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன.

குழந்தைகளை பகல் காலங்களில் தாய்மார்கள் தாராளமாக தெருக்களில் மலஜலம் கழிக்க விடுகின்றார்கள்.periyar 579இரவு நேரங்களில் பெரியவர்களே தெருக்களை கக்கூசாக உபயோகிக்கிறார்கள்.

குழாய்கள்

தெருக்குழாய்களின் பக்கத்தில் பாத்திரம், மாடு கன்றுகள் கழுவுகின்றார்கள். தெருக்குழாய்களில் துணிகள் துவைக்கிறார்கள். தெருக்குழாய்களில் ஸ்நானம் செய்கின்றார்கள்.

இக்காரியங்கள் பெரிதும் மேல் ஜாதிக்காரர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ளுபவர்கள் குடி இருக்கும் வீதிகளிலேயே அதிகமாய் நடக்கின்றன.

சில சந்து பொந்துகள், நடக்க யோக்கியதையற்றவைகளாகவே காணப்படுகின்றன.

தெருக்களில் குப்பைத் தொட்டிகள் அல்லாத இடங்களில் குப்பைகள், அசிங்கங்கள் போடப்பட்டு வருகின்றன.

கடை வீதிகள்

இவைகள் ஒரு புறமிருக்க கடை வீதிகளில் குறுகிய தெருக்களாக இருக்கும் இடங்களிலும் கூட வீதியில் கால்கள் நிறுத்தி தட்டி போட்டுக் கொண்டு தெருவின் அகலத்தைக் குறைத்துக் கொள்ளுவதும், தெருவில் டிச்சுகளின் மீதும், தெரு ஓரங்களிலும் பெட்டிகள் போட்டுக் கொள்ளுவதும், கால்கள் நட்டு பலகைகள் போட்டு உட்கார்ந்து கொள்ளுவது, வியாபார சாமான்களை வீதியில் அடுக்கி வைப்பது ஆகிய காரியங்களாலும் தெருக்கள் அதிக குறுகலாக்கப்படுகின்றன.

லார்டு நேபியர் வீதியில் கோர்ட் வீதி ஜங்ஷனிலிருந்து அக்றார வீதி ஜங்ஷன் வரையில் நடக்கும் அக்கிரமம் சொல்லத்தரமல்ல. வாடகைக்கு இருப்பவர்கள் முனிசிபாலிட்டி இடத்தை உபயோகப்படுத்திக் கொண்டு ஜனங்களுக்கு இடைஞ்சல் செய்து விட்டு கடைக்காரர்களுக்கு வாடகை கொடுக்கின்றார்கள் என்றால் ஜனங்களுக்கு அனுகூலம் செய்வதற்காக இருக்கும் முனிசிபாலிட்டி இதைச் சகித்துக் கொண்டு இருக்க முடியாது.

படிக்கட்டுகள் கூட தெருவில் இருக்க இடமில்லாமல் செய்தால்தான் அந்த வீதி வண்டிப் போக்குவரத்துக்கு லாயக்காகுமே ஒழிய மற்றபடி அதை இந்த மாதிரி கடைக்காரர்களுக்கு கொள்ளை போக விட்டுவிட்டு வண்டிகளை அதில் விடுவது மகா கொடுமையான காரியமாகும்.

சமீபத்தில் ஒன்று இரண்டு வாரத்தில் 2, 3 ஆபத்துகள் ஏற்பட்டிருக் கின்றன. மோட்டார்கள் பலமாக தாக்கப்பட்டு காயமடைந்ததை நேரிலேயே பார்க்க நேர்ந்ததாலேயே இதை எழுதுகிறோம்.

இந்த குறைபாடுகள் ஈரோடு முனிசிபாலிட்டியில் வெகு நாளாய் இருந்து வருகிறது என்றாலும் அவைகள் பெரிதும் ஜனநாயக தத்துவத்தால் ஏற்படுகின்ற தவிர்க்க முடியாத கெடுதி என்று கருதித்தான் ஒவ்வொரு கௌன்சிலுக்கும் கமிஷனர்கள் வேண்டியது அவசியம் என்றும் அவர் தனது சுதந்திர எண்ணங்களை தாராளமாய் உபயோகிக்கத் தகுதி உடையவராய் இருக்க வேண்டும் என்றும் அறிஞர்கள் ஆசைப்பட்டதாகும். ஆதலால் கமிஷனர் அவர்கள் தயவு செய்து இக்காரியங்களில் சிறிது கவனம் செலுத்தி பொது ஜன சவுகரியத்துக்கு உதவிபுரிய வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம்.

இந்தக் காரியங்கள் ஆரம்பத்தில் சிலருக்கு அசௌகரியமாகத் தோன்றலாம். பழக்கமாகிவிட்டால் பிறகு சரியாய்ப் போய்விடும் என்று கருதுகின்றோம். அன்றியும் சிலருக்கு அசௌகரியம் என்பதற்காக பொது ஜனங்கள் கஷ்டப்படுவது என்பது நாகரீகத்துக்கும் நீதிக்கும் ஒத்ததாகாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். மற்ற விஷயங்கள் பின்னால் பார்த்துக் கொள்ளலாம்.

(பகுத்தறிவு செய்தி விளக்கக் குறிப்பு 25.11.1934)

Pin It