இன்று மயிலாடுதுறை என்று அழைக்கப்பெறும் அன்றைய தஞ்சை மாவட்டம் மாயவரத்தில் 1925ஆம் ஆண்டு ஒரு மாநாடு நடைபெற்றது. தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்தப்பட்ட அந்த மாநாட்டை நடத்தியது மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். அம்மாநாடு தேவதாசி ஒழிப்பு வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். தந்தை பெரியாரும், திரு. வி.கல்யாணசுந்தரனாரும் இம்மாநாட்டில் பங்கேற்று, தேவதாசி முறை ஒழிக்கப்படுவதற்குத் தங்களது ஆதரவினைத் தெரிவித்தனர். பின்னாளில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கோரி காங்கிரசிலிருந்து வெளியேறிய பெரியாருடன் இராமாமிர்தமும் வெளியேறினார். பெரியாருடன் இணைந்து சுயமரியாதை இயக்கத்தில் பணியாற்றினார்.

தேவதாசி முறை ஒழிப்பிற்கான நெடும்போராட்டத்தில் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்தவர் இராமாமிர்தம் அம்மையார். ஒருமுறை மேடையில் பேசிக்கொண்டிருந்தபொழுது அவரது முடி வெட்டப்பட்டது. மற்றொரு முறை, அவருடைய உணவில் நஞ்சு கலக்கப்பட்டு அவரைக் கொல்ல முயற்சி நடைபெற்றது.

பெரியார் இரண்டாவது சுயமரியாதை மாநாட்டை 1930ஆம் ஆண்டு ஈரோட்டில் நடத்தினார். இந்த மாநாட்டில் இராமாமிர்தம் அம்மையாரும் கலந்து கொண்டார். இம்மாநாட்டில்தான் கடவுளின் பெயரால் தேவதாசிகளாக, சிறுமிகளை ஈடுபடுத்தும் முறை ஒழிக்கப்படவேண்டும் என்றும், இம்முறையிலிருந்து மீண்ட பெண்களை இளைஞர்கள் திருமணம் செய்துகொள்ள முன்வரவேண்டும் என்றும், டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் தேவதாசி ஒழிப்பு மசோதா விரைவில் சட்டமாக்கப் படவேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்த இராவ்சாகிப் அய். குமாரசாமிப்பிள்ளை தமிழர் பெரும்படையின் தலைமைப் பொறுப்பு ஏற்றார். பட்டுக்கோட்டை அழகிரிசாமி தளபதியாக இருந்து படையை நடத்தி வந்தார். 300 மைல் தொலைவு நடந்து வந்த இத்தமிழர் பெரும்படையின் தொண்டர்களில் அறுபது வயது நிரம்பிய இராமாமிர்தம் அம்மையாரும் ஒருவர். சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு, 14.11.1938 அன்று கைது செய்யப்பட்டார். இவ்வாறு தமிழ்மொழிப் பாதுகாப்புக் களத்திலும் இவருடைய பங்கு குறிப்பிடத்தக்கது.

தேவதாசி ஒழிப்புக் களத்தில் தொடர்ந்து மேடையில் பேசுவதோடு, எழுத்தின் வாயிலாகவும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 'தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்' என்னும் நாவல் இவரது எழுத்துப் பணிக்குச் சான்று. தமயந்தி என்னும் தொடர்கதையையும் அண்ணாவின் திராவிட நாடு இதழில் எழுதினார். காங்கிரஸ், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று தொடர்ந்து பொது வாழ்க்கையில் ஈடுபட்ட இராமாமிர்தம் அம்மையார், 27-06-1962 இல் இயற்கை எய்தினார்.

- வெற்றிச்செல்வன்

Pin It