2013 ஆம் ஆண்டு நீட் தேர்வு தலைகாட்டியது என்றாலும், 2017 ஆம் ஆண்டு முதலே, தமிழ்நாடு உள்பட இந்தியா எங்கும் அது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது! அன்று தொடங்கி, தமிழ்நாட்டில் அந்தத் தேர்வு முறைக்கு கடும் எதிர்ப்பு உருவாயிற்று!
12 ஆண்டுகள் பள்ளியில் படித்து பெற்ற மதிப்பெண்கள் எல்லாம், மதிப்பற்ற எண்களாயின. நீட் தேர்வில் வெற்றி பெற்றால்தான் மருத்துவராக முடியும் என்னும் சமூக அநீதியைத் தமிழ்நாடு எதிர்த்தது. தி.மு.கழகமும், திராவிட இயக்கங்களும் முன்வரிசையில் நின்று அந்தத் தேர்வை எதிர்த்தன.அரியலூருக்கு அருகில், குழுமூர் என்னும் ஊரில் ஒரு கூலித் தொழிலாளியின் மகளாகப் பிறந்து, தன் கடின உழைப்பால் 1200க்கு 1176 மதிப்பெண்களைப் பெற்ற அனிதா என்னும் மாணவி, நீட் தேர்வில் வெற்றி பெற முடியாததால், தன் மருத்துவக் கனவை இழந்தாள். தற்கொலை செய்து கொண்டு தன் உயிரையும் இழந்தாள். அந்தப் பெண்ணைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பலர் இந்த நீட் தேர்வினால் தங்கள் உயிரை இழந்தார்கள்.
அன்று தமிழ்நாடு மட்டும் போராடியது. இன்று நீட் தேர்வை எதிர்த்து இந்தியாவே போராடிக் கொண்டிருக்கிறது. என்ன காரணம்? எப்படி வந்தது இந்த மாற்றம்?
இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 67 மாணவர்கள் 720 க்கு 720 மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர். ஓர் ஆண்டில் ஓர் 20 தான் இப்படி முழு மதிப்பெண்களை பெறுவர் ஆனால் இந்த ஆண்டு இந்த அதிசயம் எப்படி நடந்தது? அரியானாவில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய ஒன்பது பேர் முழுமதிப்பெண்களைப் பெற்றிருந்தார்கள்.
மெல்ல மெல்ல உண்மைகள் வெளிவந்தன. வினாத்தாள் கசிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பீகாரில் வினாத்தாள் கசிவிற்குக் காரணமாக இருந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்போது இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது. கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரை மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியத் தலைநகரம் தில்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் மாணவர்களும், பெற்றோர்களும் அன்றாடம் போராடிக் கொண்டுள்ளனர். இப்போதும் ஒன்றிய அரசு அடம்பிடிக்கிறது. எந்தத் தவறும் நடக்கவில்லை என்று சொல்லிப் பிடிவாதம் செய்கிறது!
மாணவர்களின் உயிர்களைப் பலி வாங்கி, எதிர்காலத்தை இருட்டாக்கி, மருத்துவக் கனவுகளை எட்டாத கனியாக்கி, அலங்கோலம் செய்து வரும் நீட் தேர்வு விரைவில் விடைபெறும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. அந்த நம்பிக்கை உண்மையாக வேண்டுமானால், அனைவரும் சேர்ந்து போராட வேண்டும்!
- சுப.வீரபாண்டியன்