கற்பூரம் நாறும் தமிழ்மொழியே!-மண்ணில்
கற்றவர் போற்றும் தமிழ்மொழியே!
அற்புத மான தமிழ்மொழியே!- எங்கள்
ஆவி நிகர்த்த தமிழ்மொழியே!

வள்ளுவம் தந்த தமிழ்மொழியே!- இந்த
வையகம் வாழ்த்தும் தமிழ்மொழியே!
பள்ளு நிறைந்த தமிழ்மொழியே!- இந்தப்
பாரில் உயர்தனிச் செம்மொழியே!

சங்கம் வளர்த்த தமிழ்மொழியே!- ஔவை
தன்னால் தழைத்த தமிழ்மொழியே!
திங்களைப் போல்திகழ் எம்மொழியே- உந்தன்
தீஞ்சுவைக் கென்றும் குறைவில்லையே!

எட்டுத் தொகையுந்தன் பேரழகே!- என்றும்
இன்பம் பயக்கும்உன் பத்துப்பாட்டே
கட்டுக் குலையா இலக்கணத்தை- தொல்
காப்பியத் தில்கொண்ட ஒண்மொழியே!

சீவக சிந்தா மணிதனிலே- பல
சீர்களைக் கொண்டவிருத் தம்தந்தாய்
கோவலன் கண்ணகி தொல்கதையில்- இசைக்
கோபுரம் கட்டி அழகுசெய்தாய்

பக்தி இலக்கிய ஆபரணம்- பூண்டு
பல்லக்கில் ஊர்வலம் வந்தவள்நீ
சித்தர்கள் சிந்தையில் ஏறினின்று- பல
சீர்திருத் தங்களைச் செய்தவள்நீ

காவியம் பாடிய கம்பனவன்- கையில்
கலைநயம் பெற்றுத் திகழ்ந்தவள்நீ
தீவிர மானநம் பாரதியின்- பாட்டால்
தீப்பிழம் பாகவே ஆனவள்நீ

இன்றுனைக் கொன்றிட எத்தனைபேர்- இங்கு
ஈனத் தனம்பல செய்கிறார்பார்!
குன்றை எறும்பு தகர்த்திடுமோ!- தமிழ்க்
கோபுரம் ஈமோதிச் சாய்ந்திடுமோ!

- மனோந்திரா

Pin It