பூமிக்கு அப்பால் பிரம்மாண்டமான கடலுடன் உள்ள ஒரு கோளை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வெகுதொலைவில் உள்ள இந்தக் கோளில் இருக்கும் வேதிப்பொருள் இங்கு உயிர்கள் வாழ்வதற்கான சூழ்நிலை இருப்பதை எடுத்துக் காட்டுகிறது. பூமியில் இருந்து 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் லியோ (Leo) நட்சத்திர மண்டலத்தில் உள்ள இதை ஜேம்ஸ் வெஃப் (James Webb) தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது.

ஹைசியன் கோள்

ஜேம்ஸ் வெஃப் தொலைநோக்கிக்கு முன்பு இந்த மண்டலத்தை ஹப்பிள் மற்றும் கெப்லர் தொலைநோக்கிகள் ஆராய்ந்தன. குறிப்பிடத்தக்க பல சிறப்புகள் உடைய இதற்கு நாசா விஞ்ஞானிகள் கே2-18 பி (K2-18 b) என்று பெயரிட்டுள்ளனர். பூமியை விட சுமார் ஒன்பது மடங்கு அதிக நிறையுடைய இது ஒரு ஹைடிரஜன் செறிவுள்ள வளி மண்டலத்தையும், நீர் நிறைந்த கடல் மேற்பரப்பையும் கொண்டுள்ளது. இது போன்ற அமைப்பு பூமிக்கு அப்பால் இருக்கும் ஹைசியன் கோள் (Hycean exoplanet) என்று அழைக்கப்படுகிறது.james webb space telescopeஇந்தக் கோளில் இருக்கும் ஒரு வேதிப்பொருள் கடலுடன் கூடிய ஓர் உலகிற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது என்று நாசா கூறுகிறது. ஏராளமான மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு, குறைவான அம்மோனியா ஆகியவை ஹைடிரஜன் செறிந்துள்ள வளி மண்டலத்திற்குக் கீழ் நீர் நிறைந்த ஒரு கடல் இருப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பூமியில் உயிரினங்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் டை மீத்தைல் சல்பைடு (Dimethyl Sulphide DMS) என்ற வேதி மூலக்கூறு கே2-18 பி கோளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இங்கு உயிர்கள் வாழும் சூழல் இருப்பதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

பூமியில் இந்த வேதிப்பொருள் கடற்சூழலில் பைட்டோ மிதவை உயிரினங்களால் (phytoplankton) உமிழப்படுகிறது. இந்த வேதிப்பொருள் இங்கு இருப்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

வருங்காலத்தில் ஜேம்ஸ் வெஃப் தொலைநோக்கி அனுப்பும் தரவுகளைப் பயன்படுத்தி இந்தப் பொருள் கே2-18 பியில் குறிப்பிடத்தக்க அளவு உள்ளதா என்பதை அறிய முடியும் என்று கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக விண்வெளியியலாளரும் நாசா ஆய்வுக் கட்டுரையின் முன்னணி ஆசிரியருமான நிக்யூ மாத்யூஸஃபன் (Nikku Madhusudhan) கூறுகிறார்.

மற்ற கோள்களில் நீர் இருப்பதை நாசா முதல்முறையாக இப்போது கண்டுபிடிக்கவில்லை. முன்பு பூமியில் இருந்து 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் சிக்னஸ் (Cygnus) நட்சத்திர மண்டலத்தில் நெப்டியூன் அளவிற்கு இருக்கும் ஹெச் ஏ டி-பி-11பி (HAT-P-11b) என்ற சிறிய கோளை நாசா கண்டுபிடித்தது. இங்கு நீர் ஆவிவடிவில் உள்ளது. கே2-18 பி கோளில் உயிர்கள் வாழ்வதற்கேற்ற சூழல் உள்ளதா என்பதை இப்போதைக்கு உறுதியாகச் சொல்ல முடியாது என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றன.

அண்டவெளியில் உயிர்கள் தேடலில் இது ஒரு முக்கிய திருப்புமுனை. வழக்கமாக பூமிக்கு அப்பால் இருக்கும் கோள்களில் உயிர்த்தேடலில் விஞ்ஞானிகள் சிறிய பாறைக்கோள்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். ஆனால் பெரிய ஹைசியன் உலகங்கள் வளி மண்டல ஆய்வுகளுக்கு உகந்தது. இந்தக் கோள் குளிர்ச்சியான கே2-18 (K2-18) என்ற குள்ள நட்சத்திரத்தைச் (dwarf star) சுற்றிவருகிறது.

வாழிட மண்டலத்தில் இருக்கும் கோள்

பூமியின் சுற்றளவை விட 2.6 மடங்கு அதிகமுடைய இந்தக் கோள் வாழிட மண்டலத்தில் (habitable zone) உள்ளது என்று நாசா கூறுகிறது. அண்டவெளியில் வாழிட மண்டலம் என்பது ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி திரவ வடிவில் இருக்கும் நீர் நிறைந்த கோள்கள் உள்ள பகுதியைக் குறிக்கிறது. இந்தக் கோள்களின் மேண்டில் பகுதியில் உயர் அழுத்தத்துடன் நெப்டியூனில் உள்ளது போல பனிக்கட்டிகள் இருக்கலாம்.

இவற்றில் அடர்த்தி குறைவான அதிக செறிவுடைய ஹைடிரஜனைக் கொண்ட வளி மண்டலமும் கடற்பரப்பைக் கொண்டுள்ளதாகவும் இருக்கலாம். ஹைசியன் உலகங்கள் நீர் உள்ள கடல்களைக் கொண்டதாக உள்ளவை என்று கருதப்படுகின்றன. ஆனால் இந்தக் கோளில் இருக்கும் கடல் உயிர்கள் வாழ இயலாத அளவு வெப்பம் அதிகமுடையதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இக்கோள் முதல்முதலாக 2015ல் நாசாவின் கே2 திட்டப் பயணத்தின்போது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் வெஃப் தொலைநோக்கியின் உயர்ந்த தொழில்நுட்பத்திறன் இங்கு கடற்பரப்பு இருப்பதை உறுதியாகக் காட்டுகிறது. பூமிக்கு அப்பால் இருக்கும் சிறிய நட்சத்திரங்களின் வளிமண்டலத்தின் சிறிய பகுதிகளைக் கூட இந்தத் தொலைநோக்கி கடந்து செல்லும்போது தெளிவாகப் படம் பிடித்து அனுப்புகிறது. ஜேம்ஸ் வெஃப் தொலைநோக்கியின் விரிவுபடுத்தப்பட்ட அலை நீளம், உயர்ந்த உணரி தொழில்நுட்பம் மூலம் இந்த கண்டுபிடிப்புகள் சாத்தியமாகியுள்ளன என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை செயல்பட்டு வந்த ஹப்பிள் தொலைநோக்கி குறுகிய அலை நீளம் உடையது. இது அனுப்பிய படங்களின் ஒரு மடங்கு துல்லியத் தன்மையுடன் ஒப்பிடும்போது ஜேம்ஸ் வெஃப் அனுப்பும் தகவல்கள் எட்டு மடங்கு அதிக துல்லியத் தன்மையுடன் அமைந்துள்ளன. ஜேம்ஸ் வெஃப் தொலைநோக்கி ஏவப்பட்டதன் ஓராண்டு நிறைவை ஜூலை 2023ல் நாசா பூமிக்கு அருகில் ஒரு நட்சத்திரம் உருவாவதை அந்த தொலைநோக்கி உற்றுநோக்கி அனுப்பிய படங்களை வெளியிட்டுக் கொண்டாடியது.

இந்த தொலைநோக்கி முன்பு எப்போதையும் விட இப்போது வெகு தொலைவில் இருக்கும் உலகங்கள், அவற்றைச் சுற்றி வரும் புதிரான அமைப்புகளின் உயர் தரப் படங்களை அனுப்புவதன் மூலம் மனித குலம் பிரபஞ்சத்தின் தோற்றத்தை நெருக்கமாகக் காண உதவியுள்ளது.

வானியலில் இரண்டு அடுத்தடுத்த பொருட்களுக்கு இடையில் வரையப்பட்டுள்ள கற்பனைக்கோடு (cusp of death) பகுதியில் இருக்கும் அரிய, இரத்தச் சிவப்புடன் கூடிய நட்சத்திரத்தின் அமைப்பு, 350 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பு தோன்றுவதற்கு முன்பு உருவான நட்சத்திர மண்டலங்கள், விஞ்ஞானிகள் நினைத்திருந்ததை விட பிரபஞ்சத்தைப் பிளக்கும் அளவில் உள்ள நட்சத்திர மண்டலங்கள் இருப்பதற்கான சான்று போன்றவற்றின் தகவல்கள் இந்தத் தொலைநோக்கி அனுப்பியவற்றில் அடங்கும்.

இந்த கண்டுபிடிப்புகள் நிகழ்காலத்தில் அண்டவெளியியல் கோட்பாடுகளையே மாற்றி எழுதக் கூடியவை என்று நாசா விஞ்ஞானிகள் கருதுகின்றனர். உயிர்கள் வாழ்வதற்கான சூழலை அண்டவெளியில் ஆராயும் மனிதனின் தீவிர முயற்சிகள் என்றும் தொடரும்.

மேற்கோள்: https://www.theguardian.com/science/2023/sep/11/nasa-planet-ocean-life-james-webb-telescope?

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It