தோழர் பெரியார், சமுதாயத்தின் அனைத்துத் தளங்களிலும் கடுமையாக - சமரசமின்றிப் போராடியவர் என்பதால், ஜாதி ஒழிப்பு, பெண்விடுதலை, பொதுவுடைமை, பகுத் தறிவு, தமிழ்நாட்டு உரிமை, அகில இந்திய அளவில் பார்ப்பனர் அல்லாதார் உரிமை, இந்திய அரசியல், தமிழ்நாட்டு அரசியல் போன்ற பல தளங்களிலும் இன்றும் பரபரப்பாக விவாதிக்கப்படும் தலைவ ராகத் திகழ்கிறார். அந்த வரிசையில் தமிழ்த்தேசியம், தனித்தமிழ்நாடு என்ற தளங்களில் பெரியாரை முன்வைத்து நடக்கும் கடுமையான விவாதங்கள் நமக்கு ஒரு தேடலை உருவாக்கின.

பெரியார் தமிழ்த்தேசியத்  தந்தை, பெரியார் இடதுசாரித் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்தவர் என்று பல பெரியாரியலாளர்கள் அறிவிக்கின்றனர். இந்தப் பார்வை, தமிழ்த்தேசியத்துக்குத் தாங்கள் தான் அங்கீகாரம் வழங்குபவர்கள் என்ற அதிகாரத் தோரணையில் வாழும் சிலருக்கு எரிச்சலைக் கொடுக்கிறது.

பெரியார் தமிழரே அல்ல; அவர் எப்படித் தமிழ்த்தேசத் தந்தையாக முடியும்? என்று சிலர் பேசுகின்றனர். ‘தேசியம்’ என்பதையே பெரியார் ஏற்கவில்லை. அவரைப் போய் தமிழ்த்தேசியத் தந்தை என்று கூறலாமா? என்று பல பெரியாரியல் தோழர்கள் எழுதுகின்றனர். “ஜாதி ஒழிப்பும், தனித் தமிழ்நாடும் என் இரு கண்கள்” என்றார் பெரியார் என்றும் பல பெரியாரியலாளர்கள் எழுதுகின்றனர்.

2009 க்குப் பிறகு தமிழீழ விடுதலை பேச வந்துள்ள சில அமைப்புகள், “பெரியார் தமிழ்த்தேச விடுதலைக்குப் போராடினார். ஆனால், அவரது மறைவுக்குப் பிறகு திராவிடர் கழகம் அக்கொள்கையைக் கைவிட்டு விட்டது.  அதனால், நாம் தற்சார்புத் தமிழ்நாட்டுக்காகப் போராட வேண்டும்” என்று பேசி வருகின்றனர். எனவே, தேசியம், தமிழ்த்தேசியம், தனித்தமிழ்நாடு என்பவற்றைப் பெரியார் எப்படி அணுகினார் என்பதைப் பற்றிய விவாதத்தை இக்கட்டுரை தொடங்குகிறது.   

“தமிழ்நாடு தமிழருக்கே” - இந்தி எதிர்ப்புக்காக மட்டுமல்ல

1937 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் இராஜாஜி, தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தியைத் திணித்து ஆணைபிறப்பித்தார். அதை எதிர்த்து பெரியார் இந்தி எதிர்ப்புப் போரைத் தொடங்கினார். 1926 லிருந்து இந்தித் திணிப்பை எதிர்த்து வந்த பெரியார், 1937 இல் இந்தித் திணிப்புக்காக மட்டுமல்ல; பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பையும் அடிப்படையாகக் கொண்டுதான் போரைத் தொடங்கினார்.

அந்த ஆட்சியில் முதலமைச்சரையும் சேர்த்து மொத்தம் 8 அமைச்சர்கள், ஒரு பேரவைத் தலைவர்,  ஒரு மேலவைத் தலைவர் என 10 பதவிகள் இருந்தன. அதில் 6 பேர் பார்ப்பனர்களாகவே இருந்தனர். தமிழ்நாட்டில் பார்ப்பனர்களுக்கு 12 இலட்ச ரூபாய் செலவில் வேதபாடசாலைகள் அமைக்கப்பட்டன.  1938 இல் 12 இலட்சத்துக்கு இருந்த பணமதிப்பைக் கணக்கிட்டுப் பாருங்கள். கிராமப்புறங்களில் இருந்த 2200 தொடக்கப்பள்ளிகள் இழுத்துமூடப்பட்டன.

குலக்கல்வித் திட்டத்திற்கு முன்னோடித் திட்டமான “வார்தாக் கல்வித்திட்டத்தை” அப்போது இந்தியா முழுவதும் காந்தி பிரச்சாரம் செய்து வந்தார். அந்தத் திட்டத்திற்கு முதற்கட்ட மாகத்தான் 2200 பள்ளிகள் இழுத்து மூடப் பட்டுள்ளன என்று பெரியார் 07.08.1938  குடி அரசு இதழில் தலையங்கம் வெளியிட்டார். அந்தத் தலையங்கத்தில் ஒவ்வொரு துறை வாரியாகப் பார்ப்பன ஆதிக்க நடவடிக்கைகளைப் பட்டிய லிட்டுள்ளார்.

...முதலாவது  பார்ப்பனரல்லாத   உபாத்தியாயர்கள் இருந்த   இடம் பார்ப்பனர்களாலேயே பூர்த்தி   செய்யப்பட்டு வருகிறது.

இரண்டாவது கல்லூரிகளில்   பார்ப்பனரல்லாதார் பிள்ளைகளும் சேர்த்துக்   கொள்வதற்காகச் செய்யப் பட்ட முறை ஒழிக்கப்பட்டு  விட்டது.

மூன்றாவது   பார்ப்பனரல்லாத  பிள்ளைகள் சுலபத்தில்  படிக்க முடியாதபடி சமஸ்கிருதத்தை (இந்தியை) சிறுவயதிலேயே  கட்டாயமாக்கப்பட்டுவிட்டது.

நான்காவது  சென்னை தவிர  வெளியில் பட்டணங் களில்  பெரிய கிராமங்களில் இருந்து  வருகிற மத்தியதரப் பள்ளிக்கூடங்கள்   மூடப்பட சூழ்ச்சி செய்யப்பட்டு வருகிறது.  அதாவது மேல் படிப்பு களுக்கு சம்பளம் (கட்டணம்)   உயர்த்தப் படுகிறது. இன்னும் பல இரகசிய ஏற்பாடுகள்    செய்யப் படுகிறது. (அதாவது வார்தா திட்டம் முதலியன)

உத்தியோக   விஷயத்தில் பார்ப்பனரல்லாதார்   எண்ணிக்கைக்கு (ஏற்ப) கிடைக்க வேண்டிய   அளவுக்கு 3 ல் ஒரு பங்கோ 4 ல் ஒரு  பங்கோ ஆவது கிடைக்கும்படி செய்திருந்த சில  முறைகள் அடியோடு ஒழித்து பார்ப்பனர் தவிர மற்றவர்கள்  உத்தியோகம் என்று நினைப்பதற்கு கூட யோக்கியதை இல்லாமல் செய்யப்பட்டு  வருகிறது. சில செய்தும் ஆய்விட்டன.

சர்க்கார்   வக்கீல் என்னும் பொறுப்பு  வாய்ந்த (பப்ளிக் பிராஸிகூட்டர்) உத்தியோகம் வக்கீல்களின் ஓட்டின்மீது தெரிந்தெடுக்கும் படியான தேர்தல் முறையில் விட்டாய் விட்டது. அத்தேர்தல்  முறைப் படி பார்ப்பனரல்லாதாருக்கு அந்த ஸ்தானம் கிடைக்கவே எவ்விதத்திலும் முடியாது.  

இந்த முறைப்படியே  அதாவது வக்கீல் ஓட்டின் மீதே மேஜிஸ்ட்ரேட், பிராசிக்கூஷன், இன்ஸ்பெக்டர்கள் ஆகிய உத்தியோகஸ்தர்கள் தெரிந்தெடுக்கப்படுவார் களாம். ஒரு பிராசிகூட்டிவ் இன்ஸ்பெக்டர்  கூட பார்ப்பனராக தெரிந்தெடுக்கப்பட்டாய் விட்டது. ஆகவே கிரிமினல் பவர் என்னும்,   மக்களை விரட்டி, அடக்கி, தண்டித்து துன்பப்படுத்தும் அதிகாரம் அடியோடு பார்ப்பனர்கள்  கையிலேயே இருக்கும்படி செய்துகொள்ளப்பட்டு விட்டால் இனி பார்ப்பன ரல்லாதார் சுதந்திரமும்  சுயமரியாதை உணர்ச்சியும் உள்ளவர்கள், யோக்கியர்கள், அப்பா விகள் ஆகியவர்கள் கதி என்னவாகும்  என்று சொல்ல வேண்டியதில்லை.

மற்றபடி  சர்க்காரால்  கொடுக்கப்படும்  உத்தியோகங் களிலும்   பழைய முறைகள் கூட அழிக்கப்பட்டு   விட்டன. பள்ளிக்கூடத் தலைமை உபாத்தியாயர்  வேலை 10 காலியானதற்கு 10ம் பார்ப்பனருக்கே கொடுக்கப்பட்டுவிட்டன.

மிருக   வைத்தியர்   வேலை 26 க்கு 19  பார்ப்பனருக்கே கொடுக்கப் பட்டாய்விட்டன.

சப்-ரிஜிஸ்டரார்   பதவியில் இருந்து   ஜில்லா ரிஜிஸ்டரார் பதவிக்கு  உயர்த்தும் வேலை 15ல் 11 பார்ப்பனர்களுக்கு  கொடுக்கப்பட்டு விட்டன.

ஒரு  பார்ப்பனரல்லாதார் ஹைகோர்ட்   ஜட்ஜ் வேலை காலியானதும் உடனே  ஒரு பார்ப்பனருக்கு கொடுக்கப்பட்டு   விட்டது.

மற்றும்  இப்போது செய்யப்படும்  புதிய நியமனங்கள் எல்லாம்  பார்ப்பனர்களுக்கே கொடுக்கப்பட்டு   வருகின்றன என்பதோடு மாத்திரம் அல்லாமல்    கலெக்டர் முதலிய மேல் வேலைக்குப் போகத் தகுதியுள்ள பெரிய உத்தியோகஸ்தர்  விஷயங்களிலும் தயாராய் அடுத்தபடி லிஸ்ட்டிலுள்ள பார்ப்பனரல்லா தார்களை மட்டம் தட்டி  விட்டு அவருக்கும் கீழிருக்கும் பார்ப்பனர்கள் உயர்த்தப்படுகிறார்கள்.

பார்ப்பனரல்லாதார்  உணர்ச்சி இருக்கும்  இடங்களில் உள்ள பார்ப்பனரல்லாத  உத்தியோகஸ்தர்களை மாற்றிவிட்டு பார்ப்பனர்களாகப்  போட்டு விடப் படுகிறது.

- தோழர் பெரியார், குடி அரசு, 07.08.1938

இந்த அறிக்கை மட்டுமல்ல; “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற கோரிக்கை அறிவிக்கப்பட்ட 11.09.1938 க்கு முன்னும், பிறகும் வெளியான பெரியாரின் பல கட்டுரைகள் இந்தித்திணிப்பு எதிர்ப்பு என்பது ஒரு கருவியாகப் பயன்படுத்தப் பட்டது என்பதைப் புரியவைக்கின்றன. தனித்தமிழ் நாட்டின் முதல் குரல், மொழித்திணிப்பு எதிர்ப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தொடங்கப் பட்டது அல்ல. பெரியாரின் இந்தி எதிர்ப்பு என்பதும் கூட இந்தி என்ற “மொழிக்கு” மட்டும் எதிரானது அல்ல; அந்த மொழித் திணிப்புக்குப் பின்னால் உள்ள பண்பாட்டுத் திணிப்பு, பார்ப்பன ஆதிக்கத் திணிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியே இருந்தது.

“தமிழ்த்தேசியம், தேசிய இனவிடுதலை” என்ற அடிப்படைகளிலோ, “தமிழனுக்கு என்று ஒரு நாடு வேண்டும்” என்ற அடிப்படையிலோகூடத் “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முழக்கம் தொடங்கப்பட வில்லை. ஆரியப் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பின் அடிப்படையிலேயே தொடங்கியது.

“ ... ஆரியமுறை ஜாதிப்பிரிவு காரணமாகவே   தமிழர்களில் 4 ல் ஒரு பங்கு மக்கள் படிப்புக்கும்  வைத்தியத்திற்கும் அறவே வழியில்லா மலும் உணவிற்கு அரைவயிற்றுக்    கஞ்சிக்குக்கூட வழி இல்லாமல் கூலி கொடுத்தாலும் கொடுக்கா விட்டாலும்  உழைத்துத் தீரவேண்டும் என்கின்ற நிலையில் தீண்டப்படாதவர்களாய் இருக்கிறார்கள்.

மற்ற 3   பாகத்தவர்களில்  பெருமக்களும் சரீரப்   பாடுபட்டு உழைப்பதே அவர்களது  கடமை என்கின்ற முறையில் கூலிக்கும் கூழுக்குமே  பிறந்தவர்கள் என்கின்ற நிலைமையில் இருக்கி றார்கள்.  ஏதோ சிலர் தேவைக்குமேல் தேடத்தக்க நிலையில் இருக்கிறார்கள்  என்றாலும் அவர்கள் தேடுவதை தங்கள் “ஜாதியை” உயர்த்திக் கொள்ளவும்   தங்கள் தொழில் ‘இழிவை’ மாற்றிக் கொள்ளவும், ‘மேல் லோகத்தில் நல்லிடம்’   தேடிக் கொள்ளவும் சுயநல காரியத்தில் பாழாக்கி ஒரு சோம்பேறிக் கூட்டத்தின்  நல்வாழ்வுக்கும் உயர் நிலைக்கும் ஆதிக்கத்திற்கும் பயன்படுத்தப்பட்டு விடுகிறது.

...தமிழரல்லாத சோம்பேறிகளுக்கு உதவியளிப்பதும், பொருள்  கொடுப்பதும் தமிழ் மக்களின் கடமை யாகவும் ஒழுக்கமாகவும்  கருதப்படுகிறது. சமுதாய வாழ்க்கைப்படியில் சரீரப்பிரயாசைப் படவேண்டியது  தமிழனின் தர்மமாகவும், கடமையாகவும், சரீரத்தால் பாடுபடாமல் அன்னியரின் உழைப்பிலும்  பொருளிலும் வாழ வேண்டியது தமிழனல்லாத வனுடைய கடமையாகவும் கற்பிக்கப்பட்டுவிட்டது.

...இக்கொடுமைகளுக்கும், குறைகளுக்கும், இழிவு களுக்கும்   பிரிட்டிஷ் அரசாங்கத்தை குறைகூற முடியுமா? அல்லது பிரிட்டிஷ்  அரசாங்கமே தமிழ்நாட்டில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டு விட்டால்  இவை ஒழிக்கப் பட்டுவிடுமா?

அல்லது   பிரிட்டிஷாருக்குமுன்  இந்தியாவுக்கு வந்த முஸ்லிம்  அரசாங்கம் இக்கேடுகளுக்கு காரணமா யிருந்தது என்றாவது சொல்லிவிட  முடியுமா? அப்படியானால் முஸ்லிம் ஆட்சி ஒழிந்து இன்றைக்கு 200 வருஷங்கள்போல்  ஆகின்றதே. இதற்குள் அக்கேடுகள் ஒழிந்திருக்க வேண்டாமா?

...தமிழ்  மக்கள் இன்று  தங்களை உண்மைத்   தமிழ ரென்றும் கலப்படமற்ற  தனித்தமிழ் ஜாதி என்றும்  ஒருவன் சந்தேகமாய் கருதுவானாயின்   அவன் உடனே தன்மீது சுமத்தப்பட்டிருக்கும்  தனக்கு எவ்வகையிலும் எப்போதும் சம்மந்தமிருந்திராத தான,  தன்னை (தமிழ் மகனை) ‘சூத்திரன்’ என்றும் ‘சண்டாளன்’ என்றும் கூறும்படியான  சமயத்தை உதறித் தள்ளிவிட வேண்டியது முதற்காரியமாகும்.

அடுத்தாற்போல்  அத்தமிழ்மகன் தமிழ்நாட்டின்  விடுதலையும், சுதந்திரமும், செல்வப்  பெருக்கும், தொழில் மேம்பாடும்தான் தன்னுடையது  என்றும், இவற்றிற்காக உழைப்பதுதான் தனக்காக தமிழ் மக்களுக்காக,  தமிழ் நாட்டுக்காகச் செய்யும் தொண்டு, கடமை என்றும் கருத வேண்டும்.  இப்படிக் கருதாததாலேயேதான் தமிழன் இன்று முற்கூறப்பட்ட பல இழிவுகளுக்கு ஆளாகி   நிரந்தர இழிமகனாய் இருக்க வேண்டியவனாய் இருக்கிறான்.

சுருங்கக்கூறின்   தமிழன் ஈனநிலைக்கு  காரணம் இந்து மதத்தை   தனது மதம் என்று கருதியதும்,  இந்தியா பூராவையும் தன்நாடு (தேசம்) என்று கருதியதும் இவ்விரண்டுக்கும் உழைக்கும்   தொண்டே மக்கள் தொண்டு தேசத்தொண்டு (தேசாபிமானம்) என்று கருதியதும் கருதி வருவதுமேயாகும். புறப்படுங்கள்!  தமிழ்நாட்டுக்கு பூட்டப்பட்ட விலங்கை உடைத்து சின்னாபின்னமாக்குங்கள்! தமிழ்நாடு தமிழருக்கே! தமிழ்நாடு தமிழருக்கே!! தமிழ்நாடு  தமிழருக்கே!!!

- தோழர் பெரியார், குடி அரசு, 23.10.1938

பிரிட்டிஷ் ஆட்சி, முகலாயர் ஆட்சி போன்ற பலர் ஆண்டாலும் நிரந்தரமாக நம்மை ஆண்டு வருவது பார்ப்பன இந்து மதம் தான் என்பதைக்கூறி, அந்த ஆரிய மதத்திலிருந்து பெறவேண்டிய விடுதலைக்கு ஒரு கருவியாகவே தமிழ்நாட்டு விடுதலையை முன்வைத்துள்ளார்.

இந்தி எதிர்ப்பைவிட ஆரிய அழிவே முக்கியம்

1937 இல் தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டம் மிகப்பெரும் அளவில் வளர்ந்துவந்த நிலையில், 1939 இல் இரண்டாம் உலகப்போர் வருகிறது. ‘கட்டாய இந்தி’ என்ற ஆதிக்கத்தை எதிர்க்காத ஆங்கிலேய அரசுக்குப் பாடம் புகட்ட வேண்டும். இந்தி எதிர்ப்பில் தமிழர்களுக்கு ஆங்கிலேய அரசு துணைநிற்கவில்லை. அதனால், நாம் உலகப்போரில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இருப்போம் என இந்தி எதிர்ப்புப் போராளிகள் உறுதியாக நின்றனர்.

அந்தச் சூழலில், பிரிட்டிஷ் அரசு இந்தப் போரில் வெல்ல வேண்டும். ஒருவேளை பிரிட்டிஷ் படைகள் தோற்றுவிட்டால், இந்தியாவானது ஜெர்மானிய ஆரியர்களின் ஆதிக்கத்தில் அடிமைப் பட்டுவிடும். பிரிட்டிஷ் ஆதிக்கத்தைவிட ஆரிய ஆதிக்கம் ஆபத்தானது என்ற அடிப்படையில் பிரிட்டிஷ் படைகளுக்கு ஆதரவைத் தெரிவிக்கிறார் பெரியார்.

“எனக்கு முன் பேசிய சிலர் யுத்தத்திற்கு உதவி செய்யக்கூடாதென்றும், போர் துவக்க அதிகநாள் கடத்தக் கூடாதென்றும் மற்றும் பலவிதமாக மிக்க ஆவேசத்துடன் பேசினார்கள். யுத்தத்திற்கும் இந்தி  எதிர்ப்புக்கும் சம்பந்தமில்லை. பிரிட்டிஷ் வெற்றிபெற வேண்டுமென்பது பிரிட்டிஷார் நன்மைக்காகவே அல்ல. அந்நிய ஆட்சி வேறு ஏதாவது ஒன்று நம் நாட்டில் இருப்பதென்றால் பிரிட்டிஷாரைத் தவிர வேறு ஆட்சி இருக்கக்கூடாது என்பது எனது கருத்து.

பிரிட்டிஷ் தோற்றால் ஜெர்மனி ஆட்சி வரக்கூடும். ஜெர்மனி  தன்னை ஆரியன் என்று சொல்லிக் கொள்கிறது. நம்நாட்டு ஆரிய ஆட்சியிலும் சமுதாயத்திலும், மதத்திலும், அரசியலிலும் நாம் படுகிற பாடு நீங்கள் அறியாததல்ல. இங்குள்ள பெரும்பாலான பார்ப்பனர் உள்ளத்தில் ஜெர்மனி  ஜெயிக்க வேண்டு மென்ற ஆசையும் பேச்சும் நாம் பார்த்து வருகிறோம். ஆகவே, ஜெர்மனி வந்தால் இரண்டு ஆரியர்களும் சேர்ந்து காந்தியாரும் உள் உளவாய் இருந்து வருணாசிரம் ஆட்சியாகத்தான் நடத்துவார்கள்.

அப்போது தமிழர்கள் ராம ராஜ்யத்தில் இருந்ததுபோல் குரங்குகளாயும், ராட்சதப்பதர்களாயும் இருக்க வேண்டியதுதான். ஆதலால்தான் நாம் பிரிட்டிஷ் வெற்றிபெற ஆசைப்பட்டு உதவி புரிய வேண்டு மென்று வேண்டிக் கொள்ளுகிறோம். இந்தி எடுப்பதை யுத்தத்தில் உதவிபுரிவதற்கு லஞ்சமாக நாம் கேட்கவில்லை கேட்கப் போவதுமில்லை.”

- (31-12-1939ஆம் தேதி காஞ்சிபுரத்தில் கூடிய இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி கமிட்டியில் தோழர் பெரியார்) குடிஅரசு- சொற்பொழிவு- 21.01.1940

1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆரிய ஆதிக்க எதிர்ப்புப் போராட்டமாக முன்னெடுத்த பெரியார், அதே இந்தி எதிர்ப்பு என்ற முழக்கம் ஆரியப் பார்ப்பனர்களுக்கு ஆதரவாகப் போய்விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்.  உலகப் போரின் போது இந்தி எதிர்ப்பைவிட ஆரிய ஆதிக்க எதிர்ப்பு முக்கியம் என்ற நிலை எடுக்கிறார். இந்தித் திணிப்பை மட்டும் எதிர்க்கும் தமிழ்மொழி ஆதரவாளர்கள் அனைவரும், அப்போது பிரிட்டிஷ் அரசுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கக்கூடாது என்று பெரியாரைத் திசைதிருப்பினர். பெரியாரோ இனவிடுதலை என்ற நோக்கில், இந்தி எதிர்ப்புப் போரையே சிறிது காலம் தள்ளிவைத்தார்.

திராவிடநாட்டுப் பிரிவினை மாநாடு

திராவிடநாடு பற்றி 17.12.39 குடிஅரசிலிருந்தே எழுதத் தொடங்கிவிட்டார் என்றாலும், அதை ஒரு வேலைத் திட்டமாக - ஒரு முக்கியத் தீர்மானமாக 03.06.1940 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் அறிவித்தார்.

“திராவிடநாடும் திராவிட மக்களும் ஆரிய நாட்டுடனும் ஆரிய மக்களுடனும் வெகுகாலமாய் பிணைக்கப்பட்டு அரசியல் முதலிய காரியங்களில் அவர்களோடே கலந்து இருந்து வந்ததில் இதுவரையில் திராவிடருக்கு எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் ஆரியர்களே முன்னேறிக் கொண்டு வந்திருப்பதோடு பெரும்பான்மையான திராவிட மக்களுடைய உழைப்பை ஆரியர்கள் அனுபவித்துக் கொண்டு - சமுதாயத்தில் கீழ்ஜாதியாகவும் கல்வியில் தற்குறி களாகவும், பொருளாதாரத்தில் கூலிகளாகவும் ஆகிக்கொண்டு வருவதல்லாமல் - பொது அரசியலின் பேராலும் இந்திய தேசியம் என்பதின் பேராலும் மேலும் மேலும் கீழான நிலைமையும் இழிவான  நன்மையுமே ஏற்படும் படி ஆரியர்கள் செய்து வருவதால் இந்தியா, இந்திய தேசியம், இந்தியர் என்னும் பிணைப்பிலிருந்து திராவிடநாடு (அதாவது தற்காலத்துக்கு சென்னை மாகாணம்) தனியாகப் பிரித்து அதற்குத் தனி அரசாட்சி ஏற்படுத்தி சற்றேறக்குறைய பர்மா, சிலோன் ஆகிய நாடுகளைப்போல் தனி ஸ்டேட் ஆக ஆக்கிக்கொடுக்க வேண்டுமாய் பிரிட்டிஷ் சர்க்காரை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

- குடிஅரசு, 09.06.1940

இரட்டைவாக்குரிமையே முதல்தீர்மானம்

காஞ்சிபுரம் மாநாட்டைத் தொடர்ந்து அதே 1940 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் திருவாரூரில் நீதிக்கட்சியின் 15 வது மாநில மாநாடு நடைபெற்றது. அதிலும் திராவிடநாடு பிரிவினைத் தீர்மானம் நிறைவேறியது. நாம் கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால், அந்த மாநாட்டில் மொத்தம் 33 தீர்மானங்கள் நிறைவேறின. அதில் திராவிடநாடு பிரிவினை 28 வது தீர்மானமாகத்தான் வந்தது. இரங்கல் தீர்மானங்கள், நன்றி அறிவிப்புத் தீர்மானங்கள் என்பவை வழக்கமாக நிறைவேற்றப் பட்டன. அந்த மாநாட்டின் முதல் தீர்மானமாக வந்தது,

“1. ஆதிராவிடர் சமுதாயத்திற்குச் சர்க்காரால் அளிக்கப்பட்ட தனித் தொகுதி காப்புமுறை - பூனா ஒப்பந்தத்தால் அழிக்கப்பட்டு, அச்சமுதாயத்திற்குச் சரியான பிரதிநிதி வராமல் செய்யப்பட்டு விட்ட தால், இனிவரும் தேர்தல்கள் யாவற்றிற்கும் தனித் தொகுதி முறையையே ஏற்படுத்த வேண்டுமென்று சர்க்காரைக் கேட்டுக் கொள்கிறது.”

18 வது தீர்மானமாக,

“அடுத்தாற்போல் வரும் மக்கள் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும் சென்ஸஸ் என்பதில் திராவிட மக்கள் தங்களைத் திராவிடர்கள் என்றே சொல்ல வேண்டுமென்றும், இந்துக்கள் என்று சொல்லக் கூடாதென்றும் கேட்டுக்கொள்வதோடு, எண்ணிக்கைக் காரர்கள் மதம் என்ன என்று கேட்டால், திராவிட சமயம் என்று சொல்லலாமே ஒழிய இந்து சமயம் என்று சொல்லக்கூடாது.”

26 வது தீர்மானமாக,

“இப்போது இருக்கிற இந்துச்சட்டத்தைத் திராவிடச் சமுதாயத்திற்குப் பயன்படுத்தக்கூடாது என்று சர்க்காருக்கு அறிவிக்கவும், நமது சமூகத்துக்கு ஒத்ததான வேறு சட்டம் திருத்தி அமைப்பதற்காகவும் ஒரு கமிட்டி நியமிக்கப்பட வேண்டும்.”

அடுத்து 27 வது தீர்மானமாக,

“ஆரியச் சூழ்ச்சியாலும் ஆரியச் சமய ஆதாரங் களாலும், திராவிட சமூகத்திடை நுழைக்கப்பட்ட சமுதாய உயர்வு-தாழ்வு வேற்றுமைகளை வேரொடு களைந்தெறிய வேண்டுமென்றும், திராவிடர்களுக்கு உள்ளாகவே இன்று காணப்படும் உயர்வு தாழ்வு களும் நீக்கப்பட வேண்டும் என்றும், இவைகளை ஒழிப்பதற்கு ஆக தகுந்த வழிகளை வகுத்த கையாளத்தகுந்த நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் இம்மாநாடு வற்புறுத்துகிறது.”

இவ்வாறு தாழ்த்தப்பட்டோர் விடுதலை, இந்து மத எதிர்ப்பு, ஆரியப் பார்ப்பன எதிர்ப்பு, பார்ப்பனிய ஒழிப்புத் தீர்மானங்கள் எல்லாம் நிறைவேறிய பிறகு 28 வதாகத்தான் நாடு பிரிவினைத் தீர்மானம் வந்தது.

“திராவிடர்களுடைய கலை, நாகரீகம், பொருளா தாரம் ஆகியவைகள் முன்னேற்றமடைவதற்கு, பாதுகாப்பதற்குத் திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம், இந்திய மந்திரியின் மேற் பார்வையின்கீழ் ஒரு தனிநாடாகப் பிரிக்கப்பட வேண்டுமென இம்மாநாடு தீர்மானிக்கிறது.”

தற்போது திராவிடர் இயக்க மாநாடுகளில் முக்கியமான தீர்மானங்கள் இறுதித் தீர்மானமாக நிறைவேறும். அதை அந்தந்த அமைப்பின் தலைவர் முன்மொழிவார். அந்த அடிப்படையில் திருவாருர் மாநாட்டில் திராவிடநாடு பிரிவினை இறுதித் தீர்மானமாக இடம்பெற்றிருக்கலாம் என்றும் கூற முடியாது. ஏனெனில், அதற்குப் பின்னரும் 5 தீர்மானங்கள் நிறைவேறியுள்ளன.

இந்த இரண்டு மாநாடுகள், திராவிட நாடு குறித்த பெரியாரின் அறிக்கைகள் அனைத்தும் நமக்குப் புலப்படுத்துவது ஒன்றே தான். ஆரிய - பார்ப்பன - இந்து மத இழிவுகளிலிருந்து விடுதலை பெறுவதற்கான ஒரு கருவியாகவே தனித்தமிழ்நாடு, திராவிட நாடு என்பவற்றைப் பெரியார் முன்னெடுத் திருக்கிறார்.

திராவிடஸ்தான் கோரிக்கை

1944 ஆகஸ்ட் 28 ஆம் நாள் சேலத்தில் திராவிடர் கழகம் தொடங்கப்பட்டது. கட்சி அரசியல் தீர்மானமாக திராவிட நாடு தீர்மானம் நிறைவேறியது.

‘திராவிடநாடு’ என்ற பெயருடன் நம் சென்னை மாகாணம் மத்திய அரசாங்க நிர்வாகத்தின் ஆதிக்கம் இல்லாததும், நேரே பிரிட்டிஷ் செக்கரட்டரி ஆப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டதுமான ஒரு தனி ஸ்டேட் நாடாக பிரிக்கப்பட வேண்டியது என்ற கொள்கையை முதற்கொள்கையாக சேர்க்கப் பட்டிருக்கிறது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

- குடிஅரசு, தீர்மானங்கள் 02.09.1944

இந்தத் தீர்மானம் இந்தியா முழுவதும் உள்ள மற்ற மாகாணங்களில் விவாதப் பொருளாகியது. திராவிட நாட்டுக்கு ஆதரவாகப் பஞ்சாப், உ.பி மாகாணங்களில் ஆதரவுகள் பெருகின. திராவிட நாட்டில் இணைய விருப்பம் தெரிவிக்கப்பட்டன. அதை குடி அரசு இதழ் வரவேற்று எழுதியது.

திராவிடஸ்தானுக்கு அம்பேத்கர் ஆதரவு

தோழர் அம்பேத்கர் அவர்கள் திராவிடநாடு தீர்மானம் தொடர்பாக , 1944 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதியில், சென்னைக்கு வந்து நேரடியாகத் தோழர் பெரியாரைச் சந்தித்தார். அச்சந்திப்பில், ‘திராவிடஸ்தான்’ என்றழைக்கப் பட்ட திராவிட நாட்டில், மராட்டியத்தையும் இணைத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார். பெரியாரும் அதை விரும்பி வரவேற்றார்.

“அம்பேத்கார் பாகிஸ்தானின் தத்துவம் வேறு - திராவிடஸ்தானின் தத்துவம் வேறு என்றும், அது முஸ்லிம் மெஜாரிட்டி உள்ள இடத்திற்கு மாத்திரம் பொருத்தமானதென்றும், ‘திராவிடஸ்தான்’ இந்தியா பூராவுக்கும் பொறுத்தமானதென்றும், பிராமணியம் இந்தியா முழுமையும் பொறுத்த விஷயமென்றும், திராவிடஸ்தானில் தங்களையும் வேறு மாகாணக்காரர் களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னார்.- தோழர் பெரியார் - குடிஅரசு - 30.9.1944

அகில இந்திய திராவிடஸ்தான்

முக்கியமாகப் பெரியார், “வடவேங்கடம் முதல் தென்குமரியாயிடை” உள்ள தமிழ்த்தேச மண்ணுக்கு விடுதலைகோரிப் போராடவில்லை. “தேசிய இனங்களுக்கு விடுதலை” என்ற அடிப்படையில் “தனித்தமிழ்நாடோ, தனித் திராவிடநாடோ” கோரவில்லை. ஜாதி ஒழிப்புக்காக எந்த நாட்டோடும் இணையவும் - எந்த நாட்டோடும் விலகவும் தயாராக இருந்தார். ஒட்டு மொத்த இந்தியப் பகுதிகளையும் திராவிட நாடாக்க முயன்றார் என்பதற்கான சான்றுகளும் உள்ளன.

“சென்னை மாகாணத்தை நாம் திராவிடநாடு என்று கூறி வருகிறோம். தமிழர்களாகிய நாம் ‘திராவிடநாடு திராவிடருக்கே’ ஆக வேண்டுமென்பதில் முனைந்திருப்போம். சில நாட்களில் ஒரியாக்காரன் தன்னையும் திராவிடன் என்று உணர்ந்து நம்முடன் சேர்வதாக இருந்தால் சேர்ந்து கொள்ளட்டும் இல்லையேல், மலையாளி தன் இனம் திராவிட இனமல்ல என்பதாக அறிந்து நம்முடைய கூட்டுறவிலிருந்து விலகிவிட விரும்பினால் ஒதுங்கிப் போகட்டும்.”-தோழர் பெரியார், குடிஅரசு, 03.06.1944

“டாக்டர் அம்பேத்கர் அவர்கள் மத்திய மாகாணத் தையும் மகாராஷ்டிரர் உள்ள மற்ற பாகத்தையும் சேர்த்துக் கொண்டால் நலமாக இருக்குமென்றும், அவர்கள் தயாராய் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தது வாசகர்கள் அறிந்ததேயாகும்.

அய்க்கிய மாகாண டாக்டர் மூஞ்சே அவர்கள் திராவிடர் கழகத்தின் சமயம், சமுதாயம் ஆகியவை சம்மந்தமான எல்லாத் தீர்மானங்களையும் ஏற்றுக் கொள்வதாகவும், வேண்டுமானால் இந்து மகாசபை மகாநாட்டில் வைத்து ஏற்றுக் கொள்ளச் செய்வதாகவும் - இந்தியா பூராவுக்கும் திராவிடர்கழகம் வேலை செய்ய தாம் ஒத்துழைப்பதாகவும் கூறி இருக்கிறதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவைகளையெல்லாம்விட மற்றொரு அதிசயம் என்ன வென்றால் தோழர் எம்.என்.ராய் அவர்கள் சுமார் 2 வருஷங்களுக்கு முன்பாகவே திராவிடர் கழக சமய, சமுதாயத் தீர்மானங்களைப் பாராட்டி ஏற்று தனது கட்சியுடன் இக்கொள்கைகளையும், திராவிடநாடு பிரிவினையும் சேர்த்துக் கொண்டு வேலை செய்யச் செய்கிறேன் என்றும் சொன்னதோடு, பல இடங்களில் அந்தப்படி செய்தும் இருக்கிறார். ஆகவே நமது கட்சி, நமது கொள்கை, நமது திட்டம் ஆகியவைகள் இன்று எல்லா இந்தியாவிலுள்ள மற்ற முக்கியக் கட்சிகள் கவனிக்கவும், பின்பற்றவும், பங்கு கொள்ள ஆசைப் படவும் செய்திருக்கிறது என்பதற்கு இது போதுமான ஆதாரங்களாகும்.

- தோழர் பெரியார், குடிஅரசு - 7.10.1944

அகில இந்திய அளவில் காங்கிரசைத் தவிர, தோழர் அம்பேத்கர், பொதுவுடைமை இயக்கத் தோழர் எம்.என்.ராய், இந்துத்துவ அமைப்பின் தலைவர் மூஞ்சே மூவரும் திராவிடஸ்தானுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்தனர். இந்தியா முழுவதையும் திராவிடஸ்தானாக மாற்றலாம் என அழைப்பு விடுத்தனர். பெரியாரும் அதை வரவேற்றார். தனித்தமிழ்நாடு, தமிழ்த்தேசியம், தேசியஇன விடுதலை, மொழிவழி தேசியம் போன்ற எந்தச் சட்டகங்களிலும் நம்பிக்கை வைக்காமல், அகில இந்திய அளவிலான முயற்சிகளைத் தொடங்கினார்.

இந்து மகா சபை ‘மூஞ்சே’ யோடு, பெரியாரின் ‘திராவிடநாடு’

அன்றைய ஆர்.எஸ்.எஸ் ஆன இந்து மகா சபையின் நிறுவனர் மூஞ்சே நேரடியாகப் பெரியாரைச் சந்தித்து திராவிட நாடு கோரிக்கைக்கு ஆதரவளித்தார். இந்தியா முழுவதும் திராவிட நாடாக அறிவிக்க முயற்சி செய்வதாகக் கூறினார். அது தொடர்பாக ஒரு குறைந்தபட்சச் செயல்திட்டம், பொது உடன்பாடுகூட உருவாக்கப் பட்டது. ஆனால் அது செயலுக்கு வரவில்லை. அந்தப் பொதுச் செயல்திட்டம்:

“1) இந்து என்றால் மதாச்சார விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது.

2) இந்து சமுதாயம் என்றால் இந்துக்கள் என்பதல்ல. இந்திய இனம் என்பதாகும். ஆதலால் இந்திய மக்கள் யாவரும் ஒரே வகுப்பாய் மாற்றி அமைக்கப்படவும், அதற்கான வழிகளைக் கண்டுபிடித்து எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும்.

3) மக்களை மதம்மாற விடக்கூடாது; பார்ப்பனியம் அடியோடு ஒழிக்கப்படவேண்டியதே.

4) இன்றுள்ள மதச் சடங்குகளுக்கும் சம்பிரதாயங் களுக்கும் மக்களை ஆளாகவிடாமல் அவைகளை கைவிடச் செய்ய வேண்டும்.

5) சர்க்கார் காங்கிரஸ் ஆதிக்கத்திலோ, ஆரியர் ஆட்சியிலோ இல்லாமல் பார்த்துக் கொள்வது.

6) சட்டசபை ஸ்தல ஸ்தாபனங்களில் பிராமணர்களுக் கென்று ஸ்தாபனங்களை ஒதுக்கி வைப்பது, பிராமணர் கள் பொதுத்தொகுதியில் ஓட்டுக் கொடுக்கவோ, நிற்கவோ இல்லாமல் விதி ஏற்படுத்துவது, எல்லா சமூகங்களுக்கும் எண்ணிக்கை விகிதாசாரத்தில் ஸ்தாபனங்களை அளிப்பது.

7) மாகாண மந்திரிசபையில் பிராமணர் ஒருவர் கூட கூடாது.

8) இந்தியா பூராவும் வேண்டுமானாலும் திராவிடஸ்தான் நாடாக ஆட்சி நிறுவ வேலை செய்வது.

9) அந்நியர் ஆட்சிக்கு இடமில்லாமல் இந்தியாவின் சுதந்திரத்திற்காக இந்து மகாசபையும், திராவிடர் இயக்கமும் ஒத்து வேலை செய்து வருவது என்பவை களைப் பற்றியாகும்.

சம்பாஷணை விஷயங்களை விளக்கிக் கொள்ளவும். அவைகளைத் திட்டமாகத் தயாரித்து இரண்டு கட்சி களும் ஒத்துக் கொள்ளும்படியும், அடுத்தாற்போல் கடிதப் போக்குவரத்து செய்ய டாக்டர் நாயுடு அவர்கள் இரண்டு தலைவர்களாலுமே ஒப்புக் கொள்ளப்பட்டார். மாலை 4.30 மணி முதல் 6.30 வரை சம்பாஷணை நடந்து முடிவுற்ற பின்னர், தலைவர்களுக்கும், மற்றும் விஜயம் செய்திருந்தவர்களுக்கும் தேநீர் விருந்தொன்று அளிக்கப்பட்டது.

இந்தப்படியே காரியதரிசி தோழர் அண்ணாதுரை அவர்களால் எழுதிய ஓர் அறிக்கையை அந்த இடத்திலேயே மெயில், இந்து, சுயமரியாதை, சுதேசமித்திரன், தினமணி, தினசரி முதலிய ரிப்போர்ட்டர்கள் வசம் கொடுக்கப்பட்டது. ஆனால் அத்தனை பேரும் பார்ப்பனர்களானதால் அதை விடுத்து தங்களுக்குத் தகுந்தபடி அவரவர்கள் பத்திரிக்கையில் போட்டுக் கொண்டார்கள். பார்ப்பனர்கள் புத்திக்கு இது ஒரு உதாரணம்.

-குடிஅரசு - 07.10.1944

(குறிப்பு: 29.09.1944 அன்று பிற்பகல் 4.30 மணிக்கு தென்னூரிலுள்ள வழக்கறிஞர் தோழர் வேதாசலம் அவர்கள் இல்லத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. பெரியாருடன் சி.என்.அண்ணா துரை, கே.வி. அழகர்சாமி, சி.டி.நாயகம், சங்கரன் ஆகியோர் இருந்தனர்)

இந்து மகாசபையோடு சேர்ந்துகூட இந்தியா முழுவதையும் திராவிட நாடாக்கத் திட்டமிட்டார்  இந்த முயற்சி தோல்வி அடைந்தது. அந்த நிலையிலும், இந்துமகாசபையோடு தீட்டிய பொதுச்செயல் திட்டத்தில், ‘மதமாற்றத்திற்குத் தடை’ என்ற திட்டத்தைத் தவிர மற்ற அனைத்துமே ஆரிய, பார்ப்பன, இந்து மத அழிப்பையே அடிப்படையாகக் கொண்டிருந்தன என்பதைக் கவனித்துப் பார்க்க வேண்டும்.

தேசம், தேசியஇன விடுதலை, மொழிவழி தேசியம் போன்ற கருத்தியலை நம்புபவராக இருந்தால், பெரியார் இந்து மகாசபையோடு பொதுத்திட்டம் தீட்டியிருக்க மாட்டார். தமிழ்த்தேசியம் பேசுபவர்கள் மட்டுமல்ல; கன்னட தேசியம், தெலுங்கு தேசியம், வங்காள தேசியம், காஷ்மீர் தேசியம் என எந்த தேசியத்தை நம்புபவராக இருந்தாலும், இந்து மகா சபையோடு கூட்டாக ஒரு பொதுத்திட்டம் தீட்டியிருக்க மாட்டார்கள். அனைத்து தேசிய இன மக்களையும் ஒரே, ‘இந்தியர்’ என்ற பெயரில் அடையாளப்படுத்த நினைக்க மாட்டார்கள்.

இதேநேரத்தில், அடுத்த சில ஆண்டுகளிலேயே மா.பொ.சி போன்ற தமிழ்த்தேசியர்கள் இதே போல அகில இந்தியக் கூட்டமைப்பை ஏற்றுக்கொண்டு, இந்தியாவுக்குக் கட்டுப்பட்ட “தனித் தமிழரசுக்” காகக் குரல் கொடுத்தனர். தமிழ்த்தேசியர்கள் பார்ப்பன ஆதிக்கத்தையும், இந்து மத ஆதிக்கத் தையும் ஏற்றுக் கொண்டு - அதற்காக இந்தியா என்ற கூட்டமைப்பை முன்மொழிந்தனர். பெரியாரோ பார்ப்பன, இந்துமத அழிப்பை அடிப்படையாகக் கொண்டு இந்தியக் கூட்டமைப்பை ஏற்றார். இரு தரப்பின் இந்திய ஆதரவுநிலைக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பெரியாரைப் பொறுத்தவரை எந்த அடையாளத்தையும் ஏற்கத் தயார்; “இந்து” என்ற இழிவு அடையாளம் ஒழிய வேண்டும் என்பதில் சரியாக இருந்தார். எவருடனும் கூட்டு சேரத் தயார்; இந்து மதத்தின் பெயரால் நடக்கும் “பார்ப்பன ராஜ்ஜியம்” அழிய வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். அதை இந்தப் பொதுத்திட்டம் தெளிவாகக் காட்டுகிறது.

திராவிடர் கழக ஆவணம்

1945 ஆம் ஆண்டு மே 29 ஆம் நாளில், திருச்சியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில், திராவிடர் கழகத்தின் இலட்சியம், விதிமுறைகள், அமைப்பு முறைகள், நிர்வாக முறைகள், தலைவர், பொதுச் செயலாளர், உறுப்பினர் கடமைகள் ஆகியவற்றை வரையறுத்து அவற்றைத் தீர்மானங்களாக நிறை வேற்றினர். இதைத்தான் திராவிடர் கழகத்தின் ஆவணம் என்று கூறவேண்டும். அவை ‘நமது குறிக்கோள்’ நூலில் பதிவாகி உள்ளன. அந்த ஆவணத்தில் இலட்சியங்களாகக் கூறப் பட்டுள்ளவை

“1. திராவிட நாடு (சென்னைமாகாணம்) சமுதாயம், பொருளாதாரம், தொழில்துறை ஆகியவற்றில் பூரண சுதந்திரமும், ஆதிக்கமும் பெறவேண்டும். திராவிட நாடும், திராவிடநாட்டு மக்களும் - திராவிட நாட்ட வரல்லாத அந்நியர்களின் எந்தவிதமான சுரண்டல்களி லிருந்தும், ஆதிக்கத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டுக் காப்பாற்றப்பட வேண்டும்.

2. திராவிட நாட்டில் உள்ள மக்கள் யாவரும் ஜாதி, வகுப்பு, அவை சம்பந்தமான உயர்வு - தாழ்வு இல்லாமல் சமுதாயத்திலும், சட்டத்திலும் சம உரிமையும், சமசந்தர்ப்பமும் பெற்றுச் சமவாழ்வு வாழச்செய்ய வேண்டும்.

3. திராவிட நாட்டு மக்களுக்குச் சமயம், சமயாச்சாரம், பழக்க வழக்கம் என்பவைகளின் பேரால் இருந்துவரும் பேத உணர்ச்சி, மூடநம்பிக்கை ஆகியவைகள் மறையச் செய்து, அவர்களைத் தாராள நோக்கமும் நல்ல அறிவு வளர்ச்சியும் பெற்ற ஒன்றுபட்ட சமுதாய மக்களாகச் செய்ய வேண்டும்.”

என்ற மூன்று இலட்சியங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. அதற்கு அடுத்து, அமைப்பின் பெயர், அமைப்பின் எல்லை ஆகியவற்றை அடுத்து ‘உறுப்பினர்’ என்பதற்குரிய உரிமைக்கு உரியவற்றை விளக்கியுள்ளனர்.

அங்கத்தினர்: மேற்கண்ட கழக இலட்சியங்களை ஒப்புக்கொண்டு, அவை நிறைவேறுவதற்காக திராவிடநாடு, இந்திய (மத்திய) அரசாங்க ஆதிக்கத்தில் இருந்து விலகி தனிச்சுதந்திரத் திராவிட நாடாக ஆக வேண்டியது மிகவும் முக்கிய மானது என்கின்ற திராவிட நாட்டுப் பிரிவினைத் தத்துவத்தையும் ஏற்று கழக விதிமுறைகளுக்கு இணங்கிக் கையொப்பமிட்ட 18 வயது கடந்த ஆண் - பெண் எவரும் திராவிடர் கழகத்தில் அங்கத்தினராக உரிமை உண்டு.

சமுதாய விடுதலை,  சமுதாய சமத்துவம், சம உரிமை, சம சந்தர்ப்பம், ஜாதி மதம் ஒழிந்த சமவாழ்வு   இவைதான் திராவிடர்கழகத்தின் - பெரியாரின் அடிப்படை இலட்சியங்கள். அவற்றை அடைவ தற்கான கருவிகள் தான் திராவிட நாடு, தனித் தமிழ்நாடு போன்ற போராட்டங்கள். அவற்றைக் கருவிகளாக மட்டுமே கருதியதால்தான், இந்தியக் கூட்டமைப்பையும், பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பையும் ஆதரிக்கிறார். அனைத்து நிலை களிலும் ஜாதி, மத ஒழிப்பை முதன்மைப்படுத்து கிறார். இதை உறுதிப்படுத்த மேலும் ஒரு கூடுதல் சான்றைப் பார்க்கலாம்.

இஸ்லாம் திராவிடமதமே!

ஒருபுறம் தனித்தமிழ்நாடு, திராவிடநாடு, அகில இந்திய திராவிடஸ்தான் என்றெல்லாம் போராடிக் கொண்டிருக்கிறார். இந்தியா முழுவதும் சுற்றி, பல முக்கியத் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். எந்த முயற்சியும் அவர் எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை.

இந்திய அரசியல் நிர்ணயசபை உருவாக்கப் படுகிறது. அரசியல் சட்டம் வரையறை செய்யப் படுகிறது. அவற்றில் தமிழ்நாட்டு திராவிடர்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை. பாகிஸ்தான் பிரிவினைக் குச் சாதகமான அறிகுறிகள் வந்துவிட்டன. ஆனால், திராவிடஸ்தான் முயற்சிக்கு அவர் நம்பிய தலைவர் களோ, பிரிட்டிஷ் அரசோ ஒத்துழைப்புக் கொடுக்க வில்லை. அந்த நிலையில், இந்து மத இழிவு நீங்க இஸ்லாம் மதத்தில் சேரலாம் என அறிவிக்கிறார்.

ஜாதி, மத ஒழிப்புக்கு ஏதோ ஒரு பெயரில் இந்தியக் கூட்டிலிருந்து விடுதலைபெற்று தனிநாடு அமைக்க வேண்டும். தனிநாடு அமைத்தால் மட்டும் ஜாதியையும், இந்துமதத்தையும் ஒழிக்க முடியும் என்று அதற்காக மட்டுமே போராடிக் கொண்டி ருக்கவில்லை. மதமாற்றம் எனும் ஆயுதத்தையும் கையிலெடுக்கிறார்.

“இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து” என அறைகூவல் விடுத்தார். 1931 இல் தாழ்த்தப்பட்ட மக்களை ஜாதி, தீண்டாமை இழிவுகளிலிருந்து விடுதலைபெற இந்து மதத்திலிருந்து வெளியேறி இஸ்லாம் மதத்திற்குச் செல்லுங்கள்; முஸ்லீமா வதைத்தவிர வேறு வழியில்லை என்று கூறினார். ஆனால் 1947 இல் பிற்படுத்தப்பட்ட மக்களை இஸ்லாமாக மாறுங்கள் என அறைகூவல் விடுக்கிறார். தனிநாட்டுப் போராட்டங்களுக்கு மாற்றாக இந்த மதமாற்றத்தை முன்வைக்கிறார்.

தங்களைச் ‘சத்திரியன்’ என்றும், ‘சூத்திரன்’ என்றும், அதுதான் பெருமை என்றும் வாழ்பவர் களே, அது ஒரு மானங்கெட்டவாழ்வு. அந்த மானங் கெட்ட வாழ்விலிருந்து வெளியேறி, இஸ்லாம் மதத்தில் சேருங்கள் என்றார். தனிநாடு முயற்சி களுக்கு எவற்றையெல்லாம் அடிப்படையாகக் கூறி வந்தாரோ, அதே ஆரிய - பார்ப்பன - இந்து மத அழிப்பையே இந்த மதமாற்றத்துக்கும் அடிப்படை யாகக் கூறினார்.

எந்தத் தத்துவச் சட்டங்களுக்குள்ளும், எந்தக் கருத்தியல் சட்டங்களுக்குள்ளும் தன்னைச் சிறைப் படுத்திக் கொள்ளவில்லை. “இந்துமத இழிவிலிருந்து விடுதலை பெறுவதே இலக்கு” என்று கவனம் சிதறாமல் போராடினார்.

க்ஷத்ரிய, சூத்திர இழிவிலிருந்து விடுதலைபெற இஸ்லாம்

“இந்தத் திராவிட சமுதாயம், மானங்கெட்ட சமுதாயமாய், சூத்திரராய், 4 ஆம், 5 ஆம் ஜாதி யாய், வேசிமக்கள், தாசிமக்கள், அடிமை மக்களாய், கல்வி, செல்வம், மானவாழ்வு, உழைத்த கூலிகூட இல்லாமல் மிருகங்களிலும் கேவலமாய் உரிமை இழந்து மனிதத்தன்மை இழந்து, ஈன வாழ்வில் அழுத்தப்பட்டுக் கிடப்பதற்குக் காரணம் இந்துவாய் இருப்பதல்லாமல் வேறு என்ன என்று கேட்கிறேன்.

இது என்ன மானக்கேடு! என்னுடைய நாட்டில், என் வரிப்பணத்தில் எனக்காக நடக்கிற ஆட்சியில் எனக்குப் பிரதிநிதித்துவம் இல்லை; எனக்கு விகித உத்தியோகமில்லை என்றால் இதற்காக ஆரியனுக்கு நான் விண்ணப்பம் போடுவதும், விழுந்து கும்பிடுவதும், கெஞ்சிக் கூத்தாடுவதும் மானமுள்ள தன்மையா என்று கேட்கிறேன்? யாரோ சில துரோகிகளுக்குச் சுயநல வஞ்சகர்களுக்கு மானம், ஈனம் இல்லாமல் தங்களைப் பார்ப்பன அடிமை (இந்து) என்று சொல்லிக்கொண்டால் நாமும் இந்து (அடியேன், தாசன், நாய்க்குட்டி, அடிமை) என்று சொல்லிக் கொள்வதா? என்று கேட்கிறேன். இழிவு நீங்க இஸ்லாம் (நான் இந்துவல்ல) என்கிற மந்திரம்தான் நம்மை மனிதராக்க முடியும்.

...சிந்தித்துப் பாருங்கள் திராவிடத் தோழர்களே, இஸ்லாம் என்றால் உங்களுக்கு ஆத்திரம் வருகிறது; சத்திரியர், வைசியர் என்றால் பெருமை அடைகிறீர்கள், சூத்திரர் என்பதை இழிவு என்று கருத மாட்டேன் என்கிறீர்கள். இப்படிப்பட்ட நீங்கள் இந்துவாய் இருக்கும்வரை மானத்துக்கும், மனிதத்தன்மைக்கும் தகுதி அற்றவர்கள் என்பது கல்போன்ற உறுதியாகும். ஆகவே இந்து மதத்தைவிட்டு வெளிவாருங்கள்; உடனே நீங்கள் தகுதி ஆனவர்கள் ஆகிறீர்களா இல்லையா என்று பாருங்கள்.

...இதை அரபியர் மதம், துருக்கியர் மதம் என்பதுபோல் இதைத் திராவிடர் மதம், அல்லது திராவிட மதம் என்று வேண்டுமானாலும் சொல்லிக் கொள்வதில் நமக்கு ஆட்சேபனை இல்லை. எப்படியாவது மக்கள் ஜாதி பேதம், பிறவி உயர்வு, தாழ்வு, பலகடவுள், உருவ வழிபாடு ஆகியவற்றில் இருந்து விலகவேண்டும்.

பார்ப்பனனுக்கு அடிமையாய் இருந்து இழிவுபட்டுத் தலையெடுக்க முடியாமல் இருக்கும் கேட்டிலிருந்து மீளவேண்டும் என்பதைத் தவிர வேறு கருத்து ஒன்றையும் கொண்டு நாம் இந்தப்படி சொல்லவில்லை என்பதைத் திராவிடர்கள் உணரவேண்டும்.

பார்ப்பானிடம் அன்பு, பார்ப்பானிடம் நேசம் வைத்துப் பார்ப்பான் போல வேஷம்போட்டு நடித்துக் கொண்டு சூத்திரனாக இருக்கச் சம்மதிக்கும் ஒருவன், அதுவும் திராவிடனாக இருப்பவன் இஸ்லாமியரிடம் அன்பு, நேசம், வேஷம்,நடிப்பு, நடித்துச் சூத்திரனல்லாதவனாக, திராவிடனாகவே இருப்பதில் என்ன வெட்கக்கேடு என்பது நமக்கு விளங்கவில்லை

கோபிக்கும் தோழர்களே! வேத சாஸ்திரங்களைப் புராண இதிகாசங்களை நெருப்பிலிட்டுக் கொளுத்து வதால் சூத்திரப்பட்டம் ஒழியப்போவதில்லை, கோவில் களை இடிப்பதாலோ விக்கிரகங்களை உடைத்து தூளாக்குவதாலோ, சூத்திரப்பட்டம் ஒழியப்போவ தில்லை. மறுபடியும் தோசையைத் திருப்புவது போல் பழையபடி திருப்பிவிடப் பார்ப்பனருக்குத் தெரியும், முடியும். திராவிடன் என்று சொல்லிக் கொள்வதால் மாத்திரம் சூத்திரப்பட்டம் ஒழியப்போவதில்லை. இன்றைய நிலைமையில் நான் இந்துவல்ல என்று சொல்லிக் கொண்டாலும் சூத்திரப்பட்டம் ஒழியப்போவ தில்லை. இந்து மதம் லேசில் ஒழியாது. அது பச்சோந்தி போல் சுலபத்தில் சாகும் மதமல்ல. அதைச் சாகடிப் பதற்கு நம் ஆயுளும் நம் பேரன்மார் ஆயுளும்கூடப் போதாது. ஆகவே நாம் அதை (இந்து மதத்தை) விட்டு விலகுவதுதான் நம் ஆயுளில் முடியக்கூடிய காரிய மாகும்.

...ஏற்கனவே ஏற்பட்டு உலகம் பூராவும் செல்வாக்கும் செலாவணியும் பெற்று, எவரும் சிந்தித்து சிந்தித்து ஒப்புக்கொண்டு அமலில் இருந்து வருவதும், நமது உண்மையானதும், உரிமையானதுமான கொள்கை கொண்டதுமாய் இருக்கும் சமுதாய சமத்துவ சமயத்தை ‘நான் தழுவிக் கொண்டேன்’ என்று சொல்லுவதில் என்ன தப்பு? என்ன கஷ்டம்? என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்

.- தோழர் பெரியார், குடிஅரசு - 05.04.1947

...இஸ்லாமானால் வெட்கக்கேடு என்ன? இஸ்லாமானால் நீங்கள் யாருக்கு அடிமையாவீர்கள்? இஸ்லாமானால் உங்களை எவன் இழிவுபடுத்த முடியும். இந்தியாவில் உள்ள 12 கோடிக்கு மேற்பட்ட முஸ்லிம்களில் 10 கோடி முஸ்லிம்கள் யார்? திராவிடநாட்டில் (சென்னை மாகாணத்தில்) உள்ள 50, 60 லட்சம் முஸ்லிம்களில் சுமார் 40 அல்லது 50 லட்ச முஸ்லிம்கள் யார்? இந்துக்களும், திராவிடர்களுமாய் இருந்தவர்கள் அல்லவா? இப்படிப்பட்ட முஸ்லிம்கள் இப்போது யாருக்கு அடிமையாய் இருக்கிறார்கள்? அவர்கள் எதற்காக எங்கே வெட்கப்படுகிறார்கள்? சொல்லுங்கள்! காட்டுங்கள்!

அவர்கள் சர்க்கார் கோரும்படி படித்தாலும், படிக்கா விட்டாலும் விகிதாச்சாரத்துக்கு மேலும் உத்தியோகம், ஜெயிலுக்குப் போனாலும் போகாவிட்டாலும் ‘சுயராஜ்யத்தில்’ விகிதாச்சாரத்துக்கு மேல்பட்ட சுதந்திரம், தனித்தொகுதி மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவம், அய்கோர்ட் ஜட்ஜிலும், சட்டசபை பதவியிலும் எவ்வளவு சிறிய கமிட்டிகளிலும் விகிதாச்சாரம் சரிபங்குபெற்றுச் சரிவாழ்வு வாழ்கிறார்கள்.

சுயராஜ்ய சர்க்காரில் இன்று உங்களுக்கு-திராவிடருக்கு நாதி இல்லை. அரசியல் நிர்ணய சபையில் உங்களுக்கு (சூத்திரப்பட்டம் வேண்டாம் என்கின்ற திராவிடனுக்கு) கேள்வி கேட்பாடில்லை. ஆசியா உறவு மகாநாட்டில் நீங்கள் ஒரு கூட்டம் இருப்பதாகக் கூடத்தெரியாது. இந்த நிலையில் உள்ள உங்களுக்கு இஸ்லாம் என்றால் சிகப்புத்துணி பறப்பதைக்கண்ட மாடுபோல் நடுக்க மேன்? பதட்டமேன்? ஆத்திரமேன்? அவதியேன்?

- தோழர் பெரியார், குடிஅரசு - 12.04.1947

முஸ்லீம்களோடு இணைந்து ‘திராவிடஸ்தான்’

திராவிடர்கள் எனப்படும் மக்கள் அனைவரும் இஸ்லாமில் இணையுங்கள் எனத் தொடர்ந்து பேசினார். இயக்கத்திற்குள்ளேயும், அவருக்கு நண்பர்களாக இருந்த பல தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களும், அகில இந்திய அளவிலான அரசியல் தலைவர் களும் அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பெரியார் அவர்களது எதிர்ப்புக் கருத்துகளுக்கெல்லாம் தமது குடி அரசு ஏட்டில் பல விளக்கங் களைக் கூறினார். தனது முடிவில் பின்வாங்காமல் இருந்தார்.

அதேசமயம், தமிழ்நாட்டில் இருந்த இஸ்லாமிய மதத் தலைமைகள் பெரியாரின் கருத்தை ஆதரிக்கவில்லை. பெரியாருடன் இணைவது தங்களுக்கு ஆபத்தாக முடியும் என நினைத்தனர். பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, அதன் தலைவர் தோழர் ஜின்னா அவர்கள், தமிழ்நாட்டு இஸ்லாமியத் தலைமைகளுக்குப் பெரியாரை ஆதரிக்குமாறு பலமுறை கடிதம் எழுதியிருக்கிறார். அதன்பிறகு தமிழ்நாட்டு இஸ்லாமியர்களிடையே மனமாற்றம் வந்தது.

ஏற்கனவே, பெரியார் 1944 இல் இந்துமகா சபையோடு பொதுச்செயல்திட்டம் தீட்டி, திராவிடஸ்தான் பெற முயற்சிகளை மேற்கொண்டு அவை தோற்றுவிட்டதைப் பார்த்தோம். அதைப் போலவே, முஸ்லீம் மதத்தலைவர்களோடும் ஒரு பொதுச் செயல்திட்டத்தை உருவாக்க முயற்சி மேற்கொண்டுள்ளார்.

டெல்லி ஏகாதிபத்தியக் கொட்டத்தைத் தடுக்க “திராவிடநாட்டுப்பிரிவினை” ஒன்றுதான் தக்க மருந்தென்பதைத் தோழர் ஜின்னா அவர்கள் உணர்ந்துதான் இவர்களுக்குப் புத்திகூறினார். இவர்கள் எங்கே திராவிடர்கழகத்தோடு சேர்ந்தால் அரசாங்கம் தொல்லை கொடுக்குமோ என்று பயந்து வாளாவிருக்கிறார்கள். தொல்லை ஏறுகிறதா? குறைகிறதா என்று இருந்து பார்க்கட்டும்,

...திராவிடர் கழகத் தலைவர்களும், முஸ்லீம் கழகத் தோழர்களும் ஒன்றுகூடிப் பேசித் தம் வேலைத் திட்டத்தை வகுத்துக்கொள்வது நலம் என்று ஒரு பொறுப்புள்ள முஸ்லீம் தோழர் குறிப்பிடுகிறார். ஆம். உண்மைதான். முஸ்லீம் தலைவர்கள் திராவிடர் கழகத்தோடு ஒத்துழைக்கத் தயாராயிருந்தால், கூட்டு வேலைத்திட்டம் என்றும் தனித்த வேலைத்திட்டம் என்றும் இரண்டு திட்டங்கள் வகுத்துக்கொண்டு அதன்படி நமது கூட்டுநலன் முன்னேறப்பாடுபடலாம்.

...ஆகவே, இங்குள்ள முஸ்லீம்கள் தமது பயங் கொள்ளித்தனத்தைக் கைவிட்டு, தோழர் ஜின்னா அவர்கள் காட்டிய வழியைப் பின்பற்றித் திராவிடநாட்டுப் பிரிவினைக்காக எங்களோடு ஒத்துழைக்க வேண்டுமென்று நான் முஸ்லீம்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

- தோழர் பெரியார், விடுதலை, 19.01.1948

பெரியாரின் “இஸ்லாம் - திராவிடர் கூட்டுமுயற்சி” எந்த அளவுக்குச் செயல் ஆனது என்பது பற்றி விரிவான வரலாறுகளைத் தேடிப் பதிவுசெய்யவேண்டும்.

இதில் நாம் கவனிக்க வேண்டியது, பெரியார் எந்த நிலை எடுத்தாலும், எல்லா நிலைப்பாடுகளிலும் ஜாதி - இந்துமத அழிப்பை அடிப்படையாகக் கொண்டே இயங்கியுள்ளார் என்பதைத்தான்.

(அடுத்த இதழில் முடியும்)

Pin It