கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

திருவண்ணாமலையில் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து செயல்பட்டுவரும் திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கம் 23.04.2016 காரிக்கிழமை மாலை, தூயதமிழ்க்காவலர் கு.மு. அண்ணல்தங்கோ அறக்கட்டளைச் சொற்பொழிவு நடத்தியது. அதில், “தமிழர் மறுமலர்ச்சியும் அண்ணல்தங்கோவும்’’ என்ற தலைப்பில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் உரையாற்றினார்.

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஆண்டாள் -- சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நடந்த அண்ணல் தங்கோ நினைவுச் சொற்பொழிவிற்குத் திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தோழர் அருள்வேந்தன் பாவைச்செல்வி தலைமை தாங்கி உரையாற்றினார். சங்கத்தின் செயலாளர் திரு. கே. காதர்சா வரவேற்புரை நிகழ்த்தினார்.

அண்ணல்தங்கோ அவர்களின் மகன்வழிப் பெயர்த்தி அருள்விழி கணவரும், திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவருமான திரு. சீனி. கார்த்திகேயன் முன்னிலை வகித்து உரையாற்றினார். தமிழ்ச்சங்கத்தின் பொருளாளரும் ஆண்டாள் -- சிங்காரவேலு திருமண மண்டபத்தின் உரிமையாளருமான திரு. சிங்கார. துரை உரையாற்றினார்.

அண்ணல்தங்கோ பெயரன் அருட்செல்வன்

அண்ணல்தங்கோ அவர்களின்  மகள் நாவுக்கரசி வழிப் பெயரனும், ”தூயதமிழ்க்காவலர் கு.மு. அண்ணல்தங்கோ” என்ற தலைப்பில் தம் தாத்தாவின் வரலாற்று நூல் எழுதியவருமான தோழர் செ. அருள்செல்வன், அண்ணல்தங்கோ குறித்த அறிமுகவுரை ஆற்றினார். அதன் சுருக்கம் வருமாறு;

தூயதமிழ்க்காவலர் அண்ணல்தங்கோ அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு ஐந்து முறை சிறைக்குப் போனார். மராட்டியத்தின் நாகபுரி, பிடல், சாகர், கேரளத்தின் கண்ணனூர் மற்றும் வேலூர், பெல்லாரி போன்ற பல சிறைகளில் மாற்றி மாற்றி வைக்கப்பட்டார்.

பெரியாரின் குடிஅரசு இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். 1927-இல் பார்ப்பனப்  புரோகிதரை நீக்கித் தமது திருமணத்தைத் தாமே தலைமை தாங்கி நடத்தி, புரோகித நீக்கத் திருமணத்திற்கு முன்னோடியாக விளங்கினார் அண்ணல்தங்கோ.

மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் இயக்கத்தில் பற்றுக் கொண்டு, தனித்தமிழ் பேசியும் எழுதியும் வந்தார். சமற்கிருதப் பெயர்களைத் தமிழில் மாற்றினார். முதலில் சாமிநாதன் என்ற தம் பெயரை அண்ணல்தங்கோ என்று மாற்றினார். தி.மு.க.வின் தலைவர்கள் பலரின் பெயர்களையும் மாற்றினார். சின்னராஜ் - என்ற பெயரை சிற்றரசு என்று மாற்றினார். சிந்தனைச்சிற்பி என்று சிறப்பிக்கப்பட்ட சிற்றரசு தாம் அவர். டார்பிடோ ஜனார்த்தனம் பெயரை மன்பதைக் கன்பன் என்று மாற்றினார்.

கிருபானந்தவாரியாரை அருளின்பக் கடலார் என்பார். ரெங்கசாமியை அரங்கண்ணல் என்று மாற்றியவரும் அண்ணலே! கலைஞர் கருணாநிதியின் பெயரை அருட் செல்வம் என்று மாற்றினார். இதைக் கலைஞரே பலமுறை தெரிவித்துள்ளார்.

“திராவிடர்” என்று சொல்லக் கூடாது, தமிழர் என்றுதான் சொல்ல வேண்டும். திராவிடர் என்பது இனப்பெயர் அன்று என்று பெரியாரிடமும் அண்ணாவிடமும் பலமுறை போராடினார் அண்ணல்தங்கோ. திராவிடர் கழகம் என்று 1944-இல் சேலம் மாநாட்டில் பெயர் சூட்டப்பட்ட போது, அதை எதிர்த்தவர்களில் அண்ணல்தங்கோவும் ஒருவர்.

பெரியார், அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், பாவாணர், ஜி.டி. நாயுடு, சர் முத்தையா செட்டியார், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், நாவலர் சோமசுந்தர பாரதியார் உள்ளிட்ட பெருமக்கள் பலருடன் நெருங்கிப் பழகியவர் அண்ணல்தங்கோ. “தமிழ் நிலம்” என்று ஏடு நடத்தினார். தமிழ்நாட்டு எல்லைக் காப்பு மாநாடு நடத்தினார். தமிழ்நாடு பெயர் மாற்ற மாநாடு நடத்தினார். 1904 ஏப்ரல் 12-இல் பிறந்த அண்ணல்தங்கோ, 04.12.1974-இல் காலமானார்.

இவ்வாறு தோழர் அருட்செல்வன் பேசினார்.

இந்தியத்தாலும் திராவிடத்தாலும்

தமிழர் மறுமலர்ச்சி முடமாக்கப்பட்டது

தோழர் பெ. மணியரசன் ஆற்றிய அண்ணல்தங்கோ நினைவுச் சொற்பொழிவின் ஒருபகுதி எழுத்து வடிவில் கீழே தரப்படுகிறது. சிற்சில இடங்களில் தேவை கருதி கூடுதல் செய்தி கூறப்பட்டுள்ளது. உரை வருமாறு:

தமிழர் மறுமலர்ச்சிக் காலத்தின் நாயகர்களில் ஒருவர் அண்ணல்தங்கோ. ஆனால் அவ்வாறு அவர் தமிழ்நாட்டு வரலாற்றில் மக்கள் பரப்பில் அறியப் படாமல் இருக்கிறார். அதிகாரம் பெற்றவர்கள் தங்களுக்குச் சார்பான ஒற்றைமுக வரலாற்றையே பெரும்பாலும் பதிவு செய்கின்றனர். காங்கிரசாரும் அப்படித் தான் செய்தனர். திராவிட இயக்கத்தவரும் அப்படித்தான் செய்தனர்.

ஒற்றை இயக்கப் போக்கை, ஒற்றைக் கதாநாயகப் போக்கையே அவர்கள் பதிவு செய்கின்றனர். இங்கு பேசிய அண்ணல் தங்கோ பெயரன் அருட்செல்வன், இந்திய விடுதலைப்போரில் ஈடுபட்டு சிறை சென்றதற்காகக் காங்கிரசாட்சி அண்ணல் தங்கோ அவர்களுக்கு 15 ஏக்கர் நிலம் வழங்கியதாகவும், “நிலத்திற்காக நான் போராடவில்லை” என்று கூறி 15 ஏக்கர் நிலத்தை வாங்க அண்ணல்தங்கோ மறுத்துவிட்டார் என்றும் கூறினார். வேலூர் மாவட்டத்தில் அண்ணல் தங்கோ பெயரை ஒரு பள்ளிக்கோ அல்லது பொது நூலகத்திற்கோகூட சூட்டவில்லை என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

1938, 1965 இந்தி எதிர்ப்பு மொழிப் போராட்ட ஈகியர்க்குக் கூட உரியவாறு நினைவுச் சின்னங்கள் எழுப்பப்படவில்லை. வரலாற்றுச் சிறப்புமிக்க அப்போராட்டங்கள் பாடப் புத்தகங்களில் ஏற்றப் படவில்லை. வடக்கெல்லை, தெற்கெல்லை மீட்புப் போராட்டங்கள் - அவற்றில் நடந்த ஈகங்கள், மீட்கப்பட்ட தமிழர் தாயக நிலங்கள் ஆகியவைகூட பாடப் புத்தகங்களில் சேர்க்கப்படவில்லை.

இதற்காகக் காங்கிரசாரையும் திராவிட இயக்கத் தாரையும் விமர்சிப்பதோடு நாம் நின்றுவிடக் கூடாது. நாம் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளை, நாயகர்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

அண்ணல்தங்கோவுக்கு ஒரு பெயரன் இருந்து, அந்தப் பெயரனுக்கும் எழுத்தாற்றல் இருந்ததால் அவரது வாழ்க்கை வரலாறு நமக்குத் தெரிய வந்துள்ளது. அப்படிப்பட்ட குடும்ப வாரிசு இல்லை என்றால் அண்ணல்தங்கோவின் புகழ்மிக்க வரலாறு பதிவாகி இருக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

சாதி ஒழிப்பு, சமூக சமத்துவம், தமிழர் வரலாற்று மீட்சி ஆகியவற்றில் தடம் பதித்த அயோத்திதாசப் பண்டிதர் அவர்களைக்கூட அண்மைக் காலமாகத் தான் நாம் அறிந்து வருகிறோம்.

எமது தமிழ்த் தேசியப் பேரியக்கத்தைப் பொறுத்த வரை, இயன்றவரை நம் வரலாற்று நாயகர்களை மீண்டும் மீண்டும் மக்களிடம் கொண்டு செல்ல முயன்று வருகிறது.

அண்ணல்தங்கோ அவர்களின் நூற்றாண்டு நிறைவுற்ற நிலையில் 2005ஆம் ஆண்டு சென்னையில் நடந்த தமிழ்நாடு தழுவிய மாநாட்டில் (த.தே.பொ.க.) அண்ணல்தங்கோ வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தை அச்சிட்டு வெளியிட்டோம். அண்ணலின் மகள்கள் --மருமகன்கள் - பேரப்பிள்ளைகள் ஆகியோரை அழைத்து மாநாட்டில் சிறப்பித்தோம்.

கடந்த சனவரி 24-இல் (2016) மதுரையில், தமிழ்த் தேசியப் பேரியக்கம் நடத்திய மொழிப்போர்-50 மாநாட்டில், மொழிப்போரின் முதல் தழல் ஈகி கீழப்பழூர் சின்னச்சாமி துணைவியார் கமலம் - மகள் திராவிடச்செல்வி, 1965 மொழிப்போர் ஈகியரான விராலிமலை சண்முகம் அண்ணன் மாணிக்கம், கீரனூர் முத்து, சத்தியமங்கலம் முத்து, ஆசிரியர் வீரப்பன், பீளமேடு தண்டபாணி உள்ளிட்ட ஈகியர்களின் குடும்பத்தினரை அழைத்து சிறப்புச் செய்தோம். விருகம்பாக்கம் அரங்கநாதன் மகன்களை சென்னையில் எமது அலுவலகத்திற்கு அழைத்து சிறப்புச் செய்தோம்.

மறைமலை அடிகளார் பெயரன் திரு. மறை. தி. தாயுமானவன், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் மகன் ஐயா கதிரேசன், அண்ணல்தங்கோ பெயரன் தோழர் அருட்செல்வன், மொழிப்போர் பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்களின் மகன் திரு. இலக்குவனார் திருவள்ளுவன், பாவலரேறு பெருஞ் சித்திரனார் மகன் திரு. மா. பூங்குன்றன் ஆகியோரை அழைத்துச் சிறப்புச் செய்தோம். பாவாணர் அவர்களின் மகன் திரு. தே. மணி அவர்களை அப்போது எங்களால் தொடர்பு கொள்ள இயல வில்லை. பின்னர் தொடர்பு கொண்டோம்.

தமிழ் இனத்திற்கு, தமிழ் மொழிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பு வழங்கிய நாயகர்கள் அனைவ ரையும் தொடர்நது, அடுத்தடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் நாங்கள் எங்களால் இயன்ற பணிகளைச் செய்து வருகிறோம். விழிப்புணர்வு பெற்ற தமிழர்கள் அனைவரும் இப்பணியில் ஈடுபட வேண்டும்.

மறுமலர்ச்சிக் காலம்

தமிழர் மறுமலர்ச்சி வள்ளலாரிடமிருந்து தொடங்குகிறது. எதுவுமே திடீரென்று தான் தோன்றியாகத் தோன்றுவதில்லை. அதற்கு முன்னர் அந்த மாற்றத்திற்கான சிறுசிறு கூறுகள் முளை விட்டிருக்கும். எல்லாவற்றிலும் பன்மை இருக்கிறது. அணுவுக்குள்ளும் பன்மை இருக்கிறது. எனவே, வள்ளலார்க்கு முன்பு மறுமலர்ச்சிக்கான கூறுகள் சிறுசிறு வடிவில் தோன்றின. வள்ளலாரிடம் ஓரளவு வளர்ச்சி பெற்ற வடிவம் பெற்றது தமிழர் மறுமலர்ச்சி!

வர்ணாசிரம எதிர்ப்பு - பார்ப்பனிய எதிர்ப்பு - சாதி எதிர்ப்பு - மனிதநேய ஒருமைப்பாடு - உயிர்நேயம் -  மக்கள் மொழியில் கவிதை-அழகுடன் செய்யுள்கள் என்பன வள்ளலார் மறுமலர்ச்சிப் பங்களிப்பின் சாரம்.

“வேதாகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்

வேதாகமத்தின் விளைவறியீர் - சூதாக

சொன்னவலால் உண்மைவெளி தோன்ற

 உரைத்தலிலை

என்ன பயனோ இவை’’

என்று கேட்டார் வள்ளலார்.

“சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே

சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே

ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே”

என்று பாடி சாதி, சமயச் சழக்குகளை விட்டு வெளியேறுவீர் என்று இடித்துரைத்தார் வள்ளலார்.

புலால் உண்ணாமை என்ற ஒரு நிபந்தனை மட்டும் போட்டுவிட்டு, மற்ற எந்த வேறுபாடும் இன்றி ஆண், பெண், சாதி, சமயம், மதம் கடந்து அனைவரும் உறுப்பி னராகக் கூடிய ஒரு சோசலிச (நிகரமை) சங்கமாக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். உருவ வணக் கத்தைத் தவிர்த்து ஒளி வணக்கத்தைப் பரப்பினார்.

19 ஆம் நூற்றாண்டில் சென்னை லௌகீக சங்கம் ((Secular Society)) என்ற பெயரில் பகுத்தறிவு இயக்கம் நடத்திய கற்றறிவாளர்கள் மற்றும் அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயக்கர் போன்றவர்கள் தமிழர் மறுமலர்ச்சியின் முன்னோடிகள்.

அயோத்திதாசப் பண்டிதர் பவுத்தத்தில் நின்று ஒரு பைசாத் தமிழன், தமிழன் என்ற பெயர்களில் இதழ் நடத்தி சாதி, சமய பேதங்களை, ஒடுக்குமுறைகளைச் சாடினார். தமிழர்களின் வரலாற்றுப் பெருமிதங்களை, தமிழர் அறத்தைப் போற்றினார்.

இந்த மரபின் அடுத்த பாய்ச்சலாகத்தான் பிராமண குலத்தில் பிறந்த பாரதியே “பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே“ என்று பாடினார். பாரதியாரும் தமிழர் மறுமலர்ச்சிப் பாவலர்தாம்.

மறைமலை அடிகளார் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் என்பதைத் தனித் தமிழில் பொதுநிலைக் கழகம் என்று பெயர் மாற்றி நடத்தினார். 1916-இல் தனித்தமிழ் இயக்கம் நிறுவினார். தமிழில் சமற்கிருதம் உள்ளிட்ட பிறமொழி கலக்காமல் - தூயதமிழில் பேசுவது, எழுதுவது என்பதுடன், குடும்ப மற்றும் கோயில் சடங்குகளைப் பார்ப்பனப் புரோகிதரை நீக்கித் தமிழரைக் கொண்டு நடத்த வேண்டும் என்ற சீர்திருத்தத்தையும் பரப்பினார். “சாதி வேற்றுமையும் போலிச் சைவரும்’’ என்று நூல் எழுதி சாதி வேறுபாட்டை எதிர்த்தார்.

இவ்வாறு ஆன்மிக வழிப்பட்டும் பகுத்தறிவு வழிபட்டும்  வளர்ந்த தமிழர் மறுமலர்ச்சிக்கு 20 ஆம் நூற்றாண்டில்  அரசியல் தளத்தில் இயங்கும் வாய்ப்பு வந்தது.

அரசியல் தளம் இரு அரங்குகளில் செயல்பட்டது. ஒன்று வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்த இந்திய விடுதலை அரசியல்; இன்னொன்று பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, இடஒதுக்கீடு - சமூகநீதி, பகுத்தறிவு, இந்திய எதிர்ப்பு, பெண்ணுரிமை முதலிய கூறுகளைக் கொண்ட சுயமரியாதை - திராவிட இன அரசியல்.

இந்திய விடுதலை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர் அண்ணல்தங்கோ. இந்திய விடுதலை சார்ந்த போராட்டங்கள் பலவற்றில் கலந்து கொண்டு ஐந்து முறை இந்தியாவின் பல்வேறு சிறைகளில் இருந்தவர் அவர்.

வெள்ளை ஏகாதிபத்தியத்தை விரட்டி அடிக்கும் விடுதலைப் போராட்டம் முற்போக்கானது, தேவையா னது. ஆனால் அந்த விடுதலைப் போராட்டத்தின் ஊடாக - வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல், பாரதமாதா, வேதகாலப் பாரதப் பெருமை போன்ற ஆரியப் பார்ப்பனியப் பெருமிதங்களைத் திணித்தனர். இந்திய தேசியம் -- இந்தியன் என்ற புனைவுகளை விடுதலைப் போராட்டத்தில் கலந்து விட்டனர்.

அண்ணல்தங்கோ அவர்களுக்கு இந்த பாரதமாதா பசனை - இந்தித் திணிப்பு - தமிழின மறைப்பு போன்றவை நெருடலாக இருந்தன. அண்ணல்தங்கோ மட்டுமல்ல, விடுதலைப் போராட்ட ஈர்ப்பால் காங்கிரசிலிருந்த திரு.வி.க., நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்ற தமிழறிஞர்கள் பலர்க்கும் பாரதமாதா பசனை, இந்தித் திணிப்பு, பார்ப்பனிய மேலாதிக்கம் போன்றவை ஒவ்வாமல் போயிற்று.

பெரும்பாவலர் பாரதியார் ஒருபக்கம் விதிவிதியே தமிழச்சாதியை என்செய நினைத்தாய் என்று பாடினார். செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்று பாடினார். இன்னொரு பக்கம் பாரதமாதா புகழும் பாடினார். ஆரியப் பெருமிதங்களையும் பாடினார். செப்புமொழி பதினெட்டுடையாள் ஆனால் சிந்தை ஒன்றுடையாள் என்று பாரத தேசியத்தை புகழ்ந்து பாடல்கள் யாத்தார்.

இந்தியா ஒரு தேசமல்ல. இந்தியாவில் பல தேசங்கள் இருக்கின்றன. வெள்ளை ஏகாதிபத்தியம் தனது நிர்வாக வசதிக்காக - இந்தியத் துணைக் கண்டத்தை ஒற்றை நாடாக்கி ஆட்சி செய்தது. காங்கிரசார் இந்திய தேசத் தந்தை என்று காந்தியைச் சொல்கிறார்கள். உண்மையான இந்தியத் தந்தை இராபர்ட் கிளைவ்தான்! பீரங்கியாலும் துப்பாக்கி யாலும் மண்ணுக்குரிய மன்னர்களைக் கொன்றும் வென்றும் இந்தியாவை நிர்மானித்ததில் இராபர்ட் கிளைவின் பீரங்கிக்குப் பெரும் பங்குண்டு!

காங்கிரசில் இருந்தாலும் சேரன்மாதேவி குரு குலத்தில் பார்ப்பன மாணவர்களுக்கு தனிப்பந்தி - தனி உணவு, பார்ப்பனரல்லாதார்க்குத் தனி உணவு --தனிப் பந்தி என வ.வே.சு. அய்யர் கடைபிடித்த வர்ணாசிரம வாதத்தை எதிர்த்த போராட்டத்தில் அண்ணல்தங்கோ கலந்து கொண்டார். தமது திருமணத்தில் 1927-இல் பார்ப்பனப் புரோகிதரைப் புறக்கணித்துத் தாமே தலைமை தாங்கி சீர்திருத்தத் திருமணம் செய்து கொண்டார். தூயதமிழில் பேசுவது எழுதுவது - பா இயற்றுவது என்ற பயிற்சி கொண்டார்.

தமிழ் மொழி, தமிழினம் ஆகியவற்றைப் பின்னுக் குத் தள்ளி மறைத்து, ஆரியப் பார்ப்பனியம், சமற் கிருதம், இந்தி, வடவர்கள் ஆகியோரை மேலாதிக் கத்தில் வைத்த காங்கிரசிலிருந்து வெளியேறத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தார் அண்ணல் தங்கோ. காங்கிரசுக் கட்சிக்குள் முரண்பாடுகள் முற்றியபின், அதைவிட்டு வெளியேறினார்.

பெரியாருடன் இணைந்து - சுயமரியாதை - இயக்கம் நீதிக்கட்சி செயல்பாடுகளில் தீவிரமாகப் பங்கேற்றார். பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு - சாதி ஒழிப்பு - பகுத்தறிவு  - பெண்ணுரிமை போன்ற முற்போக்கான பெரியார் கொள்கைகளில் அண்ணல்தங்கோ அவர்களுக்கு முழு ஈடுபாடு ஏற்பட்டது. ஆனால் பெரியார் “திராவிடர்’’ என்று ஓர் இனப்பெயரைத் திணித்தது அண்ணலுக்கு முரண்பாடாக இருந்தது.

தமிழினத்திற்கு வரலாறு விட்ட சாபம் போலும்! முற்போக்கு இலட்சியங்களுடன் தமிழின மறுப்பு -- தமிழ்மொழி மறைப்புக் கொள்கைகளும் சேர்ந்தே வந்தன. வெள்ளை ஏகாதிபத்தியத்தை விரட்டுதல் என்ற முற்போக்குக் கொள்கையுடன் பார்ப்பனியம், பாரததேசியம் என்பவை இணைந்து வந்தன. பார்ப்பன எதிர்ப்பு, பாரத தேசிய எதிர்ப்பு, பகுத்தறிவு என்ற முற்போக்குக் கொள்கைகளுடன் வந்த சுயமரியாதை இயக்கம், “திராவிடர்” என்ற தமிழின மறுப்புக் கொள்கையுடன் சேர்ந்து வந்தது. தமிழின மறுப்புமின்றி, தமிழ்மொழி எதிர்ப்பையும் பெரியார் மேற்கொண்டிருந்தார். தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றார்.

தமிழர் மறுமலர்ச்சி இவ்வாறாகக் காங்கிர சாராலும், திராவிட இயக்கத்தாராலும் முடமாக் கப்பட்ட காலுடன்தான் முன்னேறியது!

பெரியாரும் அண்ணாவும் ஒத்துக் கொண்டு 1944-இல்தான் சேலம் மாநாட்டில் நீதிக்கட்சிக்குத் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார்கள். என்றாலும் பெரியார் 1939-லேயே திராவிடர் என்ற திரிபுப் பெயரை தமிழர்களுக்குச் சூட்ட முன்வந்தார்.

1939-இல் நீதிக்கட்சியின் தலைவரானார் பெரியார். 1938-இல் தமிழ்நாடு தமிழர்க்கே என்ற பெரியார் 1939-இல் திராவிடநாடு திராவிடர்க்கே என்றார். இதில் அண்ணல் தங்கோவுக்கு உடன்பாடில்லை.

1940-ஆம் ஆண்டு திருவாரூரில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில், 1941-இல் புதிதாக எடுக்கவுள்ள மக்கள் தொகைக் கணக்கில் தமிழ்நாட்டு மக்கள் தங்களை இந்தியர் என்று பதிவு செய்யக்கூடாது என்று கேட்டுக் கொள்ளும் ஒரு தீர்மானத்தை அண்ணல்தங்கோ முன்மொழிய வேண்டும் என்பது ஏற்பாடு. “தமிழர்” என்று பதிவு செய்ய வேண்டும் என்பது அண்ணல் தங்கோவின் விருப்பம். பெரியாரும் அண்ணாவும் “திராவிடர்’’ என்று பதிவு செய்ய வேண்டும் என்று எழுதி வைத்திருந்தனர். தீர்மானத்தை மேடையில் படிக்கும்போதுதான் அண்ணலுக்கு இது தெரிகிறது.

தீர்மானத்தைப் படித்து முடித்தபின் “தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் தங்களைத் தமிழர்கள் என்று பதிவு செய்க - பிறமொழியினர் திராவிடர் என்று பதிவு செய்து கொள்க’’ என்று கூறி விட்டு, இறங்கிவிட்டதாக அண்ணல்தங்கோ கூறுகிறார்.

1944 சேலம் மாநாட்டில் இறுதிக்கும் இறுதியாக அதிகாரப்பூர்வமாக திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றப்படும்போது, கி.ஆ.பெ. போன்ற தலைவர் களுடன் அண்ணல்தங்கோவும் “தமிழர் கழகம்’’ என்று பெயர் சூட்ட வலியுறுத்திப் போராடினார். ஆனால் பெரியாரும் அண்ணாவும் திராவிடர் கழகம் என்று மாற்றினார்கள். வெறுப்புற்று, அங்கிருந்தும் வெளியேற வேண்டிய நிலை அண்ணல்தங்கோவுக்கு ஏற்பட்டது. பின்னர் முத்தமிழ்க்காவலர், “தமிழர் கழகம்” தொடங்கி னார்.

கற்றறிந்த சான்றோர்களே, கற்றுவரும் இளைஞர் களே, தமிழர் மறுமலர்ச்சி - அதன் முழு வேகத்தில் முன்னேறாமல் முட்டுக்கட்டை போட்டவைதான் இந்தியத் தேசியமும் திராவிட இனவாதமும்! நாவலர் சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ. விசுவநாதம், அண்ணல்தங்கோ ஆகியோரின் அரசியல் வாழ்விலி ருந்து நாம் பாடம் பெற வேண்டும். அவர்கள் பட்ட பாட்டிலிருந்து நாம் படிப்பினை கற்க வேண்டும்.

பாவேந்தர் பாரதிதாசன் நடைமுறையில் மிகச் சிறந்த தமிழ்த்தேசியப் பாவலர்! ஆனால் பெரியார் மயக்கத்தில் ஆழ்ந்து திராவிடத்தை ஆதரித்து வந்தார். ஆனால் கடைசி காலத்தில் பாவேந்தர் திராவிட மயக்கத்தை விட்டொழித்தார் என்று அண்ணல் தங்கோ வாழ்க்கை வரலாற்று நூலில் அருட்செல்வன் ஒரு நிகழ்வை சுட்டிக் காட்டியுள்ளார்.

சென்னை தியாகராயர் நகர் இராமன் தெருவில் பாவேந்தர் வாழ்ந்து வந்த காலம். ஒருநாள் அண்ணல் தங்கோ, நண்பர் இராம. தமிழ்ச் செல்வனுடன் பாவேந்தர் வீட்டுக்கு போகிறார். அப்போது வரவேற்க வாசலில் வந்த பாவேந்தர் அண்ணல்தங்கோவைக் கட்டித் தழுவி, முத்தமிட்டு,“வா, அண்ணல்! பெரியாரும் அண்ணாத்துரையும் இல்லாத ஊருக்கு (திராவிட நாடு) வழிகாட்டி விட்டார்கள். தமிழினத்தைத் திசை திருப்பி விட்டார்கள். ஆனால் இறுதியில் உன்றன் தனித் தமிழ்நாடு குறிக்கோள் வெற்றி பெறும். அன்று தமிழகம் உன்னை நினைக்கும்” என்று கூறினார் என்று அந்நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்தியத்தாலும் திராவிடத்தாலும் முடமாக்கப் பட்ட தமிழர் மறுமலர்ச்சி இன்று தமிழ்த்தேசியமாய் எழுந்துள்ளது! இந்தியப் பகைத் தேசியத்தையும், திராவிடத் திரிபுத் துரோகத்தையும் ஒருசேர முறியடித்து - தமிழ்த்தேசியத்தை வளர்த்தால் அதுவே அண்ணல் தங்கோ அவர்களுக்குத் தமிழினம் செய்யும் நன்றிக் கடனாகும்.

அந்தக் காலத்திலேயே தமிழர் அறத்தை -- திருவள்ளுவர் அறம் என்ற பெயரில் அண்ணல்தங்கோ வலியுறுத்தினார். மனிதர்கள் அனைவரும் சமம்; தமிழர்கள் அனைவரும் சமம்; இன்ப துன்பங்களைப் பிறருடன் சமமாகப் பகிர்ந்து கொள்வது; மன அழுக்குகளைக் களைந்து அன்றாடம் மனத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்வது - ஆகியவைதாம் தமிழர் அறத்தின் சாரம்!

தமிழர் அறம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், “எஞ்சாதிக்கு இவர் சாதி இழிவென்று சண்டையிட்டுப் பஞ்சாகி போனாரடி சகியே” என்று பாவேந்தர் வேதனைப்பட்ட நிலை இன்று புத்துயிர் பெற்றிருக்காது. அந்த அவலம் தொடராது.

தமிழர் அறத்தின் மீது நிற்கும் தமிழ்த்தேசியத்தைப் பரப்புவோம். அண்ணல்தங்கோ உள்ளிட்ட தமிழர் மறுமலர்ச்சி நாயகர்களின் இலட்சியங்களைச் செயல்படுத்துவோம்!

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.