பெரியாரை அறிமுகப்படுத்த வேண்டும் என்று எண்ணியிருந்தவற்றை நான் கூறிவிட விரும்புகிறேன். பெரியார் ஒரு கடவுள் மறுப்பாளர். பல காரணங்களால் கடவுளை மறுத்திருக்கிறார்கள். நான் அடிக்கடி கூட்டங்களில் சொல்வதுண்டு, உலகின் தோற்றம், பெரு வெடிப்பைப் படிக்கிறோம், நெபுலா ஆய்வைப் படிக்கிறோம், இவைகள் நமக்கு சொல்லிவிடும் உலகம் ஒருவரால் படைக்கப்பட்டதல்ல, உருவானதென்று. சரியாக உருமலர்ச்சிக் கொள்கையைப் (evolution theory) படித்தால் அது நமக்கு சொல்லிவிடும், மனிதன் படைக்கப் படவில்லை, மனிதன் உருமலர்ந்தான் என்று அறிவியல் சொல்லிவிடும் கடவுள் மறுப்பை. ஆனால் இந்த கடவுள் மறுப்பை பெரியார் பேசவில்லை. அவர் சமூகத்திற்காகத்தான் கடவுள் மறுப்பைப் பேசினார்.

periyar 296வெறும் கடவுளை மறுத்துவிட்ட நாத்திகத்தை பெரியார் பேசவில்லை. ஜாதி ஒழிப்பை இலக்காகக் கொண்ட கடவுள் மறுப்பைத் தான் பெரியார் பேசினார். ஜாதி ஒழிப்பு என்பது, பார்ப்பனியத்தை மறுத்த ஜாதி ஒழிப்பை இலக்காகக் கொண்ட கடவுள் மறுப்பு தான்.

அண்ணா அவர்கள் சொல்வாராம் ‘பார்ப்பனிய எதிர்ப்பு மட்டும் எங்கள் கொள்கையாக இருந்தால் எங்கள் தலைமையிடம் ஈரோட்டில் இருக்காது, திருநெல்வேலியில் இருக்கும்' என்று. அங்கே இருக்கும் சைவர்கள் பல மடங்கு கூடுதலாகப் பார்ப்பனர்களை எதிர்ப்பார்கள். ஆனால், ஜாதி ஒழிப்பு நோக்கம் அவர்களுக்கு இருக்காது. மூன்று மேற்கோள்களைப் படித்து விட்டு முடித்துக் கொள்கிறேன்.

முதலாவது அவர் பேசிய கடவுள் மறுப்பிலிருந்து ஒன்று, "மனிதனுக்கு மனிதன் தொடக் கூடாது, கண்ணில் படக் கூடாது, தெருவில் நடக்கக் கூடாது, கோவிலுக்குள் போகக் கூடாது, குளத்தில் நீர் எடுக்கக் கூடாது என்றவை போன்ற கொள்கைகள் தாண்டவமாடும் நாட்டை, பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் எரிக்காமலோ, சமுத்திரத்தில் மூழ்கச் செய்யாமலோ, பூமிப் பிளவில் அமிழச் செய்யாமலோ விட்டிருப்பதைப் பார்த்திருந்தும் கூட கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நீதிமான் என்றும், சர்வதயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பதென்று நீங்களே சொல்லுங்கள்" என்று பெரியார் சொல்லுகிறார்.

மற்றொன்று, "கடவுள் எங்கும் நிறைந்த சர்வ சக்தி உள்ளவர், பட்சபாதம் அற்றவர் என்று சொல்லிக் கொண்டு, கடவுள் தான் தீண்டாதார் என்று சொல்லப்படும் கொடுமைக்கு உட்படுகின்ற மக்களுக்கு ஆதாரம் என்று சொல்லப்படுவது எவ்வளவு கேவலம். அநேகமாக அவர்தான் இந்த தீண்டாமையை படைத்தவர் என்றும் சொல்லப்படுகிறது. இது உண்மையாயின் அத்தகைய கடவுளை எப்படியாவது ஒழித்து விட்டுத்தான் மறு வேலை பார்க்க வேண்டும். இந்த அநியாயமான சங்கதி அவருக்குத் தெரியாதென்றால் இன்னும் சீக்கிரமாய் ஒழிக்க வேண்டும். இத்தகைய அநியாயங்களை அவரால் விலக்கவோ, அக்கிரமம் செய்பவர்களை அடக்கவோ முடியவில்லை யென்றால் அத்தகைய கடவுள் எந்த உலகத்திலும் இருக்க வேண்டியதில்லை, அழிக்க வேண்டியது தான் நியாயம், நியாயம் நியாயம்!" இப்படிப்பட்ட கடவுள் மறுப்பைத் தான் பெரியார் முன்வைத்தார். இதிலிருந்து அதனுடைய நோக்கம் நமக்கு தெளிவாகத் தெரிகிறது.

நேற்று கூட கூறினார்கள், 1928 ஆம் ஆண்டிலிருந்து குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றி, அதற்காக 1930இல் கருத்துகளைத் தொகுத்து ஒரு நூலை வெளியிட்டார். பல பேர் பேசுவது, அளவான குடும்பம் மகிழ்வாக இருக்கும் என்பதற்காக அல்லது நாடு இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்பதற்காக, அதிக கல்வியைக் கொடுக்க முடியும் என்பதற்காக. ஆனால் பெரியாரின் ‘கர்ப்ப ஆட்சி’ என்பது பெண் விடுதலையை நோக்கமாகக் கொண்டது. மற்றவர்கள் பேசியதற்கும், பெரியார் பேசியதற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அடுத்து இந்தி எதிர்ப்பு.

கட்டாய இந்தி ஒழிக என்பது அவர் முழக்கமாக இருந்தது. முழக்கங்கள் மாறியது. இந்தி ஒழிக - இந்தி ஒழிக, தமிழ் வாழ்க - தமிழ் வாழ்க, இந்தி ஒழிக - தமிழ் வாழ்க! - என்று மாறியது. இப்போது இந்தி எதிர்ப்பைப் பேச வேண்டிய தேவையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதாவது தமிழைக் காப்பாற்ற அவர் அந்த முழக்கத்தை வைத்தார் என்று அவரைப் புகழ்வதற்காகச் சொல்லுவார்கள். ஆனால், பெரியார் சொல்லுவார், "நான் தமிழைக் காப்பாற்றவெல்லாம் இந்தியை எதிர்க்கவில்லை. என்னுடைய இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது, மொழிப் போராட்டம் அல்ல. தமிழருடைய சிந்தனையில், வாழ்வியலில், கலை பண்பாட்டில் ஆரிய அடுக்குப் பண்பாட்டைத் திணிக்கிற முயற்சி என்று புரிந்து கொள்ளுங்கள்" என்று தான் சொன்னார். வெறும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்று சொல்லவில்லை. தமிழருக்கும், தமிழுக்கும் சிக்கல் வந்தால் தமிழர் பக்கம் நின்றார், தமிழன் பக்கம் நிற்கவில்லையென்று குறையாகப் பார்க்கவில்லை அதை நாம் நிறையாகப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட அவருடைய தனித்த போக்குகளை அறிந்து கொள்வதற்கு இன்று முன் வைத்திருக்கிற கருத்துக்களோடு நீங்கள் இன்னும் வளப்படுத்திக் கொள்ளுங்கள்.

‘பெரியார் இன்றும் என்றும்’ நூல் வந்தபோது நல்ல வேளை பெரியார் இல்லை, இருந்திருந்தால் திட்டியிருப்பார் என்று கூறினேன். பெரியார் காலத்தில் பெரியாருடைய நல்ல கட்டுரைகளில் சிலவற்றைத் தொகுத்து ‘அறிவின் எல்லை’ என்ற தலைப்பிட்ட நூலை பெரியார் கையில் கொடுத்தார்களாம். தூக்கி கீழே போட்டாராம். அறிவிற்கு ஏதுய்யா எல்லை என்று. என்றைக்கும் ஒரு சிந்தனை சரியாக இருக்க முடியாது. இன்றைக்கு இந்த சூழலுக்கு நான் சொல்லியிருக்கிற கருத்து என்றுதான் கூறினார். பெரியாரின் கருத்துக்களை வாய்ப்பாடாக எடுத்துக் கொள்ளுங்கள். வருகிற கணக்கை அதை வைத்து நீங்கள் போட்டுக் கொள்ளுங்கள். பெரியார் கணக்கு என்றும் சரியென்று நாம் சொல்ல வேண்டியதில்லை, பெரியாரும் அதை எதிர்பார்க்கவில்லை. அப்படிப்பட்ட விரிந்த பார்வையை நமக்கு கொடுக்க வேண்டும் என்று சொன்னவர். எதிர்காலத்தில் இராமசாமி என்கின்ற மூடநம்பிக்கைக்காரன் இருந்திருக்கிறான் என்று சொல்லத்தக்க அளவிற்கு வளர்ச்சி பெற வேண்டும் என்று விரும்பியவர் பெரியார். ஒரு பிற்போக்காளன் வாழ்ந்திருக்கிறான் என்று எதிர்காலச் சந்ததியினர் சொல்லத் தக்க அளவிற்கு வளர வேண்டும் என்று விரும்பியவர். அதற்கான வித்துகளை இட்டிருக்கிறார்கள். அதை நீங்கள் வளர்க்க வேண்டும். அதை உங்கள் மனதில் வளர்க்க வேண்டும். அதன் வழியாக ஒரு சமூக மாற்றத்தை சமத்துவ சமுதாயத்தைப் படைக்க முன்வர வேண்டும்.

(ஆகஸ்ட், 25இல் தஞ்சையில் நடந்த ‘பெரியாரின் வேர்களைத் தேடி’ ஆய்வரங்கில் நிகழ்த்திய உரை.)

Pin It