இந்திய அரசியலமைப்புச் சட்டம் அதன் முகப்பிலேயே அதன் குடிமக்கள் அனைவருக்கும் நீதியையும் அத்தோடு சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம் ஆகியவற்றையும் அளிக்க உறுதி கூறுகிறது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் - ஆங்கிலத்தில் Liberty, Equality and Fraternity என்ற தாரக மந்திரம் ஃபிரெஞ்சுப் புரட்சி உலகுக்கு அளித்த கொடை. அன்பு, பாசம், காதல், நட்பு எல்லாம் மானுடம் மானுடமாய் உருவெடுத்த காலமாய் இருக்கும் மனித உணர்வுகள்தாம். ஆனால் நவீன மானுடத்தின் புதிய உணர்வும் தாகமும், ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’! அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவர் என்ற வகையில், டாக்டர் அம்பேத்கர் 1949 நவம்பர் 25 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவை அறிமுகம் செய்து பேசினார். சமத்துவமும் சகோதரத்துவமும் நிலவாத இந்தியாவில் இந்த உறுதிமொழியின் முக்கியத்துவத்தை விளக்கிய டாக்டர் அம்பேத்கர் ஒரு எச்சரிக்கையையும் வழங்கினார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை தனித்தனியே பிரிக்க இயலாதவை; ஒன்றில்லாமல் ஒன்று சாத்தியமில்லை என்பதையும் தனக்கே உரித்தான மேதமையோடு விளக்கினார். அரசியலமைப்புச் சட்டத்தின் ஆட்சி இல்லையென்றால் கொந்தளிப்பும் அராஜகமும் கோலோச்சும் பூமியாக இந்தியா மாறிவிடும் அபாயத்தையும் அவர் எடுத்துக் கூறி எச்சரித்தார்.

இந்த மும்மந்திர முழக்கத்தை உலகிற்கு வழங்கிய பிரெஞ்சு தேசமே 1958 ஆம் ஆண்டுதான் அதனைத் தனது அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதியாக்கியது என்பதைப் பார்க்கும்போது டாக்டர் அம்பேத்கரின் மேதமையையும் அவரது சொல்லுக்கு அன்றைய ஆட்சியாளர்கள், குறிப்பாக அன்றைய பிரதமர் நேரு அவர்கள் வழங்கிய மதிப்பு, மரியாதையையும் வியக்காமல் இருப்பது இயலாது. வெறுமனே வார்த்தைக்கான மதிப்பு மட்டுமல்ல; அரசின் செயலிலும் அந்த காத்திர உணர்வு ஓரளவுக்கேனும் செயல்பட்டது என்பதே வரலாறு. வேறுபல காரணங்களால் நேரு மற்றும் அவருக்குப் பின்னால் வந்த ஆட்சிகளின் செயல்கள் அல்லது செயலின்மை விமர்சிக்கப்பட்டாலும் 1947-1980 காலத்தில் இந்திய சமூகத்தின் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதற்கான புள்ளி விவரங்கள் அடிப்படையில் குறைந்தது என்பதை சமீபத்தில் வெளியான ஆக்ஸ்ஃபாம் ஏற்றத்தாழ்வு அறிக்கையும் (Oxform Report of Inequality) பதிவு செய்கின்றது. அது மட்டுமல்லாது ஆக்ஸ்ஃபாம் அறிக்கையும் தாமஸ் பிக்கெட்டியின் உலக ஏற்றத்தாழ்வு ஆய்வகம் (World Inequality Lab - Hosted by Paris School of Economics) வெளியிட்டுள்ள அறிக்கையும் (Income and Wealth Inequality in India, 1922-2023: The Rise of the Billionaire Raj) 1991 ஆம் ஆண்டிற்குப் பிறகான இன்றைய நிலையை கவலை தரும் வகையில் விளக்கியுள்ளன.

மார்ச் மாதம், தாமஸ் பிக்கெட்டி தலைமையிலான உலக சமத்துவமின்மை ஆய்வகம், “இந்தியாவில் வருமானம் மற்றும் செல்வ சமத்துவமின்மை, 1922-2023: பில்லியனர் ராஜ் உருவாக்கம்” என்ற தலைப்பில் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. "வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம்" என்பதையே அரசும் பெரும்பாலான மையநீரோட்ட ஊடகங்களும் தினசரி மந்திரம் போல் ஓதி வருகின்றன. இந்த வளர்ச்சி இந்தியர் அனைவருக்கும் உரியதென  தோற்றமளிக்க, அரசாங்கமும் ஊடகங்களும் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து தப்பிக்க உதவியதாகக் கூறி வருகின்றனர். ஆனால் இந்தியாவில் 2012 முதல் வருமான, வறுமைக் கணக்கெடுப்போ, மதிப்பீடோ அரசு செய்யவில்லை. எனவே அரசின் கூற்று நம்பகத்தன்மை அற்றதாக உள்ளது.

சுதந்திரத்திற்குப் பின் அமைந்த அரசாங்கம் வறுமையையும் ஏற்றத்தாழ்வையும் குறைக்க எடுத்த நடவடிக்கைகள் போதுமானதல்ல என்றாலும், "முதல் 10% பணம் படைத்தவர்களின்  தேசிய வருமானத்தின் பங்கு 1951 இல் 37% ஆக இருந்தது 1982 இல் 30% ஆகக் குறைந்துள்ளது" என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. ஆனால் இதற்குப் பிறகு செல்வம் சிலரிடத்தில் குவிவதும் செறிவாவதும் அதிகரித்தது. 1990களில் இருந்து நடந்த இந்தப் போக்கு காரணமாக  தேசிய வருமானத்தில் முதல் 10 சதவீதத்தினரின் பங்கு சமீபத்திய ஆண்டுகளில் 60 சதவீதமாக உயர்ந்தது. அதே நேரம், கீழ்மட்டத்தில் உள்ள 50 சதவீதத்தினரின் பங்கு குறைவாகவே தொடர்கிறது. 2022-23இல், வருமானம் மற்றும் செல்வத்தில் சமத்துவமின்மை திகைப்பூட்டுகிறது: முதல் 1 சதவீதம் பேர் இந்தியரின் சராசரி வருமானத்தை விட 23 மடங்கு சம்பாதிக்கிறார்கள். பணக்கார 10,000 இந்தியர்கள் சராசரியாக ரூ 48 கோடி சம்பாதிக்கிறார்கள்., இது இந்திய சராசரியை விட 2,069 மடங்கு அதிகம்.

"2022-23 ஆம் ஆண்டில், முதல் 1 சதவீதத்தினரின் வருமானம் மற்றும் செல்வப் பங்குகள் (22.6% மற்றும் 40.1%) இது எந்தக் காலத்திலும் இந்தியா காணாத ஏற்றத்தாழ்வு எனக் கூறும் அறிக்கை, இந்தியாவின் முதல் 1%இன் வருமானப் பங்கு உலகிலேயே மிக அதிகமாக உள்ளது என்றும் கூறியுள்ளது.

இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 1991 இல், இந்தியாவில் ஒரு கோடீஸ்வரர் மட்டுமே இருந்தார். 2011ல், எண்ணிக்கை 52ஐ எட்டியது, அடுத்த ஒரு தசாப்தத்தில் 2022ல் 162 ஆக மூன்று மடங்காக அதிகரித்தது. “இந்தக் காலகட்டத்தில், இந்தியாவின் நிகர தேசிய வருவாயில் ஒரு பங்காக இந்தத் தனிநபர்களின் மொத்த நிகரச் செல்வம் 1991இல் 1%க்கு கீழ் இருந்து உயர்ந்தது. 2022இல் 25% ஆக உயர்ந்துள்ளது” என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த சமத்துவமின்மை

1922க்கு முன், பிரிட்டிஷ் ராஜ் காலத்தில் காணப்பட்டது. அதனால்தான் ஆசிரியர்கள் தங்கள் ஆய்வறிக்கைக்கு “பில்லியனர் ராஜ்” என்று பெயரிட்டுள்ளனர்.

ஆக்ஸ்ஃபாம் நிறுவனத்தின் இந்தியா குறித்த அறிக்கையும் (India - Subliment of Dawos Report 2019) இதனை உறுதிப்படுத்துகின்றது: “இந்திய பில்லியனர்களின் மொத்த சொத்து, நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த யூனியன் பட்ஜெட்டை விட அதிகமாக உள்ளது. கடந்த 12 மாதங்களில், 119 இந்திய பில்லியனர்களின் மொத்த செல்வம் சுமார் 8 இலட்சம் கோடி அதிகரித்துள்ளது. இந்தத் தொகை நாட்டின் ஒருங்கிணைந்த (மத்திய மற்றும் மாநிலங்கள்) நேரடி வரி வருவாய் (2016-17 இல் சுமார் 8.5 லட்சம் கோடி) அளவிற்கு சமம் என்னும் தரவுகள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.

மறுபுறத்தில் வேலையின்மை, ஏழ்மை, விலைவாசி உயர்வு ஆகியவை குறித்த விவரங்கள் நம் முகத்தில் அறைகின்றன. சர்வதேசத் தொழிலாளர் நிறுவனம் (ILO) அளித்துள்ள வேலையின்மை குறித்த அறிக்கை மிகவும் அச்சமூட்டுவதாக இருக்கின்றது. அதுவும் படித்த இளையோர் மத்தியில் உள்ள வேலையின்மை, கல்வி இல்லாதோர் மத்தியில் உள்ள வேலையின்மையைக் காட்டிலும் அதிகம் என்பது பெரும் அச்சமூட்டும் செய்தி.

ஆனால் எல்லாவற்றையும் காட்டிலும் மோசமான நிலை ஒன்று உள்ளது. அது, கைப்புண்ணாக நமக்குத் தெரிய வேண்டிய இந்த மோசமான சமூக நிலையை நாம் ஐ.எல்.ஓ, ஆக்ஸ்ஃபாம், தாமஸ் பிக்கெட்டி கண்ணாடிகள் மூலம் அறிய வேண்டியிருக்கின்றது. வறுமையும், வேலையின்மையும், ஏற்றத்தாழ்வுகளும் மையநீரோட்ட ஊடகங்களில், கலை இலக்கியங்களில் பேசுபொருளாக, கதையாடலின் கருக்களாக இல்லை எனும் நிலை. அவற்றைக் குறித்துப் பேசவது சமகால மோஸ்தர் இல்லை; ஃபேஷன் இல்லை எனும் உளப்பாங்கு நிலவுகிறது. குரலற்றவர்களின் குரலாக இருக்க வேண்டியது மக்கள் நலன் நோக்குள்ள கலை இலக்கியப் படைப்புகள், அமைப்புகள், ஊடகங்கள், பதிப்பகங்களின் கடமை. அந்தக் கடமை நமக்கு அதிகரித்துள்ளது. நாம் அதற்கு முகம் கொடுத்தாக வேண்டும்.

- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு

Pin It