அழகான சிவப்புத் திட்டு. அதிலிருந்து அருமையான மதுவின் வாடை. பறந்து கொண்டிருந்த ஈக்கு சபலம். இறங்கிப் பார்த்துவிடுவது என்று முடிவெடுத்து, பிசு பிசு வென்று இருந்த மதுச் சொட்டில் இறங்கியது. சாப்பிட நன்றாகத்தான் இருந்தது.

plant_330உற்சாக மேலிட்டால் இப்படி அப்படி என்று நகர, எதன் மீதோ ஈயின் கால்கள் பட்டுவிட்டது. துப்பாக்கி டிரிகரைத் தட்டிவிட்டது போலிருக்கிறது. ஈயின் உலகம் இப்போது இரண்டு மாபெரும் கோட்டைச் சுவரின் இடையிலான சிறிய சந்தாக மாறிவிட்டது. தப்பிக்க வழியில்லாமல் திணறிய ஈக்கு அவமானம் பிடுங்கித்தின்றது. காரணம், அந்த ஈயை சிறைபிடித்து சாப்பிட்டுக் கொண்டிருப்பது ஒரு இலை!

ஆனமலையில் கொண்டை ஊசி வளைவுகளில் சாலையின் ஓரமாக, சளைக்காமல் கசிந்தோடிக் கொண்டிருக்கும் ஈரத்தில் இதுவரைப் பார்த்திராத புதிய செடி ஏதாவது முளைத்திருக்கிறதா என்று கவனமானத் தேடியபடி நான் மெள்ள முன்னேறினேன். என்னுடைய சக மாணவ நண்பர்கள் வெகு தொலைவு சென்றுவிட்டனர். ட்ரில் மாஸ்ட்டரின் விசில் எல்லோரிடமும் இருக்கும். எடுத்து ஊதினேன். புதிதாக ஏதாவது தென்பட்டு விட்டால் எல்லாரையும் அழைப்பதற்கான ஏற்பாடு அது.

எனது கண்களில் பட்டது சின்னஞ்சிறு செடி. பூச்சிகளைப் பொறி வைத்துப் பிடிக்கும் யுர்ட்டிக்குலேரியா! 25 பைசா நாணயத்திற்குள் வைத்துவிடக்கூடிய சிறிய செடி. இது நடந்தது 1975 ஆம் ஆண்டு. இன்று ஆனமலையில் அங்கே அது இருக்குமா என்பது சந்தேகமே.

குற்றாலத்தின் புலியருவியைத் தாண்டி ஒரு மேடு. அனகோண்டா போன்று நீண்டு செல்லும் அதன் முதுகில் அரைமணிநேரம் சுட்டெரிக்கும் வெயிலில் நடந்தால் மெயின் அருவியின் மேல் முகட்டிற்கு வந்துவிடலாம். இடையில் கள்ளிச் செடிகளின் நிழலைத்தவிர வேறு அடைக்கலமே கிடையாது. அருவியின் நீர் பாறைகளின் இடுக்கில் கூந்தல் போல் இரகசியமாக ஆங்காங்கே ஒடிக் கொண்டிருக்கும்.

மனிதர்களை சற்றும் எதிர்பார்த்திராத பூச்சிகளும் செடிகளும் ஓடையருகே மண்டிக் கிடக்கும். ஈக்களைப் பிடித்துத் திண்ணும் ‘ட்ராசிரா’வைப் பார்த்தேன். காளியைபோல் நாலா பக்கமும் பல கைகளை விரித்துக் கொண்டு நடுவில் ஒற்றைக் காம்பில் ஒற்றைப் பூவைத் தாங்கிக் கொண்டிருந்தது பாறையின் மீது ஒட்டிகொண்டிருந்த பாசிகளின் இடையே அது ஒளிச்சேர்க்கை செய்து கொண்டிருந்தது. இது நடந்தது 1985 இல். பலமுறை அதே இடத்திற்கு சென்று தேடினேன் இப்போது ஒன்றைக்கூடக் காணவில்லை.

‘நான் வெஜ்' சாப்பிடும் செடிகளை முதலில் பார்த்த கார்ல் வான் லின்னேயஸ் அதை நம்ப மறுத்தார். "செடிகளாவது, மாமிசம் சாப்பிடுவதாவது... கடவுள் அப்படிப் படைத்திருக்க வாய்ப்பே இல்லை'' என்று அவர் முடிவு கட்டிவிட்டார்.

சார்லஸ் டார்வின் 1860 இல் பூச்சி சாப்பிடும் செடிகளைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார். பூச்சி பிடிக்கும் செடிகளின் இலைகளின் மீது பூச்சிகள், மாமிசத் துண்டுகள், வெந்த முட்டைத் துண்டு போன்றவற்றைப் போட்டு சோதித்தார். சூறாமீனின் தாடைகளைப் போல ‘டபக்' கென்று மூடிக்கொள்ளும் இலைகளின் வேகத்தை எண்ணி வியந்து எழுதியிருக்கிறார். தலைமுடி விழுந்தாலும்கூட சடாரென்று செயல்படும் அதன் உணர்வுகளைப் பற்றி அதிசயித்து எழுதியிருக்கிறார்.

மிருகங்களுக்கு ‘விருட்'டென்று செயல்பட தசைகளும் நரம்புகளும் இருக்கின்றன; அப்படி எதுவுமே இல்லாத இலைகளால் எப்படி வெடிமருந்து வேகத்தில் செயல்பட்டு பூச்சிகளைப் பிடிக்கின்றன என்பது அவருக்குப் புரியவில்லை.

சினிமாவில் மனிதர்களையும், ஆடு மாடுகளையும் வளைத்துப் பிடித்து நசுக்கிப்பிழிந்து அருந்தும் செடி கொடிகளைக் காட்டுவார்கள். பூச்சித் திண்ணி செடிகளைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு சினிமாத் தனமான கற்பனைப் போக்கில் படம் எடுக்கிறார்கள். உண்மையில் அப்படியெல்லாம் செடிகள் செய்வதில்லை. நெபெந்தஸ் என்ற மிகப்பெரிய பூச்சித்திண்ணும் செடியின் ஜாடிபோன்ற இலைகளில், எலி, தவளை போன்ற சிறிய உயிரினங்கள் வேண்டுமானால் சிக்கும். பெரிய மிருகங்கள் சிக்குவதற்கு வாய்ப்பே இல்லை.

நான்கு வகைத் தந்திரங்களை பூச்சித்திண்ணி செடிகள் கையாளுகின்றன. ஒன்று ‘லபக்'கென்று உறிஞ்சும் தந்திரம். இது சில்லென்று கசிந்தோடிக்கொண்டிருக்கும் நீரோடைகளில் வசிக்கும், புல்லை விட மிகச் சிறிய செடிகளின் தந்திரம். இரண்டாவது, புஸ்தகத்தை ‘பட்'டென்று மூடுவது போல இலையின் இருபகுதியையும் மூடி, விளிம்புகளில் உள்ள விரல்களை பிணைத்துக் கொள்ளும் முஷ்டி தந்திரம்.

மூன்றாவது பிசுபிசுப்பான தேன்துளிகளைக் காட்டி ஏமாற்றி பூச்சிகளின் கால்களை ஒட்டவைத்து, பின் இலையை மூடிக்கொள்ளும் ஒட்டு தந்திரம். நான்காவது பாட்டில் போல இருக்கும் பிரத்யேக இலையில், கவனமில்லாமல் சுற்றித்திரியும் பூச்சிகள் வழுக்கி உள்ளே விழவைக்கும் வழுக்குத் தந்திரம். உள்ளே ஊறிக்கொண்டிருக்கும் பாகு போன்ற திரவத்தில் விழுந்துவிட்டால் பூச்சிகளால் மீண்டும் வெளியேறவே முடியாது. இப்படி உறிஞ்சி, மூடி, ஒட்டி, வழுக்கும் முறைகளால் நாலுவித பயிர்கள் பூச்சிகளைப் பிடித்துத் திண்கின்றன.

பூச்சிகளையும், தவளைகளயும் பிடித்து விட்டால் மட்டும் போதுமா? அவற்றை மென்று திண்பது எப்படி? செடிகள் மெல்லுவதில்லை. மூடிக் கொண்ட இலை அல்லது குப்பி வடிவ இலையே நேரடியாக வயிறு போல செயல்படுகிறது. அதில் சுரக்கும் அல்லது ஏற்கனவே நிரம்பியிருக்கும் திரவத்தில் மாமிசத்தைச் செரிமானம் செய்யும் நொதிகள் இருக்கின்றன. சில குப்பிச் செடிகளில் மழை நீர் மட்டும்தான் இருக்கும். அதில் வாழ்ந்து வரும் லார்வாக்கள், அமீபாக்கள், பேக்டிரீயாக்கள் போன்ற விருந்தாளிகள் ஒன்றுகூடி உள்ளே விழுந்த பூச்சிகளின் மாமிசத்தை ஜீரணிக்கின்றன. முடிவில் அவைகளும் இலைக்கு இரையாகின்றன.

அப்படி என்ன இந்த இலைகளுக்கு மாமிசத்தின் மீது அத்தனை மோகம்? பரிசோதனைகள் பல செய்தும், டி. என்.ஏக்களை படித்தும் பல செய்திகள் கிடைத்தன. பொதுவாக பூச்சித் திண்ணி செடிகள், நைட்ரஜ சத்து பற்றாக்குறையுள்ள நிலத்தில்தான் வாழ்கின்றன. நைட்ரஜ பற்றாக்குறையை ஈடுகட்டவே, மாமிசத்திலுள்ள நைட்ரஜனை அவை நாடுகின்றன. மற்றபடி இலைகளின் பச்சையம் மூலம் பிற செடிகளைப் போல ஒளிச்சேர்க்கை செய்து வாழ்க்கைக்கு வேண்டிய ஆற்றலையும், கார்போஹைட்ரேட்டையும் பெறுகின்றன. தோட்டம் துறவுகளில் நைட்ரஜன் பத்தாவிட்டால் யூரியா உரம் போடுகிறோம். இவற்றிற்கு யார் போடுவார்கள்? நேரடியாக மாமிசத்திலிருந்தே பெற்றுக் கொள்கின்றன.

கடந்த முப்பது வருடங்களாக நீர் நிலைகளில் மிகுதியான நைட்ரஜ உரங்கள் கலந்துவிடுவதால், பூச்சித்திண்ணி செடிகள் அதீத நைட்ரஜ சத்தினால் எரிந்து செத்து மறைந்துவிட்டன. விலங்குகளை வேட்டையாடி, கள்ளச்சந்தையில் தோலையும், தந்தங்களையும் விற்கும் போச்சர்கள், வினோதமான உயிரியான பூச்சித்திண்ணி செடிகளையும் பாடம் செய்து விற்க ஆரம்பித்துவிட்டனர். இதுவும் அவை அழிந்தொழிந்ததற்கு இன்னொரு காரணமாகும்.

விற்கிறவன் ஏன் விற்கிறான்? அதை வாங்குவதற்கு மதி கெட்ட மூடர்கள் இருப்பதால் தானே!

plant_342

ஈக்களுக்கு எச்சில் ஊறவைக்கும் வாசனையை வெளியிடும் இந்த குப்பித் தாவரத்தின் இலையில் உட்காரும் பூச்சிகள் கால் வழுக்கி குப்பிக்குள்ளே விழுந்து அங்கே நிரம்பியிருக்கும் திரவத்தில் சிதைந்து ஜீரணமாகிவிடுகின்றன.

plant_335

உலகில் கிட்டத்தட்ட 675 பூச்சித்திண்ணிச் செடிகள் உள்ளன. பட்டர் வாரட் என்ற இந்த செடியின் தடித்த இலைகளில் ஊறும் பசைகளில் பூச்சிகள் சிக்கிக்கொள்கின்றன. உள்ளே ஊறும் ஜீரண நீர் அதை செரித்துவிட, இலைகள் அதை உறிஞ்சிக்கொள்கிறது.

plant_317

பனித்துளி தாகம் தீர்த்துக் கொள்ளலாம் என நினைத்து வந்து அமர்ந்த பூச்சிகள் ஒட்டும் பிசினில் சிக்கிக் கொள்கின்றன.

plant_321

சாப்பிட ஏதாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எட்டிப் பார்க்கும் பூச்சிகள் 2 அடி நீள முள்ள குப்பிக்குள் விழுகின்றன.

plant_250

பூச்சித் திண்ணி செடிகள் மற்ற செடிகளைப் போல ஒளிச்சேர்க்கை மூலம்தான் உயிர் வாழ்கின்றன. கொஞ்சம் எக்ஸ்ட்ரா நைட்ரஜ சத்துக்காக பூச்சிகளை உண்கின்றன. தென் ஆப்பிரிக்க பனித்துளி செடி இந்த இனத்திலேயே மிகப் பெரியது. சிக்கிய பூச்சிகள் அதிர்ஷ்ட்ட வசமாக தப்பித்துவிடுவதுண்டு. பெரும்பாலும் அவை செடியின் இலைகளுக்கிடையில் உள்ள சகதியில் விழுந்து மக்கி உணவாகிவிடுகின்றன.

plant_319

(இடது) அங்குஷ்ட்டம் அளவே உள்ள ஆஸ்த்திரேலிய குப்பிச் செடி. எறும்புகள் சாரி சாரியாக இதனுள்ளே போய் விழுந்துவிடுகின்றன. சென்றவை மீள வெளி வர இயலாதபடி உள்ளே நிறைய கீழ் நோக்கிய ரோமங்கள் உள்ளன. அமெரிக்க குப்பிச் செடியில் ஒரு தேனீ சிக்க இருக்கிறது. மாமிசம் உணவு செடிகளுக்கு ஏதோ கொஞ்சம் ஒத்தாசை செய்கிறதே தவிர அது நிறந்தர உணவு அல்ல; இருந்தாலும் இவை அதிசயமானவை அல்லவா!

plant_197

தோற் பாவைக் கூத்தில் நிழல் பிம்பம் தெரிவதுபோல ஒரு ஈ பிலிப்பைன் குப்பிச் செடியின் வயிற்றில் மாட்டிக்கொண்டிருக்கிறது. மெழுகுபோன்ற உள் பரப்பில் வழுக்கித் தான் விழ முடியுமே தவிர தப்பித்து வெளி வருவது என்பது கஷ்டம்தான். சிக்கி பூச்சியின் உடலிலிருந்து உணவுகளை இலையின் என்ஸைம்கள் கரைத்து எடுத்துவிடுகின்றன.

plant_372

மாமிசம் திண்ணிகள் பூச்சிகளை உணவாகக் கொண்டாலும் தமது மகரந்தச் சேர்க்கைக்கும் அவற்றையே நம்பியுள்ளன. மகரந்தம் சேகரிக்க வரும் நண்பர்கள் தவறி பொறிகளில் விழாதிருக்கும் வகையில் இவை தம் பூக்களை உயரமான தூக்கிப் பிடித்தபடி உள்ளன. என்ன சாதுர்யம்!

படங்கள்: நன்றி ‘நேஷனல் ஜியோகிராஃபி'

- முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It
அண்மையில் வெளியான உலக வன வரைபடத்தில் காட்டுப் பகுதிகளைக் குறிக்கும் உலக அறிவியல் ஆய்வகத்தின் பட்டியல் ஒன்றைப் பார்த்தேன். இதற்கு முன்பு வெளியான எந்தப் பட்டியலும் தென் அமெரிக்க அமேசான் காடுகள், ஆப்பிரிக்காவின் கென்யா, உகாண்டா காடுகள், நமீபியக் காட்டுப் பகுதிகள், தென்கிழக்காசியாவின் இந்தோனேசிய, மலேசிய வனப்பகுதிகளே முதன்மையானதாகச் சுட்டிக் காட்டப்பட்டிருக்கும். ஆனால் புதிய இப்பட்டியல் குறிப்பாக சுட்டிக் காட்டிய மற்றொரு பகுதி நமது மேற்குத் தொடர்ச்சி மலைகள் சார்ந்த கானகங்களே.

நமது சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அடிப்படையான இயற்கை வளத்தின் முக்கிய அங்கமான காடுகளின் - காட்டுயிர்களின் அரிய, அபூர்வ, அத்தியாவசியத் தன்மைகளை நாம் துளியும் அறியாத நிலையில் இந்த வரைபடத்தில் குவிமையப் படுத்தப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக கருங்குரங்கு, காட்டுத் தவளைகள், பறக்கும் பாம்பு, மலைமுகட்டில் வாழும் வரையாடு, பல நன்னீர் மீன்கள், வண்டினங்கள், ஆவுளி, ஆற்று ஓங்கில், மற்றும் பற்பல மூகைத் தாவரங்கள் என ஒரு பெரிய பட்டியலே இதில் அடங்கியுள்ளது. பெருமைப்படத்தக்க இந்த வெளியீட்டின் வழியே நாம் சிறுமைப்பட ஒரு முக்கிய விஷயம் உண்டு: ஆம், பல்லுயிரின் பட்டியல், முக்கியத்துவம், இருப்பு, நிலை போன்ற யாவும் மேற்குலக நாடுகளின் கண்டுபிடிப்பாகவும், ஆங்கில வழிப் புரிதல்களாகவுமே நமக்குத் தெரியவருகின்றன. சுயமாக நமக்கு ஏதும் தெரிந்திருக்கவில்லை.

கி.பி. 1600க்கு பிற்பாடான தமிழகத்தின் கலை, இலக்கிய, இயற்கை வரலாறு மீண்டும் எழவே இயலாதவாறு சிதைக்கப்பட்டதன் காரணமே இயற்கை என்ற தலைப்பினுள் பிரவேசிக்கும் நமது எழுத்தாளர்கள் மேதாவிகள் பலருக்கும் எண்ணிலடங்கா உயிரினங்களில் எதற்கும் இனம் தெரியாது. பெயர் புரியாது, வகை அறியாது வெறுமனே குருவி, குயில், கழுகு, அன்றில் அன்னம், பாம்பு, சங்கு, மரம், மலர், மண்ணாங்கட்டி என்ற பொதுச் சொற்களை மட்டுமே போட்டு கதை, கவிதை, கட்டுரைகளை எழுதி காகிதங்களை வீணாக்கி காசைக் குவித்து வருகிறார்கள். குயில் குடும்பத்தில் 127 வகைகள் உள்ளன. அன்றில் என்பது ஒரு வகை அரிவாள் மூக்கன் - கொக்கு அன்னம் பறவை ஏறத்தாழ இந்தியாவில் இல்லை, 250 இந்தியப் பாம்பு வகைகளில் 3 வகைக்கு மட்டுமே நஞ்சு உண்டு.... போன்ற அடிப்படை உண்மைகள் கூட தெரியாதவர்கள் இவர்கள். யானையைத் தொட்டுப் பார்த்த குருடர்கள் கதைதான்.

இதோ அமெரிக்காவிலுள்ள உலக அறிவியல் ஆய்வகத்தின் ஆசியப் பிரிவு வெளியிட்ட இந்திய வன வளங்கள் குறித்ததோர் புள்ளி விவரத்தைப் பாருங்கள்

1. நுண்ணுயிர்கள் (Bacteria) - 850இனம்
2. நீர்ப்பாசம் (Algae) - 6500 இனம்
3. பூஞ்சை (Fungi) - 14500 இனம்
4. கல்பாசம் (Lichens) - 2000 இனம்
5. பாசிகள் ((Bryophytes) - 2850 இனம்
6. பெரணிகள் (Heridophytes) - 1100 இனம்
7. ஒரு வித்திலைத் தாவரம் (Gymnosperm) - 64 இனம்
8. பூக்கும் தாவரம் (Flowering plants) - 17500 இனம்
9. ஒரு செல்லுயிரி (Protista) - 2577 இனம்
10. கணுக்காலிகள் (Arthopoda) - 60383 இனம்
11. சங்கு சிப்பிகள் (Mollusca) -5050 இனம்
12. ஒரு செல் முதுகுத் தண்டுள்ளவை (Proto chordata) - 116 இனம்
13. மீன்கள் (Fishes) - 2546 இனம்
14. தவளைகள் (Amphibia) - 206 இனம்
15. ஊர்வன (Repritles) - 485 இனம்
16. பறவைகள் (Birds) - 1330 இனம்
17. பாலூட்டிகள் (Mammals) - 372 இனம்
18. மற்ற முதுகெலும்பிகள் (other Invertibrates) - 8329 இனம்

என இதுவரை 1,26,761 உயிரின வகைகளைக் கண்டறிந்து, வகைப்படுத்தி அறிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் சுமார் 4,00000 இனவகைகள் கண்டறியப்பட வேண்டிய கண்டம் (மட்டும்) வெள்ளைக்காரர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

இவ்வளவு இருந்தும் கூட இயற்கை என்ற தலைப்பை நமது மேட்டுக்குடி சமூகம் செயல்படுத்தும் முறையைக் கூர்ந்து கவனித்தால் தெரிவதுதான் என்ன? மீண்டும் நம்மை வரலாற்றின் பின்னோக்கி இழுத்துப் போய் வேதகாலத்தின் நாத ஒலியில் நிறுத்திடும் சதி புரிய வருகிறது.

எனவே நமது முன்னேற்றம், முற்போக்கு, பாணி, வாழ்வியல் எல்லாம் அகத்தில் சமஸ்கிருதமும், புறத்தில் ஆங்கிலமுமாகவே தடம் புரண்டு அசலான தமிழ்மரபுகள், பெயர்கள் யாவும் திட்டமிட்டு தீர்த்துக் கட்டப்பட்டு வருகின்றன. இப்போதும் நம்மவர்களாலேயே அறிவியலை மோசடியாக்கும் வேஷம் வெளிப்படையாகவே களைகட்டுகிறது. உதாரணம் இயற்கை மருத்துவம்.

ஜிப்பாவும், குர்த்தாவும், பர்தாவும், சுடிதாரும், குஜராத்தில் நாட்டியங்களும், ஆயுர் வேதங்களும், எண்ணெய் உளிச்சல்களும், சப்பாத்தியுமே ஆங்கில மோகத்திற்கு மாற்றாக ஜோடிக்கப்படுகின்றன. இதைப் பற்றி மட்டும் சிந்திக்க ஏனோ நமது எந்த சமூக சிந்தனையாளரும் முன் வருவதே இல்லை. எல்லாம் போக கடைசியில் மிச்சமிருப்பது குதறிச் சிதைந்துபோன தமிழ் மட்டுமே. ஆக நமது அரிய பெரிய இயற்கை வளம் அழிந்து போகும் போக்கிலேயே நமது மொழி வளமும் அற்றுப்போய் கொண்டிருக்கிறது. எனவே நாம் மொழி, அறிவியலை தெரிந்து கொள்வதை விட புரிந்து கொள்வது எப்போது?

தொடர்பான குறிப்புகள்:

வரையாடு - மலையாடு (Tahr)
ஆவுளி - கடல்பசு (Dugong)
ஆற்று ஓங்கில் - River Dolphin
பல்லுயிரியம் - Biodiversity
அன்றில் - அருவா மூக்கன் (Black lbis)

அன்னம் என்பது Swan ஐ குறிப்பதல்ல

மூன்றே வகை நச்சுப்பாம்புகள் : 1. நல்ல பாம்பு (Cobra) 2. வீயன் (Vipers)-3. கடற் பாம்புகள் (Coral) 4. காட்டுயிர் (wild life)
(சமூக விழிப்புணர்வு -செப்டம்பர் 2006 இதழில் வெளிவந்த கட்டுரை)
Pin It