சூறாவளி என்பது ஒருவகை சுழலும் காற்றாகும். இது கட்டுக்கடங்காத வேகத்தில் சுழன்றபடி மேகங்களை தொட்டுக் கொண்டு நிலப்பரப்பை சூறையாடி பயிர்களையும், வீடுகளையும் நாசம் செய்துவிடும் ஆற்றல் கொண்டவைகளாகும். சூறாவளி என்பது ஒரு புனல் (Funnel) வடிவத்தில் காணப்படும். பயங்கரமான சூறாவளியின் மேற்பகுதி மேகத்தைத் தொட்டு கிணறு போன்ற அகன்று காணப்படும். மேலும் இதன் வால் பகுதி கூர்மையான வாள் போன்று வளைந்து காணப்படும். இவற்றிற்கு ஆங்கிலத்தில் டொர்னடோ (Tornado) என்று பெயர்.

TORNADOE
 
சூறாவளியின் வேகம்

சூறாவளிகள் குறைந்த பட்ச வேகமாக மணிக்கு 40 மைல்கள் என்ற வேகத்தில் சுழன்றடிக்கும் (அதாவது 64 கி.மீ வேகம்). அதிக பட்சமாக மணிக்கு 110 மைல்கள் என்ற வேகத்தில் சுழன்றடிக்கும் (அதாவது மணிக்கு 177 கி.மீ வேகம்). இந்த வேகம் சுமார் 250 அடி (75 மீட்டர்) நிலப்பரப்பை ஒரு வினாடியில் தாக்கும் வல்லமை படைத்தது.

சூறாவளிகள் சுழல ஆரம்பிக்கும்போது எதிர்பாராத விதமாக காற்றின் வேகம் 300 மைல்களாக இருந்தால் இந்த சூறாவளிகள் குறைந்தபட்சடம் 1 மைல் (அதாவது 1.6 கி.மீ) பரப்பளவு கொண்ட நிலப்பரப்பை ஒரு வினாடியில் துவம்சம் செய்து அப்படியே மெல்ல நகர்ந்து பல மைல்கள் நகர ஆரம்பிக்கும். இவைகளை வானத்தின் சுனாமி என்று கூட கூறலாம்.
 
சூறாவளி – டொர்னடோ எவ்வாறு உருவாகிறது?
 
ஒரு குறிப்பிடட திசையிலிருந்து வீசக்கூடிய குளிர்ந்த காற்று மற்றும் வற‌ண்ட காற்றும் அதன் எதிர்திசையிலிருந்து வீசக்கூடிய சூடான காற்று மற்றும் ஈரப்பதமான காற்றுடன் மோதுகிறது. இப்படிப்பட்ட பல்வேறு வகையான காற்றுகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது அதிலிருந்து வெளிப்படும் விசையே சூறாவளி எனப்படுகிறது. இந்த மோதல்கள் அதிகமான அளவு நடைபெறும்போது அந்த சூறாவளிக்கு பலம் கூடுகிறது. இதற்கு பெயர்தான் டொர்னடோ எனப்படுகிறது. 
 
tornadoe_1டொர்னடோ என்ற பயங்கரமான சூறாவளி வீசுவதற்கு முன்னர் ஆலங்கட்டி மழைகள் ஏற்படுமாம். அந்த ஆலங்கட்டியின் தாக்கம் வீடுகளின் கூரைகளைத் துவம்சம் செய்துவிடுமாம்.
 
வானத்தில் ஒரு பயங்கரமான சூறாவளி உருவாகிவிட்டால் அந்த சூறாவளி நிலத்தை தொடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் வெறும் 12-13 நிமிடங்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 13ம் வினாடியிலிருந்து இந்த சூறாவளி நிலத்தைப் பதம் பார்த்து அக்குவேறு ஆணிவேராகப் பிடிங்கி அதை தனக்குள் வசப்படுத்திக்கொண்டு அதே வேகத்தில் நகர ஆரம்பிக்குமாம்.
 
மனிதர்கள், கால்நடைகள் கூட இந்த சூறாவளியில் சிக்கி வீசப்படுகிறது. சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு வீட்டின் கூரைகளின் மேல் நிற்குமளவுக்கு பயங்கரமானது இந்த அதிபயங்கர சூறாவளிகள்.

சூறாவளியின் வகைகள் பார்ப்போம்

SUPERCELL TORNADOES (சூறாவளி மேகங்களுடன்)
 
இந்த வகை சூறாவளிகள் SUPERCELL TORNADOES என்று அழைக்கப்படுகின்றன. இந்த வகை சூறாவளி, மேகங்களை கருவாகக் கொண்டு சுழன்றடிக்கும். ஒரு பக்கம் மேகங்கள் மழைச்சாரல்களை வீசிக்கொண்டும் மற்றொரு பக்கம் சூறைக்காற்றை சுழன்றபடியும் வீசி பல கிலோமீட்டர்களை நாசம் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றிருக்கும். இந்த வகை சூறாவளிகள் நிலத்தைத் தொட்டுவிட்டால் அதன் வேகம் 200 கி.மீ.க்கும் குறைவாக இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
LANDSPOUT (லேன்ட் ஸ்பவ்ட்)
 
WATERSPOUTநிலத்தில் உள்ள மணல் மேடுகளை பதம்பார்த்து மணலை வீசியவண்ணம் சுழன்றடிக்கும் இந்த கொடிய சூறாவளிக்கு லேன்ட் ஸ்பவ்ட் என்று பெயர். இது முதலில் கண்ட SUPERCELL TORNADOES-களுக்கு அடுத்தபடியாக வேகமாக வீசக்கூடிய சூறாவளியாகும். இவைகள் கனத்த மேகங்களை இழுத்துக்கொண்டு சுழலாமல் பலவீனமான மேகங்களைக் கொண்டு காற்றை சுழன்றடிக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறது.

GUSTNADO (கஸ்டனாடோ சூறாவளி)
 
இந்த GUSTNADO என்றழைக்கப்படும் சூறாவளி பலவீனமானதாகும். இவைகள் சற்று வேகம் குறைந்ததாகவும் விரைவில் நின்றுவிடக் கூடியதாகவும் காணப்படும். இந்த சூறைக்காற்றினால் தூசுப்படலம் சற்று அதிகமாக காணப்படும். இந்த வகை சூறாவளிகளுக்கு மேகங்களுடன் நெருங்கய தொடர்பிருக்காது மாறாக காற்றின் வேகம்தான் இவைகளையும் உருவாக்குகிறது.
 
WATERSPOUT (நீரில் ஏற்படும் சூறாவளி)
 
வாட்டர் ஸ்பவ்ட் எனப்படும் இந்த சூறாவளிகள் நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய சூறாவளிகளாகும். இவைகள் நிலத்தில் வீசக்கூடிய SUPERCELL எனப்படும் அதிபயங்கர சூறாவளிகளின் வடிவமேயாகும். ஆனால் இவைகள் நீரில் சுழன்றடிப்பதால் இதனால் ஏற்படும் பாதிப்பகள் மனிதனுக்கு மிகக் குறைவுதான். இந்த சூறாவளிகள் நிலத்தைத் தொடுவதற்குள் அதன் சக்தியை இழந்து விடுகின்றன. 
 
dustdevilDUST DEVILS
 
டஸ்ட் டெவில் அதாவது தூசுகளின் சாத்தான் என்ற சூறாவளி அதிகமாக பாலைவனங்களில் வீசுவதுதான் வழக்கம். இவைகள் உச்சி வெயில் மற்றும் மதிய நேரங்களில் அதிகமாக வீசுகின்றன. இவைகள் மணிக்கு 70 மைல்கள் வேகத்தில் சுழன்றடிக்கும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. இவைகள் மிகவும் பலவீனமான சூறாவளிகளாகும். இவைகளுக்கு மேகங்களுடன் எந்தத் தொடர்பும் காணப்படாது. மாறாக காற்றின் அழுத்தம் இவ்வகை சூறைக் காற்றை வீசிக்கொண்டு சில நிமிடங்களில் தன் சக்தியை இழந்துவிகின்றன. தூசுப்படலத்தை தட்டிச் செல்வதால் கண்களுக்கு மிகவும் பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன. சற்று அதிகமாக வீசினால் ஒரு வாகன‌த்தை தலை குப்புற கவிழ்த்துவிடும் ஆற்றல் பெற்றிருக்கும்.
 
FIRE WHIRLS
 
நெருப்புச் சூறாவளிகள் அதாவது சூறாவளி சூழலும் போது அதன் உராய்வினால் காய்ந்த இழை தழைகள் கருகி நெருப்பு உண்டாகிறது. இந்த நெருப்பு ஜுவாலைகளை சூறாவளி தன்னுள் இழுத்தபடியே பிற இடங்களுக்குப் பரவி நாசத்தை ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றுள்ளன. இவைகள் பெரும்பாலும் விவசாய நிலங்கள் மற்றும் காடுகள் உள்ள பகுதிகளில் பேரிழப்பை ஏற்படுத்திவிடுகின்றன.

இந்த நெருப்புச் சூறாவளிகள் 1923ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவின் Hifukusho-Ato என்ற கிராமத்தில் சுமார் 38,000த்திற்கும் மேற்பட்ட மனிதர்களை வெறும் 15 நிமிட இடைவெளியில் நெருப்பினால் பொசுக்கி அழித்துள்ளது. இவைகள் பெரும்பாலும் 10 முதல் 50 மீட்டர் அகல உயரமும் 10 அடி அகலம் கொண்டதாகவும் காணப்படும். இச்சுறாவளிகள் சுழன்றடிக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 160 கி.மீ என்ற வேகத்தில் காணப்படும். 49 அடி உயரமுள்ள மரத்தைக் கூட சில வினாடிகளில் அழித்துவிடும்.

- பரூக் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

நீல வானம், பச்சைக் கிளி, எலுமிச்சை மஞ்சள் என்று நாம் பொருள்களை அதனதன் நிறத்தோடுதான் நினைவில் வைத்திருக்கிறோம். இவற்றை மாற்றினால் குழப்பம் ஏற்படும். பறந்து வரும் கால்பந்தைப் பார்க்கும்போது நமக்கு பந்தின் வடிவம், நிறம் மற்றும் அதன் திசை, வேகம் ஆகியவைகளும் சேர்ந்துதான் கவனிக்கிறோம்.

மூளையில் நிறத்தை அறிவதற்குத் தனியாக ஒரு இடமும் அதன் வடிவம் முதலானவற்றை அறிவதற்குத் தனித்தனியாக வேறு இடங்களும் உள்ளன. இருப்பினும் நாம் அவற்றைத் தனித்தனியாக உணராமல் ஒன்றாகத்தான் அறிகிறோம். மூளையின் பகுதிகளை ஒருங்கிணைத்து வழங்கும் பகுதி ஒன்று இருப்பதால் இது சாத்தியமாகிறது. ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரித்தான நிறம் வடிவம் முதலியன வெவ்வேறு இடங்களில் நினைவுகளாக சேமிக்கப்படுகின்றன. மீண்டும் நினைவு கூறும்போது அவற்றை ஒன்று திரட்டித்தான் நாம் பார்க்கிறோம்.

சிக்காகோ பல்கலைக்கழக நரம்பியல் வல்லுநர்கள் ஒரு காரியம் செய்தார்கள். ஒரு கண் மேல் கீழாக உள்ள சிவப்பு கோடுகளைப் பார்க்கவும், இன்னொரு கண் வழியாக பச்சை நிற குறுக்குக் கோடுகளைப் பார்க்கும்படியாகவும் செய்து, ஒரு கண்ணில் கோடுகளை கவனிக்காதபடி செய்தபோது பார்ப்பவருக்கு ஒரு திசை கோடுகள்தான் தெரிந்தன. ஆனால் இரண்டு நிறங்கள் போட்டி போட்டுக்கொண்டு அந்தக் கோடுகளுக்கு கலர் கொடுத்தன. மூளை நிறங்களை பொருள்களுக்கு எப்படி தீர்மானிக்கின்றன என்பதை அறிவதற்காக இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர். வடிவமில்லாமல் வெறும் கலரை ூளை சேமித்து வைக்கத் திணறுகிறது என்று அவர்கள் கண்டுபிடித்தனர்.

-முனைவர் .மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

பூமியில் இன்றைக்கு 6.8 பில்லியன் பேர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். 2050 ஆம் ஆண்டில் 9.5 பில்லியன் பேர்களுக்கு சோறு போட வேண்டியவரும். அதற்கு பிரேசில் நாடு அளவுக்குப் புதிதாக வேளாண்மை நிலம் நமக்குத் தேவைப்படும். ஏற்கனவே குடிநீரில் 70 சதவீதமும் எரிபொருளில் 20 சதவீதமும் உணவு உற்பத்திக்காகவே செலவாகிறது. மேலும் ஒரு 3 பில்லியன் மனிதர்களுக்குத் தேவையான நிலத்திற்கும் நீருக்கும் எரிசக்திக்கும் என்ன செய்வது? எங்கே போவது? இதற்கு கலப்பையில்லாத கட்டிட விவசாயம்தான் ஒரே பதில்.

நிலத்தை உழுது, பாசனம் செய்து, உரமிட்டதால் பூமி நொந்துபோய் மலட்டுத் தன்மைத்தை அடைந்துவிட்டாள். வேண்டிய அளவுக்குக் காடுகளையும் வெட்டி நாசம் செய்து அவற்றை விவசாய நிலங்களாக்கி விட்டோம். அதன் காரணமாக புவியின் சூடும் அதிகரித்துவிட்டது. இந்த நிலையில் எதையாவது புதிதாகச் செய்தால்தான் இந்தச் சிக்கலிலிருந்து விடுபடமுடியும்.

மண் படாத வேர்கள்

முப்பது மாடிக் கட்டிடத்தில் ஒவ்வொரு தளத்திலும் மண்ணைப் பயன்படுத்தாமல், பயிர்களை வளர்க்கும் உள்ளரங்க பயிரியல் முறைதான் கட்டிட வேளாண்மை.

வில்லியம் எஃப் பெரிக் என்பவர் 1929 இல் மண்ணில்லாமல் தொட்டியில் தண்ணீர் நிரப்பி, அதில் ஊட்டச்சத்து உப்புகளைக் கரைத்து, செடிகளை வளர்த்துக் காட்டினார். ஹைட்ரோ போனிக்ஸ் என்பது இந்த முறையின் பெயர் (Hydroponics).  இரண்டாம் உலகப்போரின் போது 8 மில்லியன் கிலோ காய்கறிகளை பசுபிப் தீவுகளில், நாட்டோ நாடுகளின் சார்பில் நிலமில்லாமல் நேரடியாக நீர்த் தொட்டிகளில் வளர்த்துப் பெறப்பட்டது.

வேர்கள் கெட்டியாக மண்ணைப் பிடித்துக் கொண்டுதான் வளரும் என்று பலகாலம் நாம் நம்பிவந்திருக்கிறோம். உண்மையில் மண்ணிலுள்ள தாதுக்கள்தான் அவற்றிற்குத் தேவை. தண்ணிர்த் தொட்டியில் செடியினால் நிற்க இயலாது என்று கருதினால் வெரிமிகுலைட் என்ற ஜடப்பொருளை, (தக்கைபோல இருக்கும்) துருவி தூளாக்கிப் போட்டு பல ஆண்டுகளுக்கு மண்போலவே திரும்பத் திரும்பப் பயன்படுத்தலாம். இது பயிரின் வேர்களுக்குத ் தேவையான பிடிமானத்தை மட்டும் வழங்கும்; மற்றபடி இதற்கு வேறு வேலை ஏதும் கிடையாது.

ஏரோபோனிக்ஸ் என்கிற இன்னொரு முறையில் செடிகள் நூலில் கட்டப்பட்டு காற்றில் தொங்கியபடி வளரும். காற்றில் குறைவில்லாத ஈரம் நிரம்பியிருந்தால் போதும். மார்கழிப் பனிபோல அறை முழுவதும் நீர்த் திவளைகளால் நிரப்பி அதில் ஊட்டத் தாதுக்களையும் கரைத்து கலந்துவிட்டால் செடிகள் ஜோராக வளரும்.

யூரோஃபிரெஷ் எனும் காய்கறி நிறுவனம் அரிசோனா பாலைவனத்தில் 318 ஏக்கர் நிலபரப்புக்குச் சமமான விவசாயத்தை அடுக்கு மாடி கட்டிடத்தில் செய்துகொண்டு வருகிறது. தக்காளி, வெள்ளிரிக்காய், மிளகு ஆகியவற்றை ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் பயிர்செய்தது.

செங்குத்து வேளாண்மை


அடுக்குமாடி கட்டிடத்தில் ஒவ்வொரு தளத்திலும் பல அடுக்குகளில் வரிசையாக தொட்டிகளை நிறுத்தி அவற்றில் பயிர் செய்வது செங்குத்து வேளாண்மை. செங்குத்து வேளாண்மைக்கு பல ஏக்கர் நிலம் வேண்டியதில்லை. எங்கெல்லாம் காய்கறிகள் வேண்டுமோ அங்காங்கே பயிர் செய்து கொள்ளலாம். கலெக்டர் அலுவலகத்திற்கு அருகில், விமான தளத்திற்கு பக்கத்தில், என நகரங்களின் நட்ட நடுவே வேளாண்மை செய்யலாம். காடு, கழனிகள் ஓரிடத்திலும், விற்பனை சந்தைகள் ஓரிடத்திலும் இருந்த காலம் போய்விடும். அறுவடையான அரிசியையும் கரும்பையும் ஊர் ஊராக அனுப்பிக்கொண்டு தேவையில்லாமல் போக்குவரத்து செலவிட வேண்டியதில்லை. விளைபொருள்களை பதனிட்டு பாதுகாக்கவும் தேவையில்லை. அவரவர்களுக்கு வேண்டியவற்றை அவர்களிடத்திலேயே விளைவித்து, பறித்த காய்கறிகளைத் தரலாம்.

மூடிய கட்டிடத்தில் சுத்தமான முறையில் பயிர் செய்வதால் காய்கறிகளில் பூச்சி அண்டாது, மண் மூலமாக பயிர்களில் பரவும் கிருமிகளும் இருக்காது. இதனால் பூச்சிக்கொல்லி மருந்து, நோய்க்கிருமிகள் இல்லாத காய்கறி, தானியங்கள் கிடைக்கும்.

பருவகாலம், மழைபொழிவு, புயல், வெள்ளம் என்ற பிரச்சனைகள் ஏதுமில்லாமல் ஆண்டு முழுவதும் பயிர் செய்து கொண்டேயிருக்கலாம். தேவையான மின்சக்தியை பயிர்களின் காய்ந்த குப்பைக் கூளங்களை எரித்து அனல் சக்தியாக்கிப் பெறலாம். சூரிய ஒளிப் பலகைகளிலிருந்தும் காற்றாடிகளிலிருந்தும் பெறலாம்.

நகரத்துக்குள்ளேயே அடுக்குமாடிகளில் பயிரிடுவதால், உள்ளூர் இளைஞர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். மண்ணில் இறங்கி வேலை செய்வதை கேவலமாக நினைத்து பட்டனத்துக்கு வரும் பட்டிக்காட்டு இளைஞர்களுக்கும் நல்ல வாய்ப்பு கிடைக்கும். படிப்படியாக மண்ணுக்கு ஓய்வு கிடைக்கும். மீண்டும் அவை பழைய இயல்புநிலையை அடையும். விரும்பினால் அவற்றை அப்படியே விட்டுவிடலாம். இதன் மூலம் இழந்த காடுகளைத் திரும்பப் பெறலாம். அமைதிக்கான நோபெல் பரிசு பெற்ற வங்காரி மாத்தய் (2004) சொன்னாது போல் நிலங்களை சும்மாவிட்டு விட்டால் போதும் குளோபல் வாமிங் தானாக சரியாகிவிடும். சோற்றுக்கு என்ன செய்வது என்றால், அதற்குத்தான் செங்குத்து வேளாண்மை இருக்கிறதே

சமன்பாடுகள்

முப்பது அடுக்கு மாடியில் செய்யப்படும் மொத்த விளைச்சலானது, 150 ஏக்கர் நிலப்பரப்பில் செய்யப்படும் வேளாண்மைக்குச் சமம். குட்டை ரக பயிர்களாக இருந்தால், ஒரே தளத்தில் மூன்று, நான்கு அடுக்குளாக அவற்றைப் பயிர் செய்து, 2400 ஏக்கர் நிலத்திற்குச் சமமான விளைச்சலைப் பெறலாம். கிராமப் புரங்களில் நிலங்களை விட்டுவிட்டு புறநகர் பகுதியிலேயே கட்டிடங்கள் கட்டி அவற்றில் அதற்குச் சமமான விளைச்சலை பெறமுடியும். பள்ளிக்கூடங்கள், பெரிய ஆஸ்பத்திரிகளின் மேல்தளங்கள் போன்றவற்றில்கூட கூண்டு கட்டி அவற்றில் அவசியமான அளவுக்குக் காய்கறி பயிர் செய்யலாம். நான்கைந்து வாரங்களில் கீரை கிடைத்துவிடும்; கம்பு, சோளம் போன்ற தானியங்களின் 4 மாதங்களில் கிடைக்கும். முயன்றால் எல்லா பயிர்களையும் கட்டிடத்திற்குள்ளேயே வளர்த்துக் கொள்ளலாம்.

முப்பது அடுக்குகள் ஒவ்வொன்றிலும் பல வித முறைகளில் பயிர்கள் வளர்க்கப்படும். முனிசிபல் கழிவு நீரே சுத்தம் செய்யப்பட்ட பிறகு பாசனத்திற்கு பயன்படுத்தப்படும். சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் பெறப்படும். செயற்கை ஒளி தரும் குழல்விளக்குகள் பயிர்களை வளர்க்கும். குப்பைகள் வெளியேற தனியாக செங்குத்து சாக்கடைகள் இருக்கும். கழிவுகளிலிருந்து வெப்பம் கிடைக்கும். அங்கேயே காய்கறி கடையும் இருக்கும்.

செங்குத்து வேளாண்மை கட்டிடங்களின் ஒவ்வொரு தளத்திலும் பயிர்கள் இப்படித்தான் வளர்க்கப்படும். ஒரு முனையில் நாற்றுகள் உருவாக்கப்படும்; கன்வேயர் பெல்ட் நகர்ந்தபடியே இருக்கும், மறுமுனைக்கு வரும்போது அவை கனிந்து அறுவடைக்குத் தயாராகிவிடும். தளத்தின் ஒளி அளவு, ஈரப்பதன் ஆகியவை கட்டுப்படுத்தப்படும்.

கடந்த 10 ஆண்டுகளாக, யூரோ ஃப்ரெஷ் என்ற கம்பெனி (அரிசோனா, வில்காக்ஸ்) 318 ஏக்கர் பரப்பில் தக்காளி மற்றும் மிளகாய்களை உள் அரங்கத்திலேயே நீர்த்தொட்டிகளில் பெருமளவில் வளர்த்துவருகிறது. இது ஹைட்ரோபோனிக்ஸ் வேளாண்மையின் வெற்றிக்கு ஒரு எடுத்துக்காட்டு.

நன்றி: படங்கள். சைன்டிபிக் அமெரிக்கன்.

-முனைவர் க.மணி

Pin It

“ஷூக்களை அணிந்துகொண்டு ஓடுவது எனக்கு இடையூறாக இருக்கிறது.”

இப்படி ஒரு வித்தியாசமான கருத்தை வெளியிட்டவர் வேறு யாருமல்ல. Haile Gebrselassie என்னும் பெயர்கொண்ட உலகின் அதிவேக மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்தான் ஷூக்களுக்கு எதிரான கருத்தை வெளியிட்டிருக்கிறார். ஷூக்களை அணிந்துகொண்டு ஓடுவது நல்லதா? வெறுங்காலுடன் ஓடுவது நல்லதா? என்பது இப்போது ஆய்வுப்பொருளாகியிருக்கிறது.

கால்களும், பருத்த புட்டங்களும், மீளெழும் வடிவம்கொண்ட பாதங்களும் மனிதன் ஓடவேண்டும் என்பதற்காகவே இயற்கை அளித்திருக்கும் சாதனங்கள். ஓட்டப் பந்தய ஷூக்கள் 1970க்குப்பிறகுதான் அதிகமாக உபயோகிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சொல்லப் போனால் 1900களின் தொடக்கத்தில்தான் ஓட்டப் பந்தய ஷூக்களே கண்டுபிடிக்கப்பட்டன.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேனியல் லீபர்மான் என்னும் மனித பரிணாம இயல் வல்லுநர் ஓட்டப்பந்தயவீரர்களுக்கு ஷூக்கள் உபயோகமாக இருக்கிறதா இல்லை உபத்திரவமாக இருக்கிறதா என்பதைப்பற்றி ஆராய்ந்து வருகிறார். அவருடைய குழுவினர் 200க்கும் மேற்பட்ட ஷூக்களை அணிந்த, அணியாத, ஓட்டப்பந்தய வீரர்களை ஆராய்ந்திருக்கின்றனர். இவர்களுள் நெடுந்தொலைவு ஓட்டப்பந்தய வீரர்களுக்கு புகழ்பெற்ற கென்யா நாட்டவர்களும் அடக்கம். அனுபவம் மிக்க ஓட்டப்பந்தய வீரர்கள், புதியவர்கள், ஷூக்களை அணிந்து ஓடிப் பழகி இப்போது வெறும் காலுடன் ஓடுபவர்கள், வெறும் காலுடன் ஓடிப் பழகி இப்போது ஷூக்களை அணிந்து ஓடுபவர்கள், ஷூக்களை அணிந்து ஓடிய அனுபவத்தையே இதுவரை பெற்றிருக்காதவர்கள் என்று எல்லாவகையான ஓட்டப்பந்தயவீரர்களையும் இந்த ஆய்வில் டேனியல் லீபர்மானின் குழுவினர் உட்படுத்தினர்.

இந்த ஆய்வுகள் ஷூக்களை அணிந்தவர்களுக்கும், ஷூக்கள் அணியாத ஓட்டப்பந்தய வீரர்களுக்கும் இடையில் ஒரு முக்கியமான வேறுபாட்டை வெளிப்படுத்தின. ஷூக்களை அணிந்தவர்கள் குதிகாலை தரையில் பதிக்கும்போது, வெறுங்காலுடன் ஓடுபவர்கள் காலின் தட்டைப்பகுதியை தரையில் பதித்தனர். ஷூக்களை அணியாமல் வெறுங்காலுடன் ஓடுபவர்களின் அதிர்வுகள் பாதத்தின் வளைவுகளிலும், குதிகாலிலும், முழங்காலிலும், கெண்டைக்கால் தசைகளிலும் கடத்தப்பட்டு ஓடுவது எளிதாக்கப்பட்டது. வெறுங்காலுடன் ஓடுபவர்கள் தங்களுடைய உடலின் 0.5 - 0.7 மடங்கு எடையை உணர்ந்தனர். ஆனால் ஷூக்களை அணிந்து ஓடியவர்கள் உடலின் 1.5-2.0 மடங்கு எடையை உணர்ந்தனர்.

இயற்கை நம்மை வெறுங்காலுடன் ஓடுவதற்காகவே படைத்திருக்கிறது என்பதுதான் இந்த ஆய்வின் முடிவு. ஆனால் ஷூக்களை அணிந்து கொண்டு ஓடுவதால் கிடைக்கும் நன்மைகளை புறக்கணித்துவிட முடியாது. நகரமயமாக்கல் வீதிகளில் வீசியெறிந்த கண்ணாடி துண்டுகள், ஆணிகள், ஓடுகள் போன்றவற்றால் நம்முடைய பொன்னான பாதங்கள் புண்ணாகிப் போகாமல் காப்பாற்றுவது ஷூக்கள்தான் என்பதும் உண்மைதானே!

தகவல்: மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

இன்னும் படிக்க:

http://sciencenow.sciencemag.org/cgi/content/full/2010/127/1

Pin It