வளங்களின் வரையறை, வகைப்பாடு, வள அபிவிருத்தி என்பதன் பொருள் மற்றும் தமிழர் நிலத்தின் வளங்களும் பயன்பாடும்.

1.0 மனித வாழ்வுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பயன்படுபவை யாவற்றையும் வளங்கள் எனலாம். இயற்கையாகக் கிடைப்பவற்றை மனிதன் தன் அறிவாலும் தெழில்நுட்ப விருத்தியாலும் பயன்பாட்டிற்கு உட்படுத்தும் போது அவை வளங்களாகக் கருதப்படுகின்றன. மனிதனது தேவைகள் அளப்பரியன. அவற்றை நிறைவு செய்வதற்கு மனிதன் பல்வேறுபட்ட வளங்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. தனி மனித தேவைகள் போன்றே ஒரு நாட்டினதும் பிரதேசத்தினதும் சமூகத்தினதும் தேவைகள் வரையறை அற்றவை. ஆனால் வளங்கள் வரையறைக்கு உட்படுபவை. இதனால் பொருளியலாளர்கள் வளங்கள் அருமை, தெரிவு, பரிமாற்றம் எனும் அம்சங்களைக் கொண்டுள்ளன என்பர்.

1.1 பொதுவாக வளங்களை இரு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம்.

01) பௌதிகவளம் அல்லது இயற்கை வளம் (Physical resource or Natural Resource)

02) மனித வளம் அல்லது பண்பாட்டு வளம் (Human Resource or Cultural Resource)

 

1.2 பௌதிக வளத்தை இரசாயனவியலாளர்கள்

01) உயிரியல் வளம் (Organic Resource)

உதாரணம்:- (காடுகள்,விலங்குகள்)

 

02) உயிரற்ற வளம் (Inorganic Resource)

உதாரணம்:- (நீர், கனிமங்கள்)

என வகுப்பர்

 

1.3 பொருளியலாளர்கள் வளங்களை நுகர்வுத்தன்மை அடிப்படையில்

01) புதுப்பிக்கக் கூடிய வளம் (Renewable Resource)

உதாரணம:-(நீர்,வளி)

 

02) புதுப்பிக்க முடியாத வளம் (Non-renewable Resource)

உதாரணம்:- (கனிமம்,காடுகள்)

என வகைப்படுத்துவர்.

 

1.4 சூழலியலாளர்கள் பௌதிகவளத்தை

01) நில மண்டல வளம் (Lithosphere Resource)

உதாரணம் (மண்,கனிமம்)

 

02) நீர் மண்டல வளம்  (Hydrosphere Resource)

உதாரணம்:- (ஏரி,சமுத்திரம்)

 

03) வளிமண்டல வளம் (Atmosphere Resource)

உதாரணம்:-(காற்று,மழை)

 

04) உயிர் மண்டல வளம்  (Biosphere Resource)

உதாரணம்:-(காடுகள்,விலங்குகள)

என வகைப்படுத்துவர்.

 

பௌதிக வளங்களும்(சூழல்), பண்பாட்டு வளங்களும்

2.0 புவியியலாளர்கள் மனித இனத்தின் வளர்ச்சி வரலாறானது சூழலுக்கும் மனிதனின் அறிவு வளர்ச்சிக்குமிடையே நிகழ்ந்த போராட்ட வரலாறு என்று கூறுவதோடு சூழலை முதன்மைப்படுத்தும் சூழலாதிக்கவாதக் கோட்பாடுகளையும் மனித நடவடிக்கைகளை முதன்மைப்படுத்தும் மானிடஆதிக்கவாத கோட்பாடுகளையும் முன் வைக்கின்றனர். மனித இனத்தின் அறிவு, தொழில்நுட்ப வளர்ச்சி படிப்படியாக எவ்வகையில் வளத்தைப் பயன்பாட்டிற்கு உட்படுத்தி வந்ததென்பதையும் வருகின்றதென்பதையும் முறைப்படி விளக்குகின்றனர். புவியியலாளர் சூழலை அமைவு, அமைப்பு, தரைத்தோற்றம், காலநிலை, மண், இயற்கைத்தாவரம், விலங்கினவாழ்வு என வகைப்படுத்தி மனிதன் இவற்றில் செல்வாக்கு செலுத்துவதனையும் இவற்றால் மனிதன் செல்வாக்கிற்கு உட்படுத்தப்படுவதனையும் விபரிப்பதோடு இரண்டிற்கு இடைப்பட்ட நிலையும் உண்டு எனவும் விளக்குகின்றனர்.

3.0 பண்பாட்டு வளம் (மனித அறிவும் தொழில்நுட்பமும்)

வளங்கள் பற்றி விபரிக்கும் அறிஞர்கள் பலர் மனித வளமே உலகிலே கிடைக்கும் எல்லா மூல வளங்களையும் விடச் சிறந்தது என்கின்றனர். வளம் என்பது அறிவியல் கலாசாரத்தின் செயற்பாடே என சில அறிஞர்கள் குறிப்பிடுகின்;றனர். புவியில் பரந்துள்ள இயற்கை நிலைமைகளை வளங்களாக மாற்றுவதற்கு மனிதஅறிவு வளர்ச்சி இன்றியமையாதது. மனிதஅறிவு எனும் போது கல்விகற்ற தொழில்நுட்ப அறிவு கொண்ட சமூகத்தை குறித்து நிற்கின்றது. ஒரு நாடு அபிவிருத்தியடைய அந்நாட்டு மக்கள் இயற்கைவளங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற அறிவு கொண்டவர்களாக இருத்தல் அவசியம். இல்லாதுவிடின் அந்நாட்டில் காணப்படும் வளங்கள் மறைவளங்கள் (LATENT RESOURCES) என்ற நிலைமையிலேயே காணப்படும். உதாரணமாக, கிறீஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலேயே பெற்றோலியம் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆனால் தொழில்நுட்ப விருத்தியால் பெற்றோல் வடிகட்டும் முறைகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் வாகனங்கள் இயக்குவதற்கு அதனை எரிபொருளாக பயன்படுத்தலாம் என்ற தொழில்நுட்ப அறிவின் விருத்தியின் பின்னருமே அவை வளமாக மாற்றப்பட்டன.

இறப்பர் மரம் அமேசன் காடுகளில் இயற்கையாக வளரும் தாவரம். இறப்பர் மரத்திலிருந்து பால் பெற்று தொழில்நுட்ப முறைகளைப் புகுத்தி ரயராக, ரியூப்பாக பயன்படுத்தலாம் என்ற அறிவு வளரும் வரை அவை மறைவளமாகவே இருந்துள்ளன. இவ்வாறு இன்றும் பல வளங்கள் எமது அறிவு விருத்தியின்மையால் பயன்பாட்டிற்கு உட்படாது இருத்தல் கூடும். எதிர்காலத்தில் மேலும் வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பங்களால் அவற்றின் பயன்பாடு கண்டுபிடிக்கப்படலாம். அது வரை அவ்வளம் ஒரு மறைவளமாக அல்லது உள்ளார்ந்த வளமாகவே இருக்கும். இதிலிருந்து மனித அறிவு, தெழில்நுட்ப விருத்தி என்பனவே முக்கியமான வளம் என்பது பெறப்படுகின்றது. ஒரு நாட்டின் அபிவிருத்தி அந்நாட்டில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கைத்தர நிலமைகளைக் கொண்டும் அளவிடப்படுகின்றது. இதன்படி பின்வரும் சூத்திரம் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை வளத்துடனும் தொழில்நுட்ப அறிவுடனும் இணைந்த கலாசார மேம்பாட்டுடன் தொடர்புபடுத்தி விளக்குகின்றது.

SL =   RxC / P

இதில் R என்பதில் விவசாயம், கைத்தொழில், சேவைகள் என்பவற்றின் அபிவிருத்திக்குரிய வளங்கள் உள்ளடங்குகின்றன. C என்பது தெழில்நுட்பத்தின் இணைந்த மனித கலாசாரத்தைக் குறிக்கின்றது. P என்பது நாட்டின் மொத்த மக்கள் தொகையையும் SL என்பது தனிநபர் வாழ்க்கைத்தரத்தையும் குறிக்கின்றது. புதிய வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலோ, புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டாலோ மொத்த உற்பத்தி அதிகரிக்கும் என்பதைச் சூத்திரம் விளக்குகின்றது.

3.1 மனிதன் வளங்களின் உற்பத்தியாளனாகவும், நுகர்வோனாகவும் விளங்குகின்றான். இயற்கை, வளமாக மாறவேண்டுமாயின் மனிதனின் உழைப்பு இன்றியமையாதது. அவ் உழைப்பு உளஞ் சார்ந்ததாகவோ, உடல் சார்ந்ததாகவோ அமையலாம். உழைப்பினால் பெறும் அனுபவங்கள் உற்பத்தியை வினைத்திறன் மிக்கதாக்கின்றன. இவ்வாறே மனித நாகரிகங்கள் வளர்ந்துள்ளன. நாகரிக வளர்ச்சியில் மனித உடல் உழைப்புக் குறைய உள உழைப்பே அதிகரித்து வந்துள்ளதை காண்கின்றோம். உள சக்திவள அதிகரிப்பிற்கு உடல் உறுதியானதாகவும் ஆரோக்கியம் உள்ளதாகவும் இருத்தல் அவசியம். உள ஆரேக்கியத்துக்குக் கல்வியும் தொடர்ந்த பயிற்சிகளும் அவசியம். மனித வள அபிவிருத்தியானது மனிதனின் நல் ஆரோக்கியத்திலும் முறையான கல்வியிலுமே தங்கியுள்ளது.

3.2 மனிதன் உழைப்பது நுகர்வுக்காகவே. எனவே மனிதனின் தேவைகளை இரு வகையாகப் பிரிக்கலாம்.

01) அடிப்படைத் தேவைகள்

02) ஏனைய தேவைகள்

அடிப்படைத் தேவைகள் எனும் போது உணவு, உடை, உறையுள் என்பனவாக அமையும். இவ் அடிப்படை தேவைகளுடன் மனிதன் திருப்தியடைவதில்லை. மனிதனுக்கு ஆடம்பரமாகவும், வசதியாகவும் வாழும் விருப்பு உண்டு. மனித அறிவு வளர வளர இதுவும் வளரும். “அடிப்படைத் தேவைகள் நிறைவுற்றதும் மனித மனம் மேலதிக தேவைகளை உருவாக்கிக் கொள்ளும்” என்கிறார் ஒரு அறிஞர். இதனாலேயே மனிதன் தனது அறிவை மேலும் விருத்திசெய்து வினைத்திறனுள்ள வளஉற்பத்தியாளனாக மாறுகின்றான். இவ்வாறே உற்பத்தி நுகர்வு என்பவற்றின் இயக்கம் ஒரு தொடர்சங்கிலி போன்றதே - இதனை மனிதஅறிவின் வளர்ச்சியே துரிதப்படுத்துகின்றது.

4.0 பௌதிக வளமும் குடித்தொகையும்

குடித்தொகையின் தரத்திற்கு (Ouality) முக்கியத்துவம் கொடுக்கும் போது அதனை மனிதவளம் எனவும், தொகையைக்; (Quantity) கணக்கெடுக்கும் போது அதனைக் குடித்தொகை எனவும் கூறலாம். மேற்படி குடித்தொகையை பௌதிக வளங்களுடன் ஒப்பிடும் போது உலகளாவிய ரீதியில் அல்லது நாடு பிரதேசம் என்ற ரீதியில் மூன்று குடித்தொகை நிலமைகள் உருவாகின்றன. அவையாவன.

01) மிதமான குடித்தொகை (OPTIMUM POPULATION)

02) குறைவான குடித்தொகை  (UNDER POPULATION)

03) மிகையான குடித்தொகை  (OVER POPULATION)

குடித்தொகையின் அளவு, பரம்பல், அமைப்பு, கல்விநிலை, தொழில்நுட்பம், என்ற அம்சங்கள் ஒரு நாட்டின் குடித்தொகை எனும் போது கவனம் கொள்ள வேண்டியவையாகும். ஒரு நாட்டின் குடித்தொகை எவ்வாறு அந்த நாட்டிலுள்ள பௌதிக வளத்தைப் பயன்படுத்துகின்றது என்பதைப் பொறுத்தே அந்த நாடானது மிதமான, குறைந்த, மிகையான குடித்தொகை நிலையைக் காட்டுகின்றதா என்பதைத் தீர்மானிக்க முடியும்;.

மிதமான குடித்தொகையெனில் நாட்டிலுள்ள மொத்தக் குடித்தொகை நல்ல வாழ்க்கைத் தரத்தைப் பெற்று வாழக் கூடிய அளவிற்கு அந்நாட்டின் வளங்களைப் பயன்படுத்தி வரும் நிலையினைக் குறிப்பதாகும். இம்மிதமான தன்மை புதிய வளங்களை கண்டுபிடிக்கும் போது அல்லது தொழில்நுட்பத்தின் தரம் அதிகரிக்கும் போது மாற்றத்திற்கு உட்படும். வளமும் தொழில்நுட்பமும் நிலையாக இருக்கும் போது குடித்தொகை அதிகரிப்பின மக்கள் வாழ்க்கைத் தரம் குறையும். இது மிகையான குடித்தொகை நிலையைத் தோற்றுவிக்கும். வளங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட தொழில்நுட்பமும் வளரந்துவர அதற்கேற்ப குடித்தொகை அதிகரிக்காது விடின் அது குறைவான குடித்தொகை நிலையைத் தோற்றுவிக்கும். அதாவது அந்நாடு இருப்பதைவிட கூடிய குடித்தொகையைத் தாங்கக் கூடியதான நிலமையில் இருக்கும்.

(உதாரணம்:- பிறேசில், கனடா, அவுஸ்ரேலியா. போன்ற நாடுகள் பெருமளவு வளங்களைப் பயன்படுத்தக் கூடிய அளவுக்கு குடித்தொகை அளவினைக் கொண்டிருக்கவில்லை.)

மேற்படி நிலமைகள் ஒரு நாட்டிற்கு மாத்திரம் உரியனவல்ல. நாட்டிற்குள்ளேயுள்ள பிரதேசம், குறிச்சி போன்ற சிறு அலகுகளுக்கும் பொருந்தும்.

5.0 மனிதனும் அபிவிருத்தியும்

அபிவிருத்தியின் அடிப்படைகள்

மைக்கேல் ரொறாடோ (Michal Torado) எனும் பொருளியல் அறிஞர் உண்மையான அபிவிருத்தியெனில் பின்வரும் மூன்று அம்சங்களில் கவனம் கொள்ள வேண்டுமென்கிறார்.

01) வாழ்வின் தேவை (LIFE SUSTENANCE)

மனிதனுக்குச் சில அடிப்படைத்தேவைகள் நிறைவு பெறவேண்டும். இவை இன்றி அவன் வாழ முடியாது. அவையாவன உணவு, உடை, உறையுள், சுக நலன், பாதுகாப்பு என்பனவாகும். இவை இல்லை எனில் அல்லது குறைவாக இருப்பின் அங்கு குறைவிருத்தி நிலவுகின்றதென்றே கூற வேண்டும். இவற்றை முதலாளித்துவ நாடு என்றால் என்ன? சோஷலிச நாடு என்றால் என்ன? கலப்புப் பொருளாதார நாடு என்றால் என்ன? மனிதனுக்கு வழங்கியே தீர வேண்டும் என்றார். இவ்வாறான அடிப்படை பொருளாதார தேவைகளை வழங்க முடியாத எந்த ஓர் நாடும் அபிவிருத்தி அடைந்ததாக கொள்ளமுடியாது.

02) சுய மதிப்பு (SELF RESPECT)

ஒருநாடோ, தனிமனிதனோ இருக்கும் சூழலில் சுயமதிப்பு, கௌரவம், (RESPECT, DIGNITY, HONOUR) நிலவவேண்டும். இவை இல்லையெனில் அபிவிருத்தி இல்லையென்றே கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்துகின்றார்.

03) சுதந்திரம் (FREEDOM)

இது குறிப்பது அரசியல் கருத்துச் சுதந்திரத்தையாகும். சமூக நெருக்குதல், அறியாமை, மேலாதிக்கம் என்பன இல்லாதிருத்தல் வேண்டும். மேலும் எந்தச் சித்தாந்தத்தையும் பின்பற்றும் சுதந்திர உரிமை நாட்டிற்கும் மனிதனுக்கும் இருக்;கவேண்டும். இவை இல்லையாயின் அங்கு அபிவிருத்தி இல்லை என்றே கொள்ள வேண்டும்.

மேற்படி அம்சங்களையும் மனிதவள அபிவிருத்தி பற்றிப் பேசுவோர் கவனத்தில் கொள்ள வேண்டும் என மக்கேல் ரொடாறோ வலியுறுத்திக் கூறுகின்றார்.

டட்லி சியர்ஸ்;]; (Dudely Seers )எனும் பொருளியல் அறிஞர் அபிவிருத்தி பற்றி பிரஸ்தாபிக்கும் போது பின்வரும் கேள்விகளை முன்வைக்கின்றார்.

ஒரு தேசம் அபிவிருத்தி அடைந்துள்ளதெனக் கருதுவதாயின் அங்கு

1. வறுமையைப் போக்க என்ன நடந்தது?

2. வேலை இன்மையைப் போக்க என்ன நடைபெற்றது?

3. அங்கு நிலவும் பல்வேறுபட்ட சமமின்மையான நிலமைகளை நீக்குவதற்கு என்ன நடந்தது?

என்ற கேள்விகளை எழுப்பவேண்டுமென்றும் கணிசமான அளவில் இவை குறைவடைந்து வந்தால் சந்தேகத்திற்கிடமின்றி அந்நாடு அபிவிருத்திப் பாதையில் செல்கின்றதென்று கூறலாம் எனக் கூறுகின்றார். இவற்றுள் ஒன்றோ, இரண்டோ பாதகமாக இருக்குமாயின் அந்த நாட்டின் தலா வருமானம் இரண்டு மடங்காக உயர்ந்திருந்தாலும் அந்நாடு அபிவிருத்தி அடையவில்லையென்றே கூற வேண்டும் என்கிறார். இதன் மூலம் தனியே பொருளாதார வளர்ச்சி அபிவிருத்தி அல்ல. அபிவிருத்திக்கு பல்பரிமாணம் உண்டு என வலியுறுத்துகின்றார்.

பிலிப்ஸ் எச்.ஹோம்ஸ் (Philip. H.Coombs)

01) பொது அல்லது அடிப்படைக்கல்வி விருத்தி

(எழுத்தறிவு பெறுதல், ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர் கல்வியை அபிவிருத்தி செய்தல்.)

02) கல்வியால் குடும்ப மேம்பாடு காணல்(குடும்ப வாழ்வின் தரத்தை உயர்த்துதல், சுகநல வாழ்வு, ஊட்டச்சத்து மேம்பாடு, மனைப்பராமரிப்பு, குழந்தைப்பராமரிப்பு, குடும்பத்திட்டமிடல்)

03) சமூக மேம்பாட்டு கல்விவளர்ச்சி

(உள்ளுர், சர்வதேச நிறுவனங்களின் வளர்ச்சி, அரசாங்க அரசசார்பற்ற நிறுவனங்களின் வளர்ச்சி, கூட்டுறவு வளர்ச்சி, சமூக மேம்பாட்டுத் திட்டங்கள்)

04) தொழில்சார் கல்வி வளர்ச்சி

(பயிற்சி அதிகரித்தல், கருத்தரங்குகள், பயிலரங்குகள், தொழில்சார் பயிற்சிகளை பல மட்டங்களிலும் வழங்குதல்)

கல்வி அபிவிருத்தியின் ஊடான அபிவிருத்தி அம்சங்களில் ஒரு நாடோ பிரதேசமோ கவனம் செலுத்தும் போ மனித வள அபிவிருத்தி ஏற்படுமென எச்.ஹோம்ஸ் வலியுறுத்துகின்றார்.

தமிழர் நிலத்தின்; வளங்களும் பயன்பாடும்.

விவசாயத்திற்குரிய பௌதிக வளம்.

நிலவளம், நீர்வளம், மண்வளம் போன்றன விவசாயப் பயன்பாட்டிற்கு இன்றியமையாத பௌதிக வளங்களாகும். தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் தரைத்தோற்றம் அதிக உயர வேறுபாடற்ற சமநிலமாகவே காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டிலிருந்து படிப்படியாக உயரத்திற் குறைந்துவரும் இலங்கையில் வடசமவெளி மற்றும் கிழக்கு சமவெளிகளிற் பெரும்பாகத்தை இப் பிரதேசம் அடக்கியுள்ளது. பொதுவாக இப்பிரதேசத்தின் தரைத்தோற்றத்தை கரையோரத் தாழ்நிலமென்றும் உள்ளமைந்த மேட்டுப்பாங்கான நிலமென்றும் பிரிக்கலாம். கரையோரத் தாழ்நிலம் ஏறத்தாழ 100 அடிக்குட்பட்ட உயரத்தைக் கொண்டு இப்பிரதேசத்தின் பரந்த பரப்பை அடக்கியுள்ளது. உள்ளமைந்த மேட்டுநிலம் 100 அடிக்கு மேற்பட்டும் 300 அடிக்கு உட்பட்டும் காணப்படுகிறது. இது வடக்கே அகன்றும் கிழக்கே ஒடுங்கியும் உள்ளது. இம் மேட்டுநிலத்தில் குறிப்பிடக்கூடிய மலைகள் இல்லாவிடினும் ஆங்காங்கே பல எச்சக்குன்றுகளும் வெளியரும்பு பாறைகளும் காணப்படுகின்றன.

தரைத்தோற்ற அமைப்புக்கேற்ப உயர்ந்த பகுதிகளிலிருந்து உற்பத்தியாகிவரும் ஆறுகள் வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு, கிழக்குத் திசைகளை நோக்கிப் பாய்கின்றன. இப்பிரதேசத்தில் 61  ஆறுகள் காணப்பட்ட போதிலும் மகாவலி கங்கையைத் தவிர ஏனையவற்றில் வருடம் முழுவதும் நீரோட்டம் இருப்பதில்லை. இங்கு காணப்படும் ஆறுகளில் பெரும்பாலானவற்றில் மழைகால நீரோட்டம் காணப்படுவதால் இவை பருவகால ஆறுகளென வழங்கப்படுகின்றன. இதனாலேயே ஆற்றை மறித்து அணைகட்டி நீர்த்தேக்கங்கள் உருவாக்கி விவசாயத்திற்கு பயன்படுத்தும் பாசனமுறை இப்பகுதிகளில் பல நூற்றாண்டுகளாக நிலவி வருகின்றது. அண்மைக்காலங்களில் பழைய குளங்கள் பல புனரமைக்கப்பட்டும், புதிய குளங்கள் பல உருவாக்கப்பட்டும் இப்பகுதிகளில் விவசாய குடியேற்றத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான அபிவிருத்திக்குரிய வாய்ப்புகள் அம்பாறை, திருகோணமலை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் நிறைய உள்ளன.

இப் பிரதேசத்திலே யாழ்ப்பாணக்குடாநாடு உள்ளடக்கிய வடமேற்கு பகுதியின் புவி அமைப்பு மயோசின் கால சுண்ணாம்புப் பாறைப்படையைக் கொண்டுள்ளதால் தரைக்கீழ் நீர்வளம் மிக்க பகுதியாக அமைந்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் குடித்தொகை செறிவாக இருப்பதற்கு தரைக்கீழ் நீர்வளமே பிரதான காரணமாகும். வருடம் முழுவதும் கிணற்று நீர் பெற்று இங்கு விவசாயம் செய்தல் நீண்ட காலமாக இடம்பெற்று வருகின்றது. இப்பிரதேசத்தின் பிரதான நிலப்பகுதியின்(வன்னி) கிழக்கு,மேற்கு கரையோர மணற்பாங்கான பகுதிகளிலும் உள்ளமைந்த வண்டல்மண் பகுதிகளிலும் ஓரளவு தரைக்கீழ் நீர்வளம் காணப்படுகின்றது. யாழ்ப்பாணக் குடாநாடு போலன்றி குளங்களில் நீர் இருக்கும் காலங்களிலேயே வன்னியில் ஓரளவு தரைக்கீழ் நீரை பெறமுடிகிறது.பெருமளவுக்கு குடிநீர் பெறுவதற்கே இவை பயன்படுத்தப்படுகின்றன.

தமிழர் பாரம்பரியப் பிரதேசம், வருடம் ஏறத்தாழ 1800 மி.மீ (75 அங்குலம்) இற்கு குறைந்த மழைவீழ்ச்சி பெறும் வறண்ட வலயத்தின் பெரும் பாகத்தை உள்ளடக்கியுள்ளது. பொதுவாக இங்கு வருடம் முழுவதும் சராசரியாக உயர்வான வெப்பநிலையான 28 பாகை சென்ரிகிறேட் அளவு நிலவுகிறது. வருடாந்த வெப்ப ஏற்றத்தாழ்வு 21 – 32 பாகை செ.கி ஆக அமைகின்றது. இங்கு வருடத்தின் நான்கு மாதங்களுக்கே குறிப்பிடக்கூடிய மழைவீழ்ச்சியும் கிடைக்கப்பெறுகின்றது. இப்பிரதேசத்தின் வருட சராசரி மழைவீழ்ச்சி 1500 மி.மீ ஆகும். மழைவீழ்ச்சிப் பரம்பலில் பிரதேச வேறுபாடுகள் உள. மன்னார், அம்பாறை மாவட்டங்களின் தென்பகுதிகள் குறைந்தளவிலான 1200 மி.மீ தொடக்கம் 1500 மி.மீ வரை மழை பெற, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்குப் பகுதிகள் உயர்ந்தளவான 1800 மி.மீ அளவு மழையைப் பெறுகின்றன. எனினும் 1200 மி.மீ தொடக்கம் 1800 மி.மீ வரை மழைபெறும் பரப்பளவே அதிகமாகும். யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மாவட்டங்கள் முழுவதும் மன்னார், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிற் பெரும்பாகமும் 1200 மி.மீ தொடக்கம் 1500 மி.மீ மழை பெறும் பகுதிகளாக உள்ளன. யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மாவட்டங்கள் முழுவதும் மன்னார், அம்பாறை, மட்டக்களப்பு, மாவட்டங்களிற் பெரும்பாகமும் வருடத்திற்கு சராசரியாக 1200 மி.மீ தொடக்கம் 1800 மி.மீ மழை பெறும் பகுதிகளாகவே அமைகின்றன.

இப் பிரதேசம் வடகீழ் மொன்சூன் காற்றினாலும், சூறாவளி நடவடிக்கைகளினாலும் ஒக்டோபர் முதல் ஜனவரி வரையான காலப்பகுதியிலேயே அதிகளவு மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது. வருடம் முழுவதும் கிடைக்கப்பெறும் மொத்த மழைவீழ்ச்சியின் 70வீதம் நான்கு மாத காலத்தினுள்ளேயே பெறப்படுவது முக்கிய அம்சமாக உள்ளது. இம் மழைவீழ்ச்சியே இப் பிரதேசத்தின் காலபோக விவசாயச் செய்கைக்கு உதவுகின்றது. மார்ச் முதல் மே வரை மேற்காவுகையினாலும் குறைந்தளவு சூறாவளி நடவடிக்கையினாலும் சிறிதளவு மழைவீழ்ச்சி கிடைக்கின்றது. சிறுபோகச் செய்கைக்கு இம் மழைவீழ்ச்சி ஓரளவுக்கு உதவுகின்றது. யூன் முதல் ஆகஸ்ட் வரை இங்கு அதிக வறட்சி நிலவுகின்றது. இக் காலத்தே வீசும் தென்மேற்கு மொன்சூன் இலங்கையின் ஈரவலயத்திற்கு மழையைக் கொடுத்து இப்பகுதிகளில் வறண்ட காற்றாக வீசுகின்றது.  இவ் வறண்ட காற்றை வடக்கே சோழகக் காற்று என்றும் கிழக்கே சோழகக்கச்சான் காற்று என்றும் வழங்குவர்.

இப் பிரதேசத்தில் யாழ்ப்பாணக்குடாநாடு தவிர ஏனைய பகுதிகளில் பெரும்பாகத்தில் வறண்ட பிரதேசத்தின் முறையான மண் வகையான செங்கபில நிற மண் பரந்துள்ளது. இம் மண் வகை தொல்காலப் பாறைகளிலிருந்து விருத்தியடைந்ததாகும். விவசாயச் செய்கைக்குப் பொருத்தமான வளமான மண்ணான இது மன்னார், மட்டக்களப்பு மாவட்டங்களில் ஓரளவுக்கும் வவுனியா, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் பெருமளவுக்கும் பரந்துள்ளது.  மன்னாரிலிருந்து முல்லைத்தீவு வரை கரையோரத்திற்கு சிறிது உள்ளாக சிவந்த மஞ்சல் லட்சோல் மண், செங்கபில நிறமண் என்பன உள்பரப்பிற்கும் கரையோரப் பகுதிக்கும் இடையே பரந்துள்ளன. யாழ்ப்பாணக்குடாநாட்டின் மத்திய பகுதியிலும் பரந்துள்ள இம்மாதிரியான மண்வகை செம்மண் என வழங்கப்பட்டு குடாநாட்டில் வளமான மண்ணாக கருதப்படுகின்றது. மன்னார் தொட்டு முல்லைத்தீவுக்கு கரையோரமாகவும், யாழ்ப்பாணக்குடாநாட்டின் கரையோரமாகவும் உவர்மண் பரந்துள்ளது. புல் வளருவதற்கே பொருத்தமான இம் மண்வகை விவசாயத்திற்குப் பயன்பட அதிக இரசாயன உரம் பயன்படுத்தப்பட வேண்டும். மட்டக்களப்புக்கு வடக்கேயும் திருகோணமலைக்குத் தெற்கேயும் சுண்ணாம்புக்கலப்பற்ற கபில நிற மண் பரந்துள்ளது. வளம் குறைந்த இம்மண் பரந்தளவு புல் வளர்ச்சிக்கு ஏற்றதாகும். இவை தவிர வடக்கேயும், கிழக்கேயும் காணப்படும் ஆற்றுப்படுக்கைகளிலும் அவற்றின் வெள்ளச்சமவெளிகளிலும் வளம் மிக்க வண்டல் மண் படிவுகள் பரந்துள. மன்னார்தீவு, பூனகரிமுனை, யாழ்ப்பாணக்குடாநாட்டின் கிழக்குப்பகுதி, முல்லைத்தீவிலிருந்து பொத்துவில் வரையான கிழக்கு கரையோரப் பகுதி ஆகியவற்றில் அண்மைக்கால மணற்படிவுகள் பரந்துள்ளன. பொங்குமுகப் படிவுகளான இவை தென்னைச் செய்கைக்குப் பொருத்தமானவை.மணற் குவியலாகக் காட்சி தந்த இவை கட்டுமான வேலைக்காக பெருமளவு அகழப்பட்டுவருவதால் கடல்நீர் தரையினுள் புகும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன.

நிலப்பயன்பாடு

தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தில் உழைக்கும் மக்களில் 60வீதத்தினர் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். இப்பகுதிகளில் பாரம்பரியமாக விவசாயமே முக்கிய பொருளாதார நடவடிக்கையாக இருந்து வருகின்றது. விவசாயத் துறையில் புகுத்தப்பட்ட புதிய தொழில்நுட்ப முறைகள் இப்பகுதி விவசாயிகளிடையே வேகமாகப் பரவியுள்ளன. இப்பிரதேசம் அடங்கியுள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலப்பயன்பாட்டை இரு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். தோட்டச்செய்கையோடு தொடர்பான நிலப்பயன்பாடு எனவும், நெற்செய்கையோடு தொடர்பான நிலப்பயன்பாடு எனவும் இவற்றை வகைப்படுத்தலாம்.

இப்பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பில் 6.1 வீதத்தையும் மொத்தக் குடித்தொகையில் 36 வீதத்தையும் உள்ளடக்கிய யாழ்ப்பாணக்குடாநாட்டுப் பகுதியே தோட்டச் செய்கை அதிகளவுக்கு வளர்ச்சி பெற்ற பகுதியாக உள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் கிடைக்கப்பெறும் தரைகீழ் நீர் வளத்தைப் பயன்படுத்தி இப்பகுதி வாழ் மக்கள் வருடம் முழுவதும் பயிர் செய்கின்றார்கள். மிகவும் சிறிய அளவிலான துண்டு நிலங்களில் செறிவான முறையில் தோட்டப் பயிரச் செய்கை இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையின் வேறு எப்பாகத்திலும் இவ்வகையான செறிந்த பயிர்ச்செய்கை முறை மேற்கொள்ளப்படுவதில்லை. இதன் காரணமாக யாழ்ப்பாணக்குடாநாட்டுப் பகுதி செறிவான குடித்தொகையை கொண்டுள்ளது. தோட்ட நிலங்கள் அதிகளவு கொண்ட பகுதிகளில் சதுரமைலுக்கு 3000 இற்கு மேற்பட்டோர் வாழ்கின்றனர்.

யாழ்ப்பாணக் குடாநாடு ஏறத்தாழ 1025 சதுர கி.மீ பரப்பைக் கொண்டது. இதில் 60 வீதமான பகுதியே மக்கட் பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமைகின்றது. ஏனைய 40 வீதமான பகுதி மணல், பாறை ஆகியவற்றையும் சதுப்பு நிலங்களையும் கொண்டுள்ளதால் பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமையவில்லை. மக்களுக்குப் பயன்படுகின்ற 60 வீதமான நிலப்பகுதியில் மூன்றிலொரு பகுதி குடியிருப்பு நிலங்களாக உள்ளன. பனை, தென்னை ஆகிய மரப்பயிர்கள் மற்றொரு மூன்றிலொரு பகுதியிற் காணப்படுகின்றன. எஞ்சிய பகுதியே நெற்பயிரும், தோட்டப் பயிரும் செய்கை பண்ணப்படும் விவசாயப்பகுதியாகும். அண்மைக்காலங்களில் விவசாய நெல்வயல் நிலங்கள் தோட்டநிலங்களாக மாற்றப்பட்டு வருகின்ற போக்கினையும் தோட்ட நிலங்கள் குடியிருப்பு நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்ற போக்கினையும் அவதானிக்க முடிகின்றது.

இப்பகுதித்தோட்டங்களில் புகையிலை, மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு, காய்கறிகள், திணை வகைகள், வாழை ஆகியன பெருந்தொகையாக விளைவிக்கப்படுகின்றன. இலங்கையின் உபஉணவுத் தேவையின் கணிசமான பங்கு யுத்தத்திற்கு முன்னர் யாழ்ப்பாணக்குடாநாட்டு உற்பத்தியாலேயே பூர்த்தி செய்யப்பட்டது. உதாரணமாக இலங்கையில் வெங்காயச் செய்கைக்குட்பட்ட பரப்பளவில் 38 வீதத்தையும், மிளகாய்ச் செய்கைக்குட்பட்ட பரப்பளவில் 15 வீதத்தையும் யாழ்ப்பாணக்குடாநாடே உற்பத்திசெய்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் விவசாயிகள் புதிய தொழில்நுட்ப முறையினை புகுத்துவதில் பேரார்வம் கொண்டவர்கள். தோட்டச்செய்கைக்கு நீர் இறைக்கும் இயந்திரம,; செயற்கை உரம், கிருமிநாசினி என்பனவற்றை பெருமளவு பயன்படுத்தி விவசாய உற்பத்தியை அதிகரித்துள்ளார்கள். குடித்தொகை அதிகரிப்பும், தோட்டச் செய்கை அதிகரிப்பும் தரைக்கீழ் நீர் வளத்தை மிகையாகப் பயன்படுத்த வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளன. தரைக்கீழ் நீரின் மிகையான பயன்பாட்டினால் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பாகங்களிலும் உவர்நீர் பகுதிகள் அதிகரித்து வருகின்றன. தரைக்கீழ் நீர்வளத்தை பேணுவதற்கு கிடைக்கும் மழை நீரில் பெரும்பகுதி தரையின் கீழ் செல்வதற்கு வழி காணவேண்டும். இதற்கு இப்பகுதிகளின் நீர்த் தேக்கங்கள் ஆழமாக்கப்படுதலும், நீர்த்தேக்கங்களில் தூர் அகற்றுதலும், புதிய நீர்த்தேக்கம் உருவாக்கப்படுதலும் அவசியம். மேலும் இங்கு காணப்படும் பல கடனீரேரிகள் நன்னீர் ஏரிகளாக மாற்றப்படுவதாலும் நற்பயன் விளையும். இந்நடவடிக்கையால் நீர், நிலவளம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு.

யாழ்ப்பாணக் குடாநாடு தவிர்ந்த ஏனைய பகுதிகளின் (வன்னி) நிலப்பயன்பாட்டை தாழ்நிலப்பயன்பாடு மேட்டுநிலப்பயன்பாடென வகைப்படுத்தலாம். மேட்டுநிலப்பயன்பாடு இப்பகுதியில் அதிகம் விருத்தியடையவில்லை. தாழ்நிலப்பயன்பாட்டில் நெற்செய்கையே முக்கிய இடத்தை வகிக்கின்றது. ஆற்றுவடிநிலப்பகுதிகளிலும் நீர்த்தேக்கத்தினை அண்டிய பகுதிகளிலும் வண்டல்மண், களிமண் படிவுகள் காணப்படும் தாழ்வான பகுதிகளிலும் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இப்பகுதிகளில் பழைய பாரம்பரிய கிராமிய விவசாய நிலப்பயன்பாடும், புதிய குடியேற்றத்திட்ட நிலப்பயன்பாடும் வௌ;வேறான பண்புகளைக் கொண்டமைந்துள்ளன. மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை,மட்டக்களப்பு பகுதிகளின் கரையோரமாக பழைய விவசாய நிலப்பரப்புகள் பரந்துள. முன்னர் காடு சூழ்ந்திருந்து நில அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்ட உள்ளமைந்த பகுதிகளில் குடியேற்றத்திட்டங்கள் அமைக்கப்பட்டு அபிவிருத்தி அடைந்துள்ளன.

1935ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட நில அபிவிருத்திச் சட்டத்தின் பின்னர் இப்பகுதிகளில் குடியேற்றத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. பலநோக்கு குடியேற்றத்திட்டம், பாரிய குடியேற்றத்திட்டம், கிராமவிஸ்தரிப்புத் திட்டம், மத்தியவகுப்பார் குடியேற்றத்திட்டம், இளைஞர் குடியேற்றத்திட்டம் ஆகியனவாக இவை அமைக்கப்பட்டுள்ளன. குடியடர்த்தி மிக்க பகுதிகளில் இருந்து மக்களை நகர்த்தவும் நிலமற்றோருக்கு நிலமளிக்கவும் வேலையற்றிருப்போருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் குடியேற்றத்திட்ட உருவாக்கம் ஓரளவு உதவியுள்ளது. அம்பாறையில் கல்லோயாத்திட்டம், மட்டக்களப்பில் உன்னிச்சைக் குளத்திட்டம், மன்னாரில் கட்டுக்கரைக்குளத்திட்டம், கிளிநொச்சியில் இரணைமடுக்குளத்திட்டம், வவுனியாவில் பாவற்குளத்திட்டம், என்பன மாவட்டத்திற்கொன்றான உதாரணங்களாகும். இப்பகுதிகளிலே படித்த இளைஞர்களுக்கென உப உணவு உற்பத்தித் திட்டங்கள் பல ஏற்படுத்தப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்த முத்தையன்கட்டு இளைஞர்திட்டம் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்த விஸ்வமடு, திருவையாறு இளைஞர் திட்டங்கள் என்பன குறிப்பிடத்தக்கன. ஏனைய குடியேற்றத்திட்டங்கள் போலன்றி இளைஞர் திட்டங்கள் பொருளாதார ரீதியில் திருப்தியைத் தருவதாக விருத்தியடைந்துள்ளன. பொதுவாக இப்பிரதேசத்திலே குள நீர்ப்பாசன அடிப்படையில் குடியேற்றத்திட்டங்கள் ஏற்படுத்தி விவசாய உற்பத்தியை அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் நிறைய உள. இந் நடிவடிக்கைகள் குடியடர்த்தி மிக்க யாழ்ப்பாணக்குடாநாடு, மற்றும் வன்னிக் கரையோரப் பகுதிகளிலிருந்து இப்பகுதிகளுக்கு மக்களை நகர்த்தவும் உதவும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் மொத்த நிலம் ஏறத்தாழ 202 977 (2007) கெக்டர் ஆகும். இது இலங்கையின் மொத்த நெல் விளைபரப்பில் 25வீதமாக அமைகின்றது. இப்பிரதேசத்தின் மொத்தநெல் விளைபரப்பில் 75 வீதத்தைக் கிழக்கு மாகாணம் உள்ளடக்கி உள்ளது. மொத்த நெல்விளைநிலத்தில் 44.4 வீதம் பருவகால மழையை நம்பிய மானாவாரி நிலங்களாக உள்ளன. ஏனையவை நீர்ப்பாசன வசதியுடைய குளங்களை அடுத்துள்ளன. பாசனவசதியுடைய நிலங்களில் வருடத்தில் இரு தடவை நெல் விளைவிக்கப்படும்.  இவ்வாறான விளை நிலப்பரப்பு 28 வீதமாக அமைகிறது. பொதுவாக இப்பிரதேசத்தில் அதிகளவு நெல்விளைபரப்பு பருவமழையை நம்பியதாகையால் பருவமழை பிழைத்துவிடும் காலங்களில் நெல் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. நெற்செய்கையில் நிலவும் இந்த நம்பிக்கையற்ற நிலையை மாற்றவும் சிறு போகத்தின்போது அதிகளவு நெல்லை விளைவிக்கவும் ஏலவேயுள்ள விளைநிலப்பரப்பிற்கு பாசனவசதிகள் அதிகரிக்கப்படுதல் அவசியம்.

இப்பகுதி நெற்செய்கையில் புதிய தொழில்நுட்ப முறைகள் புகுத்தப்பட்டுள்ளன. இப்பிரதேசங்களில் உழவு இயந்திரப் பாவனையே பெருமளவு நிலவுகின்றது. சிறந்த கலப்பின உயர் விளைச்சல் தரும் நெல்லினங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் இரசாயன உரம், கிருமிநாசினி, களைகொல்லி, என்பனவற்றின் உபயோகம் நிறைய உள்ளது. விவசாயிகளின் நலனை உத்தேசித்து அரசாங்கமும் பல உதவிகள் அளித்து வருகின்றது.  கடன் உதவி, உத்தரவாத விலைத்திட்டம், சந்தைப்படுத்தும் வசதி, விவசாய ஆலோசனை பெறக்கூடிய அமைப்புகளை உருவாக்குதல் என்பன இவற்றுட் குறிப்பிடத்தக்கன. இவை காரணமாக இப்பகுதிகளில் நெல் விளைச்சல் வருடாவருடம் அதிகரித்து வருகின்றது. சராசரி நெல் விளைச்சல் ஏக்கருக்கு 42 புசலேயாகும்.

மன்னாரில் ஏக்கருக்கு 60 புசல் வரை கிடைக்கின்றது. பொலனறுவையில் ஏக்கருக்குரிய சராசரி உற்பத்தி 80 புசலாக உள்ளது. பாசன வசதிகள் அதிகரிக்கப்படுவதாலும் புதிய தொழில்நுட்ப முறைகளைக் கடைப்பிடிப்பதனால் விளையக்கூடிய பயன்களை விவசாயிகளுக்கு உணரவைப்பதாலும் ஏக்கருக்குரிய உற்பத்தியை இரண்டு மூன்று மடங்காக அதிகரிக்க இயலும். இப்பிரதேச விவசாய செய்கையில் நீர்ப்பற்றாக்குறையே முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதனைத் தீர்ப்பதற்கு புதிய நீர்த்தேக்கங்கள் வாய்ப்பான இடங்களில் அமைக்கப்படுதலும் தூர்ந்த நிலையிலுள்ள குளங்களை புனரமைத்தலும் ஏலவேயுள்ள குளங்களின் நீர்க் கொள்ளளவை கூட்டுதலும் அவசியம். மகாவலி திசைதிருப்புத் திட்டம் கிழக்கே மாதுறுஓயா சார்ந்த பகுதிகளின் விருத்திக்கு வாய்ப்பாக அமையும். வடக்கே திசை திருப்ப திட்டமிட்டுள்ள மகாவலிகங்கை நீர் வடபகுதி நிலங்களுக்கும் கிடைக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படுமாயின் இப்பகுதிகளின் விவசாயம் பெருமளவு விருத்தியுறும் என்பதில் ஜயமில்லை.

கனிப்பொருள் வளம்.

இலங்கையில் கனிப்பொருள் வளம் பொதுவாகக் குறைவாகவே காணப்படுகின்றது.   இதனைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முயற்சிகளும் குறைவே, தமிழர் பாரம்பரியப்பிரதேசத்தைப் பொறுத்தவரையில் சில வாய்ப்பான நிலைமைகள் காணப்படுகின்றன. இப்பிரதேசத்தில் சுண்ணக்கல், களி, உப்பு, இல்மனைற் - மொனசைற், சிலிக்கா, மணல் முதலான கனிப்பொருட்கள் காணப்படுகின்றன. நிலநெய் பெறக்கூடிய சாத்தியக் கூறும் ஆராயப்பட்டு வருகின்றது. புத்தளம் தொடக்கம் பரந்தன் முல்லைத்தீவை இணைக்கும் கோட்டிற்கு வடமேற்கேயுள்ள பகுதிகள் மயோசின் காலத்தே தோன்றிய சுண்ணக்கல் படிவுகளைக் கொண்டு காணப்படுகின்றன. ஏறத்தாழ 2000 கி.மீ பரப்பில் பரந்துள்ள இப்படிவுகள் பலநூறு மீற்றர் ஆழம் வரை காணப்படுகின்றன. புத்தளம், மன்னார் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குப் பகுதிகளில் இவை மேற்பரப்புப் படிவுகளாக அமைந்துள்ளன. இச் சுண்ணக்கல் படிவுகள் பெருந்தொகையாக அகழப்பட்டு காங்கேசன்துறை, புத்தளம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஆலைகளில் சீமேந்து உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டன.

யுத்தத்திற்கு முன் நாட்டின் மிகப்பெரிய சீமேந்து ஆலை காங்கேசன்துறையிலேயே அமைந்திருந்தது. சீமேந்து உற்பத்தி தவிர கண்ணாடி உற்பத்தி, கடதாசி உற்பத்தி, சீனி சுத்திகரிப்பு, நீர் சுத்திகரிப்பு, தோல் பதனிடல் போன்றவற்றுக்கும் சுண்ணக்கல் பயன்படுகின்றது. இப்பிரதேசத்தில் பெருந்தொகையாகக் காணப்படும் இன்னொரு கனிப்பொருள் களியாகும். ஆற்றுப்பள்ளத்தாக்குகள், குளங்களை அண்டிய பகுதிகள், கழிமுகங்கள் ஆகிய பகுதிகளில் களிப்படைகள் பரவலாக உள. செங்கட்டி, ஓடு முதலியவற்றை உற்பத்தி செய்யவும், சீமேந்து உற்பத்திக்குரிய துணைப்பொருளாகவும் களி பயன்படுத்தப்படுகின்றது. முல்லைத்தீவு கல்லோயா ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆலைகள்; செங்கட்டி, ஓடு ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகின்றன. களியைப் பயன்படுத்தி மட்பாண்டப் பொருட்களும் குடிசைத்தொழில் அடிப்படையில் பரவலாகப் பல கிராமங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இப்பிரதேசம் நெடிய கடற்கரையையும் பல குடாக்களையும் கடலேரிகளையும் கொண்டிருப்பதோடு வறண்ட பகுதியாகும், நாட்டின் வேறு எப்பாகத்திலுமில்லாதவாறு பல உப்பளங்கள் இப்பிரதேசத்தில் பரந்துள. ஆனையிறவு, நிலாவெளி, சிவியாதெரு, இருபாலை, கரணவாய், கல்லுண்டாய், முல்லைத்Pவு முதலிய இடங்களில் உப்பு உற்பத்தி செய்யமுடியும். இப்பகுதியிலுள்ள உப்பளங்களில் ஆனையிறவு உப்பளமே மிகப் பெரியதாகும். இவ் உப்பள உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு பரந்தனில் இரசாயனத் தொழிற்சாலை ஒன்றும் இயங்குகிறது. இல்மனைற் படிவுகளும் ஓரளவு மொனசைட், றூரைல், சேர்க்கன் படிவுகளும் புல்மோட்டை, குதிரைமலை, திருக்கோவில் முதலிய கடற்கரையோரப் பகுதி மணற் பரப்புகளில் பரந்துள்ளன. இவை அகழப்பட்டு அங்குள்ள ஆலையில் சுத்தம் செய்யப்பட்டு ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நிகழ்வு நீண்டகாலமாக இடம்பெற்று வருகிறது. இல்மனைற் படிவுகளோடு சிறிதளவு றூரைல் சேர்க்கன் படிவுகள் கலந்து காணப்படுகின்றன. சிலிக்காமணல் சாவகச்சேரியிலும் பருத்தித்துறை தொட்டு திருகோணமலை வரை கடற்கரையோரமாகப் பரந்தும் காணப்படுகின்றது.

சிலிக்கா மணலைப் பயன்படுத்தி கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி செய்யும் ஆலை ஒன்று நாகர் கோயிலில் அமைக்கப்படுவதற்கான ஆரம்ப ஆய்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை தவிர கட்டிடத் தேவைக்கு வேண்டிய கல், மணல் முதலியன இப்பகுதிகளில் பெருமளவுக்குப் பெறக்கூடியதாக உள்ளது. யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட புவிச்சரித ஆய்வுகள் இப்பகுதிகளில் நிலநெய்வளம் இருக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் உண்டென தெரிவிக்கின்றன. அரசாங்கமும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றும் சேர்ந்து இதற்கான அகழ்வாராய்ச்சி  களை அண்மைக்காலத்தில் ஆரம்பித்துள்ளன. இவ் ஆய்வுகள் வெற்றியளிப்பின் எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக இது அமையக்கூடும்.

மேலே குறிப்பிட்ட கனிப்பொருட்களை அடிப்படையாகக் கொண்ட சீமேந்துக் கைத்தொழில், இரசாயனக் கைத்தொழில், மட்பாண்டக் கைத்தொழில், ஓட்டுக் கைத்தொழில், கண்ணாடிக் கைத்தொழில் ஆகியவற்றை விஸ்தரிப்பதற்கும், அபிவிருத்தி செய்வதற்கும் இன்னும் பல பகுதிகளில் புதிய ஆலைகள் அமைப்பதற்கும் நிறைய வாய்ப்புகள் இப்பிரதேசத்தில் உள்ளன.

இப் பிரதேசத்தில் விவசாய வள அடிப்படையிலான பல கைத்தொழில்களும் நிறுவப்படலாம். வாழைச்சேனை கடதாசி உற்பத்தி ஆலை, கந்தளாய், கல்லோயா சீனி உற்பத்தி ஆலைகள், திருகோணமலை மா அரைக்கும் ஆலைகள் என்பன குறிப்பிடத்தக்கன. யாழ்ப்பாணக் குடாநாடு சுருட்டுக் கைத்தொழிலுக்கு பெயர் பெற்ற இடமாக நீண்ட காலமாக விளங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. இங்கு பனை, தென்னை,  வளங்களைப் பயன்படுத்தி கிராமங்கள் தோறும் குடிசைக்கைத்தொழில் அடிப்படையில் பலவகையான பாவனைப் பொருட்களும், அலங்காரப் பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இலங்கையில் தென்னைச் செய்கைக்குட்பட்ட நிலப்பரப்பில் 6வீதத்தை வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளடக்குகின்றன. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களும் இப்பிரதேசத்தின் தென்னைச்செய்கைக்குட்பட்ட நிலப்பரப்பில் 60வீதத்தை அடக்கியுள்ளன. பனைவளம் இப்பிரதேசத்தின் முக்கிய வளங்களுள் ஒன்றாக அமைகின்றது. இலங்கையில் மொத்தம் 70,000 ஏக்கர் பரப்பில் பனைவளம் உள்ளது. இதில் தமிழர் பாரம்பரியப் பிரதேசம் 57,00 ஏக்கர் (82 வீதம்) பரப்பைக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதியில் மாத்திரம் 42,000 ஏக்கர் பரப்பில் (60 வீதம்) பனைவளம் காணப்படுகிறது. யாழ்ப்பாணக்குடாநாட்டு பகுதிவாழ் மக்கள் பாரம்பரியமாக பனை வளத்திலிருந்து அதிக பயன் நுகர்ந்து வருகின்றனர்.

வளமற்ற நிலங்களில் வளரக்கூடிய இப்பனையில் இருந்து 80 இற்கு மேற்பட்ட பயன்கள் பெறலாமென தாலவிலாசம் எனும் நூல் கூறும். அக்கால மக்களின் உணவு, குடிபானத் தேவைகளின் ஒருபகுதியை பனைமரம் பூர்த்தி செய்தது. வீடு கட்டுவதற்கு மரமும் ஓலையும் பனைமரத்திலிருந்தே பெறப்பட்டன. விறகாயும் இதுவே பயன்பட்டது. ஆகவே அன்றைய யாழ்ப்பாணத்துக் கிராம மக்கள் பனையுடன் ஒன்றித்த வாழ்வை மேற்கொண்டிருந்தனர். பிற்காலத்தில் ஓரளவுக்கே பனைவளம் பயன்படுத்தப்பட்டு வந்தது. பனைவளப் பயன்பாட்டினை விருத்தி செய்வதற்காக இலங்கை அரசு பனம்பொருள் அபிவிருத்திச் சபை என்றதோர் அமைப்பினைத் தோற்றுவித்துள்ளது. இவ் அமைப்பு பனைவளப்பயன்பாடு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதோடு பல வேலைத்திட்டங்களை கிராமங்கள் தோறும் உருவாக்கி வருகின்றது. பனைவள அடிப்படையிலான குடிசைக்கைத்தொழில் வளர்ச்சிக்கு இந் நிறுவனம் பெரும் பணியாற்றும் என எதிர்பார்க்கலாம். பனைவளத்தைப் பயன்படுத்தி கைவண்ணப் பொருள் உற்பத்தி, சீனி உற்பத்தி, மதுபான உற்பத்தி, போன்றன அண்மைக்காலத்தில் நன்கு விருத்தியடைந்து வருகின்றன.

கடல் வளம்

கடல் வளத்தைப் பல்வேறு வகையில் பயன்படுத்தலாமாயினும் இங்கு மின்பிடித்தலுக்காகவே இவ்வளம் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. எதிர்காலத்திலே மனிதனின் உணவுத் தேவையில் கணிசமான பங்கினை கடல் வளமே அளிக்குமென நம்பப்படுகின்றது. இலங்கையின் மீன்பிடித்தொழிலின் விருத்திக்கு அடிப்படையான பௌதிக வாய்ப்புகளை வடக்கு கிழக்கு மாகாணங்களே பெருமளவு கொண்டுள்ளன. 1100 மைல் நீள நெடிய கடற்கரையோரத்தை கொண்ட இலங்கையின் கண்டத்திட்டின் பரப்பளவு 12,000 சதுரமைல்களாகும். இதில் 73 வீத பரப்பளவு வடகிழக்கு மாகாணம் சார்ந்துள்ளது. தென்னிந்தியா வரை பரந்துள்ள வடபகுதி கண்டத்திட்டு மட்டும் நாட்டின் மொத்தக் கண்டத்திட்டுப் பரப்பளவில் 57 வீதத்தைக் கொண்டுள்ளது. வட கண்டத்திட்டில் அமைந்துள்ள பேதுரு கடல்மேடை, முத்துக் கடல்மேடை, உவாட்ஸ் கடல்மேடை, என்பன மீன்வளம் மிக்க பகுதிகளாகும். ஆழமற்ற இக்கடல் மேடைகளில் சூரிய ஒளி அடித்தளம் வரை ஊடுருவிச் செல்ல இயல்வதால் மீனுணவான நுண்ணுயிர்களின் வளர்ச்சி இப்பகுதிகளில் அதிகமாகும். இதுவே மீன்வளம் அதிகளவு காணப்படுவதற்குக் காரணமாய் அமைகின்றது. இப்பிரதேசக் கடற்கரையோரங்கள் குடாக்களையும், கடனீரேரிகளையும், பெருமளவு கொண்டுள்ளதால் மீன்பிடித்துறைமுகங்கள் ஏற்படுத்தவும் வசதியை அளிக்கின்றன. தென்மேற்கு மொன்சூன் வேகமாக வீசும் திசைக்கு ஒதுக்குப்புறமாக இப்பிரதேசம் அமைந்துள்ளதாலும் வடக்கு மொன்சூன் மென்மையாக வீசுவதாலும் வருடம் முழுவதும் இப்பகுதிகளில் மீன்பிடித்தல் இடம்பெறுவதற்குரிய சாதகமான நிலை உண்டு.

தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தில் வருடத்திற்கு 12,56980 அந்தர் உடன் மீனும் 1,10099 அந்தர் பதனிடப்பட்ட மீனும் பெறப்படுகின்றது. இலங்கையின் மொத்த உடன் மீன் உற்பத்தியில் இப்பிரதேசம் 52வீதத்தையும் பதனிடப்பட்ட மீன் உற்பத்தியில் 90வீதத்தையும் யுத்த காலத்திற்கு முன்னர் வழங்கிற்று. மீன்பிடித்தொழில் தவிர மன்னாரில் முத்துக்குளித்தலும், மட்டக்களப்பு பகுதிகளில் இறால் பிடித்தலும, யாழ்ப்பாணப் பகுதிகளில் கடலட்டை பதனிடுதலும் குறிப்பிடக்கூடிய வருமானத்தையளித்து வருகின்றன. கடலுணவு உற்பத்தியிலும் மீன்பிடித் தொழிலுக்கு வேண்டிய உபகரண உற்பத்தியிலும் காரைநகரில் அமைந்துள்ள சீநோர் நிறுவனம் குறிப்பிடத்தக்க பணியாற்றி வருகின்றது.

இப்பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலின் புராதன முறைகளே இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை நவீனமயப்படுத்தப்படின் மீன்பிடித் தொழில் பெருமளவு விருத்தியடையக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. இயந்திர வள்ளங்களின் பாவனையை அதிகரித்தல், மீன்பிடித்தலில் புதிய முறைகளை பயிற்றுவித்தல், புதிய மீன்பிடி உபகரணங்களை மீன்பிடி தொழிலாளர்கள்; இலகுவில் பெற வழிவகை செய்தல், மீன்பிடித் துறைமுகங்களை அதிகரித்தல், மீனைப் பழுதடையாது பாதுகாக்கும் வசதிகளையும் போக்குவரத்து வசதிகளையும் அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படின் மீன்பிடித் தொழில் இப்பகுதியின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததோர் தொழிலாக அபிவிருத்தியுறுமென்பது திண்ணம். இது தவிர விலங்கு வேளாண்மையை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் நிறைய உள. பால் உற்பத்தி, இறைச்சி உற்பத்தி, தோல் பதனிடுதல் போன்ற தொழிற்றுறைகள் வடக்கு கிழக்குப் பகுதிகளில் அதிகளவு விருத்தியடையக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.

தமிழர் பாரம்பரியப் பிரதேசத்திலே கல்வித்திறன், தொழில்நுட்ப ஆற்றல் கொண்ட பண்பாட்டில் சிறந்த மக்கள் வாழ்கின்றார்கள். இவர்கள் இப்பிரதேசம் கொண்டுள்ள பொருளாதார வளங்களைத் திட்டமிட்ட முறையில் முறையாகப் பயன்படுத்தினால் விவசாயமும், கைத்தொழிலும் பெருமளவு விருத்தியுறும். தமிழர் தம் பிரதேச அபிவிருத்தியில் ஆர்வம் கொண்டு அயராது உழைப்பார்களேயாயின் தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தை சுயநிறைவுப் பொருளாதார வளம் கொண்ட பகுதியாக மாத்திரமன்றி பல்வேறு மேலதிக உற்பத்திகளை ஏற்றுமதி செய்யக்கூடிய பூமியாக மாற்ற முடியும்.

ஆக்கம்: பேராசிரியர் இரா.சிவசந்திரன்

(புவியியற்றுறை பேராசிரியர்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,

யாழ்ப்பாணம்

E-mail: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Mobile: 0777 266075

Pin It