புலவர் செந்தலை கவுதமன், ஜாதி ஏற்றத்தாழ்வுகள் உருவானது 800 ஆண்டுகளுக்கு முன்பு தான் என்றும், சங்க காலத் தமிழர் வாழ்வில் இருந்த திணை மரபு - ஜாதி மரபு அல்ல என்றும் கடந்த ‘நிமிர்வோம்’ இதழில் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு மாறுபட்ட சிந்தனைகளும் உண்டு. தொல்காப்பியர் காலத்திலேயே ‘வர்ணாஸ்ரம்’ ஊடுறுவத் தொடங்கிவிட்டது என்பதற்கும் சான்றுகள் முன்வைக்கப்படுகின்றன. இது குறித்த இரு தரப்பு விவாதங்களை யும் ‘நிமிர்வோம்’ முன் வைக்கிறது. இது குறித்து கவிஞர் தணிகைச் செல்வன் கட்டுரையை ‘நிமிர்வோம் பதிவு செய்கிறது.

ancient tamilsபழந்தமிழகத்தில் சாதிகள் இல்லை என்பதற்குச் சான்றாகக் குறுந்தொகை நூலில் உள்ள ஒரு பாடலைத்தான் பலர் பயன்படுத்துவது வழக்கம்.

“யாயும் ஞாயும் யாராகியரோ

 எந்தையும் நுந்தையும்

 எம்முறை கேளிர்

 யானும் நீயும் எவ்வழி அறிதும்

 செம்புலப் பெயல் நீர் போல

 அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே”

- அந்தப் பாட்டு ஒரு பெண் தன் காதலனை நோக்கிக் கூறுவதாக அமைந்துள்ளது. அந்தப் பாட்டின் பொருள்:

“என் தாய் யார் என்பதை நீ அறிய மாட்டாய். உன் தாய் யார் என்பது எனக்குத் தெரியாது. அதேபோல் என் தந்தை யார் என்று உனக்கோ, உன் தந்தை யார் என்று எனக்கோ தெரியாது. அவர்கள் உறவு முறையினரா என்பதையும் நாம் அறியோம். இவ்வாறு நம் இரு குடும்பங்களின் பின்னணி எது என்று தெரியாமலே நாம் காதலால் கட்டுண்டோம். செம்மண் நிலத்தில் பெய்கிற மழையின் நீர், மண் நிறத்தைத் தன்னிறமாக ஏற்றுச் செந்நிறமாகிப் பிரிக்க முடியாதபடிக் கலந்து கரைந்து நீரும் நிறமும் ஒன்றிவிடுவது போல நம் இருவரது நெஞ்சங்களும் அன்பு என்ற உணர்வில் சங்கமித்து விட்டன” என்கிறாள் அந்தக் குறுந்தொகைப் பெண்.

இதை எழுதிய புலவர் பெயர் தெரியாததால் அவர் இப்பாட்டில் கையாண்ட உவமையை வைத்தே அவருக்கு ஒரு பெயர் சூட்டி விட்டார்கள், குறுந்தொகையைத் தொகுத்த புலவர்கள். அவர்கள் சூட்டிய பெயர் “செம்புலப் பெயல் நீரர்” என்பதாகும்.

மேற்படிப் பாட்டில் சாதியைக் குறிக்கும் ‘குலம்’ என்ற சொல்லோ ‘குடி’ என்ற சொல்லோ இடம் பெறாததால் சாதிப் பிரிவுகள் நிலைப்படு வதற்கு நெடுங்காலத்துக்கு முன்னர் இயற்றப்பட்ட பாடலாக இருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

தொல்காப்பியம் வகுத்த தொழில் பிரிவினை மனுவின் நால்வருணத் தருமத்தோடு பொருந்து கிறது; எனினும், அரசன், வணிகன், வேளாளன் என்ற தொழிற் பிரிவுகள் இறுக்கம் பெற்றுத் தமிழ்ச் சமூகத்தில் வருணச் சிக்கல்களை உருவாக்கவில்லை.

அதேபோல் உழவாளர், நெசவாளர், படை வீரர், இடையர், வணிகர், மரத்தச்சர், கல் தச்சர், இரும்புக் கொல்லர், பொற் கொல்லர், கொத்த னார், மீனவர் போன்ற தொழிற் பிரிவினரும்,

அரசர்களிடம் பாடுகிற பாணர்கள், கூத்து நிகழ்த்தும் கூத்தர்கள், விறலியர், பொருநர்கள், காலம் கணக்கிடும் கணியர்கள், தூதர்கள், ஒற்றர்கள் போன்ற அரசவைத் தொழிலினரும், தங்களை நாற்பிரிவில் எந்த வருணத்தோடும் பொருத்திக் கொள்ளும் சமூகத் தேவை இல்லாத ஒரு திரவ நிலை நிலவிய காலம் கி.மு. 300 முதல் கி.பி. 200 வரையான 500 ஆண்டுகள் ஆகும். வேதம் ஓதிய வேதியர் குலம் கொண்டிருந்த அரசவைச் செல்வாக்கால் திரவ நிலையிலிருந்த தொழிற் பிரிவுகள் குலப் பிரிவுகளாகத் திடப்பட்டன.

குலப் பிரிவுகளான பிறகும்கூடக் குலங்களுக் கிடையே குலப் போர்கள் நடந்தன என்பதற்கு அகச் சான்று (இலக்கியச் சான்று) அல்லது புறச்சான்று (கல்வெட்டு, செப்பேடு போன்றவை) ஏதுமில்லை.

சோழர் காலத்தில், பிராமணர்கள் எனப்படும் பார்ப்பனர் பிரம்மபுத்திரர்கள் எனப் போற்றப்பட்டு அவர்களுக்காகப் பிரம்ம தேயங்கள் எனப்படும் கிராமங்கள் பூதானமாக அரசர்களால் வழங்கப்பட்டன. இவ்வாறு முழு ஊர்களே காலி செய்யப்பட்டு வழங்கப்பட்ட சதுர்வேரி மங்கலங்கள் என்ற பார்ப்பனக் குடியிருப்புகளை நிலம் பறிகொடுத்த உழவர்கள் நெருப்பிலிட்டுக் கொளுத்திவிட்டார்கள் என்ற வரலாறு பதிவாகியிருக்கிறது. சாதிகளின் வேர் இறங்காத மண்ணாகக் குறுந்தொகைக் காலத்தில் திகழ்ந்தது தமிழகம் என்று நாம் பெருமைப் பட்டாலும், சங்க காலத்திலேயே ‘தீண்டாமை’ என்ற பார்ப்பனியச் சிந்தனையும் நடைமுறையும் தமிழனின் சமூக வாழ்க்கையில் புண்களாகத் தோன்றிவிட்டன என்பது வேதனையான ஒரு வரலாற்றுண்மை.

விலங்குகளின் இறைச்சி, குருதி ஆகியவற் றோடு தொடர்புடையவர்கள் புலையர் எனப் பட்டனர். மாடறுப்பது தோலுரிப்பது போன்றவை புலைத் தொழில்கள் எனப்பட்டன. புலை என்பது இறைச்சி, குருதி, தோல் ஆகிய வற்றைக் குறிக்கும். புலையர் என்றசொல் இழி சொல்லாகவும், புலையர்கள் இழிந்த குலமாகவும், புலைத் தொழில் இழிகுலத் தொழிலாகவும் அடையாளம் பெறப் பார்ப்பனியம் முழு மூச்சாக உழைத்தது.

பெண் பெற்றெடுக்கும் குழந்தை தாயின் குருதியோடும் தொப்புள் கொடியோடும் பிறக்கிறது. அந்தத் தொப்புள் கொடியை அறுத்து, இரத்தங்களைச் சுத்தம் செய்து குழந்தையைக் குளிப்பாட்டும் மருத்துவச்சியின் தொழில் புலைத் தொழில். எனவே அவளைத் தொட்டால் ‘தீட்டு’, தீண்டக் கூடாது என்று தடை போட்டது சனாதன தருமம்.

குழந்தைப் பெற்ற பெண்களின் இரத்தம் ‘தீட்டு’, எனவே அப்பெண்களின் தீட்டுத் துணி களைத் தோய்த்து வெளுத்துத் தருபவர்களும் புலைத் தொழிற்காரிகளே ஆவர் என்றது பர்ப்பனத் தருமம்.

தோல் தொடர்பான மக்கள் அனைவரும் புலை மக்களே. தோலைப் பதப்படுத்துபவன் புலையன்; தோலைச் செருப்பாகத் தைப்பவன் புலையன்; தோலில் பறை செய்பவன் புலையன்; பறை இசைப்பவன் புலையன். தவிர், முழவு, முரசு, மேளம், தண்ணுமை, தப்பு, கொட்டு, துடி போன்ற தோலிசைக் கருவிகள் எல்லாமே புலைக் கருவிகள்; அதை அடிப்பவர்கள் புலையர்கள். எனவே அவர்களின் தீட்டுப் பட்டுவிடாமல் ‘மியூசிக் அகாடமி’ என்ற மேன்மக்கள் சபையைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று காஞ்சி சங்கராச்சாரி கட்டளை இடுகிறார், கஸ்தூரி அய்யங்கார் நிறைவேற்றுகிறார். புலை யர்களின் தோலிசை புறக்கணிக்கப்படுகிறது. இதைச் சங்ககால ‘ஆச்சாரியார்களே’ அன்று நிறைவேற்றி யிருக்கிறார்கள் என்பதும் அதற்குத் தமிழ்ப் பெருங்குடிகளே இரையாகியிருக் கிறார்கள் என்பதும் நமது மண்ணுக்கு நேர்ந்த புண்கள். அந்தப் புண்களே புரையோடிப் புரையோடி இன்று புற்றாகி நிற்கின்றன.

உயிரிழந்த மனிதன் சவமாகிறான். சவம் என்பது புலைப் பொருள். தீண்டாமைக்குரியது. சாவுக்குப் போய் வருகிறவன் வீட்டுக்குள் நுழையும் முன் தலைமுழுக வேண்டும் என்பது ‘நூலோர்’ வகுத்த விதி. அந்த விதிப்படிதான் சவத்தைப் புதைப்பவன் - எரிப்பவன் தீண்டத்தகாத புலையனாகிறான்.

“அங்கமெலாம் குறைந்து அழகு தொழுநோயினராய்

 ஆவுரிக்கும் புலையராய்...”

பசுத் தோல் உரிப்பவன் புலையன்

                              - இது அப்பர் வாக்கு -

தோல் தைப்பவன்/தோல் இசைப்பவன்-புலையன்

பிள்ளைப்பேறு பார்க்கும் மருத்துவச்சி - புலைத்தி

தீட்டுத் துணி வெளுக்கும் வண்ணாத்தி - புலைத்தி

சவம் எரிக்கும் வெட்டியான் - புலையைன்

இவர்களெல்லாம் சங்க இலக்கியங்களில் எவ்வாறு பேசப்படுகிறார்கள் என்று சில பாடல்களைப் பார்க்கலாம் வாருங்கள்.

புறநானூறு - 1

தோல் வாரைப் பயன்படுத்திக் கட்டில் கட்டும் தொழிலாளி தன் ஊசியை எவ்வளவு விரைவாகக் கோத்து வாங்குகிறான் என்பதைச் சாத்தந்தையார் என்ற புலவர் பாடுகிறார். அவர் சிறப்பாகத் தொழில் புரிந்தாலும் இழிசினன் (இழிகுலத்தான்) என்றே இகழ்கிறார். அந்தப் பாடல் வரி இது:

“கட்டில் நிணக்கும் இழிசினன் கையது

 போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதே”

சோழன் பெருநற்கிள்ளி மற்போரில் காட்டும் வேகம், இழிசினன் (சக்கிலி) தோல் தைக் கும் ஊசியின் வேகத்துக்கு நிகராக இருக்கிறது என்கிறார் புலவர். தொழில் திறமை இருந்து என்ன பயன்? தோல் தைப்பதால் இழிந்தவன் என்று சமூகம் கூறும் இகழ்ச்சி நீங்க வழியில்லையே.

புறநானூறு - 2

உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடிய புறப்பாடலில் உள்ள முக்கிய வரிகள்:

“இழிபிறப்பாளன் கருங்கை சிவப்ப வலிதுரந்து

சிலைக்கும் வன்கண் கடுந்துடி”

இழிபிறப்பாளனாகிய புலையன் தன் கருத்த கை சிவக்கும்படி வலிமையாக அடித்து எழுப்பும் துடி என்னும் தோல் இசைக் கருவியின் ஒலி - மலை நாட்டுத் தலைவனின் போர்க் குரலுக்கு நிகராகும் என்று பாடிய புலவர் தோல் பறையை அடிப்பதால் அப்புலையன் இழிபிறப்பாளன் - பிறப்பாலேயே இழிகுலத்தான் என்று கருப்புத் தமிழனைச் சிறுமைப்படுத்துகிறார். இது புலவரின் குற்றமன்று; புறநானூற்றுக் காலத் தமிழ்ச் சமூகத்தின் குற்றம்.

புறநானூறு - 3

தந்துமாறன் என்ற பாண்டியனைச் சங்க வருணர் என்ற புலவர் பாடிய புறப் பாடலின் இறுதி வரிகள் இவை:

“புலையன் ஏவப் புல்மேல் அமர்ந்துண்டு

அழல்வாய்ப் புக்க பின்னும்

பலர்வாய்த் திராஅர் பகுத்துண்டோரே”

சுடலையின் ஈமச்சடங்கின்போது வெட்டி யான் (புலையன்) சொன்னவாறு தர்ப்பைப்புல் மேல் பிண்டம் வைத்துப் படைத்து உண்ட பலர் பின்னர் தாமும் இறந்து அதே சுடலை நெருப்புக்கு இரையானதைக் கண்ட பின்பும் வாழ்வின் நிலையாமையை எண்ணித் திருந்திப் பலருக்கும் உதவி செய்து பகுத்துண்டு வாழும் நெறியற்றவர் களாய் இருக்கிறார்களே (முறைதானா) என்று சுயநலவாதிகளைக் கண்டு பொருமுகிறார் புலவர்.

சுடலை வெட்டியான் என்பவன் மேட்டுக் குடிகளால் ஏவப்படும் புலையன் (தீண்டப் படாதவன்) என்ற சமூகச் சித்திரத்தை வரைந்து காட்டியிருக்கிறார் புறநானூற்றுப் புலவர்.

குறுந்தொகை

கணவனைப் பிரிந்திருக்கும் மனைவிக்கு அவளது தோழி கூறும் ஆறுதலாக அமைந்த இந்தத் குறுந்தொகைப் பாடலை இயற்றிய புலவர் கழார்க்கீரன் எயிற்றியன்.

“நலத் தகைப் புலைத்தி

 பசை தோய்த் தெடுத்துத் தலைப்புடை போக்கித்

 தண்கயத்திட்ட பரூஉத்திரி”

நலச்செறிவான வண்ணாத்தி (புலைத்தி) கஞ்சிப் பசையில் தோய்த்தெடுத்துத் தப்பிய பின் குளிர்ந்த குளத்தில் (கயத்தில்) போட்ட மேல்குலப்ப பெண்ணின் பருத்தி ஆடை (பரூஉத்திரி) என்பது பாட்டின் பொருள்.

இதில் துணி வெளுக்கும் வண்ணாத்தியைப் புலைத்தி (தீண்டத்தகாதவள்) என்று கூறுவது புலவர் அல்லர். அன்றைய சமூக நடைமுறை அவருக்கு என்ன சொல்லித் தந்ததோ அதைத்தான் புலவர் கவிதையாக்கியுள்ளார்.

நற்றிணை-1

பெருங்குன்றூர்க் கிழார் என்ற சங்கப் புலவர் பாடிய குறிஞ்சித் திணைப் பாடல் வரி இது.

“புலையன்

 பேழ்வாய்த் தண்ணுமை இடம்தொட்டன்ன

 அருவி இழிதரும் பெருவiரை நாடன்”

‘அருவி விழுந்து ஒலி எழுப்பும் பெரிய மலையை (பெருவரை) உடைய மலை நாட்டரசன்’ என்று மன்னரைப் புகழ வந்த புலவர், அருவியின் ஒலியை எதற்கு உவமையாகக் கூறுகிறார் என்றால், தண்ணுமை என்ற தோல் வாக்கியத்தை புலையன் ஒருவன் வாசிக்கும்போது எழும் ஒலிதான் அருவி ஒலிக்கு ஈடானது என்று புலையனின் திறமையைப் பாராட்டுகிறார். ஆனால் - புலையன் என்று கூறி அவன் குலத்தைக் கீழ்மைப்படுத்தும்போது தீண்டாமையை நிலை நிறுத்துகிறார்.

நற்றிணை-2

“யாயும் ஞாயும் யாராகியரோ” என்று செம்புலப் பெயல் நீர என்ற புலவர் பாடிய சாதியற்ற சமூகத்துக்கு நேர் எதிரான பாடல் இது. இதைப் பாடிய புலவரின் பெயர் தெரியவில்லை. அந்தப் பாட்டின் பொழிப்புரையைப் படிப்பது சிந்தனைக்குச் சிறந்தது என்பதால் அதை முதலில் கீழே தருகிறேன்:

ஒரு மீனவப் பெண்ணின் தோழி, அப் பெண்ணைக் காதலிக்கும் ஒரு உயர்குடி இளைஞனுக்கு அறிவுரை கூறுவதாக உள்ள பாடல் அது.

“ஐயா, நீ நாடி வந்த இவள் கடற்கரையில் உள்ள ஒரு சிறுகுடியைச் சேர்ந்த பரதவர் மகள் (மீனவப் பெண்); நீயோ தேரேறி வலம் வருகின்றவன்; உயர்க்குடிச் செல்வன்.

“சுறா மீனை அறுத்துத் துண்டங்களாக்கிக் காய வைத்துப் பறவைகளை ஒட்டிக் கொண்டிருக்கிறோம். நாங்கள், எம் மீது மீன் நாற்றம் வீசுகிறது. கடலை நம்பி வாழும் மிகச் சாமானிய வாழ்க்கை எம்முடையது. எனவே உங்களுக்கும் எங்கள் பெண்ணுக்கும் பொருந்தாது. நீங்கள் போய் விடுங்கள்.

“மேலும் உம்மைப் போன்ற செம்மல்கள் (வீரமும் அழகும் பொருந்திய இளைஞர்கள்) எமது குலத்திலேயே உள்ளனர் - இவளை மணக்க. எனவே நீங்கள் போகலாம்.”

இவளே,

கானல் நண்ணிய காமர் சிறுகுடி

நீலநிறப் பெருங்கடல் காக்க உள் புக்கு

மீன் எறிபரதவர் மகளே;

நீயே,

நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க்

கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே

நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி

இனப்புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ

புலவு நாறுதும் செல நின்றீமோ

பெருநீர் விiயும் எம் சிறுநல் வாழ்க்கை

நும்மோடு புரைவதோ அன்றே

எம்மனோரில் செம்மலும் உடைத்தே.

வர்க்க பேதத்தையும் வர்ண பேதத்தையும் இத்தனைத் தெளிவாக அழகாக வெளிச்சப் படுத்தும் சங்கப்பாடல் வேறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

தமிழ்ச் சமூக வரலாற்றில் ‘தீண்டாமை’ என்னும் சமூக முரண்தான் சாதிய முரண்களுக்கும் மூத்த முரணாக இருக்கலாம் எனக் கருதத் தோன்றுகிறது.

சங்ககாலத் தமிழனின் தீண்டாமை உணர்வை நம் சமகாலம் வரை உயிர்ப்போடு எரிய விட்டு வளர்ந்து வருவதில் ஆர்யர்களின் பார்ப்பனியமும் சூத்திரர்களின் பார்ப்பனியமும் சேர்ந்தே அணி வகுத்துள்ளன என்பதற்கு நூற்றுக்கணக்கான சான்றுகள் வரலாற்றின் வழிநெடுக விரவிக் கிடக்கின்றன.

(கட்டுரையாளர் - எழுத்தாளர் - கவிஞர் - அவர் எழுதிய ‘தத்துவத் தலைமை’ நூலிலிருந்து இப்பகுதியை ‘நிமிர்வோம்’ இதழுக்கு அனுப்பி வைத்துள்ளார்.)

Pin It