தொடர்புடைய படைப்புகள்

முன்னுரை

நான்மணிக்கடிகை என்னும் அற இலக்கிய நூலில் அமைந்துள்ள கல்வி குறித்தான சிந்தனைகளைத் தொகுத்து இக்கட்டுரை ஆராய்கிறது. கல்வி ஒரு மனிதருக்கு எவ்வளவு இன்றியமையாத ஒரு ஆயுதமாக உள்ளது என்பதனையும் கல்வியால் பெறப்படும் நன்மைகளும் அது இல்லை என்றால் எவ்வளவு இன்னல்களைச் சந்திக்க நேரிடும் என்ற சமுதாய வெளிப்பாட்டினை நான்மணிக்கடிகை பாடல்களிலிருந்து விளக்கப்பட்டு ஆராய்கிறது இவ்வாய்வுக் கட்டுரை.govt school 403நான்மணிக்கடிகை என்னும் நூல் பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்றாகும். இது அறம் / நீதி செய்திகளைத் தரக்கூடிய நூலாகும். நான்காம் நூற்றாண்டு அளவில் இயற்றப்பட்டது. 101 பாடல்களைக் கொண்ட நூலினை விளம்பி நாகனார் என்னும் புலவர் பாடியுள்ளார். கடவுள் வாழ்த்தாக திருமாலினை வணங்கி புலவர் இப்படைப்பினைத் தொடங்கியுள்ளார்.

ஒவ்வொரு பாடலும் நான்கு கருத்துக்களை வெளிப்படுத்துவனவாக அமைகிறது. நான்கு மணிகளாலான அணிகலனைப் போல அமைந்திருப்பதால் இந்நூலினை நான்மணிக்கடிகை என்று வழங்கியுள்ளார். மனித வாழ்வியலுக்குத் தேவையான நன்னெறிகளை இந்நூல் நான்கு அடிகளில் நான்கு வகையான கருத்துக்களை மக்களுக்கு வழங்குகின்றது. இந்த நூலின் இரண்டு பாடல்களை மட்டும் மேலைநாட்டு அறிஞரான ஜீ.யு.போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இந்த நூலானது வெண்பா என்னும் யாப்பு வடிவத்தில் இயற்றப்பட்டுள்ளது.

இந்த நூலின் ஆசிரியர் விளம்பி நாகனார் ஆவார். விளம்பி என்னும் ஊரில் பிறந்தவராக இருக்கலாம் என்றும் நாகனார் என்ற இயற்பெயர் பெற்றவராவார் என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர். திருமால் குறித்துக் கடவுள் வாழ்த்துப் பாடல் பாடப் பெற்றுள்ளதால் இவர் வைணவர் என்றும் கருதுவதுண்டு. அதேபோல், பொய் பேசாமை, உயிர் கொல்லாமை, புலால் உண்ணாமை போன்ற அறக் கருத்துக்களை எடுத்துரைப்பதால் இவரை சமணர் என்றும் கூறுவர். எது எப்படியாயினும் மனித வாழ்வியலுக்குத் தேவையான நன்னெறிகளை வழங்கிச் சென்றிருந்தாலும் இன்றும் அதன் தேவை உள்ளது என்பதே நான்மணிக்கடிகை நூலின் சிறப்பாகும்.

நான்மணிக்கடிமை எடுத்துரைக்கும் கல்விச் சிறப்புகள்

பதினெண்கீழ்க் கணக்கு வகைகளை எடுரைத்துரைக்கும் தனிப்பாடல் ஒன்றானது, நான்மணிக் கடிகையை, ‘நான்மணி’ என்கிறது. அதாவது,

“நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்

பால்கடுங் கோவை பழமொழி – மாமூலம்

இன்னிலைய வாங் காஞ்சியோடு ஏலாதி என்பவே

கைந்நிலை யுமாம் கீழ்க்கணக்கு”

இவ்வாறு அழைக்கப்பட்டுள்ள நூலானது பல்வேறு வாழ்வியல் செய்திகளை தொகுத்துரைக்கும் கருத்துக் களஞ்சியமாகவும் நன்னெறி பெட்டமாகவும் அமைந்துள்ளது. கல்வி என்னும் நிலையில் அதன் முக்கியத்துவம் மற்றும் அதன்வழிப் பெறப்படும் நன்மை, தீமைகளைக் கூறுகிறது.

கல்வி என்னும் அறிவுச் செல்வம் எந்த இடத்திலும் எக்குடியிலும் எவருக்கும் வாய்க்கும் தன்மை கொண்டதாகும். இன்னாருக்குத் தான் கல்வி அது தொடர்பான சிந்தனைகள் மேம்படும் என்பதில்லை. அவ்வாறிருந்த தமிழ்ச் சமூகத்தினை மறுகட்டமைப்பு செய்யும் விதமாக விளம்பி நாகனார் பாடல் ஒன்றினைப் பாடியுள்ளார். அதாவது, “கள்ளிச்செடியில் அகில் பிறக்கும். மான் வயிற்றில் ஒளி பொருந்திய அரிதாரம் பிறக்கும். மிக்க விலையுடைய முத்துக்கள் பெரிய கடலுள் பிறக்கும். அவ்வாறே நல்லியல்பு கொண்டோர் பிறக்கும் குடியையும் எவராலும் அறிய முடியாது” என்கிறது. அப்பாடல் பின்வருமாறு,

“கள்ளி வயிற்றின் அகில்பிறக்கும் மான்வயிற்றின்

ஒள்ளரி தாரம் பிறக்கும் பெருங்கடலுள்

பல்விலைய முத்தம் பிறக்கும் அறிவார்யார்

நல்லாள் பிறக்குங் குடி”                             (பாடல் – 4)

ஒரு மனிதருக்கு எதுவெல்லாம் துன்பத்தை அளிக்கும் என்பதனைக் கூறும் புலவர் நல்ல குடும்பம் என்பதற்கு மனைவி என்றும் பாழ்பட்ட வீடு என்பதற்கு மனைவியில்லாத வீடு என்றும் கூறுகிறார். நண்பர்கள் இல்லாத நிலை துன்பத்தையும் உண்டாக்கும். அதுபோலவே, கல்வி, கேள்விகளில் சிறந்த சான்றோர்கள் இல்லாத அவையானது பாழ்பட்டது என்றும் அது துன்பத்தைத் தரும் என்று கூறுகிறார்.

“மனைக்குப்பாழ் வாள்நுதல் இன்மை தான்செல்லும்

திசைக்குப்பாழ் நட்டோரை இன்மை இருந்த

அவைக்குப்பாழ் மூத்தோரை இன்மை தனக்குப்பாழ்

கற்றறிவு இல்லா உடம்பு”             (பாடல் – 20)

கற்றறிவில்லாத உடல் பாழ்பட்டது என்ற கடுமையான கூற்றினையும் புலவர் முன்வைக்கின்றார். இது அக்காலத்தில் மனிதர்களுக்குக் கல்வியின் அவசியத்தையும் தேவையையும் உணர்த்திட எழுந்த பாடலாகவே காண முடிகிறது. அதாவது, கல்வி என்ற ஒன்று இன்றும் பலரது வாழ்வினை மடைமாற்றி உள்ளது. கல்வியில்லாத குடும்பத்தினை, ‘இருண்ட வீடு’ என்றும்; கற்றிருந்த பெண்கள் கொண்ட குடும்பத்தினை, ‘குடும்ப விளக்கு’ என்றும் பாரதிதாசன் கூறுவதை இங்கு ஒப்புநோக்கிப் பார்க்கலாம். கல்வியில்லாத பெண்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் குறித்து,

‘கல்வியிலாத பெண்கள் களர்நிலம் போன்றவர் – அங்கு

புல் விளைந்திடலாம்; நல்ல புதல்வர்கள் விளைவதில்லை’

என்று பாவேந்தர் பாரதிதாசன் குறிப்பிடுகின்றார். கல்வியின் முக்கியத்துவத்தைக் காலந்தோறும் வெவ்வேறு புலவர்கள் தம் அறிவுக்கும் காலச் சூழலுக்கும் ஏற்ப விளக்கிக் கொண்டுதான் வந்துள்ளனர் என்றால் அது மிகையாது.

நான்மணிக்கடிகையில், அமைந்த பஃறொடை வெண்பாப் பாடல் இதுவாகும். ஐந்து அடிகளில் கொண்ட பாடல். இதில்

“கற்பக் கழிமடம் அஃகும் மடம் அஃகப்

புற்கந்தீர்ந்து இவ்வுலகின் கோளுணரும் கோளுணர்ந்தால்

தத்துவ மான நெறிபடரும் அந்நெறி

இப்பால் உலகின் இசைநிறீஇ - உப்பால்

உயர்ந்த உலகம் புகும்”                     (பாடல் – 27)

“ஒருவன் அறிவு சார்ந்த நூல்களைக் கற்பதனால் அறியாமை குறையப் பெறுவான். அறியாமை குறைவதால் புல்லறிவு நீங்கி உலக இயற்கையை அறிவான். உலக இயற்கையை உணர மெய்நெறியாகிய வீட்டு நெறி செல்வான். வீட்டு நெறி செல்ல இவ்வுலகில் புகழை நிலை நிறுத்தி மறுமையில் பேரின்பம் அடைவான்” என்கிறது.

          கல்வியானது இப்பிறவியிலும் இல்லை மறுமை என்கிற பிறவியிலும் தொடர்ந்து பயணிக்கும் ஆற்றல் கொண்டதாகும். இதனைத் திருவள்ளுவர்,

          ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

          எழுமையும் ஏமாப் புடைத்து.  (குறள் - 398)

ஒரு பிறவியில் தான் கற்ற கல்வியானது ஏழு பிறவிக்கும் உடன் சென்று பயனளிக்கும் என்கிற கூற்று கல்வியறிவின் முதன்மை நோக்கத்தை இங்கு புலப்படுத்துகிறது. நான்மணிக்கடிகையும் அப்படியான செய்தியினையே மேற்கண்ட பாடல் வழி எடுத்துரைக்கிறது. ஒருவனது அறியாமை அகலவும் அவன் தொடர்ந்து நற்பேறு பெற்றவனாக வாழ வழிவகை செய்யவும் மறுமையிலும் பேரின்பம் அடையும் கல்வி ஒன்றே துணை என்ற கருத்தினை உரைக்கின்றது.

ஒருவரது துன்பமான காலத்தில் அவருக்குத் துணை நிற்கும் கருவி எதுவென்றால், அது கல்வி ஒன்றேயாகும். கல்வி ஒன்றே எப்பொழுதும் எங்கும் ஒருவருக்கு உடனிருக்கும் செல்வமாக அமைகின்றது. இதனை நான்மணிக்கடிமை பின்வரும் பாடல் வழி விளக்குகிறது.

“குழித்துழி நிற்பது நீர்தன்னைப் பல்லோர்

பழித்துழி நிற்பது பாவம் - அழித்துச்

செறிவுழி நிற்பது காமம் தனக்கொன்று

உறுவுழி நிற்பது அறிவு”                (பாடல் – 28)

“பள்ளமான இடத்தில் நீர் நிற்கும். பலரும் பழிக்கும் தீயவனிடம் பாவம் நிற்கும். தவ ஒழுக்கமில்லாதவனிடம் காமம் நிற்கும். துன்பம் வந்தபோது கற்றறிவு துணை நிற்கும்” என்றுரைக்கிறது. கல்வியே ஒருவருக்குச் சிறந்த செல்வமாகவும் ஆபத்தான காலத்தில் துணைநிற்கும் ஆயுதமாக விளங்கும் என்பதனையும் அறிய முடிகிறது.

ஒருவருக்கு நிலையான செல்வம் என்பது கற்றல் செல்வம் ஒன்றே ஆகும். கல்வியின் மூலம் வரக்கூடிய வாழ்வானது முதன்மையானது. அது துணையாக வாழ்வின் நீட்சி வரை வரக்கூடியதாகும். இதனை,

“திருவின் திறலுடையது இல்லை ஒருவற்குக்

கற்றலின் வாய்த்த பிறஇல்லை - எற்றுள்ளும்

இன்மையின் இன்னாதது இல்லைஇல் என்னாத

வன்கையின் வன்பாட்டது இல்”     (பாடல் - 29)

“செல்வத்தைப் போல் ஒருவனுக்கு வலிமையுடையது வேறில்லை. கல்வியைப் போல் துணையாவது பிறிதில்லை. வறுமையைப் போல் துன்பமானது வேறு இல்லை. இல்லை என்று கூறாமல் ஈதலைப் போல் திட்பமானது வேறு இல்லை” என்றுரைக்கின்றார்.

கற்றார் முன் கல்லாதவர்கள் பணிந்து செல்வர். அதுபோல, கல்வி அறிவுடையவர்களுடன் விரும்பி உடனிருப்பவர்கள் அவர்களுக்கு இரக்கம் இல்லாதவராக மாறி துன்பம் செய்யக்கூடியவருக்கு ஒப்பாவர். இதனை,

“கற்றன்னர் கற்றாரைக் காதலர் கண்ணோடார்

செற்றன்னர் செற்றாரைச் சேர்ந்தவர் - தெற்றென

உற்ற துரையாதார் உள்கரந்து பாம்புறையும்

புற்றன்னர் புல்லறிவி னார்”             (பாடல் - 55)

என்ற பாடலானது புலப்படுத்துகிறது.

ஒருவர் ஒரு முறை கற்கும் கல்வியானது ஆழமாகவும் அழுத்தமாகவும் இருக்க வேண்டும். அவற்றினை ஐயமின்றி கற்றிட வேண்டும். தெளிந்த நீரோடைப் போல ஒருவருடைய அறிவானது விளங்குதல் வேண்டும். அப்படியில்லை என்றால் கலங்கிய நீர் போல தான் கல்வியறிவு இருக்கும். அவ்வாறிருந்தால் கற்றும் பயனில்லை. இதனை,

பதிநன்று பல்லார் உறையின் ஒருவன்

மதிநன்று மாசறக் கற்பின் - நுதிமருப்பின்

ஏற்றான்வீ றெய்தும் இனநிரை தான்கொடுக்குஞ்

சோற்றான்வீ றெய்தும் குடி.            (பாடல் எண் - 69)

பல்வேறு செய்திகளைக் கூறுகையிலும் “ஐயந்திரிபறக் கற்பவனால் அவன் அறிவு நன்றாகும்” கல்வியறிவை ஐயமின்றி கற்க வேண்டும் என்கிறார்.

எங்கு, எப்போது, எப்படி செயல்பட வேண்டும் என்ற எண்ணம் கல்வியறிவு பெற்றவனுக்கு இயல்பாய் அமைதல் உண்டு. அதாவது கல்வியறிவு உடையவர்கள் தங்களுக்கு வீழ்ச்சியோ, தளர்ச்சியோ ஏற்பட்டாலும் மேலும் முயன்று அதில் தெளிவு அடைவார்கள். ஆனால், கல்வியறி அற்றவன் தனக்கு ஏற்பட்ட தளர்வினிலிருந்து மீளும் வழியறியாது தட்டுத்தடுமாறி நிற்பான் என்கிறது. ஆகவே, கல்வியே ஒருவருக்குக் கலங்கரை விளங்கமாக அமைகிறது. கல்வியால் ஒருவர் தன்னுடைய நல்வழிகளையும் நல்வழிபடுத்தல்களையும் கொண்டவராக மாறுகிறார். இதனை,

“கற்றான் தளரின் எழுந்திருக்கும் கல்லாத

பேதையான் வீழ்வானேல் கால்முரியும் எல்லாம்

ஒருமைத்தான் செய்த கருவி தெரிவெண்ணின்

பொய்யாவித் தாகி விடும்”11            (பாடல் - 72) என்கிறது.

“கற்றோருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு” என்கிற கூற்றிற்கிணங்க, கற்றோருடன் வாழ்பவர்களுக்கும் அச்சிறப்பு, புகழ் உடன் வந்து சேரும் என்கின்றார். “பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்” என்பது போலவே, “கல்வியறிவுடைய புலவர்களுக்கு தேவர்கள் ஒப்பாவர்; அப்புலவர் வாழும் ஊரில் வாழ்வோர் அத்தேவர்களின் உறவினருக்கு ஒப்பாவர்; அவ்வுறவினருள்ளும் அவர் அருள் பெற்றோர் பெற்றோரை ஒப்பாவர்; அப்புலவரை விரும்புவோர் அவரையே ஒப்பர்” என்று ஒருவருக்கு ஏற்பட்ட கல்வியறிவு அவர் சார்ந்த பலரையும் உடனின்று காக்கும் வல்லமை கொண்டது என்கிற ஆழமான கருத்தினை நான்மணிக்கடிகையின் ஆசிரியர் எடுத்துரைக்கின்றார். அப்பாடல் பின்வருமாறு,

“தேவ ரன்னர் புலவரும் தேவர்

தமரனையர் ஓரூர் உறைவார் - தமருள்ளும்

பெற்றன்னர் பேணி வழிபடுவார் கற்றன்னர்

கற்றாரைக் காத லவர்”                 (பாடல் – 73)

ஒருவனுடைய குடி, குலன் சர்ந்த நலன்கள் என்பது அவர்களின் கல்வி ஒன்றினையே வைத்து மதிப்பிடப்படுகிறது. அதாவது, உயர்குடி, தாழ்குடி என்று குடிப்பெருமையும் அக்குலத்திற்கான ஒழுக்கமும் இரண்டினையும் எடுத்துரைப்பது அவர்கள் கற்ற கல்வி ஒன்றேயாகும். இதனை, பாடல் எண் எட்டானது, “குலனும் குடிமையும் கல்லாமைக் கீழ்ச்சாம்” என்கிறது. அதாவது குலத்தின் உயர்வும் குல ஒழுக்கமும் கல்லாமையால் கெடும் என்கிற அறநெறியைப் பேசுகிறது.

கல்வியில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு இது தான் என் ஊர் என்றும் இது என் ஊர் இல்லை என்றும் பேதம் பார்க்கத் தெரியாது. “கற்றோருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு” என்பதனையே நான்மணிக்கடிகையும் தெளிவுற விளக்குகிறது. அதாவது, ‘கற்றவர்க்கு எவ்வூரும் தம்மூர் தான்’ என்ற கருத்தினை,

“நல்லார்க்கும் தம்மூரென் றூரில்லை நன்னெறிச்

செல்வார்க்கும் தம்மூரென் றூரில்லை - அல்லாக்

கடைகட்கும் தம்மூரென் றூரில்லை தங்கைத்

துடையார்க்கும் எவ்வூரு மூர்” (பாடல் – 81) முன் நிறுத்துகிறது.

கல்வி கற்றவர்கள் எந்த இடத்தில், எந்த நேரத்தில் எந்த சொற்களை எப்படி பேச வேண்டும் என்கிற சிந்தனை உடையவர்களாக இருப்பார்கள். ஆனால், கல்வியறி இல்லாதவர்கள் கால நேரத்தினைக் கணக்கில் கொள்ளாமல் தனக்குத் தோன்றியதை எல்லாம் பேச தன்னையும் தான் சார்ந்தோரையும் துன்பப்படுத்திக் கொள்வார்கள். அப்படி கல்வியறிவு இல்லாதவர்களுக்கு அவர்கள் பேசும் சொற்களே எமனாக மாறும் சூழலும் நிலவும் என்கிறது நான்மணிக்கடிகை.

          “கல்லா ஒருவர்க்குத் தம்வாயிற் சொற்கூற்றம்”           (பாடல் – 82)

“கல்வியறிவு இல்லாதவர்களுக்கு அவர் வாயில் பிறக்கும் சொல்லே அவர்களுக்குக் கூற்றுவனாம்” என்பது இப்பாடல் உணர்த்தும் கல்வியறம் ஆகும்.

அந்தந்தப் பருவத்தில் கிடைக்கும் காய்கறிகள், கனிகள் போன்றவையே உடல் நலத்திற்கு ஒப்பானது. அதுபோல, காலமும் நேரமும் கணக்கில் கொண்டு கல்வியைச் சரியாக கற்றிடல் வேண்டும். இதனை, இளமையில் கல்’ என்றனர். இங்கும் நான்மணிக்கடிகை அவற்றினையே முன் வைக்கிறது.

“இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்

வளமிலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்

கிளைஞரில் போழ்திற் சினம்குற்றம் குற்றம்

தமரல்லார் கையகத் தூண்”            (பாடல் – 83)

இளமையில் கல்லாமையைக் குற்றம் என்ற கருத்தினை முன் வைக்கின்றது. ஒருவேளை, இளமையில் கல்வி கற்க முடியாது போகையில், அவற்றை நினைத்து முதுமையில் மனம் வாடும் சூழல் உருவாகி விடுகிறது. அந்தக் குறையைப் போக்கவே காலத்தோடு பயிர் செய்தல் நலன் என்கிற ஆழமான கருத்தினை எடுத்துரைக்கிறது.

ஒரு குடும்பத்திற்கு அழகு என்பது மக்களைப் பெற்றெடுத்தல் ஆகும். அதுபோன்றே, அம்மக்கலை நன்கு அறிவுடையோர்களாக மாற்றமைடையச் செய்தல் பெற்றோரின் முதன்மைக் கடமையாகும். இதனை நான்மணிக்கடிகை பாடல் விளம்புகிறது.

“மனைக்கு விளக்கம் மடவார் மடவார்

தமக்குத் தகைசால் புதல்வர் மனக்கினிய

காதற் புதல்வர்க்குக் கல்வியே கல்விக்கும்

ஓதிற் புகழ்சால் உணர்வு”      (பாடல் – 101)

அதாவது, “வீட்டுக்கு ஒளி மனைவி. மனைவிக்கு அழகு நன்மக்கள். நன்மக்களுக்கு அழகு கல்வி. கல்விக்கு விளக்கம் மெய்யுணர்வு” என்கிற அறக்கோட்பாட்டினை வெளிப்படுத்துகிறது. கல்வியின் விளக்கமாக உண்மையறிதலும் அவற்றி உணர்ந்து கொள்ளுதலும் என்கிற பயனை மேற்கண்ட பாடலானது எடுத்துரைக்கிறது.

தான் கற்க விட்டாலும் தன் குழந்தைகள் கற்க வேண்டும் என்கிற எண்ணம் இக்கால மனிதர்களிடத்தில் ஆழமாக வேறிரூன்றி உள்ளது. இதனை வரவேற்கும் சூழலில் நான்மணிக்கடிகை பாடப்பெற்ற காலகட்டத்தில் குழந்தைகளுக்கு அறிவுச் செல்வத்தை அளிக்காமல் இருப்பவர்கள் இருந்துள்ளனர். அந்தச் செயல்பாட்டைக் கண்டிக்கும் புலவர், “மக்களைக் கல்லா வளர விடல்தீது” (பாடல் – 92) என்கிறார்.

இதுவரை கல்வியின் தேவை, இன்றியமையாமை போன்ற்வற்றைக் கூறிய புலவர் கல்வி என்பதின் பயன் எதுவெனக் கூறுகையில், ‘நல்லொழுக்கம் என்பது கல்வியின் பயன்’ என்கிறார்.

“ஆசாரம் என்பது கல்வி அறஞ்சேர்ந்து

போகம் உடைமை பொருளாட்சி யார்கண்ணும்

கண்ணோட்டம் இன்மை முறைமை தெரிந்தாள்வான்

உண்ணாட்டம் இன்மையும் இல்”             (பாடல் – 94)

ஆசாரம் என்கிற ஒழுக்கமே கல்வியின் முதன்மை பயனாகும். இன்று இந்த நல்லொழுக்கமின்றிய கல்வியே பரவலாக உள்ளது. வெறும் சான்றிதழ்களே கல்வியின் அளவுகோல்களை நிர்ணயிக்கிறது. நல்லொழுக்கத்துடன் கூடிய கல்வியே ஒருவரை மேன்மையடையச் செய்கிறது.

ஒருவருக்குப் பெருமை என்பது தான் கற்ற கல்வியைக் கொண்டே அளவிடுகிறார். அவ்வாறு கல்வியானது கற்றவர் அவையில் கற்றோருக்குப் பெருமை சேர்ப்பதாகவும் கல்லாதவர்க்கு சிறுமை அளிப்பதாகவும் அமைகிறது. “கற்றவர் கூடிய அவையில் கல்லாதவன் பெருமையடைதல் இல்லை. கல்லாதார் முன்பு கற்றானும் பெருமையடைதல் இல்லை. அறிவிலார் முன்பும் அறிஞர் பெருமையடைதலில்லை” என்பதனைத் திடமாக முன் வைக்கிறது.

“வாலிழையார் முன்னர் வனப்பிலார் பாடிலர்

சாலும் அவைப்படின் கல்லாதான் பாடிலன்

கற்றான் ஒருவனும் பாடிலனே கல்லாதார்

பேதையார் முன்னர்ப் படின்”                   (பாடல் – 96)

கல்வி கற்ற அறிஞர்கள் அறிவற்றவர்கள் முன் தன் பெருமையை எடுத்துரைத்தல் இல்லை. ஆனால், கற்றார் முன் தன் புகழினை எடுத்துரைப்பார்கள். அதுவே, கல்லாதவர்களுக்குப் பெரும் இழக்கானச் செயலாகும்.

முடிவுரை

கல்வியானது ஒருவர்க்கு அணிகலன் போன்றது. அவற்றை யாரும் எங்கும் அணிந்து கொள்ளலாம். அதாவது, பிறர் கண்களால் பார்க்க முடியாது; ஆனால், உணர முடியும். வேறொருவரால் அபரித்து விட முடியாது அல்லது அப்படி நடந்துவிடுமோ என்கிற அச்ச உணர்வும் கொள்ள தேவையில்லை. அப்படியான கல்வி குறித்து நான்மணிக்கடிகை என்னும் அற இலக்கிய நூலானது பல்வேறு செய்திகளை எடுத்துரைக்கிறது.

கல்வியின் தேவை, அவசியம், இன்றியமையாமை, அவற்றின் பயன்கள், அவற்றால் அடையக் கூடிய நற்பேறுகள் அதுபோன்றே கல்வியறிவு இல்லாதவர்களுக்கு சமுதாயத்தில் ஏற்படும் அவலம் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் போன்றவற்றை இவ்வாய்வுக் கட்டுரைத் தெள்ளத் தெளிவாக நான்மணிக்கடிகை பாடல் வழி தெளிவுபடுத்துகிறது.

  • கல்வி என்பது இன்னார்க்கு மட்டும் உரியது என்கிற கால நிலை இருந்தது. அதனை மறுக்கும் வகையில் கல்வியானது எக்குடிப் பிறப்பினும் அங்கு சிறந்தோங்கும் என்கிற கருத்தினைத் தெளிவுபடுத்துகிறது.
  • ஒருவருக்கு உடல் அழகு என்று நினைத்திருந்தால் அந்த உடல் என்பது கற்ற கல்வியே ஆகும் என்கிற உண்மையறிவினையும் உடலுக்கும் மனிதர்க்கும் துணையாக நிற்பது கல்வியறிவு ஒன்றே ஆகும்.
  • ஒருவரது குடியையும் குலத்தையும் அடையாளப்படுத்துவது கல்வி என்கிற ஒன்றே தவற மற்ற ஏதுமில்லை.
  • கல்வியறிவில் சிறந்தவர்களுக்குப் பூமியில் எங்கு சென்றாலும் சிறப்படைவார்கள். அவர்களுக்கு இது தான் சொந்த ஊர் என்றும் இங்கு தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமின்றி உலகில் எங்கும் செல்லும் ஆற்றல் கொண்டவர்களாக கற்றவர்கள் திகழ்கின்றனர்.
  • பெற்றவர்கள் குழந்தைகளுக்கு அளிக்கும் செல்வம் என்ற ஒன்று அது கல்வியே ஆகும். நற்கல்வியை அளிக்கும் தவறும் பெற்றோர்கள் நன்மக்களைப் பெற்றவராகத் திகழ மாட்டார்கள்.
  • கல்வி கற்றோர், கற்றோர் முன் மட்டுமே புகழப்படுவார். ஆனால், கல்வி இல்லாதவர்கள் எங்கும் யாரும் மதிப்பதில்லை. கல்வியே ஒருவரது பெயருக்கும் புகழுக்கும் சான்றாக விளங்குகிறது.
  • கல்வியின் பயன் என்பது ஒழுக்கம் என்கிற சிந்தனையையும் நல்லொழுக்கம் ஒன்றே கற்றவரின் அடையாளமாக உள்ளது என்கிற அறச்சிந்தனையை நான்மணிக்கடிகை வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.

துணைநூல் பட்டியல்

  1. மு. பொன்னுசாமி, சங்க இலக்கியத்தில் மெய்ப்பாட்டு இயக்கம், இந்து பதிப்பகம், கோயமுத்தூர், 1998.
  2. நான்மணிக்கடிகை (மூலமும் பழைய உரையும்), முனைவர் வே. இரா. மாதவன் (பதிப்பாசிரியர்), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2001.
  3. தொ. பரமசிவன் (பதிப்பாசிரியர்), பாரதிதாசன் பாடல்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை,1993
  4. ஞா. தேவநேயப் பாவாணர், திருக்குறள் தமிழ் மரபுரை, இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2011.
  5. தமிழண்ணல், ஒளவையார், (இந்திய இலக்கியச் சிற்பிகள்), சாகித்திய அகாதெமி, புதுடெல்லி, 2016.

- முனைவர் ஜெ. மதிவேந்தன், 

கெளரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை,

அறிஞர் அண்ணா அரசுக் கலைக்கல்லூரி,

செய்யாறு – 604 407. திருவண்ணாமலை மாவட்டம்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.