“...நாம் தொல்காப்பியம், அகத்திணையியல், புறத்திணையியல்களை வைத்துக்கொண்டே சங்கப் பாடல்களைப் பார்க்கின்றோம். சங்க இலக்கியம் பற்றிய நமது பார்வையைத் தொல் காப்பியமும் அதற்கான உரைகளும் தீர்மானித் துள்ளன. தொல்காப்பியப் பொருளதிகாரம் கிடைக்காமல் சங்க இலக்கியப் பாடல்கள் மாத்திரமே கிடைத்திருந்தால், சங்க இலக்கி யங்கள் பற்றிய எமது மதிப்பீடு இப்பொழுது உள்ளதுபோன்றே அமைந்திருக்குமா? என்பது ஒரு சுவாரசியமான வினாவாகும்.’ (2007:47) என்ற பேராசிரியர் கா. சிவத்தம்பியின் கேள்வியுடனேயே இந்தக் கட்டுரையைத் துவங்கலாம் என்று எண்ணுகிறேன். மேற்குறிப்பிட்ட குறிப்பு சங்க இலக்கிய வாசிப்பு சார்ந்த உரையாடல்களின் பெரும் பகுதி ‘தொல்காப்பியம்’ என்ற இலக்கணப் பிரதியையும் அது சார்ந்த உரைமரபுகளோடும் கொண்டுள்ள பிரிப்பறியாப் புணர்வை எடுத்துக்காட்டுவதோடு இலக்கணமயப்பட்ட இலக்கிய வாசிப்பைப் புறக் கணிக்கும் புலமைக்குரல்களையும் கவனப்படுத்துகிறது.

prakash v bookநிறைவைப் பெறாத மேலாய்வுக்களங்கள் மீளாய்வு செய்யப்பட்டுப் புதிய பல கருதுகோள்கள் முன்வைக்கப் படுவது ஆய்வுலகிற்குப் புதியதன்று. ஆனால் ஏற்கனவே கிளர்த்தப்பட்டு முன்மொழியப்பட்ட கருதுகோள்களைத் தானே முதலில் கண்டுபிடித்தது போலவும் அது பற்றிய புதிய கொள்கைகளை மாறுபட்ட கோணத்தில் உருவாக்கிவிட்டதாகவும் எண்ணுகின்ற போக்கும் ஆய்வுலகில் உள்ளது. இதை ஒருவிதமான நோய் என்று கூறுவதில் எந்தத் தவறும் இருக்கமுடியாது.

பரிசல் புத்தக நிலையத்தின் வெளியீடாக, சில மாதங்களுக்கு முன்னர் திணை உணர்வும் பொருளும் என்ற நூல் வெளிவந்துள்ளது. இந்நூலை எழுதிய முனைவர் வெ. பிரகாஷ் இக்கட்டுரை ஆசிரியரின் ஒருசாலை மாணாக்கர் – ஒரு கை மாணவப் பரம் பரையைச் (ஒரே நெறியாள்கையைக் கொண்ட மாணவச் சந்ததிகளைக் குறிப்பிடும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை வழக்கம்) சேர்ந்தவர் என்ற முறையிலும் சங்க இலக்கியத் திணை, துறை தொடர்பாக முனைவர்பட்ட ஆய்வினை மேற்கொண்டவர் என்ற நிலையிலும் இந்நூல் தொடர்பாகப் பேசுவது எனது கடமை என்று எண்ணுகின்றேன்.

-           இந்நூல் இரண்டு கட்டுரைகளையும் முடிவுரைக் கட்டுரையையும் சேர்த்து மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது. முதல்பகுதி அல்லது கட்டுரை திணைக்கோட்பாடு பற்றிப் பேசுகிறது; திணைக்கோட்பாட்டு உருவாக்கத்தின் அடிப்படைகளாகிய முதல், கரு, உரி; திணை வகுப்பில் செய்யப்படவேண்டிய மாற்றம் பற்றியும் குறிப்பிட்டுள்ளது.

-           இரண்டாவது பகுதி கைக்கிளை, பெருந் திணை சார்ந்த உரையாசிரியக் கருத்தியல் களையும் பிற்காலப் பொருளிலக்கணச் செல் நெறிகளில் இவ்விரு கருத்துநிலைகளும் அடைந்த மாற்றத்தையும் எடுத்துக்காட்டி இவ்விரு திணைகளும் அன்பின் ஐந்திணை களோடு ஒப்பவைத்து எண்ணத்தகுந்தவை என்ற மையத்தைக் கொண்டமைந்துள்ளது.

-           மூன்றாவது பகுதி உரிப்பொருளின் முக்கியத் துவத்தை விளக்கி, சங்க இலக்கியத் திணைப் பாகுபாடு உரிப்பொருள் அடிப்படையிலேயே செய்யப்படவேண்டும் என்ற கருத்தை முன் வைக்கிறது.

மேற்குறிப்பிட்ட நூல் பற்றிய விமர்சனமாக/ மறுப்பாக இக்கட்டுரை அமைகிறது. இந்த விமர்சனக் கட்டுரை இரண்டு பகுதிகளாக அமைகிறது. முதல் பகுதி திணைக்கோட்பாடு பற்றி விளக்கப்படும் பகுதியில் எடுத்துக்கூறப்பட்டுள்ள இரண்டு கருதுகோள்கள் மீதான மாற்றுக்கருத்தை முன்வைக்கிறது (பெருந்திணை பற்றிக் குறிக்கும் இடங்களிலும் எமக்குக் கருத்துவேறுபாடுகள் உண்டு எனினும் அவை இக்கட்டுரையில் குறிப்பிடப் படவில்லை. வேறொரு சூழலில் அக்கருத்து முன் வைக்கப்படும்). இரண்டாவது பகுதி மூன்றாம் கட்டுரையில், நண்பர் புறக்கணித்த உரையாசிரியக் கருத்தியலை எடுத்துக்கூறுவதாகவும் அமைகின்றது.

முதலில் தொல்காப்பியத் திணைக்கோட்பாடு பற்றிச் சுருக்கமாக விளங்கிக்கொள்ளலாம்.

சங்க இலக்கியத் திணை மரபு என்ற தொன்மை யான தமிழ்க் கவிதை மரபு பற்றிப் பேசும் ஒவ்வொரு ஆய்வுகளும் தொல்காப்பியரின் திணைக்கோட்பாட்டை விளக்காமல் சங்க இலக்கியத் திணை மரபு குறித்து எடுத்துரைப்பதில்லை. ஏன் எப்பொழுதும் தொல் காப்பியத் திணைக்கோட்பாட்டிலிருந்தே சங்க இலக்கியத் திணைமரபு விளக்கம்பெறுகின்றது? என்ற இயல்பான கேள்வி இங்கு எழும்.

தொல்காப்பியப் பொருளதிகாரம் பற்றிக் குறிப்பிடும்போது, ‘இந்நூல் தொல்தமிழர்களின் வாழ்வியலை எடுத்துக் கூறுகின்றது’ என்ற பொதுக் கருத்து வெகுமக்கள் வெளியில் கூறப்படுவதுண்டு. உண்மையில் தொல்காப்பியர் அவர் காலத்து வாய் மொழிப் பாடல்களைத் தளமாகக்கொண்டு அவற்றின் வகைமாதிரிகளைக் கருத்தில்கொண்டு வாழ்வியல்சார் கருத்தியலோடு அவற்றைத் தொடர்புபடுத்தி வரையறை களையும் சுட்டி, ஒழுங்குநிலைப்படுத்திக் கோட் பாடாகத் தந்துள்ளார்.

தொல்காப்பியரைப் பொறுத்த வரையில் திணைக்கோட்பாடு உருவாக்கம் என்பது குழுச் சமூகத்தின் திணைசார் வாழ்வியலான வாய்மொழிப் பதிவுகளை இலக்கணவிதிகளுக்கு உட்படுத்தித் திட்ட ஒழுங்கமைவுக்குள் கொண்டுவந்து பதிவுசெய்வதற்கான கருவியாக ஒரு கோட்பாட்டினை உருவாக்குதல் என்பதாகும். தொல்காப்பியம் சங்க இலக்கியத்தைப் பிரதிபலிக்கிறது; விதி மீறல்கள் அல்லது சமகாலப் படைப்பாக்கத்திற்கு ஒவ்வாத அல்லது ஏற்கத்தகுந்த புள்ளிகளைப் புறநடையாக விரிவாக்கம் செய்கிறது; தொல்காப்பியப் பொருளதிகார எடுத்துரைப்புகளில் சான்றிலக்கியங்களாக/ மேற்கோள் விளக்கத்திற்காக உரையாசிரியர்கள் சங்க இலக்கியங்களை எடுத்துக் காட்டியது இன்ன பிற காரணங்கள் திணை மரபின் Ôதலைவாசலாகத்’ தொல்காப்பியத்தை இனங்காட்டுகின்றன என்ற விளக்கத்தோடு திணைக்கோட்பாடு பற்றிக் காண்போம்.

திணைஇலக்கியம் படைக்கும்போது எத்தகைய முறையியலைக் கையாளவேண்டும் எது ஏற்றுக்கொள்ளப் படும், எது மாறிவந்தாலும் தவறில்லை என்பதை யெல்லாம் திணைக்கோட்பாட்டில் தொல்காப்பியர் எடுத்துரைத்துள்ளார்.

1.         திணை என்பது முதற்பொருள் என்ற நிலம், பொழுதுகள்; கருப்பொருள்கள், உரிப் பொருள்கள் இணைந்த தன்மையையே குறிக்கிறது (தொல். அகத்.இளம்.3); இதனைத் தன் காலத்துத் திணைஇலக்கியங்களைக் கருத்தில் கொண்டு தொல்காப்பியர் கூறி யுள்ளார். ‘பாடலுட் பயின்று’ வந்துள்ள முதல் கரு உரிப்பொருள்களை ஆராய்ந்து பார்த்தால் பாடும்போது இவை மூன்றும் ஒன்று மற்றதைவிடச் சிறந்து அமையும் என்பது அவர் கருத்தாக உள்ளது.

2.         ஒரு உணர்வு பற்றிக் குறிப்பிடப்படும் இடத்தில்/பாடலில் வேறொரு உணர்வுக் குரிய கருப்பொருள்களும், பெரும்பொழுது, சிறு பொழுதுகளும் வரலாம் (தொல்.அகத். இளம்.15). இவ்வாறு மாறி வரும் கருப் பொருள், பெரும்பொழுது, சிறுபொழுதுகள் எந்த உணர்வைப் பாடல் சுட்டுகிறதோ அந்தத் திணைக்குரியதாக அவற்றைக் கொள்ள வேண்டும் (தொல்.அகத்.இளம்.21).

3.         உரிப்பொருள் மாறி வராது (தொல்.அகத். இளம்.15). அதாவது ஒரு நிலத்திற்கு உரிய உரிப்பொருள் மற்றொரு நிலத்தோடு சேராது. அதாவது குறிஞ்சி என்ற குறியீட்டால் குறிப்பிடப்படும் புணர்தல் நெய்தல் நில வருணனையை ஏற்று வந்தாலும் அதனைக் குறிஞ்சியாக, புணர்தலாகத்தான் கொள்ள வேண்டும்.

4.         நிலம் முற்றிலும் மயங்காது (தொல்.அகத். இளம்.14). இந்த இடம் தொல்காப்பியத் திணைக்கோட்பாட்டில் முக்கியமான இடம். ஏனென்றால், நிலம் என்பது மலை, காடு, கடல் போன்று ஒரு இடத்தை அதாவது நிலவியலின் ஒரு பகுதியைக் குறிக்கும் சொல்லாகத் தொல்காப்பியர் இங்கு இச்சொல்லைக் கையாண்டுள்ளார்.

5.         திணையை உணர்ந்துகொள்வதற்கு உள்ளுறை உவமம், ஏனை உவமம் ஆகியவை துணை செய்யும் (தொல்.அகத்.இளம்.49).

6.         அக இலக்கியங்கள் நாடக வழக்கும் உலகியல் வழக்கும் இணைந்த புலநெறி வழக்காகப் பாடப்படவேண்டும்; பாடுபொருள் கட்ட மைப்பில் பின்பற்றவேண்டிய தலையாய விதியாகத் தொல்காப்பியர் இதனைக் குறிப்பிடுகிறார் (தொல்.அகத்.இளம்.56).

மேற்குறிப்பிட்டவற்றுள் மூன்றாம் கருத்தினை அடிப்படையாக வைத்துத் திணைக்கோட்பாடு பற்றிக் கூறியவர்கள் ஒரு வகை ஒழுக்கம் ஒரே நிலத்தில் தான் நிகழும் என்பது ஏற்றுக்கொள்ள இயலாதது. இது நடைமுறைக்கு, உலகியலுக்கு மாறானது என்ற கருத்துக்களை முன்வைப்பதுண்டு.

ஆனால் தொல் காப்பியர் குறிஞ்சி என்ற குறியீட்டின் மூலம் புணர்தலையும், முல்லை என்ற குறியீட்டின் மூலம் ஆற்றி இருத்தலையும், பாலை என்ற குறியீட்டின் மூலம் பிரிதலையும், நெய்தல் என்ற குறியீட்டின் மூலம் இரங்கலையும் குறிப்பிடுகின்றாரே தவிர ஒழுக்கங் களுக்கு நில உரிமையை அவர் கூறவில்லை1.

•••

திணை: பண்பு அல்ல - தொகுப்புச் சொல்

திணைக்கோட்பாட்டு உருவாக்கத்தின் அடிப்படையைப் பற்றிப் பேசும்போது தொல்காப்பிய நூற்பாக்களுக்கு இளம்பூரணர் அளித்துள்ள உரையை எடுத்துக்காட்டி, திணை என்ற சொல் பண்பைக் கோடிட்டுக் காட்டுவதாக நண்பர் கூறுகின்றார். மேலும் தெய்வத்தையும் இளம்பூரணர் பண்பு என்று முடிவு செய்ததாக இவர் முடிவுசெய்கிறார். தெளிவு கருதி அப்பகுதி இங்குத் தரப்படுகின்றது.

“‘...அப்பெயரெச்சம் பண்பு என்னும் பெயர் கொண்டு ஐந்திணை என்னும் எழுவாய்க்குப் பயனிலையாகி நின்றது என உரைப்ப’ என்று விளக்கம் தந்து, ‘அஃது உரையன்று’ என்று மறுப்பவர்களின் கூற்றையும் தந்து முடிவில் ‘இவ்வுரை இரண்டினும் ஏற்பது அறிந்துகொள்க’ என்று வாசகர்களிடம் முடிவை விடுகின்றார். இளம்பூரணரின் இந்த விளக்கம் திணை பற்றி அவருக்கு இருந்த பொருண்மை முடிவைக் காட்டுகின்றது.

அதாவது திணை என்பது ‘பண்பை’ மையப்படுத்துகின்றது. திணைக்கான பொருளாகப் ‘பண்பு’ என்பதைக் கொண்டார் என்பதைப் பின்வரும் அவரது தொடராலும் உறுதிப்படுத்தலாம்.

‘மாயோன் மேய...’ என்ற சூத்திரத்தில், ‘இது நிறுத்தமுறையானே நிலத்தால் திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று’ என்று தொகை விளக்கம் தருகின்றார்.

‘நிலத்தால் திணையாமாறு’ என்னும் கூற்றை இங்குக் கவனிக்க வேண்டும். திணையை நிலம் என்று இளம்பூரணர் கருதியிருந்தால் இப்படி எழுதியிருக்கமாட்டார்; நிலத்தின் பண்பையே இங்கு அவர் குறிப்பிடுகின்றார்.

 அதே நேரத்தில் நிலப் பண்போடு தொடர்புடைய தெய்வத்தையும் பண்பாகவே முடிவுசெய்கிறார். முதற்பொருளில் ஒன்றான காலத்தைப் பற்றிக் குறிப்பிடும் சூத்திரத்தில், ‘காலத்தால் திணையாமாறு’ என்று எழுதி யதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.” (2016:17)

திணை என்ற சொல் குறித்த தெளிவை நண்பர் இன்னும் பெறவில்லை என்பதையே மேற்குறித்த பகுதி எடுத்துக்காட்டுகின்றது. மேலும் உரையாசிரியக் கருத்துகளை எடுத்தாளும்போது முழுமையான பயில்வு அவசியம் என்பதையும் இங்குச் சுட்டவேண்டியுள்ளது. தொல்காப்பியத்தின் இரண்டாவது நூற்பாவிற்கான உரையை எடுத்துக்காட்டித் திணை என்பது பண்பைக் குறிக்கின்றது என்னும் இவர் இந்த நூற்பாவின் இறுதி உரைப் பகுதியைச் சரியாகக் கவனிக்கவில்லையோ என்று தோன்றுகிறது.

“...எற்றுக்கு? இந்நூலகத்து அகமும் புறமும் ஆகிய உரிப்பொருள் கூறுகின்றாராதலான் புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என அமையுமேயெனின், புறப்பொருட்கண் நிரை கோடலை வெட்சியெனக் குறியிட்டாளு மாகலான் ஈண்டு இப்பொருளையும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என ஆளும் என்க. இதனாற் பயன் என்னயெனின், உரிப்பொருளே திணையென உணர்த்துவாராயின் முதற் பொருளும் கருப்பொருளும் திணையாதல் தோன்றாதாம். அவையெல்லாம் அடக்குதற் பொருட்டு முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்றார் என்பது.” (தொல். அகத்.இளம்.2, 1928:5)

 அதாவது இந்த நூற்பாவில் புணர்தல் பிரிதல் என்றவாறு ஒழுக்கங்களாகக் கூறாமல் நிலங்களாகத் தொல்காப்பியர் ஏன் குறிப்பிட்டார் என்று வினா எழுப்பி அதற்கு புறத்திணையைச் சான்றாகக் காட்டுகிறார் இளம்பூரணர்.

பசுக்கூட்டங்களைக் கவர்ந்துவரும் போரின் தொடக்க நிகழ்வை வெட்சி என்ற குறியீட்டால் குறிப்பிடுவதைப் போலப் புணர்தல் முதலான ஒழுக்க நிலைகளைக் குறிஞ்சி, முல்லை என்று குறியீடாகத் தொல்காப்பியர் குறிப்பதாக இளம்பூரணர் கூறுகிறார். புணர்தல், பிரிதல் முதலான உரிப்பொருள்களை மட்டும் குறிப்பிட்டால் அது மட்டுமே திணையென்ற அர்த்தப் பாடு அதற்குள் அடங்கிவிடும்; திணை என்ற சொல் முதல், கரு, உரிப்பொருள்கள் இணைந்த தன்மையைக் குறிக்காது என்பதாலும் இவ்வாறு குறியீட்டால் சுட்டுவதற்குக் காரணம் கூறுகிறார் இளம்பூரணர்.

திணை என்ற சொல் பண்பைக் குறிக்கும் என்ற கருத்தை நிறுவுவதற்கு ‘நிலத்தால் திணையாமாறு’ (தொல்.அகத்.இளம்.5), ‘காலத்தால் திணையாமாறு’ (தொல்.அகத்.இளம்.6) என்று கூறும் பகுதிகளை எடுத்துக்காட்டுகிறார். ‘திணையை நிலம் என்று இளம்பூரணர் கருதியிருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டார்’ என்றும் நண்பர் கருத்துரைக்கின்றார். ஒழுக்க நிலைகளின் நிகழிடங்களை அல்லது நில இயல்பையே (காடு, மலை...) ஐந்தாம் நூற்பாவின் உரையில் இளம்பூரணர் விளக்குகிறார்.

அடுத்து ஒவ்வொரு ஒழுக்கவகைக்குமான காலத்தை/ பொழுதுகளைச் சிறப்பு நோக்கித் தொல்காப்பியர் குறிப்பிட்டவற்றைக் ‘காலத்தால் திணையாமாறு’ என்று இளம்பூரணர் உணர்த்துகிறார். மேலும் திணை மயக்கம் பற்றிக் குறிப்பிடும் நூற்பாவின் உரையில் (தொல். அகத். இளம்.14) ‘மேல் அதிகரிக்கப்பட்ட நிலத்தினானும் காலத்தினானும் ஆகிய திணை மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று’ என்று கூறுவது, திணை என்பது நிலம், பொழுதுகள், கருப்பொருள்கள், உரிப்பொருள்கள் இணைந்த ஒரு தொகுதியையே குறிக்கும் என்பதையே காட்டுகின்றது. வேறு முறையில் சொல்வதானால் நிலம், பொழுதுகள், கருப்பொருள்கள், உரிப்பொருள்கள் ஆகியவை திணையை நிர்ணயிக்கும் காரணிகள்.

திணை என்ற சொல்லுக்கான வரையறையைத் தொல்காப்பியர் தெளிவாகக் குறிப்பிடவில்லை; அகத்திணைகள் இவை என்று குறிப்பிடும் இடத்திலும் (தொல்.பொருள்.அகத்.1), செய்யுளியலில் செய்யுள் உறுப்புகளில் தொகுத்துச்சொல்லப்பட்ட திணையைத் தனியே விளக்கும்போதும் (தொல்.பொருள்.செய்.316) ஏழு திணைகளை மட்டுமே அவர் குறிப்பிடுகின்றார். இந்தக் காரணத்தினால்தான் திணைக்கோட்பாட்டைப் புரிந்துகொள்வதில் சிக்கல்கள் எழுகின்றன. திணை என்ற சொல் நிலத்தைக் குறிக்கின்றதா? பண்பைக் குறிக்கின்றதா? என்பன போன்ற விவாதங்களும் எழுகின்றன. திணை என்ற சொல் சங்க இலக்கியத்தில் பதினைந்திற்கும் மேற்பட்ட இடங்களில் பயின்று வந்துள்ளது; தொன்மையான குடி/குழுக்களையும் குடியிருப்பையும் குறிப்பதாக இச்சொல் உள்ளது.

குறிஞ்சி, முல்லை முதலான திணைவகைப் பெயர்களும் சங்க இலக்கியத்தில் பல இடங்களில் பயின்று வந்துள்ளன. இவை மலர்களையும் இசை/பண்ணையும் பெரும்பான்மையான இடங்களில் குறிக்கின்றன. சில இடங்களில் நிலத்தைக் குறிப்பதாகவும் உள்ளது.

தொல்காப்பியர் முதல் நூற்பாவில் அகப்பொருள் என்ன என்பது பற்றிக் குறிப்பிடுபோது கைக்கிளை முதலாகப் பெருந்திணை முடிவாகக் குறிப்பிடும் ஏழு ஒழுக்க முறைகளைத் திணை என்றே குறிப்பிடுகிறார் (தொல்.அகத்.இளம்.1).

அடுத்த நூற்பாவில் பாலைத் திணை பற்றிக் குறிப்பிடும்போது கடலால் சூழப்பட்ட இவ்வுலகம் நிலப்பண்பு (முல்லை, குறிஞ்சி, மருதம் நெய்தல்) அடிப்படையில் நான்காகப் பகுக்கப்படும் என்கின்றார்; அதாவது உலகம் நான்குவகையான அமைப்பு முறையைக் கொண்டுள்ளது என்கிறார்.

இந்த இடத்தில் திணையின் வகைமைப் பெயர்களைத் தொல்காப்பியர் நேரடியாக எடுத்தாளவில்லை. எனவே திணை என்ற சொல் மக்கள் குழுக்களைக் குறிப்பதோடு சேர்த்து அவர்களின் வேறுபட்ட ஒழுக்கநிலைகளையும் அவற்றின் நிகழிடங்களையும் குறிப்பிடும் குறிப்பானாகப் பொதுச்சொல்லாகவே தொல்காப்பியத்தில் பயன் படுத்தப்பட்டுள்ளது.

காலம் மாறினாலும் உரிப்பொருள் மாறாது;

காலம் -உரிப்பொருள்: சிறப்பு கருதிய தொடர்பு

‘திணை மயக்குறுதலும் கடிநிலை இலவே, நிலனொருங்கு மயங்குதல் இல்லென மொழிப... (தொல்.அகத்.14) என்று திணை மயக்கம் பற்றித் தொல்காப்பியர் வகைப்படுத்தியுள்ளார். திணை மயக்குறுதல் - அதாவது, ஒரு நிலத்திற்குச் சொல்லப்பட்ட பண்பு (கரு, உரி) மற்ற நிலத்திலும் வரலாம்; ஆனால் நிலம் மட்டும் மாறாது என்பது இதன் கருத்து. இதன் பின்னணியில் காலமும் மாறும் என்பதையும் பெற முடிகிறது. காலம் மாறாது என்று தொல்காப்பியர் குறிப்பிடவும் இல்லை. காலம் மாறினால் (மயங்கி மற்ற நிலத்திற்கு வந்தால்) உரிப்பொருளும் அனைத்து நிலத்திற்கும் மாறி வரும். ஏனென்றால் காலத்தையும் உரிப்பொருளையும் இணைத்தே தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். ... மற்ற உரிப்பொருள்களும் நிலத்தை மையப்படுத்தாமல் காலத்தை மையப்படுத்தியே செயல்படுகின்றது.’ (2016:18, 19)

திணை என்ற சொல்லைப் பண்பு என்று பொருள் கொண்டு - கரு, உரிப்பொருள்களை ஒரு நிலத்தின் பண்பாகக் கொண்டு ஒரு நிலத்திற்கு சொல்லப்பட்ட கரு, உரி மற்ற நிலத்திலும் வரலாம் ஆனால் நிலம் மட்டும் மாறாது என்பதாக இவர் பொருள்கொள்கிறார்.

இவர் கரு, உரிப்பொருள்களை ஒரு நிலத்தின் பண்பை நிர்ணயிக்கும் காரணிகளாகக் கூறுவதை ஏற்கலாம். ஆனால் உரிப்பொருள் மயங்காது என்று தொல்காப்பியர் கூற உரிப்பொருளும் மயங்கும் என்கிறார் நண்பர்.

‘உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே’ என்ற தொல்காப்பியக் கருத்துக்கு எதிராக இங்கு இவர் பொருள்கொண்டு திணைக்கோட்பாட்டையே மாற்றி அமைக்கிறார்.

தொல்காப்பியர் கூறியுள்ள ‘உரிப்பொருள் அல்லன’ என்பது ‘எய்தாதது எய்துவித்தல்’ என்ற விதிப்படி முதற்பொருளையும் கருப்பொருளையும் குறிக்கிறது.

முதற்பொருளில் நிலம் மயங்காது என்று அவரே குறிப்பிடுவதால், பொழுதுகள் மயங்கும் என்பதும் கருப்பொருள்கள் மயங்கும் என்பதும் பெறப்படுகின்றது. திணைகளுக்குக் காலம் குறிப்பிடும்போது தொல் காப்பியர், ‘காரு மாலையு முல்லை’ (தொல்.அகத். இளம்.6), ‘குறிஞ்சி, கூதிர் யாம மென்மனார் புலவர்’(தொல்.அகத்.இளம்.7), ‘வைகறை விடியன் மருதம்’ (தொல். அகத்.இளம்.9), ‘எற்பாடு, நெய்தலான் மெய்பெறத் தோன்றும்’(தொல்.அகத்.இளம்.10), ‘நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு/ முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே’ (தொல். அகத்.இளம்.11) என்று திணை வகைப் பெயர்களைப் பொழுதுகளுடன் தொடர்புபடுத்திக் குறிப்பிட்டுள்ளார்.

பொழுதுகள் பருவ மாற்றத்தால் ஏற்படுவது. பருவ மாற்றம் நிலங்களையும் நிலத்திலுள்ள மா, மரம், புள் முதலானவற்றைப் பாதிக்கும். இந்தப் பருவமாற்றம் மனித உணர்வுநிலைகளையும் பாதிக்கும். ஆனால் ஒழுக்க நிலைகளை/ உரிப்பொருளைக் குறிக்கும் குறியீடாகத்தான் இங்கும் திணைவகைப் பெயர்களைத் தொல்காப்பியர் கையாண்டுள்ளார். இந்தக் காரணத் தினால் தான் தொல்காப்பியர் பொழுதுகளையும் திணை வகைப் பெயர்களைக் குறியீடாகப் பயன்படுத்தி உரிப் பொருளையும் தொடர்புபடுத்திக்கூறியுள்ளார்.

சங்கத் தொகை இலக்கியங்களில் ஒரு நிலத்திற் குரிய பொழுது/காலம் மற்ற நிலங்களிலும் குறிப்பிடப் பட்டுள்ளது. அத்தகைய இடங்களில் காலத்திற்கு ஏற்றார்போல் உரிப்பொருள் மாற்றம் பெறவில்லை. சான்றாகக் குறுந்தொகையில் பதின்மூன்று பாடல்களில்2 முல்லை ஒழுக்கத்திற்குரிய கார் காலம் இடம்பெற்று உள்ளது. இப்பதின்மூன்று பாடல்களில் பதினொரு பாடலில் முல்லை நில வருணனை இடம்பெற்றுள்ளது.

ஆனால் குறுந்.197ஆம் பாடலிலும் கார்கால மழை குறிக்கப்பட்டுள்ளது; அதனோடு குறிஞ்சிக்குரிய கூதிர்பருவமும் இடம்பெற்றுள்ளது3. இப்பாடலுக்கு நெய்தல் என்று திணை குறிக்கப்பட்டுள்ளது. முல்லை, குறிஞ்சித் திணைகளுக்குரிய பொழுதுகள் இடம் பெற்றிருந்தாலும் பாடலின் உரிப்பொருள் இரங்கலுக்கு உரியதாக உள்ளது. இங்கு பொழுதுகள் மயங்கி வந்திருந்தும் உரிப்பொருள் எந்த மாற்றத்தையும் அடையவில்லை.

ஒரு நிலத்திற்குரிய பொழுது மற்ற நில வருணனைக்கும் பயன்படுத்தப்படலாம். இவ்வாறு சங்க இலக்கியத்திற்குள் பல பாடல்கள் உள்ளன (சான்று: அகம்.264:10 முல்லை - கூதிர், குறுந்.47:4 குறிஞ்சி - வேனில், ஐங்.183:4 நெய்தல் - மாலை); ஒவ்வொரு ஒழுக்க முறையும் சிறப்புகருதி ஒவ்வொரு திணைவகைப் பெயரோடு தொடர்புபடுத்தப்பட்டிருப்பதைப் போலவே ஒவ்வொரு பொழுதுகளும் சிறப்புகருதி ஒவ்வொரு ஒழுக்க நிலைகளோடு தொடர்புபடுத்தப் பட்டுள்ளன.

சான்றாக, கார்கால மாலை துணையைப் பிரிந்தவர்களின் பிரிவுத் துன்பத்தை மிகுதிப்படுத்தும். அத்தகைய சூழலிலும் தலைவி தலைவனின் பிரிவை எண்ணி மனம் வேறுபடாது ஆற்றியிருப்பது சிறப்பு. இதுதான் முல்லை உரிப்பொருள். இதனால் கூதிர், முன்பனி - யாமப் பொழுதுகளில் புணர்தல்; பின்பனி, வேனில் - நண்பகல் பொழுதுகளில் பிரிவு; கார்-மாலைப் பொழுதுகளில் ஆற்றி இருத்தல்; அறுவகைப் பெரும் பொழுது - வைகறை, விடியல் பொழுதுகளில் ஊடல்; அறுவகைப்பெரும்பொழுது- எற்படு பொழுதுகளில் இரங்கல் உணர்வுகள் மட்டுமே தோன்றும் என்பது பொருளல்ல.

உண்மையில் நிலங்களுக்குச் சொன்ன வரையறைப்படியே செய்யுள் படைத்தால் அது ஒரு வாய்ப்பாடு போலத்தான் அமையும்; அதில் இலக்கிய இன்பம் இருக்காது.

ஒருவர் மற்றொருவருடன் இயல்பாகப் பேசுவதுபோல அமைந்தவையே நமது திணை இலக்கியங்கள். ஒரு தலைவி தனது பிரிவுத் துயரை எடுத்துக்கூறுகிறாள் என்றால் வேனில் காலக் கொடுமையை எடுத்துக்கூறுவதாகவே எல்லா கவிஞர் களும் பாடல் படைக்கமுடியாது; படைத்தாலும் அது சுவைக்காது.

எனவே உரிப்பொருள்/ ஒழுக்க நிலைகள் நிலத்தையோ காலத்தையோ மையப்படுத்தவில்லை. அவை மனித உணர்வுகளுக்கு ஏற்ப மாறுபடும். சிறப்புகருதியே அவை ஒவ்வொரு ஒழுக்கநிலைகளோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. பாடலில் எந்த உணர்வு கூறப்பட்டுள்ளதோ அந்த உணர்வினைக் குறிக்கின்ற குறிப்பானாகவே குறிஞ்சி முதலான திணைவகைப் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன; குறிக்கப்பட வேண்டும்.

புறக்கணிக்கப்பட்ட உரையாசிரியர்கள்

திணை இலக்கியப் பாடல்கள் பல பன்முகத்தன்மை கொண்டவையாக அமைகின்றன. இதற்குக்காரணம் அதன் கோட்பாட்டு வடிவம். ஒருவகையான ஒழுக்க முறையைப் பற்றிப் படைக்கும்போது வேறு நிலத்திற் குரிய பொழுதுகள், கருப்பொருள்கள் அதில் இடம் பெறலாம் என்பது கோட்பாடு என்ற நிலையையும் தாண்டி படைப்பாளனின் படைப்பு மனநிலையைப் புரிந்துகொண்டதையும் சுட்டுகிறது. ஒவ்வொரு படைப்பாளனும் ஒவ்வொரு முறைமையைப் பயன் படுத்துவான். உவமை, உத்தி, மொழிநிலைகளில் அது அவனின் தனித்தன்மையைக் காட்டிநிற்கும்.

ஒருவேளை கவிஞன் சொல்லவந்த பொருளை நேரிடையாக எடுத்துக் கூறியிருந்தால் அது ஒரு சாதாரண பாடலாகவே அமைந்துவிடும். உணர்வை வெளிப் படுத்தக் கைக்கொள்ளப்பட்ட மாறுபட்ட இயற்கைப் பின்னணியே பாடலின் உணர்வைத்தாங்கிய உடலாக அமைந்துள்ளது.

 அந்த உடலை உலகியலுக்கு ஏற்றாற் போலவே படைப்பாளன் படைக்கிறான். சான்றாக, குருந்த மரம் முல்லைக்குரிய கருப்பொருள், யானை குறிஞ்சிக்குரிய கருப்பொருள். வரிமணல் நெய்தல் நிலத்திற்கு உரிது. இவை இலக்கியக்கோட்பாட்டின்படி ஒரே நிலத்திற்கு உரியது அல்ல; ஆனால் உலகியலில் அவ்வாறுதான் இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை.

எனவேதான் இப்படி முல்லை, குறிஞ்சி, நெய்தல் கருப்பொருளைக் கொண்ட பாடல் அகநானூற்றில் இடம்பெற்றுள்ளது (அகம்.304)4 நாடக வழக்கும் உலகியல் வழக்கும் இணைந்த புலனெறி வழக்காகவே படைப்பு அமையவேண்டும் என்கிறது தொல்காப்பியக் கவிதையியல். இதுதான் எதார்த்தமும் கூட.

சங்க இலக்கியப் பாடல்களின் இந்தப் பன்முகத் தன்மையை உரையாசிரியர்கள் ஏற்கனவே குறிப்பிட்டுச் சென்றுள்ளனர். சான்றாக,

இளம்பூரணர்,

-           அகம்.164 - பிரிதற் பகுதியாகி பாசறைப் புலம்பலெனினும் நிலம்பற்றி முல்லையா யிற்று (தொல். அகத்.இளம்.24).

-           ‘மலிதிரை யூர்ந்துதண் மண்கடல் வெளவலின்’ என்னும் முல்லைக்கலி (கலி.104) புணர்தற் பொருண்மைத்தாயினும் முல்லைக்குரிய கருப்பொருளான் வருதலின் முல்லையாயிற்று (தொல். அகத்.இளம்.24).

-           உயர்கரைக் கானியாற் றவிரற ஐங்.361 - இது புணர்தற்பொருளாயினும் கருப்பொருளாற் பாலையாயிற்று (தொல்.அகத்.இளம்.24).

-           ‘சிலைவிற் பகழிச் செந்துவ ராடை’ (ஐங்.363) என்னும் பாட்டினுள் ‘கொலைவி லெயினர் தங்கை’ எனப் புணர்தற்பொருண்மை வந்ததா யினும் பாலைக்குரிய மக்கட்பெயர் கூறுதலிற் பாலையாயிற்று (தொல்.அகத்.இளம்.24).

பேராசிரியர்,

-           அகம்.9 - என்றவழிக் குறிஞ்சிக்கும் முல்லைக்கும் ஏற்றபொருள் தத்தம் மரபிற்றாய் வந்தன பலவுங் கண்டுகொள்க (தொல்.செய்.பேரா.392).

-           அகம்.9 - என்றாற்போலச் செய்யுள் செய்தவன் தானே வகுப்பனவெல்லாங்கோடல்; இது பாலைப் பாட்டினுள் வந்ததாயினும் முல்லை முதலாயவற்றுக்கும் பொதுவாமென்பது. பொதுமையென்பது எல்லா உரிப் பொருட்கும் ஏற்கப் பல்வேறு வகையாற் செய்தல் (தொல். செய்.பேரா.520).

நச்சினார்க்கினியர்,

- ஐங்.240, 245, 283 - இவை குறிஞ்சிக்கண் மருதம் நிகழ்ந்தன (தொல்.அகத்.நச்.12).

-           ஐங்.366 - இது பாலையிற் குறிஞ்சி (தொல். அகத். நச்.12).

-           ஐங்.369, 370 - பாலைக்கண் மருதம் நிகழ்ந்தன (தொல்.அகத். நச்.12).

-           ‘அருந்தவ மற்றியார்’ என்னும் பாலைக்கலியும் (கலி.30) அது (பாலைக்கண் மருதம் நிகழ்ந்தன.) (தொல்.அகத். நச்.12).

-           ஐங். 101 - இது நெய்தலிற் குறிஞ்சி (தொல். அகத். நச்.12).

-           ‘புனையிழை நோக்கியும்’ என்னும் மருதக் கலியும் அது (இவை மருதத்துக் குறிஞ்சி நிகழ்ந்தன.) (தொல்.அகத். நச்.12).

-           அகம்.156 - (இவை மருதத்துக் குறிஞ்சி நிகழ்ந்தன.) (தொல்.அகத். நச்.12).

இவ்வாறு சங்க இலக்கியப்பாடல்கள் நிலத்தால் ஒரு திணையையும் ஒழுக்க முறையால்/உரிப்பொருளால் ஒருதிணையையும் கொண்டுள்ள இத்தன்மையை மூன்று உரையாசிரியர்களும் தங்கள் உரையில் குறிப்பிட்டு உள்ளனர். இந்தத் தன்மையைத் தனது நூலில் எடுத்துக்காட்டிய நண்பர் ஒரு இடத்தில் கூட உரையாசிரியர்களின் இந்த உயிரோட்டமான, துல்லியமான, நிறைவான புரிதலைப் பற்றி எடுத்துக்கூறவில்லை. மாறாக இவற்றைத் தானே கண்டறிந்ததைப் போலவே முன்மொழிந்துள்ளார். இந்தப் போக்கு ஆய்வு உலகில் ஏற்கத்தகுந்ததல்ல.

திணைக்கோட்பாடு - திணை வகுப்புமுறைச் சிக்கல்கள்

எட்டுத்தொகைப் பாடல்களின் திணையமைப்புமுறைச் சிக்கலைப்பற்றிக் குறிப்பிட்டு, ‘சங்கக் கவிதைகளில் குறிக்கப்பட்டுள்ள உணர்வுகளின் நிமித்தங்கள் விளங்காத காரணத்தால் திணைப் பகுப்புச் செய்தோர் சிக்கலை ஏற்படுத்தியுள்ளனர். ... இச்சிக்கலைத் தவிர்க்க தொல்காப்பியரின் முதல் - கரு - உரி என்னும் முறையியலை, உரி - கரு - முதல் என்ற வரிசை முறை மாற்றிப் பாடலை அணுகவேண்டும்’ (2016:92, 97) என்று காரணத்தையும் அதற்கான தீர்வாக வரிசைமுறை மாற்றத்தையும் முன்வைக்கிறார்.

சங்கப் பாடல்களின் அடிப்படைப் பொருண்மையும் திணைப்பகுப்பும் பல இடங்களில் ஒன்றுபடுவதில்லை; பாடல்களுக்கான திணைப்பகுப்பு பாடலின் அடிப்படைப் பொருண்மையை விளக்குவதாக அமையவில்லை.

இந்த நிலை திணையமைப்பைப் பேணாமல் தொகுக்கப்பட்ட தொகை நூல்கள் மட்டுமல்லாமல் திணைப்பாகுபாட்டு முறையியலோடு தொகுக்கப்பட்ட அகநானூற்றிலும் படைப்பு நிலையிலேயே திணை கைக்கொள்ளப்பட்ட ஐங்குறுநூற்றிலும் உள்ளது.

தொல்காப்பியர் திணையை வகுப்பதற்கான முறையியலைச் சொல்லவில்லை; சொல்லவேண்டிய அவசியமும் இல்லை - அது அவர் வேலையும் இல்லை. ஒரு இலக்கியத்தை எப்படிப் படித்துச் சுவைக்க வேண்டும் என்று கூறுவது இலக்கண நூலின் கடமையன்று. மாறாக வாசிப்பவருக்குக் கோட்பாட்டுத் தெளிவை உருவாக்கிவிட்டாலே சுவைப்பதற்கான வழியைத் தந்ததாகும்.

ஆனால், உரையாசிரியர்கள் தங்கள் உரையில் இது பற்றிப் பேசியுள்ளனர். முதல் - கரு - உரி என்ற முறைமையில் திணையைக் குறிக்கலாம் என்று திணைவகுப்பு பற்றி முதலில் குறிப்பிடுபவர் இளம்பூரணர்5. இது நண்பரின் கவனத்திற்கு வரவில்லை என்பதாலோ என்னவோ இதனைத் தனது நூலில் எந்த இடத்திலும் அவர் குறிப்பிடவில்லை.

பிற்காலப் பொருளிலக்கண நூல்கள் தொல்காப்பியத்தைப் பின்பற்றியதுபோலவே அதன் உரைகளையும் பின்பற்றியுள்ளன. சங்கத் தொகை களுக்குத் திணை, துறை வகுத்த உரைக்குறிப்பாசிரியர் களும் இளம்பூரணத்தைப் பின்பற்றியுள்ளனர் என்பதும் தெரிகிறது.

தொகை இலக்கியத் திணை வகுப்புமுறையில் உரிப்பொருள் கவனப்படுத்தப்படவில்லை (இருபதாம் நூற்றாண்டுப் பதிப்பாசிரியர்கள் வரை) என்ற முக்கியமான கருத்தியலை விளக்குவதாகக் கட்டுரை யாளரின் முனைவர்பட்ட ஆய்வேட்டின் ‘பதிப்பாசிரிய மரபு’ என்ற இயல் அமைந்துள்ளது.

நண்பர் தனது முதுமுனைவர் பட்ட ஆய்வினை நிகழ்த்துகின்ற பாண்டிச்சேரியில் தாகூர் கலைக்கல்லூரியும் பிரெஞ்சு ஆய்வு நிறுவன இந்தியவியல் துறையும் இணைந்து Ôபல்துறைநோக்கில் தொல்காப்பியம்’ என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கு ஒன்றை நிகழ்த்தியது.

2013ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இக்கருத்தரங்கிலும் திணைக் கோட்பாடு - திணை வகுப்புமுறையில் உள்ள சிக்கல்கள் பற்றி, ‘தொல்காப்பியத் திணைக்கோட்பாடு - மீளாய்வு (வாசிப்பு வெளிப்பாடுகளை முன்வைத்து)’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை (2013:78-82) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. என்ன காரணத்தாலோ இவை இரண்டும் ஆய்வாளரின் கவனத்தைப் பெறவில்லை.

இதுபோலவே, உங்கள் நூலகத்தில் கடைசி கட்டுரை எழுதும் நண்பரும் ஜுன் மாத இதழில் ‘ஆனந்தக் குற்றமும் சங்கப் பாடல் தொகுப்பு முறையும்’ என்ற கட்டுரையை எழுதியுள்ளார். அதில், “பாடலின் பொருளே’ தொகுப்பின் முதன்மைக் கூறாகக் கொள்ளப்பட்டுள்ளமை வெளிப்படுகின்றது.

இதுநாள் வரையில் சங்கப்பாடல் தொகுப்பு வரலாற்றை எழுதியவர்கள் இந்தச் செய்தியைக் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.’ (உங்கள் நூலகம், ஜுன் 2016:82) என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த்தொகுப்பு மரபு: சங்க இலக்கியம் - எட்டுத்தொகை என்ற பெயரில் சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ் இலக்கியத் துறையில் கட்டுரையாளரால், நிகழ்த்தப்பட்ட ஆய்வின்6 ‘தொகுப்பு மரபு’ என்னும் முதல் இயலில் பாடலின் பொருளும் தொகுப்பாசிரியர்களால் கவனத்தில் கொள்ளப்பட்டது என்பது விளக்கப்பட்டுள்ளது என்பதை ஆய்வாளருக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

இப்படி, ஆய்வுலகப் போக்குகள் பற்றிய முழுமையான பார்வை இல்லாமல் தான்தோன்றித்தனமாகக் கருத்துகளை அள்ளித்தெளிக்கும்போக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக உள்ளது.

அடிக்குறிப்புகள்

1.         இன்பமு மிடும்பையும் புணர்வும் பிரிவு/ மொழுக்கமு மென்றிவை யிழுக்குநெறி யின்றி/ யிதுவா கித்திணைக் குரிப்பொ ளென்னாது/ பொதுவாய் நிற்றல் பொருள்வகை யென்ப. நிறுத்தமுறையானே பொருள்வகை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இன்பமுந் துன்பமும் புணர்வும் பிரிவும் ஒழுக்கமுமென்று சொல்லப்பட்டவை வழுவுநெறி யின்றி இத்திணைக்குரிய பொருள் இப் பொருளென்னாது எல்லாப் பொருட்கும் பொதுவாகி நிற்கும் பொருளே பொருள்வகையாம் என்றவாறு (தொல்.இளம்.செய்.509, 1935:453).

2.         (குறுந்.21, 65, 66, 126, 148, 162, 186, 188, 197, 233, 251, 282, 382)

3.         யாது செய்வாம்கொல் தோழி நோதக/ நீர்எதிர் கருவிய கார்எதிர் கிளைமழை / ஊதையம் குளிரொடு பேதுற்று மயங்கிய/ கூதிர் உருவின் கூற்றம் / காதலர்ப் பிரிந்து எற்குறித்து வருமே (குறுந்.197, கச்சிப்பேட்டு நன்னாகையார்).

4.         இருவிசும்பு இவர்ந்த கருவி மாமழை/ நீர்செறி நுங்கின் கண்சிதர்ந் தவைபோல்/ சூர்பனிப் பன்ன தண்வரல் ஆலியடு/ பரூஉப்பெயல் அழிதுளி தலைஇ, வான்நவின்று, குரூஉத்துளி பொழிந்த பெரும்புலர் வைகறை, செய்துவிட்டன்ன செந்நில மருங்கில்/ செறித்து நிறுத்தன்ன தெள்அறல் பருகி/ சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை/ வலம்திரி மருப்பின் அண்ணல் இரலையடு/ அலங்குசினைக் குருந்தின் அல்குநிழல் வதிய/ சுரும்பு இமிர்பு ஊத பிடவுத் தளைஅவிழ/ அரும்பெரி மஞ்ஞை ஆல வரிமணல்/ மணமிடைப் பவளம் போல அணிமிகக்/ காயாஞ் செம்மல் தாஅய் பலஉடன்/ ஈயல் மூதாய் ஈர்ம்புறம் வரிப்ப/ புலன்அணி கொண்ட கார்எதிர் காலை/ ஏந்துகோட்டு யானை வேந்தன் பாசறை/ வினையடு வேறுபுலத்து அல்கி நன்றும்/ அறவர் அல்லர்நம் அருளா தோர்என/ நம்நோய் தன்வயின் அறியாள்/ எம்நொந்து புலக்கும்கொல் மாஅயோளே (அகம்.304, இடைக்காடனார்)

5.         முறைமையாற் சிறத்தலாவது, யாதானும் ஒரு செய்யுட்கண் முதற்பொருளும் கருப்பொருளும் உரிப்பொருளும் வரின், முதற்பொருளால் திணையாகுமென்பதூஉம், முதற்பொரு ளழிய ஏனையிரண்டும் வரின் கருப்பொருளால் திணையாகுமென்பதூஉம், முதற்பொரு ளழிய ஏனை யிரண்டும் வரின் கருப்பொருளால் திணையாகு மென்பதூஉம், உரிப்பொருள்தானே வரின் அதனால் திணையாகு மென்பதூஉமாம் (தொல்.அகத்.இளம்.3, 1928:5).

6.         சங்க இலக்கியங்களை, குறைந்தபட்சம் எட்டுத்தொகையை மட்டுமாவது முழுமையாக வாசிக்கும்படியாக எனது ஆய்வுப்பரப்பு அமையவேண்டும் என்று கேட்டபோது, எட்டுத்தொகையின் பாடல் தவிர்ந்த பிற கூறுகளை ஆய்வுக்களமாகத் தெரிந்தெடுத்து வழங்கியவர் பேராசிரியர் வீ. அரசு. ஒவ்வொரு மாதமும் தனது முனைவர்பட்ட ஆய்வாளர்களோடு கலந்து உரையாடு வதை வழமையாகக் கொண்டிருந்த பேராசிரியர், செந்நெறிப் பின்னணியைக் கொண்ட சங்க இலக்கியத் திற்குத் திணை, துறை உள்ளிட்ட கூறுகள் அவசிமா என்பது பற்றி நிகழ்த்திய உரையாடல்கள் இங்குக் குறிப்பிடத்தகுந்தது.

துணை நூல்கள்:

1) 1928, தொல்காப்பியம், இளம்பூரணம், பொருளதிகாரம் (அகத்திணையியல், புறத்திணையியல்), வ.உ. சிதம்பரம் பிள்ளை (பதி.), வேலாயுதம் பிரிண்டிங் பிரஸ், தூத்துக்குடி.

2)         1935, தொல்காப்பியம், இளம்பூரணம், பொருளதிகாரம் (மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல்), வ.உ. சிதம்பரம் பிள்ளை (பதி.), வாவிள்ள இராமஸ்வாமிசாஸ்த்ருலு அண்ட ஸன்ஸ், சென்னை.

3)         1970, தொல்காப்பியம், பொருளதிகாரம் (அகத் திணையியல், புறத்திணையியல்), நச்சினார்க்கினியர்

உரை, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

4)         1996, தொல்காப்பிய மூலம், பாடவேறுபாடுகள்: ஆழ்நோக்காய்வு, கே.எம்.வேங்கடராமையா, ச.வே.சுப்பிர மணியன், ப.வெ. நாகராசன் (பர்.) பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகம், திருவனந்தபுரம்.

5)         2007, குறுந்தொகை மூலமும் உரையும், வி. நாகராசன் (உர்.), அ.மா. பரிமணம், கு.வெ.பாலசுப்பிரமணியன் (பர்.), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

6)         2007, அகநானூறு மூலமும் உரையும், இரா. செயபால் (உர்.), அ.மா. பரிமணம், கு.வெ.பாலசுப்பிரமணியன் (பர்.), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

7)         2007, தொல்காப்பியமும் கவிதையும், கா. சிவத்தம்பி, குமரன் புத்தக இல்லம், கொழும்பு - சென்னை.

8)         2013, பல்துறைநோக்கில் தொல்காப்பியம், தொகுதி - 2, சி.பத்மாசனி, தி.செல்வம், ஆ.மணி (பர்.) தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி.

9)         2016, திணை உணர்வும் பொருளும், வெ. பிரகாஷ் பரிசல் புத்தக நிலையம், சென்னை.

10)       2016, உங்கள் நூலகம், மலர் 8, இதழ் 3, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

11)       1993, A Word Index for Cankam Literature, Thomas Lehmann, Thomas Malten, Institute of Asian Studies, Chennai.

திணை உணர்வும் பொருளும்

வெ.பிரகாஷ்

வெளியீடு: பரிசல்

96, ஜே.ப்ளாக், நல்வரவு தெரு, எம்.எம்.டி.. காலனி,

அரும்பாக்கம், சென்னை - 600 106

ரூ.90.00

Pin It