தமிழ் மக்களின் வாழ்வியல், நாகரீக மேம்பாடு அவர்களின் மருத்துவக்கலை, மருத்துவச் சிந்தனைகள் ஆகியவற்றைத் தொல்காப்பியத்தில் உள்ள குறிப்புகள் மூலம் அறிய முடிகின்றது.

தொல்காப்பியர் காலத்தில் மருத்துவர் களுக்கு உடல் கூறு மேலோட்டமாகத் தெரிந் திருக்க வேண்டும் (Gross Anatomy). ஏனெனில் அவ்வாறு வழக்கில் இருந்த சொற்களையே தம் நூலில் எடுத்தாண்டிருக்கிறார்.

tamizhar medicine

கண், இமை, மெய், (உடல்). மெய் என்பது இவ்வுலகம் எப்படி ஐம்பூதங்களால் ஆனது? உண்மையோ அவ்விதமே இந்த உடலும் ஐம்பூதங் களால் ஆனது உண்மை என்ற பொருளில் மெய் என்றனர். உடலை மெய் என்றதால் உடலைக் காப்பதில் அக்கால மக்கள் உறுதியாக இருந்தனர் என்பது விளங்கும். நரம்பு, சினை-உறுப்பு, உந்தி, தலை, மிடறு, நெஞ்சு, பல், இதழ் - உதடு, நா, மூக்கு, அண்ணம் (Palate), இடைஅண்ணம் (Soft Palate), நுனி அண்ணம் (Hard Palate), முன்பல், நாவிளிம்பு, முதல் நா, இடைநா ((Middle of the Tongue), பல் முதல் (Alveolar Margin), நுனிநா, முலை, பால் (Sex), வடிவு, வெரிந் - முதுகு (Back), (தொல், எழுத்து பிறப்பியல்). உடல் ஏழு தாதுக்களால் இழுத்துக் கட்டப் பட்டது. எலும்பு, கொழுப்பு, நிணம், சுக்கிலம், தசை, தண்ணீர், ரசம் என்று தாதுக்களால் இழுத்துக் கட்டப்பட்டது. உடல் என்பது பொருள். இக்கருத்து தொல்காப்பியர் காலத்தி லேயே ஏற்கப்பட்டது ஆகும்.

தொல்காப்பியர் காலத்தில் அறுவை மருத்துவ முறைகளும் இருந்திருக்க வேண்டும். அகத்திற்கு இலக்கணம் கண்டவர் புறத்திணையில் போர் முறைகளையும், வீரர்கள் பொருதுகளத்தில் புண்படுவது, பாசறை, வெற்றி தோல்வி முதலிய போர்ச் செய்திகளையும் குறிப்பிடுகிறார், அவ் விதம் போர்ச் செய்திகளைக் கூறுவதால் போரில் வீரர்கள் பொருதி மடிவதும், மடியாது உறுப்புகள் குறைவுறுதலும், போரில் காயம், புண் ஏற்படுவதும் இருந்திருக்க வேண்டும். அவற்றிற்கு மருத்துவம் செய்திருப்பர்.

சொல்லதிகாரத்தில் இரண்டாம் வேற்றுமை என்ன? என்பதும், அச்சொல் எங்கு வரினும், வினையும், தனக்குத் தோன்றும் நிலமாக உடைத்து என வேற்றுமை இயலில்

“அறுத்தலின் குறைத்தலின் தொகுத்தலின் விரித்தலின்.”

(தொல், சொல், வேற்றுமையியல் - 72: சேனாவரையர்) என்று கூறுவார்.

இதற்கு விளக்கவுரைகாரர் “சிறிதிழக்கச் சிதைத்தலாவது” ஒரு பகுதியை மட்டும் நீக்குதல் என்பார். இதைப் பார்க்கும்போது அங்கத்தைக் குறைத்தல் அல்லது ஒரு பகுதியை நீக்குதல் (Amputation or Removal of Part of Organ) என்பது புலனாகும். மேலும் அறுத்தல் என்பது சிறிதிழ வாமல் சினையை ஆயினும் முதலையாயினும் இரு கூறாகச் செய்தல் என்பர். அதாவது ஒரு உறுப்பின் முழுமையையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ இரண்டாகக் கூறுபடுத்தல் (Entire Organ of Part of Organ) என்பதாகும்.

மற்றொரு இடத்தில் வெகுளி தோன்றுதல் காரணமாக உறுப்பறை (தொல் - பொருள் - மெய்ப்பாட்டியல்:254) என்று கூறுகிறார். உறுப் பறை என்பதை உரையாசிரியர் அங்கங்களை அறுத்தல் என்று பொருள் கூறுகிறார். உறுப்பைக் குறைப்பது என்பது கை குறைத்தலோ அல்லது கண் குத்தலோ என்று புலவர் குழந்தை விளக்கம் கூறுகிறார். உறுப்பைக் குறைத்தல் (Amputation) அல்லது அறுத்து எடுத்தல் போன்ற முறைகளும் தொகுத்தல் போன்ற முறைகளும் தொழில் படுத்தப்பட்டது விளங்கும். ஆனால் விரிவான அறுவை மருத்துவ குறிப்புகளைக் காண முடிய வில்லை.

(வளர் தமிழில் அறிவியல் - 1994: பக். 143-44)

சூட்டுக்கோல் மருத்துவம் (Caterization)::

அக்காலத்தில் அறுவை மருத்துவத்தில் சிறப்புற்று இருந்தார்களென்பதை உடலில் கட்டி முதலிய தோன்றின்; அறுக்க வேண்டியவற்றை அறுத்தும், கெட்ட குருதியை வெளிப்படுத்தியும், சுட வேண்டியவற்றைச் சுட்டும்; உண்டாகும் புண்ணுக்கு மருந்திட்டுத் தீர்க்கும் முறை உண்டென்பதை,

“உடலிடைத் தோன்றிற் றொன்றை

  அறுத்ததன் உதிரம் மாற்றி

சுடலுறச் சுட்டு வேறொர் மருந்தினால்

   துயரம் தீர்வர்.”

(146 வை.மு.கோ. பதிப்பு)

என்ற கம்பராமாயணம் யுத்த காண்டம் கும்ப கர்ணன் வதைப் படலச் செய்யுளால் அறியலாம். ஆக, கம்பராமாயண காலமாகிய 12-ஆம் நூற்றாண்டிற்கு முன்பே சீழ்க்கட்டிக்கான அறுவை மருத்துவ முறை இன்றைய மருத்துவத்தின் படி நிலை வளர்ச்சியை நடைமுறையில் எட்டியிருந்த பான்மை இங்கே எண்ணிப் பார்க்கத் தகுவதாகும்.

கம்பருக்கு முன் குலசேகர ஆழ்வார் பாடலிலும்,

“வாளா லறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

மாளாத காதல் நோயாளன் போல்.”

(குலசேகர ஆழ்வார் - நாலாயிரம் - 691/2)

என்று இதே அறுவை மருத்துவக் கருத்தை எடுத்துக் கூறப்பட்டிருத்தல், இதனை மேலும் வலியுறுத்தும்.

இவ்விரு பாடல்களிலும் உருவான கட்டி போன்ற ஒன்றை அறுத்து நீக்கிய பின் அதன் ஆழ்பாகத்தில் தேங்கியிருந்த கெட்ட இரத்தத் தையும் வெளியேற்றி, உடனுக்குடன் பெருமளவில் நச்சு நுண்மங்கள் சேராவண்ணம் அதிக வெம்மை யுடன் சுட்டு, பின்னர் அறுவைப் புண் தைக்கப் பட்டு, குணமாக்கும் மருந்தைப் பயன்படுத்தி உள்ளனர்.

“கருவியிட்டாற்றுவார் - புண் வைத்து

மூடார் பொதிந்து.”        (நீதிநெறி: 55)

ஒரு புண்ணையும் அப்படியே இருந்து சீழ் பிடித்துப் போகும்படி மூடி வைத்தல் இல்லை. கருவியைக் கொண்டு அறுத்து, அதன்பின் அவ் வெட்டையும் ஆற்றிவிடுவர் என்பது குமரகுருபரர், நீதிநெறி விளக்கம்.

காந்த சிகிச்சை:

உடலில் பதிந்துள்ள ஆயுதத் துண்டுகளைக் காந்தத்தால் வெளிப்படுத்தலை,

“அயில் வேல்... நீங்கலது இப்பொழுதகன்றது

காந்தமாம் மணியின்று வாங்க.”

(கம்பராமாயணம்: மீட்சிப்படலம் தசரதன் இராமனிடம் கூறியது).

இதுபோலவே கம்ப ராமாயண மீட்சிப் படலத்தில் தசரதன் கூற்றாக வரும்,

“அன்று கேகயன் மகள் கொண்ட வரமெனும் அயில்வேல்

இன்று காறும் என் இதயத்தின் இடைநின்றது என்னைக்

கொன்று நீங்கலது இப்பொழுது அகன்றது உன் குலப்பூண்

மன்றுல் ஆகமாங் காந்தமா மணியின்று வாங்க.”

(மீட்சி : 117)

இப்பாடலில் கைகேயியின் வரத்தைக் கூரிய வேலாயுதமாகவும், அதில் நெஞ்சத்தில் துன்பம் தந்ததை வேலாயுதம் இதயத்தில் பாய்ந்து தைத்து உயிர் போயும், போகாமலும் இருக்கும் நிலையை ஏற்படுத்தியதையும், இராமன் மார்பகத்தைத் தழுவியதால், துன்பம் நீங்கியதை இதயத்தில் பாய்ந்த வேலாயுதத்தைப் பெரிய காந்தம் கொண்டு, அந்த வேலாயுதத்தை நீக்கிய பின் துன்பம், நீங்கிய மையாகவும் உருவகப்படுத்தி கம்பர் இப்பாடலை இயற்றி உள்ளார்.

கம்பராமாயணம் எழுதிய காலம் 12-ஆம் நூற்றாண்டு. ஆகவே இந்நூற்றாண்டில் தமிழ் மருத்துவத்தில் அறுவை மருத்துவ முறைகளாகிய அறுத்தல், சுட்டிகை, உடலில் பதிந்துள்ள ஆயுதத் துண்டுகளை நீக்கும் முறைகள் சிறப்புற்றிருந்த தென்பது நன்கு புலப்படுகிறது.

அறுவை மருத்துவம்:

அறுவை மருத்துவ முறைகளைப் பற்றிக் குறிப்புகளுடன், என்னென்ன முறைகள் செய்யப் பட்டன? என்பதை விளக்கிக் கூறுவதாக அமை கிறது சீவகசிந்தாமணி.

சீவக சிந்தாமணி காப்பிய நூலாக அமைந்த தினால், விரிவான செய்திகளைத் தருவனவாக அமைந்து அறுவை முறை மருத்துவத்தை விவரிக்கிறது.

“நெய் க்கிழி வைக்கப்பட்டார்

நெய்ப்பத்தல் கிடத்தப்பட்டார்

புக்குளி யெஃக நாடி

யிரும்பினாற் போழப் பட்டார்.

முதுமரப் பொந்து போல

முழுமெய்யும் புண்க ளுற்றார்க்கு

இது மருந் தென்ன நல்லார்

இழுது சேர் கவளம் வைத்து

பதுமுகன், பரவை மார்பில்

நெய்க் கிழிப் பயிலச் சேர்த்தி

நுதிமயிர்த் துகிற்குப் பாயம்

புகுகென நூக்கி னானே.”

(சீவகசிந்தாமணி: 818-819)

மரப்பொந்து போல் உடல் முழுவதும் ஏற்பட்ட புண்களுக்கு ஏற்ற மருந்து எது? என்பதை அறிந்த மருத்துவர், அம்மருந்தை வாயில் கவளத்தை வைப்பது போல் வைப்பர்; நெய்யில் தோய்ந்த துணியைப் புண்ணின் மேல் வைப்பர்; புண் பட்டாரை நெய்ப்பத்தலில் கிடத்துவர்; புண்ணுக்குள் புகுந்த இரும்புத்துண்டுகளை அறுவை முறையால் அறுத்தெடுப்பர். பின்னர் எலி மயிரால் நெய்யப் பட்ட ஆடையால் போர்த்தி காற்றுப் புகாதவாறு பாதுகாப்பவர் என்று உரைப்பதினால் புண்பட்டார்க்குச் செய்யப்படுகின்ற மருத்துவ முறைகள் தெளிவாக்கப்பட்டுள்ளன.

நோயாளர் ஆடை:

நோயாளிக்கு அணியவும், போர்த்தவும் செய் கின்ற ஆடை எப்போதும் எல்லாரும் அணிகின்ற ஆடையிலிருந்து மாறுபட்டதாகத் தெரிகிறது. அவ்வாடை எலி மயிரினால் நெய்யப்பட்ட தென்பர். எலியின் மயிரினால் நெய்யப்பட்ட ஆடையால் ஆகிய சட்டை, போர்வை மிகுந்த வெப்பத்தை உடையது. குளிரை நீக்கக் கூடியது. அதனுள் காற்றுப்புகாது; மென்மையுடையது; பனிக்காலத்தில் அணிவதற்குரியது; கிடைத்தற் கரியது என்றும் குறிப்பிடப்படுகிறது. (சிந்தா - 1969 - செய் 2680 - 2686)

குறிப்பு:- எலி மயிர் போர்வை என்று தலைப்பிட்டு பி.எல்.சாமி தென்னிந்தியத் தமிழ்ச் சங்கத்தில் நெல்லை, திருவரங்க நிலையக் கட்டடத் திறப்பு விழாவின் போது வெளியிடப்பட்ட செந் தமிழ்ச் செல்வி சிறப்பு மலரில் அவ்வெலியின் உடலமைப்பு அது வாழுமிடம், அதன் நிறம் முதலியன பற்றிக் கூறியுள்ளார். அவ்வெலி மயிரால் நெய்யப்பட்ட ஆடை குளிரைத் தாங்கும் போர்வையாகவும், அழகுக்காக அரிய ஆடை யாகவும், திரையாகவும் பயன்பட்டதைச் சிந்தா மணி செய்யுளால் விளக்குகிறார்.

புண்ணுக்குப் பஞ்சு:

போரில் ஏற்பட்ட புண்களின் மேல் பஞ்சு இடுமுறை பண்டைக்காலத் தமிழர்கள் உலகிற்குக் கற்றுக்கொடுத்த சிறந்த முறையாகும்.

“கதுவாப் போகிய துதிவாய் எஃகமொடு

பஞ்சியும் களையாப் புண்ணர்.” (புறம் - 353)

உலகில் முதன் முதல் பஞ்சு கண்டுபிடிக்கப் பட்டதே தமிழகத்து மண்ணில்தான் என்று பி.டி. சீனிவாச அய்யங்கார் கூறியுள்ள கருத்தும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

எனவே காயப்பட்ட புண்ணைப் பருத்திப் பஞ்சால் துடைத்து, புண் மேல் கட்டுப்போடும் பழக்கத்தை உலகிலேயே முதன் முதலாகப் பயன் படுத்த ஆரம்பித்த இனம் தமிழினம் தான். இப் பழக்கமே உலகெங்கிலும் தொடர்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சைக் கருவிகள்:

அகஸ்திய சாஸ்திர விதி ((Iyaccilakai)) என்றும் நூலில் உலோகப் பயன்பாடு கூறப்பட்டுள்ளது. இதில் மொத்தமாக 26 கருவிகள் பயன்படுத்தப் பட்டு உள்ளன. (நீளம் 22 அங்குலம். மேலும், 16 கருவி களில் எடையும் கூறப்பட்டுள்ளன) இதில் பெரும் பான்மையான கருவிகள் இரும்பினாலும், செம்பினாலும் செய்யப்பட்டு, வெண்கலக்குழல், பெல் உலோகத்தாலும்; இயாக் சிலாக்கி என்னும் கருவி (ஐலயஉஉடையமயi) காரீயத்தாலும் செய்யப்பட்டு உள்ளன. இதில் நீளம் விரல் அளவில் கூறப் பட்டுள்ளது. விரல் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 81/2, 9,, 10, 11, & 12, எடையானது கழஞ்சு பலம், மா, ஓலைக்கனம் நலெக்கனம் என நிறுகுக்கப்பட்டுள்ளது. கழஞ்சு 1/2, 3/4, 1, 2, 3, 4, 6 & 12 என்று கூறப்பட்டுள்ளது. பலம் அளவில் 1/4, 1/2, 1 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எடை, நீள அளவுகள் தமிழரின் பழமை யான முறைகள். இந்த நூற்றாண்டில் கூடப் புழக்கத்தில் இருந்து வருகின்றன.

  1. (Thangavelu, M.D., தமிழகமும் - சித்த வைத்தியமும். In the Proceedings of the second. International Conference Seminar of Tamil Studies, Madras 1968 - date Oct. 1971, Vo. III. P.P. 140-148)

இதே போல அகத்தியர் சத்ரிராயித முறை விபரம் அகத்தியர் நயனவிதி 500 என்னும் நூலில் அறுவை மருத்துவம் செய்வதற்கு உதவிடும் 26 அறுவைக் கருவிகள் குறித்துக் கூறப்பட்டுள்ளன.

“கத்தி, சத்திரம் கவின் குறும்பி வாங்கியும்

முக்கவா தன்னுடன் முள்ளு வாங்கியும்

சூழிக்கோலு மடுத்த பிறையுடன்

கத்திரிக்கையுடன் பரகரை வாங்கியும்

முச்சாலாகை யோடு முன்மொழி யோட்தடும்.

மட்டக்கோலும் மாறும் ஊசியும்

செப்புக் குழையுஞ் சீரிய சலாகையும்

வட்டகை தன்னுடன் வளர் பஞ்சமுகமும்

செப்பு சிலாகையும் கொம்பும் குடோரியும்

வெங்கலக்கிழலும்

ஈயச் சலாகையும் காயக் கோலுங்

கண் சுத்தி தண்டும்

இவையினை யாயுத மிருபத் தாறாஞ்

சிவனவ னருளால் திகழ் சத்தா யுதமே.”

இப்பாட்டின்படி அறுவை செய்ய உதவும் கத்தி, சத்திரம், குறும்பி, வாங்கி, முகவாதனன், முள் வாங்கி, ஆழிக்கோல், பிறைக்கோல், கத்தரிக் கோல், பாகரை வாங்கி, முச்சிலாகை, முனிமொழி, சூட்டுக்கோல், ஊசி, செப்புச்சலாகை, கொம்பு, குடோரி, வெண்கலக்குழல், ஈயச்சலாகை, காயக் கோல், தெண்டு சலாகை, நயனக்கத்தி போன்ற 26 வகையான அறுவைக் கருவிகள் ((Surgical Instrument)) பற்றி அறிய முடிகிறது.

கண் அறுவை சிகிச்சை முறைகள் விபரத் துடன் சித்த மருத்துவ நூலான நாகமுனிவர் நயனவிதி - 200 என்ற நூலில் காண முடிகிறது.

அறுவை சிகிச்சைக் கருவிகள் சுத்தம் செய்ய தண்ணீரில் புளிய இலைகளைப் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்துள்ளனர். (மேற்கத்திய மருத்துவமும், தமிழின் செல் வாக்கும்: பக். 110)

அகஸ்தியர் நயனவிதி 500-ல் குறிப்பிடப் பட்டுள்ள கருவிகளைக் கொண்டு வயிற்றைப் பிளந்து செய்யும் அறுவை சிகிச்சைகளைச் செய்ய முடியுமா? என்பது ஒரு கேள்விக்குறிதான்.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக, திரு முக்கூடல் கல்வெட்டு அறுவை மருத்துவரைச் சல்லியக் கிரியை பண்ணுவான் என்று குறிப்பிடு கிறது. சல்லியம் என்பது ஆயுத நுனி. இரும்புக் கோல் நுனி, ஆணி, அம்பு போன்றவற்றைக் குறிப்பது. கிரியை பண்ணுவான் என்பது சிகிச்சை செய்பவனைக் குறிக்கும். ஆகவே மேற்கூறிய சாஸ்திர விதி ஆயுதங்களைப் போலவே அகஸ்தியர் நயனவிதி 500-இல் உள்ளதும், ஒன்று போல் உள்ளது குறிப்பிடத்தக்கது. அறுவை சிகிச்சை செய்ய உடல் கூறு ஞானம் அவசியம், அதில் தமிழர்கள் சற்று குறைவாக இருந்திருக்க வாய்ப் புள்ளதாக இக்கருவிகளை அறியும் பொழுது, ஒரு அச்சம் ஏற்படுகிறது.

இதற்குக் காரணம் பக்தி இலக்கியக் காலத் திற்கு முன் சித்த மருத்துவம் மறை பொருளாகவே போதிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் பொதுமைப் படுத்தப்படவில்லை. மேலும் இந்து மதக்கோட் பாட்டின்படி இறந்த பிறகு உடல் எரிக்கப் பட்டதன் காரணமாகவும், புத்த, சமண மதத்தில் கொல்லாமை போற்றப்பட்டதன் காரணமாகவும் இருக்கலாம்.

இக்கருத்தை, மேலும் வலியுறுத்தும் விதமாக, ஜான் முர்டாக் 1895-இல் தமிழில் அதுவரை வெளி வந்த நூல்களைத்தான் தொகுத்து ஒரு நூலட்ட வணையை வெளியிட்டார். இந்த அட்டவணையி லுள்ள மருத்துவப் பிரிவில் டி II 44 நூல்கள் விபரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நூல்களில் பெரும்பான்மை சித்த மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் சார்ந்ததாகவும், சிறுபான்மை அலோபதி மருத்துவம் சார்ந்ததாகவும் உள்ளன. இந்நூலில் “இந்திய மருத்துவத்தை ஹிப்பாகரடீஸ் கீரீசின் வாழ்ந்த நாளை ஒத்த மருத்துவம்” என்று கேலி செய்கிறார்.

மேலும் தமிழர்களைப் பற்றிக் கூறும்போது உடலைக் கூறுபோட்டு, அறிந்து கொள்வதைத் தீங்கு என்று நினைப்பதினால், உடல்கூற்றைப் பற்றி இவர்கள் அறியாதவர்கள் என்று சாடுகிறார்.

(கிறித்தவமும் அறிவியலும்: பக். - 130)

மனுநீதியைக் கடைப்பிடிக்க எண்ணிய மேட்டுக் குடி மக்கள் அறுவை சிகிச்சையைச் செய்ய நாட வில்லை. இதற்கு மனுநீதிக் கொள்கையும் காரண மாகும். அதாவது பிரேதத்தைத் தொட்ட ஒருவனை யதேச்சையாகத் தொட நேர்ந்து விட்டால் குளிப்பதன் மூலம் மீண்டும் ஒருவன் தனது பரிசுத்தத்தைப் பெறுவான் என்பது சாஸ்திரம். (மனுநீதி : ப. 85)

சவப்பரிசோதனையின்றி (உடல்கூறு கல்வி) அறுவை சிகிச்சைக்கு மாற்றுக்கல்வி இல்லை யென்பது இங்கு நினைவு கூரத்தக்கது.

மருத்துவர்களுக்குச் சமூகத்தில் உயர்ந்த மதிப்பும் மரியாதையும் இருந்திருக்கிறது. மருத்துவர்கள் தங்கள் தொழிலை மட்டும் தெரிந்து கொள்ளாமல் புலமையிலும் சிறப்புற்றிருந்தது அவர்கள் பெயர்களிலிருந்து அறிய முடிகிறது.

Pin It