உயிரினங்களில் இருந்து மாறுபட்ட தோடு மட்டுமின்றி தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட மனித குலம் வரலாற்றில் பெரும் போராட்டத்தை சந்தித்து வந்ததை மானுடவியல் ஆய்வாளர் பலரும் எடுத்துரைக்கின்றனர். உணவுக்காக அலைந்து திரிந்து சமூகமாய் வாழத் தொடங்கிய மனித குலம் இன்று வானுயர விஞ்ஞான வளர்ச்சியில் உயர்ந்து நிற்கிறது.

  • எனில் ஆரம்பகால மனித செயல்பாடுகள் என்ன என்பதை குறித்து மானுடவியல்(Anthropology) ஆய்வாளர்கள் பல கருத்தை முன் வைக்க மார்க்ஸ் அவர்கள் உயிரின பரிணாம வளர்ச்சிப் படிநிலையை போல மனித குல வரலாற்றை பலபடித்தான சூழலில் மதிப்பிட்டு வெளிக்கொணர்ந்தார். குறிப்பாக நாடோடிகள், கால்நடை வளர்ப்பாளர்கள், சிறு சாகுபடியாளர்கள் குடியிருப்பு அமைத்து வாழத் தலைப்பட்ட மக்கள், வணிகம் என தொடக்க கால இயற்கை வழியிலான உழைப்பைப் பற்றியும் உழைப்பின் நிலை பற்றியும் உழைப்பு எவ்வாறு பிரிவினையாக சமூக பிரிவினையாக மாற்றமடைந்தது என்பதையும் அரசியல் பொருளாதாரம் எனும் நூலில் தெளிவாக விளக்கினார். உலகெங்கும் வாழும் பூர்வகுடி மக்களையும் அவர்களின் வழக்காறுகளையும் வாழ்வியல் முறைகளையும் ஆய்ந்து தெளிந்து மனிதகுல வரலாற்றின் தொடக்க காலச் சூழலை முன்வைத்தார். அவர் முதலாவதாக பிரதான பொதுவுடமை சமூகச் சூழலை ஆராய்ந்து விளக்கினார். இத்தகைய சூழ்நிலையை பழந் தமிழகத்தோடு ஒப்பிட்டு ஆராயும் நோக்கிலும் தமிழகத்தின் இயற்கைச் சூழலும் சமூக வாழ்வியலிலும் இனக்குழு சமூக வாழ்க்கை எவ்வாறு பிரதிபலிக்கிறது அடிமைச் சமூகம், நிலவுடமை சமூகச் சூழலை தாங்கி நின்றதா என்பதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
  • திணை அடிப்படையிலான பல தமிழக மக்களைப் பற்றியும் அவர்களின் நில பருவ காலச் சூழலுக்கு ஏற்றபடி வாழ்ந்த முறைகளும் இயற்கைச் சூழலோடு தேவைக்கும் சமூகத்தின் வளர்ச்சிக்கும் உழைத்த முறையும் இயற்கை பண்போடு மக்களாகக் கூடி வாழ்ந்த போக்கும் சமூக கட்டமைப்பை உருவாக்கி குடும்பம் அரசு இன்னபிற சமூகவியல் வரையறைகளை உருவாக்கிய விதமும் அதன் அடிப்படையிலான வாழ்வியலும் ஒரு தனித்த தன்மையுடையதாக விளங்குவதை இலக்கண இலக்கியத்தின் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக தொல்காப்பியம் சங்க இலக்கிய நூல்கள் தொல்லியல் சான்றுகள் சான்றுகள் மானுடவியல் நூல்கள் ஆகியவற்றோடு பொருத்தி ஆராய்ந்தால் நமக்கு விளங்கும் என கருதுகின்றோம். 

பழந்தமிழக இனக்குழு வாழ்வு:

 இனக்குழுவாக சமூக வாழ்க்கை முறை நில அடிப்படையில் இருந்ததை குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை எனும் ஐந்து நில அடிப்படையில் வாழ்ந்த வாழ்வில் நன்கு தெரியவருகிறது. நில மக்களான ஆயர் வேட்டுவர் உழவர் பரதவர் எயினர் போன்றோர்களின் வாழ்வும் நில அடிப்படையில் கூடி வாழ்ந்த நிலையில் இருந்திருப்பதை நா இலக்கியத்தில் வழியாக அறியமுடிகிறது. கிடைத்ததை உண்டு வாழ்ந்த மக்கள் பற்றிய தொல்பொருள் எச்சங்கள் வழி பல வரலாற்று நிகழ்வை உறுதி செய்யவும் முடிகிறது. குறிப்பாக கூடி உழைத்தல் கிடைப்பதை பகுத்து உண்டல் எனும் நிலையில் தனிச் சொத்து ஏதும் இல்லாத கிடைக்கக்கூடியதை பொது வரையறையில் பெர்ரு வாழ்ந்த சூழ்நிலையையும் அதற்கு அடுத்த நிலையான அடிமைச் சமூக சூழல் தொடங்கி குடும்பம் தனிச்சொத்து அதற்கான உரிமை அக் கட்டமைப்பினை பாதுகாப்பதற்கான அரசு தோன்றி நன்கு வளர்ச்சி பெற்ற நிலையையும் நூல்களின் வழியாக தெளிவாக உணர முடிகிறது. மேலும் தமிழகத்தில் தொல்லியல் சான்றுகளின் வழி திருவள்ளுவர் மாவட்டம் அத்திரம்பாக்கம் குகைகளில் இருக்கக்கூடிய கிடைத்த அந்த ஆய்வுகளின் தரவுகளை வழியாகவும் பல்லாவரத்தில் கிடைத்த தரவுகளின் வழியாக பழைய கற்கால சூழல் நிலவியிருக்கிறது என்பதி அறிகிறோம். அதுபோல குடியம் குகை பரிகுளம் போன்ற பகுதியிலும் இத்தகைய சூழல் நிலவி இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இடைக் கற்காலம் புதிய கற்காலம் ஆகிய மனிதகுல வரலாற்றின் தொடக்க வாழ்க்கை முறை அனைத்தையுமே பழந்தமிழகம் சுமந்து வந்திருக்கிறது என்பதை நாம் தொல்லியல் ஆய்வில் வழியும் அறிந்து கொள்ள முடிகிறது.

வேட்டுவரின் நிலை

சங்க இலக்கியத்தில் வேட்டையாடுகின்ற போது பகிர்ந்துண்ணும் கருத்தையும் சில பாடல்கள் எடுத்துரைக்கிறது. கானவர்கள் பன்றியை வேட்டையாடிதையும், பிறருக்கு அவன் மனைவி மகிழ்ந்து கொடுத்தச் செய்தியினை சங்க நூலில் காண முடிகிறது.

கானவன் எய்த முளவுமான் கொழுங்குறை

தேங்கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு

காந்தளஞ் சிறுகுடிப் பகுக்கும்

 ஓங்கு மலை நாடன்  (நற்றிணை பாடல்-85)

என்னும் அடிகள் வேட்டையாடி முள்ளம்பன்றி கொண்டுவர அவன் மனைவி கொடிச்சி கிழங்குகளை கொண்டு வருகிறாள். முள்ளம் பன்றி மற்றும் கிழங்கு ஆகிய இரண்டையும் அவர்கள் தம் ஊர் மக்களுக்கும் பகிர்ந்து கொடுக்கக் கூடிய பண்பை கொண்டுள்ளதையும் அத்தகைய வேட்டுவர் வாழும் பகுதியில் உள்ளவனே உன் தலைவன் அவன் கட்டாயமாக உன்னை தேடி வருவான் என்பதே மேற்காணும் பாடலின் கருத்தாகும். அடிப்படையாக மலையும் மலை சார்ந்த பகுதியின் தலைவன் ஒருவன் அவன் வரவை எண்ணி ஏங்குகிறாள் தலைவி. தகுதியான நல்லொழுக்கம் கொண்ட மக்கள் வாழும் பகுதிக்கு தலைவன் அவன் அவன் வருவான் நீ கவலை கொள்ளாதே! வேட்டையாடுதலையும் கிழங்கு எடுத்தலையும் கொண்ட ஒரு இனக்குழு சமூகச் சூழல். இது அடிப்படையில் பன்றிகள் கிழங்குகளைத் தோண்டி திண்ணும் பழக்கம் உடையவை அவை கிழங்கு தோண்டி உணவாகக் கொள்ளும் சூழலில் அதை வேட்டையாடி முள்ளம்பன்றியை வேட்டுவன் கைப்பற்ற தோண்டியக் கிழங்குகளை கொடிச்சி எடுத்து வரும் வாழ்க்கை நிலை வேட்டைச் சமூக வாழ்க்கை நிலை, இதனை பிறருக்கு பகிர்ந்து கொடுத்து மகிழும் போக்கு மனித பண்புடைய போக்கு. மீதம் கிடைக்க கூடிய சொற்ப உணவுகளையும் பிறருக்கு வழங்குகின்ற் நிலை வேட்டுவ மக்களிடத்தில் இருந்து வந்துள்ளது. எனவே தனிநபர் பாதுகாப்பததுமில்லை தமக்குத் தேவை என சேர்த்து வைப்பதும் இல்லாத பிரதான சமூக நிலை என்றே நாம் ஒருவாறு உய்த்துணர்ந்து துணிந்து கூற முடிகிறது.

மனித தொடக்க வாழ்வின் போக்கு கூடி இருத்தல், கூடி வேட்டையாடும் போக்கும் பகிர்ந்து உண்டலும் ஆகும் எனலாம். உதாரணமாக தொல்காப்பியத்தில் பாதீடு என்று வெட்சித் திணையில் வருகிறது. அதன் பொருள் பங்கிட்டுக் கொள்ளுதல் என்பதாகும். அதாவது புறத்திணையியலில் ஆநிரைகளைக் கவர்தல் ஒரு போர் முறை என்கிறார் தொல்காப்பியர். கவர்ந்த ஆநிரைகளை தாம் பகிர்ந்து கொண்டதோடு பிறருக்கும் வழங்குவதை மரபாகக் கொண்டிருந்தார்கள் என்கிற தொடக்க கால போரியல் கருத்தும் இங்கு நோக்கதக்கது. இனக்குழு சமுதாய வாழ்வின் பண்புகளில் தலையாயது பொதுவில் வைத்து உண்ணுகிற முறை என நாம் குறிப்பிட முடியும். சங்க இலக்கிய பாடல் ஒன்றில் கூட்டு உழைப்பில் கிடைத்த உடம்பினை சிறிய வீட்டின் முறறத்திலேயே பங்கிட்டுக் கொண்ட செயலை

களிறு நீறு ஆடிய விடு நில மருங்கின்

வம்பப் பெரும்பெயல் வரைந்து

 சொரிந்து இறந்தன

குழிகொள் சில்நீர் குரல் உண்டலின்

சேறு கிளைத்திட்ட கலுழ் கண் ஊறல்

 முறையின் உண்ணும் நிறையா வாழ்க்கை

முளவுமாத் தொலைச்சிய முழுச்சொல் ஆடவர்

 உடும்பு இழுது அறுத்த ஒடுங் காழ்ப் படலைச்

சீறில் முன்றில் கூறுசெய்து இடுமார்

கொள்ளி வைத்த கொழு நிண நாற்றம்

மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து……

  (புறநானூறு பாடல்-325. )

 இதில் வரும் இயற்கைச் சூழலலாவது,

தலைவனுடைய நிலப்பரப்பில் யானை புழுதியை அள்ளி வீசி குளித்துக் கொள்ளும். வெடிப்புகள் உள்ள அந்த நிலத்தில் வம்புக்கு வரும் பெரும்புயல் எப்போதாவது மழையைப் பொலிந்துவிட்டு நின்றுவிடும். ஆங்காங்கே குழிகளில் தேங்கிக் கிடக்கும் கொஞ்சம் நீரை குரால்(சிவப்பு) நிற பசுக்கள் குடித்து தீர்த்துவிட, மீதமுள்ள சேற்றைக் கிளற கொஞ்சம் நீர் ஊறும்.

 அதனை ஊர்மக்கள் முறையாக எடுத்து வந்து பருகுவர். இத்தகைய வாழ்வை உடையவர்கள் அந்நிலமக்கள். முள்ளம் பன்றியுடன் உடும்பினையும் வேட்டையாடி இல்லத்திற்குக் கொண்டு வருவர். அதனைக் கூறாக அறுத்து படலைமேல் தீவைத்து கொள்ளிகளை வைத்து சுடுவர். அப்படி சுடும் போது ஊரே மணக்கும். அதை ஊரார்க்கும் பகிர்ந்து தருவர். இத்தகைய சிறப்புடைய நாட்டின் மன்னன் அவன். பெரும் படையே வந்தாலும் தாங்கும் வலிமை உடையவன் என்தலைவன் என்று மலைநாட்டின் தன்மையை உரைக்கிறது மேற்காணும் பாடல்.

வேட்டையாடுதல் கலங்கிய நீரை முறை வைத்து மக்கள் எடுக்கும் முறை, விலங்குகளின் தன்மை கூறி அந்நாட்டு மன்னனின் நிலை, வலிமை உணர்த்தப்படுகிறது. மக்களின் நிலை வேட்டையாடுகிற முறையையும் தெளிவாக நாம் அறியமுடிகிறது. இதனைப் பற்றி ஆராய்ந்த ஆய்வாளர்கள் சிலர் இனக்குழு மறுஉற்பத்தி ஈடுபடுவதற்கு முன்பு உள்ள சமூக அமைப்பினை வேட்டைச் சமூகமெனக் கொள்ளலாம் என்கிறார்கள். குறிஞ்சித் திணையின் பாடல்கள் பெரும்பாலும் வேட்டைச் சமூக கருத்தை கொண்டிருக்கின்றன. இத்தகைய வேட்டையாடுதல் முறை இன்றும் நாட்டுப்புற மக்களிடத்திலும் கிராமப்புற சிறார்கள் இடத்திலும் உள்ளது. சில பழங்குடியின மக்களிடம் நிலவி வருவதை இன்றளவும் காணமுடிகிறது. உதாரணமாக குறும்பர் உழவர் ஆதியர் போன்ற மக்கள் இன்றும் வேட்டையாடும் நிலையைக் காண முடிகின்றது. குறிப்பாக வேட்டையாடுதல் இல் ஈடுபட்ட நரிக்குறவர்கள் நரியை சமமாக பங்கிட்டு பெற்றுக் கொள்வதும் விவசாய உற்பத்தி இன்னபிற தொழிலில் ஈடுபடும் கிராம மக்கள் மேய்க்கும் தொழிலில் ஈடுபடுவோர் ஈசல்களை கூட்டம் கூட்டமாக பிடித்து பங்கிட்டுக் கொள்வது வயல் நண்டுகள் நத்தைகள் போன்ற உயிரினங்களைப் பிடித்து பங்கிட்டுக் கொள்வது இது கூட பழங்காலத்தில் சமூகக் குடிகளின் வாழ்வியல் எச்சங்களாகவே கருத முடிகிறது. கொல்லி மலையில் வாழும் பழங்குடி இன மக்களான குறும்பர்கள் இன்றும் வேட்டையாடி வேட்டையாடிய பன்றியோ அல்லது இன்னபிற விலங்கினையோ வேட்டைக்குச் சென்ற அனைவரும் அதனை சமமாக பங்கிட்டுக் கொள்வது அறிந்து கொள்ளவும் முடிகிறது.

“சங்க இலக்கியங்களில் பதிவான வேட்டைச் சமூக அமைப்பின் தொடர்ச்சி இன்றும் சில பழங்குடிகளிடம் நிலவுகின்றது. சான்றாக ‘மலேயா’வில் வாழும் சிமாய்ப் பழங்குடியின வேட்டைக் குழுவானது பல நாட்கள் திரிந்து இறுதியாகப் பெரிய காட்டுப் பன்றியை வேட்டையாடும். அதனைக் குடியிருப்பு பகுதிக்குக் கொண்டு வந்தவுடன் குழுவினர் அனைவரும் ஒன்று கூடுவர். கிடைத்த இறைச்சி அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்துக் கொடுப்பர். (சிலம்பு. நா. செல்வராசு. 1997 பக்கம். 59)ஆக, கூட்டாக சேர்ந்து பெற்ற பொருளை கூட்டாக பங்கிட்டுக் கொள்கின்ற போக்கினைத் தொல்சமூகச் சூழல் என ஆய்வாளர் கூறுவர். இதனையே புராதன பொதுவுடைமைச் சமூகமென காரல் மார்க்ஸ் குறிப்பிடுகின்றார்.

 கி.முவில் தோன்றிய தொல்காப்பியம்,

 “ஆயர் வேட்டுவர் ஆடுஉ திணைப்பெயர்

 ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே"

என்று ஆயர் வேட்டுவர் ஆகிய திணை பெயரை சுட்டிக்காட்டி ஆடூஉ (ஆண்) பெயர் என வரும் கிழவர் ஆண்பால் பெயர் என்று குறிப்பிடுகிறது மேற்கூறிய நூற்பா.

 “அக்காலத்தில் அரசியலில் கிழார், மன்னன், வேளிர், வேந்தர் என்ற அதிகாரப் படிநிலைகளைக் கொண்டு விளங்குகிறது…. தமிழக அரசியலில் தொடக்கத்தில் குடித்தலைவனாகக் குறிக்கப் பெறுகிறான்.

 குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற இத்திணைப் பகுப்பு உள்ளூர் நில-நீர் வளச் சூழலுக்கு ஏற்ப பிரிக்கப்பட்டதாகும். ஒவ்வொரு திணைக்குமான தனித்த இனக்குழுக்கள் பண்பாடு நீர்-நில வளம் போன்றன அந்தந்த திணைக்குரிய உற்பத்தி முறைக்குத் தக்கபடி அமைந்துள்ளன. (அட்டவணை-1, சங்க காலம்;தொல்பொருள் ஆய்வுகள். பக்கம். 157)

என்று நிலப் பிரிவுக்கு ஏற்ப பழந்தமிழரின் வாழ்க்கை அமைந்துள்ளன. “திணை கோட்பாட்டினைப் பொருளியல் பரிணாமத்துடன் அணுக வேண்டும் என அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர். மலையும் மலை சார்ந்ததுமான குறிஞ்சித் திணையின் மக்கள் மெல்ல மெல்ல காடுகள் சார்ந்த முல்லைத் திணைக்கு இறங்கி, வயல்பரப்பான மருதத் திணைக்கு வந்து வேளாண் தொழிலை மேற்கொண்டனர் என்று பி. டி சீனிவாசர் கூ. றுவார். வேளாண் சமூகமாக மாறிய பின்பு வேட்டைத் தொழிலையும் உணவு சேகரித்தல் கைவிட்டு விட்டனர்.

 ஒவ்வொரு திணையினையும் ஒவ்வொரு இனத்திற்கான பண்பாட்டுத் தளமாகக் கருதும் இவர் இவற்றை மானுடவியல் ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் என்பார். குறுநில வட்டமான தமிழகத்தின் திணைப் பிரிவுகளை உலக அளவில் பெரும் நில வட்டங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தார். தமிழ் இலக்கியங்களைப் பயின்ற வி. ஆர். இராமச்சந்திரர் தமிழ்ச் சமூக உருவாக்கத்தை நீர்வளத் தன்மைகளின் பின்னணியில் பார்த்தார். திணைக் கூறுகளைப் பற்றி ஆய்வு செய்த கா. சிவத்தம்பி தனித்த சமூக பொருளியல் வளர்ச்சி ஒவ்வொரு திணையின் ஒன்றை யொன்று சார்ந்தும் ஒன்றுக்குள் ஒன்று உள்ளுறவு கொண்டும் இருந்தன என்கிறார். ஒரு சமூகத்துக்கான சமூக ஒழுங்குகள் மற்றொரு திணைக்கு மாறி வந்தன என்பர்.” (பக்கம்-158 இனக்குழு சமுதாயமும் அரசு உருவாக்கமும்)

பொதுவுடைமைச் சமூகத்திய வாழ்வியல் பெரும் போராட்டமான வாழ்வாக இருந்திருக்கிறது. கற்களும் கம்புகளுமே முதன்மையான கருவிகளாக இருந்தன. தனியுடைமைக்கு இடமும் வாய்ப்பும் இல்லாமல் இருந்தது. வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்ட கருவிகளும் அக்குழுவிற்கு சொந்தமாகக் கருதப்பட்டது. இதனைப் பற்றி ஆராய்ந்த ஆய்வாளர்கள் சிவத்தம்பி,

“இனக்குழு மறுஉற்பத்தியில் ஈடுபடுவதற்கு முன் உள்ள சமூக அமைப்பினை வேட்டைச் சமூகம் எனக் கொள்ளலாம். குறிஞ்சித் திணைப் பாடல்களே பெரும்பாலும் வேட்டைச் சமூகத்தின் கூறுகள் சிலவற்றை பதிவு செய்துள்ளன. பிற திணைகளிலும் வேட்டை தொழில்கள் சிறுபான்மையாக காணப்படுகின்றன. ஆதிச் சமூகத்தின் உற்பத்தி வேட்டையாடுதலிலிருந்து கிடைத்தவை.

 இவர்கள் மறு உற்பத்தியில் ஈடுபட வில்லை என்ற கூற்று நிலவுகின்றது. ஆனால் முல்லைத் திணைப் பாடல்களில் வரும் திணைப் பாடல்களில் தினைப்புனம் காத்தல் முதலியவற்றில் கிடைக்கும் சான்றுகளின் அடிப்படையில் இவர்கள் சங்ககாலத்திற்கு முன்பே மறு உற்பத்தியில் ஈடுபட்டு உள்ளனர் என்பது தெளிவாகிறது. முல்லைப் பொருளாதாரத்தை குறித்த முதல் கருத்துப் பதிவாக கா. சிவத்தம்பி கருதுவது அது கால்நடை மேய்ச்சலை முற்றிலுமாக சார்ந்து இருக்கவில்லை." (கா. சிவத்தம்பி-2003 பக்கம்-164 )

ஆக, கிடைத்ததைப் பெற்று உண்டு உயிர் வாழும் வாழ்வு உடையோராகவும் நில வாழ்விற்கு ஏற்ப வேட்டையாடியும் கிடைக்கும் பழங்களையும் பெற்று உயிர் வாழும் நாடோடி வாழ்க்கையே அவர்களின் வாழ்வாக இருந்திருக்கிறது. மேலும், “இனக்குழு வாழ்வுமுறை அழிந்து நிலவுடைமையாக மாறுகின்ற சூழலில் பழைய சமுதாயத்தின் எச்சங்களும் எழுவது இயல்பே. இனக்குழு அழிவு முழுமையாக இராமல் அரைகுறையாக இருந்தால் இனக்குழு மக்களின் சிந்தனைகள் நம்பிக்கைகள், பண்பாட்டு எச்சங்கள் அதற்கடுத்து உருவாகும் சமுதாயத்தில் எஞ்சி நிற்கும். ” என தேவிபிரசாத் சட்டோ(பக். 38)பாத்யாயா (நா. வானமாமலை(1970:14) குறிப்பிடும் நிலை சங்கப் பாடல்களும் காட்டுகின்றன. இந்த வகையில் இனக்குழுச் சமுதாய எச்சங்களை கா. சுப்பிரமணியன்(1993) மிக விரிவாக ஆராய்ந்துள்ளார்” (பம்-39, சங்ககால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும்)

 ஆக பண்டைய காலச் சூழல் முரண்பட்ட மாறுதல் உடைய சமூக சூழலைக் கொண்டிருந்தது என்பது சில வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக அமைந்திருக்கின்றது. இக்கருத்து ஏற்கத்தக்கதாகவே அமைந்துள்ளது.

 ஐவகை நிலப் பாகுபாட்டோடு அமைந்த முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை ஆகிய நிலத்துள் வாழ்ந்த மக்களின் வாழ்வு முறை நிலவுடைமைச் சமூகச் சூழலில் இருந்திடினும், அவர்களின் சில நடத்தைகள் புரதான பொது வாழ்வின் செயலையே கொண்டிருக்கின்றன. வேட்டையாடுதலிலும், கால்நடை வளர்ப்பிலும், பயிர் சாகுபடியிலும் மீன்பிடித் தொழிலிலும் ஈடுபட்ட மக்களின் வாழ்வில் கூடி உழைக்கும் முறையயும், கூடி உண்ணும் முறையையும் கொண்ட ஒரு பொதுமைப்பண்புடைய மக்கட்தொகுதி கொண்ட பழந்தமிழகத்தினைக் காண முடிகிறது. உதாரணமாக

1. வேட்டையாடிக் கிடைத்த பண்டத்தை பங்கிட்டுக் கொள்ளும் முறை

  1. ஆநிரை கவர்தல் ஈடுபட்ட மக்கள் தாமும் பகிர்ந்து கொண்டு பிறருக்கும் வழங்கும் நிலை
  2. பாணர்களுக்கு உணவு கொடுத்து தானும் உணவு உண்ட நிலை
  3. நடுகல் வழிபாட்டு முறை. உணவு படைத்து பிறருக்கு வழங்கும் போக்கு
  4. சிறுவர்கள் வேட்டையாட சென்ற முறை ஆறு கூடி நிகழ்த்தும் விழாக்கள் மற்றும் விளையாட்டுகள்

 என பல செயல்களும் கூட்டுமுயற்சியில் செய்யக்கூடிய கிடைக்கக்கூடிய பயனை அனைவரும் பொதுவாக பெற்றுக் கொள்ளும் முறை புரதான வாழ்வியல் முறை பழந்தமிழகத்தில் நிலவியிருக்கிறது. நிலவுடைமை சமூகச் சூழலில் புரதான சமுதாய எச்சங்கள் கூடுதலாகவே இருந்திருக்கின்றன. மக்களின் வாழ்வு இனக்குழு சமூக வாழ்வாக கிடைத்ததை பெற்று வாழ்ந்த ஒரு போக்கையும் கிடைக்கக் கூடிய உணவை பிறருக்கு கொடுத்து உண்ணுகிற முறையும் இருந்துள்ளது. ஆக, கூடி உழைத்தல் பங்கிட்டுக் கொள்ளுதல் பிறருக்கும் வழங்குதல் எனும் பண்பு புரதான தமிழ்ச் சமூக பெரு மக்களிடத்தில் அன்றிலிருந்து இன்று வரை பண்பாடாக விளங்கு வந்திருக்கிறது என்பதையும் சமூகம் மன்னர் உடைமையாய் மாறிய பின்னர் கூட இத்தகைய நடைமுறை வழக்கிலிருந்தமையும் இன்றும் கூட வழக்கிலிருக்கும் முறையாகவும் விளங்குவதைக் காணலாம். இன்றும் நில அடிப்படையில் மக்கள் வாழ்வதும் இனக்குழு வாழ்வியல் எச்சங்கள் மக்களிடத்தில் பெருகிய இருக்கிறது என்பதனையும் ஒருவாறு துணிந்து நாம் கூற முடியும்.

- முனைவர் பா.பிரபு
உதவிப் பேராசிரியர்
ஸ்ரீமாலோலன் கலை அறிவியல் கல்லூரி
மதுராந்தகம்-603306