உடையார் நத்தம் களஆய்வு
மனித இனத்தின் ஆறாவது அறிவுக்கு வாய்த்த முதல் அனுபவம் அச்சம்தான். இயற்கையின் எல்லையற்ற ஆற்றலும் விநோதங்களும் ஆபத்துக்களும் மனிதனுக்கு அச்ச மூட்டிக்கொண்டே இருந்தன. இயற்கையோடு இயைந்திருந்த விலங்குகளுக்கு இல்லாத அச்சம் இயற்கையோடு முரண்படுகிற, மனித இனத்துக்கு ஏற்பட்டதில் வியப்பொன்றும் இல்லை. ஆதி மனிதர்களின் கடவுள் தோற்றக் கதைகளின் தொடக்கம் இதுதான்.
ஆதிமனிதன் இயற்கையைக் கண்டு அஞ்சிய மனநிலையிலிருந்து கொஞ்சம் தெளிந்து தேறி இயற்கைப் பொருட்களான காடும் மலையும் மரங்களும் நீர்நிலைகளும் அச்சந் தரத்தக்கன அல்ல என்றும் அந்த இயற்கைக்கு உள்ளிருந்து இயங்கும் ஏதோ ஒன்று அதில் குடிகொண்டிருக்கின்றது அதுவே நாம் அஞ்சத்தக்கது என்றும் கருதினர். அச்சம் தரும் அந்த இயற்கை இகந்த ஆற்றலைப் பழந்தமிழர்கள் சூர் என்றும் அணங்கு என்றும் குறிப்பிட்டனர். அணங்கு என்றால் துன்பம் தருவது என்று பொருள்;. சூர் என்னும் சொல்லுக்கு அச்சம் என்பது பொருள். தொடக்கத்தில் சூரும் அணங்கும் உருவமற்றன வாகவே கற்பித்துக் கொள்ளப் பட்டன. பின்னர் அவை உருவுடையனவாகவும் அதே சமயத்தில் பால் பேதம் அற்றனவாகவும் பேசப்பட்டன. காலப் போக்கில் சூரும் அணங்கும் பெண்களாக பாவிக்கப்பட்டுப். பெண்தெய்வங்களாகக் கற்பிக்கப் பட்டன. சூர் என்பது சூர்மகள், சூரர மகளிர் என்றும் அணங்கு என்பது அர மகளிர், ஆரர மகளிர், ஆரணங்கு என்றும் வழங்கப்பட்டது.
அணங்குடைச் சிலம்பு, அணங்குடைச் சாரல், அணங்குடை நெடுங்கோடு, அணங்குடை நெடுவரை, சூருடைச் சிலம்பு, சூர்உறை வெற்பு என்றெல்லாம் சங்க இலக்கியங்களில் மலை, மலையுச்சி, மலைச்சாரல்களில் வசிப்பதாகப் பேசப்பட்ட அணங்கும் சூரும் குறிஞ்சியில் இருந்து இறங்கி முல்லை நிலமாகிய காடுகளில் இடம் பெயர்ந்தபோது கானமர் செல்வி (அகநானூறு. 345) என்றும், காடுறை கடவுள் (காடுறைக் கடவுள் கடன் கழிப்பிய பின்றை- பொருநர். வரி.42) என்றும் அழைக்கப்பட்டுப் பின்னர் பெருங்காட்டுக் கொற்றி (கலித். 89-8) ஆகிப் பின்னர் கொற்றவை (பரி.11) ஆகவும் மாற்றம் பெற்றது. இந்தக் கொற்றவைதான் தமிழர்களின் முதல் தாய்த்தெய்வம்.
சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தாய்த்தெய்வத்தின் பிரம்மாண்ட சிற்பம் ஒன்று விழுப்புரம் மாவட்டம் உடையார் நத்தம் கிராமத்தை ஒட்டிய காப்புக் காட்டுப் பகுதியில் இன்றும் காணக் கிடைக்கின்றது.
உடையார் நத்தம் - விசிப்பாறை (களஆய்வில் கட்டுரையாசிரியர் முனைவர் நா.இளங்கோ)
உடையார் நத்தம் கல்வட்டங்களுக்கு அருகில் சுமார் பத்து மீட்டர் தொலைவில் ஒரு பெரிய தொல்லுருவப் பாறை உள்ளது. இந்தப் பகுதி மக்கள் இதனை விசிறிப்பாறை என்று அழைக்கின்றனர். ஒரு பகுதி மண்ணில் புதைந்தும் மண்ணுக்கு மேலே சுமார் பன்னிரண்டு அடி உயர்ந்தும் சற்றே சாய்ந்த நிலையிலும் இத்தொல்லுருவப் பாறை உள்ளது, தமிழகத்தில் கிடைக்கும் வழிபாட்டுச் சிற்பங்களிலேயே காலப் பழமை வாய்ந்த சிற்பமாக இதனைக் கருதமுடியும். சுமார் மூவாயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்தது இச்சிற்பம் என்று தமிழகத் தொல்லியல் அறிஞர்கள் இதன் காலத்தை மதிப்பிட்டுள்ளனர். இது பெருங் கற்காலத்தைச் சேர்ந்த தொல்லுருவமாகும்.
ஆதி மனிதர்களின் நாகரீக வரலாற்றில் புதிய கற்காலம், இரும்புக் காலத்தைத் தொடர்ந்ததாகப் பெருங் கற்காலம் (Megalith) அடையாளப் படுத்தப்படும். பெருங் கற்காலம் என்பது பெரிய வடிவிலான கற்களைக் கொண்டு பல்வேறு அமைப்புக்களை மக்கள் உருவாக்கிய காலப் பகுதியைக் குறிக்கும். பெரும்பாறை அமைப்புக்கள் கல்வட்டம், பரல்உயர் பதுக்கை, தொப்பிக்கல், குடைக்கல், நெடுநிலை நடுகல் முதலான பலவகைகளில் அமைக்கப் பட்டிருக்கும். இவ்வகை அமைப்புகள் பெரும்பாலும் இறந்தவர்களுடைய புதைகுழிகளின் மேல் அமைக்கப் பட்டனவாக இருக்கும். உலகம் முழுவதிலும் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இனக்குழுக்களால் இவ்வகைப் பெருங் கற்காலப் பாறை அமைப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன.
பெருங்கற்காலப் பண்பாட்டு அடையாளங்களில் மிக முக்கியமானது கல்வட்டங்கள். பெருங்கற்கால மக்கள் இறந்தவர்களைத் தாழியில் கிடத்திப் புதைக்கும் வழக்கம் உடையவர்கள். அவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட தாழிகளை ஒருங்கே புதைத்து, புதைத்த இடத்தில் மேற்பரப்பில் வட்டமாகக் கற்களை அடுக்கிப் புதைத்து வைப்பார்கள், இதுவே கல்வட்டமாகும். தமிழகத்தின் பல பகுதிகளில் இவ்வகைக் கல்வட்டங்கள் இன்றும் காணக் கிடைக்கின்றன. விழுப்புரம் மாவட்ட உடையார் நத்தத்திலும் இவ்வகைக் கல்வட்டங்கள் உள்ளன. பெருங் கற்காலத் தொல் அடையாளங்களில் கல்வட்டங்களோடு இணைத்துப் பார்க்கத்தக்கது ஆந்த்ரோபோமார்பிக் வடிவம் (Anthropomorphic) அதாவது மனிதஉருச் சின்னம் என்றழைக்கப்படும் வடிவமாகும். அரிதான இவ்வகை வடிவத்தில் அமைந்த தொல் சிற்பமே உடையார் நத்தத்தில் கிடைத்துள்ள தாய்த்தெய்வச் சிற்பம்.
(சிந்துவெளி அகழ்வாய்வில் கிடைத்த தாய்த்தெய்வம்)
பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்களில் பெண்ணின் உருவச் சாயலுடைய கற்சிற்பங்கள் பல தொல்லியல் களங்களிலும் கண்டெடுக்கப் பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் லிங்கனாவிலும், வாரங்கல் மாவட்டத்தில் தோட்டிகுட்டாவிலும், நெல்லூர் மாவட்டத்தில் வேடர் பாளையத்திலும் பெண்உருவக் கற்சிற்பங்கள் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் தாய்தெய்வ வழிபாட்டின் முன்னோடிதான் என்று முனைவர் இரா. நாகசாமி அவர்கள் கருத்துரைக்கின்றார். இதுபோன்றே, மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள மினோவன் கிரீட்டிலும், இத்தாலியில் உள்ள சர்தீனியாவிலும் இதனையொத்த சிற்பங்கள் கிடைத்துள்ளன. அவற்றின் காலத்தை கி.மு..1700 எனத் தொல்லியல் வல்லுநர்கள் மதிப்பிடுவர். மேலும், வடஇந்தியாவில் ஜோப், குவெட்டா, குள்ளி மற்றும் ஹரப்பா போன்ற சிந்துச் சமவெளி நாகரிகங்கள் பரவிய இடங்களிலெல்லாம், பெண் தெய்வ உருவங்கள் கிடைத்துள்ளன. சிரண்டு பகுதியில், சுடுமண்ணால் செய்த தாய் தெய்வ உருவம், புதிய கற்காலப் பண்பாட்டுப் பகுதியில் கிடைத்துள்ளது. மேலும் பல தாய்த்தெய்வ சுடுமண் உருவங்கள், சிந்துச் சமவெளி நாகரிகப் பகுதிகளான மொகஞ்சதாரோ, ஹரப்பா, லோத்தால் முதலான இடங்களில் கிடைத்துள்ளன.
(தா.மோட்டூரில் கிடைத்த தாய்த்தெய்வம்)
உடையார் நத்தம் விசிறிப் பாறையை ஒத்த மற்றுமொரு தொல்லுருவத் தாய்த்தெய்வச் சிற்பம் திருவண்ணாமலை மாவட்டத் தா.மோட்டூரிலும் கிடைக்கின்றது. அங்கும் கல்வட்டங்கள் உள்ளன. அச்சிலை இன்றும் அங்கே தாய்த்தெய்வமாக வழிபடப் படுகின்றது. உடையார் நத்தம், தா.மோட்டூர் இரண்டு சிற்பங்களிலும் தலையும் முகமும் தனித்துச் சிறப்பாகக் காட்சிப்படுத்தப் படவில்லை அகன்று விரிந்த தோள்களுக்கு மேல், சிறிய அரைவட்ட வடிவமான முளைப்பாகவே தலைப்பகுதி காட்டப் பட்டுள்ளது.
உலகின் பல பகுதிகளிலும் கிடைக்கப்பெற்ற பல்வேறு மனித உருவொத்த சிலைகளில் சில அமைப்புகள் பொதுவாக் காணப்படுகின்றன.
- மனித உருவத்தை ஒத்த அமைப்பு
- கால்கள், கைகள் போன்ற உடல் உறுப்புகள் வெளிப்பட இருக்காது.
- பரந்த தோள் பகுதி இருக்கும்.
- தலை போன்ற அமைப்பு முழுமையாக இருக்காது.
- ஆண் பெண் வேறுபாடு காணமுடியாது.
மேற்கூறிய ஐந்து அம்சங்களும் எல்லாத் தொல்உருவ மண், உலோக, கல் சிற்பங்களிலும் காணப்படும்.
உடையார் நத்தம் தாய்த்தெய்வத்தின் உருவத்தை ஒத்த உருவங்கள் பண்டைய நாகரிகங்கள் செழுமையாக இருந்த ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வடமேற்கு ஆசியப் பகுதிகளிலும் துருக்கி நாட்டுப் பகுதிகளிலும் கிடைத்துள்ளன. மேலும் சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியிலும் இவ்வகை உருவங்கள் கிடைத்துள்ளன.
தா.மோட்டூரில் கிடைக்கும் தாய்த்தெய்வச் சிற்பத்தினைவிட உடையார் நத்தம் விசிறிப்பாறை சிற்பம் காலப்பழமை வாய்ந்தது என்பதனை இரண்டு சிற்பங்களின் உருவ அமைப்பினையும் ஒப்பிட்டுப் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும். தமிழகத்தில் இதுவரை கிடைத்துள்ள சிற்பங்களிலேயே உடையார் நத்தம் விசிறிப்பாறைதான் பழமையானது. பழந்தமிழர்களின் தாய்த்தெய்வ வழிபாட்டு வரலாற்றின் தொடக்கப் புள்ளியாக இதனைக் கொள்ளலாம். நமது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள கானமர் செல்வியாக (ஓங்குபுகழ்க் கானமர் செல்வி - அகநானூறு- 345) இச்சிற்பத்தைக் கருத முடியும்.
பெருங் கற்காலக் கல்வட்டங்களை ஒட்டியே உடையார் நத்தம், தா.மோட்டூர் இரண்டிடங்களிலும் தாய்த்தெய்வத் தொல்சிற்பம் கிடைப்பதனைக் கொண்டு நாம் சில முடிவுகளுக்கு வர இயலும்.
- மக்கள் வாழ்விடங்களுக்குப் புறத்தே காட்டுப் பகுதியில் இறந்தவர்கள் தாழியிலிட்டு புதைக்கப்பட்டனர்.
- தாழிகள் புதைக்கப்பட்ட இடத்தில் கல்வட்டங்கள் முதலான பெருங்கல் அடையாளங்கள் உருவாக்கப் பட்டன..
- பெருங்கல் அடையாளங்களைச் சார்ந்து மனித உருவொத்த வழிபாட்டுப் பாறைகள், சிற்பங்களாக நிறுவப்பட்டன.
- நிறுவப்பட்ட மனித உருவொத்த பாறைச் சிற்பங்கள் வழிபாடு மற்றும் சடங்குகளுக்கு உட்படுத்தப் பட்டன.
- குறுங்காடுகளில் நிறுவப்பட்ட மனித உருவொத்த பாறைகள் பெண்உருவாக, தாய்த்தெய்வமாக வழிபடப்பட்டன.
மேற்சொன்ன கருதுகோள்களோடு நாம் பழந்தமிழர் தாய்த்தெய்வ வழிபாட்டு முறைமைகளை அணுகுவது சிறப்பாக இருக்கும்.
உடையார் நத்தத்தில் காணப்படும் தாய்த் தெய்வமாகிய மனித உருவொத்த பாறைச் சிற்பத்தின் பண்பாட்டினை அறிந்துகொள்ள நாம் பழந்தமிழர் வாழ்வியலின் ஊடாகச் சில மானிடவியல் உண்மைகளைப் பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது.
பழந்தமிழர்களின் தாய்த்தெய்வமாகிய கொற்றவை வழிபாடு பற்றிய விரிவான விளக்கங்கள் சிலப்பதிகாரத்து வேட்டுவ வரியுள் தான் முதன்முதலில் பதிவாகி உள்ளன. ஆறலைக் கள்வர்கள் என்று சுட்டப்படும் எயினர்கள் வணங்கும் கடவுளாகக் கொற்றவை வேட்டுவ வரியில் சித்திரிக்கப் பெற்றுள்ளாள். எயினர்கள் மறக்குணம் வாய்ந்தவராகவும், அவர்கள் ஆநிரை கவர்ந்துவரக் கொற்றவையை வழிபட்டதாகவும் ஆநிரை கவர்ந்து வந்தபின் தம்மைக் கொற்றவைக்குப் பலியிட்டுக் கொண்டதாகவும் வேட்டுவ வரி விவரிக்கிறது. ஆநிரை கவர்தல் போரில் எயினர்க்கு வெற்றி தருபவள் கொற்றவை என்ற குறிப்பு வேட்டுவ வரியின் மையப் பொருளாகும்.
வேட்டுவ வரி சித்தரிக்கும் கொற்றவையின் தோற்றத்தில் வைதீகச் சார்பு மிக்கிருந்தாலும் எயினர்களின் கொற்றவை வழிபாடு பழைய வேட்டைச் சமூக மரபுகளையே அடியொற்றி அமைக்கப்பட்டுள்ளமை சிலப்பதிகார வேட்டுவ வரியின் தனிச் சிறப்பாகும்.
கலையமர் செல்வி கடனுணின் அல்லது
சிலையமர் வென்றி கொடுப்போ ளல்லள் (வேட்டுவ வரி, 16-17)
புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரை
கருதிப் போகுங் காலைக்
கொள்ளும் கொடியெடுத்துக் கொற்றவையும்
கொடுமரமுன் செல்லும் போலும் (வேட்டுவ வரி, பா.13)
மேலே காட்டப்பட்ட முதல் மேற்கோளில், கொற்றவைக்குச் செய்யவேண்டிய நேர்த்திக் கடன்களைச் செலுத்தவில்லை யென்றால் அவள் உங்கள் வில்லுக்கு வெற்றியைத் தரமாட்டாள் என்றும் இரண்டாம் மேற்கோளில், வீரர்கள் கையில் வில்லை ஏந்தி, பறவைகள் தம்மைத் தொடர்ந்துவர, பகைவரது ஆநிரையைக் கவரப் போகும்போது, தான் கைக்கொண்ட சிங்கக் கொடியினை எடுத்து உயர்த்திக் கொற்றவையும் அவன் வில்லின் முன்னே செல்வாள் போலும் என்றும் வேட்டுவ வரி படைத்துக்காட்டும் கொற்றவை பழைய வேட்டைச் சமூகக் கொற்றவையாய் வில்லுக்கு வெற்றி தருபவளாயும், ஆநிரை கவரச் செல்லும் வீரர்களுக்கு உடன்சென்று நிரைகவரத் துணைநிற்பவளாயும் சித்தரிக்கப் பட்டுள்ளாள்.
கொற்றவை என்று அடையாளப் படுத்தப்படும் தாய்த் தெய்வத்தினை கலையமர் செல்வி, அணங்கு, கொற்றவை, அமரி, குமரி, கவுரி, சூலி, நீலி, ஐயை, பாய்கலைப் பாவை முதலான பெயர்களோடு சிலப்பதிகாரம் பதிவு செய்கின்றது. சிலப்பதிகாரம் குறிப்பிடும் தாய்த்தெய்வ வழிபாட்டின் தொடக்கப் புள்ளியாக உடையார் நத்தம் தாய்த்தெய்வச் சிற்பத்தினை நாம் கருதமுடியும். தொல் தமிழகக் குறிஞ்சிநில முல்லைநிலச் சமூகத்தின் தாய்த்தெய்வமே விசிறிப்பாறையாக இன்று நமக்குக் கிடைக்கும் தாய்த்தெய்வம்.
- முனைவர் நா.இளங்கோ, தமிழ்ப் பேராசிரியர், புதுச்சேரி