உறக்கம் தழுவும் இராப்பொழுது
தன்னுடலுக்குத் தானே தீமூட்டி
வெளிச்சத்தைப் பரப்ப.........
பூட்டிய வர்க்க அறைக்குள் அரங்கேறும்
ஐந்திணை கோர்த்த விருந்தோம்பல்...

அமுதும் நஞ்சும் கலந்த
வாழ்வின் வண்ணங்களை
துடிப்புறச்செய்யும் சினந்தவெளியின்
உச்சமிது...........
கடந்தகால கனவுகளில்
அகப்படாத முகவரிகள்
நிகழ்காலத்தின் உறவாய் உள்நுழையும்
அவலமிது............

அச்சப்பட்டு மூடிக்கொள்ளவோ
உடல்நோவு சொல்லி ஒதுங்கிகொள்ளவோ முடிவதில்லை.......
இளமையின் சிறகுகள் உதிர்ந்து
உடல்தளர்ந்து பலவீனமான பிறகும்
ஓய்தலின்றி உழைக்க பழக்கியிருக்கிறாள்............
எவனோ ஒருவன் தன்னை
நிர்வாணமாய் பார்க்கவும்
புணர்ச்சி கொள்ளவும் ...............

பிடுங்கி எறிய இயலா வாழ்நாள் பழிச்சுமையிது.........
சுயத்தின் கொடுக்குகளை உடைத்தெறிந்துவிட்டு
உயிரற்ற சவமாய் மூச்சடக்கி வீழ்ந்துகிடக்க
விடிகிறது அவளின் இயந்திர இரவு..
நாளைய விடியலை நினைவுறுத்தியபடி

சிவப்பு விளக்கின் வெளிச்சத்தில்
அவளுக்கு கிடைக்கும் (அ)நியாயமான கூலி
முலைகளை சுவைத்து கசக்கிப் பிழிந்த
காயங்களும்..........
யோனியின் வாய்கிழித்து குறியைத் திணித்த இரணங்களுமே. ......

- வழக்கறிஞர் நீதிமலர்

Pin It