சுயமரியாதை திருமணத்துக்கு தமிழ் திருமண முறை மாற்றாக முடியுமா?

‘இளந்தமிழகம் இயக்கம்’ பெரியார் பிறந்த நாளையொட்டி ‘பெரியாரும் தமிழ் தேசியமும்’ எனும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கில் நிகழ்த்திய உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி) சுயமரியாதைத் திருமணம் என்பதை பெரியார் அறிமுகப்படுத்தினார். பார்ப்பன புரோகித விலக்கு, பெண்ணடிமை விலக்கு என்பதெல்லாம் சேர்த்து தான் சுயமரியாதை திருமணம். பெரியாருடன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு பெற்ற சைவர்கள் போராட்டம் முடிந்தவுடன் 1939ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் தமிழர் திருமண மாநாடு கூட்டினார்கள்.

அங்கு தமிழ்த் திருமண முறை என்று ஒன்றை அறிமுகப்படுத்துகிறார்கள். பொதுவாக தமிழர்கள் என்பதில் நாம் வைத்திருக்கும் பொருள் என்னவென்றால் வெள்ளாள மனப் பான்மை உடையவர்கள். அந்த உடை, அந்த உணவு உண்பவர்கள் என்பதுதான். யார் தமிழர்? உங்களுடைய அடையாளமெல்லாம் யாரைக் குறிக்கிறது? வேட்டிதான் தமிழர் உடையென்றால் இன்றைக்கு கிராமத்தில் யாரும் வெள்ளை வேட்டி அணிவதில்லை, லுங்கிதான் அணிகிறார்கள்.

லுங்கி இப்போது வந்திருக்கலாம். அதுதான் அவர்களுக்கு வசதியாக உள்ளது. இப்போது அவன் தமிழனா, இசுலாமியனா? தவிலும் நாதஸ்வரமும்தான் மங்கள இசை அப்படியென்றால் பறை என்ன இசை? இவர்கள் என்ன சாப்பிடுகிறார்களோ அதுதான் தமிழ் உணவு. இதையெல்லாம் நாம் உடைத்தெறிந்து, உழைக்கும் மக்கள் என்ன உண்கிறார்களோ அதுதான் நம் உணவு, அவர்கள் என்ன உடுத்துகிறார்களோ அதுதான் நம் உடை. அவர்கள் இசைதான் நம் இசை என்று ஏற்றுக் கொள்கிற மனப்பான்மை இல்லாதவர்கள். 

அவர்கள் சொன்ன தமிழ்முறைத் திருமணம் என்னவென்றால் வடமொழிக்கு பதில் தமிழ், புரோகிதருக்கு பதிலாக சைவர்கள் இருப்பார்கள் அவ்வளவுதான். அதில் சாதி மறுப்போ, பெண்ணடிமை ஒழிப்போ, மூட நம்பிக்கை  எதிர்ப்போ எதுவும் இல்லை. இவ்வளவுதான் தமிழ்முறை திருமணம். இதை பெரியார் எதிர்த்திருக்கிறார். அதைப் பிடித்துக் கொண்டு பெரியார் தமிழ் திருமணத்தை எதிர்த்தார். அதை இழிவாகச் சொன்னார் என்று இப்போது விமர்சிக்கின்றனர். இப்படி விமர்சிப்பவர்களுக்கு பின்னால் இருக்கக்கூடிய மனப்பான்மையை புரிந்து கொள்ளுங்கள் என்பதுதான் என் வேண்டுகோள்.

1960 ஆம் ஆண்டு ஐ.நா. மன்றத்தில் அரசியல் உரிமைகள் பற்றிய ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதனுடைய முதல் கூறு, “ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தன்னுடைய தேசிய இனத்தை மாற்றிக் கொள்கிற உரிமை உண்டு” என்பதுதான்.

இந்த தாய்க்கும் தகப்பனுக்கும் பிறந்தவன்தான் இந்த தேசிய இனத்தை சார்ந்தவன் என்றிருந்தால் எப்படி நான் எனது தேசிய இனத்தை மாற்றிக் கொள்வது? தேசிய இனம் என்பதற்கான இன்றைய வரையறை என்ன? காந்தியை மகாத்மா என்றழைக்காமல் காந்தி என்றே அழைத்தவர்கள் அம்பேத்கர், ஜின்னா மற்றும் பெரியார் மூன்று பேர் மட்டும்தான். இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் அரசு  இந்தியர்களை ஈடுபடுத்துகிறது.

காங்கிரசின் அனுமதி  இல்லாமல் எப்படி இந்தியர்களை ஈடுபடுத்தலாம்?  இங்கிலாந்தின் பெருமையைக் காப்பதற்காக என்றார் சர்ச்சில்; அதற்கு இந்தியர்கள் ஏன் போரிட  வேண்டும்? என்று காந்தி அறிக்கை விடுகிறார். எப்போதும் காந்தியை எதிர்க்கும் அம்பேத்கர், “நான்  காந்தியின் அறிக்கையை வரவேற்கிறேன்” என்கிறார்.  

கூடவே, “காந்தியாரே உங்களிடமும் எனக்கொரு  கேள்வி உள்ளது. இந்திய விடுதலைப் போரில் எங்கள் மக்களை ஈடுபட வேண்டும் என்று அழைக்கிறீர்களே நாங்கள் போராடி இந்திய விடுதலையை அடைந்த பின் எங்களுக்கென்ன இலாபம்?” என்று கேட்கிறார்.  “விடுதலைக்குப் பின்னால் இந்திய சமூகப் படி நிலையில் எங்களின் நிலை என்னவாக இருக்கும் என்று சொல்லுங்கள்.

பிறகு நாங்கள் இந்திய விடுதலையை ஆதரிப்பதா வேண்டாமா என்று கூறுகிறோம்” என்று சொல்கிறார். இதே கேள்வியோடுதான் தமிழ்நாடு விடுதலையைப் பெரியார் பேசினார். வெறும் அரசியல் விடுதலை மட்டும் அல்ல. அண்டை மாநிலங்களோடு உள்ள பிரச்சினைகளைப் பற்றிப் பேசும்போது இதற்கு பெரிதும் காரணம் மத்திய அரசுதான் என்பதை நாம் காணத் தவறிவிடுகிறோம் என்கிறார்.     

பெரியாரை புரிந்து கொள்ளாமல் எங்கோ படித்ததையும் கேட்டதையும் வைத்துக்கொண்டு செய்கிற விமர்சனம் தவறானது என்றும் ஏதேனும் குறை பிழை இருக்கிறதென்று சொன்னால் அதை திருத்திக் கொள்ள வேண்டும்.

பெரியார் அதற்குத் தயாராக இருந்தார். அப்படிச் சொல்ல வேண்டும் என்று மற்றவர்களை கேட்டுக் கொண்டார். புத்தருக்கு பிறகு பெரியார்தான் சொன்னார். நம் கருத்துகளை விவாதிக்கிறபோதுதான் அதிலுள்ள தவறுகளை திருத்திக் கொள்ள முடியும்.

1971ஆம் ஆண்டு சேலம் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டின் போது ஜி.டி. நாயுடு பேசியதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பெரியார் கதர் கடையைத் திறப்பதற்காக சென்ற போது ஜி.டி. நாயுடுவின்  வீட்டில் தங்கியிருக்கிறார். காங்கிரசில் இருந்து வெளியே வந்திருந்தாலும் கதர் மேல் அவருக்கு ஈடுபாடு இருந்த காலம் அது. இரவு இருவருக்கும் விவாதம், கதர் சரியானதா தவறானதா? என்று.  பொருளாதார அடிப்படையிலும் வேறு எந்த அடிப்படையிலும் கதர் சரியானது அல்ல என்று  ஜி.டி. நாயுடு நிறுவி விடுகிறார்.

அடுத்த நாள் கதர்க் கடைத் திறப்பிற்கு சென்ற பெரியார், “கதர் திட்டம் என்பது காதொடிந்த ஊசிக்கும் பயன்படாத ஒரு திட்டம்” என்று பேசி விட்டு வருகிறார். அப்படிப்பட்ட கருத்தை கொண்டிருந்தவர்தான் பெரியார். அப்படிப்பட்ட கருத்தைக் கொண்டிருப்பவர்கள்தான் நாங்கள். எனவே சரியான குற்றச்சாட்டுகள் வந்தால் திறனாய்வுகள் வந்தால் மாற்றிக் கொள்ள தயாராக இருக்கிறோம். பெரியார் முதலில் ஆங்கில வழியில் தான் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்றார்.

1980ஆம் ஆண்டு இறுதியில் திராவிடர் கழகம் தமிழ்தான் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று அந்த முடிவை மாற்றி அறிவித்துவிட்டது. அப்போதிருந்த சூழலில் பெரியார் அந்த முடிவெடுத்திருக்கலாம். ஆனால் இப்போது கல்வியாளர்களும் உளவியலாளர்களும் தொடக்கப் பள்ளியில் தாய்மொழிக் கல்வியைத்தான் வலியுறுத்துகிறார்கள்; நாங்களும் எங்கள் முடிவை மாற்றிக் கொண்டு விட்டோம். நாங்கள் மாற்றிக் கொள்ள தயாராக இருப்பவர்கள் தான்.

எனவே நியாயமான குறைகளை நேர்மையான திறனாய்வுகளை வைக்க வேண்டுமே தவிர வெறும் சொற்களை வைத்துக் கொண்டு விதண்டாவாதம் பேச வேண்டாம் என்ற கோரிக்கையோடு இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்த ‘இளந்தமிழகம் இயக்க’த்தினருக்கு மீண்டும் நன்றிகளைக் கூறி விடைபெறுகிறேன்.

(நிறைவு)

Pin It